Home Kalki Read Parthiban Kanavu Part 2 Ch 16

Read Parthiban Kanavu Part 2 Ch 16

57
0
Read Parthiban Kanavu Part 2 Ch 16 Free, Parthiban Kanavu is a historical novel. Download Parthiban Kanavu Free, Parthiban Kanavu pdf Parthiban Kanavu audiobook
Parthiban Kanavu Part 2 Ch 16 பார்த்திபன் கனவு இரண்டாம் பாகம், அத்தியாயம் 16: செண்பகத் தீவு

Read Parthiban Kanavu Part 2 Ch 16

பார்த்திபன் கனவு

இரண்டாம் பாகம், அத்தியாயம் 16: செண்பகத் தீவு

Read Parthiban Kanavu Part 2 Ch 16

விக்கிரமன் கரையை நெருங்க நெருங்க, கடல் அலைகளின் ஓசையையும் அடக்கிக்கொண்டு பலவித வாத்தியங்களின் ஒலி முழங்குவதைக் கேட்டான். சங்கு, தாரை, எக்காளம், பேரிகை ஆகியவை ஏக காலத்தில் முழங்கி வான முகடு வரையில் பரவி எதிரொலி செய்தன. இவ்வளவு சத்தங்களுக்கிடையில் மாந்தர்களின் குரலில் கிளம்பிய கோஷம் ஒன்று விக்கிரமனுக்கு மயிர்க்கூச்சல் உண்டாக்கிற்று. “வீரவேல்! வெற்றிவேல்!” என்னும் கோஷம்தான் அது.

அந்தத் தீவில் வாழும் மனிதர்கள் என்ன ஜாதி, யாரோ, எப்படிப்பட்டவர்களோ என்ன பாஷை பேசுபவர்களோ, ஒருவேளை நரமாமிச பட்சணிகளாய்க்கூட இருக்கலாமல்லவா? – என்று இவ்விதமெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டிருந்த விக்கிரமனுக்கு அங்கு எழுந்த “வீரவேல், வெற்றிவேல்!” என்னும் சோழ நாட்டின் வீரத் தமிழ் முழக்கமானது அளவிலாத வியப்பையும் மகிழ்ச்சியையும் ஊட்டிற்று.

“இது என்ன அதிசயத் தீவு? இங்கே சோழ நாட்டுத் தமிழரின் முழக்கம் கேட்கும் காரணம் என்ன? எதற்காக இவ்வளவு ஜனக்கூட்டம் இங்கே கூடியிருக்கிறது?” – இம்மாதிரி எண்ணங்கள் முன்னைக் காட்டிலும் அதி விரைவாக விக்கிரமனுடைய உள்ளத்தை அலைத்தன. அவனுடைய நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. திடீரென்று உடம்பில் வெலவெலப்பு உண்டாயிற்று. மரக்கட்டை பிடியினின்று நழுவிற்று. தலை சுழலத் தொடங்கியது. கண் பார்வை குன்றியது. அதே சமயத்தில் ஒரு பிரம்மாண்டமான அலை வந்து விக்கிரமன்மீது பலமாக மோதியது. விக்கிரமனுக்கு அந்த நிமிஷத்தில் கடலிலுள்ள நீர் அவ்வளவும் புரண்டு வந்து தன்மீது மோதுவதாகத் தோன்றிற்று. ஒரு கணம் மூச்சுத் திணறிற்று. “நமது வாழ்நாள் முடிந்து விட்டது” என்று நினைத்தான் விக்கிரமன். பார்த்திப மகாராஜாவுக்கு அவன் அளித்த வாக்குறுதி நினைவுக்கு வந்தது. அன்னை அருள்மொழித் தேவியின் கருணை முகமும், சிவனடியாரின் கம்பீரத் தோற்றமும், கடைசியாக விரிந்து படர்ந்த கண்களுடன் கூடிய அந்தப் பெண்ணின் மதிவதனமும் ஒன்றன்பின் ஒன்றாகவும் மின்னலைக் காட்டிலும் விரைவாகவும் தோன்றி மறைந்தன. பிறகு அவனுடைய அறிவை ஒரு மகா அந்தகாரம் வந்து மூடிவிட்டது.

