Home Kalki Read Parthiban Kanavu Part 3 Ch 27

Read Parthiban Kanavu Part 3 Ch 27

61
0
Read Parthiban Kanavu Part 3 Ch 27 Free, Parthiban Kanavu is a historical novel. Download Parthiban Kanavu Free, Parthiban Kanavu pdf Parthiban Kanavu audiobook
Parthiban Kanavu Part 3 Ch 27 பார்த்திபன் கனவு மூன்றாம் பாகம், அத்தியாயம் 27: புதையல்

Read Parthiban Kanavu Part 3 Ch 27

பார்த்திபன் கனவு

மூன்றாம் பாகம், அத்தியாயம் 27: புதையல்

Read Parthiban Kanavu Part 3 Ch 27

கிளைகள் நெருங்கிப் படர்ந்து நிழலால் இருண்டிருந்த மாந்தோப்புக்குள் பொன்னன் முன்னால் செல்ல விக்கிரமன் தொடர்ந்து சென்றான். போகும்போதே தாழ்ந்திருந்த மரக்கிளைகளைப் பொன்னன் அண்ணாந்து பார்த்துக் கொண்டு போனான். ஒரு மரத்தினடியில் வந்ததும் நின்று மேலே உற்றுப் பார்த்தான். அந்த அடிக்கிளையின் பட்டையில் சிறு கத்தியினால் ஓர் உருவம் செதுக்கப்பட்டிருந்தது. நன்றாக உற்றுப் பார்த்தால் அது ஒரு புலியின் உருவம் என்று தெரிந்து கொள்ளலாம்.

பொன்னன் அதைப் பார்த்துவிட்டு நின்றான். அந்தப் புலி உருவத்துக்கடியில் தரையில் கிடந்த மாஞ் சருகுகளையெல்லாம் ஒதுக்கினான். பிறகு அங்கே தரையைத் தோண்டத் தொடங்கினான்.

விக்கிரமன் பரபரப்புடன் தானும் மண்வெட்டியை எடுத்த போது பொன்னன் கைமறித்து, “மகாராஜா! தங்களுக்கு உடம்பு இன்னும் சரியாகவில்லை. இன்னும் எவ்வளவோ வேலைகள் செய்வதற்கு இருக்கின்றன. சற்றும் நேரம் மரத்தடியில் சும்மா உட்கார்ந்திருக்க வேண்டும்” என்றான்.

அவ்விதமே விக்கிரமன் மரத்தடிக்குச் சென்று வேரின் மேல் உட்கார்ந்தான். அவனுடைய உள்ளத்தில் எத்தனையோ எண்ணங்கள் அலை அலையாக எழுந்தன. குழந்தைப் பருவத்தில் இந்த வஸந்தத் தீவில் எவ்வளவு ஆனந்தமாக நாட்கள் கழிந்தன! இதே இடத்தில் ஒரு அன்னியப் பெண்ணின் தயவில் தங்கவேண்டிய காலமும் வந்ததல்லவா? – நல்ல வேளை, இன்றோடு அந்த அவமானம் தீர்ந்துவிடும். பெட்டியை எடுத்துக் கொண்டு உடனே கிளம்பிவிட வேண்டியதுதான்…. இனிமேல் ஒரு விநாடி நேரமும் இங்கே தங்கக்கூடாது… செண்பத் தீவிலிருந்தபோது இந்தத் தாய் நாட்டைப் பார்க்க வேணுமென்று தனக்கு ஏற்பட்டிருந்த ஆவலையும், இப்போது இங்கிருந்து கிளம்பினால் போதுமென்று இருப்பதையும் நினைத்தபோது விக்கிரமனுக்குச் சிரிப்பு வந்தது. “இங்கே எதற்காக வந்தோம்? என்ன பைத்தியகாரத்தனம்?” என்று தோன்றியது. பார்த்திப மகாராஜா சுதந்திரமாக ஆண்ட அந்தச் சோழ நாடு அல்ல இது. பல்லவ சக்கரவர்த்தியின் ஆதிக்கத்தில் மிதிபட்டுக் கிடக்கும் நாடு. தேசத் துரோகியும் குலத்துரோகியும் கோழையுமான மாரப்ப பூபதியைச் சேனாதிபதியாகப் பெற்றிருக்கும் நாடு. இப்படிப்பட்ட நாட்டின் மண்ணை உதறிவிட்டு எவ்வளவு சீக்கிரத்தில் போகிறோமோ, அவ்வளவுக்கு நல்லது!

