Home Na Parthasarathy Read Pandima Devi Part 2 Ch4 | Pandima Devi Na. Parthasarathy |...

Read Pandima Devi Part 2 Ch4 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in

121
0
Read Pandima Devi Part 2 Ch4 Pandima Devi Na.Parthasarathy, Read Pandima Devi Online Free, Pandima Devi PDF, Download Pandima Devi novel, Pandima Devi book
Read Pandima Devi Part 2 Ch4|Na.Parthasarathy| TamilNovel.in

Read Pandima Devi Part 2 Ch4 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in

பாண்டிமாதேவி – நா. பார்த்தசாரதி

இரண்டாம் பாகம், அத்தியாயம் 4 : கோட்டாற்றுக் குணவீர பண்டிதர்

Read Pandima Devi Part 2 Ch4|Na.Parthasarathy| TamilNovel.in

இடையாற்றுமங்கலத்தில் கொள்ளை போன செய்தியையும், கரவந்தபுரத்திலிருந்து வந்த போர்ச் செய்தியையும் மகாமண்டலேசுவரர் எவ்வளவுக்கெவ்வளவு இரகசியமாகப் பாதுகாக்க வேண்டுமென்று கருதினாரோ, அவ்வளவுக்கு அவர் நினைக்குமுன்பே அவை பொதுவாக வெளியில் பரவிவிட்டிருந்தன. இடையாற்று மங்கலத்திலிருந்து அம்பலவன் வேளானும், கரவந்தபுரத்திலிருந்து மானகவசனும் செய்திகளை அரண்மனைக்குள் கொண்டுவந்த பின்பே அவற்றைப் பாதுகாக்க வேண்டுமென்ற அக்கறை அவருக்கு உண்டாயிற்று. ஆனால் அந்தச் செய்திகள் அரண்மனை எல்லைக்குள் வந்து சேருவதற்கு முன்பே வெளியில் பரவி விட்டன என்பதை அவர் உணரவில்லை.

இடையாற்றுமங்கலத்து நிகழ்ச்சி மறுநாள் பொழுது புலரும்போதே சுற்றுப் புறங்களுக்கு எட்டிவிட்டது. போர் வரப்போகிறது என்ற செய்தியைச் சூழ்நிலை இருக்கிற விதத்தால் மக்களே அனுமானித்துக் கொள்ள முடிந்தது. ஆகவே செய்திகளை வெளியில் தெரியாமல் ஒடுக்கிவைக்க வேண்டுமென்ற ஏற்பாடு அவர் புரிந்துகொள்ள முடியாதபடி அவருக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்துவிட்டது.

‘அரசுரிமைப் பொருள்கள் கொள்ளை போய்விட்டனஎன்ற செய்தியை அடுத்து — வசந்த மண்டபத்துத் துறவியைக் காணவில்லை— என்று அம்பலவன் வேளான் கூறுவான் என்று அவர் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. குமார பாண்டியர் தன்னிடமே இரகசியமாகத் தங்கியிருப்பதாகவும் உடனே அவரை அரண்மனைக்கு அழைத்து வருவதாகவும் மகாராணியார் முன்னிலையில் அவர் ஒப்புக் கொண்டிருந்தார். நாளை நடக்கப்போவதை மட்டுமல்ல, நாற்பது ஆண்டுகளுக்குப் பின் என்ன நடக்க முடியும் என்று அனுமானிக்கிற அளவுக்கு அறிவும், சிந்தனையும் உள்ள அவரே இந்த இடத்தில் புள்ளி பிசகிவிட்டார்.இடையாற்று மங்கலம் மகாமண்டலேசுவரருடைய கணக்குத் தப்புக் கணக்காகிவிட்டது.

குமார பாண்டியன் இராசசிம்மன் தன்னைமீறி எங்கும் எதற்கும் போகத்துணிவான் என்று அவர் நினைத்ததில்லை. அவன் மீறிச் செல்ல வழியின்றித் தம் அருமைப் புதல்வியையே துணை வைத்துவிட்டு வந்தார். எல்லோரையும், ஏமாற்றிவிட்டுத் தனது முன்னோர் செல்வத்தையும் கிளப்பிக் கொண்டு போய்விட்டான் அவன். அவன்தான் அவற்றைக் கொண்டு போயிருக்கவேண்டும் என்பதுகூட நடந்த நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாக இணைத்துப் பார்த்து அவராக அனுமானித்துக் கொண்டதுதான்.

