Home Na Parthasarathy Read Pandima Devi Part 2 Ch20 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

Read Pandima Devi Part 2 Ch20 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

122
0
Read Pandima Devi Part 2 Ch20 Pandima Devi Na.Parthasarathy, Read Pandima Devi Online Free, Pandima Devi PDF, Download Pandima Devi novel, Pandima Devi book
Read Pandima Devi Part 2 Ch20|Na.Parthasarathy|TamilNovel.in

Read Pandima Devi Part 2 Ch20 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

பாண்டிமாதேவி – நா. பார்த்தசாரதி

இரண்டாம் பாகம், அத்தியாயம் 20 :எதையும் இழக்கும் இயல்பு

Read Pandima Devi Part 2 Ch20 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

இரவு ஒன்பது, பத்து நாழிகை இருக்கும். முன்சிறை அறக்கோட்டத்தின் முன்வாயிற் கதவுகள் அடைக்கப்பட்டு விட்டன. அறக்கோட்டத்து வேலைகளை முடித்துக்கொண்டு ஒய்வாக அமர்ந்து உரையாடலில் ஈடுபட்டிருந்தனர் அண்டராதித்தனும் கோதையும்.

“இன்னும் ஒரு நாள் கொற்கையில் தங்கி முத்துமாலை வாங்கிக்கொண்டு வந்திருக்கலாம். கலவரத்தைச் சாக்குக் காட்டிப் பயமுறுத்தி என்னை இழுத்துக்கொண்டு வந்து விட்டீர்கள். இப்படித் தொடர்ந்து என்னை ஏமாற்றிக் கொண்டே வருகிறீர்கள். இது கொஞ்சங்கூட உங்களுக்கு நன்றாயில்லை” என்று கோதை வம்புக்குக் கொடி கட்டிப் பறக்கவிட்டாள்!

“அதுதானே கேட்டேன்! காரியத்தோடுதான் பேசுவதற்கு வந்தாயா! அன்றைக்கு நாம் இருவரும் கொற்கையிலிருந்து அந்த நேரத்தில் திரும்பியிருக்கா விட்டால், அந்தக் கரவந்தபுரத்துப் பிள்ளையாண்டான் பாழ்மண்டபத்தில் அழுதுகொண்டே கிடந்து திண்டாடியிருப்பான். பாவம்! அவனுக்கு அப்படியா நேரவேண்டும் எந்தப் பயல்களோ, திருமுகத்தைப் பறித்துக்கொண்டு அடித்துப் போட்டுவிட்டுப் போயிருக்கும் போது நாம் சென்றதால் அவனுக்கு உதவ முடிந்தது கோதை! இந்த மாதிரி மற்றவர்களுக்குத் துன்பத்தைப் போக்கி உதவுவதில் கிடைக்கும் பெருமை ஒரு முத்துமாலையைக் கழுத்தில் அணிந்து கொள்வதால் கிடைக்குமா?”

“அடடா! என்ன் சாமர்த்தியமான பதில் உலகத்திலுள்ள ஆண்பிள்ளைகள். அத்தனைபேரும் எங்கெங்கோ நன்றாகப் பேசிப் பெயர் வாங்கிவிடுகிறார்கள். வீட்டுப் பெண்களிடம் பேசும்போது மட்டும் இப்படி அசடு வழிந்து விடுகிறதே? எனக்கு முத்துமாலை வாங்கித் தருவதற்கு வக்கில்லை என்று ஒப்புக்கொள்ளுங்களேன். ஏன் இப்படிப் பூசி மெழுகிப் பதில் சொல்கிறீர்கள்?”

“அம்மா தாயே! பரதேவதை! உன் வெண்கல நாக்கைக் கொஞ்சம் அடக்கியே பேசு மூலைக்குமூலை படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கும் யாத்திரிகர்கள் விழித்துக் கொண்டுவிடப்

போகிறார்கள். உன்னிடம் நான் படும்பாட்டை வேறு ஆண்பிள்ளைகள் பார்த்துவிட்டால் வெட்கக்கேடுதான்!”

