Home Na Parthasarathy Read Pandima Devi Part 2 Ch35 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

Read Pandima Devi Part 2 Ch35 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

89
0
Read Pandima Devi Part 2 Ch35 Pandima Devi Na.Parthasarathy, Read Pandima Devi Online Free, Pandima Devi PDF, Download Pandima Devi novel, Pandima Devi book
Read Pandima Devi Part 2 Ch35|Na.Parthasarathy|TamilNovel.in

Read Pandima Devi Part 2 Ch35 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

பாண்டிமாதேவி – நா. பார்த்தசாரதி

இரண்டாம் பாகம், அத்தியாயம் 35 : போர் முரசு முழங்கியது

Read Pandima Devi Part 2 Ch35 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

கொற்றகை, கரவந்தபுரம் பகுதிகளில் வடதிசை அரசர்களால் இரகசியமாக ஏவப்பட்ட ஆட்கள் என்னென்ன செயல்களைச் செய்தார்களோ, இதே வகையைச் சேர்ந்த செயல்களை மகாமண்டலேசுவரரால் தேர்ந்தெடுத்து அனுப்பப் பெற்ற ஆட்கள் வடக்கே செய்தனர். கோனாட்டு ஊர்ப்புறங்களிலும், கீழைப்பழுவூரைச் சேர்ந்த இடங்களிலும், சோழ மண்டலத்து எல்லைப் புறங்களிலும், பலப்பல மாறுவேடங்களில் சுற்றி வந்தனர் தென்பாண்டி நாட்டு ஆட்கள். தங்களைச் சேர்ந்த வீரன் ஒருவன் கொடும்பாளுர் அரண்மனையில் உளவறியும்போது பிடிபட்டு உயிர் இழக்க நேர்ந்த செய்தியைக் கேள்விப்பட்ட பின்பும் அவர்கள் தளர்ச்சியோ, பயமோ அடையவில்லை. அடிக்கடி மகாமண்டலேசுவரருக்குச் செய்தியனுப்பிக் கொண்டிருந்தனர் அவர்கள்.

இந்த நிலையில் கொடும்பாளுரில் ஒன்றுகூடித் தங்கியிருந்த வடதிசையரசர்கள் நன்றாக விழிப்படைந்து விட்டார்கள். தென்பாண்டி நாட்டின்மேற் படையெடுப்பது பற்றி உண்மையிலேயே அவர்களுக்கு இப்போது பயமும், மலைப்பும் ஏற்பட்டிருந்தன. இலங்கைப் படை உதவியும், சேரர் படை உதவியும் தென்பாண்டி நாட்டுக்குக் கிடைத்தால் தங்கள் படையின் கூட்டணி என்ன ஆவதென்ற அச்சம் அவர்களுக்கு மெல்ல மெல்ல உண்டாகியிருந்தது. தேவராட்டியின் கொற்றவைக் கூத்தைக் கண்டுகளித்த

மறுநாள் காலை தென்திசை ஒற்றனைக் கழுவேற்றிக் கொன்றபின் அவர்கள் பலத்த சிந்தனையில் ஆழ்ந்தனர்.

மூன்றாம் முறையாகப் போர்த் திட்டங்களைப் பற்றிக் கலந்து பேச ஒன்று கூடியபோது முதல் இரண்டு கூட்டங்களிலும் இருந்த சுறுசுறுப்பும், ஆவலும் குன்றிச் சோர்ந்து தென்பட்டனர் அவர்கள். அந்த விதமான சோர்வையும் அதனால் உண்டாகும் தாழ்வு மனப்பான்மை யையும் வளரவிடக் கூடாதென்று கவலைப்பட்டவன் சோழன் ஒருவன்தான், தென்திசைப் படையெடுப்புக்கு வசதியாக இருக்குமென்று முன்பு உறையூரில் நடந்த முதற் கூட்டத்தில் தான் கூறிய வழிகள் அறவே தோற்று விட்டதனால் கொடும்பாளுரான் கூடத் தளர்ந்து ஒடுங்கியிருந்தான். அந்த நிலையில் சோழன் அவர்களுக்கு ஊக்கமூட்டிப் பேசத் தொடங்கினான்:- – –

