Home Kalki Read Parthiban Kanavu Part 3 Ch 19

Read Parthiban Kanavu Part 3 Ch 19

64
0
Read Parthiban Kanavu Part 3 Ch 19 Free, Parthiban Kanavu is a historical novel. Download Parthiban Kanavu Free, Parthiban Kanavu pdf Parthiban Kanavu audiobook
Parthiban Kanavu Part 3 Ch 19 பார்த்திபன் கனவு மூன்றாம் பாகம், அத்தியாயம் 19: பொன்னனின் சிந்தனைகள்

Read Parthiban Kanavu Part 3 Ch 19

பார்த்திபன் கனவு

மூன்றாம் பாகம், அத்தியாயம் 19: பொன்னனின் சிந்தனைகள்

Read Parthiban Kanavu Part 3 Ch 19

பொன்னன் பராந்தக புரத்தின் வீதியில் போய்க் கொண்டிருந்தபோது, எதிரில் இராஜ பரிவாரங்கள் வந்து கொண்டிருப்பதைக் கண்டு ஒதுங்கி நின்றான். பல்லக்கில் அமர்ந்திருந்த குந்தவிதேவியைத் தீவர்த்தி வெளிச்சத்தில் பார்த்தான். இதற்கு முன் அவன் மனதில் என்றும் தோன்றாத பக்தியும் மரியாதையும் அவளிடம் அவனுக்கு உண்டாயிற்று. தெய்வீக சௌந்தரியம் பொருந்திய இந்தத் தேவியின் உள்ளமும் தெய்வத் தன்மை கொண்டதாக வல்லவா இருக்கிறது? வழியில் அநாதையாய்க் கிடந்தவனைக் தூக்கித் தன்னுடைய பல்லக்கில் ஏற்றிக் கொண்டு வருவதற்கு எவ்வளவு கருணை, தயாளம், பெருந்தன்மை வேண்டும்?

அன்றிரவு பொன்னன் அவ்வூர்க் கோயில் பிராகாரத்தில் படுத்துக் கொண்டே மேலே செய்ய வேண்டியதைப் பற்றிச் சிந்தனை செய்தான். இளவரசரோ சரியான சம்ரக்ஷணையில் இருக்கிறார். குந்தவி தேவியைக் காட்டிலும் திறமையாக அவரைத் தன்னால் கவனிக்க முடியாது. இளவரசர் எங்கே போக விரும்பினாரோ அவ்விடத்துக்கே குந்தவிதேவி அவரை அழைத்துப் போகிறார். ஏதோ சோழ வம்சத்தின் குலதெய்வமே இவ்விதம் ஏற்பாடு செய்ததென்று சொல்லும்படி எல்லாம் நடந்திருக்கிறது. எப்படியும் இளவரசருக்கு உடம்பு நன்றாய்க் குணமாகச் சில தினங்கள் ஆகும். அதுவரைக்கும் அவரைத் தான் பார்க்கவோ, பேசவோ சௌகரியப்படாது. பின்னர், அவருக்கு உடம்பு குணமாகும் வரையில் தான் என்ன செய்வது? பின்னோடு தொடர்ந்து போவதினாலோ, உறையூருக்குப் போய் உட்கார்ந்திருப்பதினாலோ என்ன பிரயோஜனம்? அதைக் காட்டிலும் ராணி அருள்மொழித் தேவியை விடுதலை செய்ய வேண்டிய காரியத்தைப் பார்ப்பது நலமல்லவா? இதற்குச் சிவனடியாரைப் போய்ப் பார்த்து அவருடன் கலந்து ஆலோசனை செய்ய வேண்டும். அருள்மொழித் தேவியைப் பற்றி ஏதாவது துப்புத் தெரிந்தவுடன் தம்மிடம் வந்து தெரிவிக்கும்படி சொல்லியிருக்கிறார். தம்மைச் சந்திக்க வேண்டிய இடத்தையும் குறிப்பிட்டிருக்கிறார். மாமல்லபுரத்துக்குச் சமீபத்தில் அடர்ந்த காட்டுக்குள் மறைந்திருக்கும் சிற்பியின் வீட்டைக் கண்டுபிடிக்கச் சொல்லியிருக்கிறார். அங்கே போய் அவரைச் சந்தித்து எல்லா விஷயங்களையும் சொல்லி, அவருடைய யோசனைப்படி நடப்பதுதான் உசிதம் என்று தீர்மானித்தான்.

