Home Na Parthasarathy Read Pandima Devi Part 2 Ch26 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

Read Pandima Devi Part 2 Ch26 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

96
0
Read Pandima Devi Part 2 Ch26 Pandima Devi Na.Parthasarathy, Read Pandima Devi Online Free, Pandima Devi PDF, Download Pandima Devi novel, Pandima Devi book
Read Pandima Devi Part 2 Ch26|Na.Parthasarathy|TamilNovel.in

Read Pandima Devi Part 2 Ch26 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

பாண்டிமாதேவி – நா. பார்த்தசாரதி

இரண்டாம் பாகம், அத்தியாயம் 26 : வம்புக்கார வாலிபன்

Read Pandima Devi Part 2 Ch26|Na.Parthasarathy|TamilNovel.in

குழல்வாய்மொழிக்காக ஏற்பாடு செய்திருந்த கப்பலின் அலங்கார அறைக்குள்ளிருந்து அந்த இளைஞன் சிரித்துக் கொண்டே எதிரே வந்ததைப் பார்த்தபோது நாராயணன் சேந்தனுக்கு ஏற்பட்ட திகைப்பு உடனே கோபமாக மாறியது. வேடிக்கையும், குறும்புத்தனமும் தென்படுகிற சேந்தன் முகத்தில் முதன் முதலாகக் கடுமையான சீற்றத்தைக் காணமுடிந்தது. ‘தம்பி! நீ சரியான திருட்டுப் பயல் என்பதைக் காட்டிவிட்டாயே! நீ பெரிய கள்ளன். இந்தக் கப்பலில் ஏறக்கூடாதென்று கண்டித்துச் சொல்லியும் எங்கள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு எப்படியோ மாயமாக உள்ளே புகுந்துவிட்டாய். இவ்வளவு தூரம் வம்புக்கு வந்துவிட்ட பின்பு உனக்கெல்லாம் இனிமேல் மதிப்பும், மரியாதையும் கொடுத்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. நீ என்னிடம் வாங்கிக் கட்டிக்கொண்டுதான் போகப் போகிறாய்” என்று தன்னுடைய

மத்தளம் போன்ற புயங்களை மடக்கி அங்கியை மடித்து விட்டுக்கொண்டு அந்த வாலிபனை நெருங்கினான் சேந்தன். அவனுடைய உருண்டை முகத்திலும் பெரிய வட்டக் கண்களிலும் சினம் முறுக்கேறியிருந்தது.

குழல்வாய்மொழி பயந்து மருண்ட பார்வையோடு அறை வாயிலிலேயே நின்றுவிட்டாள். அந்த இளைஞன் எப்படி, எப்போது கப்பல் அறைக்குள் புகுந்திருக்க முடியுமென்பது அவள் அநுமானத்துக்கு எட்டவே இல்லை. அவளுக்கும் அந்த இளைஞன்மேல் ஆத்திரம் உண்டானாலும், சேந்தன் அவனை அடிப்பதற்காகக் கையை ஓங்கிக் கொண்டு போன போது சிறிது வேதனையாக இருந்தது. உள்ளத்தின் ஒரு மூலையில் அந்த இளைஞனுக்காக அநுதாபத்தின் மிகச் சிறிய ஊற்றுக் கண் திறந்து வருவதை அவளால் தடுத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் சேந்தனிடம் அந்த இளைஞன் நடந்து கொள்ளத் தொடங்கிய விதத்தைப் பார்த்தபோது அவள் தன் அதுதாபத்தையே மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. அவள் எண்ணியதைப்போல் அவன் சாதுப் பிள்ளையாண்டானாக இருக்கவில்லை. பெரிய வம்புக்காரனாக இருந்தான். தன்னை நோக்கிக் கையை ஓங்கிக் கொண்டு அடிக்க வந்த சேந்தனை எதிர்த்துக் கொண்டு முறைத்தான் அவன். “ஐயா! சும்மா மிரட்டிப் பயங்காட்டாதீர்கள். நான் நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்குக் கெட்டவன். ஏதோ இளம் பிள்ளைதானே என்று கையை ஓங்கிக் கொண்டு வருகிறீர்கள். உங்களுடைய ஆத்திரம் உண்மையானால் நானும் உங்களிடம் பொல்லாதவனாக நடந்து கொள்ள. வேண்டியதுதான்” என்று அவன் விறைப்பாக நிமிர்ந்து நின்று, வலது கையால் இடையிலிருந்த வாளின் பிடியைத் தொட்டுக்கொண்டே கூறினான். அது நாராயணன் சேந்தனுடைய கோப நெருப்பைக் கொழுந்து விட்டெரியச் செய்தது. அவன் சினத்தோடு கூச்சலிட்டான். “அடே, பொட்டைப் பயலே! நீயும் உன் கீச்சுக் குரலும் நாசமாய்ப் போக! கடவுள் உன் திமிருக்கு ஏற்றாற்போல் தொண்டையை அளந்துதான் வைத்திருக்கிறார் உனக்கு, வாளைக் கையில் நா. பார்த்தசாரதி … – 48?

