Home Na Parthasarathy Read Pandima Devi Part1 Ch3 | Na. Parthasarathy | TamilNovel.in

Read Pandima Devi Part1 Ch3 | Na. Parthasarathy | TamilNovel.in

104
0
Read Pandima Devi Part1 Ch3 Pandima Devi Na. Parthasarathy, Read Pandima Devi Online Free, Pandima Devi PDF, Download Pandima Devi novel, Pandima Devi book, read Pandima Devi free
Read Pandima Devi Part1 Ch3 | Na. Parthasarathy | TamilNovel.in

Read Pandima Devi Part1 Ch3 | Na. Parthasarathy | TamilNovel.in

பாண்டிமாதேவி – நா. பார்த்தசாரதி

முதல் பாகம், அத்தியாயம் 3 : தளபதி கைப்பற்றிய ஒலை

Read Pandima Devi Part1 Ch3 | Na. Parthasarathy | TamilNovel.in

இதோ இன்னும் ஒரிரு விநாடியில் இறப்பது உறுதி என்று எண்ணி, எல்லாம் ஒய்ந்து தளர்ந்து சாவுக்குத் தயாராகும்படியான சூழ்ச்சிகளெல்லாம் தளபதி வல்லாளதேவனின் வாழ்வில் கணக்கின்றி ஏற்பட்டிருக் கின்றன. தன் எதிரிகள், தன்னைக் கொல்வதற்காகத் துடித்துக்கொண்டிருப்பவர்கள்-இவர்களுக்கிடையில் கூட வேடிக்கைக்காக வலுவில் போய் மாட்டிக்கொண்டு முடிவில் சிரித்தபடியே தப்பி வருவது அவன் வழக்கம். எதற்கும், எப்போதும் அஞ்சியறியாத நெஞ்சுரம் கொண்ட வல்லாளதேவன் அன்று அந்த இரவில் கடலோரத்துப் பாறைகளின் நடுவில் இரண்டு பக்கமிருந்தும் பாய்ந்து தன் தோள்பட்டையில் உரசும் வாள் நுனிகளைப் பார்த்ததும் ஒரு கணம் அப்படியே திகைத்து நின்றுவிட்டான்.

அவன் பாதங்கள் முன்னும் நகரவில்லை; பின்னும் நகரவில்லை. உயிருள்ள ஆளாக இயங்கி நடந்து வந்தவன் திடீரென்று சிலையாக மாறிவிட்டது போல் ஆடாது அசையாது நின்றான். கொஞ்சம் நகர்ந்தாலோ, அசைந்தாலோ வாள்கள் தோளில் அழுந்திவிடும். அவன் இடையிலும்தான் வாள் இருந்தது. இடுப்பில் உறைக்குள் தொங்கும் அந்த வாளை உருவி எடுக்கக்கூட அவன் கைகள் அசைய முடியாது அப்படிப்பட்ட நிலை!

முகத்தைத் திருப்பாமல் நின்ற வண்ணமே விழிகளின் இருபக்கத்துப் பார்வையும் பக்கவாட்டில் சாய்த்து நிற்பவர்களைப் பார்க்க முயன்றான் தளபதி. அவன் விழிகள் இரண்டும் காதைத் தொட்டுவிட்டனபோல் நீண்டன. பார்க்காததுபோல் பார்த்த அப் பார்வையிலே ஒரு மிரட்சி இருந்தது.

“தென்பாண்டி நாட்டு வீரத் தளபதியாருக்கு வாள் முனையில் வணக்கம் செலுத்துகிறோம்.”

அவர்கள் குரல்தான். ஏளனமும் மமதையும் தொனித்தன அதில். தளபதி பதில் சொல்லாமல் சிரித்தான். கடைக் கண் பார்வையாலேயே இருபுறம் வாளை நீட்டிக்கொண்டு நின்றவர்களைப் பார்த்துக் கொண்டுவிட்டான். முன்பு தெரிந்த சிவப்புத் தலைப்பாகைப் பேர்வழிகள்தான் இவர்கள். சாமர்த்தியமும் சமயோசித சாதுரியமும் கொண்டு எத்தனையோ சூழ்ச்சிகளைக் கடந்திருக்கும் அவன் மனத்தில் சிந்தனையலைகள் ஒன்றோடு ஒன்றாக மோதிப் புரண்டன.

தளபதியின் முகத்தில் மின்னி மறையும் சிந்தனை ரேகைகளையும், அவன் சலனமற்று நிற்பதையும் பார்த்து, அவர்கள் மனத்துக்குள் என்ன நினைத்துக் கொண்டார்களோ? தெரிந்து கொள்ள முடியவில்லை.