விக்கிரமனுக்கு மறுபடியும் பிரக்ஞை வந்தபோது தான் மணல் தரையில் கிடப்பதாக அவனுக்கு உணர்ச்சி உண்டாயிற்று. கண்கள் மூடியபடி இருந்தன. கடல் அலைகளின் ‘ஓ’ என்ற ஓசை காதில் கேட்டுக் கொண்டிருந்தது. நெற்றியில் யாரோ திருநீறு இடுவது போல் தோன்றியது. மெதுவாகக் கண்ணை விழித்துப் பார்த்தான். சுற்றிலும் ஜனக் கூட்டம் நெருங்கி நிற்பது தெரிந்தது. ஒரு நொடிப் போதில் எல்லாம் ஞாபகத்துக்கு வந்தன. அவன் கரையை நெருங்கியபோது அந்த ஜனக் கூட்டத்திலிருந்து கிளம்பிய வாத்திய முழக்கங்களும் வாழ்த்தொலிகளும் இப்போது கேட்கவில்லை. இதற்கு மாறாக அசாதாரணமான நிசப்தம் குடி கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான். கொஞ்ச தூரத்தில் எங்கேயோ மாஞ்சோலையில் குயில் ஒன்று ‘குக்கூ’ ‘குக்கூ’ என்று கூவிற்று. அந்தக் குயிலின் இனிய குரல் அங்கே குடிகொண்டிருந்த நிசப்தத்தை அதிகமாய் எடுத்துக் காட்டிற்று. கரையை நெருங்கியபோது தனக்கு நேர்ந்த விபத்தின் காரணமாகவே அங்கே கூடியிருந்த ஜனங்கள் அவ்வளவு கவலையுடன் நிசப்தமாயிருந்தார்கள் என்பதை அறிந்து கொண்டான். ஒரு பெரும் பிரயத்தனம் செய்து உடம்பை உதறிக்கொண்டு ஒரு குதி குதித்து எழுந்து நின்றான். அவ்வளவுதான், அந்த ஜனக் கூட்டத்திலிருந்து ஒரு மகத்தான ஆனந்த கோஷம் கிளம்பிற்று. வாத்திய முழக்கங்களுடன்கூட, மனிதர்களின் கண்டங்களிலிருந்து எழுந்த வாழ்த்தொலிகள் போட்டியிட்டு ஆகாயத்தை அளாவின.

இவ்வளவு சத்தங்களுக்கும் மத்தியில் விக்கிரமனுக்கு அருகில் கவலை தோய்ந்த முகத்துடன் நின்ற ஒரு பெரிய மனிதர், “விலகுங்கள்! விலகுங்கள்! கஜராஜனுக்கு வழிவிடுங்கள்!” என்று கூவினார். கொஞ்சம் கூர்ந்து கவனித்தோமானால் இந்த மனிதரை நாம் முன்னமே பார்த்திருக்கிறோம் என்பது நினைவு வரும். ஆமாம்; மாமல்லபுரத்தில் நடந்த கலைத் திருநாளின்போது நரசிம்ம சக்கரவர்த்தியின் சமூகத்தில் செண்பகத் தீவு வாசிகளின் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த தூதர் தான் இவர்!

