Home Na Parthasarathy Read Pandima Devi Part 2 Ch37 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

Read Pandima Devi Part 2 Ch37 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

82
0
Read Pandima Devi Part 2 Ch37 Pandima Devi Na.Parthasarathy, Read Pandima Devi Online Free, Pandima Devi PDF, Download Pandima Devi novel, Pandima Devi book
Read Pandima Devi Part 2 Ch37|Na.Parthasarathy|TamilNovel.in

Read Pandima Devi Part 2 Ch37 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

பாண்டிமாதேவி – நா. பார்த்தசாரதி

இரண்டாம் பாகம், அத்தியாயம் 37 :காலப் பெருவெளியிற் சில கனவுப் பறவைகள்

Read Pandima Devi Part 2 Ch37 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

எதிலும் மனம் பொருந்தாமல், எண்ணங்கள் ஒட்டாமல் அந்த அரண்மனைக்குள் அதே நிலையில் நாட்களைக் கடத்த முடியாது போல் தோன்றியது மகாராணி வானவன்மா தேவிக்கு. நான்கு புறமும் நீந்தி மீளமுடியாதபடி பொங்கிப் பெருகும் வெள்ளப் பிரவாகத்தினிடையே அகப்பட்டுக் கொண்ட நீந்தத் தெரியாத மனிதனைப்போல் சிறுமை நிறைந்த சாமானிய மனிதக் குணங்களுக்கு நடுவே திகைத்து நின்றார் அவர். அதுவும் கழற்கால் மாறனார் ஒப்புரவு மொழி மாறா ஒலையோடு வந்து பயமுறுத்திவிட்டுப் போனதிலிருந்து

மனத்தின் சிறிதளவு நிம்மதியையும் இழந்து தவித்தார் அவர். அரண்மனைக்கு வெளியே போய்க் கோவில், குளம் என்று விருப்பம்போல் சுற்றவும் முடியவில்லை. உள்ளேயும் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

மாலையில் புவனமோகினியையும் உடன் அழைத்துக் கொண்டு அரண்மனை நந்தவனத்தில் போய்ச் சிறிது நேரம் உலாவினார் மகாராணி, பூக்களையும், செடி கொடிகளையும் பார்க்கும் போதெல்லாம் மகாராணியின் மனத்தில் சற்றே உற்சாகத் தென்றல் வீசியது. ஒவ்வொரு பூவைப் பார்க்கும் போதும் ஓர் அழகான குழந்தையின் புன்முறுவல் பூத்த முகம் நினைவு வந்தது அவருக்கு அடடா! அந்தப் பூக்களைப் பார்க்கும்போது இன்னும் எத்தனை எத்தனையோ நினைவுகள் அவர் மனத்தில் பொங்குகின்றனவே! எல்லையற்றுப் பரந்த பேருலகத்தில் அங்கங்கே மனித வாழ்க்கையில் தென்படும் சிறுமைகளைக் காணாததுபோல் கண்டு அளவிலும், உருவிலும் அடங்காத இயற்கைப் பெருந்தாய் இப்படிப் பல்லாயிரம் பல்லாயிரம் மலர்களாக மாறி ஏளனச் சிரிப்புக்களை எங்கும் வாரி இறைக்கின்றாளோ? அவை வெறும் பூக்களல்ல. பிரகிருதியின் அர்த்தம் நிறைந்த புன்னகைகள்!

நந்தவனத்துத் தடாகத்தில் இருந்த சில பெரிய செவ்வல்லிப் பூக்களையும் மூடும் நிலையிலிருந்த கமிலங்களையும் பார்த்தபோது மழலைமொழி பேசிக் கன்னங் குழியச்சிரிக்கும் குழந்தைப் பருவத்து இராசசிம்மனின் முகம் நினைவு வந்தது அவருக்கு தடாகம் நிறைய மலர்ந்து தெரிந்த அத்தனை மலர்களும் குழந்தைப் பருவத்து இராசசிம்மனின் முகங்களாக மாறிச் சிரிப்பனபோல் அவருக்கு ஒரு பிரமை ஏற்பட்டது. நெஞ்சத்து உணர்வுகளைக் கனிச் சாற்ாகப் பிழிந்து களிப்பூட்டும் அந்த இனிய பிரமையில் தம்மை முற்றிலும் மூழ்கச் செய்துகொண்டு பூக்களையே பார்த்தவாறு சிறிது நேரம் நின்றார் மகாராணி, புவனமோகினியும் அருகில் நின்றாள். அப்போது ஒரு பணிப்பெண் ஓடிவந்து, “தேவி!

