Home Na Parthasarathy Read Pandima Devi Part1 Ch9 | Na. Parthasarathy | TamilNovel.in

Read Pandima Devi Part1 Ch9 | Na. Parthasarathy | TamilNovel.in

77
0
Read Pandima Devi Part1 Ch9 Pandima Devi Na. Parthasarathy, Read Pandima Devi Online Free, Pandima Devi PDF, Download Pandima Devi novel, Pandima Devi book
Read Pandima Devi Part1 Ch9 | Na. Parthasarathy | TamilNovel.in

Read Pandima Devi Part1 Ch9 | Na. Parthasarathy | TamilNovel.in

பாண்டிமாதேவி – நா. பார்த்தசாரதி

முதல் பாகம், அத்தியாயம் 9 : ஒலையின் மர்மம்

Read Pandima Devi Part1 Ch9 | Na. Parthasarathy | TamilNovel.in

தானும் மகாமண்டலேசுவரரான இடையாற்று மங்கலம் நம்பியும், அந்தரங்க அறையில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தபோது வெளிப்புறம் யாரோ கதவைத் தட்டும் மணியோசை கேட்டவுடன் தளபதி வல்லாளதேவனால் அது யாராயிருக்கக் கூடுமென்று நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை.

ஆனால் மகாமண்டலேசுவரரான இடையாற்று மங்கலம் நம்பியோ, கதவு திறக்கப்படுவதற்கு முன்பே மெதுவாகச் சிரித்துக்கொண்டு வெளியே நிற்பவனை அவனுடைய பெயரைச் சொல்லிக் கூப்பிட்டார்.

“யார், நாராயணன் சேந்தன்தானே ? வா, அப்பா ! கதவைத் திறந்து கொண்டு உள்ளே வா! உன்னைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்” என்று அவர் கூறிய போது தளபதி அடைந்த வியப்புக்கு அளவே இல்லை.

மணிகள் ஒலிக்குமாறு கதவைத் திறந்துகொண்டு நாராயணன் சேந்தன் உள்ளே பிரவேசித்தான். அவன் அணிந்திருந்த ஆடைகள் நனைந்திருந்தன. உடம்பில் சேறும், சகதியுமாக இருந்தது. தலை முடியில் இரண்டொரு பழுப்படைந்த மகிழ இலைகளும் பூக்களும் செருகிக் கொண்டு கிடந்தன.

இந்தக் கோலத்தோடு உள்ளே வந்து நின்ற அவனை ஏற இறங்கப் பார்த்தார் இடையாற்றுமங்கலம் நம்பி. “இது என்னப்பா தோற்றம்? உன்னுடைய அழகான கேசத்துக்கு மகிழம்பூச் சூட்டிக் கொள்ளவில்லை என்றால் அடிக்கிறதோ?” என்று அவர் கேட்டபோது அவனுக்கே ஆச்சரியமாகி விட்டது.

“என்னது! மகிழம் பூவா? என் தலையிலா?” என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே அவன் தலையைத் தடவி உதறினான். இலைகளும் பூக்களும் கீழே உதிர்ந்தன.

“சேந்தா! நீ சுசீந்திரம் தாணுமாலய விண்ணகரத்தில் என்னைச் சந்தித்துக் கூறியதெல்லாம் உண்மைதானே? இதோ உட்கார்ந்திருக்கும் தளபதி ஒரே ஒர் உண்மையை மட்டும் ஏனோ மறைப்பதற்கு முயற்சி செய்கிறார். அந்த மூன்று ஒற்றர்களிடம் ஏதோ ஒர் ஒலை இருந்ததென்றும், அந்த ஒலையைத் தளபதி அவர்களோடு போரிட்டுக் கைப்பற்றி வைத்துக் கொண்டிருப்பதாகவும் நீ கூறினாய். இவர் எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்; ஆனால் அதை மட்டும் சொல்லவில்லை. நானாகவே இப்போதுதான் வலுவில் அவரிடம் அதைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தேன். நல்ல சமயத்தில் நீயும் வந்திருக்கிறாய்!”