“நாடு என்ன செய்யும்? – மனுஷ்யர்கள் கேடுகெட்டுப் போயிருந்தால்?” என்ற எண்ணம் தோன்றியதும் விக்கிரமன் பெருமூச்சு விட்டான். பார்த்திப மகாராஜா போருக்குக் கிளம்புவதற்கு முன் தன்னைச் சித்திர மண்டபத்துக்குள் அழைத்துக் கொண்டு போய் அவருடைய கனவுச் சித்திரங்களையெல்லாம் காட்டியதை நினைத்துக் கொண்டான். அந்தக் கனவு நிறைவேறப் போகிறதா? இல்லை கனவாகத்தான் போய்விடுமோ? இங்கே எல்லாரும் பல்லவ சக்கரவர்த்தியின் புகழிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். நேற்றுத்தான் காஞ்சியிலிருந்து ஒரு ஆள் வந்தான். சீன தேசத்திலிருந்து வந்த ஒரு தூதனுக்குக் காஞ்சியில் நடந்த வரவேற்பு வைபவங்களைப் பற்றியெல்லாம் அவன் வர்ணித்தான். விக்கிரமன் கேட்டுக் கொண்டிருந்தான். கேட்கக் கேட்க அவனுக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது. அந்தச் சீன தேசத்துத் தூதன் தான் போகுமிடங்களிலெல்லாம் பல்லவ சக்கரவர்த்தியின் அருமை பெருமைகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டு போவான். சீன தேசத்திலும் போய்ச் சொல்வான். சோழ நாட்டைப் பற்றியோ, சோழ நாட்டின் சுதந்திரத்துக்காக வீரப்போர் புரிந்து மரணமடைந்த பார்த்திப மகாராஜாவின் பெயரையோ யார் கேட்கப் போகிறார்கள்?

“மகாராஜா!” என்ற குரலைக் கேட்டு விக்கிரமன் திடுக்கிட்டு எழுந்தான். குழியில் நின்ற பொன்னன் குனிந்தான். அவன் மறுபடி நிமிர்ந்தபோது அவனுடைய கைகளில் கெட்டியான தோலினால் சுற்றப்பட்ட பெட்டி இருந்தது. பொன்னன் அந்தத் தோலை எடுத்தெறிந்தான். பழைய ஆயுதப் பெட்டி – சித்திர வேலைப் பாடமைந்த பெட்டி காணப்பட்டது.

விக்கிரமன் விரைந்து சென்று கையை நீட்டி அந்தப் பெட்டியை ஆவலுடன் வாங்கித் திறந்தான். உள்ளே சிறிதும் மலினமடையாமலிருந்த ஓலைச் சுவடியைக் கண்ணில் ஒத்திக்கொண்டு பெட்டிக்குள் வைத்தான். பிறகு பட்டாக்கத்தியைக் கையில் எடுத்துக்கொண்டான். பொன்னனைப் பார்த்துச் சொன்னான்:

