Home Kalki Read Parthiban Kanavu Part 2 Ch 3

Read Parthiban Kanavu Part 2 Ch 3

68
0
Read Parthiban Kanavu Part 2 Ch 3 Free, Parthiban Kanavu is a historical novel. Download Parthiban Kanavu Free, Parthiban Kanavu pdf, Parthiban Kanavu audiobook
Parthiban Kanavu Part 2 Ch 3 பார்த்திபன் கனவு இரண்டாம் பாகம், அத்தியாயம் 3: சதியாலோசனை

Read Parthiban Kanavu Part 2 Ch 3

பார்த்திபன் கனவு

இரண்டாம் பாகம், அத்தியாயம் 3: சதியாலோசனை

Read Parthiban Kanavu Part 2 Ch 3

சற்று நேரத்துக்கெல்லாம் அருள்மொழித் தேவியும் இளவரசர் விக்கிரமனும் குடிசைக்குள் வந்து “சுவாமி!” என்று சொல்லி சிவனடியாரின் பாதத்தில் வணங்கினார்கள். சிவனடியார் விக்கிரமனைத் தூக்கி எடுத்து அணைத்துக் கொண்டு ஆசீர்வதித்தார். ஆறு வருஷத்துக்கு முன் அறியாப் பாலகனாயிருந்த விக்கிரமன் இப்போது, இளங்காளைப் பருவத்தை அடைந்து ஆஜானுபாகுவாக விளங்கினான். அவன் முகத்தில் வீரக் களை திகழ்ந்தது. உள்ளத்தில் பொங்கிய ஆர்வத்தின் வேகம் கண்களில் அலையெறிந்தது. படபடவென்று பேசத் தொடங்கினான்:- “சுவாமி! நேற்றிரவு கனவில் என் தந்தை வந்தார். என்னை அழைத்துக் கொண்டு சிராப்பள்ளி மலைக்குப் போனார். அங்கே உச்சியில் பறந்து கொண்டிருந்த பல்லவர்களின் சிங்கக் கொடியைக் காட்டினார்…. சுவாமி! இனிமேல் என்னால் பொறுத்திருக்க முடியாது. நீங்கள் என்னை ஆசீர்வதிக்க வேண்டும்” என்றான்.

என்னுடைய ஆசீர்வாதம் உனக்கு எப்போதும் இருக்கிறது. விக்கிரமா! சரியான காலம் வரையில் காத்திருக்கும்படி தானே சொன்னேன்? இப்போது காலம் வந்துவிட்டது. நீ என்ன செய்ய உத்தேசித்திருக்கிறாய் சொல்லு. வெறும் பதற்றத்தினால் மட்டும் காரியம் ஒன்றும் ஆகிவிடாது. தீர யோசித்து ஒரு காரியத்தில் இறங்க வேண்டும். உன் தந்தை உனக்குக் கொடுத்து விட்டுப்போன குறள் நூலில் தெய்வப் புலவர் என்ன சொல்லியிருக்கிறார்?

“எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்
எண்ணுவம் என்ப(து) இழுக்கு”

இதை நீ எப்போதும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.”

“ஆம், சுவாமி! எண்ணித்தான் துணிந்திருக்கிறேன். வரப்போகும் புரட்டாசிப் பௌர்ணமியன்று சிராப்பள்ளி மலைமீது பறக்கும் பல்லவர் கொடியை எடுத்தெறிந்து விட்டு அங்கே புலிக்கொடியைப் பறக்க விடப் போகிறேன். யார் என்ன சொன்ன போதிலும் இந்தத் தீர்மானத்தை நான் மாற்றிக் கொள்ளப் போவதில்லை.”

“மிக்க சந்தோஷம் விக்கிரமா! உன் தீர்மானத்தை மாற்றிக் கொள்ளும்படி நானும் சொல்லப் போவதில்லை. இந்த நாள் எப்போது வரப்போகிறதென்றுதான் நான் காத்துக்கொண்டிருந்தேன். ஆனால் உன் தீர்மானத்தைக் காரியத்தில் நிறைவேற்ற என்ன ஏற்பாடு செய்திருக்கிறாய்? அதைத் தெரிந்து கொள்ள மட்டும் விரும்புகிறேன். புலிக்கொடியைப் பறக்க விட்டுவிட்டால் போதுமா? அதைக் காத்து நிற்கப் படைகள் வேண்டாமா? பல்லவ தளபதி அச்சுதவர்மன் சும்மா பார்த்துக் கொண்டிருப்பானா?”

