Home Na Parthasarathy Read Pandima Devi Part1 Ch28 | Na. Parthasarathy | TamilNovel.in

Read Pandima Devi Part1 Ch28 | Na. Parthasarathy | TamilNovel.in

74
0
Read Pandima Devi Part1 Ch28 Pandima Devi Na. Parthasarathy, Read Pandima Devi Online Free, Pandima Devi PDF, Download Pandima Devi novel, Pandima Devi book
Read Pandima Devi Part1 Ch28|Na.Parthasarathy| TamilNovel.in

Read Pandima Devi Part1 Ch28 | Na. Parthasarathy | TamilNovel.in

பாண்டிமாதேவி – நா. பார்த்தசாரதி

முதல் பாகம், அத்தியாயம் 28 : நள்ளிரவில் நால்வர்

Read Pandima Devi Part1 Ch28 | Na. Parthasarathy | TamilNovel.in

முன்சிறை அறக்கோட்டத்தின் வாயிலில் எதிர்பாராத விதமாகக் கரவந்தபுரத்துத்துதனைச் சந்திக்க நேர்ந்தது இரண்டு வகையில் நன்மையாக முடிந்தது தளபதி வல்லாளதேவனுக்கு. ஒன்று அந்தத் துரதன் கொண்டு வந்திருந்த அதி முக்கியமான அவசரச் செய்தியைத் தெரிந்துகொள்ள முடிந்தது. மற்றொரு நன்மை, அரண்மனைக்குப் போவதற்குக் குதிரையில்லையே? என்று கவலைப் பட்டுக்கொண்டிருக்காமல் தூதனுடைய குதிரையிலேயே இருவரும் போய்விடலாம். பசி தீர அறக்கோட்டத்தில் சாப்பிட்டுவிட்டுப் பின்பு அரண்மனைக்குப் புறப்படலாம் என்றுதான் முதலில் தளபதி நினைத்திருந்தான். ஆனால் துரதன் கொண்டு வந்திருந்த செய்தியின் அவசரத்தை அறிந்தபோது பசி, களைப்பு எதுவுமே அவனுக்கு மறந்து போய்விட்டன. தூதனின் குதிரையிலேயே பின்புறமாகத் தா ஏறி உட்கார்ந்து கொண்டு புறப்பட்டு விட்டான்.

“மகா சேனாதிபதி எங்களுடைய அறக்கோட்டத்தையும், எங்களையும் இப்படி ஒரேயடியாக அவமதித்து விட்டுப் போவது கொஞ்சம்கூட நன்றாயில்லை. இன்னும் ஓரிரண்டு நாழிகைகள் தங்கி உணவருந்தி எங்கள் உபசாரத்தை ஏற்றுக் கொண்டு போகலாமே!” என்று முன்சிறை அறக்கோட்டத்திலுள்ள அண்டராதித்த வைணவனும் அவன் மனைவி கோதையும்

மரியாதையாக வேண்டிக்கொண்டதைக் கூட அப்போது அவன் பொருட்படுத்தவில்லை.

பதில் சொல்லாமலே அவன் குதிரையை விட்டுக் கொண்டு செல்வதைப் பார்த்து, “தளபதிக்குத் தம் மேல் ஏதோ கோபம் போலிருக்கிறது?” என்று எண்ணிக்கொண்டு மேலும் வற்புறுத்திச் சொல்லாமல் பயந்துபோய் நின்று விட்டனர் வைணவனும் அவன் மனைவி கோதையும்.

“தூதனே! நீ கொண்டுவந்திருக்கும் செய்திமட்டும் மெய்யாக இருக்குமானால் இப்போதுள்ள சூழ்நிலையில் நம்மைப்போல் பரிதாபப்படத்தக்கவர்கள் வேறு யாருமில்லை. நல்ல சமயத்தில் நீ வந்திருக்கிறாய். இப்போது அரண்மனையில் மகாமண்டலேசுவரர் உள்படக் கூற்றத் தலைவர்கள் எல்லோரும் இருப்பார்கள். நாம் செய்ய வேண்டிய ஏற்பாடுகளைப் பற்றி எல்லோரிடமும் கலந்து பேசிவிடலாம். குதிரையை மட்டும் இன்னும் சிறிது வேகமாகவே செலுத்திக் கொண்டு போ” என்று தூதுவனைத் துரிதப்படுத்தினான் தளபதி, துரதனும் தன்னால் இயன்ற அளவு குதிரையை வேகமாகச் செலுத்திக் கொண்டு போனான்.