மறுநாள் காலையில் இராஜ பரிவாரங்கள் பராந்தகபுரத்தை விட்டுக் கிளம்பி உறையூர்ச் சாலையில் போவதைத் தூர இருந்து பொன்னன் பார்த்து, “பகவானே! எங்கள் இளவரசரைக் காப்பாற்று; நான் மாமல்லபுரத்திலிருந்து திரும்பி வருவதற்குள் அவர் உடம்பு பூரணமாய்க் குணமாகி விடவேண்டும்” என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டான். பரிவாரங்கள் மறைந்ததும், எதிர்த் திசையை நோக்கி நடக்கலானான்.

அவனுடைய கால்கள் மாமல்லபுரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போதிலும் உள்ளம் மட்டும் இளவரசர் படுத்திருந்த பல்லக்குடன் உறையூரை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.

குந்தவி தேவியின் பராமரிப்பில் இளவரசர் இருப்பதினால் ஏற்படக்கூடிய அபாயம் அவனுக்கு அடிக்கடி நினைவு வந்து கொண்டிருந்தது. பல்லக்கில் படுத்திருக்கும் நோயாளி உண்மையில் சோழநாட்டு இளவரசர் என்பதைக் குந்தவி அறிந்தால் என்ன ஆகும்? ஜுர வேகத்தில் இளவரசர் பிதற்றும்போது அந்த உண்மை வெளியாகி விடலாமல்லவா? அல்லது வஸந்த மாளிகையில் அவர் நல்லுணர்வு பெற்றதும், திடீரென்று பழைய இடங்களைப் பார்க்கும் வியப்பினால் தாம் இன்னார் என்பதை வெளியிட்டு விடலாமல்லவா? – அதனால் ஒருவேளை ஏதேனும் விபரீதம் விளைந்துவிடுமோ? குந்தவிதேவிக்கு உண்மை தெரிந்தால் அவளுடைய தமையனுக்கும் தெரிந்துதான் தீரும். பிறகு, சக்கரவர்த்திக்கும் தெரியாமலிராது. சக்கரவர்த்தியினால் தேசப் பிரஷ்டம் செய்யப்பட்டவர் அல்லவா இளவரசர்? அதை மீறிப் பொய் வேஷத்தில் வந்ததற்குச் சிட்சை மரணமேயல்லவா?

ஆனால், கடவுள் அருளால் அப்படியெல்லாம் ஒன்றும் நேராது என்று பொன்னன் தன்னைத்தானே தைரியப்படுத்திக் கொண்டான். குந்தவி தேவிக்கு ஒருவேளை உண்மை தெரிந்தால், அவர் இளவரசரைக் காப்பாற்றவே முயல்வார். முன்னம், தேசப் பிரஷ்ட தண்டனை விதிக்கப்பட்ட போதே அவருக்காக மன்னிப்புக் கோரி மன்றாடியதாகக் கேள்விப்பட்டிருக் கிறோமே? அதைப் பற்றிச் சிவனடியார் அருள்மொழி ராணியிடம் எவ்வளவெல்லாம் சொன்னார்?….

சிவனடியாரையும் குந்தவி தேவியையும் பற்றிச் சேர்ந்தாற் போல் நினைத்ததும், பொன்னனுக்கு நேற்றிரவு மகேந்திர மண்டபத்தின் வாசலில் நடந்த சம்பாஷணை நினைவு வந்தது. மனதில் இன்னதென்று சொல்ல முடியாத கவலையும் திகிலும் உண்டாயின. சிவனடியாரைப் பிடித்துக் கொண்டு வரும்படி குந்தவி தேவி மாரப்ப பூபதிக்குக் கட்டளையிட்டிருக் கிறாராமே? இது எதற்காக?

