Home Na Parthasarathy Read Pandima Devi Part 2 Ch3 | Pandima Devi Na. Parthasarathy |...

Read Pandima Devi Part 2 Ch3 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in

61
0
Read Pandima Devi Part2 Ch3 Pandima Devi Na.Parthasarathy, Read Pandima Devi Online Free, Pandima Devi PDF, Download Pandima Devi novel, Pandima Devi book
Read Pandima Devi Part2 Ch3|Na.Parthasarathy| TamilNovel.in

Read Pandima Devi Part 2 Ch3 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in

பாண்டிமாதேவி – நா. பார்த்தசாரதி

இரண்டாம் பாகம், அத்தியாயம் 3 : நெருங்கிவரும் நெடும் போர்

Read Pandima Devi Part 2 Ch3|Na.Parthasarathy| TamilNovel.in

அடுத்தடுத்து வந்த பயங்கரச் செய்திகளைக் கேள்விப்பட்டுப் பெரும்பெயர்ச்சாத்தன் பதறிப்போனான். நிலைமையை விவரித்து எழுதிய திருமுகத்துடன் அப்போதுதான் மானகவசனைத் துாதனுப்பியிருந்தான். துதுவன் புறப்பட்டுப்போன சிறிது நேரத்திற்குள் கொற்கையிலிருந்து அந்தப் புதிய செய்தி வந்தது.

“இரவில் ஆயுதபாணிகளான முரட்டு வீரர்கள் சிலர் தீப்பந்தங்களோடு கூட்டமாக வந்தார்கள். முத்துச் சலாபத்துக்கு அண்மையிலிருந்த கூடாரங்களுக்குத் தீ வைத்து விட்டுக் காவலுக்கு இருந்த நம் வீரர்களோடு போரிட்டனர். குவித்து வைக்கப்பட்டிருந்த சிப்பிக் குவியல்கள் சூறையாடப் பட்டுவிட்டன. அந்த முரட்டுக் கூட்டத்தில் யாருமே அகப்படவில்லை. சிலரைத் துரத்திப் பிடிக்க முயன்றும் முடியாமல் போய்விட்டது.” கொற்கையிலிருந்து செய்தி கொண்டுவந்த ஆள் இப்படிக் கூறியபோது பெரும் பெயர்ச்சாத்தன் திகைத்துப்போய்விட்டான்.

“தொடர்ந்து முத்துக்குளிப்பு நடைபெறுகிறதோ, இல்லையோ?

“இல்லை! தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. முத்து வாணிபத்துக்காக நெடுந்தொலைவிலிருந்து கடல் கடந்து வந்திருந்த வணிகர்களெல்லாம் பயந்துபோய்த் திரும்பிச் சென்றுவிட்டனர்.”

“என்ன ஆனாலும் முத்துக்குளிப்போ, சலாபத்து வேலைகளோ தடைப்பட்டு நிற்கக்கூடாது. நம்மைப் பல வீனப்படுத்த விரும்புகிறவர்களுக்கு முன் நாம் பலவீனமடைவதுபோல் காட்டிக்கொள்வது நல்லதல்ல. இந்தத் திருமுகம் கொண்டுவரும் துரதனோடு பொறுக்கி எடுத்த வீரர்களாக நூறுபேர் அனுப்பியிருக்கிறேன். இவர்களைக் காவலுக்கு வைத்துக்கொண்டு தொடர்ந்து முத்துக் குளிப்பை நடத்துங்கள். மற்ற ஏற்பாடுகளை இங்கே நான் கவனித்துக் கொள்கிறேன்” என்று முக்கியமான ஆள்வசம் ஓர் ஒலையையும் நூறு வீரர்களையும் ஒப்படைத்து உடனே கொற்கைக்கு அனுப்பினான் பெரும்பெயர்ச்சாத்தன்.

பயமும், திகைப்பும், மேலும், மேலும் திடுக்கிடும் செய்திகளும் அவனைக் கவலைக்குள்ளாக்கிக் கொண்டிருந்தாலும் தன்னைப் பொறுத்தவரையில் உறுதியாக இருந்து காரியங்களைச் செய்து வரவேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டிருந்தான் அவன்.

வடக்கு எல்லைப் பகுதிகளில் பலமான காவல் ஏற்பாடுகளைச் செய்திருந்த போதிலும் அங்கிருந்தும் சில கலவரச் செய்திகள் காதுக்கு எட்டிக்கொண்டுதான் இருந்தன. எல்லை முடியும் இடத்தில் நடப்பட்டிருந்த கொழுக்குத்துக் கற்கள் (எல்லை பிரியும் இடத்தை விளக்கும் அடையாளக் கற்கள்) இரவோடு இரவாகப் பிடுங்கி எறிந்து உடைக்கப்பட்டிருந்தனவாம்.