பட்டி மண்டபத்தில் நடந்த கூற்றத்தலைவர்களின் கூட்டத்தில் நம்பிக்கையும் ஒளியும் நிறைந்த எதிர்காலத் தீர்மானங்களை உருவாக்கியிருந்தார்கள்.

அன்று கூற்றத் தலைவர்களுக்கும் மகா மண்டலேசுவரருக்கும் முன்னால் தன் நிலையைப் பற்றி விவரிக்கும்போது மகாராணி வானவன்மாதேவிக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது.

“மகாமன்னர் இறந்தபிறகு மகாமண்டலேசுவரரும் நீங்களும் எனக்குப் பெரும் பதவியையும் மரியாதையையும் அளித்திருக்கிறீர்கள். ஆனால் இந்த அரசபோக ஆடம்பரங்களை நீண்ட நாட்கள் அனுபவிக்கும் பொறுமை எனக்கு இல்லை. என் அருமைப் புதல்வன் எங்கே இருக்கிறானென்றே நான் அறிய முடியவில்லை. என்னைச் சுற்றிலும் துன்பங்களையும், சூழ்ச்சிகளையும் காண்கிறேன். எனது பிறந்தகமாகிய சேர

நாட்டுக்காவது சென்று அமைதியாக வாழ்வேன். அதையும் செய்ய விடாமல் உங்கள் அன்பு என்னைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. மகாமன்னரையும் இழந்து பின் புதல்வனையும் விட்டுவிட்டு நான் மட்டும் இப்படி யாருக்காக இங்கு வாழவேண்டும்? இப்படி நான் வாழ்வது கூடச் சிலருக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது. என்னையே அழித்துவிடுவதற்குக் கூடச் சூழ்ச்சிகள் நடக்கின்றன.”

இப்படி மகாராணி வானவன்மாதேவியார் பேசிக் கொண்டு வரும்போதே, “மகாராணியார் அப்படி அஞ்சக் கூடாது. தென்பாண்டி நாட்டு வீரர்களின் நெஞ்சில் நம்பிக்கையும், கைகளில் வலிமையும், வாளில் ஒளியும், இந்த விநாடிவரை குன்றிவிடவில்லை. மகாராணியாரை அழிக்க எந்தத் தீய சக்தியாலும் முடியாது” என்று ஆவேசம் பொங்கும் குரலில் உறுதியாகக் கூறினார் இடையாற்று மங்கலம் நம்பி. அதை ஆமோதிப்பதுபோல் அங்கிருந்த மற்றவர்களும் சிரக்கம்பம் செய்தனர்.

“அது சரிதான்! குமாரபாண்டியர் எங்கேயிருக்கிறார் என்றறிவதற்கு நாமாகவே ஏதேனும் முயற்சிகள் செய்ய வேண்டாமா? இப்படி வாளாவிருந்தால் அவரைப் பற்றி என்ன தெரிந்துகொள்ள முடியும்?” என்று மகா மண்டலேசுவரர் பக்கமாகத் திரும்பி ஒரு கேள்வியைக் கேட்டார் சுழற்கால் மாறனார்.

மகாமண்டலேசுவரர் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன்பே, மற்றவர்களும் அவரிடம் சரமாரியாகக் கேள்விகளைத் தொடுக்க ஆரம்பித்தனர்.

“இளைய சக்கரவர்த்தியை உடனே அழைத்துவர ஏற்பாடு செய்ய வேண்டாமா?” என்று கேட்டார் ஒருவர்.