அந்தச் சிவனடியார்தான் யார்? அவர் உண்மையில் உத்தம புருஷர்தானா? அல்லது கபட சந்நியாசியா? சோழ குலத்துக்கு அவர் உண்மையில் சிநேகிதரா? அல்லது சிநேகிதர் போல் நடிக்கும் பகைவரா? இளவரசர் திரும்பி வந்திருப்பது பற்றியும், இப்போது குந்தவி தேவியின் பராமரிப்பில் வஸந்த மாளிகைக்குப் போயிருப்பது பற்றியும் அவரிடம் சொல்லலாமா, கூடாதா! – ஐயோ அதையெல்லாம் பற்றி இளவரசரிடம் கலந்து பேசாமற் போனோமே என்று பொன்னன் துக்கித்தான்.

இன்னொரு விஷயம் பொன்னனுக்கு வியப்பை அளித்தது. இளவரசரை ஒற்றர் தலைவன் ஆபத்திலிருந்து விடுவித்த பிறகு அன்றிரவு காட்டில் ஒரு சிற்பியின் வீட்டில் தங்கியதாக அல்லவா சொன்னார்! தன்னைச் சிவனடியார் வந்து காணச் சொல்லியிருப்பதும் காட்டின் நடுவில் உள்ள சிற்பியின் வீட்டில்தானே? அடையாளங்களைப் பார்த்தால் இரண்டும் ஒரே இடமாகவல்லவா தோன்றுகிறது? ஒற்றர் தலைவனுக்கும் சிவனடியாருக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா?

சிவனடியார் ஒரு மகான் என்ற எண்ணம் பொன்னனுக்குப் பூரணமாக இருந்தது. அவர் தன்னை ஒரு சமயம் மாரப்பனிடம் அகப்படாமல் காப்பாற்றியதை அவன் எந்த நாளும் மறக்க முடியாது. இன்னும் அருள்மொழி ராணி அவரிடம் பூரண நம்பிக்கை வைத்திருந்தார் என்பதிலும் சந்தேகமில்லை.

ஆனாலும், அவர் உண்மையான சிவனடியார் அல்ல – அவ்விதம் வேடம் பூண்டவர் என்று சந்தேகிப்பதற்கு வேண்டிய ஆதாரங்கள் இருந்தன. வள்ளி இவ்விதம் சந்தேகத்துடன் அவர் யார் என்பதைப் பற்றியும் ஒரு ஊகம் கூறினாள். அதாவது அவர் உண்மையில் பார்த்திப மகாராஜாதான் – மகாராஜா போர்க்களத்தில் சாகவில்லை – தன்னந்தனியே தாம் உயிர் தப்பி வந்ததை அவர் யாருக்கும் தெரிவிக்க விரும்பாமல் சிவனடியார் வேஷம் பூண்டிருக்கிறார் என்று வள்ளி சொன்னாள். அவளுடைய மதியூகத்தில் பொன்னனுக்கு எவ்வளவோ நம்பிக்கை உண்டு என்றாலும் இதை அவனால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.

அவனுடைய சந்தேகத்தை அதிகப்படுத்தும்படியான இன்னொரு சம்பவம் நேரிட்டிருந்தது. அருள்மொழி ராணி தீர்த்த யாத்திரை கிளம்பிச் சென்ற பிறகு பொன்னன் பெரிதும் மனச்சோர்வு அடைந்திருந்தான். தோணித் துறைக்குச் சற்றுத் தூரத்தில் காட்டிலிருந்த ஐயனார் கோயிலுக்குப் போய்ப் பிரார்த்தனை செய்யலாமென்று அவன் போனான். அங்கே சந்நிதியில் வைத்திருந்த மண் யானைகளில் ஒன்று உடைந்து விழுந்திருப்பதைக் கண்டான். அதனருகில் அவன் சென்று பார்த்தபோது, மண் குதிரையின் வயிற்றுக்குள் ஒரு துணி மூட்டை இருந்தது. அதிசயத்துடன் அவன் அந்த மூட்டையை அவிழ்த்துப் பார்த்தான். அதற்குள் புலித்தோல், ருத்திராட்சம், பொய் ஜடாமுடி முதலியவைகள் இருக்கக் கண்டான். அப்போது அவனுக்கு உண்டான வியப்புக்கு அளவேயில்லை. யோசிக்க, யோசிக்க இது சிவனடியாருடைய வேஷப் பொருள்கள்தான் என்பது நிச்சயமாயிற்று.

