Home Kalki Read Parthiban Kanavu Part 3 Ch 12

Read Parthiban Kanavu Part 3 Ch 12

143
0
Read Parthiban Kanavu Part 3 Ch 12 Free, Parthiban Kanavu is a historical novel. Download Parthiban Kanavu Free, Parthiban Kanavu pdf Parthiban Kanavu audiobook
Parthiban Kanavu Part 3 Ch 12 பார்த்திபன் கனவு மூன்றாம் பாகம், அத்தியாயம் 12: சூரிய கிரகணம்

Read Parthiban Kanavu Part 3 Ch 12

பார்த்திபன் கனவு

மூன்றாம் பாகம், அத்தியாயம் 12: சூரிய கிரகணம்

Read Parthiban Kanavu Part 3 Ch 12

விக்கிரமனும் பொன்னனும் மண்டபத்தை அடைந்தபோது நன்றாக இருட்டிவிட்டது. இம்மாதிரி ஜன சஞ்சாரமில்லாத இடங்களில் வழிப்போக்கர்கள் தங்குவதற்காக அத்தகைய மண்டபங்களை அந்நாளில் கட்டியிருந்தார்கள். மகேந்திர சக்கரவர்த்தியின் காலத்தில் அவருடைய கட்டளையினால் கட்டப்பட்டபடியால் அவற்றுக்கு மகேந்திர மண்டபங்கள் என்ற பெயர் வழங்கி வந்தது.

மண்டபத்துக்கு வெளிப்புறம் இருந்த திண்ணையில் விக்கிரமனை இருக்கச் செய்து, பொன்னன் உள்ளே சென்று தான் அங்கு வைத்திருந்த உலர்ந்த துணிகளை எடுத்து வந்தான். விக்கிரமன் அவற்றை உடுத்திக் கொண்டான். அந்த மழைக்கால இருட்டில் இனி வழி நடப்பது அசாத்தியமாதலால், அன்றிரவை அந்த மண்டபத்திலேயே கழிப்பது என்று இருவரும் சேர்ந்து தீர்மானித்தார்கள்.

பிறகு, பொன்னன் அருள்மொழி ராணியைப் பற்றிய பின்வரும் அதிசயமான வரலாற்றைக் கூறினான்:-

விக்கிரமன் தேசப் பிரஷ்ட தண்டனைக்கு உள்ளாகிக் கப்பல் ஏறிச் சென்ற பிறகு, அருள்மொழி ராணிக்கு உயிர் வாழ்க்கை பெரும்பாரமாயிருந்தது. மீண்டும் தன் புதல்வனை ஒரு முறை காணலாம் என்ற ஆசையினாலும் நம்பிக்கையினாலுமே உயிரைச் சுமந்து கொண்டிருந்தாள். ஆனாலும், முன்னர் கணவனுடனும் பிறகு புதல்வனுடனும் வசித்திருந்த வசந்த மாளிகையில் தன்னந்தனியாக வசிப்பது அவளுக்கு நரக வேதனையாயிருந்தது. இச்சமயத்தில்தான், பார்த்திப மகாராஜாவின் தோழரும் பழைய பல்லவ சேனாதிபதியுமான பரஞ்சோதி அடிகள் தமது தர்ம பத்தினியுடன் தீர்த்தயாத்திரை செய்து கொண்டு உறையூருக்கு வந்தார். அவர்கள் வசந்த மாளிகைக்கு வந்து அருள்மொழி ராணியைப் பார்த்துத் தேறுதல் கூறினார்கள். அருள்மொழி, அவர்களுடன் தானும் ஸ்தல யாத்திரை வருவதாகச் சொல்லவே, அவளையும் அழைத்துக் கொண்டு பிரயாணம் கிளம்பினார்கள்.