உருவிக்கொண்டு என்னை ஏமாற்றி விடலாமென்றா பார்க்கிறாய்? ஏதாவது வம்பு செய்தாயோ, உன்னை அப்படியே குண்டுக் கட்டாகக் கட்டித் தூக்கிக் கீழ்தளத்தில் இருந்தபடியே கடலில் எறிந்து விடுவேன். என்னுடைய இந்தக் கைகளில் ஒளிந்து கொண்டிருக்கும் வலிமையை நீ அறியமாட்டாய். நேற்றுப் பயல் நீ! கொஞ்சம் வணக்கமாகவே பேசு. இந்த விறைப்பெல்லாம் என்னிடம் வைத்துக் கொள்ளாதே” .

“சரிதான், ஐயா! கொஞ்சம் நாக்கை உள்ளுக்குள்ளே அடக்கியே பேசுங்கள். நீங்கள் இருப்பது முழங்கால் உயரம்! ஆகாயத்தைப் பிளக்கும்படி பெரிதாகக் கூச்சல் போடுகிறீர்களே! கடவுள் எனக்குத்தான் தொண்டையைக் குட்டையாகப் படைத்து என் திமிரை மட்டம் தட்டிவிட்டார்; உங்களுக்கு என்ன காரணத்துக்காக உடம்பையே இப்படிக் குட்டையாகப் படைத்தாரோ தெரியவில்லை! போகட்டும்; இதோ அறைவாசலில் நின்றுகொண்டிருக்கும் இந்தச் சகோதரிக்கு முன்னால் உங்களை அநாவசியமாக அவமானப்படுத்த வேண்டாமென்று பார்க்கிறேன். இல்லையானால்…? அவன் முடிக்கவில்லை. அதற்குள் சேந்தன் குறுக்கிட்டு, ‘இல்லையானால் என்ன செய்துவிடுவாயாம்?” என்று கொதிப்போடு கேட்டுக்கொண்டே இன்னும் அருகில் நெருங்கினான். ஆனால் அந்த இளைஞனோசேந்தன் நெருங்க நெருங்க அவன் கைக்கெட்டாதபடி ஒரு பாகதுரம் பின்னுக்கு நகர்ந்து நின்றுகொண்டான். அறைவாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்த குழல்வாய்மொழி அந்த இளைஞனின் செயலைக் கண்டு மெல்லச் சிரித்துக் கொண்டாள். வீராதி வீரனைப் போல் பேசிக்கொண்டே பின்னுக்கு நகரும் அந்த வாலிபன் முகத்தில் பயமும், பதற்றமும் தோன்றுவதைக் குழல்வாய்மொழி கவனித்தாள். சேந்தனும் பெரிய ஆள்தான். பிரமாதமாக அடித்து நொறுக்கிவிடப் போகிறவனைப்போலக்கையை ஓங்கிவிட்டு அடிக்கப் பயந்து தயங்குவதையும் குழல்வாய்மொழி கவனித்தாள். இரண்டு ஆண்பிள்ளைகளுமே ஒருவருக்கொருவர் பயந்துகொண்டு வெளியில் தைரியசாலிகளாக நடிக்கும் அந்த பா.தே.31.