அந்த வேஷதாரி யார்? அவர் நல்லவரா, பொல்லாத சூழ்ச்சிக்காரா? அவரை நம்பலாமா, கூடாதா? அந்தப் பயங்கர மகா கபால பைரவர் மாரப்பன் காதோடு, சிவனடியாரைப் பற்றி ஏதோ சொன்னாரே அது என்ன? கருணையும், தயாளமும் உருக்கொண்ட குந்தவி தேவி எதற்காக அச்சிவனடியார் மேல் வெறுப்புக் கொண்டிருக்கிறாள்?

இதெல்லாம் பொன்னனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனால், அவன் ஒன்று நிச்சயம் செய்து கொண்டான். இந்தத் தடவை சிவனடியாரைச் சந்தித்ததும் அவரைத் தெளிவாக “சுவாமி! தாங்கள் யார்?” என்று கேட்டுவிட வேண்டியதுதான். திருப்தியான விடை சொன்னால் இளவரசர் திரும்பி வந்ததைப் பற்றியும், அருள்மொழி ராணி இருக்குமிடத்தைப் பற்றியும் அவருக்குத் தெரிவிக்க வேண்டும். தகுந்த மறுமொழி கூறித் தன் சந்தேகத்தைத் தீர்க்காவிட்டால் ஒன்றும் சொல்லாமல் திரும்பி வந்துவிட வேண்டும். இளவரசருக்கு உடம்பு குணமான பிறகு அவரை எப்படியாவது சந்தித்துக் கலந்து ஆலோசித்துக் கொண்டு மேற்காரியங்களைச் செய்ய வேண்டும்.

இவ்விதம் பலவிதமாக யோசனைகளும், தீர்மானங்களும் செய்துகொண்டு பொன்னன் வழி நடந்து சென்றான். ஆங்காங்கே போக்கு வண்டிகள் கிடைக்கும் போதெல்லாம் ஏறிக்கொண்டு போனான். கடைசியில், மாமல்லபுரம் போகும் குறுக்குப் பாதையிலும் இறங்கிச் சென்றான். காட்டின் மத்தியிலுள்ள சிற்பியின் வீட்டுக்குச் சிவனடியார் மிகத் தெளிவாக அடையாளங்கள் சொல்லியிருந்தார். அந்த அடையாளங்கள் புலப்படுகின்றனவா என்று வெகு கவனமாய்ப் பார்த்துக் கொண்டு அவன் போய்க் கொண்டிருக்கையில் அவனுக்கு எதிரே சற்றுத் தூரத்தில் ஒரு குதிரை வருவதையும், அது சட்டென்று குறுக்கே காட்டில் புகுந்து போவதையும் பார்த்தான். குதிரை மேலிருந்த வீரன் தன்னைக் கவனித்தானா இல்லையா என்பது பொன்னனுக்குத் தெரியவில்லை. ஆனால் இளவரசர் சொன்ன அடையாளத்திலிருந்து அவன் ஒற்றர் தலைவனாயிருக்கலாமென்று தோன்றியது.

திரும்ப வேண்டிய இடத்தைப் பற்றிச் சிவனடியார் கூறிய அடையாளங்கள் அதே இடத்தில் காணப்படவே பொன்னன் அங்கேயே தானும் திரும்பினான். படர்ந்து தழைத்திருந்த செடிகொடிகளை உராய்ந்து கொண்டு குதிரை போகும் சத்தம் நன்றாய்க் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த வழியைத் தொடர்ந்து பொன்னனும் போனான். ஒரு நாழிகை நேரம் இவ்விதம் போன பிறகு கொஞ்சம் திறந்தவெளி காணப்பட்டது. அதில் ஒரு அழகான சிற்ப வீடு தோன்றியது. அவன் சாலையில் பார்த்த குதிரை அவ்வீட்டின் பக்கத்தில் நிற்பதைக் கண்டான். அதே சமயத்தில் அவ்வீட்டிற்குள்ளிருந்து சிவனடியார் வெளியே வந்து புன்னகையுடன் அவனை வரவேற்றார். பொன்னனோ, அளவில்லாத வியப்புடனும் திகைப்புடனும் அவரை உற்று நோக்கினான்.

Source

Previous articleRead Parthiban Kanavu Part 3 Ch 18
Next articleRead Parthiban Kanavu Part 3 Ch 20

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here