Home Kalki Read Parthiban Kanavu Part 3 Ch 23

Read Parthiban Kanavu Part 3 Ch 23

70
0
Read Parthiban Kanavu Part 3 Ch 23 Free, Parthiban Kanavu is a historical novel. Download Parthiban Kanavu Free, Parthiban Kanavu pdf Parthiban Kanavu audiobook
Parthiban Kanavu Part 3 Ch 23 பார்த்திபன் கனவு மூன்றாம் பாகம், அத்தியாயம் 23: அருவிப் பாதை

Read Parthiban Kanavu Part 3 Ch 23

பார்த்திபன் கனவு

மூன்றாம் பாகம், அத்தியாயம் 23: அருவிப் பாதை

Read Parthiban Kanavu Part 3 Ch 23

உதய சூரியனின் பொற்கிரணங்களால் கொல்லி மலைச்சாரல் அழகு பெற்று விளங்கிற்று. பாறைகள் மீதும் மரங்கள் மீதும் ஒரு பக்கத்தில் சூரிய வெளிச்சம் விழுவதும், இன்னொரு பக்கத்தில் அவற்றின் இருண்ட நிழல் நீண்டு பரந்து கிடப்பதும் ஒரு விசித்திரமான காட்சியாயிருந்தது. வான வெளியெங்கும் எண்ணிறைந்த பட்சிகளின் கலகல தொனி பரவி ஒலித்தது. அதனுடன் மலையிலிருந்து துள்ளிக் குதித்து ஆடிப்பாடி வந்த அருவியின் இனிய ஒலியும் சேர்ந்து வெகு மனோகரமாயிருந்தது.

இந்த நேரத்தில் அந்த மலைச்சாரலுக்கு அருகில் இரண்டு உயர்ஜாதி வெண்புரவிகள் வந்து கொண்டிருந்தன. அவற்றின் மீது ஆரோகணித்திருந்தவர்கள் நமக்கு ஏற்கெனவே பழக்கமுள்ளவர்களான சிவனடியாரும் பொன்னனுந்தான். அவர்கள் அந்தக் காட்டாற்றின் கரையோரமாகவே வந்து கொண்டிருந்தார்கள்; பேசிக் கொண்டு வந்தார்கள். சிவனடியார், சற்றுத் தூரத்தில் மொட்டையாக நின்ற பாறையைச் சுட்டிக் காட்டி, “பொன்னா! அந்தப் பாறையைப் பார்! அதைப் பார்த்தால் உனக்கு என்ன தோன்றுகிறது?” என்று கேட்டார்.

“ஒன்றும் தோன்றவில்லை. சுவாமி! மொட்டைப் பாறை என்று தோன்றுகிறது. அவ்வளவுதான்.”

“எனக்கு என்ன தோன்றுகிறது, தெரியுமா? காலை மடித்துப் படுத்துத் தலையைத் தூக்கிக் கொண்டிருக்கும் நந்தி பகவானைப் போல் தோன்றுகிறது. இப்போது அந்தப் பாறையின் நிழலைப் பார்!”

பொன்னன் பார்த்தான். அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. “சுவாமி நந்தி மாதிரியே இருக்கிறதே!” என்றான்.

“சாதாரணக் கண்ணுக்கும், சிற்பியின் கண்ணுக்கும் இதுதான் வித்தியாசம். பொன்னா! சிற்பி ஒரு பாறையைப் பார்த்தானானால் அதில் ஒரு யானையையோ, சிங்கத்தையோ அல்லது ஒரு தெய்வீக வடிவத்தையோ காண்கிறான். இன்னின்ன மாதிரி வேலை செய்தால் அது அத்தகைய உருவத்தை அடையும் என்று சிற்பியின் மனதில் உடனே பட்டு விடுகிறது….”

பொன்னன் குறுக்கிட்டு, “சுவாமி! தாங்கள்….” என்றான்.

