Home Na Parthasarathy Read Pandima Devi Part 2 Ch5 | Pandima Devi Na. Parthasarathy |...

Read Pandima Devi Part 2 Ch5 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in

70
0
Read Pandima Devi Part 2 Ch5 Pandima Devi Na.Parthasarathy, Read Pandima Devi Online Free, Pandima Devi PDF, Download Pandima Devi novel, Pandima Devi book
Read Pandima Devi Part 2 Ch5|Na.Parthasarathy| TamilNovel.in

Read Pandima Devi Part 2 Ch5 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in

பாண்டிமாதேவி – நா. பார்த்தசாரதி

இரண்டாம் பாகம், அத்தியாயம் 5 : மானகவசனுக்கு நேர்ந்த துன்பம்

Read Pandima Devi Part 2 Ch5|Na.Parthasarathy| TamilNovel.i

“தென்பாண்டி நாட்டுப் படைகள் விரைவில் வடக்கு எல்லைக்கு அனுப்பப்படும். அதுவ்ரையில் எல்லைப் பாதுகாப்பு ஏற்பாடுகளை நீங்களே சமாளித்துப் பாதுகாத்துக்கெள்ள வேண்டியது” என்ற கருத்தடங்கிய திருமுகத்தோடு மானகவசனை அன்று காலையிலேயே அவசரமாகக் கர வந்தபுரத்துக்குத் திருப்பி அனுப்பிவிட்டார் மகாமண்டலேசுவரர். மானகவசனும் தாமதமின்றி உடனே புறப்பட்டுவிட்டான். வருகிறபோது வந்ததுபோல் முன்சிறைப்பாதை வழியே சென்றான். சரியாக நடுப்பகல் நேரத்துக்கு முன்சிறை போய்விட முடியும். குதிரையை விரைவாகச் செலுத்தினால் அதற்கும் முன்னால் கூடப் போய்விடலாம். அந்த நேரத்துக்கு அங்கே போவதனால் ஒரு நன்மையும் இருக்கிறது. பகல் உணவை முன் சிறை அறக்கோட்டத்தில் அந்த வேடிக்கைத் தம்பதிகளின் உபசரிப்புக்கு இடையே சுவை நிறைந்ததாக முடித்துக் கொள்ளலாம். கணவனும், மனைவியுமாக ஒருவருக்கொருவர் கேலி செய்துகொண்டே அறக்கோட்டத்துக்கு வந்து செல்வோருக்கெல்லாம் அறுசுவை உணவோடு நகைச்சுவையும் அளிக்கும் அண்டராதித்தனையும், கோதையையும் நினைக்கும்போது அப்போதே அவர்களைக் கண்டுவிட்டது போன்றிருந்தது அவனுக்கு. கரவந்தபுரத்திலிருந்து முக்கியமான திருமுகத்தை அரண்மனைக்குக் கொண்டுவரும் அவசரத்தில் ஒரே ஒரு வேளை தான் அந்த அறக்கேட்டத்தில் தங்கிச் சாப்பிட்டிருக்கிறான் அவன். இருந்தும் அந்த ஒருவேளைப் பழக்கத்துக்குள்ளே அவர்கள் அவனுடைய மனத்தில் ஆழப் பதிந்திருந்தார்கள்.

