Home Na Parthasarathy Read Pandima Devi Part1 Ch27 | Na. Parthasarathy | TamilNovel.in

Read Pandima Devi Part1 Ch27 | Na. Parthasarathy | TamilNovel.in

124
0
Read Pandima Devi Part1 Ch27 Pandima Devi Na. Parthasarathy, Read Pandima Devi Online Free, Pandima Devi PDF, Download Pandima Devi novel, Pandima Devi book
Read Pandima Devi Part1 Ch27 | Na. Parthasarathy | TamilNovel.in

Read Pandima Devi Part1 Ch27 | Na. Parthasarathy | TamilNovel.in

பாண்டிமாதேவி – நா. பார்த்தசாரதி

முதல் பாகம், அத்தியாயம் 27 : சேந்தன் மனத்தில் சில சந்தேகங்கள்

Read Pandima Devi Part1 Ch27|Na.Parthasarathy| TamilNovel.in

நிலவறையிலிருந்து ஆள் தப்பித்துக்கொண்டு மேலே ஒடும் காலடியோசை கேட்டதும் நாராயணன் சேந்தனுக்கு இதயத் துடிப்பே நின்று விடும் போலிருந்தது. அப்படியே இருட்டில் தாவிப் பாய்ந்து ஓடிப் பிடிக்கலாமென்றால் காலடியில் அவனைச் சுற்றிக் கூர்மையான வாள்கள் சிதறிக் கிடந்தன.

அவற்றை மிதியாதபடி பதறாமல் கீழே குனிந்து உட்கார்ந்துகொண்டு கை விரல்களை அறுத்துவிடாமல் சிதறியிருந்த வாள்களை ஒதுக்கி வழி உண்டாக்கிக் கொண்டான். பின்பு தப்பிச் சென்றவனைத் துரத்திக் கொண்டு படியேறி ஓடினான். ஆனால் தப்பித்தவன் போகிற போக்கில் தாழிட்டுக் கொண்டு போயிருப்பதைக் கண்டதும் சேந்தனுக்கு என்ன. செய்வதென்றே தெரியவில்லை.

பலங்கொண்ட மட்டும் கதவைத் தன்கைகளால் ஓங்கித் தட்டினான். நீண்ட நேரமாக அப்படித் தட்டிக் கொண்டே இருந்தான். கைகள்தான் வலித்தன. “சரிதான்! வகையாக மாட்டிக் கொண்டுவிட்டேன். இந்த முரட்டுக் கதவை விடிய விடியத் தட்டினாலும் யாருக்குக் கேட்கப் போகிறது? இந்த இருட்டுக் கிடங்கில் பட்டினி கிடந்து சாக வேண்டுமென்று தான் என் தலையில் எழுதியிருக்கிறதோ, என்னவோ?” என்று கதவடியில் கன்னத்தில் கையை ஊன்றிக்கொண்டு உட்கார்ந்து விட்டான். காலையில் இடையாற்று மங்கலத்திலிருந்து கோட்டாற்றுக்கும், கோட்டாற்றிலிருந்து தளபதியை அலைக் கழிப்பதற்காகத் திருநந்திக்கரைக்கும் அலைந்து களைத்திருந்த நாராயணன் சேந்தன் உட்கார்ந்தவாறே துரங்கத் தொடங்கி விட்டான்.

மறுபடியும் அவன் கண் விழித்தபோது அவனுக்காகவே திறந்து வைக்கப்பட்டிருந்ததுபோல் நிலவறையின் மேற்கதவு திறந்திருந்தது. கதவுக்கு அப்பால் மந்திராலோசனை மண்டபத்தில் யாரோ பெண்களின் சிரிப்பொலியும் பேச்சொலியும் கேட்டன. அதற்குள் ஒரு குட்டித்துக்கம் துரங்கி முடித்திருந்த சேந்தன் மேலே எழுந்துவந்தான். யார் கதவைத் திறந்து வைத்திருக்கக்கூடும்?’ என்ற சந்தேகம் அவனுக்கு ஏற்பட்டது. ‘தான் கைவலிக்கத் தட்டியபோது ஒருவரும் திறக்கவில்லை. அலுப்பினால் கண் அயர்ந்து விட்டபோது யாரோ பூனைபோல் மெல்ல வந்து கதவைத் திறந்திருக்கிறார்கள். திறந்ததுதான் திறந்தார்கள். ஆனால் கீழே கதவருகில் உட்கார்ந்துகொண்டிருந்த என்னைக் கவனிக்கவில்லையே!’ என்று அவன் நினைத்தான்.