“சுவாமீ! என் கண்களால் கண்ட உண்மையைத் தான் அடியேன் சுசீந்திரத்தில் தங்களிடம் தெரிவித்தேன். புலி இலச்சினையும், பனை இலச்சினையும் ஆகிய அரசாங்க முத்திரைகள் அந்த ஒலையில் அடுத்தடுத்து வரிசையாகப் பொறிக்கப்பட்டிருந்தன. என் கையாலேயே அதை எடுத்துப் பார்க்கும் வாய்ப்புக் கூட எனக்குக் கிட்டியது. துரதிருஷ்டவசமாக என்னால் அதைப் படித்துப் பார்க்க முடியாமல் சந்தர்ப்பம் கெடுத்துவிட்டது. ஆனால் கடற்கரைப் பாறைகளுக்கு நடுவே தளபதி எதிரிகளோடு வாட் போர் செய்ததையும் ஒலையை வைத்துக் கொண்டிருந்தவன் அதைக் கடலில் எறிவதற்குப் போன போது அவன் கையை மறித்து அவர் அதைப் பறித்துக் கொண்டதையும் என் கண்களால் கண்டேன்.”

“நீ இவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய். இவர் அதைப் பற்றி வாய் திறக்கவே பயப்படுகிறாரே !” என்று புன்னகையோடு அருகில் அமர்ந்திருந்த வல்லாள தேவனைச் சுட்டிக் காட்டினார். மகாமண்டலேசுவரர்.

“ஒரு வேளை அந்த ஒலையில் அடங்கியிருக்கும் செய்தி இவரை இப்படி மெளனம் சாதிக்கச் செய்கிறதோ, என்னவோ?’ என்றான் நாராயணன் சேந்தன். தளபதி வல்லாளதேவன் திக்பிரமையடைந்துபோய் பேசாமல் உட்கார்ந்திருந்தான். அவன் மனத்தில் கீழ்க்கண்ட எண்ணங்கள் ஓடின.

“ஆகா! இந்த இடையாற்று மங்கலம் நம்பி யாருக்கும் தெரியாமல் எவ்வளவு அந்தரங்க ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார் ! நாட்டில் நடப்பதையெல்லாம் ஒன்று விடாமல் அறிந்து கொண்டு வந்து கூற இவரைப்போலவே இவருக்கு ஒரு தந்திரசாலியான ஒற்றன்! இவருக்குத் தெரியாது என்றோ, தெரியவிடக்கூடாது என்றோ எதையும் எவராலும் மறைத்துவைக்க முடியாது போலிருக்கிறதே! எவ்வளவு முன் யோசனை! எவ்வளவு சாமர்த்தியம்’ என்று அவரைப் பற்றிய வியப்பான நினைவுகளில் ஆழ்ந்து போய் உட்கார்ந்திருந்தான்!

“வல்லாளதேவா! இதோ நிற்கிறானே நாராயணன் சேந்தன். இவனை உனக்குத் தெரியுமல்லவா ? இவன் யாரிடம் பொய் சொன்னாலும் என்னிடம் பொய் சொல்ல மாட்டான்.”

இடையாற்று மங்கலம் நம்பி சொற்களை ஒவ்வொன்றாக நிறுத்திச் சொன்னார். இனியும் அவருக்கு அந்த ஒலையை எடுத்துக் காட்டாமல் மறைத்து வைத்துக் கொண்டிருப்பதில் பயனில்லை என்று உணர்ந்துகொண்ட வல்லாளதேவன் இடுப்புக் கச்சையில் மறைத்து வைத்திருந்த ஒலையை வெளியே எடுத்தான்.

“மகாமண்டலேசுவரர் என்னை மன்னிக்க வேண்டும். ஒரு காரணத்துக்காக நான் இந்த ஒலையைக் கைப்பற்றிய விவரம் யாருக்கும் தெரியாமலிருப்பது நல்லதென்று மறைத்தேன், வேறு விதத்தில் தவறாக நினைத்துக்கொள்ளக் கூடாது” என்று பவ்வியமான குரலில் சொல்லிக்கொண்டே மடங்கிச் சுருண்டிருந்த அந்த ஒலையை எடுத்து அவர் கையில் கொடுத்தான்.