‘குழந்தை குட்டிகள் இல்லாமல் வயது மூத்த அத்தத் தம்பதிகள் அதை ஒரு குறைவாக எண்ணிக் கவலைப் படுதாகவே தெரியவில்லை. அதனால்தானோ என்னவோ வருகிறவர்களையெல்லாம் குழந்தைகளாக நினைத்து அன்பு செலுத்த அவர்களால் முடிகிறது. அறக்கோட்டங்களும், அட்டிற்சாலைகளும் நடத்தினால் மட்டும் போதுமா? உலகம் முழுவதுமே சிரிப்பதற்கும், அன்பு செய்வதற்கும், உபசரிப்பதற்கும் ஏற்றது என்று எண்ணும் அண்டராதித்தனும், கோதையும் போன்ற ஆட்கள்தான் அறக்கோட்டத்தை அர்த்தமுள்ள தாக்குகிறார்கள். சேர, சோழ நாடுகளில் எத்தனை அறச்சாலைகள் இருந்தால் என்ன ? அங்கெல்லாம அண்டராதித்தனும், கோதையும் இல்லாதவரை அவை அறச்சாலைகளாக முடியுமா? சிரிப்பதற்கு ஆளில்லாத அறச்சாலைகள் அவை! கடல்கடந்தும், தரை வழியாகவும் எவ்வளவு தொலைவிலிருந்து யாத்திரீகர்கள் வந்தாலும் அவர்களையெல்லாம் அண்ணன் தம்பிகளாக, உடன் பிறந்தோராக எண்ணும் கோதையும் அண்டராதித்தனும்தான் பார்க்கப்போனால் இந்நாட்டின் உண்மையான பிரமுகர்கள்! ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்ற தத்துவத்தை மெய்ப்பித்துக்கொண்டு வருபவர்கள் அவர்கள்தாமே?—அன்று ஏனோ, அந்தத் துரதன் மனத்தில் முன்சிறை மணியகாரனும், அவன் மனைவியுமே நிறைந்திருந்தார்கள். அவர்களைப்பற்றியே அவன் அதிகமாகச் சிந்தித்தான். தான் கொண்டுபோகும் அரசாங்கச் செய்தி, அதன் அவசரம் ஆகியவை கூட அவ்வளவாக அவனுடைய மனத்தைக் கவர்ந்துவிடவில்லை.

ஆனால் நண்பகலில் அவன் முன்சிறை அறக் கோட்டத்தை அடைந்தபோது பெரிதும் ஏமாற்றமடைந்தான். அங்கே அண்டராதித்த வைணவனும் கோதையும் இல்லை. “கொற்கை முத்துக்குளி விழாவைப் பார்ப்பதற்காகப் போயிருக்கிறார்கள்” என்று அறங்கோட்டத்துப் பணியாட்கள் கூறினார்கள். தூதனுக்கு அன்றும் அங்கே பகல் உணவு கிடைத்தது. ஆனால் அண்டராதித்தனும், கோதையும் பக்கத்திலிருந்து சிரிக்கச் சிரிக்கப் பேசி உபசாரம் செய்து போடுகிற சாப்பாடு மாதிரி இல்லை அது! அங்கு அதிக நேரம் தங்கக்கூட விருப்பமில்லாமல் உடனே புறப்பட்டு விட்டான் அவன். கொற்கையிலிருந்து திரும்பினாலும் தான். செல்லுகிற அதே சாலை வழியாகத்தான் திரும்பவேண்டும் என்று அவனுக்குத் தெரியும். ஆனால் முத்துக்குளி விழாவைப் பார்க்கப்போகிறவர்கள் அவ்வளவு அவசரமாகத் திரும்பமாட்டார்கள் என்று தோன்றியதனால் அவர்களை வழியில் எங்கேயாவது எதிரே சந்திக்கலாம் என்ற நம்பிக்கையை அவன் கைவிட்டுவிட்டான்.

