Home Na Parthasarathy Read Pandima Devi Part1 Ch14 | Na. Parthasarathy | TamilNovel.in

Read Pandima Devi Part1 Ch14 | Na. Parthasarathy | TamilNovel.in

74
0
Read Pandima Devi Part1 Ch14 Pandima Devi Na. Parthasarathy, Read Pandima Devi Online Free, Pandima Devi PDF, Download Pandima Devi novel, Pandima Devi book
Read Pandima Devi Part1 Ch14 | Na. Parthasarathy | TamilNovel.in

Read Pandima Devi Part1 Ch14 | Na. Parthasarathy | TamilNovel.in

பாண்டிமாதேவி – நா. பார்த்தசாரதி

முதல் பாகம், அத்தியாயம் 14 : முரட்டுக் கரம்

Read Pandima Devi Part1 Ch14 | Na. Parthasarathy | TamilNovel.in

அன்றொரு நாள் இரவு முன்சிறை அறக்கோட்டத்தில் வந்து அண்டராதித்தனுடன் வம்பு செய்தபின் அவன் மனைவியால் அவமானப்படுத்தப்பட்டுத் திரும்பியவர்கள் இன்னாரென்பதை நேயர்கள் இதற்குள் ஒருவாறு தெரிந்து கொண்டிருப்பார்கள்.

நாகைப்பட்டினத்திலிருந்து புறப்பட்டு விழிஞத்தில் வந்திறங்கிய ஒற்றர்களே அந்த ஆட்கள். முன் சிறை அறக்கோட்டத்தில் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் திண்டாடிய அந்த இரவுக்குப்பின் அவர்கள் தென்பாண்டி நாட்டில் இரண்டொரு நாட்களை ஒளிவு மறைவாகக் கழித்து விட்டார்கள். நாஞ்சில் நாட்டு அரசாட்சி நிலைகளைப் பற்றியும், மகாராணி வானவன்மாதேவியைப் பற்றியும் எத்தனையோ செய்திகளை அறிந்து கொண்டார்கள். தாங்கள் அங்கே வந்த மறுநாளைக்கு மறுநாள் மகாராணி பெளர்ணமி தினத்தன்று கன்னியாகுமரியில் தரிசனத்துக்காக வரப்போகும் செய்தியும் அவர்களுக்குத் தெரிந்தது. தாங்கள் எந்தக் காரியத்தை நிறைவேற்றுவதற்காக வந்தார்களோ அதை நிறைவேற்றுவதற்கு மகாராணியின் கன்னியாகுமரி விஜயத்தைப் பயன்படுத்திக் கொள்வதென்று தீர்மானித்தனர். அங்கே, இங்கே தங்குவதற்கு இடம் தேடாமல் நேரே கன்னியாகுமரிக்கே போய்ச் சேர்ந்து விட்டனர். அங்கேயும் தங்குவதற்குச் சரியான இடம் கிடைக்கவில்லை. கடற்கரையோரத்துச் சோலைகளிலும், தோட்டங்களிலும் தங்குவதை மட்டும் யாரும் தடுக்க முன் வரவில்லை.

மகாராணி விஜயம் செய்வதற்கு முன்தினமே கன்னியாகுமரிக்குச் சென்று விட்டதால் சில முன்னேற்பாடுகளைச் செய்து கொள்வதற்கு அவர்களுக்கு வசதியாக இருந்தது. எங்கே ஒளிந்திருப்பது? தங்கள் திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது? எப்படித் தப்புவது? என்பது போன்ற முன்னேற்பாடுகளைப் பக்குவமாகக் செய்து வைத்துக் கொண்டு விட்டனர், வடதிசைப் பேரரசரின் அந்த ஒற்றர்கள். இதன் விளைவாக ஏற்பட்ட நிகழ்ச்சிகளை கடந்த அத்தியாயங்களில் தெரிந்து கொண்டுவிட்டோம். அந்த ஒற்றர்கள் எண்ணியபடியோ, திட்டமிட்டபடியோ எதுவும் நடக்கவில்லை. கன்னியாகுமரியிலிருந்து தப்பி வருவது பிரும்மப் பிரயத்தனமாகி விட்டது அவர்களுக்கு. அன்றைய தினம் இரண்டு பெரிய அதிர்ச்சிகளுக்கு ஆளாகிவிட்டனர் அவர்கள். ஒன்று அவர்கள் மூவரும் திட்டமிட்டு எதிர்பார்த்திருந்தபடி குமரிக் கோவில் பிராகாரத்தில் வானவன் மாதேவியின் மேல் வேலை எறிந்து கொல்ல முடியாமற் போனது; மற்றொன்று இடையாற்று மங்கலம் நம்பியிடம் கொடுக்கப்படவேண்டிய திருமுகவோலை; அந்த ஒலையில் குறிப்பிட்டிருந்த நிகழ்ச்சியைச் செய்து முடிப்பதற்கு முன்பே, தளபதி வல்லாளதேவனின் கையில் சிக்கியது.

