Home Na Parthasarathy Read Pandima Devi Part 2 Ch32 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

Read Pandima Devi Part 2 Ch32 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

90
0
Read Pandima Devi Part 2 Ch32 Pandima Devi Na.Parthasarathy, Read Pandima Devi Online Free, Pandima Devi PDF, Download Pandima Devi novel, Pandima Devi book
Read Pandima Devi Part 2 Ch32|Na.Parthasarathy|TamilNovel.in

Read Pandima Devi Part 2 Ch32 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

பாண்டிமாதேவி – நா. பார்த்தசாரதி

இரண்டாம் பாகம், அத்தியாயம் 32 : பழைய நினைவுகள்

Read Pandima Devi Part 2 Ch32 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

“சக்கசேனாபதி! மனத்தையும் கண்களையும் திறந்து வைத்துக்கொண்டு எழிலுணர்ச்சியோடு பார்க்கிறவனுக்கு உலகம் எவ்வளவு அழகாயிருக்கிறது பார்த்தீர்களா?”

கையில் வலம்புரிச்சங்கும், உடலில் கடற் காய்ச்சலுமாகக் கப்பல் மேல் தளத்தில் நின்று கொண்டிருந்த இராசசிம்மன் தன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த சக்கசேனாபதியை நோக்கி இப்படிக் கோட்டான்;

“பார்த்தேன் இளவரசே! நன்றாகப் பார்த்தேன். இந்த அழகின் துண்டுதலால் நீங்கள் சற்று முன் கவிதையே பாடி விட்டீர்களே! உங்கள் கவிதையின் இனிய ஒலியிலிருந்து என் செவிகள் இன்னும் விடுபடவில்லை. அதைக் கேட்ட வியப்பிலேயே இன்னும் ஆழ்ந்துபோய் நின்றுகொண்டிருக்கிறேன் நான்.”

“என்னவோ மனத்தில் தோன்றியது; நாவில் வார்த்தைகள் கூடித் திரண்டு வந்து எங்களை முறைப்படுத்தி வெளியிடு என்று துடித்தன. பாடினேன்.”

“இப்படி ஏதாவது தத்துவம் பேசிக் குமார பாண்டியர் என்னை இவ்வளவு எளிதாக ஏமாற்றிவிடமுடியாது. உங்களைக் கவிஞராக மாற்றிய கவினுறும் அழகின் வனப்பு நீங்கள் கப்பலில் நின்று பார்க்கும் இந்தக் கடலிலும் வானத்திலும் மட்டும் இல்லை.”

“வேறு எங்கு இருக்கிறதாம்?”

“எனக்குத் தெரியும், நேற்று உறக்கத்தில் எத்தனை முறை அந்தப் பெயரைப் பிதற்றினர்கள்! உங்களைக் கவியாக மாற்றிப் பாடவைக்கும் அழகு செம்பவழத் தீவில் இருக்கிறது. அந்த அழகுக்குப் பெயர் மதிவதனி,”

சக்கசேனாபதி மேற்கண்டவாறு உண்மையைக் கூறியதும், இந்த வயதான மனிதர் நம் மனத்தில் உள்ளதைச் சொல்லி விட்டாரே!’ என்று வெட்கமடைந்தான் இராசசிம்மன்.

‘ஏன் வெட்கப்படுகிறீர்கள் இளவரசே ? நான் உள்ளதைத்தானே கூறினேன்? சில மலைகள், சில நதிகளுக்குத் தொடர்ந்து தண்ணிரை அளித்துப் பல நிலங்களைக் காப்பது போல் இயற்கை சிலபேருக்கு அளவிடமுடியாத அழகைக் கொடுத்துப் பல கவிகளை உண்டாக்கிவிடுகிறது. பெண்களின் வனப்பும், மலைமகளின் வளமும் மலர்களின் மணமும், கடலின் பரப்பும் இல்லாமலிருந்தால் இந்த உலகத்தில் கவிதையே உண்டாகியிருக்காது. செம்பவழத் தீவில் சந்தித்த அந்தப் பெண்ணின் அழகு உங்களைக் கவியாக்கியிருக்கிறது.” “உங்கள் புகழ்ச்சியை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன், நீங்கள் சொல்வதுபோல நான் கவியில்லை.”

