Home Kalki Read Parthiban Kanavu Part 2 Ch 5

Read Parthiban Kanavu Part 2 Ch 5

60
0
Read Parthiban Kanavu Part 2 Ch 5 Free, Parthiban Kanavu is a historical novel. Download Parthiban Kanavu Free, Parthiban Kanavu pdf, Parthiban Kanavu audiobook
Parthiban Kanavu Part 2 Ch 5 பார்த்திபன் கனவு இரண்டாம் பாகம், அத்தியாயம் 5: உறையூர்த் தூதன்

Read Parthiban Kanavu Part 2 Ch 5

பார்த்திபன் கனவு

இரண்டாம் பாகம், அத்தியாயம் 5: உறையூர்த் தூதன்

Read Parthiban Kanavu Part 2 Ch 5

இயற்கையாகப் பூமியிலெழுந்த சிறு குன்றுகளை அழகிய இரதங்களாகவும் விமானங்களாகவும் அமைத்திருந்த ஓர் இடத்திற்குச் சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் வந்து சேர்ந்தார்கள். அந்த விமானக் கோயில்களையொட்டி, ஒரு கல்யானையும் கற்சிங்கமும் காணப்பட்டன. இவையும் இயற்கையாகப் பூமியில் எழுந்த பாறைகளைச் செதுக்கிச் செய்த வடிவங்கள்தாம்.

அவற்றுள் யானையின் சமீபமாகச் சக்கரவர்த்தி வந்தார்.

“குந்தவி! இந்த யானையைப் பார்த்தாயா? தத்ரூபமாய் உயிருள்ள யானை நிற்பது போலவே தோன்றுகிறதல்லவா? முப்பது வருஷத்துக்கு முன்னால் இங்கே இந்த யானை இல்லை; ஒரு மொட்டைக் கற்பாறைதான் நின்றது!”

“இந்தக் கோயில்கள் எல்லாமும் அப்படித்தானே மொட்டை மலைகளாயிருந்தன?” என்று குந்தவி கேட்டாள்.

“ஆமாம் குழந்தாய்! இன்று நீயும் நானும் வந்திருப்பது போல் முப்பது வருஷத்துக்கு முன்னால் என் தகப்பனாருடன் நான் இங்கு வந்தேன். உன் தாத்தாவைப் பற்றித் தான் உனக்கு எல்லாம் தெரியுமே. சிற்பம் சித்திரம் என்றால் அவருக்கு ஒரே பைத்தியம்!”

“உங்களுக்குப் பைத்தியம் ஒன்றும் குறைவாயில்லையே?” என்று குந்தவி குறுக்கிட்டாள்.

சக்கரவர்த்தி புன்னகையுடன் “என்னைவிட அவருக்குத்தான் பைத்தியம் அதிகம். செங்கல்லினாலும் மரத்தினாலும் அவர் ஆயிரம் கோயில்கள் கட்டினார். அப்படியும் அவருக்குத் திருப்தி உண்டாகவில்லை. என்றும் அழியாத பரம்பொருளுக்கு என்றும் அழியாக் கோயில்களைக் கட்ட வேண்டுமென்று ஆசைப்பட்டார். மலையைக் குடைந்து கோயில்கள் அமைக்க விரும்பினார். அந்தக் காலத்திலே தான் ஒரு நாள் அவரும் நானும் இந்தப் பக்கம் சுற்றிக் கொண்டு வந்தோம். அப்போது எனக்கு உன் வயது தானிருக்கும். தற்செயலாக ஆகாசத்தைப் பார்த்தேன். வெண்ணிறமான சிறு சிறு மேகங்கள் வானத்தில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தன. அந்த மேகங்கள் அவ்வப்போது வெவ்வேறு ரூபங் கொண்டு தோன்றின. ஒரு சிறு மேகம் யானையைப் போல் காணப்பட்டது. அதைப் பார்த்ததும் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. இந்தப் பாறையண்டை வந்தேன். கையில் கொண்டு வந்திருந்த காசிக் கட்டியினால் யானையின் உருவத்தை இதன்மேல் வரைந்தேன். அதை அப்பா பார்த்துக் கொண்டேயிருந்தார். யானை உருவத்தை நான் எழுதி முடித்ததும் என்னைக் கட்டி தூக்கிக் கொண்டு கூத்தாடத் தொடங்கினார். “நரசிம்மா! என்ன அற்புதமான யோசனை உன் யோசனை! இங்குள்ள பெரிய பாறைகளையெல்லாம் கோயில்களாக்கி விடுவோம். சின்னச்சின்னப் பாறைகளையெல்லாம் வாகனங்களாகச் செய்துவிடுவோம். இந்த உலகமுள்ள அளவும் அழியாதிருக்கும் அற்புதச் சிற்பங்களை எழுப்புவோம்! என்று வெறி பிடித்தவர்போல் கூறினார். அவ்விதமே சீக்கிரத்தில் இங்கே சிற்ப வேலைகளை ஆரம்பித்தார். அதுமுதல் இருபது வருஷகாலம் இந்தப் பிரதேசத்தில் இடைவிடாமல் ஆயிரக்கணக்கான கல்லுளிகளின் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. நான் வட தேசத்துக்குப் படையெடுத்துப் போன போதுதான் நின்றது…”