நிலையைக் கூர்ந்து கவனித்தபோது அவளுக்குச் சிரிப்புத்தான் வந்தது. சேந்தன் அந்த வாலிபனை அதட்டினான். “அடேய்! பேசாமல் நான் சொல்கிறபடி கேள். இப்போது கப்பல் போய்க் கொண்டிருக்கும் இந்த இடத்திலிருந்து துறைமுகம் அதிக தூரமி ல்லை. கடலில் குதித்துக் கரைக்கு நீந்திப் போய்விடு. இல்லாவிட்டால் நானே பிடித்துத் தள்ளிவிடுவேன். என்னால் முடியாவிட்டால் கப்பல் மீகாமனையும், மற்ற ஆட்களையும் கூப்பிட்டு, உன்னைப் பிடித்துக் கடலில் தள்ளச்சொல்வேன். உன்மேல் சிறிதுகூடக் கருணை காட்டமாட்டேன். நீ கெட்ட குறும்புக்காரப்பயல்’ – –

“ஆகா! அதற்கென்ன? உங்களால் மட்டும் முடியுமானால் தாராளமாகப் பிடித்துத் தள்ளிவிடுங்கள். அதற்கு முன்னால் உங்களிடம் ஒரு வார்த்தை நான் திருடுவதற்கோ, வேறெந்த வகைகளிலாவது ஏமாற்றி வஞ்சகம் செய்வதற்காகவோ, இந்தக் கப்பலில் ஏறவில்லை. இன்றைக்கு விழிஞத்தில் நின்ற கப்பல்களில் வேறெந்தக் கப்பலிலும் எள் விழ இடமில்லை. ஒரே கூட்டம். நானோ இலங்கைத் தீவு வரை பயணம் செய்யவேண்டும். மிகவும் அவசரம்,துறைமுகத்தில் விசாரித்ததில் இந்தக் கப்பல் இலங்கைத் தீவுக்குப் போனாலும் போகலாமென்று கூறி, அருகில் நின்ற உங்களையும் இந்தச் சகோதரியையும் விசாரிக்கச் சொன்னார்கள். நான் வந்து விசாரித்தேன். நீங்கள் இடம் இல்லையென்று கண்டிப்பாக மறுத்துச் சொல்லி விட்டீர்கள். எனக்கோ அவசரம். இந்தக் கப்பலை விட்டால் வேறு வழியில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். நீங்களும் சகோதரியும் மேல்தளத்தில் பேசிக்கொண்டு நின்றபோது உங்களுக்குத் தெரியாமல் ஏறிக் கீழ்த்தளத்திலுள்ள இந்த அறைக்குள் ஒளிந்துகொண்டேன். இப்போது நீங்கள் வந்து பார்த்து விட்டீர்கள். கடலில் தள்ளுவேன் என்கிறீர்கள். அப்படிச் சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் உங்களைக் கொஞ்சம் சிந்திக்கவேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன். நான். இவ்வளவு பெரிய கப்பலில் நீங்கள் இரண்டே இரண்டு. பேர்கள்தானே பயணம் செய்கிறீர்கள். நான் ஒருவன் கூட

இருந்துவிட்டதனால் உங்களுக்கு என்ன குடி முழுகிவிடப் போகிறது? என்னால் உங்களுக்கு என்ன கெடுதல் வந்துவிடப் போகிறது:”

“இரண்டு பேர்கள் போகிறோம். அல்லது வெறுங்கப்பலை ஒட்டிக் கொண்டு போகிறார்கள். அதைப்பற்றிக் கேட்க நீ யார் தம்பீ? உனக்கு இடமில்லையென்றால் பேசாமல் போக வேண்டியதுதானே? இந்தக் குறுக்குக் கேள்வியெல்லாம் உன்னை யார் கேட்கச் சொன்னார்கள்” என்றான் நாராயணன் சேந்தன். தொடக்கத்தில் சேந்தனிடம் எரிந்து பேசி வம்பு செய்த அந்த வாலிபனின் முகத்தில் இப்போது சிறிது கலவரமும் பதற்றமும் தோன்றின. “சகோதரி! என்னை உங்கள் கூடப் பிறந்த தம்பிபோல் நினைத்துக் கொள்ளுங்கள். பெண்களுக்கு நெகிழ்ந்த மனமும் பிறருக்கு விட்டுக் கொடுத்து இரங்கும் பண்பும் அதிகம் என்பார்கள். நீங்களோ இப்படிப் பாராமுகமாக இருக்கிறீர்களே. இப்படி நடுக்கடலில் வைத்துக்கொண்டு, ‘உன்னைப் பிடித்துக் கடலில் தள்ளிவிடுவேன்’ என்று பயமுறுத்தினால் நான் என்ன செய்வேன்? இந்த மனிதரிடம் கொஞ்சம் நீங்கள் எனக்காகச் சொல்லுங்கள். இந்தப் பிரயாணத்தின்போது நடுநடுவே நான் உங்களுக்கு எவ்வளவோ உதவியாக இருப்பேன். நான் உங்கள் மனிதன், உங்கள் ஊழியனைப் போல் நினைத்துக் கொள்ளுங்கள்.” .

