Home Kalki Read Parthiban Kanavu Part 3 Ch 14

Read Parthiban Kanavu Part 3 Ch 14

63
0
Read Parthiban Kanavu Part 3 Ch 14 Free, Parthiban Kanavu is a historical novel. Download Parthiban Kanavu Free, Parthiban Kanavu pdf Parthiban Kanavu audiobook
Parthiban Kanavu Part 3 Ch 14 பார்த்திபன் கனவு மூன்றாம் பாகம், அத்தியாயம் 14: காளியின் தாகம்

Read Parthiban Kanavu Part 3 Ch 14

பார்த்திபன் கனவு

மூன்றாம் பாகம், அத்தியாயம் 14: காளியின் தாகம்

Read Parthiban Kanavu Part 3 Ch 14

பேச்சுக்குரல் நெருங்கி வருவதாகத் தோன்றவே, பொன்னன் விக்கிரமனை மண்டபத்துக்குள் ஒதுக்குப்புறமாக இருக்கச் சொல்லிவிட்டு எட்டிப் பார்த்தான். மண்டபத்தை நோக்கி இரண்டு பேர் வருவது தெரிந்தது. ஆனால் இருட்டில் முகம் ஒன்றும் தெரியவில்லை. அப்போது பளீரென்று ஒரு மின்னல் மின்னிற்று. மின்னலில் அந்த இருவருடைய முகத்தையும் பார்த்ததும், பொன்னனுடைய உடம்பெல்லாம் ஒரு தடவை பதறிற்று. வந்தவர்களில் ஒருவன் மாரப்ப பூபதி; இன்னொருவன்…ஆம், கபால ருத்ர பைரவன்தான்!

அவர்களை அவ்விதம் திடீரென்று பார்த்த பேரதிர்ச்சியை ஒருவாறு பொன்னன் சமாளித்துக் கொண்டு விக்கிரமன் இருந்த இடத்தின் அருகில் சென்று அவரைத் தொட்டு மெல்லிய குரலில், “மகாராஜா!” என்றான்.

விக்கிரமன், “இதென்ன, பொன்னா? ஏன் இப்படி நடுங்குகிறாய்?” என்பதற்குள், பொன்னன் விக்கிரமனுடைய வாயைப் பொத்தி, “இரைய வேண்டாம்! பெரிய அபாயம் வந்திருக்கிறது; எதற்கும் சித்தமாயிருங்கள்!” என்று காதோடு சொன்னான்.

விக்கிரமன் இடுப்பைத் தடவிப் பார்த்து, “ஐயோ! வாள் ஆற்றோடு போய்விட்டதே!” என்று முணுமுணுத்தான். வந்தவர்கள் இருவரும் அந்த மண்டபத்தின் வாசல் திண்ணையில் வந்து மழைக்கு ஒதுங்கி நின்றார்கள். அவர்களுடைய பேச்சு உள்ளே இருந்தவர்களின் காதில் சில சமயம் தெளிவாகவும் சில சமயம் அரைகுறையாகவும் விழுந்தது.

அவர்களில் ஒருவனுடைய குரலைச் சட்டென்று விக்கிரமனும் தெரிந்து கொண்டான். திடுக்கிட்டு அவன் எழுந்திருக்கப் போனபோது பொன்னன் அவனைப் பிடித்து உட்கார வைக்க வேண்டியிருந்தது.

“மகாப் பிரபோ! காளிமாதா எனக்கு இன்னும் என்ன ஆக்ஞாபித்திருக்கிறாள்? கிருபை கூர்ந்து சொல்ல வேண்டும்” என்றது மாரப்பனின் குரல்.

இதற்குப் பதில் கூறிய குரலானது கேட்கும்போதே மயிர்க் கூச்சல் உண்டாக்கக் கூடியதாயிருந்தது. ஒருவேளை பேய், பிசாசுகள் பேசுமானால் இப்படித்தான் அவற்றின் குரல் இருக்கும் என்று எண்ணும்படியிருந்தது.

