Home Na Parthasarathy Read Pandima Devi Part1 Ch26 | Na. Parthasarathy | TamilNovel.in

Read Pandima Devi Part1 Ch26 | Na. Parthasarathy | TamilNovel.in

79
0
Read Pandima Devi Part1 Ch26 Pandima Devi Na. Parthasarathy, Read Pandima Devi Online Free, Pandima Devi PDF, Download Pandima Devi novel, Pandima Devi book
Read Pandima Devi Part1 Ch26 | Na. Parthasarathy | TamilNovel.in

Read Pandima Devi Part1 Ch26 | Na. Parthasarathy | TamilNovel.in

பாண்டிமாதேவி – நா. பார்த்தசாரதி

முதல் பாகம், அத்தியாயம் 26 : வேடம் வெளிப்பட்டது

Read Pandima Devi Part1 Ch26|Na.Parthasarathy| TamilNovel.in

குழல் மொழியின் முகத்தில் தென்பட்ட வியப்பைக் கண்டு துறவி சிரித்தார். “இந்த அறைக்குள் இருப்பதை நான் எப்படி இவ்வளவு சரியாகக் கண்டு பிடித்துக் கூறினேன் என்று தானே நீ வியப்படைகிறாய்?”

குழல்மொழி அவருடைய கேள்விக்கு மறுமொழி சொல்லாமல் ஒரு கணம் அவருடைய முகத்தையே உற்றுப்பார்த்துக் கொண்டு நின்றாள்.

“ஏன் அப்படி என்னையே பார்க்கிறாய்? என்னுடைய ஆருடத் திறமையைப் பரிசோதிப்பது போல் நீ கேள்வி கேட்டாய். நான் பதில் கூறினேன். இத்தனைக் கட்டுக் காவல்களையும் கடந்து யவன வீரர்கள் வாளேந்தி நின்று அயராமல் காக்கும் இந்த இடத்துக்குள் இருப்பதைப் புள்ளி பிசகாமல் தெள்ளத் தெளிய அடிகள் எப்படிக் கூறினாரென்று சிந்தித்துப் பார்க்கிறாயா?”

அடிகளின் கேள்வியைக் கவனிக்காதது போல் இருந்து விட்டு, “சரி! வாருங்கள். மேலே சுற்றிப் பார்க்கலாம்” என்று கூறி அவரை அந்த இடத்திலிருந்து அழைத்துச் செல்ல முயன்றாள் குழல்மொழி.

“முடியாது பெண்ணே! நான் ஏமாறமாட்டேன். இந்த யவன வீரர்களின் காவலுக்கு அப்பால் என்ன இருக்கிறதென்பதைத் தெரிந்து கொள்ளாமல் நான் இங்கிருந்து ஒர் அடி கூட நகர மாட்டேன்!” என்று கூறி அவர் பிடிவாதமாக

அங்கிருந்து புறப்பட மறுத்தார்.

“அது தான் அங்கிருப்பதை உங்கள் ஆருடத்தினால் சொல்லி விட்டீர்களே ?”

“சொன்னால் மட்டும் போதுமா? எங்களுடைய முன்னோர் சுந்தர முடியையும், வீர வாளையும், நான் ஒரு முறையாவது கண் குளிரக் காணவேண்டாமா?”துறவி உருக்கமான குரலில் அவளைக் கெஞ்சினார்.

“அதென்ன! ‘எங்களுடைய முன்னோர்’ என்கிறீர்கள்? அடிகளுக்குத் தமிழில் தன்மை, முன்னிலை, படர்க்கை, வேறு பாடொன்றும் தெரியவே தெரியாதோ? நீர்தான் பாண்டிய மரபின் இறுதி வாரிசு போலல்லவா பேசுகிறீர்?” என்று திருப்பிக் கேட்டாள் இடையாற்று மங்கலம் நம்பியின் புதல்வி.