அதே நிலையில் இடைவழியில் எங்கும் தங்காமல் பயணத்தைத் தொடர்ந்தால், அன்று இரவு நடுச்சாமத்துக்குள்ளாக ஒருவாறு அவன் கரவந்தபுரத்தை அடைந்துவிட முடியும், வெயிலின் மிகுதியையும் வானில் அங்கொன்றும், இங்கொன்றுமாக மேகக் கற்பாறைகள் மிதப்பதையும் கண்டு மழை வந்து நடுவே பிரயாணத்தைத் தடைப்படுத்திவிடாமல் இருக்க வேண்டுமே என்று கவலையாயிருந்தது அவனுக்கு ஏதாவது ஊர்ப்புறத்தை ஒட்டிச் சென்று கொண்டிருக்கும் போது மழை வந்தால் குதிரையையும் கட்டிவிட்டு எங்கேயாவது தங்கிக் கொள்ளலாம். இல்லாவிட்டால் தொல்லைதான். முன்சிறையிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவுவரை அந்தச் சாலையில் ஊர்கள் இடையிடையே வரும். அதன்பின் கரவந்தபுரம்வரை மலைச்சரிவிலும், அடர்ந்த காடுகளை வகிர்ந்துகொண்டு செல்கிறது சாலை, எதற்கும் கொஞ்சம் வேகமாகப் போவதே நல்லது என்ற எண்ணத்துடன் குதிரையை விரைவாகச் செலுத்திக் கொண்டிருந்தான் அவன். சாலையில் எந்த இடங்களில் சிறுசிறு ஊர்கள் இருந்தனவோ, அங்கெல்லாம்கூட அதிகமான கலகலப்பு இல்லை. எல்லோரும் முத்துக்குளி விழாவிற்குச் சென்றிருந்தார்களாதலால் ஊர்கள் அமைதியாக இருந்தன. அனேகமாக அந்தப் பெருஞ்சாலையில் சிவிகைகள், யானைகள், குதிரைகள், கால்நடையாகச் செல்வோர் என்று போக்குவரவு இருந்துகொண்டே இருக்கும். அன்றைக்கோ அதுவும் குன்றியிருந்தது. அவனுடைய குதிரைதான் சாலையை ஏகபோகமாக ஆக்கிரமித்துச் சுதந்திரமாகச் சென்று கொண்டிருந்தது. மாலையில் சிறு தூறல் இருந்தது. பெருமழையாகப் பெய்யாததால் அதனால் அவனுக்கு அதிக இடையூறு இல்லை. எங்கும் நிற்காமல் சென்றுகொண்டிருந்தான். ஆனால் இருட்டுகிற சமயத்துக்குச் சாலை மலைச்சரிவை ஒட்டிச்சென்று கொண்டிருந்தபோது மழை வலுவாகப் பிடித்துக் கொண்டுவிட்டது. மின்னலும் இடியுமாக மேகம் இருட்டிக்கொண்டு இயற்கையான இருளோடு கலந்து கருமைக்கு அழுத்தம் கொடுத்திருந்தது. வானப்பெருங்குளத்தின் வடிகாற்கண்களை யாரோ உடைத்து விட்டுவிட்ட மாதிரி மழை கொட்டியது. இருளில் வழி அறிவது கூட வரவரக் கடினமாகிக்கொண்டிருந்தது. ஏதாவது ஒரு பாழ்மண்டபம் வழியில் அகப்பட்டால்கூடப் பிரயாணத்தைத் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டு தங்கிவிடலாமென்று அவனுக்குத் தோன்றியது. பெருமழைக் காலங்களில் இடி அதிகமாக இருக்கும்போது காட்டு மரங்களின் கீழே தங்குவது நல்லதல்லவே என்ற அச்சமும் அவனுக்கு இருந்தது.

அந்தச் சமயத்தில் சமய சஞ்சீவி போல் சாலையோர்த்தில் ஒரு பாழ்மண்டபம் தெரிந்தது. அதில் காட்டுச் சுள்ளிகளால் நெருப்பு மூட்டிக் குளிர்காய்ந்து கொண்டிருந்தார்கள் சிலர். அந்த வெளிச்சம் இல்லையானால் அப்போதிருந்த இருட்டில் அந்த மண்டபம் அங்கிருப்பதோ, அதில் ஆட்கள் உட்கார்ந்திருப்பதோ அவன் கட்புலனுக்குத் தெரிந்திருக்கவே முடியாது.