“விலகுங்கள்” என்ற அவருடைய குரலைக் கேட்டுச் சுற்றிலும் நின்ற ஜனங்கள் விரைவாக விலகிக் கொண்டார்கள். சற்றுத் தூரத்தில் பட்டத்து யானையைப்போல் அலங்கரித்த ஒரு யானை நின்றது. அதை யானைப்பாகன் நடத்திக் கொண்டு விக்கிரமன் நின்ற இடத்தை நோக்கி வந்தான். பட்டணப் பிரவேசத்துக்காக அலங்கரிக்கப்பட்டது போலக் காணப்பட்ட அந்த கஜராஜனுடைய தூக்கிய துதிக்கையில் ஓர் அழகான புஷ்பஹாரம் இருந்தது. விக்கிரமன் மந்திர சக்தியினால் கட்டுண்டவனைப் போல் யானையைப் பார்த்த படி கையைக் கட்டிக் கொண்டு அசையாமல் நின்றான். யானை மிகவும் சமீபத்தில் நெருங்கி வந்தபோது விக்கிரமனுடைய சிரம் அவனை அறியாமலே சிறிது வணங்கியது. யானை தன் துதிக்கையில் ஏந்தி வந்த மாலையை அவனுடைய கழுத்தில் சூட்டிற்று.

அப்போது அந்த ஜனக்கூட்டத்தில் ஏற்பட்ட ஆரவாரத்தையும் முழக்கத்தையும் வர்ணித்தல் அசாத்தியமான காரியம். “வீரவேல்!” “வெற்றிவேல்!” என்னும் கோஷங்களுடன், “விக்கிரம சோழ மகாராஜா வாழ்க!” “செண்பக நாட்டு மன்னர்பிரான் வாழ்க!” என்னும் கோஷங்களையும் கேட்டு, விக்கிரமனுடைய உள்ளம் பெருங்கிளர்ச்சியடைந்தது. மகா ஆச்சரியம் விளைவித்த இந்தச் சம்பவங்களைப் பற்றி யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டுமென்று அவனுக்குத் துடிப்பாயிருந்தது. ஆனால் அருகில் நின்றவர்களிடம் பேசுவதற்குக் கூட அச்சமயம் அவனுக்கு அவகாசம் கிடைக்கவில்லை.

ஏக ஆரவாரங்களுக்கிடையில், விக்கிரமனை அந்த யானையின்மீது அமைந்திருந்த அம்பாரியில் ஏற்றினார்கள். யானை கடற்கரையிலிருந்து உள்நாட்டை நோக்கிக் கம்பீரமாக நடந்து செல்ல, ஜனக்கூட்டமும் ஆரவாரத்துடன் அதைப் பின் தொடர்ந்து சென்றது. அம்பாரியின் மீது வீற்றிருந்த விக்கிரமனோ, “இல்லை; இதெல்லாம் நிச்சயமாக உண்மை இல்லை; கனவுதான் காண்கிறோம்; அல்லது இந்திரஜாலம், மகேந்திரஜாலம் என்று சொல்லுகிறார்களே அப்படி ஏதாவது இருக்க வேண்டும்” என்று அடிக்கடி எண்ணிக் கொண்டான்.

சுற்று முற்றும் அவன் கண்ணில் பட்ட தென்னந் தோப்புகள், மாஞ்சோலைகள், கழனிகள், கால்வாய்கள் எல்லாம் அவனுக்குச் சோழ நாட்டுக் காட்சிகளாகவே புலப்பட்டன. சிறிது நேரம் போன பிறகு ஒரு கிராமம் தென்பட்டதும் அதுவும் தமிழ்நாட்டுக் கிராமமாகவே தோன்றியது. ஊருக்குப் புறத்திலிருந்த கிராம தேவதையின் கோவிலும் அப்படியே தமிழர் கோவிலாகக் காட்சி தந்தது.

