Home Kalki Read Parthiban Kanavu Part 1 Ch 7

Read Parthiban Kanavu Part 1 Ch 7

138
0
Read Parthiban Kanavu Part 1 Ch 7 Free, Parthiban Kanavu is a historical novel. Download Parthiban Kanavu Free, Parthiban Kanavu pdf, Parthiban Kanavu audiobook
Parthiban Kanavu Part 1 Ch 7 பார்த்திபன் கனவு முதல் பாகம், அத்தியாயம் 7: அருள்மொழித் தேவி

Read Parthiban Kanavu Part 1 Ch 7

பார்த்திபன் கனவு

முதல் பாகம், அத்தியாயம் 7: அருள்மொழித் தேவி

Read Parthiban Kanavu Part 1 Ch 7

பொன்னனும் வள்ளியும் உறையூர்க் கோட்டை வாசலுக்கு வந்த அதே சமயத்தில், ராணி அருள்மொழித் தேவி அரண்மனை உத்தியான வனத்துக்குள் பிரவேசித்தாள். பல்லவ தூதருக்கு மகாராஜா கூறிய பதிலை ஏவலாளர்கள் உடனே வந்து மகாராணிக்குத் தெரிவித்தார்கள். மன்னர் வரும் வரையில் பொழுதுபோக்குவதற்காக ராணி உத்தியான வனத்துக்குள் சென்றாள். அவ்வனத்தில் சண்பக மலர்கள் அடர்ந்து வளர்ந்திருந்த ஒரு மூலைக்குப் போய் அங்கே அமைதியாக பளிங்குக்கல் மேடையில் உட்கார்ந்து கொண்டாள்.

அங்கிருந்து பார்த்தபோது மேற்குத் திக்கில் சூரியன் அஸ்தமனமாய்க் கொண்டிருந்த காட்சி அடி மரங்களின் வழியாகத் தெரிந்தது. மேல் வானம் முழுவதும் பத்தரை மாற்றுத் தங்க விதானத்தைப் போல் தகதக வென்று பிரகாசித்தது. பார்த்துக் கொண்டிருக்கும் போதே தங்கநிறத்தின் சோபை மங்கிக் கொண்டு வந்தது; அடி வானத்தில் சூரியன் மறைந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் மேல் வானம் முழுவதும் ஒரே ரத்தச் சிவப்பாய் மாறிற்று. இந்தக் காட்சி அருள்மொழித் தேவிக்கும் ரண களத்தையும் அங்கே இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடுவதையும் ஞாபகப்படுத்திற்று. தேவி நடு நடுங்கிக் கண்களை மூடிக் கொண்டாள்.

மறுபடி அவள் கண்ணைத் திறந்து பார்த்தபோது, வெள்ளி நிலவின் இன்பக் கிரணங்கள் மரக் கிளைகளின் வழியாக எட்டிப் பார்க்கத் தொடங்கியிருந்தன. ராணி உள்ளத்தில் பழைய ஞாபகங்கள், குமுறிக் கொண்டிருந்தன. பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னால் பார்த்திப மன்னனுக்கு மாலையிட்டு இந்த அரண்மனைக்கு அவள் வந்தாள். அந்த நாளிலிருந்து இம்மாதிரி வெண்ணிலவு பிரகாசித்த எத்தனையோ இரவுகளில் அவளும் பார்த்திபனும் இந்த உத்தியான வனத்தில் கைகோத்துக்கொண்டு உலாவியதுண்டு. இந்தப் பளிங்குக்கல் மேடைமீது உட்கார்ந்து இருவரும் நேரம் போவதே தெரியாமல் இருந்ததுண்டு. அந்த நாளில் பார்த்திபன் சில சமயம் புல்லாங்குழல் கொண்டு வந்து இசைப்பான். அருள்மொழி மெய் மறந்து கேட்டுக் கொண்டிருப்பாள். கண்ண பெருமானே பார்த்திபனாக உருக்கொண்டு வந்து மணம் புரிந்ததாக எண்ணிப் பூரிப்படைவாள். இப்படி சில காலம் வாழ்க்கையே ஓர் இன்பக் கனவாகச் சென்று கொண்டிருந்தது.