“ஆ! இந்த ஒலைதான். என்று அதைப் பார்த்ததும் அருகில் அடக்கமாக நின்றுகொண்டிருந்த நாராயணன் சேந்தன் வியந்து கூவினான். அந்த ஒலை, அதில் இடப்பட்டிருந்த புலி, பனை ஆகிய முத்திரைகள் இவற்றையெல்லாம் பார்த்த பின்பும் வியப்போ, அதிர்ச்சியோ அடையாத நிதானமான முகக் குறிப்புடன் அதைப் படித்தார் இடையாற்று மங்கலம் நம்பி. அந்த ஒலை அவர் பெயருக்குத்தான் எழுதப்பட்டிருந்தது. அதில் அடங்கியிருந்த செய்தியும் சாதாரணமான செய்தியல்ல.

“மகாமண்டலேசுவரரான புறத்தாய நாட்டு நாஞ்சில் மருங்கூர்க் கூற்றத்து இடையாற்று மங்கலம் நம்பி அவர்கள் திருச் சமூகத்துக்கு, வடதிசைப் பெருமன்னரான சோழன் கோப்பரகேசரி பராந்தகனும், கொடும்பாளுர்க் குறுநில மன்னனும், அரசூருடையானும் ஆகிய மூவரும் எழுதிக் கொண்ட திருமுகம். இந்தத் திருமுக ஒலை தங்கள் கையை அடைவதற்கு முன் தங்களால் புறத்தாய நாட்டுக் கோட்டையில் பாதுகாக்கப்பட்டு வருபவரும், நாஞ்சில் நாட்டு மகாராணி யாருமாகிய, காலஞ்சென்ற திரிபுவனச் சக்கரவர்த்திகளான பராந்தக பாண்டிய தேவரின் திருத்தேவி வானவன்மாதேவியார் விண்ணுலக பதவி அடைந்திருப்பார்; அல்லது நாங்கள் செய்திருக்கும் ஏற்பாடு அவருக்கு அந்தப் பதவியை அளித்திருக்கும்.

“எனவே, மகாமண்டலேசுவரராகிய தங்களையும், தங்களுடன் இருக்கும் நாஞ்சில் நாட்டுக் கூற்றத் தலைவர்களையும் உடனே வடதிசைப் பேரரசுக்கு அடிபணியுமாறு வேண்டிக் கொள்ளுகிறோம். நாளை மறு நாள் சோழ நாட்டுத் திருப்புறம்பியத்தில் நாங்கள் மூவரும் உங்களை எதிர்பார்க்கிறோம்.

இந்த ஏற்பாட்டுக்கு இணங்காவிட்டால் உடனே வடதிசை மும் மன்னர்கள் பெரும் படையோடு நாஞ்சில் நாட்டைத் தாக்குவதற்கு நேரிடும்.

  1. பராந்தக சோழன்
  2. கொடும்பாளுர்க் குறுநில மன்னன்
  3. அரசூருடையான் சென்னிப்பேரையன்.”

இந்தச் செய்தியைப் படித்து முடித்தபோது, மகாமண்டலேசுவரரின் இதழ்களில் அலட்சியப் பாவம் நிறைந்ததொரு புன்னகை மிளிர்ந்தது. அவர் தலையை நிமிர்த்தித் தளபதி வல்லாளதேவனை உற்றுப் பார்த்தார். அருகிலிருந்த நாராயணன் சேந்தனை ஒரு தடவை பார்த்தார்.

“சுவாமி, இந்த விநாடிவரை மகாராணியாருக்கு ஒரு துன்பமும் இல்லை, அடியேன் இப்போதுகூட அங்கே கோட்டையிலிருந்துதான் நேரே வருகிறேன்” என்று அவருடைய பார்வையில் பொதிந்திருந்த கேள்வியைக் குறிப்பினால் புரிந்துகொண்டு பதில் கூறினான் சேந்தன்.

“தளபதி ! இந்த ஒலையை நீ என்னிடம் காட்டத் தயங்கியதற்குச் சிறப்பாக வேறு காரணம் ஏதோ இருக்குமென்று எனக்குத் தோன்றுகிறது! அதை எனக்குச் சொல்லலாம் அல்லவா? தெரிந்துகொள்ள ஆவலாயிருக் கிறேன்” என்றார் மகாமண்டலேசுவரர். தன் மனத்தில் யாருக்கும் வெளிப்படுத்திச் சொல்ல இயலாத அந்தரங்கமான இடத்தில் மறைந்திருந்த ஒர் உண்மையை அவருடைய கேள்விக்குப் பதிலாகச் சொல்ல வேண்டியிருந்ததால் தளபதி வல்லாளதேவன் தயங்கினான்.

