Home Na Parthasarathy Read Pandima Devi Part1 Ch23 | Na. Parthasarathy | TamilNovel.in

Read Pandima Devi Part1 Ch23 | Na. Parthasarathy | TamilNovel.in

80
0
Read Pandima Devi Part1 Ch23 Pandima Devi Na. Parthasarathy, Read Pandima Devi Online Free, Pandima Devi PDF, Download Pandima Devi novel, Pandima Devi book
Read Pandima Devi Part1 Ch23|Na.Parthasarathy| TamilNovel.in

Read Pandima Devi Part1 Ch23 | Na. Parthasarathy | TamilNovel.in

பாண்டிமாதேவி – நா. பார்த்தசாரதி

முதல் பாகம், அத்தியாயம் 23 :ஊமை பேசினாள்

Read Pandima Devi Part1 Ch23|Na.Parthasarathy| TamilNovel.in

திருநந்திக்கரைச் சமணப் பெரும்பள்ளியின் வாசலில் அந்தப் பூக்கார ஊமைப் பெண்ணிடம் சேந்தனைப் பற்றி விசாரித்துவிட்டுத் தளபதி வல்லாளதேவன் சாலையில் இறங்கிச் சென்ற சில கணங்களுக்குப் பின் ஓர் அதிசய நிகழ்ச்சி நடைபெற்றது. அதிசயமென்றால் வெறும் அதிசயமா அது? வியப்பையும், திகைப்பையும் ஒருங்கே உண்டாக்கக் கூடிய அதிசய நிகழ்ச்சி அப்போது அங்கே நடைபெற்றது.

சமணப் பள்ளியின் கிழக்குப்புறம், இருபது முப்பது அடி பள்ளத்தாக்கு நிலமாக இருந்தது. அந்தப் பள்ளத்தாக்குப் பிரதேசத்தில் சிறிய காட்டாறு ஒன்றின் கிளைக் கால்வாய் பாய்ந்து கொண்டிருந்தது. கால்வாய்க்கு அப்பால் சமவெளி நிலத்தில் நெடுந்துாரத்துக்கு நெடுந்துாரம் பாக்கு மரங்களும் தென்னை மரங்களும் அடர்த்தியாக வளர்ந்திருந்தன. பாக்கு மரங்களின் துரளில் மினுமினுவென்று மின்னும் முக்கோண வடிவப் பச்சை இலைகளும், கொத்துக் கொத்தாக மிளகுக் கொடிகளும் தழுவிப் படர்ந்திருந்தன.

தளபதியின் தலை மேற்கே திருநந்திக்கரைச் சாலையின் திருப்பத்தில் மறைந்ததோ இல்லையோ, தரையின் இடைவெளி தெரியாமல் படர்ந்து கிடந்த கீழ்ப்புறத்துப் பள்ளத்தின் பசுமையிலிருந்து இரண்டு செந்நிறக் குதிரைகளும் ஒரு குட்டை மனித உருவமும் மெதுவாக வெளியேறி மேட்டுக்கு வந்தன. அந்த உருவமே நாராயணன் சேந்தன்.

அப்போதும் அந்தப் பூக்காரப் பெண்ணுடன் அவள் தந்தையும் அங்கே தான் உட்கார்ந்து கொண்டிருந்தார். என்ன ஆச்சரியம்? எந்த ஒர் அழகிய பெண்ணைப் பிறவிச் செவிடு என்றும். பிறவி ஊமை என்றும் தளபதி எண்ணி, படைத்தவன் கைகளைத் தூற்றிக்கொண்டு போனானோ, அந்தப் பெண் இப்போது நாராயணன் சேந்தனிடம் வாய் திறந்து பேசினாள். “ஐயா! நீங்கள் கூறியபடியே அந்த மனிதரிடம் நடித்து ஏமாற்றி அனுப்பிவிட்டோம். நான் ஊமையாகவே நடித்துவிட்டேன். என் தந்தையும் தமக்கு ஒன்றும் தெரியாதென்று பதில் சொல்லி அனுப்பிவிட்டார்” என்று குயிலின் இனிமையும் யாழின் நளினமும் செறிந்த குரலில் நாராயணன் சேந்தனிடம் கூறினாள் அந்தப் பூக்காரப் பெண்.