“நண்பர்களே! என் பாட்டனார் விஜயாலய சோழர் தொண்ணுாற்றாறு விழுப்புண்களைத் தம் திருமேனியில் தாங்கிப் புகழ் பெற்றார். எந்தையார் ஆதித்த சோழர் பொன்னிவள நாட்டில் பாண்டியர்களையும், பல்லவர் களையும் களையென நீக்கித் தனிப்பெருஞ் சோழமண்டலங் கண்டு மகிழ்ந்தார். என்னுடைய ஆட்சிக் காலத்துக்குள் ‘மதுரை கொண்ட கோப்பரகேசரி’ என்ற சிறப்புப் பெயரை அடைய விரும்பினேன்; ஓரளவு அடைந்தும் விட்டேன். மதுரை நகரத்தை வென்றது மட்டும் போதாது; பாண்டியநாடு முழுவதும் வென்றால்தான் எனக்கும் பெருமை என்னைச் சூழ்ந்துள்ள உங்களுக்கும் பெருமை. பின்னால் ஒரு சமயம் நமது வலிமையும், சூழ்நிலையும் இடங்கொடுக்குமானால் ஈழநாடு வரை படையெடுத்துச் செல்லவேண்டும் என்று கூட எனக்கு ஆவல் இருக்கிறது. சில காரியங்களை நாம் எதிர்பார்த்தபடி நடத்தி வெற்றி பெற முடியவில்லை என்பதற்காக இப்படிச்சோர்ந்து போய்விடக் கூடாது. நாம் ஐந்து பேரும் யாருக்கு எந்த வகையில் குறைந்தவர்கள்? கீழைப்பழுவூர்ச் சிற்றரசரிடமும், கொடும்பாளுர்க் குறுநில மன்னரிடமும் வலிமையும் திறமையும் வாய்ந்த படைகள் இருக்கின்றன. இவற்றுடன் எனது சோழ மண்டலப் பெரும்

படையும் சேர்ந்தால் நாம் பெருகிவிடுகிறோம். அரசூருடையானும் பரதுாருடையானும் படைத் தலைமை பூண்டு அருமையாகப் போர் புரிவதில் இணையற்றவர்கள். தென்பாண்டி நாட்டாருக்கு எவ்வளவுதான் படையுதவி கிடைக்கட்டுமே! நமக்கென்ன கவலை? நம்முடைய படைக் கூட்டுறவின் முன் அவர்கள் என்ன செய்ய முடியும்? மேலும் தென் பாண்டி நாட்டிலிருந்து நமக்குக் கிடைக்கும் செய்திகளால் அங்கும் நிலைமை அவ்வளவு தெளிவாக இருப்பதாகத் தெரியவில்லையே? இடையாற்றுமங்கலம் மகாமண்டலேசுவரர் மாளிகையிலிருந்த பாண்டிய மரபின் அரசுரிமைச் சின்னங்கள் கொள்ளை போய்விட்டதாக நேற்று கொற்றவைக் கூத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது கொடும்பாளுரார் வந்து ஒரு செய்தி சொன்னார். நேற்றைக்குப் பிடிபட்ட அந்த ஒற்றனிடமிருந்து எவ்வளவோ இரகசியங்களைத் தெரிந்து கொள்ளலாமென்று நினைத் திருந்தேன். அவனோ கழுமரத்தில் உயிரைப் பலி கொடுக்கிறவரை ஒரு வார்த்தைகூட நமக்குச் சொல்ல வில்லை. இராசசிம்மன் இலங்கையிலும், தாய்வழி மூலம் சேரர்களிடமும், படை உதவி பெறலாமென்று நம் காதில் செய்திகள் விழுகின்றன. அது எப்படியானாலும் நம்முடைய படையெடுப்பை நாம் உறுதி செய்துகொண்டுவிட வேண்டியதுதான். உங்கள் கருத்துக்களையும் மனம் விட்டுச் சொல்லிவிடுங்கள்.” r х

சோழன் முகத்தையே பார்த்தவாறு பேச்சை உற்றுக் கேட்டுக்கொண்டிருந்த நால்வரும் பேச்சு நின்றதும் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“நேற்று நடந்த சம்பவத்திலிருந்து நம்முடைய ஆட்சிக் குட்பட்ட பகுதிகளிலும் பாண்டி நாட்டு ஒற்றர்கள் போதுமான அளவு நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றே என்னால் அதுமானிக்க முடிகிறது” என்றான் கண்டன்

“அதில் என்ன சந்தேகம்? நமது வசதிக்காக நாம் நம்முடைய ஒற்றர்களைத் தெற்கே அனுப்பியிருக்க வில்லையா? அவர்களும் அதே வசதிக்காக ஒற்றர்களை இங்கே அனுப்பத்தானே செய்வார்கள்? என்று சோழன் பதில் கூறினான்.