“தளபதி அவர்களே! தங்கள் இடையிலிருக்கும் வாளை இப்படிக் கழற்றி வைத்து விட்டால் நன்றாயிருக்கும். வீணாக நாங்கள் சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்காது” என்றனர்.

வல்லாளதேவன், “ஆகா! அதற்கென்ன? இதோ கழற்றி வைத்து விடுகிறேன்” என்று சொல்லிக் கொண்டே குபிரென இரண்டடி முன்னால் நகர்ந்துகொண்டு இடையிலிருந்த வாளை உருவினான். அவன் இப்படிச் செய்வானென்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ‘வாளை உருவிக் கீழே வைப்பதற்குத்தான் குனிகிறான்’ என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கும்போதே தளபதி வாளை உருவிக்கொண்டு அவர்கள் மேல் பாய்ந்தான். இரண்டு பேருடைய வாள்களில் அவனது ஒரே வாள் மோதியது.

“தென்பாண்டி நாட்டுப் படைத் தலைவருக்கு இன்று நம்முடைய கையால் முடிவு காலம் போலிருக்கிறது!” என்றான் அந்த வீரர்களில் ஒருவன்.

“ஐயா, தளபதியாரே! இந்த ஏமாற்று வேலைகளெல்லாம் எங்களிடம் வேண்டாம்!” என்று மிகுந்த ஆத்திரத்தோடு சொல்லிக் கொண்டே வாளைச் சுழற்றி வீசினான் இன்னொருவன்.

“அது சரி! சாவு யாருக்கு என்பதை உங்கள் கைகளிலும், என் கையிலும் சுழலும் இந்த வாள்கள் அல்லவா தீர்மானிக்க வேண்டும்? பாண்டி நாட்டுத் தளபதிக்குச் சாவு நேர்ந்தாலும் அது இன்னொரு உண்மை வீரன் கையால்தான் நேரும். உங்களைப் போல யாரோ ஊர் பேர் தெரியாத ஒற்றர்களின் கைகளால் அல்ல! தெரிந்து கொள்ளுங்கள்!” என்று வீரமொழி கூறி அறை கூவியவாறே வாளை வேகமாகச் சுழற்றினான் வல்லாளதேவன்.

போர்ப் பழக்கம் மிகுந்த தளபதியின் வாள் வீச்சுக்கு முன்னால் அந்த இரண்டு ஒற்றர்களும் திணறிப் போய் விட்டனர். அவர்களில் ஒருவனைப் பாறை விளிம்பு வரையில் துரத்திக் கொண்டு போய்க் கடலுக்குள் தள்ளிவிட்டான் தளபதி. கடலுக்குள் விழுந்தவன் பாறைகளில் மோதி அடிபட்டு மூர்ச்சையாகிக் கீழே பாறைத் திடலின் மேல் கிடந்தான். மற்றொருவனுடைய வாளைத் தண்ணிருக்குள் படிர் என்று தட்டி விட்டபின் கையோடு அவனை இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.

“அடே, பதரே! நீ எந்த நாட்டு ஒற்றன்? என்னிடம் உண்மையைச் சொல்ல வேண்டும். பாண்டி நாட்டு வீரர்கள் எப்போதும் உண்மையைத்தான் பேசுவார்கள். மற்றவர்களிட மிருந்தும் உண்மையைத்தான் கேட்பார்கள்”.

பிடிபட்டவன் பதில் சொல்லாமல் திருட்டு விழி விழித்தான். “பதில் சொல்கிறாயா? உன்னைச் சொல்ல வைக்கட்டுமா?’ என்று கையை ஓங்கினான் தளபதி, பிடிபட்ட ஒற்றனின் உடல் கிடுகிடு வென்று நடுங்கியது. கலக்கமும் சஞ்சலமும் அவன் முகத்தில் பதிந்தன. வாயைத் திறக்காமல் ஊமை நடிப்பு நடித்தான்.