“சுவாமி! அந்தக் கவலை தங்களுக்கு வேண்டவே வேண்டாம். சோழநாட்டு மக்கள் எல்லோரும் சித்தமாயிருக்கிறார்கள். பொன்னனைக் கேளுங்கள், சொல்லுவான். புரட்டாசிப் பௌர்ணமியில் வீரர்கள் பலர் உறையூரில் வந்து கூடுவார்கள்; புலிக்கொடி உயர்ந்ததும் அவர்கள் என்னுடைய படையில் பகிரங்கமாய்ச் சேர்ந்து விடுவார்கள். உறையூரிலுள்ள பல்லவ சைன்யத்தைச் சின்னாபின்னம் செய்து அச்சுதவர்மனையும் சிறைப்படுத்தி விடுவோம்…!”

“இந்த அபாயகரமான முயற்சியில் உனக்கு யார் ஒத்தாசை செய்கிறார்கள்? யார் உனக்காகப் படை திரட்டுகிறார்கள்? நீயோ வசந்த மாளிகையை விட்டு வெளியே போனது கிடையாதே….”

“என் சித்தப்பா மாரப்ப பூபதிதான் எல்லா ஏற்பாடுகளும் செய்கிறார். அவர் இரகசியமாக ஒரு பெரிய படை திரட்டி வந்திருக்கிறார்….”

மாரப்ப பூபதி என்றதுமே சிவனடியாரின் முகம் கறுத்தது. அவர் விக்கிரமனை நடுவில் நிறுத்தி “யார்? மாரப்ப பூபதியா இதெல்லாம் செய்கிறான்; அவனிடம் உன் உத்தேசத்தை எப்போது சொன்னாய்?” என்று கேட்டார்.

“சித்தப்பா முன்மாதிரி இல்லை! நீங்கள் கவலைப்பட வேண்டாம். அடியோடு புது மனிதர் ஆகிவிட்டார். என் தகப்பனார் விஷயத்தில் நடந்து கொண்டதற்காக மிகவும் பச்சாதாபப்படுகிறார். அதற்குப் பரிகாரமாக இப்போது சோழநாட்டின் விடுதலைக்கு உயிரையும் கொடுக்கக் சித்தமாயிருக்கிறார்” என்றான் விக்கிரமன்.

சிவனடியார் அருள்மொழியைப் பார்த்து, “தேவி! இது நிஜந்தானா?” என்று கேட்டார்.

“ஆம், சுவாமி! மாரப்ப பூபதி மனந்திருந்தியவராகத் தான் காணப்படுகிறார்” என்றாள் அருள்மொழி.

மிக்க சந்தோஷம். விக்கிரமா! உன்னுடைய முயற்சி நிறைவேறட்டும். சேனாதிபதியான கார்த்திகேயர் உன்னைக் காத்து நிற்கட்டும். உன் தோளுக்கும் வாளுக்கும் பராசக்தி பலம் அளிக்கட்டும். அவசியமான சமயத்தில் மறுபடியும் வருவேன். இப்போது போய் வருகிறேன்” என்று எழுந்தார் சிவனடியார்.

“சுவாமி! என் சித்தப்பா இப்போது வருவதாகச் சொல்லியிருக்கிறாரே; அவர் தங்களைப் பார்க்க மிகவும் ஆவலாயிருக்கிறார்; தாங்கள் கொஞ்சம் இருந்து போக வேண்டும்” என்றான் விக்கிரமன்.

“இல்லை, விக்கிரமா எனக்கு இருக்க நேரமில்லை. எது எப்படியானாலும் நீ உன் உறுதியைக் கைவிடாதே. உன் தந்தை வாக்கை மறந்து விடாதே” என்றார்.

அருள்மொழித் தேவி அப்போது பொன்னனைப் பார்த்து, “பொன்னா! இளவரசரை அழைத்துக் கொண்டு நீ படகுக்குப் போ; இதோ நான் வந்துவிடுகிறேன்” என்று சொல்ல, பொன்னனும் விக்கிரமனும் உடனே வெளியேறினார்கள்.