இந்த இரண்டு எதிர்பாராத அதிர்ச்சிகளிலிருந்தும் விடுபட்டுத் தாங்கள் அனுப்பப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றித் திரும்பவில்லையானால் ஆத்திரக்காரனான கொடும்பாளுர் மன்னன் தங்கள் தலையை வாங்கி விடுவான் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். என்ன செய்வது என்று திகைத்தனர் அந்த மூன்று ஒற்றர்களும்.

“முத்தரையா! ஊருக்குத் திரும்பினபின் நாம் உயிரோடு இருப்பதும் இல்லாததும் சொல்லி விட்ட காரியத்தை முடித்துக் கொண்டு போகிறோமா, இல்லையா என்பதைப் பொறுத்திருக்கிறது. ஆகவே இன்னும் காலம் கடந்து விடவில்லை. இன்று மீதமிருக்கும் இந்த இராப்போது முடிந்து, நாளைப் பொழுது விடிவதற்குள் நூறு கொலைகளைச் செய்யலாம். நூறு ஒலைகளை எழுதலாம்’-என்றான் செம்பியன் என்னும் ஒற்றன்.

“எனக்கு அப்போதே தெரியும். புன்னை மரத்துத் தோட்டத்தில் நாம் ஆடைகளைக் களைந்து வைத்துவிட்டுக் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது அந்தக் குட்டைத் தடியன் வந்து பார்த்தானே; அப்போதே ஏதோ கோளாறு நடக்கப் போகிறதென்று என்னுடைய மனத்தில் குறளி சொல்லி விட்டது” என்றான் முத்தரையன்.

“நடந்ததைப் பேசி என்ன ஆகப்போகிறது? அந்தக் குடுமிக்காரத் தடியனை மறுபடியும் எங்காவது கான நேர்ந்தால் உடனே வெட்டிப்போடுவோம். இப்போது நடக்க வேண்டியதைக் காண்போம். செம்பியா! உன்னுடைய யோசனையைச் சொல். ஏதோ கூறினாயே?” என்றான் இரும்பொறை.

“நான் சொல்கிற வழியைக் கேட்டால் தான் கொடும்பாளுர் மன்னரின் கோபத்துக்கு ஆளாகிச் சாகாமல் தப்ப முடியும். முதலில் ஒரு போலி ஒலை தயார் செய்யவேண்டும். தளபதி நம்மிடமிருந்து பறித்துக் கொண்ட ஒலையில் என்ன எழுதியிருந்ததோ, அதை அப்படியே இந்தப் புது ஒலையில் எழுதி விடுவோம். ஒலையில் வடதிசை மூவரசரின் அடையாளச் சின்னங்களையும் எழுத்தாணியால் வரைந்து கொள்ளலாம். அந்த ஒலையைப் பத்திரமாக வைத்துக் கொண்டு புறத்தாய நாட்டுக் கோட்டைக்குப் போவோம். எப்படி நம்மால் கோட்டைக்குள் நுழைய முடியும்? எந்த விதத்தில் மகாராணியை நெருங்கிக் கொலை செய்ய முடியும் என்பதையெல்லாம் இப்போது நான் விவரித்துச் சொல்ல முடியாது. இந்த நள்ளிரவில் வேற்று நாட்டு ஒற்றர்களான நாம் கோட்டைக்குள்துழைவதும், குறிக்கோளை முடித்துக்கொள்வதும் நம்முடைய சாமர்த்தியத்தைப் பொறுத்திருக்கின்றன. இது நம்முடைய கடைசி விநாடி முயற்சிகள்”-என்று செம்பியன் ஆணித்தரமாகக் கூறியபோது, மற்ற இரண்டு பேர்களும் மறுக்க முடியவில்லை.

“முதலில் இப்போது ஒலைக்கும் எழுத்தானிக்கும் எங்கே போவது?”