வல்லாளதேவன் தன்னை அதட்டிக் கொண்டிருக்கும் போதே திடீரென்று தனது இடுப்புக் கச்சையிலிருந்து ஏதோ ஒரு பொருளை உருவி எடுத்துக் கடலுக்குள் எறிய முயன்றான் அந்த ஒற்றன். அவன் கை இடது பக்கத்து இடுப்பைத் தடவி எதையோ எடுக்க முயல்வதை அவனைப் பிடித்த கணத்திலிருந்தே கவனித்துக் கொண்டிருந்த தளபதி, விருட்டென்று எறிவதற்கு ஓங்கிய அவன் கையைப் பிடித்து அதிலிருந்த பொருளைப் பறித்துக் கொண்டான். அது ஒரு திருமுக ஒலை. ஒரு கையால் அவனைப் பிடித்துக்கொண்டு இன்னொரு கையால் அந்தத் திருமுக ஒலையைக் கண்களுக்கு அருகே கொண்டுபோய், நிலா ஒளியில் அதில் என்ன வரைந்திருக்கிறதென்று வாசிக்க முயன்றான்.

ஆனால் அதே சமயத்தில் கோவிலின் மேல் தளத்தில் வீரர்கள் ஏறி ஒடும் ஒசையும், “விடாதே பிடி மகாராணியின் மேல் வேலை எறிந்து விட்டு ஓடுகிறான்!” என்ற கூக்குரல்களுமாகக் கேட்கவே அவர்கள் இருவருடைய கவனமும் ஒரே சமயத்தில் கோவிலின் பக்கம் திரும்பியது.

அவர்கள் திரும்பிப் பார்த்த சமயத்தில் கோவில் மதிலின் பின்புறமாக உள்ள ஆழமான கடற்பகுதியில் மேல் தளத்திலிருந்து ஒர் உருவம் குதிப்பது மட்டும் தெரிந்தது. மேல்தளத்தில் கேட்ட கூக்குரலும் நடந்த நிகழ்ச்சியும் தன்னைவிடத் தன் கையில் பிடிப்பட்டிருந்த ஒற்றனையே அதிகமாகக் கலவரத்துக்கும் திடுக்கிடுதலுக்கும் உள்ளாக்கியிருக்கின்றன என்பதை அவன் முகக் குறிப்புக்களால் ஒரு வாறு தெரிந்து கொண்டான் வல்லாளதேவன்.

தளபதியின் மனம் நடுங்கியது. “ஐயோ! மகாராணியின் மேல் வேல் எறியப்பட்டு விட்டதா? தளபதி அருகிலிருந்தும் இப்படி நடந்து விட்டதென்று உலகம் பழிக்குமே! இது என்ன? போதாத காலமோ?” என்று பதறினான். மேல் தளத்திலிருந்து வேல் எறிந்து விட்டுக் கடலில் குதித்தவனுக்கும் இந்தச் சிவப்புத் தலைப்பாகை ஒற்றர்களுக்கும் ஏதாவது தொடர்பிருக்குமோ ? என்று அவனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. உடனே தன் கையில் கிடைத்த ஒலையோடும் ஒற்றனோடும் அங்கிருந்து இறங்கிக் கோவிலுக்கு விரைந்தான். “இந்த ஒற்றனைப் பாதுகாத்து வைத்திருங்கள். தப்பிவிடாமல் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்” என்று கூறி, பரிவாரத்து வீரர்களிடம் தன் கையில் பிடிபட்ட ஒற்றனை ஒப்படைத்துவிட்டு, திருமுக ஒலையோடு மகாராணியைப் பார்க்க விரைந்து உள்ளே சென்றான்.

மேலே இருந்து விதானத் துவாரத்தின் வழியே விசி எறியப்பட்ட வேலினால் மகாராணியாருக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படவில்லை என்று அறிந்துகொண்ட பின்பு தான் தளபதிக்கு நிம் தியாக மூச்சு வந்தது. கோவிலின் கர்ப்பக்கிருகத்துக்கு முன்னால் இருந்த மணி மண்டபத்தில் மகாராணி வானவன் மாதேவி, பவழக்கனி வாயர், அதங்கோட்டாசிரியர், தன்னுடைய தங்கை பகவதி, ஆசிரியர் மகள் விலாசினி ஆகியோர் வீற்றிருக்கும்போது தளபதி வல்லாளதேவன் அங்கே பிரவேசித்தான். “மகாராணி! நான் கேள்விப்பட்டது மெய்தானா? யாரோ வஞ்சகன் வேலை எறிந்துவிட்டு ஓடினான் என்றார்களே? இதென்ன கொடுமை? ஆலயத்துக்குள் தெய்வ தரிசனத்துக்காக நுழையும்போது கூடவா அரசியல் சூழ்ச்சிகள் இத்தகைய பயங்கர நிகழ்ச்சியின்போது மகாராணியாரின் அருகிலிருக்க இயலாமற் போனதற்கு அடியேனை மன்னிக்கவேண்டும். தீய சக்திகள் தென்பரண்டி நாட்டை வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன. சற்று முன் அடியேன் கடற்கரைப் பாறையில் பின் தங்கி நின்றதன் காரணம் இங்கு ஒருவருக்கும் புரிந்திருக்காது. அதுவும் நம்மைச் சூழ்ந்து நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு பயங்கரச் சதியின் உண்மையைப் புரிந்து கொள்வதற்காகத் தான், இதோ இந்த ஒலையைப் பாருங்கள்” என்று ஒற்றனிட மிருந்து கைப்பற்றிய திருமுக ஒலையை எடுத்து மகாராணிக்கு முன்னால் வைத்தான் தளபதி.