காஞ்சி நகர் ஒன்று நீங்கலாகத் தமிழகத்திலுள்ள மற்ற புண்ணிய ஸ்தலங்களுக்கெல்லாம் அவர்கள் சென்றார்கள். இரண்டு வருஷகாலம் இவ்விதம் யாத்திரை செய்த பிறகு சென்ற வருஷம் தை மாதத்து அமாவாசையில் காவேரி சங்கமத்தில் ஸ்நானம் செய்யும் பொருட்டு அவர்கள் பரஞ்சோதி அடிகளின் சொந்த ஊராகிய திருச்செங்காட்டாங்குடிக்கு வந்து சேர்ந்தார்கள்.

சென்ற வருஷம் தை அமாவாசையில் மகோதய புண்ணிய காலம் சேர்ந்தது. அதனுடன் அன்று சூரிய கிரகணம் – சம்பூர்ண கிரகணம் – பிடிப்பதாயுமிருந்தது. இந்த விசேஷ புண்ணிய தினத்தை முன்னிட்டு அன்று காவேரி சங்கமத்தில் சமுத்திர ஸ்நானம் செய்வதற்காக நாடெங்கும் இருந்து ஜனங்கள் திரள் திரளாக வந்தார்கள். பொன்னனும் வள்ளியுங்கூட உறையூரிலிருந்து நெடுநாள் பிரயாணம் செய்து காவேரி சங்கமத்துக்கு வந்து சேர்ந்தனர். உறையூர் வாழ்க்கை அவர்களுக்கும் பிடிக்காமற் போயிருந்தபடியாலும், அருள்மொழி ராணியை ஒரு வேளை சந்திக்கலாம் என்ற ஆசையினாலுந்தான் அவர்கள் வந்தார்கள். அவர்களுடைய ஆசையும் நிறைவேறியது. திருச்செங்காட்டாங்குடியிலேயே அருள்மொழித்தேவியை அவர்கள் சந்தித்துக் கொண்டார்கள்.

புண்ணிய தினத்தன்று காலையில் பரஞ்சோதி அடிகள், அவர்களுடைய பத்தினி திருவெண்காட்டு நங்கை, அருள்மொழி ராணி, பொன்னன், வள்ளி எல்லாருமாக காவேரி சங்கமத்துக்குக் கிளம்பினார்கள். சங்கமத்தில் அன்று கற்பனைக்கடங்காத ஜனத்திரள் கூடியிருந்தது. உலகத்திலுள்ள மக்கள் எல்லாம் திரண்டு வந்துவிட்டார்களோ என்று தோன்றிற்று. ஜன சமுத்திரத்தைக் கண்ட உற்சாகத்தினால் ஜல சமுத்திரமும் பொங்கிக் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

சமுத்திரம் பொங்கிக் காவிரிப்பூம்பட்டினத்தைக் கொள்ளை கொண்ட காலத்துக்குப் பிறகு, காவேரி நதியானது மணலைக் கொண்டு வந்து தள்ளித் தள்ளிச் சமுத்திரத்தை அங்கே வெகு தூரத்துக்கு ஆழமில்லாமல் செய்திருந்தது. இதனால் சமுத்திரத்தில் வெகு தூரம் விஸ்தாரமாக ஜனங்கள் பரவி நின்று ஸ்நானம் செய்து கொண்டிருந்தார்கள். அலைகள் வரும்போது ஜலத்தில் முழுகியும், அலைகள் தாண்டியவுடன் மேலே கிளம்பியும், இவ்வாறு அநேகர் சமுத்திர ஸ்நானத்தின் குதூகலத்தை அநுபவித்துக் கொண்டே புண்ணியமும் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள்.

இப்படிப்பட்ட ஜனக் கூட்டத்தின் மத்தியில் பரஞ்சோதி அடிகள், அருள்மொழி ராணி ஆகியவர்களும் ஸ்நானம் செய்வதற்காகச் சமுத்திரத்தில் இறங்கிச் சென்றார்கள்.

அப்போது சூரிய கிரகணம் பிடிக்க ஆரம்பித்து விட்டது. அதிக வேகமாகச் சூரியனுடைய ஒளி குறைந்து கொண்டு வந்தது. கிரகணம் முற்ற முற்ற வெளிச்சம் குன்றி வந்ததுடன், சமுத்திரத்தின் கொந்தளிப்பும் கோஷமும் அதிகமாகி வந்தன.