கோட்டாற்றிலிருந்து அந்தச் சமணப் பண்டிதர்கள் தங்களைத் தேடிக் கொண்டு வந்திருக்கிறார்கள்” என்று தெரிவித்தாள்.

“அவர்களையும் இங்கேயே நந்தவனத்துக்கு அழ்ைத்துக் கொண்டு வா, அம்மா!” என்றார் மகாராணி, பணிப்பெண் போய் அழைத்துக்கொண்டு வந்தாள்.

“அடிகளே, வாருங்கள்! பயிர் வாடுகிறபோதெல்லாம் தானாகவே வந்து பெய்கிற மழை மாதிரி வெளியே சொல்ல முடியாத ஊமைக் கவலைகளால் நான் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிற சமயங்களிலெல்லாம் நீங்கள் காட்சியளித்து எனக்கு நம்பிக்கையளிக்கிறீர்கள்” என்று அவர்களை வரவேற்றார் மகாராணி, – –

“துன்பத்தைப் போக்குவதற்கு நான் யார் தாயே? உலகில் பிறந்து வாழ்வதே பெருந் துன்பம். நடக்கத் தெரிகிறவரை எழுவதும் விழுவதுமாகத் தள்ளாடும் குழந்தை போலப் பிறவியை வென்று வீடடையப் பழகுகிற வரையில், பிறப்பும் வாழ்வும் துன்பங்களே தரும்.

பிறந்தோர் உறுவது பெருகி துன்பம் பிறவார் உறுவது பெரும் பேரின்பம் பற்றின் வருவது முன்னது, பின்னது அற்றோர் உறுவது.’ – என்று புலவர் சீத்தலைச்சாத்தனார் மணிமேகலைக் காப்பியத்தில் எவ்வளவு அழகாக இந்தத் தத்துவத்தைச் சொல்லியிருக்கிறார்!” என்று சொல்லிக்கொண்டே, உடன் வந்த மற்றொரு துறவியோடு புல்தரையில் உட்கார்ந்தார் கோட்டாற்றுப் பண்டிதர். மகாராணியும், புவனமோகினியும் அதே புல்தரையில் சிறிது தூரம் தள்ளி அடக்க ஒடுக்கமாக அமர்ந்து கொண்டனர். – . . . . .”

“அந்தப்புரத்துக் கட்டடங்களுக்குள்ளேயே அடைந்து கிடக்கப் பொறுக்காமல் நந்தவனத்துக்கு வந்தேன். அடிகளே ! நல்லவேளையாக நீங்களும் வந்தீர்கள். இன்று உங்களைக் காணும் பேறு கிட்டுமென்று நான் கனவிலும் எதிர்பார்க்க வில்லை.”

“எங்கே அடைந்துகிடந்தால் என்ன அம்மா? இது சிறிய நந்தவனம், உலகம் பெரிய நந்தவனம். இங்கே செடிகளின் கிளைகளில் நாட்களை எல்லையாகக் கொண்டு பூக்கள் பூத்து உதிர்கின்றன. அங்கேயோ காலத்தின் கிளைகளில் விதியை எல்லையாகக் கொண்டு உயிர்ப் பூக்கள் பூத்து உதிர்கின்றன. இன்று உதிர்ந்துள்ள பூக்களே நாளை உதிரப்போகும் பூக்களுக்கு உரமாகும். இந்த உயிர்ப் பூக்களின் நந்தவனத்தில் எதையும் நடுவராக நின்று பார்த்துக் கொண்டே நடந்து போய்விடவேண்டும். இல்லாவிட்டால் துன்பம்தான்!” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் கோட்டாற்றுப் பண்டிதர்.