“இளவரசன் இராசசிம்மன் படை உதவி கோரி இலங்கைக்குப் போயிருக்கிறானா? அல்லது வஞ்சி மாநகரத்துக்குப் போய் மலைநாட்டுச் சேரர் படையைக் கொண்டுவரச் சென்றிருக்கிறானா? இரண்டுமே இல்லாமல் தான் தங்கியிருப்பது வெளியே பரவிவிடாமல் தென்பாண்டி நாட்டிலேயே தங்கியிருக்கிறானா?” என்று அரசூருடையான் கேட்டான்.

‘எப்படியும் குமாரபாண்டியன் தெண்பாண்டி நாட்டு எல்லைக்குள் இருக்க முடியாது! ஏனென்றால் நாம் அனுப்பிய ஆட்கள் இலங்கை போகும் வழியில் செம்பவழத் தீவில் அவனைச் சந்தித்துக் கொல்ல முயன்றிருக்கிறார்கள். ஒன்று அவன் இலங்கைக்குப் போய்க்கொண்டிருக்க வேண்டும் அல்லது இலங்கையிலிருந்து வந்து கொண்டிருக்க வேண்டும். இரண்டுமில்லாவிட்டால் செம்பவழத் தீவிலேயே தங்கி மறைந்து வசிக்கவேண்டும்” என்று கொடும்பாளுரான் தன் அநுமானத்தைச் சொன்னான்.

‘நாம் இன்னும் அதுமானங்களிலேயே உழன்று கொண்டிருப்பதில் பயனில்லை. சிந்தித்துக்கொண்டே இருக்கும் வரையில் அநுமானங்கள் பயன்படும். செயலில் இறங்கும் போது தீர்மானங்களுக்கு வந்துவிட வேண்டும். இப்போது நாம் முடிவான திட்டத்துக்கு வந்து எண்ணங்களாலும் செயல்களாலும் ஒருமுகமாக ஒன்றுபடுகிற நேரம். எப்படியானாலும் படையெடுத்துச் சென்று பாண்டி நாட்டின் தென் கோடிவரை வென்றே தீருவது என்பது நம் நோக்கமாகிவிட்ட பின் தயங்குவதற்கு இடமில்லை. என் தீர்மானத்தை இப்போதே உங்களிடம் சொல்லிவிடுகிறேன். தஞ்சையிலும், பழையாறையிலும், உறையூரிலுமாகப்

பிரிந்திருக்கும் மூன்று பிரிவான சோழ நாட்டுப் படைகளும் இன்னும் சிறிது காலத்தில் கொடும்பாளுருக்கு வந்து சேர்ந்துவிட ஏற்பாடு செய்யப் போகிறேன். முடிந்தால் இந்தப் படைகளில் ஒரு பகுதியைக் கடல் வழியாக விழிஞத்துக்கு அனுப்பித் தெற்கே இருந்தும் திடீர்த் தாக்குதலைச் செய்யலாம். அதைப் பற்றிப் பின்பு யோசிக்கலாம். கீழைப்பழுவூர்ச் சேனைகளையும் விரைவில் கொடும்பாளுருக்குக் கொண்டு வந்து விட வேண்டும். நமது வடதிசைப் பெரும்படை முதலில் ஒன்று கூடுமிடம் கொடும்பாளுராக இருப்பதில் உங்களில் யாருக்கும் ஆட்சேபணை இருக்கமுடியாது. படைகளெல்லாம் கொடும்பாளுரில் வந்து கூடிய பின் அவைகளை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும். படையெடுப்பின் போது மொத்தமாக எல்லாப் படைகளையும் ஒரே வழியாகச் செலுத்திக் கொண்டுபோய்ப் பாண்டி நாட்டில் நுழையக் கூடாது. கிழக்கு வழியாக ஒரு படையும், மேற்கு வழியாக ஒரு படையும்-இயன்றால் தெற்கே கடல் வழியாக ஒரு படையுமாக ஒரே சமயத்தில் போய் வளைத்துக்கொள்ள வேண்டும்” என்று சோழ மன்னன் திட்டத்தை விவரித்தான். “அப்படியானால் பறம்பு நாட்டில் தொடங்கித் திருவாதவூர் வழியாக ஒரு பகுதிப் படையையும் சிறுமலை, திருமால்குன்றம் வழியாக மற்றொரு பகுதிப் படையையும் அனுப்பலாம். இருபகுதிப் படைகளும் மதுரையில் சந்தித்துக் கலந்து பேசிக் கொண்டு மீண்டும் கிழக்கிலும், மேற்கிலுமாகப் பிரிந்து தென்பாண்டி நாட்டுள் பிரவேசிக்கலாம்” என்று கண்டன் அமுதன் சோழனின் திட்டத்தையே மேலும் விளக்கினான்.