அந்த வாலிபனுடைய திடீர்ப் பணிவைக் கண்டு குழல்வாய்மொழி சிரித்தாள். சேந்தன் ஏளனம் நிறைந்த குரலில், “கெஞ்சினால் மிஞ்சுவது, மிஞ்சினால் கெஞ்சுவது என்கிற விவகாரம் வைத்துக்கொள்ளாதே. சிறிது நேரத்துக்கு முன்னால் அசகாயகுரனைப் போல் வாளை உருவத் தயாராகி விட்டாய். இப்போது என்னடாவென்றல் சரணாகதி நாடகம் போடுகிறாய். நான் உன்னை இதுவரை ஒன்றுமே செய்யாமல் நின்று பேசிக்கொண்டிருப்பதனால் தான் நீ எனக்குப் பயப்பட மாட்டேனென்கிறாய். கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சி. இரு இரு இப்போதே ஆட்களைக் கூப்பிட்டு உன்னைக் கடலில் துக்கி எறியச் சொல்லுகிறேன்” என்று. சொல்லிக்கொண்டே ஆட்களைக் கூப்பிடுவதற்காகக் கைகளைச்

சேர்த்துத் தட்டப்போனான். அப்போது அந்த வாலிபன் விருட்டென்று அருகில் பாய்ந்து சேந்த்னுடைய கைகளைப் பிடித்துக்கொண்டு மேலும் குழைவான குரலில் கெஞ்சத் தொடங்கிவிட்டான். சேந்தன் திகைத்துப் போனான். குளிர்ந்த செந்தாமரைப் பூக்கள் இரண்டு தன் கைகளைக் கவ்விக் கொண்டிருப்பதுபோல் சுகமாகவும் மிருதுவாகவும் இருந்தன, நாராயணன் சேந்தனுக்கு அந்த வாலிபனின் கைகள்.

“ஐயா! ஆரம்பத்தில் நான் உங்களிடம் சிறிது வரம்பு கடந்துதான் பேசிவிட்டேன். அதற்காக என்னை மன்னித்து விடுங்கள். இந்தத் தென்கடலில் எங்கு போகவேண்டு மானாலும் எனக்கு வழிகள் நன்றாகத் தெரியும். அநேகமாக ஒவ்வொரு தீவிலும் சில நாட்கள் இருந்திருக்கிறேன் நான். இலங்கை போன்ற பெரிய தீவுகளில் என்னால் எவ்வளவோ உதவிகள் செய்ய முடியும். தென்கடலில் அங்கங்கே கடம்பர்கள் என்ற ஒரு வகைக் கடற் கொள்ளைக்காரர்கள் கப்பலை நடுக்கடலில் கொள்ளையடித்துத் துன்புறுத்தி வருகிறார்கள். அந்தக் கொள்ளைக்காரர்கள் எப்படியிருப்பார்கள், எப்போது வருவார்கள் என்ற நெளிவு சுளிவெல்லாம் எனக்குத் தெரியும். உங்கள் கப்பலுக்கு அவர்களால் தொல்லைகள் வராதபடி நான் காப்பாற்றுவேன். நீங்கள் என்னைக் காப்பாற்றுங்கள். தயவுசெய்து இந்தக் கப்பலிலேயே உங்களோடு என்னையும் பிரயாணம் செய்யவிடுங்கள்.” ‘. . .