“மிகவும் நல்ல காரியம் செய்தீர்கள்! உனக்கும் உன் தந்தைக்கும் நான் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன், பெண்ணே!” என்று சொல்லிக் கொண்டே தன் இடுப்புக் கச்சையை அவிழ்த்து இரண்டு பொற்காசுகளை அந்தப் பெண்ணிடம் எடுத்துக் கொடுத்தான் நாராயணன் சேந்தன். வட்டமாக இருந்த அந்தக் காசுகளின் ஒருபுறம் மகர மீன் வடிவம், இன்னொரு புறம் யானையின் உருவம் அமைந்திருந்தன. பாண்டிய நாட்டில் பராந்தகனின் இறுதிக் காலத்தில் வெளியிடப்பெற்ற நாணயங்கள் அவை.

காசுகளைக் பெற்றுக்கொண்டு மலர்ந்த முகத்தோடு கை கூப்பி வணங்கினாள் அவள்.

“ஐயா! நீங்கள் அடிக்கடி இந்தப் பக்கம் குதிரையில் வந்து போக வேண்டும்!” உபசாரத்துக்காகச் சொல்லுகிறவனைப் போலக் கிழவன் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.

உடனே நாராயணன் சேந்தன் முகத்தில் குறும்புமிளிரச் சிரித்துக்கொண்டே கிழவனையும் அவன் பெண்ணையும் பார்த்து, “ஆகா! அதற்கென்ன? அடிக்கடி வருவத்ற்குத் தடையில்லை. ஆனால் அடிக்கடி என்னிடத்தில் இரண்டு பொற்காசுகள் இருக்காதே?” என்று குத்தலாக ஒரு போடு போட்டுவிட்டுப் புறப்பட்டான்.

அவன் புறப்படுகிற சமயத்தில், “கொஞ்சம் பூக்கள் தருகிறேன். உங்கள் இல்லத்துக்குக் கொண்டு செல்லுங்கள்” என்று கூறிப் பூக்களை அள்ளினாள் அவள். “அதற்குப் பயனே இல்லை. நான் இன்னும் ஒற்றைக் கட்டைதான்!” என்று கூறி நகைத்தான் நாராயணன் சேந்தன்.

“இன்னுமா உங்களுக்குத் திருமணம் ஆகவில்லை ” என்று கிழவர் வியப்புடன் அவனை வினவினார்.

“ஐயா, கிழவரே! உங்கள் மகனைப்போல ஒர் அழகான நல்ல பெண் கிடைக்கிறவரை திருமணமே செய்து கொள்வதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே ஓரக்கண்ணால் அந்தப் பூக்காரப் பெண்ணை நோக்கினான். அவள் தலையைக் குனிந்து கொண்டாள்.

“வருகிறேன், பெரியவரே!” என்று ஒரு குதிரையில் ஏறிக்கொண்டு இன்னொன்றின் கடிவாளக் கயிற்றைப் பிடித்தவாறே பக்கத்தில் நடத்திக்கொண்டு புறப்பட்டான் சேந்தன்.

வந்தவழியே திரும்பிச் சென்று முன்பு எந்தச் சாலையில் பறளியாற்று வெள்ளத்தினால் உடைப்பு ஏற்பட்டிருப்பதாகத் தளபதியிடம் சொல்லி அவனைச் சுற்றுவழியில் இழுத்தடித் தானோ அதே சாலையில்தான் இப்போது சென்றான் சேந்தன். கூற்றத் தலைவர் கூட்டத்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகச் சேந்தனும் அரண்மனைக்குப் போகிறான் போலிருக்கிறது. போகட்டும். அவனுக்கும் முன்பே நேயர்களை அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு போய் அங்கு நடக்கும் விறுவிறுப்பான நிகழ்ச்சிகளைக் காண்பித்துவிட விரும்புகிறேன் நான். திருநந்திக்கரைச் சமணப்பள்ளியில் சேந்தனால் ஏமாற்றப்பட்டு மனம் சோர்ந்து கால்நடையாகக் கிளம்பிய தளபதி வல்லாளதேவனும், ஏமாற்றி விட்டுக் குதிரையில் கிளம்பிய சேந்தனும், புறத்தாய நாட்டு அரண்மனைக்கு வந்து சேர வெகு நேரம் செல்லுமாகையினால் நாம் முந்திக்கொண்டு விடலாம்.