உள்ளிருந்து வெளியேறி மேலே வந்தபின் கதவை முன் போலவே அடைத்துத் தாழிட்டுவிட்டு மந்திராலோசனை மண்டபத்தில் கும்மாளமடிக்கும் அந்தப் பெண்கள் யார் என்று பார்க்க வந்தான்.

தளபதியின் தங்கை பகவதி, ஆசிரியர் மகள் விலாசினி, மகாராணியாரின் உடன் கூட்டத் தோழிகளைச் சேர்ந்த இன்னும் இரண்டு மூன்று பெண்கள்-எல்லோரும் அங்கு உட்கார்ந்து சொக்காட்டான் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சதுரங்க விளையாட்டினிடையே இலக்கியச் சர்ச்சையும் நடந்து கொண்டிருந்தது.

“ஏண்டி, விலாசினி? தொல்காப்பியத்தை இயற்றிய தொல்காப்பியர் அகத்தியரின் மாணவரா? அல்லது அதங்கோட்டாசிரியரின் மாணவரா?” என்று கேட்டாள் பகவதி.

“சதுரங்க விளையாட்டினிடையே இந்தச் சந்தேகம் உனக்கு எங்கிருந்து முளைத்தது!…” விலாசினி சிரித்துக் கொண்டே கேட்டாள்.

அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருந்த சமயத்திலா நாராயணன் சேந்தன் அங்கே தலையைக் காட்டவேண்டும்?

“ஆ! அதோ, அகத்தியரே நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அவரையே நேரில் கேட்டுவிடலாம்” என்று நாராயணன் சேந்தன் குட்டையாயிருப்பதைச் சொல்லாமல் சொல்லிக் கேலி செய்தாள் ஒருத்தி,

“ஓ! இந்த அகத்தியரா? இவருக்கு உளவறியும் வேலையைத் தவிர எதுவும் தெரியாதே. பாவம் இந்த உலகத்தில் எல்லோருடைய உடம்பும் மேல் நோக்கி வளருகின்றன என்றால், இவருடைய உடம்பு மட்டும் கீழ் நோக்கி வளர்ந்து கொண்டிருக்கிறது” என்று சேந்தன் காதில் கேட்டுவிடாமல் மெல்லச் சொல்லிச் சிரித்தாள் ஒருத்தி.

“நிலவறைக் கதவைத் திறந்தது நீங்கள்தானா?” என்று கடுமையான குரலில் அவர்களைக் கேட்டான் சேந்தன்.

விளையாட்டை நிறுத்திவிட்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள் அந்தப் பெண்கள். அவர்கள் பதில் சொல்லாமலிருந்தது அவனுடைய கடுமையை அதிகப்படுத்தியது.

“பெண்களாகச் சேர்ந்துகொண்டு விளையாட்டாக ஏதாவது செய்து விடுகிறீர்கள். அதனால் பெரிய பெரிய காரியங்கள் கெட்டுப்போய் விடுகின்றன.”

