Home Na Parthasarathy Read Pandima Devi Part 2 Ch6 | Pandima Devi Na. Parthasarathy |...

Read Pandima Devi Part 2 Ch6 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in

76
0
Read Pandima Devi Part 2 Ch6 Pandima Devi Na.Parthasarathy, Read Pandima Devi Online Free, Pandima Devi PDF, Download Pandima Devi novel, Pandima Devi book
Read Pandima Devi Part 2 Ch6|Na.Parthasarathy| TamilNovel.in

Read Pandima Devi Part 2 Ch6 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in

பாண்டிமாதேவி – நா. பார்த்தசாரதி

இரண்டாம் பாகம், அத்தியாயம் 6 : தமையனும் தங்கையும்

Read Pandima Devi Part 2 Ch6|Na.Parthasarathy| TamilNovel.in

தென்பாண்டி நாட்டின் வீரத்தளபதி வல்லாளதேவன் இந்தக் கதையின் தொடக்கத்திலிருந்து இதுவரையில் ஒய்வில்லாமல் அலைந்துகொண்டுதான் இருந்தான். அவனுக்கும் இவன் சிந்தனைக்கும் சில நாழிகைப் பொழுதாவது அமைதி கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான். தன்னையும் தன்னுடையவற்றையும்விடத் தன் கடமைகளைப் பெரிதாகக் கருதும் அந்த உண்மை வீரனுக்கு உடன்பிறந்த தங்கையைச் சந்தித்து மனம் விட்டுச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பதற்குக் கூட இதுவரை ஒழியவில்லை.

இப்போது கூட அவனுக்கு ஒழியாதுதான். கோட்டாற்றுப் படைத் தளத்துக்குப் போய் உடனே படை ஏற்பாடுகளைக் கவனிக்குமாறு அவனுக்கு அவசரக்கட்டளை இட்டிருந்தார் மகாமண்டலேசுவரர். அவருடைய கட்டளையின் அவசரத்தை விட், அவசரமாகத் தன் தங்கை பகவதியையும் ஆபத்துதவிகள் தலைவன் குழைக்காதனையும் சந்திக்க வேண்டியிருந்தது அவனுக்கு.

வெளிப்படையாகச் சந்திக்க முடியாத சந்திப்பு அது. மறைமுகமாகப் பயந்து பயந்து செய்கிற காரியங்களே மகா மண்டலேசுவரருடைய கவனத்துக்கு எட்டி விடுகின்றன. வெளிப்படையாகச் செய்தால் தப்பமுடியுமா? அன்றைய நிகழ்ச்சிகளிலிருந்து இடையாற்றுமங்கலம் நம்பியைப் பற்றி அதிக முன்னெச்சரிக்கையும், கவனமும் வேண்டுமென்று அவன் தீர்மானத்துக்கு வந்திருந்தான்.

முதலில் ஆபத்துதவிகள் தலைவன் மகர நெடுங்குழைக்காதனைக் கண்டு அரண்மனைத் தோட்டத்தின் அடர்த்தியான பகுதி ஒன்றுக்குச் சென்று. பேசிக்கொண்டிருந்தான். குழைக்காதன், தளபதி அரண்மனைக்கு வருவதற்குமுன் அங்கு நடந்த சில நிகழ்ச்சிகளில் தான் கண்ட சிலவற்றை விவரமாகக் குறிப்பிட்டுச் சொன்னான்.

“நீங்கள் முன்பு கோட்டாற்றிலிருந்து என்னை அனுப்பியபோது கூறியபடி கூடியவரை மகாமண்ட லேசுவரருடைய கண்ணுக்கு அகப்படாமல்தான் இருக்க முயன்றேன். ஆனால் கடைசியில் அவர் கண்டுபிடித்து விட்டார்.”