“திரையை அகற்றி விடுங்கள்”-என்று மகா மண்டலேசுவரர் கூறியவுடனே திரைக்குப் பின்னாலிருந்து ஆள் நடந்து செல்லும் அரவம் கேட்டதும் அங்கே கூடியிருந்த அத்தனை பேரும் பரபரப்படைந்தார்கள். “பிடி! பிடி ! யாராயிருந்தாலும் ஒடித் தப்பி விடக்கூடாது” என்று அங்கிருந்த காவல் வீரர்களைப் பார்த்துக் கூச்சலிட்டார் மகாமண்டலேசுவரர். அங்கு நின்று கொண்டிருந்த மெய்க்காப்பாளர்களும், காவல் வீரர்களும் வாள்களை உருவிக் கொண்டும், கூர்மையான வேல்களை ஓங்கிக் கொண்டும், தட தடவென்று ஒசையுண்டாகும்படித் திரைக்குப்பின்னால் பாய்ந்தோடினர். திரைக்குப் பின்னாலிருந்த பகுதியில் சாளரங்களோ, கதிர்மாடங்களோ, பலகணிகளோ இல்லாததால் பகல் நேரத்திலேயே இருண்டு கிடந்தது. அதன் காரணமாகத் தேடிச் சென்றவர்களே ஒருவர் மேல் ஒருவர் மோதிக் கொண்டனர். கண்டு பிடிக்க வேண்டிய ஆள் மட்டும் அகப்படவே இல்லை. மந்திராலோசனை மண்டபத்தின் பின்புறம் சுவரோரமாக ஒரு படிக்கட்டு, கீழ் நோக்கி இறங்கிச் சென்றது. அது அரண்மனையின் நிலவறைக்குச் செல்லும் பாதை. புறத்தாய நாட்டு அரண்மனையின் பல பகுதிகளில் அமைந்திருந்த நிலவறைகளில் முக்கியமானது அதுதான். போர்க் காலங்களிலும், அரசியல் குழப்பமான சூழ்நிலைகள் ஏற்படும் காலத்திலும், அரண்மனையிலுள்ள விலை யுயர்ந்த கலைப்பொருள்கள், சிலைகள் முன்னுள்ள வேந்தர்கள் வழங்கிய நாணயங்கள், உபயோகித்த ஆயுதங்கள், கவசங்கள் – இவற்றையெல்லாம் அந்த நிலவறையில் பாதுகாப்பாகப் பத்திரப்படுத்தி வைப்பது வழக்கம்.

திரைக்குப் பின்னால் ஒளிந்திருந்தவன் தப்பிச் சென்றிருந்தால் கீழே நிலவறைக்குச் செல்லும் படிக்கட்டைத் தவிர வேறெந்த வழியினாலும் தப்பிச் சென்றிருக்க முடியாது. சிலர் நிலவறைக்குள் போகும் வழியிலும் சிறிது தூரம் சென்று தேடினார்கள். ஆள் அகப்படவில்லை. படிக்கட்டு ஆரம்பமாகும் இடத்தில் ஒரு சிறிய சதுரமான வெள்ளைப் பட்டுத் துணி கிடந்தது. அதை எடுத்துக் கொண்டுபோய் மகாமண்டலேசுவரரிடம் கொடுத்தார்கள்.

“ஆள் அகப்படவில்லையா?” என்று சினம் பொங்கும் குரலில் அதட்டிக் கேட்டார் அவர்.

“நிலவறைக்குள் போய்த் தப்பிச் சென்றிருக்கலாமென்று தெரிகிறது. படி இறங்கும் வழியில் இந்தப் பட்டுத் துணி கிடைத்தது” என்று சொல்லித் துணியை அவரிடம் கொடுத்தார்கள், தேடிச் சென்று திரும்பியவர்கள்.

“உடனே ஒடிப்போய்க் கீழே நிலவறைக்கு இறங்கும் வழியின் கதவை அடைத்து முன்புறமாகத் தாழிட்டுவிடுங்கள்” என்று கூறி அவர்களை மறுபடியும் துரத்தினார் மகா மண்டலேசுவரர். அவர்கள் கதவை அடைக்கச் சென்றதும் அங்கு கூடியிருந்த அத்தனை பேருக்கும் நடுவில் அந்தப் பட்டுத் துணியை விரிக்காமல் ஒரு மூலையில் தூணின் மறுபுறம் மறைவில் போய் நின்றுகொண்டு அதை விரித்துப் பார்த்தார். பயமும் கலவரமும் அடைந்த பீதியின் நிழல் பதிந்த முகங்களால் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு மகாராணியாரும் கூற்றத் தலைவர்களும், மந்திராலோசனை மண்டபத்து இருக்கைகளில் வீற்றிருந்தனர். மெய்க் காப்பாளர்களும், வீரர்களும் நிலவறைக்குச் செல்லும் வழியை அடைப்பதற்காக அதன் கனமான பெரிய மரக்கதவை இழுத்து மூடும் ஓசை மண்டபம் எங்கும் எதிரொலித்தது.