“என்னைப் போன்றவர்களால் ஆசைகளையும் பாசங்களையும் சுமந்து கொண்டு அப்படி நடுவாக நடந்து போய்விட முடிவதில்லையே அடிகளே!”

“முடிகிற காலம் ஒன்றுவரும், தாயே! அப்போது நானே உங்களைச் சந்தித்து நினைவூட்டுவேன். இன்று நான் இங்கே வந்தது உங்களைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருப் பதற்காக அல்ல. நானும் இதோ உடன் வந்திருக்கும் இந்தத் துறவியும் மறுபடியும் வடதிசையில் யாத்திரை போகிறோம். அதற்கு முன் உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லிக் கொண்டு போகலாமென்று வந்தேன்.”

“அடிகள் திரும்ப எவ்வளவு காலமாகுமோ?” “யார் கண்டார்கள்? நான் திரும்புவதற்குள் எங்கெங்கே எத்தனை மாறுதல்களோ? தாயே! எப்போதும் நாளைக்கு நடப்பதை எண்ணித் திட்டமிடுகிற வழக்கமே எனக்கு இல்லை. நீரின் வேகத்தில் விழுந்த துரும்புபோல் கால ஒட்டத்தில் என்னைத் தள்ளிக்கொண்டபின் என்னை இழுத்துச் செல்ல வேண்டியது அதன் பொறுப்பு. நாளைய தினத்தைப் பற்றிப் பெரிதாக எண்ணாதீர்கள். அது உங்கள் நினைப்பைப் போல் இல்லாமலும் போகலாம்!” எதையோ சுருக்கமாக மறைத்துச் சொல்லிச் சிரிப்பவர்போல் சிரித்தார் அவர். “அடிகளே! இன்றைய தினத்தைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது. அதனால் அதைப் பற்றி

எண்ணுவதற்கு ஒன்றும் மீதமில்லை. நாளைய தினம்தான் எனக்குத் தெரியாதது. என் கற்பனைகளுக்கு இடமளிப்பது. என் நினைவுகளைத் தாங்கிக்கொண்டு இன்பம் தருவது. நான் எப்படி அதை நினையாமல் இருக்கமுடியும்?”

இந்தக் கேள்விக்கு அவர் பதில் சொல்லாமல் சிரித்தார். சிறிது நேரம் மெளனமாக இருந்தார். பின்பு விடைபெற்றுக் கொண்டு உடன் வந்தவரோடு திரும்பிப் போய்விட்டார். அந்தச் சில விநாடிகளில் இன்னதென்று புரியாத எதோ ஒரு பேருண்மையைத் தனக்குத் தெரியாமல், தனக்கு விளங்காமல், தானறிந்துகொள்ள முடியாமல் தன் மனத்தில் அவர் பதித்துவிட்டுப் போய்விட்டது போல் மகாராணிக்கு ஒர் உணர்வு ஏற்பட்டு வளர்ந்தது. –

இருட்டி நெடுநேரமாகி நந்தவனத்திலிருந்து திரும்பி இரவு உணவு முடித்துப் படுத்துக்கொண்டபின்னும் அந்தச் சிந்தனை மகாராணியை விட்டு நீங்க மறுத்தது. முன்னும் பின்னும் தொடர்பற்ற, பல சிந்தனைகள், பல முகங்கள் பலருடைய பழக்கங்கள் எல்லாம் அவருக்கு நினைவு வந்தன. கழற்கால் மாறனாரின் பதவி ஆசை, மகாமண்டலேசுவரரின் கம்பீரம், சுசீந்திரத்தில் சந்தித்த திருவாட்டாற்றுச் சோழியப் பெண்ணின் தாய்மை கனிந்த முகம், காந்தளூர் மணியம் பலத்தில் அந்த முதுபெரும் புலவர் மாணவர்களுக்குக் கூறிய அறிவுரை-எல்லாம் அவர் நினைவில் தோன்றி மறைந்தன. நினைவுகளின் வெள்ளத்தில் அவர் மனம் நீந்தத் தொடங்கியது. – –

நந்தவனத்துக் குளத்தில் பார்த்த செவ்வல்லிப்பூ சிறிது சிறிதாக விரிந்து, வடிவு பெருகி ஓர் அழகிய ஆண் குழந்தையின் முகமாக மாறிச் சிரிக்கிறது. சிரித்துக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக மாறி வளர்ந்து அது ஒரு இளைஞனின் முகமாக விரிவடைகிறது. அந்த முகத்துக்குக் கீழே கைகளும், கால்களும், உடம்பும் உண்டாகி, ஒரு வாலிபன் எழுந்து நிற்கிறான். அந்த வாலிபன் வேறு யாருமில்லை; குமார பாண்டியன் இராசசிம்மன்தான். பா. தே. 36 .