அவ்வளவு மழையோசையிலும் அவனுடைய குதிரைக் குளம்பொலி அவர்களுக்குக் கேட்டிருக்கவேண்டும். எல்லோரும் சாலைப்பக்கமாகத் திரும்பிப்பார்த்ததை மானகவசன் கண்டான். குதிரை நனையாமல் மண்டபத்தின் முன் புறத் தூணில் கட்டிவிட்டு, உடைகளைப் பிழிந்துவிட்டுக் கொண்டான். உடல் தெப்பமாக நனைந்திருந்தது. மகாமண்டலேசுவரரின் திருமுக ஒலை இடுப்புக்குள் பத்திரமாக இருந்தது. “அந்தக் காலத்தில் இந்தப் பாழ்மண்டபத்தைக் கட்டிய வள்ளல் யாரென்று தெரிந்தால் இப்போது அவனுக்கு நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு நல்ல நினைவு மண்டபமே கட்டி வைத்துவிடலாம்” என்று சிரிப்புடன் சொல்லிக்கொண்டே அவர்களுக்குப் பக்கத்தில் தானும் போய்க் குளிர் காய்வதற்கு உட்கார்ந்தான் மானகவசன். அவன் சிரிப்போ, பேச்சோ அவர்களிடையே பதில் சிரிப்புக்களையோ, பேச்சுக்களையோ உண்டாக்கவில்லை. தங்களுக்குள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். மானகவசன் அதைப் பொருட்படுத்தா விட்டாலும் மனித இயல்பை மீறியதாக இருந்தது அவர்கள் நடந்துகொண்ட விதம். இந்த மாதிரி சமயத்தில் “நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று விசாரித்து அறிய முயல்வதுதான் சாதாரண மனித இயற்கை. அதற்குக் கூட அவர்கள் முயலவில்லை. ஆனால் மானகவசன் அவர்களைப் போல் ஊமையாக இருந்துவிடவில்லை.

“ஐயா! நீங்களெல்லாம் யார்? கொற்கை முத்துக்குளி விழா பார்த்துவிட்டுத் திரும்பி வரும்போது மழையில் அகப்பட்டுக் கொண்டீர்களா? அடடா! எதற்கு இவ்வளவு அவசரமாகத் திரும்பினர்கள்? நாளைக்குக் காலையில் சாவகாசமாகத் திரும்பியிருக்கக்கூடாதோ?” என்று அன்போடு விசாரித்தான்.

அவர்கள் இந்த விசாரிப்புக்கும் பதில் சொல்லவில்லை. தங்களுக்குள் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள். மானகவசனுக்கு முகம் சுண்டிப்போயிற்று, பேசுவதை நிறுத்திக்கொண்டான். வேற்று முகம், புது ஆட்கள் என்ற வேறுபாடின்றிப் பேசிப் பழகும் அண்டராதித்தன் தம்பதிகள் அவன் நினைவில் மறுபடியும் தோன்றினார்கள். ‘மனிதனுக்கு மனிதன் பேசிப் பழகிக்கொள்ளத்தானே மொழி உணர்ச்சிகள் எல்லாம் இருக்கின்றன? அதற்குக்கூடத் தயங்கும் சில பிரகிருதிகள் இப்படியும் இருக்கின்றனவே’— என்று எண்ணி வியந்தான்.அவன். ஒன்று அவர்கள் ஊமைகளாகயிருக்க வேண்டும். அல்லது அமிழ்தினும் இனிய தமிழ் மொழியே தெரியாதவர்களாயிருக்கவேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது.

மழையும் விடுகிறபாடாயில்லை. நேரமாகிக் கொண்டிருந்தது. அந்தப் பாழ் மண்டபத்திலேயே எல்லோரும் மூலைக்கு மூலை சுருண்டு படுத்தனர். குளிர் காய்வதற்காக மூட்டியிருந்த தீ அணைந்து மண்டபத்தில் இருள் சூழ்ந்தது. படுத்த சிறிது நேரத்துக்கெல்லாம் மானகவசன் அயர்ந்து தூங்கிவிட்டான்.

