Home Kalki Read Parthiban Kanavu Part 3 Ch 28

Read Parthiban Kanavu Part 3 Ch 28

59
0
Read Parthiban Kanavu Part 3 Ch 28 Free, Parthiban Kanavu is a historical novel. Download Parthiban Kanavu Free, Parthiban Kanavu pdf Parthiban Kanavu audiobook
Parthiban Kanavu Part 3 Ch 28 பார்த்திபன் கனவு மூன்றாம் பாகம், அத்தியாயம் 28: குந்தவியின் நிபந்தனை

Read Parthiban Kanavu Part 3 Ch 28

பார்த்திபன் கனவு

மூன்றாம் பாகம், அத்தியாயம் 28: குந்தவியின் நிபந்தனை

Read Parthiban Kanavu Part 3 Ch 28

பொன்னன் மறைந்த கணம் இலைச் சருகுகள் அலையும் சத்தம் கேட்டு விக்கிரமன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். குந்தவி மரங்களின் மறைவிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள்.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு சற்று நேரம் மௌனமாய் நின்றார்கள்.

“சோழநாட்டாரின் யோக்கியதை நன்றாய்த் தெரிந்து போய்விட்டது. இப்படித்தான் சொல்லிக் கொள்ளாமல் கூட ஓடிப் போகப் பார்ப்பார்களா?” என்றாள் குந்தவி.

விக்கிரமன் மறுமொழி சொல்லாமல் சும்மா இருந்தான்.”

“வள்ளுவர் பெருமான், ‘முயற்சி திருவினையாக்கும்’ என்று மட்டுந்தானா சொல்லியிருக்கிறார்? ‘நன்றி மறப்பது நன்றன்று’ என்று சொல்லியிருப்பதாக எனக்குக் கேள்வியாயிற்றே?” என்று குந்தவி சொன்னபோது, விக்கிரமனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

“உனக்கு எப்படி தெரியும்? ஒருவேளை ….” என்று மேலே பேசத் திணறினான்.

“ஆமாம்; நீங்கள் குழி தோண்டிப் புதையல் எடுத்ததைப் பார்த்துக் கொண்டிருந்தேன்; எல்லாம் கேட்டுக் கொண்டுமிருந்தேன்.”

“உண்மையாகவா?”

“ஆமாம்; உங்கள் பொய் வேஷத்தையும் தெரிந்து கொண்டேன்.”

விக்கிரமன் சற்று யோசித்து, “அப்படியானால் நான் சொல்லிக் கொள்ளாமல் ஓடிப் போக நினைத்ததில் என்ன ஆச்சரியம்? தேசப் பிரஷ்டன் – மரண தண்டனைக்குத் துணிந்து தாய் நாட்டுக்கு வந்தவன் – சொல்லாமல் திரும்பி ஓடப் பார்ப்பது இயல்பல்லவா?” என்றான்.

“உயிர் இழப்பதற்குப் பயந்துதானே?”

“ஆமாம்; இந்த உயிர் இன்னும் கொஞ்சகாலத்துக்கு எனக்குத் தேவையாயிருக்கிறது. என் தந்தைக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கும், இந்தத் தாய்த் திருநாட்டுக்கு நான் செய்யவேண்டிய கடமையைச் செய்வதற்கும் இந்த உயிர் வேண்டியிருக்கிறது….”

“ஆனால் உங்களுடைய உயிர் இப்போது உங்களுடையதல்லவே? மகேந்திர மண்டபத்தில் அந்தப் பழைய உயிர் போய்விட்டது. இப்போது இருப்பது நான் கொடுத்த உயிர் அல்லவா? இது எனக்கல்லவா சொந்தம்?” என்றாள் குந்தவி.

விக்கிரமன் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான். பிறகு குந்தவியை உருக்கத்துடன் நோக்கி, “நீ சொல்லியது ஒரு விதத்தில் அல்ல; பல விதத்திலும் உண்மை. இந்த உயிர் உன்னுடையதுதான். மகேந்திர மண்டபத்தில் நீ என்னைப் பார்த்துக் காப்பாற்றியதனால் மட்டும் அல்ல; மூன்று வருஷத்துக்கு முன்பு காஞ்சியிலும், மாமல்லபுரத்திலும் உன்னைப் பார்த்தபோதே என் உயிரை உன்னுடைய தாக்கிக் கொண்டாய்….” என்றான்.

“ஆ! இது உண்மையா?” என்றாள் குந்தவி.

“ஆமாம். ஆகையினால் உன்னுடைய உயிரையே தான் நீ காப்பாற்றிக் கொண்டாய்….”