“நீங்கள் இல்லையென்று சொன்னால் எனக்கென்ன? என்னுடைய கருத்தின்படி அழகை உணரும் நெஞ்சின் மலர்ச்சி இருந்தாலே அவன் முக்கால் கவியாகிவிடுகிறான். நீங்களோ அந்த மலர்ச்சியை வார்த்தைகளாக்கி வெளிப்படுத்திவிட்டீர்கள்” என்று சக்கசேனாபதி தம்முடைய அபிப்பிராயத்தை வற்புறுத்தினார்.

அவருக்குப் பதில் சொல்லாமல் கையில் வைத்திருந்த வலம்புரிச் சங்கை மேலும் கீழுமாகத் திருப்பிப் புரட்டி வலது கை விரல்களால் மெல்ல வருடிக்கொண்டிருந்தான் இராசசிம்மன். ஒன்றிரண்டு முறை விளையாட்டுப் பிள்ளை ஆர்வத்தோடு செய்வதுபோல் அந்தச் சங்கை ஊதி ஒலி முழக்கினான்.

“போதும், நன்றாக இருட்டிவிட்டது. இவ்வளவு நேரம் காய்ச்சல் உடம்போடு கடற்காற்றுப் படும்படி இங்கு நின்றாகி விட்டது. உங்கள் பிடிவாதம் பொறுக்க முடியாமல்தான் இங்கு அழைத்துக் கொண்டு வந்தேன். இனிமேலும் இப்படி நிற்பது

ஆகாது. வாருங்கள், கீழே போய்விடலாம்” என்று இங்கிதமாகச் சொல்லி, அவனைக் கீழ்த்தளத்துக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டார் அவர். –

சிறு சிறு தீபங்கள் எரிந்துகொண்டிருந்தாலும் கப்பலின் கீழ்தளத்தில் இருளே மிகுதியாக இருந்தது. சக்கசேனாபதியின் வற்புறுத்தலுக்காகச் சிறிது உணவு உட்கொண்டோம் என்று பேர் செய்துவிட்டுப் படுத்துக்கொண்டான் இராசசிம்மன்.

பசித்தவன் பழங்கணக்குப் பார்ப்பதுபோல் முன் நினைவுகள் அவனை மொய்த்துக் கொண்டன. இருந்தாற்போலிருந்து, நான் யார்? எங்கே பிறந்தேன்? எதற்காகப் பிறந்தேன்? ஏன் இப்படி நிலையில்லாமல் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறேன் : இப்போது எங்கே போய்க் கொண்டிருக்கிறேன்? ஏன் போய்க் கொண்டிருக்கிறேன் ?” என்பதுபோல் தன் நிலை மறந்த, தன் நினைப்பற்ற வினாக்கள் அவன் மனத்தில் எழுந்தன. சோர்ந்த மனநிலையும் தன் மேல் தனக்கே வெறுப்பும் உண்டாகிற சில சமயங்களில் சில மனிதர்களுக்கு இத்தகைய கேள்விகள் நினைவுக் குமிழிகளாய் மனத்தில் முகிழ்த்து மனத்திலேயே அழியும். வளர்ச்சியும், தளர்ச்சியும், இன்பமும், துன்பமும் நிறைந்த தன் வாழ்க்கையின் நாட்களை விலகி நின்று எண்ணிப்பார்க்கும்போது சோகத்தின் வேதனை கலந்த ஒருவகை மகிழ்ச்சி அவனுக்கு ஏற்பட்டது. அந்த இருளில் காய்ச்சலோடு படுக்கையில்கிடந்தவாறே மனத்தின் நினைவுகளைப் பின்னோக்கிச் செலுத்தினான் அவன். வெற்றிப் பெருமிதத்தோடு வாழ்ந்த பழைய நாட்களை இப்போதையத் தோல்வி நிலையில் எண்ணிப் பார்க்கும்போது வேதனையாகத்தான் இருந்தது.