‘அம்மா ! உங்கள் எண் ணங்களை நான் நிறைவேற்றுவேனா, மாட்டேனா என்று கவலைப்படாதீர்கள். என்னுடைய வலிமை வாய்ந்த கைகள் அவற்றை நிறைவேற்றுவதற்காகவே இருக்கின்றன” என்று இராசசிம்மன் அருகில் வந்து கைகூப்பி வணங்கிக்கொண்டே சொல்லுகிறான்.

“குழந்தாய்! நான் அவநம்பிக்கையடைந்துவிடக் கூடா தென்பதற்காக நீ இப்படிக் கூறுகிறாய். நாளைக்கு நடக்கப் போவதைப் பற்றிச் சொல்ல உன்னால் எப்படி அப்பா முடியும்? அது உன் நினைப்பைப்போல் இல்லாமலும் போகலாம். உனக்குப் பல பொறுப்புக்கள் இருக்கின்றன. நீயோ ஒரு பொறுப்பும் நினைவில்லாமல் மனம்போன போக்கில் திரிந்து கொண்டிருக்கிறாய். முதலில் நீ தாய்க்கு மகனாக இருப்பதற்குத் தெரிந்துகொள்ள வேண்டும். பின்பு நாட்டுக்கு அரசனாக இருப்பதற்குத் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பின் ஒரு பெண்ணுக்கு நாயகனாக இருப்பதற்குத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கெல்லாம் அப்பால் குழந்தைகளுக்குத் தந்தையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். பிறந்தும் ஆண்டும் பெற்றும் பெறுவித்தும் முடிவதுதான் வாழ்க்கை. தாயைக்கூடச் சந்திக்காமல் சுற்றிக்கொண்டிருக்கும் நீ பொறுப்புக்களை உணர்ந்து கொள்ளுவது எப்போது? பொறுப்புக்களை உணர்வதற்கே தெம்பில்லாத நீ அவற்றைச் சுமப்பது என்றைக்கோ ? . மகாமண்டலேசுவரர் நல்லெண்ணத்துடன் உன்னை இடையாற்றுமங்கலத்துக்கு அழைத்து வந்து இரகசியமாகத் தங்க வைத்தால், நீ அவர் கண்களிலேயே மண்ணைத் தூவிவிட்டு அரசுரிமைப் பொருள்களைக் கடத்திக் கொண்டுபோய் விட்டாய். இலங்கை இலங்கை என்று நினைத்தபோதெல்லாம் அங்கே ஓடிவிடுகிறாய். அப்படி உனக்கு என்னதான் வைத்திருக்கிறதோ அங்கே காசிபமன்னன் உனக்கு வேண்டியவனாக இருக்கலாம். அதற்காக எப்போதும் அவன் நிழலிலேயே போய் ஒதுங்கலாமா? முயற்சியும் ஊக்கமும் உள்ள ஆண் மகனுக்குப் பிறருடைய நிழலில் போய்