இன்னும் சிறிது தூரம் போனதும் ஒரு பட்டணம் காணப்பட்டது. அதன் வீடுகள், வீதிகள், சதுக்கங்கள் எல்லாம் உறையூரின் மாதிரிலேயே அமைந்திருந்தன. ஆனால் அவ்வளவு பெரிய பட்டணமில்லை. அவ்வளவு ஜன நெருக்கமும் கிடையாது. அத்தனை மாட மாளிகைகள், கூட கோபுரங்களும் இல்லை. அப்பட்டணத்தின் வீதிகளில் அவரவர் வீட்டு வாசல்களில் நின்ற ஸ்திரீகள், புருஷர்கள், குழந்தைகள் எல்லாரும் சிறந்த ஆடை ஆபரணங்கள் அணிந்து மலர்ந்த முகத்துடன் நின்றார்கள். அவர்கள் எல்லாரும் தமிழ்நாட்டு மக்களாகவே காணப்பட்டார்கள். அளவிலாத ஆர்வம் பொங்கிய கண்களுடன் அவர்கள் விக்கிரமனைப் பார்த்துப் பலவித வாழ்த்துகளினால் தங்களுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

விக்கிரமனுக்குத் திடீரென்று ஒரு சந்தேகம் உதித்தது. ஒருவேளை இதெல்லாம் அந்தப் பல்லவ சக்கரவர்த்தியின் கபட நாடகமாயிருக்குமோ? தன்னைப் பற்றி வந்த கப்பல் பல நாள் பிரயாணம் செய்வதாகப் பாசாங்கு செய்து விட்டுக் கடைசியில் சோழநாட்டின் கடற்கரையிலேயே தன்னை இறக்கிவிட்டிருக்குமோ? இந்த ஆரவார ஊர்வலமெல்லாம் தன்னை ஏமாற்றிப் பல்லவ சக்கரவர்த்தியின் ஆதிக்கத்தை ஒப்புக்கொள்ளும்படி செய்வதற்கு ஒரு சூழ்ச்சியோ! இவ்விதமாக எண்ணியபோது விக்கிரமனுக்குக் கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.

இதற்குள் யானையானது அந்தப் பட்டணத்துக்குள்ளேயே பெரிய மாளிகையாகத் தோன்றிய ஒரு கட்டடத்துக்கு வெளியே வந்து நின்றது. விக்கிரமனை யானை மீதிருந்து கீழே இறக்கினார்கள். ஜனக் கூட்டமெல்லாம் வெளியில் நிற்க, முன்னமே நமது கவனத்துக்குள்ளான பெரியவர் மட்டும் விக்கிரமனை அழைத்துக் கொண்டு மாளிகைக்குள் சென்றார்.

“மகாராஜா! இதுதான் இந்தச் செண்பக நாட்டின் மன்னர்கள் பரம்பரையாக வாழ்ந்து வந்த அரண்மனை, தாங்களும் இந்த அரண்மனையில் வசிக்க வேண்டுமென்று இந்நாட்டுப் பிரஜைகளின் விண்ணப்பம்” என்றார் அப்பெரியவர்.

“இந்நாட்டின் பெயர் என்னவென்று நீங்கள் சொன்னீர்?”

“செண்பக நாடு மகாராஜா!”

“இந்தப் பட்டணத்தின் பெயர் என்னவோ?”

“செண்பக நாட்டின் தலைநகரம் இது. இதன் பெயர் குமாரபுரி.”

“குமாரபுரிதானே? மாயாபுரி அல்லவே?”

“இல்லை, அரசே! குமாரபுரிதான்.”

“நீர் யார் என்று கொஞ்சம் சொன்னால் நன்றாயிருக்கும்.”

“அடியேன் பெயர் சித்தார்த்தன். காலஞ்சென்ற விஷ்ணுவர்த்தன மகாராஜாவுக்கு நான் முதல் மந்திரி தங்களுக்கு விருப்பம் இருந்தால்…”

“என்ன சொன்னீர், மந்திரி என்றீரா? மந்திரவாதி என்றீரா?”

“மந்திரிதான், மகாராஜா!”

“ஒருவேளை மந்திரவாதியோ என்று நினைத்தேன். ஆமாம் நீர் மந்திரவாதியில்லாவிட்டால் நான் யார் என்பதும், என்னை இன்று காலை இந்தத் தீவுக்கருகில் கொண்டு வந்து இறக்கி விடுவார்களென்பதும் எப்படித் தெரிந்தது?”

