Home Kalki Read Parthiban Kanavu Part 3 Ch 21

Read Parthiban Kanavu Part 3 Ch 21

69
0
Read Parthiban Kanavu Part 3 Ch 21 Free, Parthiban Kanavu is a historical novel. Download Parthiban Kanavu Free, Parthiban Kanavu pdf Parthiban Kanavu audiobook
Parthiban Kanavu Part 3 Ch 21 பார்த்திபன் கனவு மூன்றாம் பாகம், அத்தியாயம் 21: வஸந்தத் தீவில்

Read Parthiban Kanavu Part 3 Ch 21

பார்த்திபன் கனவு

மூன்றாம் பாகம், அத்தியாயம் 21: வஸந்தத் தீவில்

Read Parthiban Kanavu Part 3 Ch 21

ஒரு வார காலமாக விக்கிரமன் நரகத்திலிருந்து சுவர்க்கத்துக்கும் சுவர்க்கத்திலிருந்து நரகத்துக்குமாக மாறிக் கொண்டிருந்தான்.

நாலாபுறமும் பயங்கரமாகத் தீ கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கிறது. பார்த்திப மகாராஜா விக்கிரமனுடைய கையைப் பிடித்துக் கொண்டு, “குழந்தாய்! உன்னுடைய ஜன்ம தேசத்துக்காக நீ இந்தத் தீயில் இறங்குவாயா?” என்று கேட்கிறார். அருகில் அருள்மொழி ராணி கண்ணீரும் கம்பலையுமாய் நிற்கிறாள். “இறங்குவேன் அப்பா!” என்று விக்கிரமன் துணிந்து விடை சொல்கிறான். தந்தையின் கைப்பிடி தளர்கிறது. விக்கிரமன் நெருப்பில் இறங்கிச் செல்கிறான்; உடம்பெல்லாம் கொதிக்கிறது; சுடுகிறது; வேகிறது; எரிகிறது. ஆனால் உணர்வு மட்டும் அப்படியே இருக்கிறது. “ஐயோ! இப்படி எத்தனை காலம் எரிந்து கொண்டிருப்பது? ஏன் உயிர் போகமாட்டேனென்கிறது? ஏன் உடம்பு அப்படியே இருக்கிறது?” என்று எண்ணி விக்கிரமன் துடிதுடிக்கிறான். திடீரென்று ஒரு குளிர்ந்த கை அவனுடைய எரியும் கரத்தைப் பற்றுகிறது; இன்னொரு குளிர்ந்த கை அவனுடைய கொதிக்கும் மார்பைத் தொடுகிறது. எரிகிற அந்தத் தீயின் நடுவில் செந்தாமரையை யொத்த குளிர்ந்த முகம் ஒன்று தோன்றி அவனைக் கருணையுடன் நோக்குகிறது. சற்று நேரத்துக்கெல்லாம் அவன் அத்தீயிலிருந்து வெளியே வருகிறான். தன்னை அவ்விதம் கையைப் பிடித்து அழைத்து வந்த தெய்வப் பெண்ணுக்கு நன்றி செலுத்த அவன் விரும்புகிறான். ஆனால், அத்தெய்வப் பெண்ணைக் காணவில்லை.

விக்கிரமன் புலிக்கொடி பறக்கும் பெரிய போர்க்கப்பலில் பிரயாணம் செய்கிறான். கப்பலில் நூற்றுக்கணக்கான சோழ நாட்டு வீரர்கள் அங்குமிங்கும் உலாவுகிறார்கள். கப்பல் துறைமுகத்தை விட்டுக் கிளம்பிய போது பார்த்திப மகாராஜாவும் அருள்மொழி ராணியும் விக்கிரமனை ஆசீர்வதித்து, “வெற்றி வீரனாய்த் திரும்பி வா!” என்று வாழ்த்தி அனுப்பிய காட்சி அவன் மனக் கண் முன்னால் அடிக்கடி தோன்றிக் கொண்டிருக்கிறது. திடீரென்று பெரும் புயலும் மழையும் அடிக்கின்றன; கப்பல் கவிழ்கின்றது. விக்கிரமன் கடல் அலைகளுடன் தன்னந்தனியாகப் போராடுகிறான். உடம்பு ஜில்லிட்டுப் போய் விட்டது; கைகால்கள் மரத்து விட்டன. “இனித் தண்ணீரில் மூழ்கிச் சாகவேண்டியதுதான்” என்று தோன்றிய சமயத்தில் இந்திர ஜாலத்தைப் போல் ஒரு படகு எதிரே காணப்படுகிறது. படகில் பூரண சந்திரனையொத்த முகமுடைய பெண் ஒருத்தி இருக்கிறாள். எங்கேயோ, எப்போதோ, எந்த ஜன்மத்திலோ பார்த்த முகந்தான் அது. அந்தப் பெண் அவனுக்குக் கைகொடுத்துத் தூக்கிப் படகில் விடுகிறாள். அவள் முகமெல்லாம் நனைந்திருக்கிறது. அலைத்துளிகள் தெறித்ததனாலா, கண்ணீர் பெருகியதனாலா என்று தெரியவில்லை. அவளுக்கு நன்றி செலுத்த வேண்டுமென்று விக்கிரமன் ஆசைப்படுகிறான். பேச முயற்சி செய்கிறான், ஆனால் பேச்சு வரவில்லை. தொண்டையை அடைத்துக் கொள்கிறது.