ஒதுங்குவது என்பது இழிவு அல்லவா? வெளியில் யாருக்கும் தெரியாமல் உன்னையும் அரசுரிமைப் பொருள்களையும் தேடி அழைத்து வருவதற்கு அந்தரங்கமாக ஏற்பாடு செய்திருப்பதாக மகாமண்டலேசுவரர் கூறினார். அதனால் தான் ஆசைகளையும், பாசங்களையும் மனத்திலிருந்து களைந்தெறிந்து அழித்துவிடாமல் வைத்துக்கொண்டு இன்னும் காத்திருக்கிறேன். உலகம் உயிர்ப் பூக்களின் நந்தவனம்! அங்கே எல்லாவற்றையும் பார்த்தும் பார்க்காததுபோல் நடுவாக நடந்து போய்விட வேண்டும் என்று கோட்டாற்றுப் பண்டிதர் எனக்குச் சொல்லுகிறார். குழந்தாய், உன் மேலும், உன் எதிர்காலத்தின் மேலும், நான் கண்டு கொண்டிருக்கும் கனவுகளாலும் நம்பிக்கைகளாலும் அவருடைய தத்துவத்தைக்கூட என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. அதற்காக மகாமேதையான அந்தப் பண்டிதரைக் கூட எதிர்த்து வாதம் புரிந்தேன் நான். நீ இங்கு இல்லாததால் அரசாங்கக் கவலைகளும் என்னிடமே வந்து சேர்கின்றன. உன்னைக் காண முடியாமல் படும் கவலைகளோடு சேர்த்து அந்தக் கவலைகளையும் நானே படவேண்டியிருக்கிறது. நம்முடைய மகாமண்டலேசுவரர் தென்பாண்டி நாட்டின் அறிவு வளத்துக்கும் சிந்தனைச் செழுமைக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் பொறாமையின் காரணமாக அவரை அந்தப் பெரும் பதவியிலிருந்து கீழே இறக்கிவிடுவதற்குச் சிலர் முயற்சி செய்கிறார்கள். பொன்மனைக் கூற்றத்துக் கிழவர் ஒப்புரவு மொழிமாறா ஒலையோடு என்னிடம் வந்து, மகாமண்டலேசுவரரைப் பற்றி என்னென்னவோ புறங் கூறினார். நான் ஏற்றுக் கொள்ளவில்லை. மகாண்டலேசுவரரைப்பற்றி அவ்வளவு கேவலமாகப் புறங்கூறிய அந்தக் கிழட்டு மனிதர் அவரையே நேரில் பார்த்ததும் எப்படி நடுங்கிப்போனார், தெரியுமா? இராசசிம்மா! இடையாற்றுமங்கலத்துப் பெரியவருக்கு மட்டும் அந்த இணையற்ற ஆற்றல் இருக்கிறது. அவரை எதிர்ப்பவர்களும், வெறுப்பவர்களும்கூட அவருடைய கண்களின் சால்பு நின்றந்த பார்வைக்கு முன்னால் அடங்கி ஒடுங்கி நின்று விடுகிறார்கள். பகைவரையும் பிணிக்கும்

பேராற்றல் அந்தப் பார்வைக்கு இருக்கிறது. தென்பாண்டி நாட்டு அரசியல் தொடர்புடைய எல்லோருக்குமே காரணமற்ற ஒருவகை அசூயை மகாமண்டலேசுவரர்மேல் இருக்கிறது. குழந்தாய்! அவரைப் போல் ஒரு திறமையான மனிதர் இல்லாவிட்டால் உடனடியாக நேர இருந்த வடதிசைப் பகைவர் படையெடுப்பைக் காலந்தாழ்த்தியிருக்க முடியாது. அவர் மகாமண்டலேசுவரராயிருக்கிற காலத்திலேயே நீ வந்து முடிசூட்டிக் கொண்டு பொறுப் பேற்றால் உனக்கு எத்தனையோ வகையில் பயன்படும். உலகம் நிலையாதது, நம்முடைய எண்ணங்களின் படியே எதுவும் நடப்பதில்லை என்பதையெல்லாம் நான் உணர்கிறேன், குழந்தாய்! ஆனால் உன்னைப்பற்றி நினைவு வரும்போது மட்டும் என்னால் அவற்றை நம்பமுடிவதில்லை. உலகம் நிலையானது. என் அருமைப் புதல்வனைப் பொறுத்த வரையில் நான் எண்ணியிருக்கிறபடியே எல்லாம் நடைபெறும் என்றே நினைத்து வருகிறேன். நான். நீ என்னை ஏமாற்றிவிடாதே என் நினைவுகளையும் கனவுகளையும் ஏமாற்றிவிடாதே”. யாரோ கூப்பிடுவது போலிருந்தது.