துரில் தொடங்கிச் சாப்பிட்டுக்கொண்டு போகிற கரும்பு முடிவில் உப்புக்கரிக்கிற மாதிரிச் செல்வத்தோடும், செல்வாக்கோடும் அரச குடும்பத்து வாழ்க்கை வாழ்ந்துவிட்டு இன்றைய நிலையில் அந்தப் பழைய சிரிப்பை நினைக்கிறபோது வெறுப்பளிக்கிறது. பழகப்பழக, அநுபவிக்க அநுபவிக்க வெறுப்பைக் கொடுக்கிறது என்ற

காரணத்தால்தானோ என்னவோ தமிழ் மொழியில் செல்வத்துக்கு ‘வெறுக்கை’ என்று ஒரு பெயர் ஏற்பட்டுவிட்டது. அநுபவிக்கிறவன் ஞானமுள்ளவனாக இருந்தால் செல்வத்தின் சுகங்களை வெறுத்துவிட்டு அதைவிடப் பெரியதைத் தேடிக்கொண்டு ஒடும் நிலை ஒருநாள் வந்துதான் தீரும்.

இராசசிம்மன் நினைத்துப் பார்த்தான். பேரரசராகிய சடையவர்ம பராந்தக பாண்டியருக்கும், பேரரசியாகிய வானவன்மாதேவிக்கும் புதல்வனாகப் பிறந்து மதுரைமா நகரத்து அரண்மனையில் தவழ்ந்த நாட்களை நினைத்தான். தந்தையின் தோள் வலிமையும், வாள் வலிமையும், ஆள் வலிண்மயும் அன்றையப் பாண்டிய நாட்டைப் பெரும் பரப்புள்ளதாகச் செய்திருந்தன. அப்போது மதுரை கோநகரமாக இருந்தது, அவன் சிறுவனாக இருந்தபோது, sojsséF குலவீர வழக்கத்தின்படி சங்கு, சக்கரம், வில், வாள், தண்டு என்னும் ஐந்து ஆயுதங்களையும்போல் சிறிதாகப் பொன்னிற் செய்து நாணில் தொடுத்து அவனுடைய கழுத்தில் தம் கையாலேயே கட்டினார் அவனுடைய தந்தை. வீரத்துக்குச் சின்னமாகச் சிறுவர்களுக்கு அரச குலத்தில் கட்டப்படும் ‘ஐம்படைத்தாலி அது. ஒருநாள் தந்தை பராந்தகரும், தாய் வானவன்மாதேவியும் அருகில் இருக்கும்போது அவன் எதற்காகவோ முரண்டு பிடித்துக்கொண்டே கழுத்தில் கிடந்த ஐம்படைத்தாலியை அறுத்துச் சிதறி விட்டான். அப்போது பராந்தகர் தம் மனைவியை நோக்கி, “மாதேவி, இந்தப் பயல் எதிர்காலத்தில் நாட்டையும், ஆட்சியையும்கூட இப்படித்தான் அறுத்துச் சிதறிவிட்டுத் திரிந்து கொண்டிருக்கப்போகிறான். எனக்கென்னவோ இவன் என்னைப் போல் இவ்வளவு இராக ஆளமாட்டான் என்றுதான் தோன்றுகிறது!’ என்றார். மாதேவிக்கு அதைக் கேட்டதும் தாங்கமுடியாமல் கோபம் வந்துவிட்டது. –

“நீங்களாகவே வேண்டுமென்று இவனைக் குறைவாக மதிப்பிடுகிறீர்கள். உங்களைவிடப் பெரிய வீரனாக எட்டுத்

திசையும் வென்று ஆளப்போகிறான் இவன்’ என்று கணவனுக்கு மறுமொழி கிடைத்தது வானவன் மாதேவியிடமிருந்து.

இன்னொரு சம்பவம்: இராசசிம்மனுக்கு ஆறாண்டுகள் நிறைந்து முடிந்து ஏழாவது ஆண்டின் நாண்மங்கலம் (பிறந்த நாள்) வந்தது. பிறந்த நாளைக் கொண்டாடும் நாண்மங்கல விழாவன்று காலையில் அவனைப் புனித நீராட்டிப் புத்தாடை அணிவித்துப் பொன் முடி சூட்டி வழிவழி வந்த பொற்சிம்மாசனத்தில் உட்கார்த்தி, ஒரு கையிலே திருக்குறள் ஏட்டுச் சுவடியையும், மற்றொரு கையிலே வீரவாளையும் கொடுத்தார்கள். சிம்மாசனத்தின் இருபுறமும் பராந்தக பாண்டியரும், வானவன்மாதேவியும் நின்று நாண்மங்கலத் திருக்கோலத்தில் தங்கள் செல்வனை அழகு பார்த்துப் பூரித்துக் கொண்டிருந்தனர். அப்போது இராசசிம்மன் கை தவறி வாளைக் கீழே போட்டுவிட்டான். இசைவு பிசகாகக் கீழே விழுந்த அந்த வாளின் நுனியின் ஒரு சிறு பகுதி உடைந்துவிட்டது. – – –