பிறகு விக்கிரமன் பிறந்த போது இன்ப வாழ்க்கையின் சிகரத்தை அவர்கள் அடைந்தார்கள். அதே உத்தியான வனத்தில் அதே பளிங்குக் கல்லின்மீது குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு கொஞ்சியதெல்லாம் அருள்மொழிக்கு நினைவு வந்தது. ஆஹா! அந்த ஆனந்தமான நாட்கள் அப்படியே நீடித்திருக்கக் கூடாதா?

ஆனால் எப்படியிருக்க முடியும்? பார்த்திபனுடைய இருதயத்தின் அடிவாரத்திலே சொல்லமுடியாத வேதனையொன்று பதுங்கிக் கிடந்து அவனுடைய நெஞ்சை அரித்துக் கொண்டிருக்கையில், அவர்களுடைய ஆனந்த வாழ்க்கை எப்படி நீடித்திருக்க முடியும்? பார்த்திபனுடைய இந்த அந்தரங்க வேதனையை வெகுகாலம் கழித்தே அருள்மொழி அறிந்தாள். அறிந்தது முதல் அந்த வேதனையில் அவளும் பங்கு கொண்டாள். அதற்குத் தானே காரணமோ என்று எண்ணி எண்ணி மனம் நொந்தாள்.

ஆமாம்; அவர்களுடைய கலியாணத்தின்போதே அந்தக் காரணமும் ஏற்பட்டு விட்டது. அருள்மொழி, சேர வம்சத்தைச் சேர்ந்த ஒரு சிற்றரசன் மகள். அந்த நாளில் அவளைப் போல் சௌந்தரியவதியான ராஜகுமாரி இல்லையென்று தென்னாடெங்கும் பிரசித்தியாகியிருந்தது. அவளைப் பார்த்திபனுக்கு மணம் செய்விக்க ஏற்பாடுகள் நடந்த பிறகு, காஞ்சி மகேந்திரவர்ம சக்கரவர்த் தியிடமிருந்து சேர மன்னனுக்குத் தூதர்கள் வந்தார்கள். பட்டத்து இளவரசர் நரசிம்மவர்மருக்கு அருள்மொழியைத் திருமணம் முடிக்க விரும்புவதாகச் சக்கரவர்த்தி செய்தி அனுப்பியிருந்தார். அருள்மொழியின் உற்றார் உறவினருக்கெல்லாம் இது பெரிதும் சம்மதமாயிருந்தது. ஆனால் அருள்மொழி அதற்கு இணங்கவில்லை; பார்த்திப சோழரையே பதியாகத் தம் மனத்தில் வரித்து விட்டதாகவும், வேறொருவரை மணக்க இசையேனென்றும் கண்டிப்பாய்ச் சொன்னாள்.

மகேந்திர சக்கரவர்த்தி மிகவும் பெருந்தன்மையுள்ளவராதலால் அதற்கு மேல் வற்புறுத்தவில்லை. இளவரசர் நரசிம்மவர்மருக்குப் பாண்டியன் மகளை மணம் முடித்து வைத்தார்.

பார்த்திபனுக்கும் அருள்மொழிக்கும் மணம் நடந்த பிறகுதான் பார்த்திபனுக்கு மேற்கூறிய சம்பவம் தெரிய வந்தது. அவர் சில சமயம், “நீ சாம்ராஜ்ய சக்கரவர்த்தினியாய் காஞ்சி சிம்மாசனத்தில் வீற்றிருக்க வேண்டியவள்; அதற்கு மாறாக, இந்த உள்ளங்கை அகல சோழ ராஜ்யத்திற்கு ராணியாயிருக்கிறாய்” என்று சொல்வதுண்டு. முதலில் இதை ஒரு விளையாட்டுப் பேச்சாகவே அருள்மொழி எண்ணியிருந்தாள். நாளாக ஆக, தன் பதியினுடைய மனத்தில் இந்த எண்ணம் மிக்க வேதனையை அளித்து வந்தது என்று தெரிந்து கொண்டாள். அதைப் போக்குவதற்காக அவள் எவ்வளவோ பிரயத்தனம் செய்தும் முடியவில்லை. விக்கிரமன் பிறந்ததிலிருந்து மகாராஜாவின் அந்தரங்க வேதனை அதிகமாகியே வந்ததாகத் தெரிந்தது. ஒரு சமயம் அவர் “உன் வயிற்றில் பிறந்த பிள்ளை ஒரு பெரிய சாம்ராஜ்யத்திற்குச் சக்கரவர்த்தியாயிருக்க வேண்டியவன். என்னாலல்லவா இன்னொருவருக்குக் கப்பம் கட்டும் சிற்றரசு அவனுக்கு லபிக்கிறது!” என்பார். இன்னொரு சமயம், “அருள்மொழி! உன் பிள்ளைக்கு என்னால் சாம்ராஜ்யப் பட்டாபிஷேகம் செய்து வைக்க முடியாது. ஆனால் வீரத்தந்தையின் புதல்வன் என்ற பட்டத்தை நிச்சயம் அளிப்பேன்!” என்றார்.