“குழைக்காதரே! நீங்கள் நினைப்பதுபோல் அந்த மனிதரை அவ்வளவு எளிதாக ஏமாற்றிவிட முடியாது. எனக்கே தெரியும். இருந்தாலும் உங்களால் முடிகிறதா இல்லையா என்று சோதிப்பதற்காகவே அப்படிச் சொல்லி அனுப்பினேன். உங்களுக்கும், எனக்கும் இரண்டு கண்கள் இருந்தால் இரண்டின் பார்வை ஆற்றல்தான் இருக்கும். ஆனால் அவருடைய இரண்டு கண்களுக்கு இருபது கண்களின் ஆற்றல் உண்டு. அப்படி இருந்தும் சில சமயங்கள் அவரைப் பலவீனப்படுத்தி விடுகின்றன!”

‘உண்மை! கூற்றத் தலைவர்கள் கூட்டத்தின்போது அவருடைய ஆற்றலையும், பலவீனத்தையும் சேர்த்தே என்னால் காணமுடிந்தது.”

“அது இருக்கட்டும்! இப்போது நீங்கள் எப்படியாவது அந்தப்புரப் பகுதிக்குச் சென்று என்னுடைய தங்கை பகவதியை இங்கே அழைத்துவர வேண்டும்” என்றான் தளபதி.

இப்போதிருக்கிற சூழ்நிலையில் நான் அந்தப்புரத்துக்குள் நுழைந்தால் ஒரு பெரிய கலவரமே உண்டாகிவிடும். அங்கே புவனமோகினி என்று ஒரு வண்ணமகள் என்னை நினைத்து நடுங்கிக் கொண்டிருக்கிறாள். என் தலையை அந்தப்புரத்துக்குள் பார்த்துவிட்டால் வேறு வினையே வேண்டியதில்லை” என்று தொடங்கிப் புவனமோகினியின் மூலம் மகாமண்டலேசுவரர் தன்னைப்பற்றி உளவறிந்த விவரத்தைத் தளபதிக்கு விளக்கிக் கூறினான் அவன்.

“அப்படியானால் பகவதியை இப்போது இங்கே வரவழைத்துச் சந்திப்பதற்கு வேறு வழி?”

தளபதியின் கேள்விக்கு வழி சொல்ல வகையறியாமல் விழித்தான் குழைக்காதன். அவர்கள் இருவரும் தோட்டத்தில் எந்த இடத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தார்களோ, அந்த இட்மே அந்தப்புரத்துச் சுவரோரமாகத்தான் இருந்தது. மேல் மாடத்தில்தான் பகவதி, விலாசினி முதலிய பெண்கள் தங்கியிருந்தார்கள். மேன்மாடத்திலிருந்த அந்த அறை அவர்கள் நின்றிருந்த இடத்திலிருந்து நான்காள் உயரத்தில் இருந்தது. மேலே இருந்த அந்தப்புரத்து அறைகள் ஒவ்வொன்றின் நிலைக்கு மேலேயும் ஒரு சிறிய வெண்கல மணி தொங்கிக் கொண்டிருந்தது.

இருவரும் அந்த அறைகளை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே, என்ன விதமாகப் பகவதியைச் சந்திப்ப்தென்று தெரியாமல் திகைத்து நின்றனர்.

“எனக்கு ஒரு வழி தோன்றுகிறது. செய்து பார்க்கிறேன். நாம் நினைக்கிறபடி நடந்தாலும் நடக்கலாம். வேறு மாதிரி ஆகிவிட்டால் ஏமாற்றம்தான்” என்று முகம் மலர்ந்து கூறினான் மகர நெடுங்குழைக்காதன்.

“என்ன வழி அது?” தளபதியின் வினாவில் ஆவல்துள்ளி நின்றது.

“இருங்கள், இதோ செய்து பார்க்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே தலைக்கு மேலிருந்த மாமரத்தில் கைக்கெட்டுகிறாற்போலச் சரம் சரமாகத் தொங்கிக் கொண்டிருந்த மாவடுக்களில் நாலைந்தைப் பறித்தான்.

