Home Kalki Read Parthiban Kanavu Part 3 Ch 11

Read Parthiban Kanavu Part 3 Ch 11

66
0
Read Parthiban Kanavu Part 3 Ch 11 Free, Parthiban Kanavu is a historical novel. Download Parthiban Kanavu Free, Parthiban Kanavu pdf Parthiban Kanavu audiobook

Read Parthiban Kanavu Part 3 Ch 11

பார்த்திபன் கனவு

மூன்றாம் பாகம், அத்தியாயம் 11: பழகிய குரல்

Read Parthiban Kanavu Part 3 Ch 11

குதிரை மேலிருந்து வெள்ளத்தில் பாய்ந்த விக்கிரமன் சற்று நேரம் திக்கு முக்காடிப் போனான். படுவேகமாக உருண்டு புரண்டு அலை எறிந்து வந்த காட்டாற்று வெள்ளம் விக்கிரமனையும் உருட்டிப் புரட்டித் தள்ளியது. உறுதியுடன் பல்லைக் கடித்துக் கொண்டு விக்கிரமன் தன்னுடைய பூரண பலத்துடன் சமாளித்துத் தண்ணீர் மட்டத்துக்கு வந்தான். பின்னர், வெள்ளத்தின் போக்கை அனுசரித்து நீந்தத் தொடங்கினான்.

சட்டென்று குதிரையின் ஞாபகம் வந்தது. “ஐயோ! அது வெள்ளத்தில் போயிருக்குமே?” என்ற எண்ணத்தினால் அவன் திடுக்கிட்டான். திரும்பிப் பார்த்தபோது, வெகு தூரத்தில் தான் ஆற்றில் இறங்கிய இடத்துக்கருகில் குதிரை வெள்ளத்துடன் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.

“நல்ல வேளை! குதிரையாவது பிழைத்ததே!” என்று அவனுக்குச் சிறிது ஆறுதல் உண்டாயிற்று. ஏனெனில், தான் தப்பிக் கரையேறலாம் என்ற ஆசை அவனுக்கு வரவரக் குறைந்து வந்தது. அக்கரையை நெருங்க நெருங்க, வெள்ளத்தின் வேகம் அபரிமிதமாயிற்று. யானைகளையும் குன்றுகளையும் கூடப் புரட்டித் தள்ளிவிடக்கூடிய வேகத்துடனும் ‘ஓ’ வென்ற இரைச்சலுடனும் அந்த வெள்ளம் அலைமோதிக் கொண்டு வந்தது. விக்கிரமனுடைய கைகள் களைப்படையத் தொடங்கின. நீந்திக் கரை ஏறுவது அசாத்தியம் என்றே விக்கிரமன் முடிவு செய்துவிட்டான். ஆகா! விதியின் விசித்திரத்தை என்னவென்று சொல்வது; என்னவெல்லாம் பகற் கனவு கண்டோ ம்! ஆகாசக் கோட்டைகள் கட்டினோம்? எல்லாம் இப்படியா முடியவேணும்! தந்தை பார்த்திப மகாராஜா கண்ட கனவைப் போலவே தன்னுடைய கனவும் முடிந்துவிட்டதே! அவராவது போர்க்களத்தில் வீர மரணம் அடைந்தார். தான் ஆற்று வெள்ளத்தில் அகால மரணமல்லவா அடைய வேண்டியிருக்கிறது! இதற்காகவா இவ்வளவு அவசரமாகத் தாய்நாட்டுக்குத் திரும்பி வந்தோம்? ஐயோ? அம்மாவைப் பார்க்காமலேயல்லவா போகிறோம்! ஒரு தடவையாவது அவளைப் பார்த்து, “அம்மா! தகப்பனாருக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். கடல்களுக்கு அப்பாலுள்ள தேசத்தில் சுதந்திர இராஜ்யத்தை ஸ்தாபித்திருக்கிறேன்” என்று சொல்லக் கொடுத்து வைக்கவில்லையே! – அவ்விதம் சொன்ன பிறகு இத்தகைய மரணம் சம்பவித்திருந்தால்கூடப் பாதகமில்லை. ஆகா! திரும்புங்காலையில் மாமல்லபுரத்தின் அந்தத் தாமரைக் கண்ணாளைக் கண்டுபிடித்து, அவள் யாராயிருந்தாலும் சரிதான், “என்னுடன் நீயும் தேசப் பிரஷ்டையாகி வரச் சம்மதமா!” என்று கேட்க எண்ணியிருந்தோமே? அவள் ஒருவேளை நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருப்பாளோ? அப்படியானால், எத்தகைய ஏமாற்றம் அடைவாள்? – ஆகா, கம்பீரத் தோற்றமுள்ள அந்த ஒற்றர் தலைவனை மறுபடியும் பார்த்து, அவனிடம் குதிரையை ஒப்புவிக்காமல் அல்லவா போகிறோம்?