“செய்யலாம்! ஆனால் தென் பாண்டிப் படைகளும், நம் படைகளும் எந்த இடத்தில் சந்திக்குமென்று உறுதி சொல்வதற்கில்லை. எந்த இடத்திலும் திடீரென்று எதிர்ப்பட்டு நம்மைத் தாக்கலாம் அவர்கள்!’-இப்படிக் கூறியவன் பரதுாருடையான். “மதுரையை நாம் வென்றிருந்தாலும் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து அந்த நகரைக்

காக்கவில்லை. ஆகவே அவர்கள் படை வலிமையால் மதுரையையும் கடந்த வந்து நம்மை எதிர்த்தாலும் அதைச் சமாளிக்க நாம் தயாராகத்தான் இருக்கவேண்டும்” என்று சோழன் மீண்டும் வற்புறுத்தினான். –

எல்லோரும் தம் படைகளைக் கொடும்பாளுருக்குக் கொண்டுவர ஒப்புக்கொண்டனர். உடனே அரண்மனை நிமித்தக்காரரை வரவழைப் படை கொண்டுவருவதழ்கு நல்ல நாளும், கோளும், வேளையும் குறித்துக்கொண்டனர் அவர்கள் ஐவரும். எல்லாப் படைகளும் வந்து தங்குவதற்கு வேண்டிய வசதிகளைச் செய்யுமாறு சோழன் கொடும்பாளூர் மன்னனை வேண்டிக்கொண்டான்.

எப்படியும் சில வாரங்கள் அல்லது சில தினங்களுக்குள் படையெடுப்பை ஆரம்பித்துவிட வேண்டு மென்று உறுதி செய்துகொண்டனர். இரண்டு மண்டலக் காலம் என்று காலத்தை எல்லை கட்டி வரையறுத்தான் கண்டன் அமுதன். இரண்டு பிரிவாகப் பிரிந்து தென் திசை செல்லும் படைகளுக்கு அரசூருடையானும், பரதுாருடை யானும் தளபதிகளாக இருக்கவேண்டுமென்று மற்ற மூவரும் வேண்டிக் கொண்டனர். அவர்களும் மறுக்காமல் ஒப்புக் கொண்டார்கள். – –

“நம் படையெடுப்பில் வெற்றி கிடைக்கும் என்பதற்கு எடுத்த எடுப்பிலேயே நமக்கு நல்ல சகுனந்தான் கிடைத்திருக்கிறது. நம்முடைய கழு மரம் போர் தொடங்கு முன்பே தென்பாண்டி நாட்டு வீரனொருவனைப் பலி வாங்கிவிட்டது!” என்று சொல்லிச் சிரித்தான் கொடும்பாளூர்

“இந்த ஒரு பலி மட்டும் போதாது, இன்னும் எத்தனை தென் பாண்டி நாட்டு ஒற்றர்கள் சிக்கினாலும் உங்கள் கழுமரத்துக்குப் பலி கொடுக்கலாமே!” என்றான் அரசூருடையான். –

“படையெடுப்புத் தொடங்குவதற்கு முன் தெற்கே திரியும் நம் ஆட்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களை இங்கே வரவழைத்துவிட வேண்டும்” என்று சொல்லிக் கூட்டத்தைக் கலைத்தான் சோழ மன்னன்.

அன்று மாலை கொடும்பாளுர்க் கோட்டையின் முன் புறத்து வாயிலுக்கு மேலே மதிலின் மாடத்தில் போருக்கு வீரர்களைச் சேர்த்துக் கொள்வதற்கு அடையாளமான முரசம் இடிபோல் ஒலித்தது. சேரவாரும் போர்வீரர்களே! என்று அந்த முரசொலி அறைகூவியபோது கொடும்பாளுர் நகரை வியப்பில் ஆழ்த்தியது. மக்கள் கூட்டமாகக் கோட்டையைச் சுட்டிக்காட்டி நின்று அந்த முரசு ஒலிப்பதை வேடிக்கை பார்த்தனர்.

Previous articleRead Pandima Devi Part 2 Ch34 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in
Next articleRead Pandima Devi Part 2 Ch36 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here