“ஆமாம்! நான் ஒரு சிற்பிதான்! உலகத்தில் வேறு எந்த வேலையைக் காட்டிலும் சிற்ப வேலையிலேதான் எனக்கும் பிரியம் அதிகம்… இப்போது நான் எடுத்துக் கொண்டிருக்கும் வேலையை மட்டும் பூர்த்தி செய்துவிட்டேனானால்… இருக்கட்டும், பொன்னா! மாமல்லபுரம் நீ பார்த்திருக்கிறாயா?” என்று சுவாமியார் கேட்டார்.

“ஒரே ஒரு தடவை பார்த்திருக்கிறேன். சுவாமி!”

“அதைப் பார்த்தபோது உனக்கு என்ன தோன்றியது?”

“சொப்பன லோகத்தில் இருப்பதாகத்தான் தோன்றியது….”

“ஆனால் அந்தச் சிற்பங்கள் உண்மையில் சொப்பனமில்லை! நாம் உயிரோடிருப்பதைவிட அதிக நிஜம். கல்லிலே செதுக்கிய அச்சிற்ப வடிவங்கள் நம்முடைய காலமெல்லாம் ஆன பிறகு, எத்தனையோ காலம் அழியாமல் இருக்கப் போகின்றன; நமக்கு ஆயிரம் வருஷத்துக்குப் பின்னால் வரும் சந்ததிகள் பார்த்து மகிழப் போகிறார்கள். ஆகா! ஒரு காலத்தில், பொன்னா! மாமல்லபுரம் மாதிரியே இந்தத் தமிழகம் முழுவதையும் ஆக்க வேண்டுமென்று நான் கனவு கண்டு கொண்டிருந்தேன்….” “என்ன, தாங்களும் கனவு கண்டீர்களா?” என்றான் பொன்னன். “ஆமாம்; உங்கள் பார்த்திப மகாராஜா மட்டுந்தான் கனவு கண்டார் என்று நினைக்கிறாயா? அவர் சோழ நாட்டின் பெருமையைப் பற்றி மட்டுமே கனவு கண்டார். நானோ தமிழகத்தின் பெருமையைக் குறித்துக் கனவு கண்டு கொண்டிருந்தேன்…. பார், பொன்னா! புண்ணிய பூமியாகிய இந்தப் பரத கண்டம் வடநாடு, தென்னாடு என்று பிரிவுபட்டிருக்கிறது. கதையிலும், காவியத்திலும் இதிகாசத்திலும் வடநாடுதான் ஆதிகாலத்திலிருந்து பெயர் பெற்று விளங்குகிறது. வடநாட்டு மன்னர்களின் பெயர்கள்தான் பிரசித்தியமடைந்திருக்கின்றன. பாடலிபுரத்துச் சந்திர குப்தன் என்ன, அசோகச் சக்கரவர்த்தி என்ன, விக்கிரமாதித்தன் என்ன! இவர்களுக்குச் சமமாகப் புகழ் பெற்ற தென்னாட்டு ராஜா யார் இருந்திருக்கிறார்கள்? நம்முடைய காலத்திலேதான் வட நாட்டு ஹர்ஷ சக்கரவர்த்தியின் புகழ் உலகெல்லாம் பரவியிருப்பது போல் மகேந்திர பல்லவரின் புகழ் பரவியிருந்தது என்று சொல்ல முடியுமா? தென்னாடு இவ்விதம் பின்னடைந்திருப்பதின் காரணம் என்ன? இந்தத் தென்னாடானது ஆதிகாலம் முதல் சோழ நாடு, சேர நாடு, பாண்டிய நாடு என்று பிரிந்து கிடந்ததுதான், காரணம். பெரிய இராஜ்யம் இல்லாவிட்டால், பெரிய காரியங்களைச் சாதிக்க முடியாது. பெரிய காரியங்களைச் சாதிக்காமல் பெரிய புகழ் பெறவும் முடியாது. வட நாட்டில் ஹர்ஷ சக்கரவர்த்தியின் இராஜ்யமானது. நீளத்திலும் அகலத்திலும் இருநூறு காததூரம் உள்ளதாயிருக்கிறது. இந்தத் தென்னாட்டிலோ பத்துக் காதம் போவதற்குள்ளாக மூன்று ராஜ்யத்தை நாம் தாண்ட வேண்டியிருக்கிறது. இந்த நிலைமை அதாவது – தமிழகம் முழுவதும் ஒரே மகாராஜ்யமாயிருக்க வேண்டும் – தமிழகத்தின் புகழ் உலகெல்லாம் பரவ வேண்டும் என்று மகேந்திர பல்லவர் ஆசைப்பட்டார். நானும் அந்த மாதிரி கனவுதான் கண்டு கொண்டிருந்தேன். என் வாழ்நாளில் அந்தக் கனவு நிறைவேறலாம் என்று ஆசையுடன் நம்பியிருந்தேன். ஆனால், அந்த ஆகாசக் கோட்டையானது ஒரே ஒரு மனுஷனின் சுத்த வீரத்துக்கு முன்னால் இடிந்து, தகர்ந்து போய்விட்டது.”

