Home Na Parthasarathy Read Pandima Devi Part 2 Ch18 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

Read Pandima Devi Part 2 Ch18 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

96
0
Read Pandima Devi Part 2 Ch18 Pandima Devi Na.Parthasarathy, Read Pandima Devi Online Free, Pandima Devi PDF, Download Pandima Devi novel, Pandima Devi book
Read Pandima Devi Part 2 Ch18|Na.Parthasarathy|TamilNovel.in

Read Pandima Devi Part 2 Ch18 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

பாண்டிமாதேவி – நா. பார்த்தசாரதி

இரண்டாம் பாகம், அத்தியாயம் 18 : வீரர் திருக்கூட்டம்

Read Pandima Devi Part 2 Ch18 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

அரண்மனைத் தோட்டத்து மாமரத்தடியில் யாருக்கும் தெரியாமல் தங்கை பகவதியைச் சந்தித்து விட்டுச் சென்ற தளபதி வல்லாளதேவன் நேரே கோட்டாற்றுப் படைத்தளத்துக்குப்போய் ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கி விட்டான்.

அன்றுவரை உண்பதும், உறங்குவதும் விளையாட்டான பொழுது போக்குகளில் ஈடுபடுவதுமாக இருந்த ஐந்நூறு பத்திப்படை வீரர்களுக்கும் தளபதியின் வரவு சுறுசுறுப் பூட்டியது. விரைவாகவும், தீவிரமாகவும், தளபதி செய்யும் ஏற்பாடுகளைக் கவனிக்குமுன் அந்தப் பிரும்மாண்டமான படைத்தளத்தில் ஒவ்வொரு பகுதியையும் சற்றே சுற்றிப் பார்த்துவிடலாம்.

தென்பாண்டி நாட்டின் அறிவுக்கு முன்மாதிரியாக இடையாற்றுமங்கலத்தைச் சுட்டிக் காட்டலாமென்றால் ஆண்மைக்கு முன்மாதிரியாகக் கோட்டாற்றுப்படைத் தளத்தைத்தான் சொல்ல வேண்டும். நால்வகைப் பெரும் படைகளும், படைக்கருவிகளும் ஆயுதச்சாலைகளும் நிறைந்த படைத் திருமாளிகை அது. தமிழ்நாட்டுப் பொதுவான படைவீரர்கள் தவிர மோகர், மழவர் யவனர் போன்ற சிறப்புப் பிரிவினரான வீரர்களும் அங்கு இருந்தார்கள்.

யானை, குதிரை, தேர்கள் உட்பட எல்லாப் படைவீரர்களும்

அணிவகுத்து நிற்பதற்கேற்ற பெரும் பரப்புள்ள திறந்தவெளி முற்றம்தான் படைத்தளத்தின் முக்கியமான இடம்.

அதோ, சிற்பவேலைப்பாடு மிக்க பளிங்குமேடையின் மேல் குன்று போல் பெரிய முரசம் ஒன்று வார்களால் இறுக்கிக் கட்டப்பட்டு விளங்குகிறதே, அது ஒலிக்கப்பட்டால் அந்த முற்றம் படைகளால் நிரம்பி வழியும். –

யானைகள் பிளிறும் ஓசை, குதிரைகளின் கனைப்பொலி படைத்தளத்தில் எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும். படையைச் சேர்ந்த யானைகளுக்கும் குதிரைகளுக்கும் தனித் தனியே கொட்ட்ங்கள் அங்கிருந்தன. போருக்குரிய தேர்கள் ஒருபுறம் வரிசையாத அழகாக இலங்கின. அங்கிருந்த பெரிய ஆயுதச்சாலைக்குள் கோழைகள் நுழைந்தால் மயக்கம் போட்டுத் தலைசுற்றி விழுந்துவிடவேண்டியதுதான். அப்பப்பா! மனிதனுக்கும் மனிதனுக்கும் பகை ஏற்பட்டால் ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொள்வதற்கு எத்தனை கருவிகள் ! ஒளியுறத் தீட்டிச் செம்மை செய்யப்பட்ட வாள்கள் பல்லாயிரக்கணக்கில் குவிந்து கிடக்கின்றன. வேல்கள், ஈட்டிகள், வில் அம்பறாத் தூணிகள், கேடயங்கள், இரும்புக் கவசங்கள் இன்னும் எத்தனையோ வகைப் போர்க் கருவிகள் குன்று குன்றாகக் குவிக்கப்பட்டு நிறைந்திருக்கிறது கோட்டாற்றுப் படைத்தளத்தின் ஆயுதச்சாலை.

