Home Kalki Read Parthiban Kanavu Part 2 Ch 17

Read Parthiban Kanavu Part 2 Ch 17

63
0
Read Parthiban Kanavu Part 2 Ch 17 Free, Parthiban Kanavu is a historical novel. Download Parthiban Kanavu Free, Parthiban Kanavu pdf Parthiban Kanavu audiobook
Parthiban Kanavu Part 2 Ch 17 பார்த்திபன் கனவு இரண்டாம் பாகம், அத்தியாயம் 17: குந்தவியின் சபதம்

Read Parthiban Kanavu Part 2 Ch 17

பார்த்திபன் கனவு

இரண்டாம் பாகம், அத்தியாயம் 17: குந்தவியின் சபதம்

Read Parthiban Kanavu Part 2 Ch 17

காஞ்சி நகர் அரண்மனையின் உப்பரிகை நிலா மாடத்தில் சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் அமர்ந்திருந்தார்கள். கிருஷ்ணபட்சத்து முன்னிரவு, வானத்தில் விண்மீன்கள் சுடர்விட்டு ஒளிர்ந்தன. கிழக்கே வெகு தூரத்தில் மாமல்லபுரத்துக் கலங்கரை விளக்கம் நட்சத்திரங்களுடன் போட்டியிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

காஞ்சி நகரின் பற்பல சிவாலயங்கள், விஷ்ணு ஆலயங்களிலிருந்து பேரிகைச் சப்தம், ஆலாட்ச மணி ஓசை, யாழின் இன்னிசையுடன் கலந்து பாடும் பக்தர்களின் குரலொலி – எல்லாம் கலந்து வந்து கொண்டிருந்தன. அரண்மனைப் பூந்தோட்டத்திலிருந்து செண்பகம், பன்னீர், பாரிஜாதம் ஆகிய மலர்களின் சுகந்தம் குளிர்காற்றுடன் கலந்து இலேசாக வந்து கொண்டிருந்தது.

“குழந்தாய்! ஏன் இப்படி ஒரு மாதிரியிருக்கிறாய்? உடம்பு நன்றாகயில்லையா?” என்று சக்கரவர்த்தி கேட்டார்.

“எனக்கு உடம்பு ஒன்றுமில்லை அப்பா, மனந்தான் நன்றாயில்லை!”

“மனம் இருக்கிறதே அம்மா! ரொம்பப் பொல்லாதது ‘மத்தகஜத்தைப் போன்றது’ என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதைப் புத்தி என்கிற அங்குசத்தால் அடக்கி ஆளவேண்டும்….”

“அப்பா!”

“ஏன் குழந்தாய்!”

“நான் சமண முனிவரைப் பார்த்துவிட்டு வந்தது தங்களுக்கு எப்படித் தெரிந்தது?”

“என் மகள் என்ன செய்கிறாள் என்பது எனக்குத் தெரியாமல் போனால் இந்தப் பெரிய பல்லவ சாம்ராஜ்யத்தை நான் எப்படி அம்மா, கட்டி ஆள முடியும்?”

“அப்பா! நான் சமண சமயத்தையோ, பௌத்த சமயத்தையோ சார்ந்துவிடப் போகிறேன்.”

“ஏன் அம்மா, அப்படி? நமது சைவ வைஷ்ணவ சமயங்கள் என்ன அவ்வளவு துர்ப்பாக்கியத்தைச் செய்து விட்டன?”

“வாழ்க்கையில் எனக்கு வெறுப்பு உண்டாகிவிட்டது. இந்த உலகத்தில் ஏன் பிறந்தோமென்று இருக்கிறது!”

“அடடா! அவ்வளவுக்கு வந்து விட்டதா? அப்பர் பெருமானைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தாயே? அவர் மனிதப் பிறவியின் மகிமையைப்பற்றி உனக்கு ஒன்றும் சொல்லவில்லையா? தில்லை அம்பலத்தில் ஆனந்த நடனமிடும் பெருமானைத் தரிசிப்பதற்காகவே….”

“நிறுத்துங்கள் அப்பா! வயதாக ஆக அந்தப் பெரியவர் ஒரே பக்திப் பைத்தியமாகி விட்டார். ஆனந்தமாம்! நடனமாம்! இந்த அழகான உலகத்தைப் படைத்த கடவுளுக்கு ஆனந்தம் வேறு, நடனம் வேறு வேண்டிக் கிடந்ததாக்கும்?”

இதைக் கேட்ட சக்கரவர்த்தி கலகலவென்று சிரித்தார். குந்தவி வெறுப்புடன் வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.

“நான் ஏன் சிரித்தேன் என்று தெரியுமா, குந்தவி?”

“அதுதான் நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். தங்களுக்கு ஒரு வேளை பைத்தியம், கியித்தியம்….”

“இல்லை குழந்தாய்! இல்லை; பைத்தியம் எனக்குப் பிடிக்கவில்லை! நான் சிரித்த காரணம் வேறு; உன் மாதிரியே எனக்கும் ஒரு காலத்தில் இந்த உலகம் பிடிக்காமலிருந்தது. வாழ்க்கை வேப்பங்காயாகி விட்டது! அதன் காரணம் என்ன தெரியுமா?”