“மகாராணியாரின் கவலைகள் குறைந்து நிம்மதியும், அமைதியும் உண்டாக வேண்டுமானால் குமாரபாண்டியர் எங்கிருந்தாலும் தேடிக்கொண்டு வந்து முடிசூட்டி விடுவதே முறை” என்றார் மற்றொருவர்.

“எல்லோரும் சற்று அமைதியாக இருங்கள். என்னுடைய கருத்தை விரிவாகச் சொல்லி விடுகிறேன். இதுவரை இந்த எண்ணங்கள் எல்லாம் எனக்குத் தோன்றாமல் போய்விட வில்லை. அல்லது தோன்றியும் எவற்றையும் செயல்படுத்தக் கூடாது என்பதற்காக நான் பேசாமல் இருக்கவில்லை. என்னுடைய ஒவ்வொரு தயக்கத்துக்கும் ஒரு முக்கியமான காரணம் இருக்கும். இளவரசர் எங்கேயிருக்கிறார் என்று தேடுவதோ, தேடிக் கண்டுபிடிப்பதோ எனக்குக் கடினமான காரியமில்லை. நினைத்தால் இப்போதே கொண்டு வந்து நிறுத்திவிடமுடியும் என்னால். ஆனால் நான் சூழ்நிலையைப் பற்றிச் சிந்திக்கிறேன். தென்பாண்டி நாட்டு அரசியலில் ஒழுங்கையும் அமைதியையும் ஏற்படுத்தி விட்டால் நமக்கு இருக்கும் பிற பகைகள் நீங்கும். அதன்பின் குமார பாண்டியருக்கு முடிசூட்டலாமென்பது என் எண்ணம்” என்று அவர் கூறிய சமாதானத்தைக் கேட்டபோது மற்றவர்களுக்கு அவரை எதிர்த்து என்ன சொல்வதென்றே தெரியவில்லை. முகத்தில் ஈயாடாமல் உட்கார்ந்திருந்தார்கள்.

“அலை ஓய்ந்து நீராடமுடியாது. பகைவர்களை எண்ணிக் கொண்டே எவ்வளவு நாட்களுக்குப் பேசாமல் இருக்க முடியும்? தவிர முடிசூட்டுவதற்கும் இளவரசரைத் தேடிக் கண்டுபிடித்து இங்கே அழைத்து வருவதற்கும் என்ன சம்பந்தம்? முடி சூட்டுவதைப் பின்னால் வைத்துக் கொண்டாலும், இளவரசர் இப்போதே இங்கு வந்து இருக்கலாமே! அவ்வாறு இருப்பது மகாராணியாருக்கும் ஆறுதல் அளிக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது” என்று துணிந்து இடையாற்று மங்கலம் நம்பியை நோக்கி நேருக்கு நேர் கூறினார், அதுவரை ஒன்றும் பேசாமல் அமைதியாக வீற்றிருந்த அதங்கோட்டாசிரியர்.

“வடதிசை மன்னர்களின் படையெடுப்பு இந்தச் சமயத்தில் நேரலாமென்று மகாமண்டலேசுவரர் எதிர்பார்க்கிறார் போலிருக்கிறது. குமாரபாண்டியர் இங்கு வந்திருந்தால் படையெடுப்பைச் சமாளிக்க நமக்கு நல்ல உதவி கிடைக்கும். குமார பாண்டியரின் தாய்வழி மாமன்மார்களும், மகாராணியாரின் பிறந்த வீட்டுச் சகோதரரும் ஆகிய சேரர்

படை உதவியை நாம் பெறலாம். சேர வேந்தரிடம் அவர் படை உதவி செய்வதற்கு மறுக்க இயலாதபடி அவருடைய மருமராகிய குமாரபாண்டியரையே தூதனுப்பலாம். இதையெல்லாம் மகாமண்டலேசுவரர் நன்றாகச் சிந்தித்திருந்தால் இளவரசரைத் தேடி உடனே இங்கு அழைத்துவர ஏற்பாடு செய்திருக்கலாமே!” என்று பவழக் கனிவாயரும் அதங்கோட்டாசிரியரோடு சேர்ந்து கொண்டார்.