விக்கிரமனுடைய கைகள் அடியோடு களைத்துவிட்டன. அவனுடைய உடம்பு இரும்பினால் ஆனதுபோல் கனத்தது. முடியாது, இனி ஒரு கணமும் முடியாது… அதோ வெள்ளத்தில் உருண்டு புரண்டு கறுப்பாய் வருகிறதே, அது என்ன? பெரிய மரம் ஒன்றை வெள்ளம் அடித்துக் கொண்டு வருகிறது. நல்ல வேளை! அதைப் பிடித்துக் கொள்ளலாம்… ஐயோ! மரம் அதோ போய் விட்டதே! இனிமேல் நம்பிக்கைக்குச் சிறிதும் இடமில்லை…. விக்கிரமனுடைய கண்கள் இருண்டன; மதி மயங்கிற்று. அந்தச் சமயத்தில் அவனுக்குத் திடீரென்று படகோட்டி பொன்னனுடைய நினைவு வந்தது! இளம் பிராயத்தில் காவேரியில் நீந்தக் கற்றுக் கொள்ளும் போது, சில சமயம் இம்மாதிரி களைப்படைந்து முழுகும் தருவாய்க்கு வந்து விடுவதுண்டு. அப்போதெல்லாம் பொன்னன் அவனைத் தூக்கி எடுத்து காப்பாற்றியிருக்கிறான். அம்மாதிரி இச்சமயமும் பொன்னன் வரமாட்டானா?… இது என்ன பைத்தியக்கார எண்ணம்? ஒரு வேளை பொன்னன்தானோ?…. இது என்ன வீண் பிரமை?… அம்மா! அம்மா!…” விக்கிரமனை ஒரு பெரிய அலை மோதிற்று; அவன் நீரில் அமிழ்ந்து நினைவிழந்தான்.

விக்கிரமனுக்குக் கொஞ்சங் கொஞ்சமாகப் பிரக்ஞை வந்து கொண்டிருந்தது. எங்கேயோ வெகு தூரத்திலிருந்து, பாதாள உலகத்திலிருந்து வருவது போல், – “மகாராஜா” என்ற மெல்லிய குரல் கேட்டது. இது யாருடைய குரல்? கேட்டுப் பழகிய குரல் மாதிரி இருக்கிறதே! ஆம். படகோட்டி பொன்னனுடைய குரல்தான் இது. உண்மையாக நடப்பதுதானா? கனவில்லையா! பிரமையில்லையா! கடைசியாக, காட்டாற்று வெள்ளத்தில் தான் இறங்கியதும், நீந்திக் கை களைத்து நீரில் மூழ்கியதும் விக்கிரமனுக்கு நினைவு வந்தன. ஒரு வேளை இது மரணத்திற்குப் பிறகு மறு உலகத்தில் கேட்கும் குரலோ?- இதுவரையில் விக்கிரமனுடைய கண்கள் மூடியிருந்தன. இப்போது ஒரு பெரும் பிரயத்தனம் செய்து பார்த்தான். ஆமாம்; படகோட்டி பொன்னனுடைய முகந்தான் அது! மழையில் நனைந்து வெள்ளத்தில் முழுகி எழுந்திருந்த பொன்னனுடைய தேகம் முழுதும் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. போதாதற்கு அவனுடைய கண்களிலிருந்து நீர் பெருகி வழிந்து கொண்டிருந்தது.