அருள்மொழித் தேவி அப்போது சிவனடியார் பாதத்தில் நமஸ்கரித்து, அந்தப் பாதங்களைப் பிடித்துக் கொண்ட வண்ணம் சொன்னாள்:- “சுவாமி தாங்கள் யாரோ எனக்கு தெரியாது. என்னவெல்லாமோ தங்களைப்பற்றி நான் சந்தேகித்தது உண்டு. ஆனால் தாங்கள் எங்கள் நன்மையை நாடுகிறவர் என்பதில் சந்தேகப்பட்டதே இல்லை; அதனால் தங்களை யாரென்று தெரிந்து கொள்ளவும் நான் ஆசைப்படவில்லை. தாங்கள் யாராயிருந்தாலும் சரி, அடியாளுக்கு ஒரு வரந்தர வேண்டும். எனக்குத் தங்களைத் தவிர வேறு கதி கிடையாது.”

சிவனடியாரின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

“என்னால் முடிகிற காரியமாயிருந்தால் கட்டாயம் செய்கிறேன், அம்மா! கேள்” என்றார்.

“தாங்கள் மகான், தங்களால் முடியாத காரியம் ஒன்றுமே இருக்க முடியாது. வேறென்ன நான் கேட்கப் போகிறேன்? என் பிள்ளையின் உயிரைத் தாங்கள் காப்பாற்றித் தரவேண்டும் சுவாமி! இவன் இப்போது செய்யப் போகிற காரியம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. மகா சக்தி வாய்ந்த பல்லவ சக்கரவர்த்தியை எதிர்த்து இளம் பிள்ளையால் என்ன செய்ய முடியும்? எல்லாம் தெரிந்த தாங்களும் இந்தக் காரியத்தில் இவனை ஏவி விட்டிருக்கிறீர்கள். தங்களுடைய நோக்கம் என்னவோ தெரியாது. சுவாமி! என்னவாயிருந்தாலும், அவனுடைய உயிரைக் காப்பாற்றிக் கொடுக்கும் பொறுப்பு தங்களுடையது” என்று ராணி தழுதழுத்த குரலில் கூறினாள்.

“உயிரைக் காப்பாற்றும் சக்தி வாய்ந்தவர் கடவுள் ஒருவர்தான் அம்மா! ஆனாலும் உனக்கு ஒரு உறுதி சொல்லுகிறேன். விக்கிரமனுடைய வீரத் தந்தையின் ஆத்மா அவன் பக்கத்திலிருந்து அவனைக் காப்பாற்றும். நீ கவலைப்படாதே. எழுத்திரு!” என்றார்.

அச்சமயம் மேற்குத் திசையில் தூரத்தில் குதிரையின் குளம்படிச் சத்தம் கேட்கவே, சிவனடியார் விரைவாக விடைபெற்றுக் கொண்டு கிழக்குத் திசையை நோக்கிச் சென்றார்.

சிவனடியார் சென்ற சற்று நேரத்திற்கெல்லாம் மாரப்ப பூபதி குதிரை மீது வந்து இறங்கினான். உடனே, “விக்கிரமா! சிவனடியார் வரப்போகிறாரென்று சொன்னாயே? வந்துவிட்டாரா?” என்று கேட்டான். “இப்போதுதான் போனார்! சித்தப்பா! போய்ச் சில விநாடி நேரங்கூட ஆகவில்லை. சற்று முன்னால் வந்திருக்கப்படாதா!” என்று விக்கிரமன் சொல்லிக் சிவனடியார் போன திசையை நோக்கினான்.

அதைப் பார்த்த மாரப்பன். “இந்தச் சாலை வழியாகத் தானே போனார்? இதோ அவர் முகத்தைப் பார்த்துவிட்டு வந்து விடுகிறேன்” என்று கூறி, மறுபடியும் குதிரை மேலேறி விரைந்து சென்றான்.

ஆனால், அவன் அந்த நதிக்கரைச் சாலையோடு வெகுதூரம் குதிரையை விரட்டிக் கொண்டு போயும் சிவனடியார் தென்படவில்லை. அவர் மாயமாய் மறைந்து விட்டார்.

Source

Previous articleRead Parthiban Kanavu Part 2 Ch 2
Next articleRead Parthiban Kanavu Part 2 Ch 4

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here