இப்போது மகாராணியாருக்கு என்ன பதில் சொல்வதென்ற திகைப்பு அவருக்கு ஏற்பட்டது. எல்லோரையும் அனுப்பிவிட்டு அவர் மறுபடியும் மகாராணியாரைச் சந்திக்கச் சென்றார். மகராணியும் அவரையே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பது போல் அங்கேயே இருந்தார்.

“வாருங்கள் ! நீங்கள் குமார பாண்டியன் இராசசிம்மனைப்பற்றி நாம் தனிமையில் ஏதோ பேசவேண்டுமென்று கூறிவிட்டுப் போயிருந்தீர்கள். அதனால்தான் வேறு எங்கும் போகாமல் ஒவ்வொரு கணமும் உங்களை எதிர்பார்த்து இங்கேயே காத்துக் கொண்டிருக்கிறேன்.” மகாராணியின் வார்த்தைகளில் தம் புதல்வனைப் பற்றி அறியக் காத்திருக்கும் ஆவல் தொனித்தது.

இடையாற்றுமங்கலம் நம்பி எதிரேயிருந்த இருக்கையில் அமர்ந்தார். நல்ல கண்ணாடியில் சிறிது புகை படிந்தாற்போல அவர் முகபாவம் ஒளி மங்கியிருந்தது. எதையோ நினைத்துப் பெருமூச்சு விட்டபின் மகாராணியாருக்கு மறுமொழி கூறத் தொடங்கினார்.

“தேவி! குமார பாண்டியரை எந்தெந்த உயர்ந்த நோக்கங்களோடு இடையாற்றுமங்கலத்தில் என்னிடம் மறைவாகக் கொண்டுவந்து தங்கச் செய்திருந்தேனோ, அவற்றுக்கு முற்றிலும் மாறாக அவர் நடந்து கொண்டு விட்டார்.”

“அப்படி என்ன செய்தான் அவன்?”

“அதைத் தங்களிடம் மட்டும்தான் நான் சொல்ல முடியும், எல்லாருக்கும் தெரிந்தால் குமார பாண்டியருடைய பெருமையையே நாம் விட்டுக் கொடுத்தது போலாகிவிடும்.”

“நீங்கள் சொல்வதைப் பார்த்தால் பெரிதாக ஏதோ செய்துவிட்டான் போல் அல்லவா தோன்றுகிறது!”

“பெரிதுதான்! நேற்றிரவு நம்முடைய பாண்டியமரபின் மாபெரும் அரசுரிமைச் சின்னங்கள் கொள்ளை போனதாக இப்போது செய்தி வந்ததே, அதைச் செய்தவர் இடையாற்று மங்கலத்தில் வந்து தங்கியிருந்த தங்கள் குமாரர் இராசசிம்மனேதான்.”

“என்ன ? இராசசிம்மனா அப்படிச் செய்தான் ? இங்கிருந்து கொண்டே அவன்தான் அதைச் செய்தானென்று நீங்கள் எதைக் கொண்டு முடிவு செய்தீர்கள் ?” மகாராணியின் முகத்தில் வியப்பும் கலவரமும் பதிந்தன.

“இன்று நாம் எல்லோரும் கூடியிருந்த இடத்தில்தான் இடையாற்றுமங்கலத்துப் படகோட்டி இங்கு வந்து அந்தச் செய்தியைச் சொன்னான். கொள்ளைபோன செய்தியோடு வசந்த மண்டபத்திலிருந்த துறவியைக் காணவில்லை என்றும் அன்று பகலில் அவரை யாரோ தேடி வந்திருந்ததாகவும் அவன் கூறினான். நீங்கள் எல்லோரும் கொள்ளை போயிற்று என்ற அளவிலேயே அதிர்ச்சியடைந்து அதையடுத்து அவன் கூறிய குறிப்புகளை ஊன்றிக் கவனிக்கவில்லை. வசந்த மண்டபத்தில் தங்கியிருந்த துறவிதான் தங்கள் புதல்வர் குமார பாண்டியர் என்பதை முன்பே தங்களிடம் குறிப்பிட்டுள்ளேன்.”

மகாராணி வானவன்மாதேவி எதுவும் சொல்லத் தோன்றாமல் அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். –

“தேவி! கொள்ளை போன செய்தி வேண்டுமானால் என் முன்னெச்சரிக்கையும் மீறி எங்கும் பரவியிருக்கலாம். ஆனால் அதைச் செய்தவர் குமார பாண்டியர்தான் என்பது இப்போதைக்கு என்னையும், தங்களையும் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க முடியாது. ஒருவேளை என்னுடைய அந்தரங்க ஒற்றனான நாராயணன் சேந்தனுக்கும் தளபதிக்கும் சிறிது சந்தேகம் இருக்கலாம். வெளிப்படையாக இன்னார்தான் என்று அவர்களுக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை.