“பொன்னா! நீ தானா? இதெல்லாம் நிஜமா? அல்லது கனவா?” என்றான் விக்கிரமன்.

“மகாராஜா! நானும் அதையேதான் கேட்க இருந்தேன். நிஜமாக நீங்கள்தானா? அல்லது? அல்லது இது கனவா? பிரமையா? நிஜமாக விக்கிரம மகாராஜாவையா நான் வெள்ளத்திலிருந்து கரையேற்றினேன்… உயிர் பிழைத்துக் கண் விழித்து என்னுடன் பேசுவது நீங்கள்தானா?- ஒன்றுமே நம்ப முடியவில்லையே! – ஆகா! வள்ளி மட்டும் இங்கே இச்சமயம் இருந்தாளானால்…”

ஆற்றங்கரை அரச மரத்தடியில் ஒரு பெரிய வேரின் மேல் பொன்னன் உட்கார்ந்திருந்தான். அவனுடைய மடியின் மீது விக்கிரமனுடைய தலை இருந்தது. மழை நின்று சிறு தூறல் போட்டுக் கொண்டிருந்தது. குளிர்ந்த வாடை வீசிற்று. இரவு சமீபித்துக் கொண்டிருந்தபடியால் நாலாபுறமும் இருள் அடர்ந்து வந்தது.

விக்கிரமன் சட்டென்று எழுந்து உட்கார்ந்தான்.

“பொன்னா! நான்தான்; விக்கிரமன்தான். ஒரு அதிசயத்தைக் கேள், வெள்ளத்தில் முழுகும்போது நான் என்ன நினைத்துக் கொண்டேன் தெரியுமா? கடைசியாக, உன்னைத்தான் நினைத்துக் கொண்டேன். காவேரி நதியில் நான் நீந்தக் கற்றுக் கொண்டபோது, என் கை சளைத்துத் தண்ணீரில் முழுகப் போகும் தருணத்தில் எத்தனை தடவை நீ என்னை எடுத்துப் படகில் ஏற்றி விட்டிருக்கிறாய்? அது எனக்கு நினைவு வந்தது. இந்தச் சமயத்திலும் நீ வரக்கூடாதா என்று நினைத்தேன். கரையிலே ஒரு மனித உருவத்தைப் பார்த்தேன். ஒருவேளை நீதானோ என்றும் எண்ணினேன். இருக்காது- இது பிரமை என்று எண்ணிக் கொண்டே தண்ணீரில் மூழ்கினேன். நிஜமாக நீயாகவே இருந்துவிட்டாயே! என்ன அற்புதம் – அவ்வளவு சரியான சமயத்தில் நீ எப்படி இங்கு வந்து சேர்ந்தாய்?” என்றான்.

“எனக்கும் அப்படித்தான் ஆச்சரியமாயிருக்கிறது மகாராஜா….!” அதோ பாருங்கள், அந்த மண்டபத்தை என்று பொன்னன் சுட்டிக் காட்டினான். சற்று தூரத்தில் ஒரு சிறு மண்டபம் காணப்பட்டது.