‘ஏன் ? அப்படி இருக்க முடியாதோ? உனக்கு வேண்டுமானால் அது தெரியாமல் இருக்கலாம். இதோ ஒரு கணம் பொறுத்திரு” என்று சொல்லிவிட்டு அங்கே பக்கத்திலிருந்த வேறோர் மண்டபத்தில் நுழைந்து மறைந்தார் அடிகள். அவர் என்ன செய்யப் போகிறார் என்று அறியும் ஆவலோடு அந்த மண்டபத்தின் வாயிலையே பார்த்துக் கொண்டு தான் நின்றிருந்த இடத்தை விட்டு அசையாமல் நின்றாள் குழல்மொழி,

சிறிது நேரம் கழித்து மண்டபத்துக்குள்ளிருந்து வெளிவந்த ஆளைப் பார்த்தபோது அவள் அப்படியே அதிர்ச்சி அடைந்து போய் நின்றாள். அவளால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. இளவரசன் இராசசிம்ம பாண்டியன் அவள் முன்பு வந்து நின்றான். அவனுடைய கவர்ச்சிகரமான கண்களிலும், சிரிப்புக் குடியிருக்கும் செவ்விதழ்களிலும் குறும்புத் தனம் குமிழியிட்டது. வியப்பும், பயமும், வெட்கமும் ஆகிய அத்தனை உணர்ச்சிகளும் அந்தப் பெண்ணின் பிறைச்சந்திரனை யொத்த நெற்றியில் சங்கமமாயின.

“நான்தான் துறவி. துறவிதான் நான். இந்த உண்மை உன் தந்தைக்கும் அவருடைய அந்தரங்க ஒற்றனான நாராயணன்

சேந்தனுக்கும் நன்றாகத் தெரியும். வேண்டுமென்றே உனக்கு மட்டும் தெரியவிடாமல் மறைத்துக்கொண்டேன் நான். இப்போது நீயும் தெரிந்து கொள்வதற்குச் சந்தர்ப்பம் வந்துவிட்டது. தெரிந்துகொள்” என்றான் இராசசிம்மன்.

துறவியாக வேடம்போட்டு இளவரசராக மாறித் தன்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தி நிற்கும் அவரிடம் என்ன பேசுவதென்று தெரியாமல் திகைத்தாள் அவள்.

“இப்போதாவது சொல்! எதிர்காலத்தில் யாருடைய தலையில், சூடுவதற்காக வைக்கப்பட்டிருக்கிறதோ அவன் கூடவா தனது முன்னோர் பயன்படுத்திய சுந்தர முடியையும் வீர வாளையும் பார்க்கக் கூடாது?”

“இனி உங்களைத் தடுக்க நான் யார்? அதோ, பயங்கரமான அந்த யவனக் காவல் வீரர்களே இன்னாரென்று தெரிந்துகொண்டவுடன் உருவிய வாளை உறைக்குள்ளே போட்டுக் கொண்டு வணங்கி நிற்கிறார்களே?” என்று அது வரையில் வாய் திறவாமல் இருந்த குழல்மொழி வாய் திறந்து மறுமொழி சொன்னாள்.

“அந்த வாள்களுக்கு நான் என்றும் அஞ்சமாட்டேன்; இதோ குறுகுறு வென்று வண்டு சுழல்வது போல் என்னைப் பார்க்கின்றனவே, இந்த வாள்கள் தான் என்னைப் பயமுறுத்துகின்றன” என்று நகைத்துக் கொண்டே அவள் கண்களுக்கு அருகில் சுட்டு விரலை நீட்டிக் காட்டினான் இராசசிம்மன்.

குழல்மொழியின் பொன்னிறக் கன்னங்களில் குங்குமக் கோடுகள் படர்ந்தன. கண்களின் விழித்திரைகளில் இன்ப நிறைவு பொங்கும் உணர்ச்சியின் சாயல்கள் ஒடிமறைந்தன.

“வேடம் மாறியதற்கு ஏற்பப் பேச்சும் மாறுகிறாற் போலிருக்கிறதே? இளவரசர் தலைமறைவாக இருந்த காலத்தில் படித்துக்கொண்ட பேச்சுகள் போலிருக்கின்றன இவையெல்லாம்?” என்றாள் அவள்.