மேலே பார்த்து குறி வைத்து ஒவ்வொரு மாவடுக்களாக எறிந்தான். அவன் எறிந்த மூன்றாவது மாவடு அறையின் வாசலில் தொங்கிய மணியின் நாக்கில் பட்டு அசைந்தது. அடுத்த கணம் கணிரென்று மணியின் ஒசை ஒலித்தது.

எதை எதிர்பார்த்து அவன் அப்படிச் செய்தானோ, அது உடனே நடந்தது. அந்த மணியேசை எழுந்ததுமே, “யாரது?” என்று அதட்டிக் கேட்டுக்கொண்டே பகவதி அறைவாசலுக்கு வந்தாள். இன்னொரு மாவடுவும் மேலே வந்து அவள் அருகே விழுந்தது. அவள் கோபத்தோடு கீழே குனிந்து மாவடு எறியப்பட்ட திசையைப் பார்த்தாள். மறுகணமே அவள் கோபம் மலர்ந்த சிரிப்பாக மாறியது. கீழே அவள் தமையன் வல்லாளதேவன் மாம்ரத்து அடர்த்தியிலிருந்து தலை நீட்டிச் சைகை செய்து அவளைக் கூப்பிட்டான். அவள் வருகிறேன் என்பதற்கு அடையாளமாகப் பதில் குறிப்புக் காட்டிவிட்டுக் கீழே இறங்கினாள்.

“நல்ல வேளை அறைக்குள் உங்கள் தங்கையே இருந்ததனால் என் தந்திரம் பலித்தது! இல்லாவிட்டால் வம்பாகியிருக்கும்” என்றான். மகரநெடுங்குழைக்காதன்.

‘குழைக்காதரே! இப்போதுதான் ஆபத்துதவி’ என்ற உம்முடைய பெயருக்குச் சரியான செயலைச் செய்து விளக்கினர். பிரமாதமான தந்திரம், அபூர்வமான யோசனை, அபாரமான குறி!” எனப் பாராட்டினான் தளபதி வல்லாளதேவன்.

“என்ன அண்ணா இது? என்னைச் சந்திக்க வேண்டுமென்றால் அந்தப்புரத்துக்குள் வந்து உரிமையோடு சந்திக்கலாமே! தோட்டத்தில் நின்று இப்படியெல்லாம் தந்திரம் செய்வானேன்?” என்று கேட்டுக்கொண்டே பகவதி அங்கு வந்து சேர்ந்தான்.

“தந்திரம் என்னுடையதல்ல, பகவதி ! நம் குழைக்காதருடையது!” என்று சொல்லிச் சிரித்தான் தளபதி.

“நினைத்தேன்! அவருடையதாகத்தான் இருக்க வேண்டுமென்று. குறி தவறாமல் எறிகிறாரே!”

“என் குறிக்கூடச் சில சமயங்களில் தவறிவிடுகிறது அம்மணி!”—எதையோ உட்பொருளாக அடக்கி வைத்துப்பேசினான் ஆபத்துதவிகள் தலைவன். அவனுடைய அந்தச் சிலேடைப்பேச்சு தளபதி வல்லாளதேவனுக்குச் சிரிப்பை உண்டாக்கிற்று.

“குழைக்காதரே! நீங்கள் போய் உங்கள் வேலைகளைக் கவனிக்கலாம். நானும் பகவதியும் தனிமையாகப் பேச வேண்டியிருக்கிறது. உங்களுக்குத் தெரிவிக்கவேண்டிய முக்கியமான செய்திகள் எவையேனும் இருந்தால் பகவதியிடம் சொல்லிவிட்டுப் போகிறேன். அவள் உங்களுக்குத் தெரிவிப்பாள். இப்போது நீங்கள் போகலாம்!” என்று தளபதி கூறினான்.

“நல்லது, வணக்கம்! நான் விடைபெற்றுக் கொள்ளுகிறேன்” என்று வணங்கி புறப்பட்டான் குழைக்காதன். தோட்டத்துப் புதர்கள், பதுங்கிப் பதுங்கித் தன்னை மறைத்துக் கொண்டு வெளியேற அவனுக்கு ஒத்துழைத்தன.