“சுவாமி! யாரைச் சொல்லுகிறீர்கள்?” என்றான் பொன்னன்.

“எல்லாம் உங்கள் பார்த்திப மகாராஜாவைத்தான்! ஆகா! அந்த வெண்ணாற்றங்கரைப் போர்க்களம் இப்போது கூட என் மனக்கண் முன்னால் நிற்கிறது. என்ன யுத்தம்! என்ன யுத்தம்! வெண்ணாறு அன்று இரத்த ஆறாக அல்லவா ஓடிற்று? பூரண சந்திரன் வெண்ணிலாவைப் பொழிந்த அந்த இரவிலே, அந்தப் போர்க்களந்தான் எவ்வளவு பயங்கரமாயிருந்தது? உறையூரிலிருந்து கிளம்பி வந்த பத்தாயிரம் வீரர்களில் திரும்பிப் போய்ச் செய்தி சொல்வதற்கு ஒருவன் கூட மிஞ்சவில்லை என்றால், அந்தப் போர் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்!” என்று சுவாமியார் ஆவேசத்துடன் பேசினார்.

“ஐயோ! அந்தப் பத்தாயிரம் வீரர்களில் ஒருவனாயிருக்க எனக்குக் கொடுத்து வைக்கவில்லையே!” என்றான் பொன்னன்.

“போரில் உயிரை விடுவதற்கு வீரம் வேண்டியதுதான் பொன்னா! ஆனால், உயிரோடிருந்து உறுதி குலையாமல் இருப்பதற்கு அதைக் காட்டிலும் அதிக தீரம் வேண்டும். அந்தத் தீரம் உன்னிடம் இருக்கிறது! உன்னைக் காட்டிலும் அதிகமாக வள்ளியிடம் இருக்கிறது; நீங்களும் பாக்கியசாலிகள்தான்!” என்றார் சுவாமியார்.

“சுவாமி! வெண்ணாற்றங்கரைப் போரைப் பற்றி இன்னும் சொல்லுங்கள்!” என்றான் பொன்னன்.

இந்த வீரப்போரைக் குறித்தும், பார்த்திப மகாராஜா அந்திம காலத்தில் சிவனடியாரிடம் கேட்ட வரத்தைப் பற்றியும் எவ்வளவு தடவை கேட்டாலும் அவனுக்கும் அலுப்பதில்லை.

சிவனடியாரும் அதைச் சொல்ல அலுப்பதில்லையாதலால், அந்தக் கதையை மறுபடியும் விவரமாகச் சொல்லிக் கொண்டு வந்தார்.

சற்று நேரத்துக்கெல்லாம் அவர்கள், காட்டாறானது சிற்றருவியாகி மலைமேல் ஏறத் தொடங்கியிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்து விட்டார்கள். இதற்குமேல் குதிரைகளின் மீது போவது இயலாத காரியம். எனவே மலைச்சாரலில் மரங்கள் அடர்த்தியாயிருந்த ஓர் இடத்தில் குதிரைகளை அவர்கள் விட்டார்கள். இவற்றை “மரத்திலே கட்ட வேண்டாமா?” என்று பொன்னன் கேட்டதற்கு “வேண்டாம்” என்றார் சிவனடியார்.