“எல்லாம் அந்த நாளிலிருந்தே உன்னைப் போன்ற பெண்களிடம் படித்துக் கொண்ட பேச்சுத்தானே? பத்துப் பன்னிரண்டு ஆண்களுக்கு முன்னால் மதுரை அரண்மனை

நந்தவனத்தில் சிறு குழந்தைகளாக விளையாடிக் கொண்டிருப்போமே, அப்போது நடந்ததெல்லாம் உனக்கு நினைவிருக்கிறதா குழல்மொழி? உங்களுக்கெல்லாம் அப்போது ஏழெட்டு வயதுகூட இருக்காது. பட்டுப் பாவாடை மண்ணில் புரள நீ, தளபதியின் தங்கை பகவதி, ஆசிரியர் மகள் விலாசினி, இன்னும் இரண்டு மூன்று சிறுமிகள் எல்லோருமாகச் சேர்ந்து கொண்டு அரண்மனை நந்தவனத்துக்குப் பூப்பறிக்க வருவீர்கள். நான் அப்போது பத்துப்பன்னிரண்டு வயதுச் சிறுவன். வாட்போர் கற்றுக்கொண்டிருந்த சமயம் அது வேடிக்கையாக வாளை உருவிச் செடிகளை வெட்டுவேன். உங்கள் பூக் கூடைகளைத் தட்டி விடுவேன். உங்களுக்கு அப்போது எப்படிக் கோபம் வரும்? என்னை என்னென்ன பேச்சுப் பேசுவீர்கள்?” பழைய இளமை நினைவுகளை நினைத்துப் பார்க்கும்போது ஏற்படும் ஒருவித ஏக்கம் மிகுந்த குரலில் பேசினான் இராசசிம்மன்.

“ஏ, அப்பா! உங்களுக்குத்தான் எவ்வளவு நினைவாற்றல்? நாங்கள் கூட மறந்து விட்டோம். சிறு வயதில் நடந்தவற்றை யெல்லாம் மறந்துவிடாமல் நினைவு வைத்துக்கொண்டிருக்கிறீர்களே?” என்று சொல்லிச் சிரித்தாள் குழல்மொழி. சொல்லி முடித்ததும் அவள் நெஞ்சம் மேலெழுந்து தணிய ஒரு பெருமூச்சு அவளிடமிருந்து வெளிப்பட்டது. அவள் உள்ளத்திலும் துள்ளித் திரிகின்ற காலமான அந்தப்பிள்ளைப் பருவத்து நிகழ்ச்சிகள், அவற்றைப் பற்றிய நினைவு அலைகள், கழிவிரக்கங்கள் எல்லாம் குமுறி எழுந்தன.

“வயது ஆக ஆக மனிதனுக்கு எது தன்னுடைய சொந்தக் கணக்கில் மீதமாகிறது தெரியுமா, குழல்மொழி? பழைய இளமை நினைவுகள் மட்டும்தான். இதோ என்னைப் பார். எத்தனை அரசியல் குழப்பங்கள், வெற்றிகள், தோல்விகள், சூழ்ச்சிகள், சோதனைகள் எல்லாம் வயதான பிறகு என்னைப் பிடித்துக் கொண்டன! தெரிந்தோ, தெரியாமலோ என் வயதையும், பொறுப்பையும் இவை அதிகப்படுத்தி விட்டன. அந்தப் பிள்ளை மனம், அந்த விளையாட்டுத் தனமான குறும்புகள் எல்லாம் இப்போது கல்லாக முற்றி விட்டன.”

தன் உள்ளத்தின் அடக்கமுடியாத துன்ப உணர்ச்சிகளின் தடுக்க முடியாத வெள்ளத்தையே உடைத்து விடுவதுபோல் அவளிடம் மனம் திறந்து பேசினான் அவன்.

பேசிக்கொண்டே இருந்தவன் பேச்சை நிறுத்திவிட்டு அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தபோது மென்மையான சோகம் படிவதைப் போன்ற கண்களின் கடைக்கோடியில் இரு நீர் முத்துக்கள் உதிர இருந்தன. அவன் பார்த்ததும் திடுக்கிட்டவள் போலத் தன் கையால் கண்களைத் துடைத்துக் கொண்டாள் குழல்மொழி.

“அடடா! உணர்ச்சி வசப்பட்டு எதையெதையோ பேசி உன் துன்பத்தைக் கிளறி விட்டுவிட்டேன் போலிருக்கிறது. இதுவரை நான் கூறியவற்றை மறந்துவிடு. வா! உள்ளே போய் அந்தச் சுந்தரமுடியையும், பொற் சிம்மாசனத்தையும் வீர வாளையும் இருவருமே பார்த்துவிட்டு வருவோம்.”

“நான் வரவில்லை! நீங்கள் மட்டும் போய்ப் பார்த்து விட்டு வாருங்கள்.”