“பெருமழை பிடித்துக் கொண்டபோது, நான் அந்த மண்டபத்தில் ஒதுங்கியிருந்தேன். ஆற்றில் வெள்ளம் பிரமாதமாய்ப் பெருகும் காட்சியைப் பார்த்துக் கொண்டு நின்றேன். அப்போது அக்கரையில் குதிரைமேல் யாரோ வருவது தெரிந்தது. ஆற்றில் இப்போது இறங்கினால் ஆபத்தாயிற்றே என்று நான் எண்ணிக் கொண்டிருக்கும் போதே நீங்கள் மளமளவென்று இறங்கிவிட்டீர்கள். ஆனால், அப்போது நீங்கள் என்று எனக்குத் தெரியாது. குதிரை மேலிருந்து வெள்ளத்தில் குதிப்பதையும், நீந்தி இக்கரைக்கு வர முயற்சிப்பதையும் பார்த்து இவ்விடத்துக்கு வந்தேன். நீங்கள் கை சளைத்து முழுகுவதைப் பார்த்துவிட்டுத் தண்ணீரில் குதித்தேன். மகாராஜா! அந்தச் சமயம் சொல்ல வெட்கமாயிருக்கிறது- ‘இந்தப் பெரும் வெள்ளத்தில் நாமும் போய்விட்டால் என்ன செய்கிறது?” என்று கொஞ்சம் யோசனை உண்டாயிற்று. நல்ல வேளையாக அந்த யோசனையை உதறித் தள்ளி விட்டுக் குதித்தேன். அப்படிக் குதிக்காமலிருந்திருந்தால், ஐயோ!” என்று பொன்னன் கண்களை மூடிக் கொண்டான். அவன் உடம்பு வெடவெடவென்று நடுங்கிற்று.

“பொன்னா! அதை ஏன் இப்போது நினைக்கிறாய்? நமது குல தெய்வமான முருகக் கடவுள்தான் அந்தச் சமயத்தில் உனக்கு அவ்வளவு துணிச்சலைக் கொடுத்தார்… இல்லை! இல்லை! காலஞ்சென்ற பார்த்திப மகாராஜாதான் தோன்றாத் துணையாயிருந்து ஆபத்து வரும் சமயங்களிலெல்லாம் என்னைக் காப்பாற்றி வருகிறார்… இருக்கட்டும், பொன்னா! என்ன வெல்லாமோ பேசிக் கொண்டிருக்கிறேன்! – மகாராணி சௌக்கியமா?” என்று ஆவலுடன் கேட்டான் விக்கிரமன்.

மகாராணி என்றதும் பொன்னன் திடீரென்று கண்ணைக் கைகளால் பொத்திக் கொண்டு விம்மத் தொடங்கினான். இதை பார்த்ததும் விக்கிரமனுக்கு ஏற்பட்ட நெஞ்சத் துடிப்பை விவரிப்பது இயலாத காரியம்.

“ஐயோ, பொன்னா! என்ன விபத்து நேர்ந்துவிட்டது? மகாராணி இறந்துவிட்டாரா” என்று பதைபதைப்புடன் கேட்டான்.

அப்போது பொன்னன், “இல்லை மகாராஜா இல்லை. மகாராணி எங்கேயோ உயிரோடுதான் இருக்கிறார். ஆனால், எங்கே என்றுதான் தெரியவில்லை….” என்றான்.

விக்கிரமனுக்குக் கொஞ்சம் உயிர் வந்தது!

“அதெப்படி! பொன்னா! உன்னிடந்தானே நான் மகாராணியை ஒப்புவித்துவிட்டுப் போனேன்? நீ எப்படி அஜாக்கிரதையாயிருந்தாய்?…”

“மகாராஜா! எல்லாம் விவரமாய்ச் சொல்ல வேண்டும். மறுபடியும் மழை வலுக்கும் போலிருக்கிறது. தாங்கள், ஏற்கெனவே நனைந்திருக்கிறீர்கள். குளிர் காற்றும் அடிக்கிறது! அதோ அந்த மண்டபத்துக்குப் போகலாம் வாருங்கள். எவ்வளவோ சொல்ல வேண்டும்; எவ்வளவோ கேட்கவேண்டும். இரவும் நெருங்கி விட்டது.”

இருவரும் எழுந்திருந்து மண்டபத்தை நோக்கிப் போனார்கள்.

Source

Previous articleRead Parthiban Kanavu Part 3 Ch 10
Next articleRead Parthiban Kanavu Part 3 Ch 12

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here