எல்லாக் கேடயங்களிலும் அவற்றை எதிர்த்துப் பிடிக்கும் பக்க்த்துக்குப் பின்னால் இருந்த குழிவில் ஒரு சிறு கண்ணாடி பதிந்திருந்தது. கேடயத்தைப் பிடித்துக்கொண்டு போர் புரியும்போது முறையற்ற விதத்தில் எவரேனும் பின்புறமாகத் தாக்க வந்தால் அதில் பதித்திருக்கும் கண்ணாடியின் மூலம் போரிடுபவன் அதைத் தெரிந்து கொள்வான். வீரர்களின் வசதிக்காக இந்தப் புதிய நுணுக்கத்தை அறிந்து கேடயத்தில் பொருத்தியிருந்தனர்.

போர்வீரர்கள் முழக்கும் துடி, பறை, கொம்பு வளை, வயிர் முதலிய போர்க்கால வாத்தியங்களும் கோட்டாற்றுப் படைக் கோட்டத்தில் குறைவின்றி இருந்தன. யானைகளுக்குப்

போர்த்தும் முகபடாங்களும், அவற்றை அடக்கும் அங்குசங்களும், அவற்றின்மேல் வைக்கும் அம்பாரிகளும் ஒருபுறம் பெருகிக்கிடந்தன. குதிரைகளை அலங்கரிக்கும் நெற்றிப் பட்டங்களும், கடிவாளங்களும், சேணங்களும் மற்றோர் புறம் நிறைந்திருந்தன. கல் தோன்றி மண் தோன்றாகக் காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடிப்பெருமை அந்தப் பெரும்படைச் சாலையின் ஆயுதங்களில் விளங்கிற்று.

எத்தனை போர்களில் எத்தனை வீரர்களுடைய தசையைத் துளைத்துக் குருதியைக் குடித்திருக்கும் இந்த ஆயுதங்கள்? இன்னும் எத்தனை போர்களில் அப்படிச் செய்ய இருக்கின்றனவோ? மண்ணைக் காப்பதற்குச் சில போர்கள். மண்ணைப் பறிப்பதற்குச் சில போர்கள், பெண்ணைக் காப்பதற்குச் சில போர்கள். பெண்ணைப் பறிப்பதற்குச் சில போர்கள். போர் செய்யத் தெரிந்த நாளிலிருந்து ஆயுதங்கள் புதிது புதிதாக வந்தன. ஆயுதங்கள் புதிது புதிதாக வந்த நாளிலிருந்து போர்களும் புதிது புதிதாகப் புதுப்புதுக் காரணங்களுக்காக உண்டாகிவிட்டன.

தளபதி வல்லாளதேவன் அன்று படைத்தளத்துக்கு வந்தபோது அங்கிருந்த எல்லாப் பிரிவுகளிலும் பரபரப்பும் வேகமும் உண்டாயின். மேல்மாடத்தில் கோட்டையின் உயரமான கொடி மரம் அமைந்திருந்த மேடையில் ஏறி நின்று பார்த்தால் பரிமாளிகை (குதிரைகள் இருக்குமிடம்) கரிமாளிகை (யானைகள் இருக்குமிடம்) உட்பட யாவும் நன்றாகத் தெரியும். வீரர்களையும் படைத் தலைவர்களையும் ஒன்றுகூட்டி நிலைமையை விளக்கி ஏற்பாடுகள் செய்வதற்காக அங்கே வந்திருந்த தளபதி கொடி மரத்து மேடையில் ஏறி நின்றுகொண்டு அன்றுதான் புதிதாகப் பார்க்கிறவனைப் போல் அந்தப் படைத்தளத்தின் மொத்தமான தோற்றத்தைப் பார்த்தான். படைத்தளமே ஒரு சிறிய நகரம்போல் காட்சியளித்தது. X