‘மகாமண்டலேசுவரரே! குமார பாண்டின் எந்த நோக்கத்தோடு இதைச் செய்தானோ? ஆனால் ‘அவன்தான் இதைச் செய்தான் என்ற இந்தச் செய்தி வெளியே பரவினால் பொதுமக்களிடையே அவனைப்பற்றி என்னென்ன இழிவான பேச்சுக்களெல்லாமோ பேசிவிடுவார்கள். செயலைக்கொண்டு மனிதனை அளக்கிறவர்களே எங்கும் நிறைந்துள்ள உலகம் இது. எண்ணங்களையும் மனப்போக்கையும் மதிப்பிட்டுப் பார்க்க மாட்டார்களே! இதுவும் என் போதாத காலந்தான்!” மகாராணியின் குரல் தழுதழுத்தது.

“தங்களுக்கு அந்தப் பயம் தேவையில்லை : குமார பாண்டியரின் பெயருக்கு எந்தவிதமான களங்கமும் ஏற்படாமல் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு என்னைச் சேர்ந்தது:”

“மகாமண்டலேசுவரரே! உங்களுக்குத் தெரியாததில்லை. இவ்வளவு துன்பங்களையும், சோதனைகளையும் தாங்கிக் கொண்டு நான் வாழ்ந்து கொண்டிருப்பதெல்லாம் அவனை நம்பித்தான். மறுபடியும் அவன் முகத்தைப் பார்க்க வேண்டும். அவனை இந்த நாட்டில் அரசனாக உலாவச் செய்யவேண்டும். என் மகன் காலத்தில் பாண்டிய அரச மரபு இருண்டு அழிந்தது என்ற பழிமொழி எதிர்காலத்தில் வந்து விடக்கூடாதே என்பதுதான் என் கவலை. ஐயோ, இந்தப் பிள்ளை இப்படி என்னென்னவோ செய்யத் தகாததைச் செய்துவிட்டு நெருங்கி வராமல் விலகி ஓடிக்கொண்டிருக்கிறானே?”

பேசிக்கொண்டே வந்த மகாராணி மெல்லிய விசும்பலோடு பேச்சை நிறுத்தினார். கண்களில் கண்ணிர் துளிர்த்துவிட்டது. முகத்திலிருந்த கலவரத்தைப் பார்த்தபோது வாய்விட்டு அழுதுவிடுவாரோ என்று மகாமண்டலேசுவரர் பயந்தார். அந்தப் பெருந்தேவி உள்ளங் குமுறி அழுத காட்சியைப் பராந்தக பாண்டியர் அமர பதவி அடைந்தபோது ஒரு முறைதான் மகாமண்டலேசுவரர் பார்த்திருக்கிறார். “இந்த அரசப் பெருங்குலத்து அன்னையை எதிர் காலத்தில் இனி என்றும் அழவிடக் கூடாது” என்று அப்போது தம் பொறுப்புடன் எண்ணி வைத்திருந்தார் மகாமண்டலேசுவரர்.

‘’தேவி! இதென்ன ? இப்படித் தாங்களே உணர்ச்சிவசப்படலாமா? யாருடைய கண்ணிரையும் எங்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியும்! ஆனால் மகாராணியாகிய தாங்களே கண்ணிர் சிந்தினால் என்ன செய்வது?”

“கண்ணிர் சிந்தாமல் வேறென்ன செய்வது? வடக்கு எல்லையில் ‘போர் இதோ வந்துவிட்டது’ என்கிறார்கள். இராசசிம்மன் வருவான் என்று நம்பிக் கொண்டிருந்தேன். அவனோ தன்னாடு போகாமல் இந்த அரசுரிமைப் பொருள்களையும் எடுத்துக்கொண்டு அசட்டுத்தனமாக என்னென்னவோ செய்துவிட்டுப் போயிருக்கிறான். எனக்கு ஏது நிம்மதி? என் தாய் கன்னியாகுமரி அன்னையை அடிக்கடி வழிபட்டு என் துயரங்களை மறக்க முயலலாம் என்றால் நான் வெளியில் புறப்படுவதே என் உயிருக்கு ஆபத்தாக இருக்கிறது.”