“ஆ! போவதற்கு ஒர் இடம் இருக்கிறது. எனக்கு இப்போது தான் நினைவு வருகிறது. முன் சிறை அறக்கோட்டத்துக்குப் போனால் இப்போது ஒலையும் எழுத்தானியும் தயாரித்து விடலாம். அந்தச் சத்திரத்து மணியகாரன் கணக்கெழுதுவதற்காக ஒலை எழுத்தாணி நிச்சயம் வைத்திருப்பான். அதோடு அந்தத் தடியனும், அவன் மனைவியான அந்தத் துடுக்குக்காரியும் அன்று நம்மை அவமானப்படுத்தினதற்குச் சரியானபடி பழி வாங்கி விடலாம்” என்று இரும்பொறை யோசனை கூறியபோது, “பாராட்டுகிறேன் இரும்பொறை! உன்னுடைய மண்டைக்குள்ளே இவ்வளவு ஞாபகசக்தி ஒளிந்து கொண்டிருக்கிறதென்பது எங்களுக்கு இதுவரையில் தெரியாமல் போய் விட்டதே!” என்று அவன் முதுகில் தட்டிக்கொடுத்தனர் செம்பியனும் முத்தரையனும்.

இந்தத் தீர்மானத்துக்குப்பின் அவர்கள் மூவரும் வேகமாக முன் சிறை அறக் கோட்டத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர். அப்படிச் செல்லும்போது எங்காவது, யாரிடமாவது அகப்பட்டுக் கொண்டுவிட நேரிடுமோ என்ற பயத்தினால் ஊர்களுக்கும், நகரங்களுக்கும் ஊடே செல்லும் நாட்டுப் புறத்துச் சாலைகளிலோ, வழிகளிலோ செல்லாமல் காட்டுப்பாங்கான கிளை வழிகளில் மறைந்து சென்றனர்.

இந்த மூவரும் இப்படி முன் சிறை அறக்கோட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த நேரத்தில் தான் தளபதி வல்லாளதேவன் கன்னியாகுமரியில் தன் வீரர்களோடு இவர்களைத் தேடிக் கொண்டிருந்தான். நாராயணன் சேந்தன் சுசீந்திரம் தானுமாலய விண்ணகரகத்தில் மகா மண்டலேசுவரரைச் சந்தித்துக் கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சிகளைக் கூறுவதற்காகக் குதிரைப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். சுசீந்திரம் தானுமாலயம் பெருமாள் கோவிலில் தம்முடைய செல்வக் குமாரி குழல் மொழியுடனும் விழிஞத்திலிருந்து அழைத்துக் கொண்டு வந்த இளந்துறவியுடனும் நாராயணன் சேந்தனையும் அவன் கொண்டு வரப்போகும் செய்திகளையும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார் மகாமண்டலேசுவரர். மகாராணி, அதங்கோட்டாசிரியர் முதலியவர்கள் குமரிக் கடற்கரையிலிருந்து புறத்தாய நாட்டுக் கோட்டைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

முன் சிறை அறக்கோட்டத்தில் முதல் யாமம் முடிவதற்குள்ளேயே அன்று அசாதாரணமான அமைதி நிலவியது. பெளர்ணமி தினமாகையினால் சத்திரத்தில் வந்து தங்கியிருந்த யாத்திரீகர்களில் பெரும்பாலோர் கன்னியாகுமரிக்கும் சுசீந்திரத்துக்குமாகத் தரிசனத்துக்குச் சென்று விட்டனர். யாத்திரை வந்தவர்கள் பெளர்ணமி என்பதற்காக மட்டும் அன்று கன்னியாகுமரி செல்லவில்லை. அன்றைக்குச் சென்றால் உலகமாதேவியாகிய கன்னியாகுமரி அம்மனின் தரிசனத்தோடு பாண்டிமாதேவியாகிய மகாராணியின் தரிசனமும் அங்கேயே கிடைக்கும் என்ற செய்தியும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. மகாராணியைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலும் கட்டுக் கடங்காமல் இருந்ததால் அவர்கள் அண்டராதித்த வைணவனை வழிகாட்டியாகத் துணைக்கு அழைத்துக்கொண்டு கிளம்பினர்.

சத்திரத்தைப் பார்த்துக்கொள்வதற்கு வேறு யாராவது ஆள் இருந்தால் கோதை நாச்சியாரிடம் சொல்லி வற்புறுத்தி அவளையும் தங்களோடு அழைத்துக் கொண்டு போயிருப்பான் அண்டராதித்தன். ஆனால் அதற்கு வழியில்லாமல் இருந்தது நிலைமை யாத்ரீகர்களும், தானும், தரிசனத்தை முடித்துக்கொண்டு திரும்பி வரும்போது சாப்பிடுவதற்கு உணவு தயாரித்து வைத்திருக்க வேண்டும். கோதையோ, தானோ இருந்தால்தான் அதை நிறைவேற்ற முடியும்.