“அபசகுனம் போல் நல்லநாளும் அதுவுமாக இப்படிச் சிம்மாசனத்தில் உட்கார்ந்ததும் வாளைக் கீழே போட்டு உடைத்து விட்டானே?’ என்று கவலையோடு கூறினார் பராந்தக பாண்டியர். “போதும்! உங்களுக்கு எது நடந்தாலும் அபசகுனமாகத்தான் படுகிறது. சிறு குழந்தை கைதவறிப் போட்டு விட்டான்’ என்று மகாராணி கூறிய சமாதானத்தினால்தான் பராந்தகர் திருப்தியடைந்தார்.

தந்தை பராந்தக பாண்டியரின் விரக்களை பொருந்திய அந்த முகத்தைக் கப்பல் தளத்தின் இருட்டில் படுத்துக் கொண்டு நினைத்துப் பார்க்க முயன்றான் இராசசிம்மன். தந்தை உயிரோடிருந்த காலத்தில் அலங்காரத்தோடு கூடிய தன் அன்னையின் வாழுங்கோலத்தை நினைத்துப் பார்த்தான். அன்று தங்களுக்குச் சொந்தமாக இருந்த மதுரைப் பெருநகரத்தைப் பகுதி பகுதியாக நினைத்துப் பார்த்தான். மதுரை நகரத்து அரண்மனையையும் இளமையில் தான் அங்கே கழித்த நாட்களையும் நினைத்தான். கடைசியாகத்

தந்தையின் மரணத்துக்குப்பின் நடந்த நிகழ்ச்சிகள் அவன் நினைவைப் பற்றிக்கொண்டு வரிசையாகத் தொடர்ந்து உள்ளத்தில் ஓடின.

“தந்தை காலமாகும்போது கோனாட்டின் தென் பகுதியிலிருந்து குமரிவரை பரந்து விரிந்த பாண்டிய நாட்டை எனக்கு வைத்துவிட்டுப் போனார். நான் என்ன செய்தேன்? என் கண் காணக் கரவந்தபுரத்திலிருந்து குமரி வரை குறுகிவிட்டதே அந்த நாடு! தந்தை காலஞ்சென்ற சிறிது காலத்துக்குப்பின் நானும் வீராவேசமும், உரிமை வேட்கையும் கொண்டு சில போர்களில் வெற்றி பெறத்தான் செய்தேன். உவப்பிலிமங்கலத்தில் நடந்த போரில் இருவர் மூவராக சேர்ந்துகொண்டு வந்த வடதிசையரசர்களைக்கூட வென்றேன். அப்போது பாண்டி மண்டலப் பெரும்படை மிகப் பெரியதாகவும் வலுவுள்ளதாகவும் இருந்தது. தஞ்சாவூர்ச் சோழன் வைப்பூரில் நடந்த போரிலும், நாவற் பகுதியில் நடந்த போரிலும், இரண்டு முறை என் தலைமையில் பாண்டி மண்டலப் படைக்குத் தோற்றோடியிருக்கிறான். இப்பொழுது கொழுத்துப் போய்த் திரியும் இந்த கொடும்பாளுர்க்காரனும் ஒரு முறை என்னிடம் தோற்றிருக்கிறான். –