“பரவாயில்லை! நீயும் வா!” இராசசிம்மன் அவளை வற்புறுத்தி அழைத்துக்கொண்டு உள்ளே போனான்.

ஆகா! அந்த அறைக்குள்தான் என்ன ஒளி! என்ன அழகு! தாமரைப் பூவைப் போல் வட்டமாகப் பளிங்கு மேடை! அந்த மேடையின் மேல் ஒரு நீண்ட, பெரிய தந்தப்பேழை. பக்கத்தில் பட்டு உறையினால் பொற்சிம்மாசனம் மூடீவைக்கப்பட்டிருந்தது. தரைப் பரப்பின் மேல் குங்குமச் சிவப்பில் ஒளி நிறைந்த இரத்தினக் கம்பளங்களை விரித்திருந்தார்கள். கோவிலின் கர்ப்பக் கிருகத்துக்குள் நிற்பதைப் போன்று பயபக்தியோடு தந்தப் பேழைக்கு முன் வந்து நின்றனர் இராசசிம்மனும் குழல்மொழியும். அறை முழுவதும் பரிமளமான மணங்கள் கலந்து நிறைந்திருந்தன. தெய்வச் சிலைக்கு முன்நின்று மரியாதை மிளிரும் கண்களால் பார்ப்பது போல் அந்தப் பேழையை இமையாமல் பார்த்துக் கொண்டு நின்றான் இராசசிம்மன்.

“என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்?”–அவள் கேட்டாள்.

“பார்ப்பதற்கு என்ன இருக்கிறது? ஊழி ஊழியாகப் பொதியமலைத் தென்றலையும் முதிய தமிழ்ப் புலமையையும் போற்றிப் பாராட்டி அசைந்த முடி எதுவோ அது இப்போது இந்த நான்குமுழ நீளமுள்ள தந்தப் பேழைக்குள் அடங்கி விட்டதே!” என்று இரங்கிய குரலில் கூறிக்கொண்டே பிறகு அருகில் நெருங்கி அந்தப் பேழையைத் திறந்தான் அவன். உள்ளிருந்து ஒரு நட்சத்திர மண்டலமே எட்டிப் பார்ப்பதுபோல் ஒளிக்கீற்றுக்கள் பாய்ந்தன. மஞ்சள் நிறப் பட்டு விரிப்பின்மேல் அந்த மின்னல் முடி வெண்ணிலா விரித்தது. அதனருகே பேழையின் நீளத்துக்குச் சரியாக வைரக் கற்களும், வெண் முத்துக்களும், விரவிப்பதித்த உறைக்குள் வீரவாள் ஒன்று மறைந்து கொண்டிருந்தது.

“மகாமன்னரான என் தந்தைக்குப் பின்னர் இந்த ஒளி முடியும், வீரவாளும் இப்படியே பேழையில் உறங்கவேண்டியது தானா? இவற்றைப் பேழைக்குள் பார்க்கும்போது கண்ணின் நடுமையத்துக் கருவிழிகளைக் கூச வைக்கும் இந்த ஒளியைப் பார்க்கும்போது என் உள்ளம் ஏன் இப்படிப் பொங்கி மேலெழுகிறது? உணர்ச்சிகளில் ஏன் புதிய வேகம் உண்டாகிறது? வெறும் முடியும், வாளும் மட்டுமா இதற்குள் அடைப்பட்டிருக்கின்றன? என் கண்களுக்கு இவை வேறொரு விதமாகவும் தோன்றுகின்றனவே! என் தந்தையின் தலைமுறைக்குப் பாண்டியப் பேரரசின் புகழும், வீரமுமே இப்படிச் சிறைப்பட்டு விட்டனவா?” அவனுடைய உள்ளத்தில் அலை அலையாகச் சிந்தனைகள் எழுந்தன.”

இரண்டு கைகளாலும் அவற்றைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டான். குழல்மொழி எதுவும் பேசத் தோன்றாமல் மருண்ட விழிகளால் அவனைப் பார்த்துக் கொண்டே நின்றாள். அவன் பேழையை மூடிவிட்டுக் கடுமையான காவலுக்கு உட்பட்ட அந்தச் சிறிய அறையைச் சுற்றிலும் தன்னுடைய விழிகளைச் சுழற்றினான்.