‘தென் பாண்டி நாட்டையும், மகாராணியையும் காப்பாற்றும் விதியின் வலிமை இந்தப் படைக் கோட்டத்திலும்

இதில் நான் செய்யப்போகிற ஏற்பாடுகளிலும் அடங்கியிருக்கின்றன. ஆனால் தம்முடைய மூளையிலும் சிந்தனைகளிலும் அடங்கியிருப்பதாக மகாமண்டலேசுவரர் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று அதைக் காணும்போது ஒரு நினைவு அவன் மனத்தில் உண்டாயிற்று. மகாமண்டலேசுவரர் இல்லாத இடத்தில் அவரைப்பற்றி அசூயையும், காழ்ப்பும், காய்ச்சலும் தன் மனத்தில் உண்டாவதை அவனால் தடுக்க முடியவில்லை. ஆனால் அவரை நேரில் பார்த்துவிட்டாலோ பயம், அடக்கம், பணிவு எல்லாம் அவனையும்.மீறி அவனிடத்தில் வந்து பொருந்திக் கொண்டுவிடுகின்றன. துணிந்து ஓரிரு முறை அவரை எதிர்த்துப் பேசியிருக்கிறானென்றாலும் அவ்வாறு பேசி முடிந்தபின் ‘ஏன் பேசினோம் என்று தன்னை நொந்து கொண்டிருக்கிறான். ஆழமும் அழுத்தமும் நிறைந்த அவருடைய கண்களின் முன் அவன் தனக்குத் தானே சிறு பிள்ளையாய்ப் போய்விடுவான். அவருடைய பார்வைக்கு முன்னால் அவனுக்கு உண்டாகிற தாழ்வு மனப்பான்மையை அவன் தவிர்க்க முடிவதில்லை. கணவனின் முகத்தைக் காணாதபோது ஏற்பட்ட ஊடல் அவனைப் பார்த்து விட்டதுமே மறைந்துவிடும் பலவீனமான பெண் மனநிலையைத்தான் அவனுக்கு உவமை கூறவேண்டும்.

அவருடைய கட்டளைக் குத்தான் அவன் கீழ்ப்பணிந்தான். அவன் என்ன? மகாராணியே அப்படித் தானே? ஆன்ால் எவருடைய கண்களுக்கு முன்னால் அவன் தலைகுனிவானோ, எவருடைய கட்டளை அவனை ஆளுமோ, எவருடைய அறிவு அவனை மலைக்க வைத்ததோ, அவர் மேலேயே அவன் சந்தேகப்பட்டான். பொறாமை கொண்டான். பிறருக்குத் தெரியாமல் அவர் நடவடிக்கை களை நேரிலும், தன்னைச் சார்ந்தவர்களைக் கொண்டும் இடைவிடாமல் கண்காணித்தான்.

பெரிய அரசன் அரண்மனையின் ஒரு மூலையில் தூங்கிக் கொண்டிருந்தாலும் அவனுடைய ஆற்றலின்

ஒளியால் அவனால் ஆளப்படும் நாட்டின் பல காதப் பரப்புக்குள்ளும் அவன் ஆணைகள், சட்டதிட்டங்கள் ஒழுங்காக நடப்பதற்குக் காரணம் என்ன ? அவன் ஆளுமிடம் எங்கும் அவனுடைய ஆற்றல் ஒளி காக்கிறது.

