Home Kalki Read Parthiban Kanavu Part 3 Ch 2

Read Parthiban Kanavu Part 3 Ch 2

70
0
Read Parthiban Kanavu Part 3 Ch 2 Free, Parthiban Kanavu is a historical novel. Download Parthiban Kanavu Free, Parthiban Kanavu pdf Parthiban Kanavu audiobook
Parthiban Kanavu Part 3 Ch 2 பார்த்திபன் கனவு மூன்றாம் பாகம், அத்தியாயம் 2: சந்திப்பு

Read Parthiban Kanavu Part 3 Ch 2

பார்த்திபன் கனவு

மூன்றாம் பாகம், அத்தியாயம் 2: சந்திப்பு

Read Parthiban Kanavu Part 3 Ch 2

மாமல்லபுரத்தில் கலைத் திருவிழா வழக்கம் போல் நடந்து கொண்டிருந்தது. இவ்வருஷம் சக்கரவர்த்தி திருவிழாவுக்கு விஜயம் செய்யவில்லை. சில காலமாகச் சக்கரவர்த்தி ஏதோ துக்கத்தில் ஆழ்ந்திருப்பதாகவும், அதனால் தான் கலைவிழாவுக்கு வரவில்லையென்றும் ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். வேறு சிலர், சக்கரவர்த்தி கொஞ்ச காலமாகப் பல்லவ நாட்டிலேயே இல்லையென்றும், அவருடைய குமாரன் இலங்கையிலிருந்து திரும்பிய பிறகு அவனிடம் இராஜ்ய பாரத்தை ஒப்புவித்துவிட்டு மாறுவேஷத்துடன் தேச யாத்திரை போயிருக்கிறார் என்றும் சொன்னார்கள்.

ஆனால், சக்கரவர்த்தியின் குமாரன் மகேந்திரனும், குமாரி குந்தவி தேவியும் இவ்வருஷம் கலைவிழாவுக்கு விஜயம் செய்திருந்தபடியால், மாமல்லபுர வாசிகள் சிறிதளவும் உற்சாகம் குன்றாமல் விழாவைச் சிறப்பாக நடத்தினார்கள். கலைவிழாவின் காட்சிகளையும், கற்பாறைகளில் செதுக்கிய அற்புதமான சித்திரங்களையும், ஆங்காங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த இசை விருந்து, நாட்டியம், கூத்து ஆகியவைகளையும் பார்த்து அனுபவித்துக் கொண்டு கப்பலிலிருந்து இறங்கிய நமது இரத்தின வியாபாரி குறுக்கும் நெடுக்குமாகப் போய்க்கொண்டிருந்தான்.

அவனுடைய முகத்தில் அபூர்வமான கிளர்ச்சி தோன்றியது; கண்களில் அளவில்லாத ஆர்வம் காணப்பட்டது. எவ்வளவுதான் பார்த்த பிறகும் கேட்ட பிறகுங்கூட அவனுடைய இருதய தாகம் தணிந்ததாகத் தெரியவில்லை. பார்க்கப் பார்க்க, கேட்கக் கேட்க, அந்தத் தாகம் அடங்காமல் பெருகிக் கொண்டிருந்ததென்று தோன்றியது. அந்த அதிசயமான சிற்பக் காட்சிகளையும், உயிருள்ள ஓவியங்களையும் பார்க்கும்போது, ஊனையும் உள்ளத்தையும் உருக்கும் இசை அமுதத்தைப் பருகும் போதும் அவன் அடைந்த அனுபவம் ஆனந்தமா? அல்லது அசூயையா? அல்லது இரண்டும் கலந்த உணர்ச்சியா?

இரத்தின வியாபாரிக்குப் பக்கத்தில் தலையிலும் தோளிலும் மூட்டைகளைச் சுமந்து கொண்டு ஒரு குள்ளன் போய்க் கொண்டிருந்தான். அவனுடன் இரத்தின வியாபாரி ஜாடை காட்டிப் பேசுவதைப் பார்த்தால் குள்ளனுக்குக் காது செவிடு என்று ஊகிக்கலாம். அவன் செவிடு மட்டுமல்ல – ஊமையாகக்கூட இருக்கலாமென்றும் தோன்றியது. தன்னுடைய நடவடிக்கைகளைப் பற்றி வேறு யாருக்கும் தெரியப்படுத்த முடியாமலிருக்கும் பொருட்டே நமது இரத்தின வியாபாரி அத்தகைய ஆளைப் பொறுக்கி எடுத்திருக்க வேண்டும்.