“இந்த உயர்ஜாதிக் குதிரைகளின் அறிவுக் கூர்மை அநேக மனிதர்களுக்குக்கூட வராது பொன்னா! உங்கள் இளவரசன் ஆற்று வெள்ளத்தில் போனதும் உனக்கு முன்னால் இந்தப் புஷ்பகம் வந்து எனக்குச் செய்தி சொல்லிவிடவில்லையா? இவ்விடத்தில் நாம் இந்தக் குதிரைகளை விட்டுவிட்டுப் போனோமானால், அந்தண்டை இந்தண்டை அவை அசையமாட்டா. கட்டிப் போட்டால்தான் ஆபத்து, துஷ்டமிருகங்கள் ஒருவேளை வந்தால் ஓடித் தப்ப முடியாதல்லவா?” என்று கூறிவிட்டு இரண்டு குதிரைகளையும் முதுகில் தடவிக் கொடுத்தார். பிறகு இருவரும் அருவி வழியைப் பிடித்துக் கொண்டு மலை மேலே ஏறினார்கள்.

பெரிதும் சிறிதுமாய், முண்டும் முரடுமாயும் கிடந்த கற்பாறைகளை வெகு லாவகமாகத் தாண்டிக் கொண்டு சிவனடியார் சென்றார். தண்ணீரில் இறங்கி நடப்பதிலாவது ஒரு பாறையிலிருந்து இன்னொரு பாறைக்குத் தாண்டுவதிலாவது அவருக்கு ஒருவிதமான சிரமமும் இருக்கவில்லை. அவரைப் பின்தொடர்ந்து போவதற்குப் பொன்னன் திணற வேண்டியதாக இருந்தது.

“சுவாமி! தங்களுக்குத் தெரியாத வித்தை இந்த உலகத்தில் ஏதாவது உண்டா?” என்று பொன்னன் கேட்டான்.

“ஒன்றே ஒன்று உண்டு. பொன்னா! கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் இருப்பது என்னால் முடியாத காரியம்” என்றார் சிவனடியார்.

அவர் கூறியதைப் பொன்னன் சரியாகத் தெரிந்து கொள்வதற்குள், “ஆமாம்.உங்கள் பார்த்திப மகாராஜாவுக்கு நான் கொடுத்த வாக்கினால் என்னுடைய வாழ்க்கை – மனோரதமே எப்படிக் குட்டிச்சுவராய்ப் போய்விட்டது. பார்!” என்றார்.

“அதெப்படி, சுவாமி! முன்னேயும் அவ்விதம் சொன்னீர்கள்! பார்த்திப மகாராஜாவினால் உங்களுடைய காரியம் கெட்டுப் போவானேன்?” என்று கேட்டான் பொன்னன்.

“வாதாபியிலிருந்து திரும்பி வந்தபோது, தென்னாடு முழுவதையும் ஒரு பெரிய மகாராஜ்யமாக்கிவிட வேண்டுமென்ற எண்ணத்துடனே வந்தேன். இந்தச் சின்னஞ் சிறு தமிழகத்தில் ஒரு ராஜாவுக்கு மேல் – ஒரு இராஜ்யத்துக்கு மேல் இடங்கிடையாது என்று கருதினேன். சோழ, சேர, பாண்டியர்களின் நாமதேயமே இல்லாமல் பூண்டோ டு நாசம் செய்து விட்டுத் தமிழகத்தில் பல்லவ இராஜ்யத்தை ஏகமகா ராஜ்யமாகச் செய்துவிட வேண்டுமென்று சங்கல்பம் செய்து கொண்டிருந்தேன். ஆனால், என்ன பிரயோஜனம்? பார்த்திபனுடைய சுத்த வீரமானது என் சங்கல்பத்தை அடித்துத் தள்ளிவிட்டது. அவனுடைய மகனைக் காப்பாற்றி வளர்க்க – சுதந்திர வீர புருஷனாக வளர்க்க – வாக்குக் கொடுத்து விட்டேன். சுதந்திர சோழ இராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்கு நானே முயற்சி செய்ய வேண்டியதாகிவிட்டது! இப்போது நினைத்தால், ஏன் அந்தப் புரட்டாசிப் பௌர்ணமி இரவில் போர்க்களத்தில் பிரவேசித்து பார்த்திபனுடைய உடலைத் தேடினோம் என்று தோன்றுகிறது. இதைத்தான் விதி என்று சொல்கிறார்கள் போலிருக்கிறது.”