“கவலைகளையெல்லாம் எனக்கு விட்டுவிடுங்கள் ! அவற்றுக்காகவே நான் இருக்கிறேன். தங்களைப் போன்றவர்களுக்கு அதிகக் கவலைகள் இருந்தால் நிம்மதி இராது. என்னைப் போன்றவனுக்கு அதிகக் கவலைகள் சூழும்போது தான் சிந்தனை நிம்மதியாகத் திட்டமிடும். உங்கள் மனம் குழம்பியிருக்கிறது. இப்போது உங்களுக்குத் தனிமை தேவை. நான் பின்பு வந்து சந்திக்கிறேன்.”

மகாமண்டலேசுவரர் அங்கிருந்து புறப்பட்டுவிட்டார். துயரம் குமுறிக்கொண்டு வரும்போது, மிகவும் வேண்டிய மனிதர் எதிரில் இருந்தாலே அழவேண்டும் போலத் தோன்றும். அழுது தணித்துக் கொள்ளவும் துணிவு இருக்காது, தனிமையில் விட்டுவிட்டால் ஒருவாறு தணியும் என்று கருதியே அவர் அங்கிருந்து சென்றார். அவர் சென்ற பின்பும் நெடுநேரமாக மகாராணி அமைதியாகக் கண்ணிர் வடித்தவாறு அதே இடத்தில் வீற்றிருந்தார். அமைதியோ, நிம்மதியோ ஏற்படுகிற வழியில்லை. கவலைகளை மறக்க, அல்லது மறைக்க ஏதாவது புதிய பேச்சு வேண்டியிருந்தது. கோட்டாற்றிலுள்ள சமணப் பள்ளியில் குணவீர பண்டிதர், கமலவாகன பண்டிதர் என்று இரண்டு சமணத் துறவிகள் இருந்தனர். அவர்கள் எப்போதாவது சில சந்தர்ப்பங்களில் மகாராணியாரைச் சந்திக்க வருவதுண்டு. வந்தால் நீண்ட நேரம் சமய சம்பந்தமான தத்துவங்களைப் பேசிவிட்டுப் போவார்கள். அவர்கள் வந்து பேசிவிட்டுச் சென்றபின்பு அதைக்கேட்டுக் கொண்டிருந்தவர்கள் மனத்தில் அழுக்கைத் துடைத்து வாசனை பூசிய மாதிரி ஒரு சாந்தி, ஒரு நம்பிக்கை, வாழ்க்கை முழுவதும் நல்ல விளையாட்டு என்ற பயமற்ற ஒரு எண்ணம் ஏற்படும். இந்த மாதிரி நாநலம் படைத்தவர்கள் உலகில் அத்தி பூத்தாற்போலத்தான் அகப்படுவார்கள். வாழ்க்கையில் அவநம்பிக்கை ஏற்படும்படி பேசி விட்டுச் செல்பவர்களே பெரும்பாலோர்,

பேச்சைப் பொறுத்தமட்டில் மகாராணிக்கு எடை போட்டுப்பார்த்த அனுபவம் உண்டு. இடையாற்றுமங்கலம் நம்பி பேசிவிட்டுப் போனால் கேட்டுக்கொண்டிருந்தவர் மனத்தில் அவரை எண்ணிப் பிரமிக்கும்படி செய்துவிட்டுப் போவார். தளபதி வல்லாளதேவன் வெடிப்பாகப் பேசி உணர்ச்சியூட்டுவான். அதங்கோட்டாசிரியர், பவழக்கனிவாயர் போன்ற பண்டிதர்கள் காரண காரிய ரீதியாக அழுத்தம்படப் பேசுவர். நாராயணன் சேந்தன் குதர்க்கமும் சிரிப்பும் உண்டாக்குவான்.