“அண்ணா! நீங்கள் அரண்மனையிலிருந்து வெளியேறிச் செல்லுவதற்கு முன் உங்களை எப்படியாவது ஒருமுறை சந்தித்துவிட வேண்டுமென்று நானே நினைத்துக்கொண்டு தானிருந்தேன்” என்றாள் பகவதி,

“பகவதி! இப்போது இந்த அரண்மனையில் நிலவும் சூழ்நிலையில் அண்ணனும் தங்கையும் தனியே சந்தித்துப் பேசினால்கூட மிகப்பெரிய அரசியல் இரகசியங்களைப் பேசிக் கொள்வதாக எண்ணிக் கொள்வார்கள்.”

“மற்றவர்கள் என்னென்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தால் உலகத்தில் எந்தக் காரியத்தையுமே செய்யமுடியாது. அண்ணா! நீங்கள் என்னைக் கூப்பிட்ட காரியத்தைப் பேசுங்கள். நேரம் ஆகிறது” என்று அவனைத் துரிதப்படுத்தினாள் அவன் தங்கை.

“பகவதி: சிறு வயதில் உனக்கு நான் வேடிக்கையாக ஒரு கதையை அடிக்கடி சொல்வேன்; அது நினைவிருக்கிறதா?”

“ஏழை வேளான் ஒருவனுக்கு மண் சுவரின்மேல் கூரையால் வேய்ந்த குடிசைதான் வீடு. விடாத அடைமழையால் சுவர்கள் விழுந்துவிடுமோ என்று அஞ்சவேண்டிய சமயத்தில் குடிசைக்குள் மாடு கன்றுபோட்டு விடுகிறது. நிறைமாதத்தோடு பிள்ளைப் பேற்றுக்குத் தயாராயிருந்த அந்த ஏழையின் மனைவிக்கு அதே சமயத்தில் இடுப்பில் வலிகண்டது. இன்னும் சிறிது நேரத்தில் குழந்தை பிறந்துவிடுமோ என்று பரபரப்பு ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் குடிசையின் ஒரு பக்கத்து மண்சுவர் ஈரம் தாங்காமல் விழுந்துவிட்டது. அந்த வீட்டில் வேலை பார்த்து வந்த அடிமைச் சிறுவன் ஒருவன் இறந்துபோனான். வயல்கள் ஈரப்பதமாகவே இருக்கும் போதே விதை விதைத்துவிட வேண்டுமே என்று வீட்டுத் தலைவன் வயலுக்கு ஓடினான். வழியிலே அவனுக்குக் கடன் கொடுத்திருந்தவர் அவனை மறித்துக்கொண்டார். அந்தச் சமயம் பார்த்துப் பக்கத்து ஊரில் அவன் உறவினர் ஒருவர் இறந்துபோனதாக இழவு ஒலை கொண்டுவந்தான் ஒருவன். என்ன செய்வதென்றே புரியாமல் அவன் திகைத்துக் கொண்டிருந்தபோது தள்ளமுடியாத விருந்தினர்கள் இரண்டு பேர்கள் அவன் குடிசையைத் தேடிக்கொண்டு வந்தார்கள். அப்போது குடிசையின் பின்புறமிருந்து அவனுடைய மூத்த புதல்வனின் அலறல் கேட்டது. அவன் ஓடிப்போய்ப் பார்த்தான். அங்கே அவன் புதல்வனைப் பாம்பு தீண்டியிருந்தது. அவன் கோ வென்று கதறி அழுதான். அந்தச் சமயத்தில் ஊர்க்கணக்கர் வந்து அவன் நிலவரி. செலுத்தவில்லை என்பதை நினைவுபடுத்தினார். அவனுடைய குலகுருவும் அந்த நேரம் பார்த்து அங்கே வந்து ‘தட்சிணையைக் கீழே வைத்துவிட்டு மறு வேலை பார்’ என்று கேட்க ஆரம்பித்தார்…”

பகவதிக்குச் சிரிப்பு பொறுக்க முடியவில்லை. “ஏதோ தலைபோகிற காரியம் என்று அவசரமாகக் கூப்பிட்டுவிட்டு எதற்கு அண்ணா இந்தக் கதையெல்லாம் அளக்கிறீர்கள்?”