“நான் உங்களுக்குப் பெண்ணாய்ப் பிறந்தது தானோ என்னவோ?”

சக்கரவர்த்தி புன்சிரிப்புடன், “இல்லை அம்மா, இல்லை! நீ பிறந்த பிறகு எனக்கு மறுபடியும் உலகம் பிடிக்க ஆரம்பித்து விட்டது. அதற்கு முன்னாலேதான் சில காலம் எனக்கு உலக வாழ்க்கையின்மேல் ரொம்பவும் வெறுப்பாயிருந்தது. அதற்குக் காரணம்…. என் தந்தையின் மீது எனக்கு ரொம்பக் கோபமாயிருந்ததுதான்! என்றார்.

குந்தவியின் முகத்தில் அவளை அறியாமலே புன்னகை தோன்றியது. இதைப் பார்த்த நரசிம்மவர்மர், “உனக்கு இப்போது வாழ்க்கையில் வெறுப்பு உண்டாகியிருப்பதற்கு அதுதானே காரணம்? என்மேல் உனக்கு இப்போது சொல்லமுடியாத கோபம் இல்லையா?” என்றார்.

குந்தவி கண்களில் துளிர்த்த நீர்த்துளிகளைத் துடைத்துக் கொண்டாள். தலை குனிந்தபடி, “அப்பா! உங்கள் பேரில் எனக்கு என்ன கோபம்? உங்களுடைய தர்ம ராஜ்யத்தில் இப்படிப்பட்ட அநீதி நடந்துவிட்டதே என்றுதான் வருத்தமாயிருக்கிறது” என்றாள்.

“இதுதானா பிரமாதம், குந்தவி? இதற்கு ஏன் இவ்வளவு கவலை? அநியாயத்தைச் செய்வதற்கு எனக்குச் சக்தி உண்டு என்றால் அதை நிவர்த்திப்பதற்கும் சக்தி உண்டல்லவா? உண்மையில் அநீதி நடந்து விட்டதாக எனக்குத் தெரிந்தால் உடனே அதற்குப் பரிகாரம் செய்து விட்டு மறுகாரியம் பார்க்கிறேன்” என்றார் சக்கரவர்த்தி.

“நிஜந்தானே, அப்பா! சோழ ராஜகுமாரனுடைய செயலுக்கு அவன் பொறுப்பாளி இல்லையென்று தெரிந்தால் தண்டனையை மாற்றிவிடுவீர்கள் அல்லவா?”

“நிச்சயமாய் அம்மா!” அப்போது குந்தவி தன் மனத்திற்குள் “அந்த வேஷதாரிச் சிவனடியாரை எப்படியாவது கண்டுபிடித்து, அவருடைய தாடியைப்பற்றி இழுத்துக் கொண்டு வந்து சக்கரவர்த்தியின் முன்னிலையில் நிறுத்தாவிட்டால் என் பெயர் குந்தவி அல்ல!” என்று சபதம் செய்து கொண்டாள்.

“குந்தவி! என்ன யோசனையில் ஆழ்ந்து விட்டாய்? இன்னும் இரண்டு நாளில் நான் உறையூர்க்குப் போகப் போகிறேன். நீயும் வருவாயல்லவா?” என்று சக்கரவர்த்தி கேட்டார்.

“வருகிறேன் அப்பா! அங்கே எனக்கும் ஒரு காரியம் இருக்கிறது; அதற்கு நீங்கள் குறுக்கே ஒன்றும் சொல்லக் கூடாது.”

“என்ன காரியம் என்று எனக்குச் சொல்லலாமோ, அதுவும் இரகசியமோ?”

“இரகசியம் ஒன்றுமில்லை, அப்பா! அருள்மொழி ராணியை நான் பார்க்கப் போகிறேன்.”

“சரிதான்; ஆனால் அருள்மொழி ராணி உன்னைப் பார்க்கச் சம்மதிக்க வேண்டுமே!”

“அவர் என்னைப் பார்ப்பதற்கு என்ன தடை? எதற்காக மறுக்கிறார்?”

“அவளுடைய பிள்ளையைத் தேசப் பிரஷ்டம் செய்தவன் மகள் ஆயிற்றே நீ? உன்மேல் கோபம் இல்லாமல் இருக்குமா?”

“என்மேல் எதற்காகக் கோபித்துக் கொள்ள வேண்டும்? ரொம்ப அழகு தான்! நானா இவருடைய பிள்ளைக்குத் துர்ப்போதனை செய்து சக்கரவர்த்திக்கு விரோதமாய்க் கலகம் செய்யும்படி தூண்டினேன்? என் மேல் கோபித்துக் கொண்டு என்ன பிரயோஜனம்?” என்றாள் குந்தவி.

இதைக் கேட்ட சக்கரவர்த்தி தம் மனத்திற்குள், “பெண்ணாய்ப் பிறந்தவர்களிடம் தர்க்க ரீதியை எதிர்பார்ப்பதிலேயேயும் பிரயோஜனமில்லைதான்!” என்று எண்ணிக் கொண்டார்.

Source

Previous articleRead Parthiban Kanavu Part 2 Ch 16
Next articleRead Parthiban Kanavu Part 2 Ch 18

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here