சிறிது நேரம் கழித்துப் பேசுவதற்கு அஞ்சி உட்கார்ந்திருந்த கூற்றத் தலைவர்களும் ஒவ்வொருவராக அதே கருத்தை ஆதரித்துப் பேசத் தலைப்பட்டனர். மகாராணியாரின் விருப்பமும் அதுவாகத்தான் இருக்கும் என்பதை இடையாற்று மங்கலம் நம்பி குறிப்பாகப் புரிந்து கொண்டார். பல்லாண்டுகளாக நிமிர்ந்து நின்று பிடிவாதத்தாலும், அறிவுத் திறனாலும், தம் எண்ணமே எல்லோருடைய எண்ணமாகவும், தம் சொல்லே -எல்லோருடைய சொல்லாகவும், தம் செயலே எல்லோருடைய செயலாகவும்,-வெற்றி பெற்று வந்த அவருடைய அரசியல் வாழ்வில் முதல் முதலாக ஒரு வளைவு ஏற்பட்டது. மற்றவர்களை மாற்றி அவர்களைத் தம் வழிக்குக் கட்டுப்படுத்தும் சாமர்த்தியமான கலையில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த அவர் முதன்முதலாக மற்றவர்களுக்காக மாறிக் கட்டுப்படும் நிலையை அடைந்தார். எதற்கும் எவராலும் அசைத்து விட முடியாமல் கல்லாய் முற்றிப் போயிருந்த அந்த உள்ளத்தில் சற்றே தளர்ச்சி உண்டாயிற்று. ஆனால் அந்தத் தளர்ச்சி வெளிப்பட்டு விடாமல் மிகத் தந்திரமாக மறைத்துக்கொண்டார் அவர். ஒரு நளினமான சிரிப்பினால் மட்டுமே அதை அவரால் மறைக்க முடிந்தது.

“நல்லது! இன்றைய தினம் உங்கள் எல்லோருடைய கருத்தையும் குறிப்பாகவும், வெளிப்படையாகவும் தெளிவாக மறைக்காமல் என்னிடம் கூறிவிட்டீர்கள். நான் ஒப்புக் கொள்கிறேன். இன்னும் நான்கு நாட்களுக்குள் குமார பாண்டிரை இங்கே கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்.”

மகாமண்டலேசுவரருடைய இந்தப் பேச்சில் அதங்கோட்டாசிரியர் மறுபடியும் குறுக்கிட்டார்.

“மகாமண்டலேசுவரரை யாரும் வற்புறுத்தவோ, அவசரப்படுத்தவோ விரும்பவில்லை. நான்கு நாட்களில் தேடிக் கொண்டு வர வேண்டுமென்று அவசரப்பட்டுத் துன்ப முற வேண்டாம். வேண்டிய நாட்களை எடுத்துக் கொண்டு பதறாமல் தேடிப் பார்க்கலாமே!”–என்றார் ஆசிரியர் பிரான்.

“தேவையில்லை! நான்கு நாட்களே அதிகம். விரும்பினால் நான்கு நாழிகைக்குள் இளவரசரை அழைத்துவர என்னால் முடியும்”– என்று முகத்தில் அடித்தாற்போல் அதங்கோட்டாசிரியருக்குப் பதில் சொல்லி விட்டார் இடையாற்று மங்கலம் நம்பி.

“முடிந்தால் செய்யுங்கள்!” என்று படித்தவருக்கே உரிய அடக்கத்தோடு பேச்சை முடித்துவிட்டார் ஆசிரியர், ‘ஏனடா, இந்த மனிதரிடம் பேச்சுக் கொடுத்தோம் என்று ஆகிவிட்டது அவருக்கு தம் மேல் மகா மண்டலேசுவரருக்கு உள்ளுறச் சிறிது கோபம் ஏற்பட்டிருக்கிறது என்பதை அவருடைய பேச்சிலிருந்தே அதங்கோட்டாசிரியர் புரிந்து கொண்டார்.