“தளபதியாரே! இன்றைக்கு மகாராணியார் உயிர் பிழைத்தது யாரால் தெரியுமா? உங்கள் தங்கை பகவதியின் வீரச் செயல்தான் தேவியைக் காப்பாற்றியது. ஒரு மகா வீரனின் தங்கை என்பதை உங்கள் சகோதரி நிரூபித்து விட்டார். பாய்வதற்கு இருந்த வேலைப் பார்த்தவுடன் மகாராணியைப் பின்னுக்கு இழுத்துக் கீழே தள்ளியதால் தான் ஆபத்தில்லாமல் போயிற்று” என்றார் கோவில் அர்ச்சகர்.

அதைக் கேட்டதும், “பகவதி! நீ எப்போது இங்கே வந்தாய்?” என்று தங்கையை விசாரித்தான் தளபதி.

“மகாராணியார் ஆலயத்துக்குள் நுழைவதற்கு முன்பே நானும் ஆசிரியர் மகள் விலாசினியும் இங்கே வந்து சேர்ந்து கொண்டோம், அண்ணா!” என்று பதில் கூறினாள் பகவதி.

தளபதி கொடுத்த ஒலையைக் கையில் எடுத்த மகாராணி அப்போதே அந்த இடத்தில் அதைப் படித்து அறிந்து கொள்ள விரும்பவில்லை. மண்டபத்தில் இருந்த எல்லோர் முகங்களிலும் ஒரு வகைக் கலவரத்தின் சாயை படிந்திருந்தது. தளபதி கொண்டு வந்த ஒலையில் அடங்கியிருக்கும் செய்தியை அறிந்து கொள்ளத் துடிக்கும் ஆவல் அவர்கள் எல்லோர் பார்வையிலும் இருந்தது. தளபதி கூறிய சில சொற்களிலிருந்து ‘தென்பாண்டி நாட்டை ஏதோ ஒரு வகையில் பகைச் சக்திகள் எதிர்ப்பதற்கு ஒன்று கூடுகின்றன’, என்று மற்றவர்கள் அநுமானிக்க முடிந்தது.

ஒலையைப் பார்த்துவிட்டு மகாராணி வானவன்மாதேவி என்ன கூறப் போகிறார் என்பதைக் கேட்க எல்லோரும் காத்திருந்தனர். ஆலயத்துக்குள் அசாதாரணமான அமைதி நிலவியது. வீரர்கள், பரிவாரங்கள், அர்ச்சகர்கள் எல்லோரும் அடங்கி ஒடுங்கி மகாராணியாரின் முகத்தையே இமையாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். மகாராணியாரோ ஒலையைப் படிக்கவுமில்லை; வாய் திறந்து பேசவுமில்லை. ஊசி விழுந்தாலும் அது தெளிவாகக் கேட்கும் படியான அந்த அமைதி சில விநாடிகள் நீடித்தது. தளபதியின் பார்வையில் தூணோரமாக வளைந்து நெளிந்து கிடந்த வேல் தென்பட்டது. அதுதான் மகாராணியின் மேல் எறியப்பட்ட வேலாக இருக்க வேண்டுமென்று அவன் எண்ணிக்கொண்டான்.