“மாதா உனக்கு இன்னும் பெரிய பெரிய பதவிகளையெல்லாம் கொடுக்கக் காத்திருக்கிறாள். உன்னிடம் இன்னும் பெரிய பெரிய காரியங்களையும் எதிர்பார்க்கிறாள். அன்னைக்கு ரொம்பவும் தாகமாயிருக்கிறதாம். ராஜ வம்சத்தின் இரத்தம் வேண்டுமென்கிறாள்!”

“ஆயிரம் வருஷத்துப் பரம்பரை ராஜ வம்சத்தில் பிறந்த அரசிளங் குமரனைக் காளிக்கு அர்ப்பணம் செய்ய முயன்றேன். எப்படியோ காரியம் கெட்டுப் போய்விட்டதே…..”

“உன்னாலேதான் கெட்டது; அந்த ராஜ குமாரனுக்காக நானே வந்திருந்தேன். நீ குறுக்கிட்டுக் கெடுத்து விட்டாய்.”

“மன்னிக்க வேண்டும் பிரபோ…ஆனால் ராஜ குமாரன் வருகிறான் என்று உங்களுக்கு எப்படித் தெரிந்தது?”

“மறுபடியும் அதே கேள்வியைக் கேட்கிறாயே? காளிமாதா சொல்லித்தான் தெரிந்தது. அருள்மொழி ராணியின் வாய்மொழியாக மாதா எனக்குத் தெரிவித்தாள். ‘அதோ கப்பலில் வந்து கொண்டிருக்கிறான்! கரையை நெருங்கிக் கொண்டிருக்கிறான்?’ என்று ராணி சொன்னாள். நான் வந்தேன்! அதற்குள்ளாக நீ நடுவில் குறுக்கிட்டுக் காரியத்தைக் கெடுத்து விட்டாய்.”

“பிரபோ! க்ஷமிக்க வேண்டும்….”

“போனது போகட்டும். மாதா உன்னை க்ஷமித்து விட்டாள். ஆனால், ‘தாகம்’ ‘தாகம்’ என்று கதறிக் கொண்டிருக்கிறாள்! ராஜ குல ரத்தம் வேண்டும் என்கிறாள்! இந்த அமாவாசை போய்விட்டது. துலா மாதப் பிறப்பிலாவது தாயின் தாகத்தைத் தணிக்க வேண்டும்…. அவனை நீ எப்படியாவது தேடிப் பிடித்துக் கொண்டு வர வேண்டும்….”

“கொண்டு வந்தால்….”

“கொண்டு வந்தால் உன் மனோரதம் நிறைவேறும். பூபதி! காளி மாதாவைச் சரணமாக அடைந்தவுடனே உனக்குச் சேனாதிபதிப் பதவி கிடைக்கவில்லையா? இன்னும்….”

“இன்னும் என்ன சுவாமி?”

“இன்னும் மிகப் பெரிய பதவிகள் உனக்கு நிச்சயம் கிடைக்கும்.”

“பெரிய பதவிகள் என்றால்…”

“சோழநாட்டின் சிம்மாசனம் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. மாதா கையில் கிரீடத்தை வைத்துக் கொண்டு உன் தலையில் சூட்டக் காத்திருக்கிறாள்.”

“அவ்வளவுதானா, பிரபோ!”

“அதைவிடப் பெரிய பதவியும் அன்னை வைத்துக் கொண்டிருக்கிறாள்.”

“அது என்னவோ?”

“என்னவா? பல்லவ சாம்ராஜ்யத்தின் சிம்மாசனம் தான்!”

“ஆ!” என்றான் மாரப்ப பூபதி. சற்று நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது.

“ஆனால், அப்படிப்பட்ட மகத்தான பதவி லேசில் கிடைத்துவிடாது. அதற்குத் தகுந்த காணிக்கை காளி மாதாவுக்கு நீ சமர்ப்பிக்க வேண்டும்.”