இளவரசர் அரண்மனைக்கு அழைத்துக்கொண்டு வரப்பட்டதும் மற்றொரு கூற்றத் தலைவர் கூட்டம் நடத்துவ தென்றும், அதில் மற்ற விஷயங்களைப் பேசி முடிவு செய்து கொள்ளுவதென்றும் தீர்மானித்த பின் அன்றையக் கூட்டம் அதோடு முடிந்து விட்டது.

பட்டி மண்டபத்தில் கூட்டம் நடந்துகொண்டிருந்த போது நாராயணன் சேந்தன் வந்ததும், மகாமண்டலேசுவரர் அவனை இரகசியமாக நிலவறைக்கு அனுப்பியதும் நேயர்களுக்கு நினைவிருக்கலாம். கூட்டம் முடிந்ததும் எல்லோரும் அவரவர்கள் தங்கியிருந்த விருந்தினர் விடுதிகளுக்குச் சென்றுவிட்டனர். மகாமண்டலேசுவரர் மட்டும் தாம் நிலவறைக்கு அனுப்பியிருந்த சேந்தன் திரும்பி வருவானென்று எதிர்பார்த்துச் சிறிது நேரம் அங்கே தாமதித்தார். இடையே மற்றொரு காரியத்தையும் அங்கிருந்தவாறே முடித்துக்

கொண்டார். அவர் அங்கே சேந்தனுக்காகத் தாமதித்துக் கொண்டு நின்றபோது அந்தப் பட்டி மண்டபத்தின் மேலே இருந்த அந்தப்புரத்து மாடத்தில் புவன மோகினி என்ற வண்ண மகளின் உருவம் தெரிந்தது. புவன மோகினி அந்த அரண்மனையில் வண்ண மகளாகப் பணிபுரிபவள். வண்ண மகளின் வேலை அந்தப்புரத்திலும், கன்னி மாடத்திலும் உள்ள அரச குடும்பத்துப் பெண்களுக்கு அலங்காரம் செய்வதாகும். மற்றவர்களுக்கெல்லாம் அவள் அலங்காரம் செய்து விட்டால்தான் அழகு பிறக்கும். ஆனால் அவளுக்கோ யாரும் அலங்காரம் செய்யாமலே அபூர்வமான அழகும் இளமையும் வாய்த்திருந்தன. உண்மையில் புவன மோகினி என்ற பெயருக்கு அவள் பொருத்தமானவள்தான். பின்னிவிட்ட சடை அசையப் பிறைமதி போல் மல்லிகைச் செண்டு சூடி நடந்தாளானால் பார்க்கிறவர்களின் உள்ளமெல்லாம் பறிபோக வேண்டியதுதான்.

கீழே நின்றுகொண்டிருந்த மகாமண்டலேசுவரர் புவன மோகினியைக் கைதட்டிக் கூப்பிட்டார். மதிப்புக்குரிய மகாமண்டலேசுரருடைய அழைப்புக்குப் பணிந்து கீழே இறங்கி ஓடோடி வந்தாள் புவனமோகினி.

“பெண்ணே! எனக்கு உன்னால் ஒரு காரியம் ஆக வேண்டும். இதோ இந்த ஆசனத்தின் கீழே இந்தப் பட்டுத் துணியைப் போட்டுவிட்டுப் போகிறேன். இன்னும் சிறிது நேரத்துக்குள் இதை எடுத்துச் செல்ல வரும் மனிதனை நீ மேலேயிருந்து கவனித்து வைத்துக்கொள். அப்புறம் வந்து என்னிடம் சொல்” என்று கூறிவிட்டுத் தம் இடுப்பிலிருந்து ஒரு சிறு பட்டுத் துணியை எடுத்துத் தாம் உட்கார்ந்திருந்த ஆசனத்தின் கீழே போட்டுவிட்டுச் சென்றார் மகா மண்டலேசுவரர், புவன மோகினி அவர் கூறியபடியே செய்ய ஒப்புக் கொண்டு மாடத்தில் போய் நின்று கீழே கவனித்தாள். இதே சமயத்தில் விலாசினி, பகவதி முதலியவர்கள் மந்திரா லோசனை மண்டபத்துப் பக்கமாகச் சதுரங்கம் விளையாடச் சென்று விட்டதனால் புவனமோகினி அந்தப்புரத்தில் தனியாகவே இருந்தாள். அதனால் அவர் தன்னிடம் ஒப்புவித்துச் சென்றிருந்த உளவறியும் வேலையை அவள் சரியாகச் செய்ய