“இந்தப் பயம் மட்டும் உங்களுக்கு இருக்கிறதே, ஒரு முத்துமாலை வாங்கிக் கொடுத்து விடுவதுதானே?”

“கோதை உனக்கு ஒரு அறிவுரை சொல்கிறேன் – கேள். ‘உன்னுடைய மனைவி உனக்கு அடங்கிய கற்பும் புகழும் உடையவளாய் இருந்தால் நீ உன் பகைவர்களுக்கு முன் பீடு நடை நடக்கலாம் என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். இந்த அறிவுரையை உன்னைப் போன்ற அடங்காப்பிடாரிப் பெண்களை நினைத்துக்கொண்டுதான் அவர் கூறியிருக்கிறார்.” “ஆகா! அறிவுரைக்கு ஒன்றுமே குறைவில்லை. உலகில் மலிவாக வேண்டாமென்று வெறுத்து ஒதுக்கும் அளவுக்குக் கிடைக்கக்கூடிய பொருளாயிற்றே அது! உங்களுக்குப் பகைவர்களும் இல்லை, நீங்கள் அவர்கள் முன் பீடுநடை நடக்கவும் வேண்டாம்.” – –

“நீ இப்படி முரண்டு பிடித்தால் கூறாமற் சந்நியாசம் கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை!”

“சந்நியாசம் கொள்கிற ஆளைப் பார். ஒரு பானை புளிக்குழம்பும், புளித்த தயிரும், பழைய சோறும் படுகிற பாட்டில் சந்நியாசமாம், சந்நியாசம்!” – – “ஐயோ! மானம் போகிறதடி. மெல்லப் பேசேன்.” இந்த வேடிக்கைத் தம்பதிகள் இப்படி இரசமாகப் பேசிக் கொண்டிருக்கிற கட்டத்தில் அறக்கோட்டத்தின் வாயிற் கதவு பலமாகத் தட்டப்பட்டது. இருவரும் எழுந்திருந்து போய்க் கதவைத் திறந்தார்கள். அந்த அகாலத்தில் இருளில் வாயிலில் நின்றுகொண்டிருந்தவர்களைப் பார்த்ததுமே அவர்கள். திகைப்பின் எல்லையை அடைந்தனர்.

மகாராணி வானவன்மாதேவியாரும் மற்றொரு பெண்ணும் வாயிலில் நின்றுகொண்டிருந்தனர். பல்லக்கை இறக்கிவிட்டு ஓய்ந்துபோய் நிற்கும் நாலு போகிகளையும்

(பல்லக்குத் தூக்கிப் போவோர்) அண்டராதித்தனும் கோதையும் &#3óõõrl_@ūffT. –

“தேவி! வரவேண்டும், வரவேண்டும். இந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாகத் தாங்கள் வந்தருளியது அறக்கோட்டத்துக்கே பெருமை” என்று பரபரப்படைந்து கூறினான் அண்டராதித்தான். கோதை ஒன்றும் பேசத் தோன்றாமல் பயபக்தியோடு மகாராணியைக் கைகூப்பி வணங்கினாள். அவசரம் அவசரமாக உள்ளே ஒடிப்போய்க் கைவிளக்கைப் பொருத்தி ஏற்றிக்கொண்டு வந்தான் அண்டராதித்தன். அவன் விளக்கை முன்னால் பிடித்துக்கொண்டு மகாராணியையும் வண்ணமகளையும் உள்ளே அழைத்துச் சென்றான்.

கோதை ஒடிப் போய் மகாராணி அமர்வதற்கேற்ற ஆசனம் ஒன்றைத் தேடி எடுத்துக்கொண்டு வந்துபோட்டாள். மகாராணி அமர்ந்து கொண்டார். அண்டராதித்தன் மகாராணி என்ன கூறப்போகிறார் என்பதைக் கேட்பதற்குச் சித்தமாகக் கைகட்டி வாய் பொத்திப் பவ்யமாக அருகில் நின்றான். புவனமோகினி தரையில் மகாராணிக்கு அருகே உட்கார்ந்து கொண்டாள். மருண்ட பார்வையோடு கோதை அண்டராதித்தனின் முதுகுக்குப் பின்னால் அடக்க ஒடுக்கமாகத் தோற்றமளித்தாள். அவளுடைய கலகலப்பான சுபாவத்துக்கும், குறுகுறுப்பான பேச்சுக்கும் முற்றிலும் மாறாக இருந்தது, அவள் செயற்கையாக வருவித்துக் கொண்ட அந்த அடக்கம்.