ஆமாம்; அந்த இளம் வர்த்தகங்களின் நடவடிக்கைகள், கவனித்துப் பார்ப்பவர்களின் உள்ளத்தில் சந்தேகத்தை உண்டு பண்ணுவனவாய்த் தான் இருந்தன. அவன் ஆங்காங்கு சிற்பக் காட்சியோ, சித்திரக் காட்சியோ உள்ள இடத்தில் சிறிது நேரம் நிற்பான். சிற்பங்களையும் சித்திரங்களையும் பார்ப்பதோடல்லாமல் பக்கத்தில் நிற்கும் சிற்பிகளையும் கவனிப்பான். அவர்களில் யாராவது ஒருவன் தனித்து நிற்க நேர்ந்தால் அவனை நெருங்கி முதுகைத் தட்டி “உன்னிடம் ஒரு விஷயம் பேச வேண்டும்; கொஞ்சம் ஒதுக்குப்புறமாக வருகிறாயா?” என்று கேட்பான். இரத்தின வியாபாரியின் கம்பீரத் தோற்றத்தையும் களையான முகத்தையும் பார்த்த யாருக்குத்தான் அவன் பேச்சைத் தட்ட மனம் வரும்? அவன் சொற்படியே கொஞ்சம் தனியான இடத்துக்கு அவர்கள் வருவார்கள். அவர்களிடம் அவ்வர்த்தகன் கடல்களுக்கு அப்பால் தான் வசிக்கும் தேசத்தைப் பற்றியும், அந்த தேசத்தின் வளத்தையும் செல்வத்தைப் பற்றியும் பிரமாதமாக வர்ணிப்பான். கரிகாலச் சோழச் சக்கரவர்த்தியின் காலத்தில் கடல் கடந்து சென்ற தமிழர்கள் தான் அத்தேசத்தில் வசிக்கிறார்களென்றும், அவர்களுக்குத் தாய்நாட்டிலுள்ளவை போன்ற திருக்கோயில்களும் சிற்பங்களும் இல்லையே என்ற ஒரு குறையைத் தவிர வேறு குறையே கிடையாதென்றும் எடுத்துச் சொல்வான்.

“அந்தத் தேசத்துக்கு நீ வருகிறாயா? வந்தால் திரும்பி வரும்போது பெருஞ் செல்வனாகத் திரும்பி வரலாம். அந்த நாட்டில் தரித்திரம் என்பதே கிடையாது. தெருவெல்லாம் இரத்தினக் கற்கள் இறைந்து கிடக்கும்!” என்று சொல்லி, குள்ளன் தூக்கிக் கொண்டு வந்த பையிலிருந்து ஒரு பிடி இரத்தினக் கற்களை எடுத்து அவர்களிடம் காட்டுவான்.

இரத்தின வியாபாரியின் பேச்சிலேயே அநேகமாக அந்தச் சிற்பி மயங்கிப் போயிருப்பான். கை நிறைய இரத்தினக் கற்களைக் காட்டியதும் அவன் மனத்தை நிச்சயப்படுத்திக் கொண்டு தன்னுடைய சம்மதத்தைத் தெரிவிப்பான். அப்படிச் சம்மதம் தெரிவிக்கும் ஒவ்வொருவரிடமும் பெரிய இரத்தினம் ஒன்றைப் பொறுக்கிக் கொடுத்து, “அடுத்த அமாவாசையன்று புலிக் கொடி உயர்த்திய கப்பல் ஒன்று இந்தத் துறைமுகத்துக்கு வரும். அந்தக் கப்பலுக்கு வந்து இந்த இரத்தினத்தைக் காட்டினால் கப்பலில் ஏற்றிக் கொள்வார்கள்” என்பான் நமது இளம் வர்த்தகன்.