“கதையில்லை! தென்பாண்டி நாட்டின் இப்போதையச் சூழ்நிலை ஏறக்குறைய இதுதான். கதையில் அத்தனை துன்பங்களுக்கும் ஒரு மனிதன் இலக்கு, இங்கே ஒரு நாடு இலக்கு”

“கதையா அது? தாங்க முடியாத வறுமைத் தொல்லைகளை அனுபவித்த எவனோ ஒரு புலவன் திரித்த பொய்!”

“கதை பொய்யாகவே இருக்கட்டுமே! இப்போது நம்மைச் சுற்றி நடப்பவைகள் பொய்களல்ல. பாண்டிநாட்டுக் கதவைத் தட்டிக் கூப்பிடும் கவலைகள் கனவுகள் அல்ல!”

“அண்ணா! கதையும், எடுத்துக்காட்டும் சொல்லி உண்மைகளைப் புரியவைப்பதற்கு நான் இன்னும் சிறு குழந்தையா என்ன! சொல்ல வந்ததை நேரடியாகவே சொல்லுங்கள்!” .

“பகவதி! நீ என்னுடைய தங்கை! இந்தச் சூழ்நிலையில் என்னுடைய தங்கையிடமிருந்து நான் சில வீரச் செயல்களை எதிர்பார்க்கிறேன்!”— பொருள் புரிய நிறுத்தி இடைவெளி விட்டு ஒவ்வொரு சொல்லாகச் சொன்னபின் புருவங்கள் ஒன்று கூடுமிடத்திற்குமேல் உணர்ச்சி மேடாகிய அந்த அழகு நெற்றியை இமையாமல் பார்த்தான் தளபதி,

“என்ன அண்ணா, அப்படிப் பார்க்கிறீர்கள்? உங்கள் தங்கைமேல் உங்களுக்கே நம்பிக்கை இல்லையா?”

“நம்பிக்கைக்கு ஒன்றும் குறைவில்லை! இப்போது உன்னிடம் மனம் திறந்து உரிமையோடு பேசுகிறேனர். நான், உடன் பிறந்தவன் என்ற முறையில் இதுநாள் வரை உனக்கு ஒரு குறைவும் வைக்கவில்லை. நம் அன்னையும் தந்தையும் பிரிந்த நாளிலிருந்து நீ என் கண்காண வளர்ந்திருக்கிறாய், பகவதி என்னுடைய போர்த் தொழிலுக்குப் பயன்படும் சில வீரக் கலைகளிலிருந்து யாழ், இசை முதலிய நளினக் கலைகள் வரை கற்றுக்கொண்டிருக்கும் நீ இதுவரை அரசியல் சூழ்ச்சிக் கலைகளை அதிகம் அறிந்துகொள்ள வாய்த்ததில்லை. நானும் அதற்கு உன்னை விடவில்லை. பவழக்கனிவாயரிடம் நளினக் கலைகளைக் கற்றாய்! ஆசிரியர் பிரானிடம் இலக்கிய அறிவு பெற்றாய்! நான் இப்போது கடைசியாகக் குறிப்பிட்ட கலையை என் மூலமாக எனக்காக நீ கற்றுக்கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது!”

“என்ன அண்ணா! புதிர் போடுகிறீர்கள்?’ என்றாள் பகவதி.

“இப்போதைக்கு அது புதிர்தான்! புதிரை விளக்கிக் கொண்டு வரத்தான் நீ உடனடியாகப் புறப்படவேண்டும். மிகப் பெரிய அந்தரங்கங்களெல்லாம் இந்தப் புதிருக்குள்தான் அடங்கிப்போயிருக்கின்றன!”