“அது பெரிய கதை, மகாராஜா! சாவகாசமாக எல்லாம் சொல்கிறேன், இப்போதைக்கு…”

“இப்போதைக்கு இது உண்மையாகவே அரண்மனை தானா, அல்லது சிறைச்சாலையா என்று மட்டும் சொன்னால் போதும்.”

“என்ன வார்த்தை சொன்னீர்கள்? சிறைச்சாலையா? இந்த நாட்டில் சிறைச்சாலை என்பதே கிடையாது! சிறைச்சாலை, இராஜத்துரோகம், மரணத் தண்டனை என்பதெல்லாம் பரத கண்டத்திலே தான், மகாராஜா!”

“அப்படியா? பரத கண்டத்துக்கும் இந்த நாட்டுக்கும் அவ்வளவு தூரமோ?”

“சாதாரணமாய்ப் பன்னிரண்டு நாள் கடல் பிரயாணம் புயல், மழை முதலியவை குறுக்கிட்டால் இன்னும் அதிக நாளாகும்.”

“உண்மைதானே சொல்கிறீர்?”

“அடியேன் உண்மையைத் தவிர வேறு பேசுவதில்லை.”

“அப்படியானால் தமிழகத்திலிருந்து பன்னிரண்டு நாள் பிரயாணத்திலுள்ள நீங்கள், தமிழ் மொழி பேசுகிறீர்களே, எப்படி?”

“மகாராஜா! இந்தச் செண்பகத் தீவிலே மட்டுமல்ல இன்னும் கிழக்கே தூரத்திலுள்ள தீவுகளிலும் தமிழ் மக்கள் வசிக்கிறார்கள், தமிழ்மொழி பேசுகிறார்கள். தங்களுடைய மூதாதை கரிகாலச் சோழரின் காலத்தில் சோழ நாட்டுத் தமிழர்கள் வளம் மிக்க இந்தத் தீவுகளில் வந்து குடியேறினார்கள். கரிகாலச் சோழரின் குமாரர் தான் இந்தப் பட்டணத்தை ஸ்தாபித்தார். அதனாலேயே குமாரபுரி என்று அதற்குப் பெயர் ஏற்பட்டது. அந்த நாளில் சோழ சேனாதிபதி ஒருவர் சக்கரவர்த்தியின் ஆக்ஞையின் பேரில் இந்நாட்டை ஆட்சி புரியலானார். அவருடைய சந்ததியார் பத்து வருஷத்துக்கு முன்பு வரையில் இந்நாட்டின் அரசர்களாயிருந்து செங்கோல் செலுத்தி வந்தார்கள். அந்த வம்சத்தின் கடைசி அரசரான விஷ்ணுவர்த்தனர் சந்ததியில்லாமல் காலமானார். பிறகு இந்த நாடு இன்று வரையில் அரசர் இல்லாத நாடாயிருந்து வந்தது. அடிக்கடி பக்கத்துத் தீவுகளில் உள்ளவர்கள் வந்து இந்நாட்டின் பட்டணங்களையும் கிராமங்களையும் சூறையாட ஆரம்பித்தார்கள்…. வெவ்வேறு பாஷை பேசுவோரும், அநாகரிகங்களும், தட்டை மூஞ்சிக்காரருமான பற்பல சாதியார் இந்தத் தீவை சுற்றியுள்ள தேசங்களில் வசிக்கிறார்கள். அவர்களை எதிர்த்து நின்று வெற்றி பெறுவதற்கு அரசர் இல்லாக் குடிகளாகிய எங்களால் முடியவில்லை. இப்படிப்பட்ட சமயத்தில் முருகக் கடவுளே அனுப்பி வைத்தது போல், சோழர் குலக்கொழுந்தான தாங்கள் எங்களைத் தேடி வந்திருக்கிறீர்கள் எங்களுடைய பாக்கியந்தான்.”