தன்னால் முடிந்த காவல் ஏற்பாடுகளைச் செய்துவிட்டு அரண்மனைக்குச் செய்தி கொண்டுபோன மானகவசன் திரும்ப வருவதை எதிர்பார்த்திருந்தான் பெரும் பெயர்ச்சாத்தன். ஏற்கெனவே சந்தேகத்தின் பேரில் சிறைபிடிக்கப்பட்டிருந்த வடதிசை ஒற்றர்கள் சிலரைப் பயமுறுத்தியும், துன்புறுத்தியும் அவர்களிடமிருந்து ஒரு சில உண்மைகளை அறிய முடிந்திருந்தது. படையெடுக்க முனைந்திருப்பவர்கள் யார் யாரென்றும், அவர்களுடைய நோக்கங்கள் என்னென்னவென்றும் பெரும்பெயர்ச்சாத்தன் ஒருவாறு தெரிந்து கொண்டிருந்தான். அரண்மனைக்கு அனுப்பிய திருமுகத்திலும் அதைக் குறிப்பிட்டிருந்தான். கரவந்தபுரத்துக் கோட்டை சிறந்த பாதுகாவல் அமைப்புக்களைக் கொண்டது. பராந்தக பாண்டியரும், பெரும்பெயர்ச் சாத்தனின் தந்தை உக்கிரனும் அவர்கள் காலத்தில் வடக்கு எல்லைப் பாதுகாப்பையும் வேறு சில வசதிகளையும் எண்ணித் திட்டமிட்டு உருவாக்கிய கோட்டை அது ஆழமான அகன்ற அகழி. எந்திரப் பொறிகளும் தந்திரச்செயல்களும் மிக்க உயரமான மதிற் சுவர். சிலப்பதிகாரத்து மதுரைக் காண்டத்தில் வருணிக்கப்பட்டிருந்த அந்நாளைய மதுரைக் கோட்டையை மனத்தில் கொண்டு கட்டப்பட்டிருந்தது கரவந்தபுரத்துக்கோட்டை. கோட்டைக் கதவுகளை அடைத்து, முட்டுக்கொடுப்பதற்கு மூன்று பெரிய கணையமரங்கள் தேவையென்றால் அதன் பெருமையை வேறு எப்படிக் கூறமுடியும் : இப்படியெல்லாம் இருந்தும் பாதுகாப்புக்காக மேலும் கவலை எடுத்துக் கொண்டான் அந்தக் கோட்டையின் சிற்றரசன். மகாமண்டலேசுவரரிடமிருந்தும் மகாராணியிடமிருந்தும் மறுமொழி கிடைப்பதற்கு முன்னால் தன்னால் ஆனவற்றையெல்லாம் தயங்காமல், மயங்காமல் செய்யவேண்டுமென்ற துடிதுடிப்பு அவனுக்கு இருந்தது.

அன்று மாலைக்குள் மானகவசன் மறுமொழி ஒலையோடு திரும்பிவிடுவான் என்று அவன் ஒவ்வொரு விநாடியும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் மானகவசன் அன்று மாலை மட்டுமல்ல, மறுநாள் காலை வரையில் வரவே இல்லை. வேறு சில செய்திகள் பராபரியாக அவனுக்குத் தெரிந்தன.

கன்னியாகுமரிக் கோவிலில் யாரோ மகாராணியார்மேல் வேல் எறிந்து கொல்ல முயன்ற செய்தியைக் கேட்டபோதே அவன் மிகவும் கலங்கினான். அதன்பின் கூற்றத் தலைவர்கள் அரண்மனையில் ஒன்று கூடித் தென்பாண்டி நாட்டின் எதிர்காலம் பற்றி விவாதிக்கப் போவதும் அவனுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், “இடையாற்றுமங்கலம் மாளிகையில் அந்நியர்அடிச்சுவடு படமுடியாத பாதுகாப்பான இடத்திலிருந்து பாண்டிய மரபின் சுந்தரமுடியும், வீரவாளும், பொற் சிம்மாசனமும் கொள்ளை போய்விட்டன”— என்ற புதுச்செய்தியை அறிந்தபோது அவன் அடைந்த அதிர்ச்சி அவன் வாழ்நாளிலேயே பேரதிர்ச்சி.