ஆனால் கோட்டாற்றுச் சமணத் துறவியின்பேச்சு இவற்றோடு மாறுபட்டது. வாடும் பயிருக்குப் பருவமறிந்து பெய்து தழைக்கச்செய்யும் மழைபோன்றது அது. சில துயரமான நேரங்களில் மகாராணியே சிவிகையை அனுப்பி அவரை வரவழைப்பதுண்டு. சமீபத்தில் சிறிது காலமாக அந்தத் துறவி யாத்திரை போயிருந்ததால் அரண்மனைப் பக்கம் வரவில்லை. இரண்டு மூன்று நாட்களுக்குமுன் அவர் திரும்பி வந்திருப்பதாகக் கூறினார்கள். நிம்மதியற்ற அந்தச் சூழ்நிலையில் அந்தத் துறவியை வரவழைத்துப் பேசினால் மனத் தெளிவு ஏற்படுமென்று அவருக்குத் தோன்றியது. உடனே சிவிகையை எடுத்துப் போய் அவரையும் முடிந்தால் மற்றொருவரையும் அழைத்துவருவாறு ஆட்களை அனுப்பினார். சில நாழிகைகளில் அவர் வந்து சேரும்வரை தனிமையும், கவலைகளும் மகாராணியாரின் மனத்தை வாட்டி எடுத்து விட்டன. இரண்டு துறவிகளுமே வந்திருந்தார்கள். ஒளி தவழும் தூய முகமும், முண்டிதமாக்கபட்டு வழுவழுவென்று மின்னும் தலையுமாக அருளொளி கனியும் அந்தத் துறவிகளின் தோற்றத்தைப் பார்த்தபோதே நிம்மதி வந்துவிட்டது போலிருந்தது. மகாராணி எதிர்கொண்டு எழுந்து சென்று வணங்கி அவர்களை வரவேற்றார். ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டு தன் யாத்திரை அனுபவங்களைச் சிறிது நேரம் கூறினார்கள் அவர்கள் இருவரும். அந்தச் சமயத்தில் அதங்கோட்டாசிரியரும், பவழக்கனிவாயரும் வேறு அங்கு வந்து சேர்ந்தார்கள். சரியான அவை கூடி விட்டது!’ என்று நினைத்து மனநிறைவு பெற்றார் மகாராணி! ‘சுவாமி! கவலைகளை உணர்ந்து கொண்டு கலங்கும் இயல்பு முதன் முதலாக எப்போது மனித மனத்துக்கு உண்டாயிற்று’ என்று ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டுக் குணவீர பண்டிதருடைய முகத்தை நிமிர்ந்து பார்த்தார் மகாராணி.

குணவீர பண்டிதர் தம்மோடு வந்திருந்த கமல வாகனரைப் பார்த்துச் சிரித்தார். பின்பு கூறினார்.

“இன்பங்களை உணர்ந்து மகிழும் இயல்பு ஏற்பட்ட போது!”

மகாராணி இதற்குப் பதில் சொல்வதற்குள் அதங்கோட்டாசிரியரும், பவழக்கனிவாயரும் குறுக்குக் கேள்வி கேட்டார்கள். பேச்சு அவர்கள் நால்வ்ருக்குள்ளேயே விவாதம் போலச் சுழன்றது. மகாராணி அதன் நயத்தை விலகியிருந்து அனுபவிக்கலானார்.

“சமணர்கள் எப்போதுமே நிலையாமையைத்தான் வற்புறுத்துவார்கள்”—அதங்கோட்டாசிரியர்பிரான் இடையிலே குறுக்கிட்டார்.

“நிலையாமை ஒன்றே நிலைப்பது, நிலைப்பதாகத் தோன்றுவதெல்லாம் நிலையாதது, என்று தானே சமணர்களின் நூல்கள் எல்லாம் கூறுகின்றன?” என்றார் பவழக்கனிவாயர்.

“நீங்கள் எங்களுடைய கொள்கையைத் திரித்துக் கூறுகிறீர்கள். நிலையாமையைக் குறித்து எல்லாச் சமயங்களுமே உடன்படுகின்றன. எங்கள் நூல்கள் உண்மையை ஒளிக்காமல் சொல்லும்போது கசப்பாக இருக்கிறது. திருக்குறளும் நிலையாமையைச் சொல்கிறது, எங்கள் சமயத்தார் எழுதிய நாலடியாரும் நிலையாமையைச் சொல்லுகிறது. திருக்குறள், ‘வாழ்க்கை நிலையாதது; செல்வம் நிலையாதது; இளமை நிலையாதது; ஆனாலும் வாழ்ந்து பார். மனைவி மக்களோடு அறம் பிறழாமல் வாழு. புகழ் எய்து என்று நம்பிக்கையூட்டுகிறது. நாங்கள் சாதாரண மனித இயல்பை மனத்தில் கொண்டு பயமுறுத்திச் சொல்லியிருக்கிறோம்” என்றார் குணவீர பண்டிதர். –

“எங்கே? நிலையாமையைப் பற்றி ஒரு பாட்டுச் சொல்லுங்கள்!” என்று அவரைக் கேட்டார், அதுவரையில் பேசாமல் இருந்த மகாராணி, –

“இளமையும் நிலையாவால் இன்பமும் நின்றவல்ல
வளமையுங் அஃதேயால் வைகலும் துன்பவெள்ளம்
உளவென நினையாதே செல்கதிக் கென்று மென்றும் விளைநிலம் உழுவார்போல் வித்துநீர் செய்துகொள்மின்!”