இவ்விதம் சொல்லிச் சக்கரவர்த்தி நிறுத்தி ஏதோ யோசனையில்ஆழ்ந்தவர் போல் இருந்தார்.

சற்றுப் பொறுத்துக் குந்தவி, “ஆமாம் அப்பா, இருபது வருஷமாய் நடந்து வந்த சிற்பப் பணியை நிறுத்தி விட்டீர்களே என்ற சந்தோஷத்தினால்தான் உங்கள் பெயரை இந்தப் பட்டினத்துக்கு வைத்தார்கள் போலிருக்கிறது!” என்று சொல்லிவிட்டுக் குறும்பாக புன்னகை செய்தாள்.

அதைக் கேட்ட சக்கரவர்த்தி உரக்கச் சிரித்துவிட்டு “இல்லை அம்மா! இந்தச் சிற்பப்புரி தோன்றுவதற்கு நான் காரணமாயிருந்த படியினால் என் தகப்பனார் இப்பட்டினத்துக்கு என் பெயரை அளித்தார். ‘நரசிம்மன்’ என்ற பெயருடன் எத்தனையோ இராஜாக்கள் வரக்கூடும். ‘மாமல்லன்’ என்ற பட்டப் பெயர் வேறொருவரும் வைத்துக் கொள்ளமாட்டார்கள் என்று யோசித்து, அப்பா இந்தப் பட்டினத்துக்கு ‘மாமல்லபுரம்’ என்று பெயர் சூட்டினார். அப்பாவுக்கு என்மேலே தான் எவ்வளவு ஆசை!” என்று கூறி மறுபடியும் யோசனையில் ஆழ்ந்தார்.

“ஆமாம்; தாத்தாவுக்கு உங்கள் பேரில் இருந்த ஆசையில் நூறில் ஒரு பங்குகூட உங்களுக்கு என் அண்ணா மேல் கிடையாது. இருந்தால் அண்ணாவைக் கப்பல் ஏற்றிச் சிங்களத்துக்கு அனுப்புவீர்களா?” என்று கேட்டாள் குந்தவி.

“குழந்தாய், கேள்! என்னுடைய இளம்வயதில் எனக்கு எத்தனையோ மனோரதங்கள் இருந்தன. அவற்றில் பல நிறைவேறின, ஆனால் ஒரே ஒரு மனோரதம் மட்டும் நிறைவேறவில்லை. கப்பல் ஏறிக் கடல் கடந்து தூர தூர தேசங்களுக்கெல்லாம் போய்வர வேண்டுமென்று நான் அளவில்லாத ஆசை கொண்டிருந்தேன். அதற்கு என் தந்தை அனுமதிக்கவில்லை. நான் இந்தப் பல்லவ சிம்மாசனத்தில் ஏறிய பிறகு கடற்பிரயாணம் செய்வதென்பது முடியாத காரியமாகி விட்டது. எனக்குக் கிடைக்காத பாக்கியம் என் பிள்ளைக்காவது கிடைக்கட்டுமே- என்றுதான் உன் தமையனைச் சிங்கள தீவுக்கு அனுப்பினேன். இன்னும் எனக்கு எந்தச் சிறுபிள்ளையினிடமாவது அதிகமான பிரியம் இருந்தால், அவனையும் கடற் பிரயாணம் செய்து வரும்படி அனுப்புவேன்” என்றார் சக்கரவர்த்தி.