அன்று என் வெற்றிகளைப் புகழ்ந்து மெய்கீர்த்திகளையும், பாமாலைகளையும் புலவர்கள் பாடினார்கள். நீளநீளமான சிறப்புப் பெயர்களை எனக்குக் க்ொடுத்தார்கள். சடையன் மாறன், இராசசிகாமணி, சீகாந்தன், மந்தர கெளரவ மேரு, விகட பாலன் என்றெல்லாம் புகழ்ந்தார்கள். தந்தையின், காலத்திற் செய்தது போலவே, நானும் அன்னையையும் கலந்தாலோசித்துக் கொண்டு எண்ணற்ற தேவதானமும் (கோயில்களுக்கு மானியம்) பள்ளிச்சந்தமும் (சமணப் பள்ளிகளுக்கு மானியம்) பிரமதேயமும் (அந்தணர்களுக்கு மானியம்) அளித்தேன். மதுரை வட்டாரத்தில் இருக்கும் நற்செய்கை புத்துார் என்னும் சின்னமனூர் முழுவதையுமே ஒழுக்கத்திலும், கல்வியிலும் சிறந்த ஓர் அந்தணருக்குப் பிரம்மதேயமாகக் கொடுத்தேன். அதனால் என் சிறப்புப் பெயரோடு மந்தர கெளரவ மங்கலம் என்றே அவ்வூர் பெயர்

பெற்றுவிட்டது. அந்த நாளில் தான் முதன்முதலாக இலங்கைக் தாதிய மன்னரின் நட்பு எனக்குக் கிடைத்தது. பின்பு என் போதாத வேளை என் வரலாற்றையே மாற்றிவிட்டது. வடக்கே சோழன் வலுவான கூட்டரசர்களைச் சேர்த்துக் கொண்டு நானும் அன்னையும் வடபாண்டி நாட்டை இழக்கச் செய்தான். தென்பாண்டி நாடும் அதன் திறமையான மகாமண்டலேசுவரரும் இல்லையானால் நான் தோற்று ஒடும் போதெல்லாம் அன்னையையும் அழைத்துப் போக வேண்டிய தாயிருந்திருக்கும். மகாமண்டலேசுவரரும், கடமையிற் கருத்துள்ள தளபதி வல்லாளதேவனும் அவ்வப்போது அன்னைக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள்! வடதிசைப் பகை வலுப்பதற்கு முன் நான் பெற்ற வெற்றிகளையெல்லாம் மறந்துவிட்டு இரண்டு மூன்று முறை தோற்று இலங்கைக்கு ஓடியதுமே போர்த்திறமும், அநுபவமும் இல்லாத இளைஞன் என்று என்னைக் கேவலமாகப் பேசத் தொடங்கி விட்டார்களே! பழைய புகழைவிடப் புதிய பழியே வேகமாக நிலைத்துவிடுகிறது. எஞ்சியுள்ள தென்பாண்டி நாட்டுக்காவது என்னை அரசனாக்கி முடிசூட்டி மணவினை முடிக்க வேண்டுமென்று அன்னைக்கும் மகா மண்டலேசுவரருக்கும் தாங்காத ஆசை. மகாமண்டலேசுவரர் யாருக்குமே தெரியாமல் என்னை இரகசியமாக இலங்கையிலிருந்து வரவழைத்து மாறுவேடத்தில் இடையாற்று மங்கலத்தில் வைத்துக் கொண்டார். நான் அவரிடமும் தங்கவில்லை. நான் தங்காமற் போனது மட்டுமில்லாமல் என் முன்னோர் அரசுரிமைச் சின்னங்களையும் தங்கவிடாமல், அவரிடமிருந்து எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டேன். ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்காமல் எதையெதையோ திடீர் திடீரென்று செய்து பெயரைக் கெடுத்துக்கொள்ளப்போகிறேன் . நான், அருமை அன்னையாரையும் மகாமண்டலேசுவரரையும் தென்பாண்டி நாட்டு மக்களையும் மட்டுமா நான் ஏங்க வைத்து விட்டுப் போகிறேன் ? இடையாற்றுமங்கலத்திலும் செம்பவழத் தீவிலுமாக இரண்டு பெண் உள்ளங்களை வேறு ஏங்கவைத்து விட்டுப் போகிறேன். அதே ஏக்கங்களின் மொத்தமான