இதைக் கேட்டுச் சேந்தன் பலமாக ஒகோவென்று சிரித்தான். குழல்வாய்மொழியும் சிரித்துக்கொண்டுதான் நின்றாள். “சரியான பயல்தான் அப்பா நீ! பெரிய சூரனைப்போல் நடித்துவிட்டுக் கடைசியில் இந்த முடிவுக்குத்தானா வந்தாய்? இவ்வளவு பணிவையும் தொடக்கத்திலேயே எங்களிடம் காட்டிக் கப்பலில் அனுமதியின்றி ஏறிவிட்டதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டிருந்தாயானால் விவகாரம் இவ்வளவு முற்றியிருக்காதே. உன்னைச் சொல்லி என்ன தம்பி, குற்றம்: உலகம் முழுதுமே பண்பாட்டுக்குப் பஞ்சம் வந்துவிட்டது. எதையும் செய்ய முடிந்த தீரன் பணிவாக அடங்கி ஒடுங்கிப் பணிவாக வாழ்ந்தால் அந்தப் பணிவைப் போற்றலாம். கையாலாகாதவன் பணிவதுதான் உலக

வழக்கமாகிவிட்டது. முடிகிற வரை ஆண்மையும் வீறாப்பும் காட்டுவது, முடியாவிட்டால் பணிந்து அடங்கி விடுவது. மனிதர்கள் பழகிப் பழகி வாழத் தெரிந்து கொண்டுவிட்ட இரகசியம்தான் இந்தப் பணிவு. இதனால்தான் உலகத்தில் உண்மை வீரர்களே குறைந்து விட்டார்கள்” என்று சொல்லிவிட்டுக் குழல்வாய்மொழியின் பக்கமாகத் திரும்பி, “அம்மணி! நீங்களும் பார்த்துக்கொண்டு தானே நிற்கிறீர்கள்! புலியாக இருந்த பயல் அதற்குள் இப்படிப் பூனையாக மாறிவிட்டான்! இந்தக் காலத்து இளைஞர்களுக்கு எதிலுமே உறுதி கிடையாது. அலைபாயும் மனம், அலைபாயும் நினைவுகள், அலைபாயும் செயல்கள்; அதனால்தான் எதிலும் தோல்வி மனப்பான்மையும் நம்பிக்கை வறட்சியும் அடைந்து கெட்டுப் போகிறார்கள். மனத்தை எந்தச் செயலிலும் ஆழமாகக் குவிந்து ஈடுபட விடமாட்டேனென்கிறார்கள். மேலோட்டமான அகலத்தையும் பரப்பையும் பார்த்தே உணர்ச்சி மயமாக வாழ்ந்து அழிகிறார்கள். இதோ இந்த வாலிபனையே எடுத்துக் கொள்ளுங்களேன். பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கிறான். பண்பில் எவ்வளவு மோசமாயிருக்கிறான்!” என்றான் நாராயணன் சேந்தன். – –

குழல்வாய்மொழி தான் சிரிப்பதை நிறுத்திக்கொண்டு அந்த வாலிபனை நோக்கி, “உன் பெயர் என்ன அப்பா?” என்று கேட்டாள். வாலிபன் மனத்தில் எதையோ சிந்திப்பவனைப்போல் சிறிது தயங்கினான். பின் பு குழல்வாய்மொழியைப் பார்த்துப் புன்னகை செய்துகொண்டே “சகோதரி! என் பெயர் கூத்தன்” என்றான். –

“உனக்குப் பொருத்தமான பெயர்தான் தம்பி! சில பேருக்குப் பொருத்தமான பெயர் கிடைப்பதில்லை; இன்னும் சிலர் பெயருக்குப் பொருத்தமாக நடந்துகொள்வதே இல்லை. நீ இரண்டு வகையிலும் கொடுத்துவைத்தவன். கூத்தன் என்ற பெயருக்கு நடிப்பவன் என்று பொருள். நீ நடப்பது, சிரிப்பது, பெண் குரலில் பேசுவது, பயமுறுத்தல், கெஞ்சுதல், உன்னுடைய தோற்றம் எல்லாமே செயற்கையாக நடிப்பது போல் இருக்கின்றன. உன் இயல்போடு ஒட்டியதாகவே தெரியவில்லை.