கலைத் திருவிழா நடந்த மூன்று தினங்களிலும் ரத்தின வியாபாரி மேற்சொன்ன காரியத்திலேயே ஈடுபட்டிருந்தான். மூன்றாவது நாள் விஜயதசமியன்று அவன் வீதியோடு போய்க் கொண்டிருக்கையில் திடீரென்று எதிர்பாராத ஒரு காட்சியைக் கண்டான். (எதிர்பாராததா? அல்லது ஒரு வேளை எதிர்பார்த்தது தானா? நாம் அறியோம்.) ஆம்; அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட நங்கை முன் போலவே பல்லக்கில் சென்ற காட்சிதான். மூன்று வருஷத்துக்கு முன்பு பார்த்ததற்கு இப்போது அந்தப் பெண்ணின் முகத்தில் சிறிது மாறுதல் தோன்றியது. அன்றைக்கு அவளுடைய முகம் சூரியன் அஸ்தமித்த பிறகு நீலக் கடலில் உதயமாகும் பூரண சந்திரனைப்போல் பசும்பொன் காந்தியுடன் பிரகாசித்தது. இன்றோ அதிகாலை நேரத்தில் மேற்குத் திசையில் அஸ்தமிக்கும் சந்திரனைப் போல் வெளிறிய பொன்னிறமாயிருந்தது. அப்போது முகத்தில் குடிகொண்டிருந்த குதூகலத்துக்குப் பதிலாக இப்போது சோர்வு காணப்பட்டது. விஷமம் நிறைந்திருந்த கண்களில் இப்போது துயரம் தோன்றியது. இந்த மாறுதல்களினாலே அந்த முகத்தின் சௌந்தரியம் மட்டும் அணுவளவும் குன்றவில்லை; அதிகமாயிருந்ததென்றும் சொல்லலாம்.

வீதியோடு போய்க் கொண்டிருந்த இரத்தின வியாபாரி தனக்குப் பின்னால் கூட்டத்தில் ஏதோ கலகலப்புச் சத்தம் உண்டாவதைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். காவலர் புடைசூழ ஒரு சிவிகை வருவதைக் கண்டான். அச்சிவிகையில் இருந்த பெண் தன் இருதய மாளிகையில் குடிகொண்டிருந்தவள்தான் என்பதை ஒரு நொடியில் தெரிந்து கொண்டான். அச்சமயத்தில் அவன் நெஞ்சு விம்மிற்று, கண்களில் நீர் தளும்பிற்று. இம்மாதிரி சந்தர்ப்பம் நேருங்கால் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அவன் யோசித்து வைத்திருந்ததெல்லாம் சமயத்துக்கு உதவவில்லை. வீதி ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டான். பல்லக்கின் பக்கம் பார்க்காமல் திரும்பி வேறு திசையை நோக்கினான்.

அவன் இருந்த இடத்தைச் சிவிகை தாண்டியபோது தன்னை இரண்டு விசாலமான கரிய கண்கள் கூர்ந்து நோக்குவதுபோல் அவனுக்கு உணர்ச்சி உண்டாயிற்று. திரும்பிப் பார்க்கவேண்டுமென்ற ஆவல் அளவு மீறிப் பொங்கிற்று. பல்லைக் கடித்துக் கொண்டு அவன் வேறு திசையையே பார்த்துக் கொண்டிருந்தான். பல்லக்கு கொஞ்சதூரம் முன்னால் போன பிறகுதான் அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தான். பல்லக்கில் உட்கார்ந்திருந்த பெண் தன்மீது வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான். அடுத்த கணம் அவனுடைய கண்கள் மறுபடியும் கீழே நோக்கின.

ஆனால் பல்லக்கு மேலே போகவில்லை; நின்றுவிட்டது. பல்லக்குடன் போய்க் கொண்டிருந்த வீரர்களில் ஒருவன் இரத்தின வியாபாரியை நோக்கி வந்தான். அருகில் வந்ததும், “அப்பா! தேவிக்கு உன்னிடம் ஏதோ கேட்க வேண்டுமாம்; கொஞ்சம் வந்துவிட்டுப்போ!” என்றான்.