“உறங்குமாயினும் மன்னவன் தன்னொள் கறங்கு தெண்டிர்ை வையகம் காக்குமால்”என்ற சிந்தாமணியாசிரியர் கூறிய தொடர்தான் மகாமண்டலேசுவரரைப் பொறுத்தமட்டில் தளபதியின் தத்துவமாக இருந்தது. மாகமண்டலேசுவரர் தென்பாண்டி நாட்டின் மன்னர் இல்லை. ஆனால் இடையாற்று மங்கலத்திலோ அரண்மனையின் ஒரு மூலையிலோ இருந்து கொண்டு தம் எண்ணத்தின் ஒளியால் நாடு முழுவதும் காத்துக் கண்காணிக்க முடிகிறது. மந்திரவாதிகளுடைய கண் பார்வைக்கு எதிராளியைக் கட்டிவிடும். ஆற்றல் இருப்பதுபோல் அவரிடம் ஏதோ ஒரு அதீத ஆற்றல் இருப்பதாகத் தளபதிக்குப் பட்டது. கோட்டாற்றின் மாபெரும் படைத்தளத்தின் தலைவனாக இருந்தும் மகா. மண்டலேசுவரரின் அந்த ஈடு இணையற்ற சதுரப் பாட்டில் நாலில் ஒரு பங்குக.டத் தனக்கு வரவில்லையே என்ற புகைச்சல் அவனுக்கு உண்டாயிற்று.

கண்ணுக்கு மையெழுதும் எழுதுகோலைத் தொலைவில் இருக்கும்போது கண்ணால் பார்க்க முடிகிறது. அதே எழுது கோலால் மைதீட்டும்போது கண்களாலேயே அதைக் காண முடிவதில்லை. மகாமண்டலேசுவரரைக் காணாத ‘போது பொறாமையைக் கண்ட தளபதி அவரை நேரில் கண்டால் அவரது பெருமைதான் தெரிந்தது. r .

கொடி மரத்து மேடையில் நின்றுகொண்டு கண்பார்வையில் படுமிடம் வரை பரவியிருக்கும் அப் பெரும் படைத்தளத்தைப் பார்வையிட்டபோதும் மகாமண்டலேசு வரரைத்தான் அவன் நினைக்க முடிந்தது. தன் சிந்தனை அத்தனை பெரிய படைத்தளத்தையும் அந்த ஒரே ஒரு மனிதரையும் சமமாக நிறுத்துப் பார்ப்பது ஏனென்றே அவனுக்குப் புரியவில்லை. * * : . . .

அதோ! பூண் பிடித்த எடுப்பான தந்தங்கள் ஒளிரக் கருமலைகள் போல் நூற்றுக்கணக்கான யானைகள், வெண்பட்டுப்போல் பளபளக்கும் கொழுத்த உடல் வளப்பமுள்ள குதிரைகள், தேர்கள்-அவ்வளவையும் ஆளும் அந்த வீரத்தளபதியும் ஒரே மனிதரின் அறிவாழச் சுழலை நினைக்கும் போது கொஞ்சம் நினைவு துவளாமல் இருக்க முடியவில்லை. உடலின் வன்மையால் வாழத் துடிக்கிறவனுக்கு எப்போதாவது ஏற்பட்டே தீரவேண்டிய சோர்வு அது.

கோட்டாற்றிலுள்ள ஆயுதச் சாலையில் இருந்ததுபோல் முன்புதான் இடையாற்றுமங்கலத்து விருந்தினர் மாளிகையில் தங்கின இரவில் அதன் அடியில் கண்ட பாதாள மண்டபத்தில் மகாமண்டலேசுவரர் ஆயுதங்கள் சேர்த்துக் குவித்து வைத்திருந்ததை நினைவுபடுத்திக் கொண்டான் வல்லாளதேவன், – –

மனத்தில் நிகழும் போராட்டத்துக்கு ஓர் ஏற்பாடும் தோன்றாமல் நாட்டுக்கு வரப்போகும் போராட்டத்தைத் தாங்க வேண்டியதைச் செய்வதற்காகக் கொடி மரத்து மேடையிலிருந்து கீழிறங்கிப் படைமுற்றத்துக்கு வந்தான் அவன். ஐநூறு பத்தி (பத்தியென்பது குறிப்பிட்ட தொகையினரைக் கொண்ட படையணி) வீரர்களின் சிறு தலைவர்களும் முரசமேடையைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். அவர்கள் தன்னை வணங்கி வரவேற்ற வரவேற்பை ஏற்றுத் தளபதி படைகளை முற்றத்தில் வகுத்து நிறுத்தவேண்டுமென்று கட்டளையிட்டான்.