“தேவி! இதென்ன? என்னென்னவோ பிதற்றுகிறீர்களே! நீங்களாகவே பேசிக்கொள்கிறீர்களே! உங்களுக்கு ஏதாவது உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறதா? ஒரு வேளை மாலையில் குளிர்ந்த காற்றுப் படும்படி நந்தவனத்தில் உலாவியது ஒத்துக்கொள்ளவில்லையா?” என்று கேட்டுக் கொண்டே புவனமோகினி கட்டில் அருகே நின்றாள். மகாராணிக்கு நாணமாக இருந்தது. இராசசிம்மனிடம் பேச நினைத்தவைகளையெல்லாம் தூக்கத்தில் வாய் சோர்ந்து உளறிவிட்டிருக்கிறோம் என்று அவருக்கு அப்போதுதான் புரிந்தது.

புவனமோகினி மகாராணிக்குத் துணையாகக் கட்டிலுக்குக் கீழே தரையில் பக்கத்தில் படுத்துக் கொண்டாள். மகாராணிக்கு மறுபடியும் கோட்டாற்றுப் பண்டிதர் கூற்று

“நாளைக்கு நடப்பதைப்பற்றி இன்றைக்கே திட்ட மிடாதீர்கள். நாளைய தினம் என்பது இனிமேல் வருவது. நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லாமலும் போகலாம் அது!”

மகாராணியின் அறிவுமயமான உள்ளம் இந்தத் தத்துவத்தை ஒப்புக்கொண்டது. ஆனால் உணர்வு மயமான உள்ளமோ ஒப்புக்கொள்ள மறுத்தது. நாளை என்ற ஒன்று இல்லாவிட்டால் அப்புறம் இந்த உலகத்தில் என்ன இருக்கிறது? அறியமுடியாத உண்மைகளும், தெரிய முடியாத எதிர்காலமும் இருப்பதனால் அல்லவா வாழ்க்கை சாரமாக இருக்கிறது? தாம் சுமக்கின்ற பொருள்களின் உயர்வும் பெருமையும் தெரியாமல், குங்குமமும் கற்பூரமும் சுமக்கும் கழுதைகளைப்போல் வாழ்வதனால்தான் சாதாரண மனிதர்களால் வாழ்க்கையின் நாளைய தினங்களைக் கற்பனை செய்ய முடிகிறது.” . .

இப்படி என்னென்னவோ எண்ணிக்கொண்டு படுக்கையில் புரண்டார், மகாராணி. சிந்தனைகளைத் தனக்குச் சாதகமாகத் தன் எண்ணங்களுக்கு ஏற்றாற்போல் வளைத்துச் சிந்திக்கத் தொடங்கும்போது, மனத்துக்கு ஒருவிதமான போலி உற்சாகம் மகிழ்ச்சி மயக்கமாக ஏற்படும். மகாராணியின் மனத்தில் அப்படி ஓர் உற்சாகம் அப்போது ஏற்பட்டிருந்தது. மறுநாள் பொழுது விடிந்ததுமே இராசசிம்மன் ஓடிவந்துவிடப்போகிற மாதிரியும், உடனே அவனுக்கு முடிசூட்டிக் கண்டு மகிழப் போவதாகவும் தன் மனம் கற்பனை செய்கிற எல்லா நிகழ்ச்சிகளுமே உடனே நடந்துவிடப் போவதுபோல் ஒரு மனநிலை ஏற்பட்டது. கண்களை விழித்துக்கொண்டே கட்டிலில் படுத்திருந்தவருக்கு எதிரே சிறிதாக மங்கலாக எரிந்துகொண்டிருந்த துரண்டா விளக்கின் சுடர் தெரிந்தது. இருட்டில் மலர்ந்த தங்க மலர் ஒன்றின் ஒற்றைத் தனி இதழ் காற்றில் அசைவதுபோல் கண்ணுக்கு அழகாகத் தெரியும் அந்தச் சுடரையே பார்ப்பது இன்பமாக இருந்தது மகாராணிக்கு. சுடரா அது: நெருப்புத் தாயின் பெண் குழந்தை, நெருப்பில் ஏதோதெய்வீக ஆற்றல் இருக்கிறது; அதனால்தான் அதை வணங்குவதற்கு ஏற்ற

பொருளாக முன்னோர்கள் தேர்ந்திருக்கவேண்டுமென்று அவருக்குத் தோன்றியது. பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்தச் சுடர் பெரிதாக எரிவதுபோல் அவருக்கு ஒரு தோற்றம் உண்டாயிற்று.