மகாமண்டலேசுவரர் விரித்துப் பார்த்த அந்தப் பட்டுத் துணியில் ஏதோ ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கு அடையாளச் சின்னம் போன்றதொரு சித்திரம் தீட்டப்பட்டிருந்தது.

ஒரு வீர இளைஞன் தன் வலது கையில் உருவி ஏந்திய வாளினால் தனது தலையை அரிந்து குருதி ஒழுக இடது கையால் தாங்கி நிற்பது போல் அந்த ஓவியம் அமைந்திருந்தது. அந்த இளைஞனின் தலைப்புறமாக மகரமீன் இலச்சினையும் பொறிக்கப்பட்டிருந்தது. அவர் அந்த ஒவியத்தைக் கவனமாகப் பார்த்தார். பட்டுத் துணியில் வரையப் பெற்றிருந்த அந்த அடையாளச் சின்னம் அவருக்குப் புதியதல்ல. தென்னவன் ஆபத்துதவிகளின் அடையாளம் அது. ஆபத்துதவிப் படையைச் சேர்ந்த ஒவ்வொரு வீரனும் அந்த மாதிரித் துணியை இடுப்புக் கச்சையாக அணிந்து கொள்வது வழக்கம்.

பட்டுத் துணியை மடித்து மறைத்து வைத்துக் கொண்டார், இடையாற்று மங்கலம் நம்பி, அவர் மனத்தில் பல விதமான சந்தேகங்கள் உண்டாயின.

“ஆபத்துதவிப் படைகளைச் சேர்ந்த யாவரும் இப்போது கோட்டாற்றிலுள்ள தென் திசைப் பெரும் படையின் குடியிருப்பில் அல்லவா தங்கியிருக்கிறார்கள்? அவர்களோ அல்லது அவர்களில் ஒருவனோ இப்போது இங்கே எப்படி வந்திருக்க முடியும்? திரைக்குப் பின்னால் ஒளிந்திருந்தவன் ஆபத்துதவிகளில் ஒருவன்தானோ? அல்லது என்றைக்காவது தென்னவன் ஆபத்துதவிகள் இங்கே அரண்மனைக்கு வந்திருந்தபோது நிலவறைக்கு அருகில் இதைத் தவறிப் போட்டு விட்டார்களா ? இந்தப் பொருள் நிலவறைக்கருகில் கிடந்ததனால் மட்டும் நாம் ஆபத்துதவிகளின்மேல் சந்தேகப் பட்டு விடுவதற்கில்லை. வேறு எவனாவது நம்முடைய பகைவர்களின் கையாளாகிய ஒற்றன் வந்து ஒட்டுக் கேட்டு விட்டுப் போயிருக்கலாம். நாம் இந்தத் துணி ஒன்றை மட்டும் சான்றாகக் கொண்டு யாரையும் குற்றவாளியாக முடிவு செய்து விடுவதற்கு இயலாது”-என்று சிந்தித்து முடிவு செய்து கொண்டார் மகாமண்டலேசுவரர்.

அவர் தூண் மறைவிலிருந்து மறுபடியும் மந்திராலோசனை மண்டபத்தின் நடுவில் வந்து நின்ற போது அவருடைய உத்தரவுப்படியே நிலவறைக் கதவை அடைத்து விட்டதாக வீரர்கள் வந்து கூறினார்கள்.

எல்லோருடைய கண்களும் அவருடைய முகத்தையே கூர்ந்து பர்ர்த்துக் கொண்டிருந்தன.

“சந்தேகப்பட்டுக் கொண்டே இந்த இடத்தில் கூட்டத்தை நடத்தக் கூடாது. அவசியமானால் நிலவறையைத் திறந்து தீபங்களோடு உள்ளே சென்று தேடிப்பார்த்து விடலாம். இந்த மந்திரலோசனை மண்டபத்தைச் சுற்றியும் வெளிப் பகுதிகளிலும் சந்தேகப்படத்தக்க புதிய மனிதர்கள் யாரும் இல்லை. என்று உறுதியாகத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் கூற்றத்தலைவர் கூட்டத்தை இங்கே தொடங்குவது நன்றாயிராது” என்று தம் கருத்தைக் கூறினார் பவழக்கனிவாயர்.