விக்கிரமன் ஒரு கொடிய பாலைவனத்தில் நடந்து கொண்டிருக்கிறான். வெயிலின் கொடுமை பொறுக்க முடியவில்லை. கால் ஒட்டிக் கொள்கிறது. உடம்பெல்லாம் பற்றி எரிகிறது. நா வரண்டுவிட்டது, சொல்ல முடியாத தாகம். கண்ணுக்கெட்டிய தூரம் மரம், செடி, நிழல் என்கிற நாமதேயமே கிடையாது. எங்கேயோ வெகு தூரத்தில் தண்ணீர் நிறைந்த ஏரி மாதிரி தெரிகிறது. அதை நோக்கி விரைந்து செல்கிறான். எவ்வளவு விரைவாகச் சென்றாலும் ஏரி இன்னும் தொலை தூரத்திலேயே இருக்கிறது. “ஐயோ! கானல்நீர் என்றும், பேய்த் தேர் என்றும் சொல்வது இதுதானா?” என்று நினைக்கிறான்; பிறகு அவனால் நடக்க முடியவில்லை. திடீரென்று கண் இருளுகிறது; சுருண்டு கீழே விழுகிறான். அந்தச் சமயத்தில் ‘இவ்வளவு கஷ்டங்களையும் நமது பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு, சோழ நாட்டின் மேன்மையை முன்னிட்டுத்தானே அநுபவிக்கிறோம்!’ என்ற எண்ணம் உண்டாகிறது. கீழே கொதிக்கும் மணலில் விழுந்தவனை யாரோ மிருதுவான கரங்களினால் தொட்டுத் தூக்கும் உணர்ச்சி ஏற்படுகிறது. யார் என்று பார்ப்பதற்காகக் கண்ணைத் திறக்க முயற்சி செய்கிறான். கண்கள் திறந்துதானிருக்கின்றன – ஆனால் பார்வை மட்டும் இல்லை. “ஐயோ! இந்தக் கொடிய வெப்பத்தினால் பார்வை இழந்துவிட்டோ மோ?” என்று எண்ணி மனம் வெதும்புகிறான். தொட்டுத் தூக்கிய கரங்கள் அவனை மிருதுவான பஞ்சணை மெத்தையின் மேல் இடுகின்றன. “ஆகா! காவேரி நதியின் ஜலம்போல் அல்லவா இனிக்கின்றது!” என்று எண்ணுகிறான். அதே சமயத்தில், அவனுக்குச் சுற்றுப்புறமெல்லாம் குளிர்கிறது. காவேரி நதி தீரத்தில் குளிர்ந்த தோப்புக்களினிடையே இருக்கும் உணர்ச்சி உண்டாகிறது. தன்னைத் தூக்கி எடுத்து வாயில் இன்னமுதை இட்டு உயிர் கொடுத்த தெய்வம் தன் முகத்துக்கருகிலே குனிந்து பார்ப்பதாகத் தோன்றுகிறது. முல்லை மலர்களின் திவ்யபரிமள வாசனை அவனைச் சூழ்கிறது, சட்டென்று அவனுடைய கண்கள் ஒளி பெறுகின்றன. ‘ஆகா! எதிரில் தன் முகத்தருகில் தெரியும் அந்த முகம், மாதுளை மொட்டைப் போன்ற செவ்விதழ்களில் புன்னகை தவழ, விரிந்த கருங் கண்களினால் தன்னைக் கனிந்து பார்க்கும் அந்த முகம். தான் ஏற்கெனவே பார்த்திருக்கும் அந்த முகம்தான். எவ்வளவோ ஆபத்துக்களிலிருந்து தன்னைத் தப்புவித்த தெய்வப் பெண்ணின் முகந்தான். அந்த இனிய முகத்தைத் தொடவேண்டுமென்ற ஆசையுடன் விக்கிரமன் தன் கையைத் தூக்க முயன்றான்; முடியவில்லை. கை இரும்பைப் போல் கனக்கிறது. மறுபடியும் கண்கள் மூடுகின்றன, நினைவு தவறுகிறது.