“அப்படியானால் உங்களுக்கு என்னிடம் மட்டும் பிரியம் இல்லை போலிருக்கிறது” என்று குந்தவி சொல்வதற்குள்ளே, “உன்னைக் கப்பல் ஏற்றி அனுப்ப எனக்குப் பூர்ண சம்மதம்! ஆனால் நீ பெண்ணாய்ப் பிறந்து விட்டாயே, என்ன செய்கிறது? ஒவ்வொரு சமயம் நீ பிள்ளையாய்ப் பிறந்திருந்து, உன் தமையன் பெண்ணாய்ப் பிறந்திருக்கக் கூடாதா? – என்று எனக்குத் தோன்றுவதுண்டு” என்றார் சக்கரவர்த்தி.

“நான் மட்டும் ஆண் பிள்ளையாய்ப் பிறந்திருந்தால், உங்களை இத்தனைக் காலமும் இந்தச் சிம்மாசனத்தில் வைத்திருப்பேனா? கம்சன் செய்ததைப் போல் உங்களைச் சிறையில் போட்டுவிட்டு நான் பட்டத்துக்கு வந்திருக்க மாட்டேனா? அண்ணாவுக்கு ஒன்றுமே தெரியாது, சாது! அதனால் நீங்கள் சொன்னதும் கப்பலேறிப் போய்விட்டான்” என்று குந்தவி சொல்லிவிட்டு அந்த மலைக் கோயில்களைச் சுற்றி ஓடியாடிப் பார்க்கத் தொடங்கினாள்.

சிறிது நேரத்துக்கெல்லாம் சக்கரவர்த்தி “வா! குழந்தாய்! இன்னொரு தடவை சாவகாசமாய்ப் பார்க்கலாம், ஊரில் ஜனங்கள் எல்லோரும் நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்” என்றதும் குந்தவி வரண்டை வந்து “அப்பா! இந்தக் கோயில்கள் இன்னும் அரைகுறையாகத்தானே இருக்கின்றன? மீண்டும் நீங்கள் ஆரம்பிக்க போகும் திருப்பணி வேலை இங்கேயும் நடக்குமல்லவா? இந்தக் கோயில்களுக்குள்ளே எல்லாம் என்னென்ன சுவாமியைப் பிரதிஷ்டை செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டாள்.

சற்று தூரத்தில் பல்லக்கும் குதிரையும் ஒரு மரத்தடியில் நிறுத்தப்பட்டிருந்தன. அந்த மரத்தை நோக்கி இருவரும் நடக்கத் தொடங்கினார்கள். குந்தவியின் கேள்விக்குப் பதிலாகச் சக்கரவர்த்தி பின்வருமாறு சொன்னார்:-

“இல்லை, குழந்தாய்! இந்தக் கோயில்கள் இப்படியே தான் பூர்த்தி பெறாமல் இருக்கும். இந்த இடத்தைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் வேலை நடக்கும். குந்தவி! ஆயனர் என்ற மகாசிற்பி இந்த ஊரில் இருந்தார். அவருடைய தலைமையில்தான் இந்தக் கோயில்களின் வேலை ஆரம்பமாயிற்று. அவர்தான் இவ்வளவு வரை செய்து முடித்தவர். பிறகு அவர் சில துரதிர்ஷ்டங்களுக்கு ஆளானார்; கொஞ்ச நாளைக்கு முன் சொர்க்கம் சென்றார். அவர் தொடங்கிய வேலையைச் செய்து முடிக்கக்கூடிய சக்தியுள்ளவர்கள் இப்போது யாரும் இல்லை, இனிமேல் வரப்போவதும் இல்லை!”