“என்ன ஐயா, அறக்கோட்டத்து மணியக்காரரே! பசியோடு உங்கள் அறக்கோட்டத்தைத் தேடிக்கொண்டு வந்திருக்கிறோம், எங்கள் வயிற்றை நிரப்புவதற்கு ஏதாவது வைத்திருக்கிறீரா?”

மகாராணி விளையாட்டுக்காகக் கேட்கிறாரென்று நினைத்துக் கொண்டான் அண்டராதித்தன்.

“தேவி! தாங்கள் உத்தரவிட்டால் இப்போதே அறுசுவை உண்டி தயாரித்து அளிக்கிறோம்.”

“தயாரிக்கவும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம். இந்த வேளையல்லாத வேளையில் உம்மையும் உமது மனைவியையும் சிரமப்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை. கைவசம் என்ன உணவு இருந்தாலும் அது போதும்!”

“கைவசம் ஒன்றும் வகையாக இல்லை. ஒரு நொடியில் அட்டிற்சாலையில் மடைப் பரிசாரகம் புரியும் பணிப்பெண்களை எழுப்பிவந்து அடுப்பு மூட்டச் சொல்லிவிடுகிறேன்.” – … “

“அடுப்பு மூட்டச் சொல்வது இருக்கட்டும், கையில் என்ன உணவு இருந்தாலும் நாங்கள் உண்ணத் தயார். வகையாக வேண்டுமென்று இப்போது நாங்கள் எதிர்பார்க்கவில்லை.” – . . . . . . . .

மகாராணி விளையாட்டுக்காகக் கேட்கவில்லை, உண்மையாகவே கேட்கிறாரென்று அவனுக்கு அப்போது தான் விளங்கியது. . … . . “தேவி! நீங்கள் அப்படிச் சொல்லக்கூடாது? பொருத்திருந்து நாங்கள் தயாரிக்கும் அறுசுவை உணவை ஏற்றுக் கொண்டுதான் போகவேண்டும். வராதவர் வந்திருக்கிறீர்கள்” என்று கோதை பணிவான குரலில் முன்னால் வந்து வேண்டினாள். அவள் குரலில் ஆவல் கிளர்ந்து ஒலித்தது!

“நான் சாப்பிடவேண்டுமென்பதற்காகக் கேட்கவில்லை பெண்ணே! எனக்கு அது முக்கியமில்லை. பல்லக்குச் சுமந்து கொண்டு வந்தவர்களின் பசியை முதலில் தீர்த்துவிட வேண்டும்! அப்புறம் இந்தப் பெண் காலையிலிருந்து என்னிடம் சொல்லாமல் பட்டினி கிடக்கிறாள், இவள் பசியையும் தீர்க்க வேண்டும்!”

“நீரில் இட்ட பழையசோறும், புளிக் குழம்பும்தான் இருப்பவை. அவை இந்த நேரத்தில் வாய்க்குச் சுவையாக இருக்காது. தயவுசெய்து அடிசில் ஆக்கியே அளித்துவிட அனுமதிக்க வேண்டும்” என்று கெஞ்சினாள் கோதை, மகாராணி கேட்கவில்லை. இருந்த உணவே போதும் என்றார். நா. பார்த்தசாரதி’ 44f

அண்டராதித்தான் வாயிற்புறம் போய்ப் பல்லக்குத் தூக்கிகளை அழைத்துவந்து உட்கார்த்தினான்.