முடிந்தது. கூடிய வரையில் தான் அங்கே நின்று கண்காணிப்பது கண்காணிக்கப்படுகிறவருக்குத் தெரியாமல் இருக்க வேண்டுமென்று அவள் நினைந்திருந்தாள். ஆனால் அவள் குனிந்து பார்த்தபோது அவளுடைய தலையில் அணிந்திருந்த குடை மல்லிகைப் பூக்கள் அவளைக் காட்டிக்கொடுத்து விட்டன. அந்தப் பாழாய்போன பூக்கள் கீழே உதிர்ந்து அவள் எண்ணத்தில் கலக்கத்தை உண்டாக்காமல் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்?

புவன மோகினி உடனே ஒடிப்போய் இடையாற்று மங்கலம் நம்பியிடம் செய்தியைத் தெரிவித்துவிட்டு வந்திருந்தாலும் அவள் மனத்தில் பயம் ஏற்பட்டது. ஆபத்துதவிகள் தலைவனின் நெருப்புப் போன்ற விழிகளும், குரூரமான முகமும் அடிக்கடி தோன்றி அவளைப் பயமுறுத்தின. ‘மகரநெடுங்குழைக்காதன் தான் அவளை மேலேயிருந்து கண்காணித்தபோது தன்னைப் பார்த்திருப்பானோ?’ என்ற பயத்தினால் அன்றிரவு தூக்கமே அவளை அணுகுவதற்கு மறுத்தது. பழி பாவத்துக்கு அஞ்சாதவன், ஈரமற்றவன், கல்மனமுடையவன் என்று ஆபத்துதவிகள் தலைவனைப் பற்றி அவள் கேள்விப்பட்டிருந்த செய்திகள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்து அவளை மிரட்டிக் கொண்டிருந்தன.

‘புவனமோகினி’–ஆபத்துதவிகள் தலைவனை எண்ணி நடுங்கி உறக்கமின்றித் தவித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் நாராயணன் சேந்தன் தளபதி வல்லாளதேவனை எண்ணி உறக்கமின்றித் தவித்துக் கொண்டிருந்தான்.

‘ஐயோ! நான் தளபதியிடம் சிக்கி அடிபட வேண்டுமென்றுதான் என் தலையில் எழுதியிருக்கிறது போலும். இவ்வளவு தூரம் ஏமாற்றித் திருநந்திக்கரை வரையில் இழுத்தடித்தும் எவன் குதிரையிலோ இரவல் இடம் பிடித்து அரண்மனைக்கு வந்துவிட்டானே. அவனோடு போகாமல் யாரோ ஒரு தூதனையும் அல்லவா அழைத்துக்கொண்டு வந்திருக்கிறான்? என்ன ஆகப் போகிறதோ?’ என்று கவலை கொண்டு தூக்கம் இழந்தான் சேந்தன்.

அந்தப்புரத்து மேல் மாடத்திலிருந்து தன் மேல் உதிர்ந்த பூக்களை வைத்துக்கொண்டு தன்னைக் கண்காணித்த பெண் புலி யாரென்று தூக்கமுமில்லாமல் மண்டையைக் குழப்பிக் கொண்டிருந்தான் குழைக்காதன். முதல் முதலாகக் கூற்றத் தலைவர் கூட்டத்தில் என் பேச்சு எடுபடாமல் தோற்றுப் போய்விட்டதே! என்று மனம் புழுங்கிக் கொண்டிருந்தார் மகாமண்டலேசுவரர். அன்று நள்ளிரவு வரையில் இவர்கள் நால்வரும் உறங்கவே இல்லை.

Previous articleRead Pandima Devi Part1 Ch27 | Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Pandima Devi Part1 Ch29 | Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here