எதிரொலி என் உள்ளத்திலும் உருவெடுத்துப் பேரொலி செய்கிறதே! இடையாற்றுமங்கலத்துப் பெண்ணாவது தன்னளவில் அதிகமாக ஏங்கியிருப்பாள். செம்பவழத் தீவின் செல்வியோ என்னையே ஏங்கச் செய்துகொண்டிருக்கிறாள். என் உயிரையே காப்பாற்றி எனக்கு வாழ்வு கொடுத்த பெண் அல்லவா மதிவதனி, சந்திரனுடைய ஒளியில் உலகத்துக்குக் குளிர்ச்சியளித்து மயக்குகின்ற மென்மையைப்போல் மதிவதனியின் சிரிப்பில் மாபெரும் காவியங்களின் அலங்கார நளினங்களை ஒளித்துக்கொண்டிருக்கும். ஏதோ ஒரு கவர்ச்சி இருந்து என்னை மயக்கிக்கொண்டிருக்கிறது. அவளுடைய மோகனச் சிரிப்பு வந்து முடியுமிடத்தில் இதழோரத்தில் அழகாகச் சுழி விழுகிறதே! அந்தச் சுழியில் என் உள்ளம் சுழலுகிறது. நான் செம்பவழத் தீவில் அந்தப் பெண்ணைப் பார்த்தபின் கவியாக மாறிவிட்டேனென்று சக்கசேனாபதி கூறியது எவ்வளவு பொருத்தமான வார்த்தை! அவர் அப்படிச் சொன்னபோது வீம்புக்காக அவரை மறுத்தேனே நான். உண்மைதான்! சில பெண்களின் கண்களும், சிரிப்பும், சில ஆண்களைக் கவியாக்கிவிடுகின்றன. தம்மை மோந்து பார்க்கும்போதே மேலான எண்ணங்களை உண்டாக்கும் ஆற்றல் சில பூக்களுக்கு உண்டு. சில பெண்களின் கண்ணியமான அழகுக்கும் இந்த ஆற்றல் உண்டு போலும், எண்ண அலைகளின் கொந்தளிப்பில் இராசசிம்மன் நெட்டுயிர்த்தான்.

அழகையும், கவிதையையும், அரசாட்சியையும், போரில் வெற்றி தோல்விகளையும் சேர்ந்து நினைத்தபோது அவனுக்கு ஒன்று தோன்றியது: “வீரனாகவும் தீரனாகவும் வேந்தனாகவும் வாழ்ந்து செல்வம் பெறுவதைவிட விவேகியாகவும், கவிஞனாகவும் வாழ்ந்து ஏழையாகச் செத்துப்போகலாம். பார்க்கப்போனால், எது செல்வம் ? எது ஏழைமை? நுண்ணுர்வும் அறிவும்தான் செல்வம், அவை இல்லாமல் இருப்பதுதான் ஏழைமை!

இப்படி எதை எதையோ எண்ணிக் குமுறிக்கொண்டு அந்த இரவின் பெரும்பகுதியைத் தூங்காமல் கழித்தான்

இராசசிம்மன். மறுநாள் பொழுது விடிந்தது. கடற் காய்ச்சல் தணிவதற்கு மாறாக அதிகமாகியிருந்தது. சக்கசேனாபதி இரவில் தூங்காமல் இருந்ததற்காக அவனை மிகவும் கண்டித்தார்.

“அநேகமாக நாம் நாளைக்கே இலங்கைக் கரையை அடைந்துவிடலாம். உங்கள் உடம்பு நாளுக்குநாள் இப்படிப் போய்க்கொண்டிருக்கிறதே. கூடியவரையில் பயணத்தை நீட்டாமல் சுருக்க வேண்டுமென்று நினைக்கிறேன் நான். நாம் மாதோட்டத்தில் போய் இறங்க வேண்டாம். அது மிகவும் சுற்றுவழி. அனுராதபுரத்துக்கு மேற்கே புத்தளம் கடல் துறையிலேயே இறங்கிவிடுவோம். ஏற்கெனவே நாம் விழிஞத்தில் புறப்பட்டதால் மிகவும் சுற்றிக்கொண்டு பயணம் செய்கிறோம். கோடிக்கரையிலிருந்தோ, நாகைப் பட்டினத்திலிருந்தோ புறப்பட்டிருந்தால் தொண்டை மானாற்றுக் கழிமுகத்தின் வழியே விரைவில் ஈழ மண்டலத்தின் வடகரையை அடைந்து விடலாம். சேதுக்கரையிலிருந்து புறப்பட்டால் மாதோட்டம் மிகவும் பக்கம். நான் இதற்கு முன்பெல்லாம் உங்களை இலங்கைக்கு அழைத்து வந்தபோது கடலில் வடக்கே நீண்ட வழி சுற்றாக இருந்தாலும் மாதோட்டம் வழியாகத்தான் அழைத்துச் சென்றிருக்கிறேன். இம்முறை அப்படி வேண்டாம். உங்கள் உடம்புக்கு நீண்ட பயணம் ஏற்காது. புத்தளத்தில் இறங்கி அனுராதபுரம் போய்விடுவோம். அரசர்கட்டப் பொலன்னறு வையிலிருந்து இப்போது அனுராதபுரத்துக்கு வந்திருப்பார்” என்று சக்கசேனாபதி கூறியபோது இராசசிம்மனுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. –