கோதை சோற்றைப் பிசைந்து ஒவ்வொருவருக்கும் இலையில் கொண்டுவந்து வைத்தாள். புவனமோகினிக்குக் கூட அதையே அளித்தாள் அவள். மகாராணிக்கு மட்டும் அந்தப் பழைய சோற்றைக் கொடுக்கவில்லை. பயந்து கூசிப் பேசாமல் இருந்துவிட்டாள். அரண்மனையில் முக்கனிகளும், பாலும், தேனும், நறு நெய்யும், அறுசுவை உண்டிகளும் உண்ணும் மகாராணியிடம் சில்லிட்டுக் குளிர்ந்த பழையசோற்றையும், ஆறிப்போன புளிக் குழம்பையும் எப்படிக் கொடுப்பது? புதிதாகத் தயாரிக்கவும் மகாராணி சம்மதிக்க மாட்டேனென்கிறார்.

குழந்தைகள் உண்பதைக் கருணை ததும்பி வழிந்து அகமும் புறமும் துளும்ப இருந்து காணும் தாய் போல, அவர்கள் உண்பதைப் பார்த்துக்கொண்டே வீற்றிருந்தார் மகாராணி அவர் உள்ளம் நிறைந்தது.

எல்லோரும் உண்டு எழுந்தபின் கோதை சோறு பிசைந்த உண்கலத்தில் ஒரு சிறு தேங்காயளவு பழையசோறு மீதம் இருந்தது. மகாராணி அதைப் பார்த்தார். கோதையை அருகில் கூப்பிட்டு, ‘பெண்ணே! அந்தச் சோற்றை ஓர் இலையில் திரட்டி வைத்து எடுத்துக்கொண்டுவா” என்று கூறினார்.

“தேவி..அது.” ஏதோ சொல்லித் தடுக்க முயன்றாள் கோதை, с – – – “சொன்னால் சொன்னபடி எடுத்துக்கொண்டு வா” என்று அழுத்தமான தொனியில் மகாராணி இடையிட்டுக் கூறியதால் கோதை மறு பேச்சுப் பேச வழியில்லை. அப்படியே இலையில் திரட்டி எடுத்துக்கொண்டு வந்தாள்.

மகாராணி தின்பண்டத்துக்காகக் கையை நீட்டும் ஒரு செல்லக் குழந்தையைப்போல் இரு கைகளையும் நீட்டி ஆசையோடு அந்த இலையை வாங்கிக்கொண்டார். அடுத்த கணம் அவருடைய வலக்கை விரல்கள், இடது கையில் ஏந்திக் கொள்ளப்பட்ட இலையிலிருந்து சோற்றுத்திரளை அள்ளி

வாய்க்குக் கொண்டு போயின.

பல்லக்குத் தூக்கிகள், வண்ணமகள், கோதை அண்ட ராதித்தன்-அத்தனை பேருக்கும் ஒரே திகைப்பு. பிடிவாதமாக அந்தச் சோறுதான் வேண்டுமென்று மகாராணி வற்புறுத்திக் கேட்டு வாங்கிச் சாப்பிடும்போது எப்படித் தடுக்கமுடியும்?

எல்லோரும் இரக்கமும், பரிதாபமும் ததும்பும் விழிகளால் இலையை ஒரு கையால் ஏந்தி மற்றொரு கையால் உண்ணும் அந்தப் பேரரசியை இமையாமல் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

“ஏன் இப்படிப் பார்க்கிறீர்கள்? பாற்சோறு உண்கிறவள் பழைய சோறு உண்கிறேனே என்று தானே வியக்கிறீர்கள்? பாற்சோறானால் என்ன ? பழைய சோறானால் என்ன? பார்த்தால் இரண்டும் ஒரே நிறந்தான்!”-சிரித்துக்கொண்டே அவர்களுக்குச் சொன்னார் மகாராணி.

“எதையும் இழக்கத் துணிகிற மனம் வேண்டும்” என்று காந்தளூர் மணியம்பலத்தில் மகாராணி தனக்குத் தானே சொல்லிக்கொண்ட வாக்கியம் புவனமோகினிக்கு இப்போது நினைவு வந்தது.

சிறிது நேரம் அறக்கோட்டத்தில் இருந்து விட்டு, இரவே பயணத்தை மீண்டும் தொடங்கி அரண்மனைக்குப் போய் விட்டார்கள் அவர்கள்.

Previous articleRead Pandima Devi Part 2 Ch19 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in
Next articleRead Pandima Devi Part 2 Ch21 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here