ஒருவேளை நாராயணன் சேந்தன் அருகில் இருப்பதால் தான் தளபதி சொல்லத் தயங்குகிறானோ என்று நினைத்தார் மகாமண்டலேசுவரர்.

“சேந்தா! ஆற்று நீரிலும் சேற்றிலும் சகதியிலும் புரண்டுவிட்டு ஈர உடையோடு நின்று கொண்டிருக்கிறாயே. போய் உடை மாற்றிக்கொண்டு வா,” என்று சொல்லி நாராயணன் சேந்தனை அங்கிருந்து அவர் அனுப்பி வைத்தார்.

ஆனால் அதன் பின்பும் தளபதி வாய் திறக்கவில்லை. “வல்லாளதேவா! உன் மனத்தில் இருப்பதை நீ என்னிடம் சொல்லத் தயங்குகிறாய்; பரவாயில்லை. நீ சொல்லவே வேண்டாம். பல நூறு காதத் தொலைவிலிருக்கும் வடதிசை மும் மன்னரும் இந்தக் கணத்தில் என்ன எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக்கூட என்னால் இங்கிருந்தே சொல்லிவிட முடியும். நீ நினைப்பதைத் தெரிந்து கொள்வது பெரிய காரியமில்லை. இதோ சொல்கிறேன் கேள்; இந்த ஒலையைப் படித்ததும் உன் மனத்தில் என்ன தோன்றியது, தெரியுமா ? ‘மகாமண்டலேசுவரரே வடதிசை மூவேந்தர்களுக்கு உள்கையாக இருப்பார் போலிருக்கிறது. இல்லையானால் இந்த ஒலை அவர் பெயருக்கு எழுதப்படுமா? ஆகா! இது எவ்வளவு அநியாயம்! வானவன் மாதேவியைக் கொலை செய்வதற்கு ஒற்றர்களை அனுப்புமாறு இவரே வடதிசைப் பேரரசருக்குத் தெரிவித்திருக்க வேண்டும். திருப்புறம்பியத்தில் அவர்களை வந்து சந்திப்பதாக இவரே சொல்லியிருப்பார். மகாமண்டலேசுவரரே இப்படிச் சதி செய்தால் இந்த நாடு எங்கே உருப்படப்போகிறது ? என்றெல்லாம் உன் மனத்தில் தோன்றியது உண்டா, இல்லையா?” என்று கேட்டுவிட்டு நகைத்தார் அவர்.

தளபதி வல்லாளதேவன் திடுக்கிட்டுப் போனான். இந்த மனிதர் என்ன மந்திரவாதியா இவருக்கு ஏதாவது குறளிவித்தை தெரியுமா ? என்னுடைய மனத்தில் ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை அப்படியே கண்டுபிடித்துச் சொல்லி விட்டாரே! என்று வியந்தான் அவன்.

“என்ன தளபதி ! உண்மைதானா?”

தன் நினைவில்லாமலே அவருடைய கேள்விக்கு ‘ஆம்’ என்று பதில் சொல்வதுபோல அவன் தலை அசைந்தது.

“நீ இப்படி நினைத்ததை நான் ஒரு பிழையாகக் கருதவில்லை. சந்தர்ப்பத்தின் கோளாறு உன்னை இப்படி தினைக்கச் செய்திருக்கிறது. ஆனால் வல்லாளதேவா ! இந்த ஒலையையும் இது கிடைத்த நிகழ்ச்சியையும் தொடர்ந்து எண்ணி மனத்தைக் குழப்பிக் கொள்ளாதே. இப்போதே மறந்து விடு!” இதுவரையில் அமைதியாகத் தலை குனிந்து அவர் கூறியதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த தளபதி தலை நிமிர்ந்து ஒரு கேள்வி கேட்டார்.

“மகாமண்டலேசுவரர் சொல்வதை நான் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் மகாராணி வானவன் மாதேவியாரைக் கொலை செய்வதற்காகப் பயங்கரமான சதி முயற்சிகள் என் கண்காணவே நடக்கும்போது கடமையும் பொறுப்புமுள்ள நான் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா? அது நீதியல்லவே?”