கரிகாலச் சோழனைப் பற்றி அந்தப் பெரியவர் பிரஸ்தாபித்தவுடனே விக்கிரமன் மிகவும் சிரத்தையுடன் கேட்கத் தொடங்கினான். அவனுக்கிருந்த சந்தேகம், அவநம்பிக்கை எல்லாம் போய்விட்டது. சித்தார்த்தரின் குரல், முகத்தோற்றம் ஆகியவற்றிலிருந்து, அவர் சொல்லுவதெல்லாம் சத்தியம் என்னும் நம்பிக்கையும் விக்கிரமனுக்கு உண்டாயிற்று. `நமது தந்தை பார்த்திப மகாராஜா எந்தக் கரிகால் வளவனைப் பற்றி அடிக்கடி பெருமையுடன் பேசி வந்தாரோ அந்த சோழர் குல முதல்வன் காலத்திலே தமிழர்கள் வந்து குடியேறிய நாடு இது. என்ன ஆச்சரியமான விதிவசத்தினாலோ அப்படிப்பட்ட நாட்டுக்கு நாம் வந்து சேர்ந்திருக்கிறோம்’ என்பதை நினைத்தபோது விக்கிரமனுக்கு மயிர்க்கூச்செறிந்தது, கண்ணில் நீர் துளித்தது.

“ஐயா! உம்மை நான் பரிபூரணமாக நம்புகிறேன். எல்லா விஷயங்களையும் விவரமாக அப்புறம் கேட்டுக் கொள்கிறேன். இப்போதைக்கு ஒன்று மட்டும் சொல்லி விடுகிறேன். என்னை நீங்கள் உங்களுடைய அரசனாய்க் கொள்வதாயிருந்தால், இன்னொரு ராஜாவுக்கோ சக்கரவர்த்திக்கோ கப்பம் செலுத்த முடியாது. சுதந்திர நாட்டுக்குத்தான் நான் அரசனாயிருப்பேன். இல்லாவிட்டால் உயிரை விடுவேன். நீங்களும் இந்நாட்டின் சுதந்திரத்தைக் காப்பதற்காக உயிரைக் கொடுக்கச் சித்தமாயிருக்க வேண்டும். எதிரிகள் துஷ்டர்களாயிருந்தாலும், நல்லவர்களாக இருந்தாலும், யாராயிருந்தாலும் பணிந்து போகிறது என்ற பேச்சே உதவாது. இதற்குச் சம்மதமாயிருந்தால் சொல்லுங்கள்” என்றான் விக்கிரமன்.

“மகாராஜா, தங்களுடைய தந்தை பார்த்திப மகாராஜா போர்க்களத்தில் அடைந்த வீர மரணத்தின் புகழ் எங்கள் காதுக்கும் எட்டியிருக்கிறது. எங்களுடைய உடம்பில் ஓடுவதும் சோழ நாட்டின் வீர இரத்தந்தான். இந்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் உடல், பொருள், ஆவியைக் கொடுத்துத் தங்கள் சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள ஆயத்தமாயிருக்கிறார்கள். வீரத்தலைவன் ஒருவன் தான் எங்களுக்கு வேண்டியிருந்தது. தாங்கள் வந்துவிட்டீர்கள் இனி என்ன குறை?”

அச்சமயம் கோயில் சேமக்கலத்தின் ஓசை கேட்டது.

சித்தார்த்தர், “மகாராஜா! தாங்கள் ஸ்நான பானங்களை முடித்துக் கொண்டு சிறிது இளைப்பாறுங்கள். சாயங்காலம் முருகவேள் ஆலயத்துக்குப் போய்த் தரிசனம் செய்ய வேண்டும். கூடிய சீக்கிரத்தில் முடிசூட்டு விழா நடத்துவது பற்றியும் யோசனை செய்யவேண்டும்” என்றார்.

Source

Previous articleRead Parthiban Kanavu Part 2 Ch 15
Next articleRead Parthiban Kanavu Part 2 Ch 17

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here