“சக்கசேனாபதி சோழமண்டலக் கடற்கரையாகிய நாகைப்பட்டினத்திலிருந்தும் கோடிக்கரையிலிருந்தும் அவ்வளவு விரைவாக இலங்கையை அடைந்து விடலாமென்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் சோழனின் புலிச் சின்னமும் கொடும்பாளுர்ப் பனைமரச் சின்னமுமுள்ள கொடியோடு அன்றிரவு செம்பவழத் தீவில் நான் ஒரு கப்பலைப் பார்த்தேன். அவர்கள் கூட ஈழநாட்டுக்குப் பா. தே.34

போகிறவர்கள் போல்தான் தெரிந்தது. ஆனால் தொண்டைமானாற்றுக் கழிமுகத்தையும் மா தோட்டத்தையும், விட்டுவிட்டு ஏன் அவர்கள் தெற்கே வந்தார்கள் என்பது எனக்கு விளங்கவில்லை!” – அந்த, ஆட்கள் தன் மேல் வேல் எறிந்து துரத்திக் கொல்ல முயன்றதையும் , அப்போது மதிவதனி தன்னைக் காப்பாற்றியதையும் மட்டும் அவரிடம் இராசசிம்மன் கூறவில்லை.

“அது சோழ நாட்டுக் கப்பலானால் அப்படிச் சுற்றி வளைத்து வந்தது ஆச்சரியந்தான். ஒருவேளை அவர்களுக்கு விழிஞத்தில் ஏதாவது காரியம் இருந்திருக்கும்; அதை முடித்துக்கொண்டு இலங்கை வருவதற்குப் புறப்பட்டிருப் பார்கள். அப்படி அந்தக் கப்பல் இலங்கை வருவதாயிருந்தால் நம் கப்பலுக்குப் பின்னால்தானே வரவேண்டும்? அப்படியும் காணவில்லையே!” என்று சந்தேகத்தோடு பதில் சொன்னார் சக்கசேனாபதி. … •

“நாகைப்பட்டினத்துக்கே திரும்பி விட்டார்களோ, என்னவோ? அப்படியானாலும் நம் கப்பல் செல்லும் திசையிலேயே வந்துதானே வடமேற்கு முகமாகத் திரும்ப வேண்டும்?” என்று மீண்டும் கேட்டான் இராசசிம்மன்.

‘யாரோ! என்ன காரியத்துக்காக வந்தார்களோ ? ஒருவேளை கீழ்க்கரையை ஒட்டிப் பாம்பனாறு வழியாகவும் போயிருக்கலாம். நீங்கள் சொல்வதையெல்லாம் சிந்தித்தால் எனக்குப் பல வகைகளில் சந்தேகங்கள் ஏற்படுகின்றன இளவரசே! இப்படி ஒரு கப்பலைப் பார்தேன் என்று நீங்கள் அன்றே செம்பவழத் தீவில் என்னிடம் கூறியிருக்கலாமே! தாங்கள் கூறாமல் மறைத்துவிட்டது ஏனோ?” சக்கசேனாபதி சற்றே சினந்துகொள்வது போன்ற குரலுடன் இவ்வாறு கேட்டபோது இராசசிம்மன் விழித்தான்.

“சரி! அவர்கள் பேச்சு நமக்கு எதற்கு? அந்தக் கப்பல் எக்கேடுகெட்டுவேண்டுமானால் போகட்டும். நாம் நம்முடைய காரியத்தைக் கவனிப்போம். நீங்கள் கூறுகிறபடி புத்தளத்திலேயே இறங்கிவிடலாம்” என்று பேச்சை மாற்றினான் இராசசிம்மன்.

Previous articleRead Pandima Devi Part 2 Ch31 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in
Next articleRead Pandima Devi Part 2 Ch33 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here