பின்பு, “போகலாம் வா” என்று குழல்மொழியையும் அழைத்துக் கொண்டு வெளியில் வந்தான். யவன வீரர்கள் மறுபடியும், வணக்கத்தோடு வழி விட்டு விலகி நின்று கொண்டனர்.

மாளிகையின் மற்றப் பகுதிகளைச் சுற்றிப் பார்க்கும் போது குழல்மொழியும் இராசசிம்மனும், ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. இதற்கிடையில் தன் தோற்றத்தைப் பழையபடி துறவிபோல் மாற்றிக் கொண்டு விட்டான் அவன்.

கடைசியாக இடையாற்று மங்கலம் மாளிகையின் மேல் மாடத்தில் நிலா முற்றத்தின் திறந்த வெளியில் வந்து நின்றார்கள் அவர்கள் இருவரும். அந்த மாளிகையிலேயே உயர்ந்த இடம் அதுதான். அங்கிருந்து கீழே நாற்புறத்துக் காட்சிகளும் அற்புதமாகத் தெரிந்தன. இடையாற்று மங்கலம் என்ற பசுமைப் பிரதேசத்துக்கு இரண்டு ஓரங்களிலும்.வெள்ளைக் கரையிட்டது போலப் பறளியாறு பாய்ந்து கொண்டிருந்தது. வர்ணக் கலவைகளை வாரி இறைத்தது போல் அரண்மனை நந்தவனத்தில் பல நிற மலர்களும் தெரிந்தன.

“உலகத்தின் சாதாரணமான அழகை உலக நிலைக்கும் மேலே இருந்து கண்டால் எவ்வளவு அழகாக இருக்கிறது, பார்த்தாயா?” என்று சிரித்துக்கொண்டே கூறினான் இராசசிம்மன்.

“உண்மைதான் ! எந்தச் சாதாரணப் பொருளின் நிலையையும் நன்றாக உணர வேண்டுமானால் அதைவிட உயர்ந்த நிலையிலிருந்து தான் காணவேண்டும்.” குழல்மொழி பேச்சில் தத்துவத்தைக் கொண்டு வந்து புகுத்தினாள்.

ஆனால் இராசசிம்மன் அவளுடைய பேச்சைக் காதில் போட்டுக் கொள்ளாமல் வேறொரு காட்சியில் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தான்.

“இதென்ன? என்னிடம் பேச்சுக் கொடுத்துவிட்டு இதைக் கவனிக்காமல் எங்கே பார்க்கிறீர்கள்?” என்று சிறிது சினத்துடனே கடிந்து கொண்டு அவன் பார்வை சென்ற திசையில் தானும் பார்த்தாள் குழல்மொழி.

பறளியாற்றின் நடுவில் ஒரு படகு வேகமாக அரண்மனையை நோக்கி வந்து கொண்டிருந்தது. படகில் வீற்றிருந்தவர்கள் நன்றாகத் தெரியாவிட்டாலும் வேளான்தான் அதைச் செலுத்திக் கொண்டு வருகிறான் என்று தெரிந்து கொள்ள முடிந்தது. படகில் இருந்த மற்ற மனிதர்களை இன்னாரென்று குழல் மொழியால் கண்டு கொள்ள முடியவில்லை. ஆனால் அந்தத் திசையில் பார்த்துக் கொண்டிருந்த இளவரசன் இராசசிம்மனின் முகத்தில் வியப்பு மலர்வதை அவள் கவனித்தாள்.

“இவ்வளவு அவசரமாக வேளான் யாரைப் படகில் ஏற்றிக்கொண்டு வருகிறான்?” என்று இராசசிம்மனிடமே கேட்டாள் குழல்மொழி.

“ஆம், அவசரம்தான். நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஒரு முக்கியமான மனிதன் என்னைச் சந்திக்க வந்து கொண்டிருக்கிறான். நீ சிறிதுநேரம் இங்கேயே இரு அவனைச் சந்தித்துப் பேசிவிட்டு வருகிறேன்” என்று சொல்லிக் கொண்டே மேன் மாடத்திலிருந்து இறங்கிச் சென்று விட்டான் இராசசிம்மன். அவன் நின்று பதில் சொல்லாமல் வேகமாகச் செல்வதைக் கண்டு திகைத்துப்போய் நின்றாள் குழல்மொழி.

Previous articleRead Pandima Devi Part1 Ch25 | Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Pandima Devi Part1 Ch27 | Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here