“அடியேனிடம் மாதா என்ன எதிர்பார்க்கிறாள்?”

“முதலில் பார்த்திபன் மகனைத் தேடிப் பிடித்துக் கொண்டு வர வேண்டும்.”

“செய்கிறேன்; அப்புறம்?”

“வரும் துலா மாதப் பிறப்பன்று….”

“சொல்லுங்கள், பிரபோ!”

“காளி மாதா சந்நிதிக்கு நீ வரவேண்டும்…”

“வந்து…”

“உன்னுடைய தலையை உன்னுடைய கையினாலேயே வெட்டி மாதாவுக்கு அளிக்க வேண்டும்!”

“ஐயோ!” என்று மாரப்பன் அலறினான்.

“அளித்தால் அடுத்த ஜென்மத்தில் காஞ்சி சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாகலாம். இல்லாவிட்டால்….”

“இல்லாவிட்டால் என்ன பிரபோ!”

“ஆத்ம பலிக்கு ஈடான இன்னொரு மகா பலி அளிக்க வேண்டும். அளித்தால் இந்த ஜென்மத்திலேயே சக்கரவர்த்தி பதவி கிட்டும்.”

“அது என்ன பலி, சுவாமி!”

“அந்த விபூதி ருத்திராட்சதாரியைப் பலிக்குக் கொண்டு வர வேண்டும்….”

“பிரபோ! இராஜ வம்சத்து இரத்தத்தை விரும்பும் காளி மாதா கேவலம் ஒரு விபூதி ருத்திராட்சதாரியைப் பலி கொள்ள விரும்புவானேன்?” என்று மாரப்பன் கேட்டான்.

“பூபதி! உனக்கு தெரிந்தது அவ்வளவுதான்; அந்தப் போலி ருத்திராட்சதாரி – உண்மையில் யார் தெரியுமா உனக்கு?”

“யார் பிரபோ!” என்று பூபதி வியப்புடன் கேட்டான்.

“பூபதி! அது மகா மர்மம் – யாரும் அறிய முடியாத இரகசியம் – இதோ அடிக்கும் இந்தக் காற்றின் காதிலே கூட விழக் கூடாது. அருகில் வா! காதோடு சொல்கிறேன்…”

சொல்ல முடியாத வியப்புடனும் பயத்துடனும் மேற்படி சம்பாஷனையின் பெரும் பகுதியைக் கேட்டுக் கொண்டு வந்த விக்கிரமனும் பொன்னனும் இப்போது செவிகளை மிகக் கூர்மையாக வைத்துக் கொண்டு கேட்டார்கள். ஆனால் ஒன்றும் காதில் விழவில்லை.

திடீரென மாரப்பன் இடி இடி என்று சிரிக்கும் சத்தம் கேட்டது.

“பூபதி! ஏன் சிரிக்கிறாய்? மாதாவின் வார்த்தையில் உனக்கு அவநம்பிக்கையா?” என்று கபால பைரவர் கோபக் குரலில் கேட்டார்.

“இல்லை பிரபோ! இல்லை!” என்றான் மாரப்பன்.

“பின்னர், ஏன் சிரித்தாய்?” “அந்தச் சிவனடியாரைக் கைப்பற்றிக் கொண்டு வரும்படி இன்னொரு தேவியிடமிருந்தும் எனக்குக் கட்டளை பிறந்திருக்கிறது, அந்தத் தேவி யார், தெரியுமா?”

“யார்?”

“தர்ம ராஜாதி ராஜ மாமல்ல நரசிம்ம பல்லவ சக்கரவர்த்தியின் திருக்குமாரி குந்தவி தேவிதான்!”

“ரொம்ப நல்லது. காளி மாதா தன் விருப்பத்தைப் பல விதத்திலும் நிறைவேற்றிக் கொள்கிறாள்!” என்றார் மகா கபால பைரவர்.