“தளபதி ! உன்னுடைய பதவிக்கு இந்தப் பொறுப்பு உணர்ச்சி அவசியமானதுதான். ஆனால் மகாராணியாரைக் கொலை செய்வதும், புறத்தாய நாட்டைக் கைப்பற்ற முயல்வதும் யாராலும் எளிதில் முடியாத காரியங்கள். அப்படியே முடிவதாக இருந்தாலும் அதனை நீயும் உன்னைச் சேர்ந்த படைவீரர்களும் மட்டும் தடுத்துவிட முடியுமென்று எண்ணுவது பேதைமை ! உன்னைக் காட்டிலும் உன் சாமர்த்தியம், பொறுப்பு ஆகியவற்றைக் காட்டிலும் பல மடங்கு வலிமை வாய்ந்த சக்தி ஒன்று மகாராணி வானவன் மாதேவியை அல்லும், பகலும், அனவரதமும் இடைவிடாமல் காத்து வருகிறதென்பது உனக்குத் தெரியுமா ?”

அவருடைய இந்தச் சொற்களிலிருந்து ஏதோ ஒரு கூர்மையான முள் தன் மனத்தில் தைத்து விட்டது போலிருந்தது வல்லாளதேவனுக்கு, அவர் தன்னையும் தன் சக்தியையும் ஏளனம் செய்யவேண்டும் என்பதற்காக அப்படிப் பேசுகிறாரா, அல்லது மறைமுகமாகக் குத்திக் காட்டுகிறாரா என்று தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாமல் திணறினான் அவன். குபிரென்று அவன் மனத்தில் ஆத்திரம் புகைந்தது. ஒரே ஒரு விநாடிக்குள் உணர்ச்சி வசப்பட்டு அவரை எதிர்த்துப் பேசிவிடத் துணிந்துவிட்டான், வல்லாளதேவன்.

அவன் நிலையைப் பார்த்துப் புரிந்து கொண்ட அவர் உள்ளுறச் சிரித்துக்கொண்டே, “வல்லாளதேவா! உனக்கு வருகிற கோபத்தைப் பார்த்தால் இப்போதே வாளை உருவிக் கொண்டு என்மேல் பாய்ந்து விடுவாய் என்று தோன்றுகிறது. பொறு! ஆத்திரப்படாதே! மகாராணியாரின் நலத்திலும் நாஞ்சில் நாட்டின் அமைதியிலும் மிக அதிகமான பொறுப்பு எனக்கும் இருக்கிறது” என்று நிதானமாகக் கூறினார்.

“மகாமண்டலேசுவரரின் ஆற்றலையோ, ஆணைகளையோ அடியேன் எப்போதும் குறைவாக மதிப்பிட்டதில்லை. ஆனாலும் அடியேனிடம் அவர் இவ்வளவு கடுமையாக நடந்து கொள்வாரென்றும் எதிர்பார்க்கவில்லை. நாளை நாஞ்சில் நாட்டு மகாசபையைக் கூட்டவேண்டுமென்று மகாராணியார் தெரிவிக்கச் சொன்னதனால்தான் இங்கு வந்தேன். இல்லையானால் இங்கு வந்து தங்களுக்கு இவ்வளவு சிரமம் கொடுத்திருக்க மாட்டேன்”, தளபதி அமைதியாகப் பேச முயன்றாலும் வேகமாக வந்த கோபத்தை வலுவில் அடக்கிய சாயல் அவன் சொற்கள் ஒவ்வொன்றிலும் பிரதிபலிக்கச் செய்தன.

அவன் கூறியதைக் கேட்டுவிட்டு, ஏதோ பதில் கூறுவதற்காக இடையாற்று மங்கலம் நம்பி வாய் திறந்தார். அதே நேரத்துக்கு ஈர உடைகளை மாற்றிக்கொண்டு திரும்பிய நாராயணன் சேந்தன் அந்தரங்க அறைக்குள் நுழைந்து விட்டான்.