இரத்தின வியாபாரி அவனுடன் பல்லக்கை நோக்கிப் போனான். அந்தச் சில வினாடி நேரத்துக்குள் அவனுடைய உள்ளத்தில் என்னவெல்லாமோ எண்ணங்கள் கொந்தளித்தன. ‘இந்தப் பெண் யாராயிருக்கும்? எதற்காக நம்மை அழைக்கிறாள்? நம்மை அடையாளங் கண்டு கொண்டாளோ? அப்படியானால் இத்தனை நாளும் நம்மை ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருந்ததாக ஏற்படுகிறதே? இவள் உயர் குலத்துப் பெண் என்பதில் சந்தேகமில்லை. ஒருவேளை சக்கரவர்த்தியின் மகளாகவே இருக்குமோ? ஐயோ! அவ்விதம் இருந்துவிட்டால்…!

இரத்தின வியாபாரி பல்லக்கை நெருங்கி வந்து அந்தப் பெண்ணின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். அப்பப்பா! அவளுடைய பார்வைதான் எவ்வளவு கூரியது? பெண்களின் கண்களை வாளுக்கும் வேலுக்கும் இதனால்தான் ஒப்பிடுகிறார்கள் போலும்!

ஆமாம்; குந்தவி அவனுடைய கண்களின் வழியாக அவனது இருதயத்தையே ஊடுருவி அதன் இரகசியத்தைக் கண்டுபிடிக்க விரும்புகிறவளைப் போலேதான் பார்த்தாள். இவ்விதம் சற்று நேரம் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, “ஐயா! நீர் யார்? இந்த தேசத்து மனுஷர் இல்லை போலிருக்கிறதே?” என்றாள்!

“ஆம். தேவி! நான் கடலுக்கப்பால் உள்ள செண்பகத்தீவில் வசிப்பவன் இரத்தின வியாபாரம் செய்வதற்காக இவ்விடம் வந்தேன். என் பெயர் தேவசேனன்” என்று மளமளவென்று பாடம் ஒப்புவிக்கிறவனைப்போல் மறுமொழி கூறினான் இரத்தின வியாபாரி.

அவனுடைய படபடப்பு குந்தவி தேவிக்கு வியப்பை அளித்திருக்க வேண்டும். மறுபடியும் சிறிது நேரம் மௌனமாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, “எந்த தீவு என்று சொன்னீர்?” என்றாள். “செண்பகத் தீவு – செண்பகத் தீவு – செண்பகத் தீவு – கேட்ட ஞாபகமாய் இருக்கிறதே! அந்தத் தீவை ஆளும் அரசன் யாரோ?”

“செண்பகத் தீவின் பூர்வீக அரச வம்சம் நசித்துப் போயிற்று. சோழ நாட்டு இளவரசர் விக்கிரமர்தான் இப்போது எங்கள் அரசர்.” இவ்விதம் சொன்னபோது குந்தவியின் முகத்தில் உண்டான பிரகாசத்தை இரத்தின வியாபாரி கவனிக்காமல் போகவில்லை. அந்தத் தேசப் பிரஷ்டனை இன்னும் இவள் நினைவு வைத்துக் கொண்டுதானிருக்கிறாள்! ஆனால் இவள் யார்? இவ்வளவு முககாந்தியும் சௌந்தரியமும் உள்ளவள் ஒருவேளை…? அத்தகைய சந்தேகமே இரத்தின வியாபாரிக்குத் திகில் உண்டாக்கிற்று.

அப்போது குந்தவி, “நீர் இரத்தின வியாபாரி என்பதாகச் சொன்னீரல்லவா?” என்று கேட்டாள். “ஆம், அம்மா; இதோ இந்தக் குள்ளன் தலையில் உள்ள மூட்டைகளில் மேன்மையான இரத்தினங்கள் இருக்கின்றன. வேணுமானால் இப்போது எடுத்துக் காட்டுகிறேன்.”

“இப்போது வேண்டாம், வீதியில் கூட்டம் சேர்ந்து போகும். சாயங்காலம் அரண்மனைக்கு வாரும்” என்றாள் குந்தவி.