“ஐயா, ஒற்றர் பெருமானே! உமக்குக் கோடி வணக்கங்கள் செலுத்துகிறேன். எங்களிடம் வம்புக்கு வராமல் போய்ச் சேருங்கள். உள்ளே இருந்து யாரோ கதவைத் தட்டுவது போலிருந்தது. திறக்கலாமா, வேண்டாமா? என்று நீண்ட நேரம் யோசித்தோம். கடைசியில் நாங்கள் திறந்தபோது யாரும் உள்ளேயிருந்து வெளியில் வரவில்லை. நிலவறைக்குள் எட்டிப் பார்த்ததில் படியருகில் யாரோ உட்கார்ந்திருப்பதுபோல் தெரிந்தது. இரண்டு மூன்று முறை யார் யார்? என்று இரைந்து கேட்டுப் பார்த்தோம். பதில் இல்லை. நிலவறைக்குள் இருட்டாக இருந்ததனால் எங்களுக்குப் பயமாக இருந்தது. பேசாமல் திரும்பி வந்து விட்டோம்” என்று பகவதி அவனுக்குப் பதில் கூறினாள்.

சேந்தன் மகாமண்டலேசுவரரைச் சந்திப்பதற்காக அங்கிருந்து சென்றான். அவன் மனத்தில் சந்தேகங்களும் வயிற்றில் பசியும், உடம்பில் அலுப்பும் வளர்ந்து கொண்டிருந்தன. அவற்றுக்கு இடையே வேறொரு வகைப் பயமும் அவனுக்கு ஏற்பட்டது. “முன்கோபக்காரனும், செல்வாக்கு மிகுந்தவனுமான தளபதி வல்லாளதேவனிடம் பொய் சொல்லி ஏமாற்றிவிட்டேனே அதன் விளைவு என்ன ஆகுமோ?” என்று உள்ளுற அஞ்சிக் கொண்டிருந்தான்.

“திருநந்திக்கரையிலிருந்து அரண்மனைக்கு வந்து சேருவதற்குத் தளபதிக்குக் குதிரை கிடைக்கப் போவதில்லை. தளபதி கோட்டாறிலுள்ள படைச்சாலைக்குச் சொல்லி அனுப்பிக் குதிரை வரவழைக்க வேண்டும், அல்லது கடல் துறையிலிருந்து மிளகுப் பொதி ஏற்றிவிட்டுத் திரும்பும் வணிகப் பெருமக்களின் வாகனங்களில் ஏதாவதொன்றில் இடம்பிடித்து வரவேண்டும். இந்த இரண்டு வழியுமே சாத்தியப்படாவிட்டால் இன்றிரவிற்குள் இங்கே வந்து சேரமுடியாது.” இந்த ஒரே ஒரு சமாதானம் தான் சேந்தனுக்குத் தற்காலிகமான தன்னம்பிக்கையைக் கொடுத்தது.

‘இன்னும் கூற்றத் தலைவர் கூட்டம் நடந்து கொண்டு தான் இருக்கும். அதற்குள் எங்கே முடிந்திருக்கப் போகிறது?’ என்ற எண்ணத்தினால் மகாமண்டலேசுவரர் பட்டி மண்டபத்தில் தான் இருப்பாரென்று கருதிக்கொண்டு அங்கே சென்றான். ஆனால் பட்டிமண்டபத்தில் யாருமில்லை. கூட்டமும் முடிந்து அவரவர்கள் தங்கும் இடங்களுக்குப் போயிருந்தார்கள். சேந்தனுக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது.