கட்டளை பிறந்த அடுத்த கணம் ஊழிகாலப் பேரிடிகள் ஏககாலத்தில் முழங்கிச் சாடுதல்போல் அந்தப் பெரும் முரசு முழங்கியது. நான்கு பக்கமும் நெடுந்துாரத்துக்குப் பரந்திருந்த படைக்கோட்டத்துப் பகுதிகளில் எல்லாம் அம் முரசொலி கேட்டது. பக்கத்துக்கு ஒருவராக இருபுறமும் நின்றுகொண்டு அந்த முரசை முழக்கிய வீரர்கள் கை ஓயுமட்டும் முழக்கினர். அரை நாழிகைக்குள் அந்த முற்றம் பத்தி பத்தியாக அணிவகுத்த வீரர்கள் திருக்கூட்டத்தால் நிறைந்துவிட்டது.

முரச முழக்கம் நின்றதும் அமைதி சூழ்ந்தது. ஆயிரக்கணக்கான வீரர்கள் அணிபெற்று நிற்கும் அந்தப் படைவெள்ளத்தில் ஊசி விழுந்தால்கூட ஒசை கேட்கும், அவ்வளவு நுண்ணிய அமைதி பரவி நின்றது. முரசு மேடையில் அணிகளின் சிறு தலைவர்களோடு ஏறி நின்றுகொண்டு படைகளை நிதானித்துப் பார்த்தான் தளபதி வல்லாளதேவன்.

சோழனுக்கும், அவனோடு சேர்ந்திருக்கும் வடதிசை அரசர்களுக்கும் உள்ள படைகளின் மொத்தமான தொகையை மனம் அனுமானித்துக் கொண்டபடி ஒப்பு நோக்கித் தன் கண்ணெதிர் நிற்கும் படைப்பரப்போடு இணை பார்க்க முயன்றான் அவன். இணை பொருந்த வில்லை. ஏதாவது வெளியிலிருந்து படை உதவி கிடைத்தாலொழியத் தென்பாண்டிப்படை வடதிசைப் பெரும் படைகளின் கூட்டணியைச் சமாளிக்கப் போதுமானதாக இருக்காதென்று அவன் மதிப்பில் தோன்றியது. தன்னைச் சூழ்ந்துகொண்டு நின்ற அணித் தலைவர்களை நோக்கி அவன் ஆவேச உணர்ச்சியோடு பேசலானான்:

‘நண்பர்களே! வெற்றியும், தோல்வியுமாகப் பல போர்களில் அனுபவப்பட்டுள்ள நாம் இப்போது மலைப்பு அடைய வேண்டிய நிலையில் இருக்கிறோம். வடக்கே சோழப் பேரரசின் படை பெரிது. அதோடு கொடும்பாளுர்ப் படை, கீழைப் பழுவூர்ப்படை ஆகிய சிறுபடைகளும் ஒன்றுசேரப் போகின்றன. ஐந்து அரிய திறமைசாலிகள் ஒன்றுபட்டுக் கூட்டுப்படை அணியாக அது அமையலாம். சோழ கோப்பரகேசரி பராந்தகனும், கொடும்பாளுரானும், கீழைப்பழுவூர் கண்டன் அமுதனும், பரதுாருடையானும் அரசூருடையானும், ஒவ்வொருவகையில் போர் அனுபவம் மிகுந்தவர்கள். அவர்கள் ஒன்றுபட்டுக் கூட்டாகப் படையெடுக்கும் இந்தப் போரை வன்மம் பாராட்டிக் கொண்டு செய்யப்போகிறார்கள். –

“நாம் எல்லாருமே கடமையிற் கருத்துள்ள வீரர்கள் தாம். போர் செய்து மார்பிற் புண்களைப் பெறாத நாட்களெல்லாம்

நம் வாழ்க்கையிலே பயனற்றுக் கழிந்த நாட்களென்று கருதுபவர்கள்தாம். கண்களுக்கு நேரே வேலை ஓங்கினால் இமைகள் மூடினும் அதையே தோல்வியாக எண்ணி நாணப்படும் அளவுக்குத் தன்மானமும், மறப்பண்புமுள்ள மகாவீரர்களும் நம்மில் அநேகர் இருக்கின்றனர்.