“கோதை! இந்த யாத்திரீகர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு நீ கன்னியாகுமரிக்குப் போய்விட்டு வா. நான் இங்கே இருந்து ஆகவேண்டிய காரியங்களைக் கவனித்துக் கொள்கிறேன்” என்று அவன் அவளிடம் சொல்லிப் பார்த்தான். ஆனால் அவள் அதற்கு இணங்கவில்லை. அதற்கு மேல் இன்னும் வற்புறுத்தியிருந்தால் இணங்கியிருப்பாளோ என்னவோ? அவன் வற்புறுத்தவில்லை. தானே யாத்திரீகர்களை அழைத்துக்கொண்டு புறப்பட்டு விட்டான்.

“கோதை! யாருக்கென்ன வந்ததென்று நீ பாட்டுக்குச் சத்திரத்துக் கதவை அடைத்துக்கொண்டு தூங்கிவிடாதே, நாங்கள் இரண்டாம் யாமம் முடிவதற்குள் எப்படியும் திரும்பி வந்துவிடுவோம். வயிற்றைக் காயப்போட்டு விடாதே” என்று போகும்போது சிரித்துக்கொண்டு சொல்லிவிட்டுப் போனான் அண்டராதித்தன்.

கோதையின் கணவனும், சத்திரத்தில் தங்கியிருந்தவர் களும் மாலையிலேயே புறப்பட்டுச் சென்றுவிட்டார்கள். ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கமுடியும் அளவுக்குப் பெரும் பரப்புள்ள அந்தச் சத்திரத்தில் இப்போது மூன்றே மூன்று பெண்கள் மட்டும் தனித்திருந்தனர். சத்திரத்து மடைப்பள்ளிகளில் சமையல் வேலை செய்யும் இரண்டு பணிப்பெண்கள் தவிரக் கோதை நாச்சியார் ஒருத்தி ஆக மொத்தம் மூன்று பேர்கள்தான். பணிப்பெண்கள் இரவுச் சாப்பாட்டுக்காக அடுப்புமூட்டிச் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தனர். கோதை நாச்சியார் சமையலுக்கு வேண்டிய படித்தரப் பொருள்களை உக்கிராணத்துக் கட்டளை அறையிலிருந்து எடுத்துக் கொடுத்துவிட்டு மேற்பார்த்துக் கொண்டிருந்தாள். சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த பணிப்பெண்கள் இரண்டுபேரும் கோதையின் நகைச்சுவையில் ஈடுபட்டு அடிக்கடி குலுங்கக் குலுங்கச் சிரித்தார்கள். முன்சிறை அறக்கோட்டத்தில் தங்குபவர்களுக்குச் சுவையான வசதிகள் இரண்டு. ஒன்று அங்கே வருவோரை உபசரிக்க விருந்தோம்புகிற முறை. இரண்டாவது: அந்த அறக்கோட்டத்தை நிர்வாகம் செய்யும் அண்டராதித்தன்-கோதை-இந்தத் தம்பதியின் நகைச்சுவை நிறைந்த சரளமான வேடிக்கைப் பேச்சு.

அதுவும் கோதை பேசத் தொடங்கிவிட்டால் ஒரே கொண்டாட்டம்தான். மடைப்பள்ளியில் வேலை பார்க்கும் பணிப் பெண்கள் தங்கள் கைக் காரியங்களையெல்லாம் மறந்து கேட்டுக்கொண்டே இருப்பார்கள். ஒரு முறை கோதையின் நகைச்சுவைப் பேச்சு வெள்ளத்தில் மூழ்கியிருந்த பணிப்பெண்கள் ஒரு பெரிய விபரீதமான காரியத்தையே செய்துவிட்டார்கள். அதாவது சர்க்கரைப் பொங்கலில் போடவேண்டிய வெல்லத்தைப் புளிக் குழம்பிலும் புளிக்குழம்பில் போடவேண்டிய உப்பு, காரம் முதலியவற்றைச் சர்க்கரைப் பொங்கலிலும் போட்டுச் சமையல் செய்து வைத்துவிட்டார்கள். அதன் விளைவாக அன்றைக்குச் சத்திரத்தில் சாப்பிட உட்கார்ந்த அத்தனை பேரும் அவதிப்பட்டனர். “இந்தா, கோதை! இனிமேல் மடைப்பள்ளியில் வேலை நடந்துகொண்டிருக்கும்போது பணிப்பெண்களிடம் போய் பேச்சுக் கொடுத்தாயோ தெரியும் சேதி!’ என்று அன்றைக்கு அவளைக் கடுமையாகவும் வேடிக்கையாகவும் எச்சரித்து வைத்தான் அண்டராதித்த வைணவன்.