இரவுப் போது நடுச்சாமத்துக்கும் மேலாகிவிட்டது. மகாமண்டலேசுவரரின் அழகிய பெரிய மாளிகையில் அந்த ஒரே ஒர் அறையைத் தவிர மற்றெல்லாப் பகுதிகளும் நில ஒளியின் அமைதியில் அடங்கிக் கிடந்தன. பறளியாற்றில் ‘கல கல’ வென்று தண்ணிர் பாயும் ஒலி, மரப்பொந்துகளிலுள்ள ஆந்தைகளின் குரல் இவை தவிர இடையாற்று மங்கலம் தீவு நிசப்தமாகி விட்டது.

தளபதி வல்லாளதேவனின் அப்போதைய மனநிலை எவ்வளவு நேரமானாலும் இந்தத் தீவை விட்டு அக் கரைக் குப் போய் அரண்மனை க் குச் சென்று விடவேண்டும் என்றும் உறுதியாக இருந்தது. அன்றைக்கு மட்டுமே அதற்கு முன் அவனுடைய மனத்தில் ஏற்பட்டிராத சில பயம் நிறைந்த உணர்வுகள் ஏற்பட்டன. அந்தத் தீவு, அந்த மாளிகை, அவனெ தி ரே ஊடுருவும் விழிப்பார்வையோடு பொதியமலை சிகரமெனக் கம்பீரமாக வீற்றிருக்கும் மகாமண்டலேசுவரர், அவர் அருகில் நிற்கும் நாராயணன் சேந்தன் என்ற அந்தக் குள்ளன், எல்லோரும், எல்லாப் பொருளும், ஏதோ ஒரு பெரிய மர்மத்தின் சின்னஞ்சிறு பிரிவுகளைப் போல் தோன்றினார்கள்.

‘படகு விடும் அம்பலவன் வேளான்மட்டும் உறங்காமல் துறையில் விழித்திருப்பானானால் எப்படியும் இவரிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டு விடலாம். இவர் என்னிடமிருந்து எல்லாச் செய்திகளையும் தெரிந்து கொண்டு விட்டார். ஆனால் இவரிடமிருந்து நான் ஒன்றும் தெரிந்து கொள்ள முடியவில்லை. இன்று மாலை கன்னியாகுமரியில் நடந்த எல்லாச் சம்பவங்களையும் எனக்குத் தெரியாமலே இவருடைய ஒற்றனான இந்தக் குட்டையன் மறைந்திருந்து கண்காணித்திருக்கிறான். நானோ மகாமண்டலேசுவரருக்கு ஒன்றும் தெரிந்திருக்கக் காரண மில்லை என்று பகற்கனவு கண்டு கொண்டிருக்கிறேன். ஒரு கோடியிலுள்ள இந்தத் தீவின் மாளிகையில் இருந்து கொண்டு நாஞ்சில் நாட்டு மூலை முடுக்குகளில் நடப்பதைக்கூட ஒன்றுவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் இந்த மனிதர்!’ பயமும் மலைப்பும் கலந்த இதுபோன்ற திகைப்பூட்டும் நினைவுகள்தாம் வல்லாள தேவனின் மனத்தில் கிளர்ந்தன.

“சரி அப்படியானால் நாளைக்கு மகாசபை கூட்டுவதைப் பற்றிக் கூறுங்கள். அதைத் தெரிந்து கொண்டு நான் இங்கிருந்து விடை பெற்றுக் கொள்ளுகிறேன். அரண்மனையில் மகாராணியார் என்னை எதிர்பார்த்துக் காத்திருந்தாலும் காத்திருப்பார்” என்று அவன் இப்படிக் கேட்டதும் அவர் மறுபடியும் அவனை நோக்கிச் சிரித்தார். அவருடைய அந்தச் சிரிப்புக்களில் அப்படி என்னதான் மறைந்து கொண்டிருக்கின்றன? ஒவ்வொரு சிரிப்புக்கும் ஓர் உள்ளர்த்தம் இருப்பதுபோல் அல்லவா அவனுக்குத் தோன்றியது!

“சேந்தா! தளபதி திரும்பிப் போவதற்கு எவ்வளவு அவசரப்படுகிறார் பார்த்தாயா? அவருக்கு இங்கே இருப்பதற்கே பயமாக இருக்கிறது. நாமெல்லாம் சிங்கம், புலி, கரடிகள் என்று நினைக்கிறார் போலும்” என்று தளபதிக்குப் பதில் சொல்லாமல் சேந்தனை நோக்கிக் கூறுபவர் போலக் கூறினார் மகாமண்டலேசுவரர்.