பட்டி மண்டபத்திலிருந்து அவன் திரும்பியபோது பின்புறம் தோள்பட்டையின் வலதுபுறம் ஒரு கை அழுத்தித் தொட்டது. நாராயணன் சேந்தன் அலறிவிட இருந்தான். தன்னைச் சமாளித்துக் கொண்டு பயத்தை அடக்கியவனாகத் திரும்பிப் பார்த்தான். பட்டி மண்டபத்துத் துரண் ஒன்றின் மறைவிலிருந்து ஆபத்துதவிகள் படையணியின் தலைவனான மகரநெடுங்குழைக் காதன், சேந்தனுக்கு முன்னால் வந்து நின்றான். அவன் அப்போதிருந்த நிலையைப் பார்த்தபோது சேந்தனுக்கு வியப்பு மட்டும் ஏற்படவில்லை. பயம்தான் அதிகமாக ஏற்பட்டது. மகரநெடுங்குழைக்காதனின் கண்கள் நெருப்புத் துண்டங்களைப் போலச் சிவந்திருந்தன. அங்கியும், மேலாடையும் அங்கங்கே துளசியும் அழுக்கும் பட்டுக் கிழிந்திருந்தன. முகத்திலும் கைகால்களிலும் சிராய்த்து இரத்தக்கசிவு தெரிந்தது. அந்த நிலையில் நாராயணன் சேந்தனைப் பார்த்து ஒரு சிரிப்புச் சிரித்தான். அவன் சிரிக்க வேண்டுமென்று எதையோ நினைத்துக் கொண்டு சிரித்தது போலிருந்தது. பயங்கரமாகவும் இருந்தது அந்தச் சிரிப்பு.

“என்ன ஐயா? இங்கே பட்டி மண்டபத்துத் தூண்மறைவில் நின்று கொண்டு என்ன செய்கிறீர்?” என்று கேட்டான் சேந்தன். குழைக்காதன் சேந்தனுக்குப் பதில் சொல்லாமல் அவன் முக்ததை உற்றுப் பார்த்து, மெல்லச் சிரித்தான். இயற்கையாகச் சிரிக்கின்ற சிரிப்பாக இல்லை அது.

“ஆபத்துதவிகளின் செயல் மட்டும்தான் கடுமையான தென்று இதுவரையில் கேள்விப்ட்டிருந்தேன். அவர்களுடைய பார்வையும், சிரிப்பும் கூட அல்லவா கடுமையான இருக்கின்றன!”

சேந்தன் அதோடு பேச்சை விடவில்லை. மேலும் தொடர்ந்தான். “உங்கள் திருமேனியில் தென்படும் விழுப்புண் (காயங்கள்) களையும், கிழிசல்களையும் பார்த்தால் யாருடனோ போரிட்டுவிட்டு வந்திருப்பதுபோல் தோன்றுகிறதே?”

“அப்பனே! என் உடம்பைப்பற்றிச் சொல்ல வந்து விட்டாய். உன்னையே கொஞ்சம் நிதானமாகப் பார்த்துக் கொள். நீ எப்படியிருக்கிறாய் என்பது தெரியவரும்.” எதையோ மறைத்துக்கொண்டு சிரிக்கிறாற் போன்ற அந்த மர்மச் சிரிப்பு; அது ஆபத்துதவிகள் படைத்தலைவனுக்கே உரியது போலும். பேச்சின் இறுதியில் கடைசி வார்த்தையும் அவன் வாயிலிருந்து வெளிவந்து முடிந்தபின் அந்தச் சிரிப்பு மலர்ந்தது. குழைக்காதன் கூறிய பின்புதான் சேந்தன் தன் தோற்றத்தைத் தானே பார்த்துக் கொண்டான். ஏறக்குறையத் தன் நில்ையும் அதேபோல் இருந்ததைச் சேந்தன் அப்போதுதான் உணர்ந்தான். “அடடே! இந்தத் தோற்றத்தோடு மகாமண்டலேசுவரரைப் பார்ப்பதற்கு வேறு கிளம்பி விட்டேனே! நல்லவேளை, இவன் இதைக் கண்டு சொல்லியிராவிட்டால் இப்படியே போய் அவருக்கு முன்னால் நின்றிருப்பேன்” என்று எண்ணியவனாய் மகர நெடுங்குழைக்காதனிடம் விடைபெற்றுக் கொண்டு உடைமாற்றி வருவதற்குக் கிளம்பினான்.