அரண்மனை! இந்த வார்த்தையைக் கேட்டதும் அந்த இளம் வர்த்தகனுடைய முகமானது அப்படி ஏன் சிணுங்குகிறது? அந்தச் சிணுக்கத்தைக் குந்தவி கவனித்தாளோ, என்னவோ தெரியாது. எதையோ மறந்து போய் நினைத்துக் கொண்டவள் போல், “ஆமாம்; சாயங்காலம் கட்டாயம் அரண்மனைக்கு வாரும். சக்கரவர்த்தியின் குமாரி குந்தவி தேவிக்கு இரத்தினம் என்றால் ரொம்பவும் ஆசை கட்டாயம் உம்மிடம் வாங்கிக் கொள்வாள். ஒருவேளை இந்த மூட்டையிலுள்ள இரத்தினங்கள் அவ்வளவையும் வாங்கிக் கொண்டாலும் வாங்கிக் கொள்ளலாம்” என்றாள்.

இரத்தின வியாபாரி பெருமூச்சு விட்டான். மனத்திலிருந்த பெரிய பாரம் ஏதோ ஒன்று நீங்கியவன் போலத் தோன்றினான்.

“அப்படி எல்லாவற்றையும் ஒரே இடத்தில் விற்றுவிட வேண்டுமென்ற ஆசை எனக்கில்லை. இந்தத் தேசத்தில் இன்னும் பல இடங்களையும் சுற்றிப் பார்க்க விரும்புகிறேன். உங்களுக்கு வேண்டிய இரத்தினங்களை நீங்கள் வாங்கிக் கொண்டால் போதும்” என்றான்.

“அதற்கும் நீர் அரண்மனைக்குத்தான் வந்தாக வேண்டும். கட்டாயம் வருகிறீரா?”

“வருகிறேன்; ஆனால் அரண்மனைக் குள் வந்து யார் என்று கேட்கட்டும்.”

“குந்தவி தேவியின் தோழி மாதவி என்று கேட்டால் என்னிடம் அழைத்து வருவார்கள்.”

“தடை ஒன்றும் இராதே?” “ஒரு தடையும் இராது. இருக்கட்டும், இப்படி நீர் இரத்தின மூட்டைகளைப் பகிரங்கமாக எடுத்துக் கொண்டு சுற்றுகிறீரே! திருடர் பயம் இல்லையா உமக்கு?”

“நன்றாகக் கேட்டீர்கள்! நரசிம்ம பல்லவ சக்கரவர்த்தியின் ஆட்சியில் திருட்டுப் பயமும் உண்டா?” என்றான் இரத்தின வியாபாரி.

குந்தவி புன்னகையுடன், “அப்படியா? எங்கள் சக்கரவர்த்தியின் புகழ் அப்படிக் கடல் கடந்த தேசங்களில் எல்லாம் பரவியிருக்கிறதா? சந்தோஷம். நீர் சாயங்காலம் அவசியம் அரண்மனைக்கு வருகிறீர் அல்லவா?” என்று கேட்டாள்.

“கட்டாயம் வருகிறேன்” என்றான் வியாபாரி.

பிறகு, குந்தவியின் கட்டளையின் பேரில் பல்லக்கு மேலே சென்றது. இரத்தின வியாபாரி நின்ற இடத்திலேயே நின்று பல்லக்கு ஜனக்கூட்டத்தில் மறையும் வரையில் அந்தத் திசையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன அப்பா? எத்தனை நேரம் ஒரே பக்கம் பார்ப்பாய்? கண்விழி பிதுங்கப் போகிறது” என்று ஒரு கடூரமான குரலைக் கேட்டு அந்த இளம் வர்த்தகன் திடீரென்று காலால் நெருப்பை மிதித்தவன் போல் துள்ளித் திரும்பிப் பார்த்தான். ஒரு கருநிறக் குதிரைமேல் சாக்ஷாத் மாரப்ப பூபதி அமர்ந்து தன்னை ஏளனப் பார்வையுடன் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.

Source

Previous articleRead Parthiban Kanavu Part 3 Ch 1
Next articleRead Parthiban Kanavu Part 3 Ch 3

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here