பயத்தால் அவர் முகம் வெளிறுகிறது. கண்களை மூடிக் கொள்கிறார். ஆருயிர்க் கணவர் பராந்தக பாண்டியரின் சிதையில் அடுக்கிய சந்தனக் கட்டைகள் எரிந்த காட்சியை அவர் கண்களில் அவருடைய விருப்பமின்றியே நினைவுக்குள் கொண்டு வந்து தள்ளுகிறது. ஏதோ ஒரு சக்தி எட்டுத் திசையும் புகழ் மணக்கச் செங்கோல் நடத்திய அந்த மாபெரும் உடலை நெருப்புச் சூழ்ந்தபோது, வானவன்மாதேவி நெருப்பைத் திட்டியிருக்கிறார்; தெய்வங்கள் தன்னை வஞ்சித்து ஏமாற்றியதாகத் துாற்றியிருக்கிறார். அதே நெருப்பின் சுடரையா இப்போது தெய்வமாக எண் ணினேன் என்று நினைக்கும்போதே உடல் புல்லரித்தது அவருக்கு. கண்களில் தன்னுணர்வு இல்லாமலே ஈரம் கசிந்துவிட்டது. எத்தனை சமச்சிதைகளில் எத்தன்ை மனித உடல்களின் இரத்தத்தைக் குடித்த கொழுப்போ? அதனாலல்லவோ இந்தச் சுடர் இப்படிச் சிவப்பாக இரத்தத்தில் நனைந்த வெண்தாமரை இதழ்போல் எரிகிறது. அந்தத் தூண்டா விளக்கின் சுடரில் அழகு தெரியவில்லை அவருக்கு தெய்வமும் தெரியவில்லை. அப்படியே எழுந்து பாய்ந்து அந்தச் சுடர் பிழம்பைக் கைவிரல்களால் அமுக்கி நசுக்கி அழித்துவிடவேண்டும் போல் வெறி உண்டாயிற்று. அந்த நெருப்பின் சவலைக் குழந்தையைக் கழுத்தை நெரித்துவிட வேண்டும் போல் இருந்தது.

இப்படி ஏதேதோ சம்பந்தா சம்பந்தமின்றி நினைத்துக் கொண்டே துரங்கிப் போனார் மகாராணி. தூக்கத்தில் எத்தனையோ வேண்டிய, வேண்டாத கனவுகள் கவிழ்ந்தன. அகல-நீளங்களுக்குள் அடங்காமல் விளிம்பும் வேலியுமற்றுப் பரந்து கிடக்கும் காலம் என்னும் பெரு வெளியில் தம் கனவுப்பறவைகளைப் பறக்கச் செய்தார் மகாராணி. அலுப்பின்றிச் சலிப்பின்றிக் காலப் பெருவெளியின்

தொடமுடியாத உயரத்தில் தூக்கம் கலைகிறவரை அந்தப் பறவைகள் பறந்து கொண்டே இருந்தன.

இராசசிம்மன் எட்டுத் திசையும் வெற்றி வாகை சூடித் திரிபுவனச் சக்கரவர்த்தியாகிறான். திருமணம் புரிந்து கொள்கிறான். அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. வானவன்மாதேவி தம் பேரனைக் கொஞ்சுகிறார். இராச சிம்மா! நீ குழந்தையாக இருந்தபோது சிரித்ததைப் போலவே உன் மகனும் சிரிக்கிறான்’ என்று புதல் வனிடம் வேடிக்கையாகச் சொல்கிறார் மகாராணி, ‘அம்மா! என் மகனை என்னைக் காட்டிலும் பெரிய வீரனாக்கப் போகிறேன் பாருங்கள். ஈழத்தையும் கடாரத்தையும்கூட அவன் வென்று வாகை சூடுவான் என்று மகனைப்பற்றிப் பெரும்ையடித்துக் கொள்கிறான் இராசசிம்மன்.