“பொன்னா! சற்று முன்னால் என் மனத்தில் தகாத கோழை எண்ணங்கள் எல்லாம் உண்டாயின. இந்தச் சோழ நாட்டின் மேலேயே வெறுப்பு உண்டாயிற்று. “இந்த நாட்டுக்கு விமோசனம் ஏது? எப்போதும் பல்லவர்களின் கீழ் அடிமைப்பட்டிருக்க வேண்டியதுதான்!” என்று எண்ணினேன். எதற்காக இவ்வளவு அபாயங்களுக்குத் துணிந்து, இவ்வளவு கஷ்டப்பட்டு இங்கு வந்தோம் என்று நினைத்தேன் – அந்த மயக்கம், மாயை எல்லாம் இந்தக் கத்தியைக் கண்டவுடன் மாயமாய்ப்போய் விட்டது. பொன்னா! இந்தக் கத்தி ஒரு காலத்தில் உலகை ஆண்டது. கரிகாலச் சோழரும் நெடுமுடிக் கிள்ளியும் இந்தக் கத்தியினால் கடல்களுக்கப்பாலுள்ள தேசங்களையெல்லாம் வென்று சோழ மகாராஜ்யத்தை ஸ்தாபித்தார்கள். கரிகாலச் சக்கரவர்த்தியின் காலத்தில் செண்பகத் தீவில் குடியேறிய தமிழர்களின் சந்ததிகள் தான் அந்தத் தீவில் இன்று வசிக்கிறார்கள். அத்தகைய மகாவீர புருஷர்களுடைய சந்ததியில் பிறந்தவன் நான். அவர்கள் கையில் பிடித்த வீரவாள் இது. அவர்களால் முடிந்த காரியம் என்னால் ஏன் முடியாது? பொன்னா! இந்தக் கத்தியுடனே என் தந்தை எனக்கு அளித்த இந்தத் தமிழ்மறை என்ன சொல்கிறது? ‘முயற்சி திருவினையாக்கும்!’ ஆகா? அந்தப் புனித வாக்கைக்கூட அல்லவா மறந்துவிட்டேன்! இந்தச் சோழ நாட்டுக்கு இப்போது என்னவோ நேர்ந்துவிட்டது. இங்கே அடிக்கும் காற்றே மனச்சோர்வு தருகிறது. இங்கே இனி ஒரு கணங்கூட நிற்கமாட்டேன். வா, போகலாம்!”

இவ்விதம் விக்கிரமன் பேசிக் கொண்டிருந்தபோது பொன்னன் அவனுடைய முகத்தைப் பார்த்தவண்ணமே பிரமித்து நின்றான். அப்போது விக்கிரமனுடைய முகத்தில் சுடர்விட்டுப் பிரகாசித்த வீரதேஜஸ் அவ்விதம் அவனைப் பிரமிக்கச் செய்தது.

பிறகு சட்டென்று அந்தப் பிரமையிலிருந்து நீங்கினவனாய், மளமளவென்று மண்ணைத் தள்ளிக் குழியை மூடினான். அந்த இடத்தின் மேல் மாஞ் சருகுகளைப் பரப்பிய பிறகு இருவரும் காவேரியை நோக்கி விரைந்து சென்றார்கள்.

நதிக்கரையையடைந்து படகு கட்டியிருந்த இடத்தைப் பார்த்ததும் அவர்களுக்குப் பகீர் என்றது.

“இதென்ன, பொன்னா! படகு! எங்கே?” என்றான் விக்கிரமன்.

“ஒருவேளை இடம்மாறி வந்து விட்டோ மோ?” என்று பொன்னன் திகைப்புடன் கூறி அங்குமிங்கும் நோக்கினான். ஆனால், வேரில் கட்டிய கயிறு இருப்பதைப் பார்த்ததும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் போயிற்று. கயிற்றின் முடிச்சு எப்படியோ அவிழ்ந்து படகு ஆற்றோடு போயிருக்க வேண்டுமென்றுதான் தீர்மானிக்க வேண்டியிருந்தது.

“பொன்னா! என்ன யோசிக்கிறாய்? நீந்திப் போய் விடலாமா?” என்றான் விக்கிரமன்.

“கொஞ்சம் பொறுங்கள், மகாராஜா! கரையோடு ஓடிப்போய் எங்கேயாவது படகு தங்கியிருக்கிறதா என்று இதோ பார்த்துவிட்டு வருகிறேன்” என்று சொல்லி விட்டுப் பொன்னன் நதிக்கரையோடு ஓடினான்.

Source

Previous articleRead Parthiban Kanavu Part 3 Ch 26
Next articleRead Parthiban Kanavu Part 3 Ch 28

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here