பட்டப் பகலில், மேகமில்லாத துல்லிய ஆகாயத்தில் திடீரென்று சூரிய ஒளி குன்றி இருள் சூழ்ந்து வந்த காட்சியினால் சகலமான ஜனங்களும் மனத்தில் இன்னதென்று சொல்ல முடியாத ஒருவித அச்சம் உண்டாயிற்று. அப்போது இயற்கையிலேயே தெய்வ பக்தியுள்ளவர்கள் அண்ட சராசரங்களையெல்லாம் படைத்துக் காத்து அழிக்கும் இறைவனுடைய லீலா விபூதிகளையெண்ணிப் பரவசம் அடைந்தார்கள். பரஞ்சோதி அடிகள் அத்தகைய நிலையைத்தான் அடைந்திருந்தார். ராணி அருள்மொழித் தேவியும் கண்களை மூடிக் கொண்டு கிழக்குத் திசையை நோக்கித் தியானத்தில் ஆழ்ந்திருந்தாள்.

வள்ளி சமுத்திரத்தையே அன்று வரையில் பார்த்தவள் இல்லை. ஆகையால் அவள் நெஞ்சு திக்திக்கென்று அடித்துக் கொண்டிருந்தது. அவளை அலை அடித்துக் கொண்டு போகா வண்ணம் பொன்னன் அவளுடைய கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தான். வள்ளி பொன்னனிடம், “எனக்குப் பயமாயிருக்கிறதே! கரைக்குப் போகலாமே!” என்றாள். “இவ்வளவுதானா உன் தைரியம்?” என்று பொன்னன் அவளிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று அந்த அதிசயமான துயரச் சம்பவம்- யாரும் எதிர்பாராத காரியம் நடந்து விட்டது.

ராணி அருள்மொழி மூடியிருந்த கண்களைத் திறந்தாள். ‘குழந்தாய், விக்கிரமா! இதோ வந்து விட்டேன்!” என்று கூவினாள். ராணியின் அந்த அலறும் குரல் ஒலி, அலைகளின் பேரிரைச்சலையெல்லாம் அடக்கிக்கொண்டு மேலெழுந்து பொன்னன், வள்ளி இவர்களின் செவியில் விழுந்தது. அந்த அலறல் ஒலி கேட்டது ஒரு கணம்; மறுகணத்தில் அருள்மொழி ராணி கிழக்கு நோக்கிக் கடலிலே பாய்ந்தாள். ஒரு பேரலை வந்து மோதி அவளை மூழ்கடித்தது.

பொன்னனும், வள்ளியும் ‘ஓ’வென்று கதறினார்கள். தியானத்திலிருந்து கண் விழித்த பரஞ்சோதி அடிகள், “என்ன? என்ன?” என்றார். பொன்னன், “ஐயோ! மகாராணி அலையில் போய்விட்டாரே!” என்று அலறினான். உடனே, பரஞ்சோதி அடிகள் தமது பத்தினியையும் வள்ளியையும் நோக்கி, “நீங்கள் உடனே கரை ஏறிவிடுங்கள்!” என்றார்.

அச்சமயத்தில் சூரிய கிரகணம் சம்பூரணம் ஆயிற்று. வானத்தில் நட்சத்திரங்கள் தெரிந்தன.

இருட்டினால் கலவரமடைந்த ஜனங்களின் மத்தியில் “அப்பா!” “அம்மா!” “மகனே!” என்ற கூக்குரல்கள் கிளம்பின. பக்தர்களுடைய பரவசக் குரலில், “ஹரஹர” “சம்போ” என்னும் கோஷங்களும் எழுந்தன.

அந்தக் கிரகண அந்தகாரத்தில் கடல் அலைகளுடன் போராடிக் கொண்டு பரஞ்சோதி அடிகளும் பொன்னனும் அருள்மொழி ராணியைத் தேடத் தொடங்கினார்கள்.

Source

Previous articleRead Parthiban Kanavu Part 3 Ch 11
Next articleRead Parthiban Kanavu Part 3 Ch 13

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here