ஏதோ கவலையில் ஆழ்ந்துபோய் அமர்ந்திருப்பவர் போல், தலைகுனிந்து ஒன்றும் பேசாமல் உட்கார்ந்திருந்தார் மகாராணி வானவன்மாதேவியார்.

“பவழக்கனிவாயர் கூறுவது சரியே! தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும் தீரா இடும்பைத் தரும் – என்று தெய்வப் புலவராகிய திருவள்ளுவர் கூறியிருப்பதைப் படிக்காதவர்கள் நம்மில் யாருமில்லை. தென்பாண்டி நாட்டு அரசியல் இரகசியங்களை அறிவதற்காக யார் யாரோ சூழ்ச்சி செய்கிறார்கள் போலிருக்கிறது. இல்லையானால் அந்தரங்க மந்திராலோசனைக் கூட்டம் நடைபெறும் இந்த இடத்தில் நமக்கு மிக அருகில் வந்து ஒளிந்திருக்கும் அளவுக்கு ஒரு மூன்றாவது மனிதனுக்குத் துணிவு ஏற்படுமா?” என்றார் பல்லாயிரங் காலத்துப் பயிர்போலச் சிறந்த தொன்மை வாய்ந்த அதங்கோட்டாசிரியர் குடும்பத்தில் பிறந்த ஆசிரியர். படிப்பின் பெருமிதமும் கலையின் எழிலும் ஒருங்கு தென்படும் அவருடைய ஒளி பொருந்திய முகமண்டலத்தில் இதைச் சொல்லும்போது கவலை இருள் சூழ்ந்திருந்தது.

“மகாராணியாரும், மகாமண்டலேசுவரரும் இங்கு வருவதற்கு முன் நாங்கள் இதே இடத்தில் நீண்ட நேரமாகப் பல செய்திகளையும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போதெல்லாம் திரைக்குப் பின்னால் யாரும் ஒளிந்திருந்ததாக எங்களுக்குத் தெரியவில்லையே” என்றார் கூற்றத் தலைவர்களுள் ஒருவராகிய கழற்கால் மாறனார்.

“ஒளிந்திருக்கவில்லை என்று நீங்களும் நானும் எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்? ஒரு வேளை, பேச்சில் கவனமாக இருந்த நாம் கவனிக்காமல் இருந்திருக்கலாம். திரைக்குப் பின்னால் இருப்பதை இங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த நாம் எப்படிக் கவனித்திருக்க முடியும்? நம் பேச்சையே தப்பி ஓடினவன் முழுவதும் கேட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என்று கழற்கால் மாறனாரின் கருத்தைத் திருத்தினார் நன்கனிநாதர்.

“இந்த மந்திராலோசனைக் கூட்டத்தை இவ்வளவு நடந்த பின்பும் இன்றே நிகழ்த்துவானேன்? நாளைக்குத் தள்ளிவைத்துவிடலாமே!” என்றார் அதுவரை ஒன்றும் பேசாமல் சிந்தனையில் ஆழ்ந்திருந்த வானவன்மாதேவியார்.

“ஆம்! அப்படிச் செய்வதுதான் நல்லது” என்ற குரல் எல்லோருடைய வாயிலிருந்தும் ஒலித்தது. ஆனால் மகா மண்டலேசுவரரான இடையாற்றுமங்கலம் நம்பி மட்டும் வாயைத் திறக்கவே இல்லை. அவருடைய மெளனத்தை மகாராணி கவனித்துவிட்டார்.

மகாமண்டலேசுவரருடைய கருத்து என்னவோ?’ என்று மெல்லக் கேட்டார் மகாராணி.

“கூட்டத்தை இன்றே நடத்திவிட வேண்டுமென்பதுதான் என் கருத்து. வேண்டுமானால் இந்த இடத்தில் நடத்தாமல், வேறோர் இடத்தில் நடத்தலாம். இன்றைக்கு என்று குறிப்பிட்ட கூட்டத்தை இன்றே நடத்தாமல் போவதனால் எத்தனையோ புதிய தொல்லைகள் உண்டாகலாம்” என்று அவர் மறுமொழி கூறியபோது அதில் தீர்மானமான பிடிவாதம் ஒலித்தது.

Previous articleRead Pandima Devi Part1 Ch22 | Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Pandima Devi Part1 Ch24 | Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here