நாராயணன் சேந்தனின் தலைமறைந்ததோ இல்லையோ அதற்காகவே காத்துக் கொண்டிருந்தவன்போல் பட்டி மண்டபத்துக்குள் நுழைந்து மந்திராலோசனைக் கூட்டம் நடந்த இடத்தில் எதையோ தேடினான் ஆபத்துதவிகள் தலைவன். அங்கே அவன் தேடிய பொருள். எதுவோ அது கைக்குக் கிடைப்பதற்கு அதிக நேரம் ஆகவில்லை. அவன் எடுத்துக்கொண்டு போவதற்காகவே அங்கு வைக்கப் பட்டிருந்ததுபோல் சுலபமாகக் கிடைத்துவிட்டது.

பட்டிமண்டபத்தில் கூற்றத் தலைவர்களின் மந்திரர்லோசனைக் கூட்டம் நடந்த போது மகா மண்டலேசுவரர் எந்த ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தாரோ, அதன் கீழே தான் அந்தப் பொருள் அவனுக்குக் கிடைத்தது. அது வேறொன்றுமில்லை, ஆபத்துதவிகளின் முத்திரைச் சின்னம் பொறித்த ஒரு பட்டுத்துணி. கீழே குனிந்து எடுப்பதற்குமுன் அதைத் தான் எடுப்பதை எங்கிருந்தாவது யாராவது பார்க்கிறார்களா என்று அவன் மனத்தில் சந்தேகம் ஏற்பட்டிருக்கும் போலும்! ஒரு வேளை தன்னைச் சோதிப்பதற்காகத்தான் அதைத் தேடி வருவதைப் பார்ப்பதற்காகவே அவ்வளவு சுலமாகப் போட்டு வைத்திருக்கலாமோ என்று அவன் பயந்திருக்கவேண்டும்.

அதனால் தான் அவ்வளவு தயக்கத்துடன் சுற்றிலும் பார்த்துக் கொண்டு அவன் அதை எடுத்தான். ஆனால் தன்னுடைய நிதானமும் முன்யோசனையும், தன்னை ஏமாற்றி விட்டன என்பதை அந்தத் துணியை எடுத்து வழக்கம்போல் இடுப்பில் அணிந்து, தலை நிமிர்ந்த போது அவன் தெரிந்து கொண்டான்.

மேலேயிருந்து இரண்டு பெரிய குடை மல்லிகைப் பூக்கள் அவனுடைய முன் தலையில் உதிர்ந்து நெற்றியில் நழுவி விழுந்தன. அந்தப்புரத்து நங்கையர்கள் தங்கள் அளக பாரத்திற்குப் பூசும் வாசனைத் தைலத்தின் மணம் அந்தப் பூவின் மணத்தில் விரவியிருந்தது. மகரநெடுங்குழைக்காதன் திடுக்கிட்டு மேலே நிமிர்ந்து பார்த்தான்.

மேலே அந்த இடத்துக்கு நேரே அந்தப்புரத்தின் மாடத்தில் ஒரு பெண் முகம் விறுட்டென்று திரும்பி மறைந்தது. திரும்பும் போது கருநாகம் போன்ற அந்தப் பெண்ணின் சடை சுழன்று அதிலிருந்த மல்லிகைப் பூக்களில் மேலும் சில அவன் மேல் உதிர்ந்தன. இளம் பெண் முகமாகத் தான் தெரிந்தது. திரும்பிய வேகத்தில் அவனால் முகத்தை அடையாளம் கண்டு நினைவில் வைத்துக் கொள்ளுவதற்கு முடியவில்லை. எவ்வளவு முன்னெச்சரிக்கையோடு நான்கு புறமும் பார்த்தேன்! மேலே பார்க்கத் தவறி விட்டேனே! என்று உதட்டைக் கடித்துக் கொண்டான் மகர நெடுங்குழைக்காதன். சிறிது நேரம் ஏதோ சிந்தித்துக் கொண்டு அங்கேயே நின்றான். கீழே கிடந்த அந்தக் குடை மல்லிகைப் பூக்களை ஒன்றுவிடாமல் பொறுக்கித் தன் அங்கியில் மறைத்து வைத்துக் கொண்டு புறப்பட்டான்.