“சுவாமீ! இவர் போக வேண்டுமென்றாலும் இப்போது போக முடியாது. என்னை இக்கரைக்குக் கொண்டுவந்து விட்டபின் அம்பலவன் வேளான் தோணியைத் துறையில் கட்டிவிட்டு, உறங்கப் போய்விட்டான். இனி நாளைக்கு வைகறையில்தான் தோணி போகும்” என்று சேந்தன் கூறினான்.

“கேட்டுக் கொண்டாயா, தளபதி! உன்னை இங்கே யாரும் விழுங்கிவிட மாட்டார்கள். இன்றிரவு இங்கே தங்கி விட்டுக் காலையில் போகலாம். மகாசபைக் கூட்டத்துக்காக நானும் அரண்மனைக்கு வரவேண்டி யிருக்கிறது. நாம் இருவரும் சேர்ந்தே போகலாம். மற்ற கூற்றத் தலைவர்களையெல்லாம் நேரே அரண்மனைக்குப் புறப்பட்டு வரும்படிதானே சொல்லி அனுப்பியிருக்கிறாய்?”

“ஆம் அவர்கள் யாவரும் நாளைக் காலையில் நேரே அரண்மனைக்குத்தான் புறப்பட்டு வருவார்கள்.”

“நல்லது! இப்போது உன்னிடம் ஒரு முக்கியமான வேண்டுகோள் விடுக்கப்போகிறேன். இந்த வேண்டுகோள் என்னுடைய சொந்த நன்மைக்காக மட்டும் அல்ல, எத்தனையோ வகையில் இந்தத் தேசத்தின் நன்மைகள் இந்த வேண்டுகோளுக்குள்ளே பொதிந்திருக்கலாம். அவற்றை யெல்லாம் விளக்கவோ விவரித்துச் சொல்லவோ இது நேர மில்லை” என்றார் நம்பி.

“மகாமண்டலேசுவரரின் பலமான அடிப்படையைப் பார்த்தால் அது எத்தகைய வேண்டுகோளாக இருக்குமோ என்று அடியேனுக்கு உண்மையிலேயே பயமாகத்தான் இருக்கிறது” என்று தளபதி இடைமறித்துக் கூறினார்.

“பயப்படுவதற்கு இதில் அப்படி ஒன்றும் இல்லை. இந்த ஒலையை இப்போது நான் உன்னிடம் திருப்பிக் கொடுக்கப் போவதில்லை. நான் பத்திரப்படுத் தி வைத்துக் கொள்வேனோ என்று நினைக்கிறாய் அல்லவா? அப்படியும் செய்யப் போவதில்லை. பின் என்ன செய்யப் போகிறேன், தெரியுமா? இதோ நீயே பார்த்துத் தெரிந்துகொள்” என்று சொல் லிவிட்டுப் பக்கத்தில் நின்று கொண்டிருந்த நாராயணன் சேந்தனைச் சமிக்ஞை செய்து கூப்பிட்டு ஏதோ மெல்லக் கூறினார்.

அவன் உடனே அந்த அறைக்குள்ளே எரிந்து கொண்டிருந்த தீபங்களில் ஒன்றை எடுத்துவந்து அவருக்கு முன்னால் ஏந்திப்பிடித்துக் கொண்டு நின்றான். தளபதி வல்லாளதேவனுக்குப் பகீரென்றது. “ஐயோ! இதென்ன காரியம் செய்கிறீர்கள்?’ என்று மகாமண்டலேசுவரரின் கையைப் பிடித்துத் தடுக்க எழுந்தான் அவன். “நில், அப்படியே! செய்ய வேண்டியதைத்தான் செய்கிறேன்” என்று சொல்லிக் கொண்டே ஒலையைச் சுடரில் காட்டினார் இடையாற்றுமங்கலம் நம்பி. அந்த ஒலையில் தீப்பற்றியது.

Previous articleRead Pandima Devi Part1 Ch8 | Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Pandima Devi Part1 Ch10 | Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here