“ஆயனரைப் பற்றிக் கேட்டிருக்கிறேன் அப்பா! அவருடைய மகள்….?” என்று குந்தவி சொல்வதற்குள் “அதோ யாரோ குதிரைமேல் வருகிறானே யாராயிருக்கும்?” என்றார் மகாமல்லர்.

பேச்சை மாற்றுவதற்காகவே அவர் சொன்ன போதிலும் உண்மையில் கொஞ்ச தூரத்தில் ஒரு குதிரை வந்து கொண்டுதானிருந்தது. சக்கரவர்த்தியும் குந்தவியும் மரத்தடிக்குப் போய் நின்றதும், அங்கே குதிரை வந்து நின்றதும் சரியாயிருந்தன.

குதிரைமேலிருந்தவன் விரைவாக இறங்கிப் பயபக்தியுடன் சக்கரவர்த்தியின் அருகில் வந்து ஓர் ஓலையை நீட்டினான்.

“அடியேன் தண்டம்! உறையூரிலிருந்து வந்தேன்! அச்சுத பல்லவராயர் இந்த ஓலையை ஒரு கணமும் தாமதியாமல் சக்கரவர்த்தியின் திருச் சமூகத்தில் சேர்ப்பிக்க வேண்டுமென்று கட்டளையிட்டார்!” என்றான்.

சக்கரவர்த்தி ஓலையை வாங்கிக் கொண்டார். அதில் என்ன எழுதியிருக்கிறதென்று பார்க்காமலே தூதனை நோக்கி “நீ போகலாம்! இதில் அடங்கிய விஷயத்தைப் பற்றிய கட்டளை நேற்றே அனுப்பிவிட்டோம்” என்றார்.

தூதன் தண்டம் சமர்ப்பித்துவிட்டுத் திரும்பி விரைந்து சென்றான்.

“நன்றாயிருக்கிறது அப்பா, நீங்கள் ராஜ்ய பாரம் செய்கிற இலட்சணம்? ஓலை வந்தால் அதைப் படித்துக் கூடப் பார்க்கிறதில்லையா?” என்று கோமகள் கேட்டாள்.

“என்னுடைய ஞான திருஷ்டியில் உனக்கு நம்பிக்கை இல்லை போலிருக்கிறது! இந்த ஓலையில் என்ன எழுதியிருக்கிறதென்று சொல்லட்டுமா? சோழராஜ குமாரன் விக்கிரமன் இந்தப் புரட்டாசிப் பௌர்ணமியன்று சோழ நாட்டின் சுதந்திரக் கொடியை உயர்த்த உத்தேசித்திருக்கிறான். அவனை என்ன செய்வது என்று தளபதி அச்சுத பல்லவராயன் கேட்டிருக்கிறான். நீ வேணுமானால் படித்துப் பார்!” என்று ஓலையைக் குந்தவியிடம் கொடுத்தார்.

குந்தவி அதைப் படித்துவிட்டு வியப்புடன் சக்கரவர்த்தியை நோக்கினாள். “உங்களிடம் ஏதோ மந்திர சக்தி இருக்கிறது, அப்பா! அந்த மந்திரத்தை எனக்கும் சொல்லிக் கொடுக்கக் கூடாதா?” என்றாள்.

சக்கரவர்த்தி குதிரையின் மேலும், குந்தவி பல்லக்கிலும் அமர்ந்தார்கள். வழியில் கோமகள், “அப்பா! அந்த இராஜகுமாரனுக்கு என்ன அவ்வளவு அகந்தை? மாமல்ல சக்கரவர்த்தியின் கீழ் கப்பம் கட்டிக் கொண்டு வாழக் கொடுத்துவைக்க வேண்டாமா? அவனை நீங்கள் சும்மா விடக்கூடாது; தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்” என்றாள்.

“ஆமாம், குழந்தாய்! ஆமாம்! அவனைச் சும்மாவிடப் போவதில்லை. காஞ்சிக்கு அழைத்து வரச் செய்து நானே தகுந்த தண்டனை விதிக்கப் போகிறேன்” என்றார் சக்கரவர்த்தி.

Source

Previous articleRead Parthiban Kanavu Part 2 Ch 4
Next articleRead Parthiban Kanavu Part 2 Ch 6

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here