அவருடைய வாக்கை நிறைவேற்றும் சமயம் இப்போது வந்துவிட்டது. பழைய காலத்து வீர பத்தினிகளைப் போல் அவருடன் தானும் உயிர் விடுகிறதாயிருந்தால் பாதகமில்லை. அந்தப் பாக்கியத்தையும் தனக்கு அளிக்க மறுக்கிறாரே? தான் வீரத்தாயாக இருந்து விக்கிரமனை வீர மகனாக வளர்க்க வேணுமாமே? ஐயோ, அவரைப் பிரிந்த பிறகு உயிரைத்தான் தாங்க முடியுமா?

இப்படி எண்ணியபோது அருள்மொழிக்கு நெஞ்சு பிளந்து விடும் போலிருந்தது. திடிரென்று அழுகை பீறிக் கொண்டு வந்தது. “ஓ!” வென்று கதறிவிட்டாள்.

“அருள்மொழி! உன்னை வீர பத்தினி என்றல்லவா நினைத்தேன்? இவ்வளவு கோழையா நீ?” என்று கடினமான குரலில் கூறிய வார்த்தைகளைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். பார்த்திப மகாராஜா அங்கு நின்றார். உடனே அவளுடைய அழுகை நின்றது. கண்ணீரும் வறண்டு விட்டது.

“வா! அரண் மனைக்குப் போகலாம்! அழுவதற்கும் சமாதானப்படுத்துவதற்கும் இப்போது நேரமில்லை” என்றார் மகாராஜா. இருவரும் கைகோத்துக் கொண்டு வாய் பேசாமல் அரண்மனைக்குள் போனார்கள்.

பார்த்திபனும், அருள்மொழியும் அரண்மனைக்குள் பிரவேசித்து, பூஜாக்கிரஹத்துக்கு வந்தபோது தீபாராதனை நடக்கும் சமயமாயிருந்தது. பூஜாக்கிரகத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. இடது பக்கத்தில் பார்வதி தேவியின் அற்புதச் சிலை ஒன்று இருந்தது. தேவியின் இருபுறத்திலும் விநாயகரும் முருகக் கடவுளும் வீற்றிருந்தார்கள். இன்னொரு பக்கத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதரான மகாவிஷ்ணு தரிசனம் தந்தார். எல்லா விக்கிரகங்களும் சண்பகம், பன்னீர், பாரிஜாதம் முதலிய மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

தெய்வ சந்நிதியில் இளவரசர் விக்கிரமன், கைகூப்பிய வண்ணம் நின்று ஆராதனையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அர்ச்சகர் தீபாராதனை செய்து மூவருக்கும் பிரஸாதம் கொடுத்துவிட்டு வெளியே சென்றார். விக்கிரமன் மகாராஜாவைப் பார்த்து, “அப்பா! சித்திர மண்டபத்துக்குப் போகலாம் என்றீர்களே?” என்று கேட்டான். “இதோ நான் வருகிறேன்; விக்கிரமா! நீ முன்னால் போ!” என்றார் மகாராஜா.

விக்கிரமன் வெளியே சென்றதும், மகாவிஷ்ணுவின் பாதத்தினடியில் வைத்திருந்த நீள வாட்டான மரப்பெட்டியை மகாராஜா சுட்டிக் காட்டிச் சொன்னார்:-“தேவி! அந்தப் பெட்டிக்குள்ளே என்ன இருக்கிறது என்று என்னை நீ பல தடவை கேட்டிருக்கிறாய். நானும் ‘காலம் வரும் போது சொல்லுகிறேன்!’ என்று சொல்லி வந்திருக்கிறேன். சொல்ல வேண்டிய காலம் இப்போது வந்துவிட்டது.