நீ கூத்தனேதான்!” சேந்தன் தற்செயலாக அவன் பேரைக் கேட்டதும், தன்மனத்தில் பட்டதைத்தான் மேற்கண்டவாறு கூறினான். ஆனால் அதைச் செவியுற்றதும் அந்த வாலிபனது முகத்தில் அவ்வளவு பீதியும் பரபரப்பும் ஏன் உண்டாயினவோ? சற்றுக் கூர்ந்து கவனித்தால் அவன் உடல் மெல்ல நடுங்கிப் புல்லரித்து ஒய்வது கூடத் தெரியும். சேந்தன் குழல்வாய்மொழியைப் பார்த்துப் பின்வருமாறு கேட்டான்”அம்மணி! நீங்கள் சொல்லுங்கள். இவனை என்ன செய்யலாம்? போனால் போகிறானென்று இப்படியே நம்கூட இந்தக் கப்பலில் பயணம் செய்வதற்கு அநுமதித்து விடலாமா? அல்லது கடலில் பிடித்துத் தள்ளிவிடலாமா?” – – –

சேந்தனுடைய கேள்விக்குக் குழல்வாய்மொழி பதில் சொல்லுமுன் அந்த வாலிபனே முந்திக்கொண்டு, “கடலில் தள்ளிவிடுங்கள். இந்தக் கடலில் அல்ல. உங்களுடைய கருணைக் கடலில் என்னையும் தள்ளிக்கொண்டு காப்பாற்றுங்கள்” என்றான். அதைக் கேட்டு மகாமண்டலேசுவரரின் அருமை மகள் உள்ளம் பூரித்தாள். சேந்தனோ முகத்தைச் சுளித்துக் கொண்டு சொன்னான்:-“பயல் விநயமாகப் பேசுவதில் உலகத்தை விலைபேசி விற்றுச் சுருட்டிக்கொண்டு போய் விடுவான் போலிருக்கிறது. அதைப் பார்த்து ஏமாந்துவிடாதீர்கள், அம்மணி!” – –

“ஆனாலும் பரவாயில்லை! கப்பலில் எத்தனையோ ஊழியர்கள் இருந்தாலும், உங்களுக்கும் எனக்கும் உதவியாக ஒர் ஆள் வேண்டுமல்லவா? இவனும் இருந்து விட்டுப் போகட்டும். இவன்தான் பழைய முரட்டுத்தனத்தையெல்லாம் விட்டுவிட்டு நம் வழிக்குப் பணிந்து வந்துவிட்டானே! இனிமேல் இவனால் நமக்குக் கெடுதல் இருக்காது’ என்றாள் குழல்வாய்மொழி. அவளுடைய ஆதரவான சொற்களைக் கேட்ட பின்புதான் அந்த வாலிபனுடைய முகத்தில் மலர்ச்சி வந்தது. – … . . .

“என்னமோ, உங்கள் பாடு; இவன் பாடு. இவனைக் கட்டி மேய்ப்பதற்கு என்னால் முடியாது. நான் மேல்தளத்துக்குப் போகிறேன்” என்று முகத்தைத் திருப்பிக்கொண்டு போய் விட்டான் நாராயணன் சேந்தன்.

“சகோதரி! இந்தக் குட்டை மனிதர் யார்? கொதிக்கிற எண்ணெயில் கடுகு வெடிக்கிறமாதிரி ஏன் இப்படித் திடீர் திடீர் என்று இவருக்குக் கோபம் வந்துவிடுகிறது? இவர் உங்களுக்கு உறவா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டான் வாலிபன்.

“கூத்தா! அது அவர் சுபாவம்; அதை நாம் மாற்ற முடியாது. எனக்குக் கள்ைப்பாக இருக்கிறது. நான் படுத்து உறங்கப் போகிறேன். நீயும் மேல்தளத்துக்குப் போ. நான் கூப்பிடுகிறபோது வந்தால் போதும்” என்றாள் குழல்வாய்மொழி. கூத்தன் என்ற அந்த வாலிபன் கப்பலின் மேல்தளத்துக்கு ஏறிப்போனான். அவன் சேந்தனோடு ஒட்டிக் கொண்டு, நெருங்கிப் பழக முயன்றான். ஆனால் சேந்தன் நெருங்க விடவில்லை. யாரோ சொல்லி வைத்து ஏற்பாடு செய்திருந்ததுபோல் கப்பல் ஊழியர்களும் அந்த வாலிபனோடு ஒட்டுதல் இன்றியே பழகினார்கள். அவனுடன் பேச நேரும்போதெல்லாம். பொட்டைப் பயல் பொட்டைப் பயல்’ என்று வாய்க்கு வாய் திட்டினான் சேந்தன்.

Previous articleRead Pandima Devi Part 2 Ch25 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in
Next articleRead Pandima Devi Part 2 Ch27 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here