இந்தச் சமயத்தில் சற்று தூரத்தில் குதிரைகளின் குளம்படிச் சத்தமும், இரைச்சலும் ஆரவாரமும் கேட்டன. பொன்னன் சத்தமிடாமல் நடந்து வாசற்படியருகில் வந்து எட்டிப் பார்த்தான். ஐந்தாறு குதிரை வீரர்கள் தீவர்த்தி வெளிச்சத்துடன் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. பொன்னன் மனதிற்குள், “இன்று மகாராஜாவும் நாமும் நன்றாய் அகப்பட்டுக் கொண்டோம்!” என்று எண்ணினான். அவனுடைய மார்பும் ‘பட்பட்’ என்று அடித்துக் கொண்டது. சட்டென்று தலையை உள்ளே இழுத்துக் கொண்டான்.

அதே சமயத்தில் மாரப்ப பூபதி, “மகாபிரபோ! அதோ என்னுடைய ஆட்கள் என்னைத் தேடிக் கொண்டு வருகிறார்கள்; நான் போக வேண்டும்” என்றான்.

“நானும் இதோ மறைந்து விடுகிறேன். மாதாவின் கட்டளை ஞாபகம் இருக்கட்டும்….”

“மறுபடியும் எங்கே சந்திப்பது?”

“வழக்கமான இடத்தில்தான். சித்ரகுப்தன் உனக்காகக் காத்திருப்பான்.”

இதற்குள் இரைச்சலும் ஆரவாரமும் அருகில் நெருங்கி விட்டன.

“நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்.”

“அப்படியே பிரபோ!”

இதற்குப் பிறகு சற்று நேரம் பேச்சுக் குரல் ஒன்றும் கேட்கவில்லை. திடீரென்று கொஞ்சதூரத்தில், “சோழ சேனாதிபதி மாரப்பபூபதி வாழ்க! வாழ்க!” என்ற கோஷம் கேட்டது. பொன்னனும் விக்கிரமனும் மண்டபத்துக்கு வெளியில் வந்து பார்த்தபோது, தீவர்த்திகளின் வெளிச்சத்தில் குதிரைகள் உறையூர்ச் சாலையில் விரைவாகப் போய்க் கொண்டிருப்பதைக் கண்டார்கள்.

“மகாராஜா, எப்பேர்ப்பட்ட இக்கட்டிலிருந்து தப்பினோம்?” என்று சொல்லிப் பொன்னன் பெருமூச்சு விட்டான்.

விக்கிரமன், “பொன்னா! என்ன துரதிர்ஷ்டம்? நான் ஏறிவந்த குதிரை, அதன் மேலிருந்த இரத்தினப் பைகள் எல்லாம் ஆற்றோடு போய்விட்டதினால்கூட மோசம் இல்லை; என் உடைவாளும் போய்விட்டதே! என்ன செய்வேன்?” என்றான்.

“மகாராஜா!”

“என்ன, பொன்னா?” “ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது. மகாராணி ஸ்தல யாத்திரை கிளம்பும்போது என்னிடம் ஒரு பெட்டியை ஒப்புவித்தார்கள். உங்களிடம் கொடுக்கும்படி….”

“என்ன பெட்டி அது? சீக்கிரம் சொல்லு பொன்னா!”

“அதில் உங்கள் குலத்தின் வீர வாள் இருக்கிறது. பிடியில் இரத்தினங்கள் இழைத்தது….”