சோழ வம்சத்தின் புராதன பொக்கிஷம் இந்தப் பெட்டிக்குள்ளே இருக்கிறது. இதோ திறந்து காட்டுகிறேன் பார்!” இவ்விதம் சொல்லிக் கொண்டே மகாராஜா அந்த மரப்பெட்டியைத் திறந்தார். பெட்டிக்குள்ளே பளபளவென்று ஜொலித்த ஓர் உடைவாளும் ஓர் ஓலைச்சுவடியும் காணப்பட்டன. உடைவாளின் பிடி தங்கத்தினாலானது, இரத்தினங்கள் இழைத்தது. வாளும் எண்ணெய் பூசிக் கூர்மையாய்த் தீட்டி வைத்திருந்தது. ஆகவே பிடியும் வாளும் ஒன்றோடொன்று போட்டியிட்டு ஒளி வீசின. இதற்கு மாறாக, ஓலைச்சுவடியோ மிகப் பழமையானதாய்க் கருநிறமாயிருந்தது.

பார்த்திபன் சொன்னான்:- “தேவி! இந்த உடைவாள் சோழ வம்சத்திலே முற்காலத்திலே பிரசித்தி பெற்றிருந்த சக்கரவர்த்திகள் காலத்திலிருந்து வந்தது. கரிகால் வளவனும் நெடுமுடிக் கிள்ளியும் இந்த உடைவாளைத் தரித்து உலகத்தை ஆண்டார்கள். ஓலைச் சுவடியில் உள்ளது நமது தமிழகத்தின் தெய்வப் புலவர் அருளிய திருக்குறள். இந்த உடைவாளும், குறள்நூலும்தான் சோழர் குலத்தின் புராதன பொக்கிஷங்கள். இவற்றை நீ வைத்துக் காப்பாற்றி விக்கிரமனுக்கு வயது வரும்போது அவனிடம் சேர்ப்பிக்க வேண்டும்.

அருள்மொழி! இந்தப் புராதன உடைவாளை என் தகப்பனார் அணிந்திருந்தார்; ஆனால் நான் அணியவில்லை. கப்பங் கட்டும் சிற்றரசனாயிருந்து கொண்டு கரிகால் வளவனும் நெடுமுடிக் கிள்ளியும் அணிந்த உடைவாளை அணிய நான் விரும்பவில்லை. விக்கிரமனிடம் நீ இதையும் சொல்ல வேண்டும் எப்போது அவன் ஒரு சின்னஞ்சிறு பிரதேசத்துக்காவது சுதந்தர மன்னனாகிறானோ அப்போது தான் இந்த உடைவாளைத் தரிக்கலாமென்று கூற வேண்டும். அக்காலத்தில் இந்த உடைவாளைத் தரித்து, இந்தத் தெய்வத் திருக்குறளில் சொல்லியிருக்கும் வண்ணம் இராஜ்ய பாரம் செய்யும் படியும் கூற வேண்டும். இந்தப் பொறுப்பை உன்னிடம் ஒப்புவிக்கிறேன். அருள்மொழி! அதை நிறைவேற்றுவதாகத் தெய்வ சன்னிதானத்தில் எனக்கு வாக்குறுதி அளிக்க வேண்டும். விக்கிரமனை வீரமகனாக நீ வளர்க்க வேண்டும்.”

இதைக் கேட்ட அருள்மொழித் தேவி கண்களில் நீர் ததும்ப, விம்முகின்ற குரலில், “அப்படியே செய்கிறேன்; மகாராஜா!” என்றாள். பார்த்திபன் அப்போது “இறைவன் அதற்கு வேண்டிய தைரியத்தை உனக்கு அளிக்கட்டும்!” என்று சொல்லி அருள்மொழியைத் தழுவிக் கொண்டு அவளுடைய கண்களில் பெருகிய கண்ணீரைத் தம்முடைய மேலாடையால் துடைத்தார்.

Source

Previous articleRead Parthiban Kanavu Part 1 Ch 6
Next articleRead Parthiban Kanavu Part 1 Ch 8

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here