“தளபதி ! கோட்டையிலிருந்து புறப்பட்டபோது ஆலயத்துக்குப் போகிறோம் என்ற அமைதியில் மனக்குழப்பங்களை மறந்து நிம்மதியோடு புறப்பட்டேன். இப்பேர்தோ இங்கு வந்தபின் நடந்த நிகழ்ச்சியால் மனம் குழம்பிப் போயிருக்கிறது. வார்த்தைகளால் விவரித்துச் சொல்ல முடியாத அதிர்ச்சியில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன். என்ன பேசுவது? எதைச் சிந்திப்பது? எதைச் செய்வது? ஒன்றுமே எனக்குப் புரியவில்லை. வரவர அரசாட்சியில் பற்றுக் குறைந்து கொண்டே வருகிறது. ஒன்று, இந்த அரசையும் ஆட்சியையும் கைப்பற்றுவதற்காகப் பொய்யும், சூழ்ச்சியும் செய்யும் எதிரிகளிடம் இதை உதறிவிட்டு எங்காவது போய்ப் புத்த மதத்தில் சேர்ந்து பிறவிப் பிணிக்கு மருந்து தேடவேண்டும்; அல்லது ஓடிப்போன இராசசிம்மனைத் தேடிப் பிடித்துக்கொண்டு வந்து முடி சூட்டிவிட்டு நான் நிம்மதியாக இருக்கவேண்டும். இந்த இரண்டில் ஏதாவதொன்று நடந்தாலொழிய என்னால் இப்படியே மதில் மேல் பூனையாகக் காலங் கழிக்க முடியாது. என்னைப்போல் நாயகனை இழந்த ஒரு பெண்ணை இந்தத் தென்பாண்டி நாட்டுக்குப் பேரரசியாக உரிமை கொண்டாடி, இன்பத்திலும் துன்பத்திலும் எவ்வளவோ ஒத்துழைக்கிறீர்கள். அதற்காக நான் பெருமைப்படத்தான் வேண்டும். ஆனால் – இந்தப் பெருமையைத் தொடர்ந்து ஏற்றுக் கொள்ளும் நெஞ்சு உரம் எனக்கு இல்லை. என் அருமைக் குமாரனும் உங்கள் இளைய சக்கரவர்த்தியுமான இராசசிம்மன் இலங்கைத் தீவில் போய்ச் சுற்றிக் கொண்டிருப்பதாகச் சொல்லுகிறார்கள். மகாமன்னரான பராந்தக பாண்டியரின் வழி முறையினர்தான் உங்களை ஆள வேண்டுமென்ற உறுதி உங்களுக்கு இருக்குமானால் இலங்கைத் தீவுக்குப் போய் இளைய சக்கரவர்த்தியைத் தேடிக்கொண்டு வாருங்கள். தளபதி ! இந்த ஒலையை இப்போது நான் படிக்க விரும்பவில்லை. இது உம்மிடமே இருக்கட்டும்.”

உருக்கம் நிறைந்த நீண்ட பேச்சுக்குப் பின் திருமுக ஒலையை வல்லாள தேவனிடமே திருப்பிக் கொடுத்து விட்டார் மகாராணி. பேச்சு முடிந்த பின்பும் அங்கு நிலவிய அமைதி கலை யவில்லை. அதங்கோட்டாசிரியரும் பவழக்கனிவாயரும், தளபதியும் ஒன்றும் பேசத் தோன்றாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆலயத்தில் எரிந்து கொண்டிருந்த தீபச் சுடர்கள் கூட ஆடாமல் ஸ்தம்பித்துப் போனவை போல விளங்கின. திருமுக ஒலையைக் கையில் வாங்கிக் கொண்ட தளபதி மகாராணியார் மனம் வெதும்பி விரக்தியடைந்துப் போயிருக்கும் அந்த நிலையில் என்ன பேசுவதென்று தெரியாமல் மலைத்துப்போய் அப்படியே நின்றான்.

“தளபதி! நாளையே புறத்தாய நாட்டு மகாசபையைக் கூட்டுங்கள். இந்தப் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு கண்டாக வேண்டும். நாஞ்சில் நாட்டுக் கூற்றங்களின் பிரதம மந்திராலோசனைத் தலைவராகிய இடையாற்று மங்கலத்து நம்பியை அழைத்து வாருங்கள். இந்த ஒலையையும், இது சம்பந்தமான எதிரிகளின் சூழ்ச்சிகளையும் கூட நாளை மகா சபைக்கூட்டத்தில் ஆலோசித்துக் கொள்ளலாம். இப்போது நாம் புறப்படலாம்” என்று மீண்டும் உறுதியான குரலில் கூறினார் மகாராணி. அப்போது கோயில் வாயிலில் பரிவாரத்து வீரர்களில் முக்கியமான ஒருவன் தளபதியின் காதருகே வந்து, “பிரபு! நீங்கள் எங்களிடம் ஒப்படைத்திருந்த அந்த ஒற்றன் தப்பிவிட்டான்” என்று மெல்லிய குரலில் கூறினான். தளபதி வல்லாளதேவன் திடுக்கிட்டான்.

Previous articleRead Pandima Devi Part1 Ch2 | Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Pandima Devi Part1 Ch4 | Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here