“நிஜமாகவா, பொன்னா? ஆகா! முக்கியமாக அந்த வாளுக்காகத்தானே நான் இப்போது தாய் நாட்டுக்கு வந்தேன்! என் தந்தை போருக்குக் கிளம்பும்போது அந்தப் பெட்டியைத் திறந்து அதிலிருந்த பட்டாக்கத்தியையும் திருக்குறள் சுவடியையும் எனக்குக் காட்டி, ‘இவைதாம் நான் உனக்கு அளிக்கும் குலதனம்!’ என்றார். எங்கள் மூதாதை – பரத கண்டத்தையெல்லாம் ஒரு குடையின் கீழ் ஆண்டு, கடல் கடந்த தேசங்களிலும் ஆட்சி செலுத்திய கரிகாலச்சோழர் – கையாண்ட வாள் அது. பொன்னா! பத்திரமாய் வைத்திருக்கிறாயல்லவா?”

“வைத்திருக்கிறேன். சுவாமி!”

“எங்கே?”

“வசந்தத் தீவில் புதைத்து வைத்திருக்கிறேன்.”

“அங்கே ஏன் வைத்தாய்?”

“வேறு எங்கே வைப்பேன். மகாராஜா?”

“சரி பொன்னா! நாம் இப்போது வசந்தத் தீவுக்குப் போய் அந்த வாளை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். என் தந்தை என்ன சொன்னார் தெரியுமா? ஒன்பது வருஷத்துக்கு முன்னால் சொன்னது நேற்றுத்தான் சொன்னது போலிருக்கிறது. ‘விக்கிரமா! இந்தக் கரிகாலச் சோழரின் வீரவாளை வேறொரு அரசனுக்குக் கப்பம் செலுத்தும் கையாலே தொடக்கூடாது. ஆகையினால்தான் என் வாழ்நாளில் நான் இதை எடுக்கவேயில்லை. நீ எப்போது ஒரு கையகலமுள்ள பூமிக்காவது சுதந்திர மன்னனாகிறாயோ, அப்பொழுது இந்த வாளை எடுத்துக்கொள்’ என்றார். பொன்னா! நான் இப்போது செண்பகத் தீவின் சுதந்திர அரசன் அல்லவா? இனி அந்த வாளை நான் தரிக்கலாம்….”

“மகாராஜா! செண்பகத்தீவுக்கு மட்டுந்தானா? சோழ நாட்டுக்கும் நீங்கள்தான் அரசர்….”

“அதற்கு இன்னும் காலம் வரவில்லை பொன்னா! ஆனால் சீக்கிரத்தில் வந்து விடும். நாம் உடனே செய்ய வேண்டிய காரியங்கள் இரண்டு இருக்கின்றன. அந்த வீர வாளையும் திருக்குறளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பயங்கர நரபலிக் கூட்டத்திலிருந்து மகாராணியை விடுவித்து அழைத்துப் போக வேண்டும். இவற்றுள் முதலில் எதைச் செய்வது, அப்புறம் எதைச் செய்வது என்பதை இப்போது தீர்மானிக்க வேண்டும்.”

அவர்கள் மேலும் யோசனை செய்து, முதலில் உறையூருக்குப் போய் வசந்தத் தீவிலிருந்து வீர வாளை எடுத்துக் கொள்வதென்றும், பிறகு திரும்பி வந்து சிவனடியாரைத் தேடிப் பிடித்து அவருடைய உதவியுடன் மகாராணியைக் கண்டுபிடிப்பதென்றும் தீர்மானித்தார்கள். இருவரும் மிகவும் களைத்திருந்த படியால் அன்றிரவு இந்த மண்டபத்திலேயே உறங்கிவிட்டு, அதிகாலையில் எழுந்து உறையூருக்குப் போவதென்றும் முடிவு செய்தார்கள். ஆனால் விக்கிரமனுக்கு ஏற்கனவே கடுமையான சுரம் அடித்துக் கொண்டிருந்ததென்பதையாவது, பொழுது விடிவதற்குள் அவன் ஒரு அடிகூட எடுத்து வைக்கமுடியாத நிலைமையை அடைவானென்பதையாவது அவர்கள் அறிந்திருக்கவில்லை.

Source

Previous articleRead Parthiban Kanavu Part 3 Ch 13
Next articleRead Parthiban Kanavu Part 3 Ch 15

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here