அவன் புறப்பட்டுச் சென்றதும் அங்கு மற்றோர் ஆச்சரியம் நிகழ்ந்தது. உடை மாற்றிக் கொண்டு மகாமண்டலேசுவரரைச் சந்திக்கச் சென்று விட்டதாக நாம் யாரைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்கிறோமோ, அவன் பட்டிமண்டபத்து மேல் கோடித் துரண் ஒன்றின் மறைவிலிருந்து வெளிவந்தான். உண்மையில் நாராயணன் சேந்தன் மகர நெடுங்குழைக்காதனிடம் விடை பெற்றுக் கொண்டு போவது போல் போக்குக் காட்டினானே ஒழிய அங்கிருந்து போய் விடவில்லை. பட்டி மண்டபத்தில் ஆபத்துதவிகள் தலைவன் அலங்கோலமான நிலையில் தனியாக நின்று கொண்டிருப்பதைப் பார்த்தவுடனே சேந்தனைப் போல் அறிவுக் கூர்மையுள்ள ஒற்றனுக்குச் சந்தேகங்கள் ஏற்படாமலிருக்குமா? தெளிவற்ற பல, குழப்பமான எண்ணங்களும், சந்தேகங்களும் அவனுக்கு உண்டாயின. ‘ஆபத்துதவிகள் தலைவன் பட்டிமண்டபத்தில் தனியாக என்ன செய்கிறான்?’ என்பதைப் பார்த்து வைத்துக் கொண்டால் பின்பு மகாமண்டலேசுவரர் கேட்கும் போது கூறுவதற்கு வசதியாக இருக்குமென்று தான் அவன் மறைந்திருந்து அதைக் கண்காணித்தான்.

அதன் பின் சேந்தன் பட்டிமண்டபத்திலிருந்து வெளியேறிப் பராந்தகப் பெரு வாயிலுக்கு வந்து நின்றான். பராந்தகப் பெருவாயிலிலிருந்து மேற்கு நோக்கி இரண்டாங்கோட்டை வாசல் திருச்சுற்றினுள்ளே சென்றால் அரண்மனை விருந்தினர் மாளிகைகள் பூந்தோட்டத்துக்கு நடுவே இருந்தன. அந்த மாளிகையில் ஒன்றில் தான் மகாமண்டலேசுவரர் தங்கியிருக்க வேண்டுமென்பது அவனுக்குத் தெரியும்.

கோட்டைக்குள் யாரோ குதிரையில் வரும் ஒலி கேட்டு சேந்தன் பராந்தகப் பெருவாயிலின் முகப்பில் தயங்கி நின்றான். வருவது யார் என்று பார்த்து விட்டு அதன் பின் விருந்தினர் மாளிகைக்குப் போகலாமென்பது அவன் எண்ணம். ஒரே குதிரையில் இரண்டு பேர்கள் ஏறிக்கொண்டு வருவதைப் பார்த்ததும் அவனுக்கு ஆச்சரியம் உண்டாயிற்று. முன்னால் உட்கார்ந்திருந்தவன் இன்னாரென்று தெரிந்து கொள்ள முடியவில்லை. தோற்றத்திலுள்ள நிலையைக் கொண்டு பார்த்தால் ஏதோ அரசாங்கத் துரதன் மாதிரி இருந்தது. குதிரை அருகில் வந்ததும் பின்னால் உட்கார்ந்திருந்த இரண்டாவது ஆளின் முகம் தெரிந்தது. அதைப் பார்த்ததும் பயத்தோடு சரேலென்று பூந்தோட்டத்தின் அடர்ந்த பசுமைக்குள் புகுந்து தன்னை மறைத்துக் கொண்டான் சேந்தன். கோட்டைக்குள் வந்த குதிரையில் வீற்றிருந்த இரண்டாவது ஆள் வல்லாளதேவன்.

Previous articleRead Pandima Devi Part1 Ch26 | Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Pandima Devi Part1 Ch28 | Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here