இப்படியெல்லாம் சுவர்க்க இன்பத்தையும், நரகத் துன்பத்தையும் மாறி மாறி அநுபவித்த பிறகு கடைசியில் ஒருநாள் விக்கிரமனுக்குப் பூரணமான அறிவுத் தெளிவு ஏற்பட்டது. கொஞ்சங் கொஞ்சமாகப் பழைய நினைவுகள் எல்லாம் வந்தன. காட்டாற்றங்கரையில் மகேந்திர மண்டபத்தில் அன்றிரவைத் தானும் பொன்னனும் கழித்தது வரையில் நினைவுபடுத்திக் கொண்டான். சுற்றும் முற்றும் பார்த்தான், ஏதோ ஏற்கனவே தெரிந்த இடம்போல் தோன்றியது. நன்றாக ஞாபகப்படுத்திக் கொண்டு பார்த்தபோது அவனுடைய ஆச்சரியத்துக்கு எல்லையில்லாமற் போயிற்று. ஆமாம்; உறையூரில் காவேரித் தீவிலுள்ள வஸந்த மாளிகையில் ஒரு பகுதிதான் அவன் படுத்திருந்த இடம். “இங்கே எப்படி வந்தோம்? யார் கொண்டு வந்து சேர்த்தார்கள்? இந்த மாளிகையில் இப்போது இன்னும் யார் இருக்கிறார்கள்?”

பொன்னனுடைய நினைவு வந்தது. அவன் எங்கே?

தாபஜ்வரத்தின் வேகத்தில் தான் கண்ட பயங்கர இன்பக் கனவுகளெல்லாம் இலேசாக ஞாபகம் வந்தன. அந்த அதிசய மாயக்கனவுகளில் அடிக்கடி தோன்றிய பெண்ணின் முகம் மட்டும் கனவன்று – உண்மை என்று அவனுக்கு உறுதி ஏற்பட்டிருந்தது. சற்று நேரத்துக்கெல்லாம் பாதச் சிலம்பின் ஒலி கேட்டபோது, அவள் தானா என்று ஆவலுடன் திரும்பிப் பார்த்தான். இல்லை; யாரோ பணிப்பெண்கள், முன்பின் பார்த்தறியாதவர்கள்.

இன்னும் வைத்தியர் ஒருவர் வந்து பார்த்தார். பணியாட்களும் பணிப்பெண்களும் அடிக்கடி வந்து வேண்டிய சிசுருஷை செய்தார்கள். ஆனால், பொன்னன் வரவில்லை; அந்தப் பெண்ணையும் காணவில்லை.

பணியாட்களிடமும், பணிப்பெண்களிடமும் விவரம் எதுவும் கேட்பதற்கும் அவன் மனம் இசையவில்லை. அவர்களோ ஊமைகளைப் போல் வந்து அவரவர் களுடைய காரியங்களைச் செய்துவிட்டுத் திரும்பினார்கள். அவனுடன் ஒரு வார்த்தையும் பேசவில்லை.

இவ்விதம் ஒரு பகல் சென்றது. இரவு தூக்கத்தில் கழிந்தது. மறுநாள் பொழுது விடிந்ததிலிருந்து விக்கிரமனுக்கு அங்கே படுத்திருக்க மனம் கொள்ளவில்லை. உடம்பில் நல்ல பலம் ஏற்பட்டிருப்பதைக் கண்டான்; எழுந்து நடமாடினான். ஒருவிதக் களைப்பும் உண்டாகவில்லை, திடமாகத்தான் இருந்தது. அறைக்கு வெளியே வந்து தோட்டத்தில் பிரவேசித்தான். அங்கிருந்த பணியாட்கள் யாரும் அவனைத் தடுக்கவில்லை. விக்கிரமன் மேலும் நடந்தான். நதிக்கரையை நோக்கி மெதுவாக நடந்து சென்றான் பல வருஷங்களுக்குப் பிறகு அந்தக் குளிர்ந்த காவேரித் தீவைப் பார்க்கப் பார்க்க, அவன் மனம் பரவசமடைந்தது. அந்த மாமரங்களின் நிழலில் நடப்பது அளவற்ற ஆனந்தத்தை அளித்தது. மெள்ள மெள்ள நடந்து போய்க் காவேரிக் கரையை அடைந்து ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான். அவனுடைய மனதில் சாந்தியும் இன்ப உணர்ச்சியும் மேலிட்டிருந்தன.

காவேரி நதியின் இனிய நீர்ப்பிரவாகத்தை விக்கிரமன் உற்று நோக்கிக் கொண்டிருந்தான். தண்ணீரில் ஒரு முகம் பிரதிபலித்தது! அது அந்தப் பழைய தெய்வப் பெண்ணின் முகந்தான். காஞ்சியிலும் மாமல்லபுரத்திலும் தன்னைக் கருணையுடன் நோக்கிய முகந்தான். தாபஜ்வரக் கனவுகளில் தோன்றிச் சாந்தியும் குளிர்ச்சியும் அளித்த முகமும் அதுதான். அந்தப் பெண்ணை மறுபடியும் காணப் போகிறோமா என்று விக்கிரமன் பெருமூச்சு விட்டான். அதே சமயத்தில், அவனுக்குப் பின்புறமாக வந்து ஒரு மரத்தடியில் சாய்ந்து கொண்டு குந்தவி தேவி நின்றாள்.

Source

Previous articleRead Parthiban Kanavu Part 3 Ch 20
Next articleRead Parthiban Kanavu Part 3 Ch 22

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here