நல்ல தூக்கக்கிறக்கத்தில் யாரோ உடம்பைத் தொட்டு அமுக்குகிற மாதிரி இருந்தது. உடம்பைத் தொட்டு அமுக்கி இடுப்பைக் கட்டுவதுபோல் உணரவே துள்ளி எழுந்தான். அவனால் எழுந்திருக்க முடியவில்லை. ஏதோ சொல்ல முயன்றான், வார்த்தைகள் வரவில்லை. வாய் உளறியது. தன்னை யாரோ பலமாகப் பிடித்துக்கொண்டு, வாயையும் மூடியிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தான். அடுத்த கணம் முதுகிலும், தலையிலும் பலமான அடிகள் விழுந்தன. அவனுக்குத் தன் நினைவு தவறியது. அப்படியே சுருண்டு விழுந்தான். அதன் பின்னர் பாழ்மண்டபத்தில் நடந்ததொன்றும் அவனுக்குத் தெரியாது.

பொழுது விடிந்து கதிரவன் ஒளி மேலேறிக் கதிர்கள் மண்டபத்துக்குள் விழுந்தபோது வலி பொறுக்க முடியாமல் முனகிக்கொண்டே மெல்ல எழுந்திருக்க முயன்றான் அவன். எழுந்து நடக்கமுடியவில்லை. மூட்டுக்கு மூட்டு வலித்தது. அந்த நேரத்தில் தெய்வம் அவனுக்கு ஒர் அருமையான உதவியைக் கொண்டுவந்து சேர்த்தது. இடுப்பிலிருந்த திருமுகமும் மண்டபத்துத் தூணில் கட்டியிருந்த குதிரையும் அவனிட மிருந்து பறிபோயின. கொற்கைத் திருவிழாவுக்குப் போயிருந்த அண்டராதித்தனும், கோதையும் அந்தப் பாதையாகத் திரும்பி வந்தார்கள். அவன் இறைந்து கூச்சலிட்டான்.

‘யாரைப்பற்றி நாம் அதிகம் சிந்திக்கிறோமோ, அவர்களைத் தெய்வம் நம் பக்கத்தில் துணையாகக்கொண்டு வந்து சேர்க்கின்றதென்பது எவ்வளவு பெரிய உண்மை?’ என்று அவர்களை அந்தப் பாதையில் கண்டவுடனே எண்ணினான். அவன் மெய்சிலிர்த்தது. அவர்களை அங்கு கொண்டுவந்து சேர்த்த இறைவனை வாழ்த்தினான் மானகவசன்.

அந்தத் தம்பதிகள் அந்நிலையில் அவனை அங்கே கண்டு பதறிப்போனார்கள். நடந்ததையெல்லாம் அவர்களிடம் விவரமாகக் கூறினான் மானகவசன்.

“நாடு முழுவதுமே கெட்டுப் போய்க்கிடக்கிறது அப்பா! நல்லவன் வெளியில் இறங்கி நடக்கவே காலமில்லை இது!” என்று தொடங்கிக் கொற்கையில் நடந்த குழப்பத்தை அவனுக்குச் சொன்னார்கள்.

அடி, உதை பட்டது கூட அவனை வருத்தத்துக் குள்ளாக்கவில்லை. முக்கியமான அரசாங்கத் திருமுகத்தைத் திருட்டுக் கொடுத்துவிட்டோமே, என்ன ஆகுமோ—என்ன ஆகுமோ? என்று எண்ணி அஞ்சினான் அவன்.

“பரவாயில்லை அப்பா? நீ என்ன செய்வாய், உன்னை முதலில் ஊருக்கு அழைத்துப் போக ஏற்பாடு செய்கிறேன்” என்று கோதையை அவனருகில் துணை வைத்துவிட்டுத் தான் மட்டும் பக்கத்து ஊர்வரை நடந்துபோய் ஒரு சிவிகையும் சுமக்கும் ஆட்களும் தயார் செய்துகொண்டு வந்தான் அண்டராதித்த வைணவன். சிவிகை அன்று மாலை பொழுது சாயும் நேரத்துக்கு அவனைக் கரவந்தபுரத்துக்குக் கொண்டு போய்ச் சேர்த்தது.

Previous articleRead Pandima Devi Part 2 Ch4 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Pandima Devi Part 2 Ch6 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here