‘அடாடா வலிமையான தலைமையற்றிருக்கும் இந்த நாட்டுக்குத்தான் ஒரே சமயத்தில் எத்தனை சோதனைகள்? பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும் என்பது போல் அடுத்தடுத்து வரும் இந்தத் துன்பங்களையெல்லாம் மகாராணியார் எப்படித்தான் தாங்கிக்கொள்ளப் போகிறாரோ? கணவனை இழந்த கைம்மை நிலை, குமாரபாண்டியர் காணாமற்போன துயரம்! பகைவர்களின் பலம் வாய்ந்த தொல்லைகள், அரசுரிமைப் பொருள்கள் கொள்ளைபோன அவலம், ஐயோ இந்தச் சமயத்திலா நான் போர்ச் செய்தியைப் பற்றிய திருமுகத்தைக் கொடுத்தனுப்ப வேண்டும் ? இதை வேறு கேள்விப்பட்டால் அவர்கள் மனம் எவ்வளவு வேதனைப்படும்? தெய்வத்துக்குச் சமமான மகாராணியாரின் நெஞ்சம் இந்நாட்டையும், தம் புதல்வனையும், எதிர்கால ஆட்சியையும் பற்றி எத்தனை எத்தனை உயர்ந்த எண்ணங்களை எண்ணிக் கொண்டிருக்கின்றது? ஐயோ! ஊழ்வினையே! எங்கள் மகாராணி பாண்டிமாதேவியின் எண்ணங்களுக்கு நீ என்ன முடிவு வகுத்து வைத்திருக்கிறாயோ?”

இவ்வாறு எண்ணி நெடுமூச்செறிந்த பெரும்பெயர்ச் சாத்தனின் மனக்கண்களுக்கு முன்னால் ஒரு கணம் பாண்டிமாதேவியின் சாந்தம் தவழும் தெய்வீக முகமண்டலம் தோன்றி மறைந்தது. ஏனோ, மகாராணி பாண்டிமாதேவியின் திருமுகம் தோன்றிய மறுகணமே அதை ஒட்டித் தோன்றினாற்போல் மணத்தை நுகர்ந்த அளவில் பூவின் உருவை மனம் உரு வெளியில் கற்பித்துக் காண முயலுமே, அப்படிப்பட்ட ஒர் இயல்பு அது.

பெரும்பெயர்ச்சாத்தன் அவன் தந்தையைப் போலவே அஞ்சா நெஞ்சம் படைத்த வீரன். அவன் தந்தை உக்கிரன் மகாமன்னரான பராந்தக பாண்டியரையே பல முறைகள் எதிர்த்துப் போரிட்டு அதன் பின்பே அவருக்குப் பணிந்து நண்பனானான். அத்தகைய திடமான வீரப்பரம்பரையில் பிறந்திருந்தும் நல்லவர்களுக்கு வரும் துன்பங்களைக் காணும் போது அவன் மனம் நெகிழ்ந்துவிடுகிறது.

ஒருபுறம் நாட்டின் சூழ்நிலைகளைப்பற்றிய தவிப்பு. மறுபுறம் தூதுபோன மானகவசன் இன்னும் ஏன் திரும்பி வரவில்லை என்ற கவலை. இரண்டும் பெரும் பெயர்ச்சாத்தனைப் பற்றிக்கொண்டு அவன் அமைதியைக் குலைத்தன.

எதற்கும் இன்னொரு தூதனை அனுப்பிவிட்டால் நல்லது. காரியம்பெரிது, மெத்தனமாக இருந்து விடக்கூடாது. மானகவசன் போய்ச்சேர்ந்தானோ, போகவில்லையோ’ என்று நினைத்துப் பார்க்குங்கால் பற்பல விதமான ஐயப்பாடுகள் அவனுக்கு உண்டாயின. உடனே மற்றொரு தூதனிடம் கொற்கையில் நடந்த குழப்பம், வடஎல்லையில் கொழுக்குத்துக் கற்கள் உடைப்பட்ட விவரம் எல்லா வற்றையும் விவரித்த மற்றொரு திருமுகத்தை எழுதிக்கொடுத்து அனுப்பினான். அப்புறமும் பெயர்ச்சாத்தனின் மனத்தில் நிம்மதி ஏற்படவில்லை. எண்ணங்களிலிருந்து விடுபட்டுச் சிந்தனைகளைத் தவிர்க்க முயன்றாலும் மறுபடியும் அவன் மனம் வலுவில் சிந்தனைகளிலேயே போய் ஆழ்ந்தது.