“கொற்கை, கரவந்தபுரம் பகுதிகளில் வடதிசையரசர்கள் மறைமுகமாக நடத்திய குழப்பங்களைக் கொண்டு விரைவில் படையெடுப்பு நிகழலாமென்ற பயம், ஏற்பட்டிருக்கிறது. கரவந்தபுரத்துக் கோட்டையில் பெரும்பெயர்ச்சாத்தனிடமுள்ள படையும் தயாராகவே இருக்கிறது. வடக்கு எல்லையில் போர் தொடங்கும் என்ற தகவல் உறுதிப்பட்டவுடன் எந்தக் கணத்திலும் நமது பெரும் படை வடக்கே புறப்படத் தயாராயிருக்க வேண்டும். இப்போது வடக்கேயிருந்து ஒற்றுமையாகச் சேர்ந்து படையெடுக்கும் இந்த வடதிசையரசர்கள் முன்பு தனித்தனியாகப் போர் செய்தபோது நாம் பலமுறைகள் வெற்றி பெற்றிருக்கிறோம். ஆனால் அப்போதெல்லாம் குமாரபாண்டியர் உடனிருந்து போருக்குத் தலைமை தாங்கியதனால் நமக்கு உற்சாகமும், நம்பிக்கையும் இருந்தன. இப்போதோ குமாரபாண்டியரும் நம்முடன் இல்லை. ஒரு வேளை போர் தொடங்கும் நாள் நீடித்தால் அவர் வந்து விடலாம். உறுதி இல்லை, வந்தால் நமது நல்வினையாகும்.

“எப்படியிருப்பினும் குறைவோ, நிறைவோ, நமது அவநம்பிக்கைகள் மறந்து ஊக்கமோடு போரில் ஈடுபடுகிற வீரம் நம்மை விட்டு ஒருபோதும் போய்விடாது. என்னைப் பொறுத்தவரையில் இந்த நாட்டுக்காக என் உயிரைக் கொடுக்க எந்த விநாடியும் நான் தயாராயிருக்கிறேன். செஞ்சோற்றுக் கடனும், செய்நன்றிக் கடனும் பட்டிருக்கிறோம் நாம் இந்தப் போரில் எவ்வளவு ஊக்கத்தோடு நீங்கள் ஈடுபடுவீர்களென்பதை இப்போது நீங்கள் செய்யும் வீரப்பிரமாணம் மூலமும் சூளுரை மூலமும் நான் அறியப்போகின்றேன்” என்று சொல்லி நிறுத்தினான் தளபதி. – . . . . . . . . . . . . . அவன் பேச்சு நின்றது. வீரர்கள் வாளை உருவி வணங்கி வீரப் பிரமாணம் செய்தனர். “செஞ்சோற்றுக் கடன் கழிப்போம், செய்நன்றி மறவோம்” என்ற சூளுரைக் குரலொலி கடல் ஒலிபோல் எழுந்தது.

தளபதி நின்றுகொண்டிருந்த முரசு மேடைக்கு நேரே படைக் கோட்டத்தின் தலைவாயில் இருந்தது. தற்செயலாக வாயிற்பக்கம் சென்ற பார்வை அங்கே நிலைத்தது தளபதிக்கு. ஆடத்துதவிகள் தலைவன் குதிரையில் கனவேகமாக வந்து இறங்கித் தன்னைத் தேடிப் படைக்கோட்டதுக்குள் நுழைவதைத் தளபதி பார்த்தான். அவன் மனத்தில் ஆவல் துள்ளி எழுந்தது.

Previous articleRead Pandima Devi Part 2 Ch17 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in
Next articleRead Pandima Devi Part 2 Ch19 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here