செய்தாலும் செய்வான், அப்பா! வாளாலும் வேலாலும் வெல்வதற்கு முன் சிரிப்பாலேயே அவைகளை வென்று விடுவான் போலிருக்கிறது உன் மகன் என்று புன்னகையோடு பதில் சொல்கிறார் மகாராணி.

இவ்வளவில் மகாராணி கண்விழித்தார். விடிந்து வெயில் பரவி வெகு நேரமாயிருந்தது. படுத்த நிலையிலேயே கட்டிலில் கண் விழித்த அவர் பார்வையில் எதிரேயிருந்த அந்தத் தீபம்தான் பட்டது, அவர் திடுக்கிட்டார். அந்த ஒளியின் குழந்தை அணைந்து அழுது புகையாகி, நூலிழைத்துக் கொண்டிருந்தது. என்றுமே அணையாத விளக்கு அது. அன்று அணைந்திருந்தது. கண்ட கனவுக்கும் அதற்கும் பொருத்தமி ஒல்லாமல் பட்டது. மனத்தின் வேதனை அலைகளை அடக்கிக்கொண்டு அந்த அன்னை காலத்தின் அலைகளில் மிதப்பதற்காக எழுந்தாள். நீராடிய ஈரக் கூந்தலோடு கையில் பூக்குடலையுடன் புவனமோகினி அப்போது அங்கே வந்தாள்.

“பெண்ணே! இன்றைக்கு இந்த அணையா விளக்கு அணையும்படி விட்டு விட்டாயே, நீ பார்க்கவேயில்லையா?” என்று கேட்டார் மகாராணி.

“ஐயோ! அணைந்துவிட்டதா? நான் பார்க்கவே இல்லையே?.” என்று பதறி, அதை ஏற்றுவதற்காக ஓடினாள் வண்ணமகள்.

பிரமை பிடித்தவர்போல் சூனியத்தை வெறித்து நோக்கியபடி மறுபடியும் கட்டிலிலேயே உட்கார்ந்து கொண்டார் மகாராணி.

“இரவில் எண்ணங்கள் உற்சாகமாக, நம்பிக்கையளிப் பவையாக, விரும்பத்தக்கவையாக இருந்தன. பகல் விடிந்ததுமே ஒளியின்றிப் புகைகிறது” என்று மெல்ல தமக்குத் தாமே சொல்லிக்கொண்டார் அவர். சாளரத்தின் வழியே நுழைந்த ஒளிக்கதிர்கள் அவருடைய நெற்றியில் படிந்து மினுமினுப்புக் காட்டின.

அன்றைய நாளின் விடிவு காலத்தின் வேகமான அலைகளில் தன்னை வேறொரு திசையில் இழுப்பதற்காக விடிந்ததுபோல் ஏதோ மனத்தில் அவருக்கு ஒரு குழப்பம் எழுந்தது. அப்போது கோட்டாற்றுப் பண்டிதர் பதில் பேசாமல் சிரித்து விட்டுப் போன அந்தச் சிரிப்பு அவருக்கு நினைவு வந்தது. முன்பொரு சமயம் அவர் ஒலையில் எழுதிக்கொடுத்துவிட்டுப்போன பாட்டு நினைவு வந்தது.

“மகாராணி! வெயில் ஏறி வெப்பம் அதிகமாகிக் கொண்டே போகிறதே” என்று நீராடுவதற்கு நினைப்பூட்டும் நோக்கத்தோடு ஒரு பணிப்பெண் கூறினாள்.

“ஆமாம்! வெப்பம் அதிமாகிக் கொண்டுதான் போகிறது” என்று அதே வார்த்தைகளை வேறு பொருள் தொனிக்கத் திருப்பிச் சொல்லிக்கொண்டே எழுந்திருந்தார் மகாராணி வானவன்மாதேவி.

இரண்டாம் பாகம் முற்றிற்று

Previous articleRead Pandima Devi Part 2 Ch36 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in
Next articlePandima Devi Part 3 Ch 1 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here