இதனால் பணிப்பெண்கள் கோதையோடு பேசிக் கொண்டே மடைப்பள்ளி காரியங்களைக் கவனிக்க நேர்ந்தால் உஷாராக வேலை செய்வது வழக்கம். கோதை ஏதோ பேச ஆரம்பித்ததும், “அம்மணி! தயவுசெய்து இப்போது நிறுத்திக் கொள்ளுங்கள். நாங்கள் மடைப்பள்ளி வேலைகளை முடித்துவிட்டு வருகிறவரை பொறுத்துக் கொள்ளுங்கள்” என்றார்கள்.

“சரிதான்! நீங்கள் வேலையைக் கவனியுங்கள். நான் போய்ச் சத்திரத்தின் அந்தி விளக்குகளை ஏற்றுகிறேன். இருட்டுகிற சமய்மாகிவிட்டது” என்று கூறிவிட்டு மடைப்பள்ளியிலிருந்து வெளியில் வந்தாள் கோதை நாச்சியார்.

தீபங்களை ஏற்றியபின் வாசற்புறத்துக்கு அருகில் உள் பக்கமாக இருந்த சத்திரத்துக் குறட்டில் உட்கார்ந்து ஒலைச் சுவடியை எடுத்து அன்றையப் படித்தரக் கணக்கு விவரங்களை அதில் எழுதிடலானாள். அவளுடைய கணவன் அன்றாடம் செய்யவேண்டிய வழக்கமான வேலை அது. அன்று அவன் வெளியே சென்றிருந்ததால், தான் கொடுத்திருந்த படித்தரத்துக்குத் தானே கணக்கு எழுதினாள்.

அடிக்கடி எழுதிப் பழக்கப்படாத அவள் கை எழுத்தாணியைப் பிடித்து ஒவ்வொரு எழுத்தாக ஒலையில் எழுதிக் கொண்டிருந்தது. ஏதோ கேட்பதற்காக அப்போது அங்கு வந்த மடைப்பள்ளிப் பணிப்பெண், “என்ன அம்மா! ஓலையில் ஏதாவது சித்திரம் வரைகிறீர்களா? இவ்வளவு மெதுவாக எழுதிக் கொண்டிருக்கிறீர்களே?” என்று விளையாட்டாகச் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டுப் போனாள்.

“சரி சரி! நீ போய்க் காரியத்தைச் செய். நான் எழுதி விட்டு வருகிறேன்” என்று அவளுக்குப் பதில் சொல்லிவிட்டு மேலும் குனிந்து கொண்டே எழுதலானாள் கோதை.

பக்கத்தில் காலடி ஓசை கேட்டது. பணிப்பெண்கள். தாம் ஏதாவது கேட்டுப்போக வந்திருப்பார்கள் என்று தலை நிமி ராமல் எழுதிக் கொண்டேயிருந்தாள் அவள்.

குயிரென்று விளக்கை நோக்கி வாயால் ஊதும் காற்றோசை, விளக்கு உடனே அணைந்தது. “சீ! இதென்னடி உங்களுக்கு இந்தத் திமிர்? எது விளையாடுகிற நேரம் என்று உங்களுக்குத் தெரியாதா?’ என்று சொல்லிக்கொண்டே தலை நிமிர்ந்த கோதை எதிரே தனக்கு முன் இருட்டில் நின்றவர்களைப் பார்த்து வில் என்று அலருவதற்கு வாயைத் திறந்தாள். ஆனால் அவளுடைய வாயிலிருந்து அலறல் வெளிவருவதற்குள் வலிமை வாய்ந்த முரட்டுக் கரம் ஒன்று அவள் வாயில் துணியைத் திணித்தது. இருட்டில் எதிரே நிற்பவர்களின் முகம் தெரியவில்லை. எவ்வளவோ முயன்றும் ஒரு சிறு முனகல் கூட அவள் வாயிலிருந்து வெளிப்பட இயலாமற் போய்விட்டது. இன்னொரு முரட்டுக் கை அவள் கைகளிலிருந்த ஒலையையும் எழுத்தாணியையும் பறித்துக் கொண்டது. கோதை கை கால்களை உதைத்துக்கொண்டு திமிறினாள், அவள் முகத்துக்கு மிக அருகில் இருளில் ஒரு மின்னல் மின்னியது. கோதை மூச்சுத் திணறிப் பிதுங்கும் விழிகளால் பார்த்தாள். பார்வை கூசியது அது மின்னலல்ல, ஒரு கத்தி! மறு விநாடி அந்தப் பெண் மூர்ச்சையாகித் துவண்டு விழுந்தாள்.

Previous articleRead Pandima Devi Part1 Ch13 | Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Pandima Devi Part1 Ch15 | Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here