குணவீர பண்டிதரின் குரல் கணிரென்று ஒலித்து ஒய்ந்தது.

“இதுதான் எங்கள் தத்துவம், இன்றைக்கு இருப்பதை என்றைக்கும் இருக்குமென்று எண்ணி நாங்கள் நம்பி ஏமாறுவதில்லை. என்றைக்கும் இருக்கும் எதுவோ அதைப் பயிர் செய்ய முயலுகிறோம்.”—அவரே விளக்கினார்.

“தமிழ் இலக்கியத்திலுள்ள பெரும்பாலான சமணப்பாடல்கள் இதைத்தான் வற்புறுத்துகின்றன” என்று அதங்கோட்டாசிரியர் கூறினார்.

“சித்திரக்காரனுக்கு ஏழு வர்ணங்கள் மேலும் ஒரே மாதிரி அன்புதான். உலகத்திலுள்ள இன்பம், துன்பம் எல்லா உணர்ச்சிகளையும் நாங்கள் பிரித்துப் பார்ப்பதில்லை. எல்லாமே நிலையாதவை என்ற உணர்வில் அடங்கியவை. நிலையாதவற்றை வெறுக்கவில்லை. அனுதாபப்படுகிறோம். ‘எவ்வளவு நாட்களானாலும் வாடாது’ என்ற பேதமை நினைவுடன் கையில் பூச்செண்டை ஏந்திக்கொண்டிருக்கும் குழந்தை மாதிரி உலகம் இருக்கிறது. நாங்கள் தூர இருந்து அந்தக் குழந்தையைப் பார்த்து அனுதாபப்படும் வயதானவர் போலிருக்கிறோம். காரணம்? ‘அந்தப் பூச்செண்டு வாடிவிடும்’ என்ற உண்மை எங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கின்றது!” என்றார் குணவீரர்.

“விவாத முறைக்கு உங்கள் பேச்சு ஏற்கும்! ஆனால் நடை முறைக்கு ஒத்துவராதே” என்றார் பவழக்கனிவாயர்.

“நடைமுறையைப் பற்றிக் கவலைப்படுகிறவர்கள் அல்லது பயப்படுகிறவர்கள் எந்த இலட்சியங்களையும் நிறுவ முடியாது” என்று பவழக்கனிவாயருக்குக் கமலவாகனர் பதில் கொடுத்தார். விவாதம் கருத்துச் செறிவுள்ளதாக இருந்தது. அந்த உரையாடல் வளர்ந்துகொண்டே போனவிதத்தில் மகாராணிக்கு ஆறுதல் ஏற்பட்டிருந்தது.

நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுக் குணவீர பண்டிதர் புறப்பட எழுந்தார். எல்லாருமே மரியாதையாக எழுந்து நின்றனர்.

“சுவாமி! ஒரு சிறு விண்ணப்பம்.”

“என்ன ?”

“தாங்கள் சற்றுமுன் பாடினர்களே; அந்தப் பாடலை ஓர் ஒலையில் எழுதிக் கொடுத்துவிட்டுப் போக இயலுமோ?” இருந்தாற் போலிருந்து நினைத்துக்கொண்டு கேட்பவர் போலக் கேட்டார் மகாராணி வானவன்மாதேவி.

“ஆகா! ஒலையும் எழுத்தாணியும் கொண்டு வரச் சொல்லுங்கள். இப்போதே எழுதிக்கொடுத்துவிட்டுப் போகிறேன்” என்றார் அவர் ஒலையும் எழுத்தாணியும் வந்தன. குணவீரர் வாயால் சொல்ல, கமலவாகனர் ஒலையில் எழுதினார். எழுதி முடித்ததும் மகாராணி அதைப் பயபக்தியோடு வாங்கிக் கொண்டார். அந்தப் பாட்டுக்கு அவ்வளவு மரியாதை கொடுத்து மகாராணியார் வாங்கிக் கொண்டதைக் கண்டு அதங்கோட்டாசிரியரும், பவழக்கனிவாயரும் ஆச்சரியத்தோடு சிறிது அசூயையும் அடைந்தனர்.

Previous articleRead Pandima Devi Part 2 Ch3 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Pandima Devi Part 2 Ch5 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here