இவ்விதம் பேசிக் கொண்டே பொன்னனும் சிவனடியாரும் மேலே மேலே ஏறி சென்றார்கள். சூரியன் உச்சி வானத்தை அடைந்தபோது செங்குத்தான பாறையிலிருந்து அருவி ‘ஹோ’ என்ற இரைச்சலுடன் விழுந்து கொண்டிருந்த இடத்தை அவர்கள் அடைந்தார்கள். அதற்குமேல் அருவிப் பாதையில் போவதற்கு வழியில்லை என்பதைப் பொன்னன் தெரிவிக்க, சிவனடியார் சிந்தனையில் ஆழ்ந்தவராய் அங்குமிங்கும் பார்க்கத் தொடங்கினார்.

அருவி விழுந்தோடிய இடத்துக்கு இரு புறமும் கூர்ந்து பார்த்ததில் காட்டுவழி என்று சொல்லக்கூடியதாக ஒன்றும் தென்படவில்லை. இருபுறமும் செங்குத்தாகவும் முண்டும் முரடுமாகவும் மலைப்பாறைகள் உயர்ந்திருந்ததுடன், முட்களும் செடிகளும் கொடிகளும் நெருங்கி வளர்ந்து படர்ந்திருந்தன. அந்தச் செடி கொடிகளையெல்லாம் சிவனடியார் ஆங்காங்கு விலக்கிப் பார்த்துக் கொண்டு கடைசியாக அருவி விழுந்து கொண்டிருந்த இடத்துக்குச் சமீபமாக வந்தார். அருவியின் தாரை விழுந்த இடம் ஒரு சிறு குளம் போல் இருந்தது. அந்தக் குளத்தின் ஆழம் எவ்வளவு இருக்குமோ தெரியாது. தாரை விழுந்த வேகத்தினால் அலைமோதிக் கொண்டிருந்த அந்தக் குளத்தைப் பார்க்கும் போதே மனதில் திகில் உண்டாயிற்று. குளத்தின் இருபுறத்திலும் பாறைச் சுவர் செங்குத்தாக இருந்தபடியால் நீர்த்தாரை விழும் இடத்துக்கு அருகில் போவது அசாத்தியம் என்று தோன்றிற்று. ஆனால் சிவனடியார் அந்த அசாத்தியமான காரியத்தைச் செய்யத் தொடங்கினார்.

அந்த அருவிக் குளத்தின் ஒரு பக்கத்தில் ஓரமாக பாறைச் சுவரைக் கைகளால் பிடித்துக் கொண்டும் முண்டு முரடுகளில் காலை வைத்துத் தாண்டியும், சில இடங்களில் தண்ணீரில் இறங்கி நடந்தும் சில இடங்களில் நீந்தியும் அவர் போனார். இதைப் பார்த்துப் பிரமித்துப் போய் நின்ற பொன்னன், கடைசியாகச் சிவனடியார் தண்ணீர் தாரைக்குப் பின்னால் மறைந்ததும், “ஐயோ!” என்று அலறிவிட்டான். “ஒருவேளை போனவர் போனவர் தானா? இனிமேல் திரும்ப மாட்டாரோ?” என்று அவன் அளவில்லாத ஏக்கத்துடனும் திகிலுடனும் நின்றான். நேரமாக ஆக அவனுடைய தவிப்பு அதிகமாயிற்று. சாமியாருக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் என்னென்ன விபரீதங்கள் விளையும் என்பதை நினைத்தபோது அவனுக்குத் தலை சுற்றத் தொடங்கியது. ‘அவரை விட்டு விட்டு நாம் திரும்பிப் போவதா? முடியாத காரியம். நாமும் அவர் போன இடத்துக்கே போய்ப் பிராணனை விடலாம். எது எப்படிப் போனாலும் போகட்டும்’ என்று துணிந்து பொன்னனும் அந்தக் கிடுகிடு பள்ளமான குளத்தில் இறங்கினான்.

Source

Previous articleRead Parthiban Kanavu Part 3 Ch 22
Next articleRead Parthiban Kanavu Part 3 Ch 24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here