அந்தப் பேச்சிலிருந்து எதுவும் விளங்கிக்கொள்ள முடியாமல் குழப்பத்தோடு அண்ணன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் பகவதி. அவனுடைய கண்களில் துணிவின் ஒளி, உறுதியின் சாயை இரண்டையும் அவள் கண்டாள். செய்தே தீரவேண்டிய செயல்களைப் பற்றிப் பிடிவாதமாகப் பேசும்போது அண்ணனுடைய கண்களில் அந்த ஒளியை அவள் கண்டிருக்கிறாள்.

“மென்மையான உன்னுடைய கைகளிலிருந்து வன்மையான செயல்களை எதிர்பார்க்கிறேன், பகவதி வளை சுமக்கும் கைகளில் பொறுப்பைச் சுமத்த முடியுமா என்று தயங்குகிறேன்!”

“உங்கள் தங்கையின் கைகள் அதற்குத் தயங்கப் போவதில்லை, அண்ணா!”

“இந்த வார்த்தைகளை உன்னிடமிருந்து வரவழைப்பதற்கு இத்தனை பேச்சும் பேசவேண்டியிருந்தது. இனிமேல் கவலை இல்லை.”— இவ்வாறு கூறிவிட்டுத் தன் தங்கைக்கு மிக அருகில் நெருங்கிக் காதோடு காதாக மெல்லிய குரலில் ஏதோ கூறத்தொடங்கினான் தளபதி வல்லாளதேவன்.

அவன் கூறியவற்றைக் கேட்டுக்கொண்டிருந்தபோதே அவள் முகத்தில் பல்வேறு உணர்ச்சிகளின் நிழல்கள் படிந்து மறைந்தன. நெடுநேரமாக அவள் காதருகில் அவனுடைய உதடுகள் அசைந்துகொண்டிருந்தன. வண்டு பூவைக் குடையும் ஒசையைவிட மிக மெல்லிய ஓசையில் பேசுவதற்குத் தென் பாண்டி நாட்டுத் தளபதி எங்கே கற்றுக் கொண்டிருந்தானோ?

பகவதியின் முகபாவங்கள் விநாடிக்கு விநாடி அவன் சொற்களைப் புரிந்துகொண்டதற்கு ஏற்ப மாறுபடும்போது எத்தனை எத்தனை உணர்ச்சிக் குழப்பங்களை அந்த வனப்பு மிக்க நெற்றியில் காண முடிகிறது? பிறைச் சந்திரனைக் கவிழ்த்து வைத்தாற்போன்ற நெற்றி அது. தன் தங்கையிடம் அற்புதமான அழகும், வனப்பும் அமைந்திருப்பதாகப் பெருமைப் பட்டதைக் காட்டிலும், துணிவும் சாமர்த்தியமும் பெருக வேண்டுமென்பதற்காகத்தான்அதிகக் கவலைப்பட்டிருக்கிறான் வல்லாளதேவன். அந்தக் கவலையும் அவன் இப்போது கூறிய செயலைச் செய்ய அவள் ஒப்புக் கொண்டதால் அகன்றுவிட்டது.

எல்லாவற்றையும் அவள் காதில் இரகசியமாகக் கூறி விட்டுத் தலை நிமிர்ந்தபோது, மேலேயிருந்து சற்றுப் பெரிதான மாவடு ஒன்று தளபதியின் நெற்றிப் பொட்டில் விழுந்தது. விண்ணென்று தெரித்து விழுந்த அது உண்டாக்கிய வலியில் ஒருகணம் கண் கலங்கிவிட்டது அவனுக்கு.

“ஐயோ, அண்ணா ‘வடு’ப் பட்டுவிட்டதே?” என்று அவன் நெற்றியைத் தடவ நெருங்கினாள் பகவதி.

“அதனாலென்ன? இங்கே வடுப்பட்டால் கவலை இல்லை. நீ போகிற காரியம் வடுப்படாமல் பார்த்துக்கொள் பகவதி!” என்று கூறிவிட்டு அவள் பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து கிளம்பிவிட்டான் அவன்.

Previous articleRead Pandima Devi Part 2 Ch5 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Pandima Devi Part 2 Ch7 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here