கொற்கையில் புகுந்து குழப்பம் செய்ததுபோல் இடையாற்று மங்கலத்தில் நடந்த கொள்ளைக்கும் எதிரிகள்தான் காரணமோ என்று நினைத்தது அவன் மனம். ‘இவ்வளவெல்லாம் இங்கே குழப்பங்கள், சூழ்ச்சிகள் நடக்கின்றன. குமார பாண்டியர் எங்கிருந்தால்தான் என்ன? ஏதாவது ஒரு குறிப்புக் கூடவா அவர் காதுக்கு எட்டாமல் இருக்கும் தளபதி வல்லாளதேவனின் படைத்திறனும், இடையாற்றுமங்கலம் நம்பியின் இணையற்ற சாமர்த்தியமும் எங்கே போய் விட்டன?’

மகாமண்டலேசுவரரை அவன் என்றும் புரிந்துகொள்ள முடிந்ததில்லை. புரிந்துகொள்கிற அளவுக்கு அவனை இவர் நெருங்கவிட்டதும் இல்லை. சாமர்த்தியமே உருவான ஒரு பெரும் புதிர் என்று அவரைப் பற்றி அவன் முடிவு செய்து வைத்திருந்தான். தளபதி வல்லாளதேவன் கடமையில் கருத்துள்ளவன். சிறிது உணர்ச்சித் துடிப்பு மிகுந்தவன் என்பதும் அவன் அறிந்த விவரமே. மகாராணியாரையும், குமார பாண்டியரையும் பொறுத்தமட்டில் அவனுக்கு ஒரே விதமான எண்ணம்தான். “வணக்கத்துக்குரியவர்கள், அன்பும், அனுதாபமும் செலுத்தத்தக்கவர்கள்”. தன் உயிரின் இறுதித் துடிப்புவரை அந்தப் பேரரசியின் வாழ்வுக்குக் கட்டுப்பட்டு உதவ வேண்டுமென்ற அவன் எண்ணத்தை ஊழி பெயரினும் மாற்ற இயலாது. இல்லையானால் அவனைத் தங்களுடைய வனாக்கிக் கொள்ள வடதிசை அரசர் பலமுறைகள் முயன்றும் அவன் மறுத்திருக்க மாட்டான்.

மனத்தின் தெளிவற்ற நிலையைச் சரி செய்து கொள்வதற்கு எங்கேயாவது திறந்த வெளியில் காற்றுப்படும்படி உலாவவேண்டும் போலிருந்தது.

“மானகவசனோ, வேறு ஆட்களோ வந்தால் என்னிடம் அனுப்புங்கள்” என்று அங்கிருந்தவர்களிடம் சொல்லிவிட்டு மேல்மாடத்துத் திறந்தவெளி முற்றத்துக்குச் சென்றான் அவன்.

மேல்மாடத்தில் அந்த மாலைக்காற்று சிலுசிலுவென்று வீசியது. காலத்தால் அழிக்க முடியாத பேருண்மை நான் என்று கூறுவதுபோல் வடமேற்கே பொதியமலை பரந்து கிடந்தது. ஆகாயப் பெருங்குடையை அணைய முயலும் அந்த எழில் நீலப் பேரெழுச்சியை—காலத்தை வென்றுகொண்டு நிற்கும் கல்லின் எழுச்சியைத் திறந்த வெளிடையே பார்க்கும்போது நம்பிக்கை பிறப்பதுபோல் இருந்தது பெரும்பெயர்ச் சாத்தனுக்கு ‘தன் பக்கத்தில் வடக்கு எல்லையில் போர் நெருங்கி வந்துகொண்டிருக்கிறதே’ என்பதைப்பற்றி இந்த மலைக்குச் சிறிதும் வாட்டமிருப்பதாகத் தெரியவில்லையே என்று வேடிக்கையாக நினைத்தான். மேல் மாடத்துப் படிகளில் யாரோ வேகமாக ஏறிவரும் காலடியோசை கேட்டது; அவன் திரும்பிப் பார்த்தான். ஒரு சாதாரண வீரன் வந்து வணங்கி நின்றான்.

“என்ன ?”

“துரதன் மானகவசன் திரும்பி வந்திருக்கிறான்… ஆனால்…” வந்த வீரன் பதில் சொல்வதற்குத் தயங்குவதுபோல் தெரிந்தது.

Previous articleRead Pandima Devi Part 2 Ch2 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Pandima Devi Part 2 Ch4 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here