“இது உண்மையானால், என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் ஓடப் பார்த்தீர்களே, அது எப்படி? என்ன நியாயத்தில் சேர்ந்தது?” என்று குந்தவி கடுமையான குரலில் கேட்டாள்.

“அது தவறுதான். ஆனால், காரணம் உனக்குத் தெரியாதா? உன்னிடம் சொல்லிக் கொண்டால் பிரிய மனம் வராது என்ற பயந்தான் காரணம். நீ விடை கொடுக்காவிட்டால் போக முடியாதே என்ற எண்ணந்தான் காரணம்…”

“என்னைப்பற்றி அவ்வளவு கேவலமாக ஏன் எண்ணினீர்கள்? நீங்கள் போவதை நான் ஏன் தடுக்க வேண்டும்? உங்களுடைய கடமையைச் செய்வதற்கு நான் ஏன் குறுக்கே நிற்க வேண்டும்?”

“நான் எண்ணியது பிசகு என்று இப்போது தெரிகிறது. உன்னிடம் நான் எல்லாவற்றையும் முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும். சொல்லி உன்னுடைய உதவியைக் கோரியிருக்க வேண்டும். மறைக்க முயன்றது பிசகுதான்.”

“போனது போகட்டும்; இனிமேல் நடக்க வேண்டியதைப் பேசுவோம். உங்கள் படகோட்டி திரும்பிவரும் வரையில் இங்கே உட்காரலாம்” என்றாள் குந்தவி.

படகோட்டி என்றதும் விக்கிரமன் மனத்தில் ஒரு சந்தேகம் உதித்தது. குந்தவியைச் சிறிது வியப்புடன் நோக்கினான்.

“இங்கே கட்டியிருந்த படகு எங்கேயென்று தெரியுமா?” என்று கேட்டான்.

“தெரியும்; ஆற்றோடு போய்விட்டது. படகோட்டிக்கு வீண் அலைச்சல்தான்.”

“எப்படிப் போயிற்று? ஒரு வேளை நீ….”

“ஆம்; நான்தான் படகின் முடிச்சை அவிழ்த்து விட்டேன். என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் போக நினைத்ததற்குத் தண்டனை!”

விக்கிரமன் சற்று மௌனமாயிருந்துவிட்டு, “அது தான் முன்னமே சொன்னேனே. உன்னிடம் சொல்லிக் கொண்டால், பிரிந்து போக மனம் வருமோ, என்னவோ என்று பயந்தேன்” என்றான்.

“அம்மாதிரியெல்லாம் பயந்து கொண்டிருந்தால் உங்கள் மூதாதையான கரிகாலசோழர் தீவாந்திரங்களையெல்லாம் வென்றிருக்க முடியுமா?” என்று குந்தவி கேட்டாள்.

“முடியாது. ஆகையால்தான் இப்போது தைரியமாக உன்னிடம் விடை கேட்கிறேன், உதவியும் கேட்கிறேன். இந்த நதியைத் தாண்டுவதற்குப் படகும், அப்பால் மாமல்லபுரம் போவதற்குக் குதிரையும் கொடுத்து உதவ வேண்டும்.”

“கொடுக்கிறேன். ஒரு நிபந்தனை இருக்கிறது.”

“நிபந்தனையா?”

“ஆமாம் கண்டிப்பான நிபந்தனை. போன தடவையைப் போல் என்னைக் கரையில் நிறுத்திவிட்டு நீங்கள் கப்பலில் போய்விடக் கூடாது. நீங்கள் போகும் கப்பலில் என்னையும் அழைத்துப் போக வேண்டும்.”

விக்கிரமனுக்கு அளவில்லாத திகைப்பு உண்டாயிற்று. குந்தவியின் மெல்லிய கரத்தைப் பிடித்துக் கொண்டு தழுதழுத்த குரலில், “தேவி! என்ன சொன்னாய்? என் காதில் விழுந்தது உண்மையா? அவ்வளவு பெரிய அதிர்ஷ்டத்தைப் பெறுவதற்கு நான் என்ன செய்து விட்டேன்! உலகமெல்லாம் புகழ் பரவிய மகாபல்லவச் சக்கரவர்த்தியின் ஏக புதல்வியாகிய நீ இந்த தேசப்பிரஷ்டனுடன் கூடக் கடல்கடந்து வருவாயா!” என்றான்.

குந்தவி காவேரியின் பிரவாகத்தை நோக்கிய வண்ணம், “உங்களுக்கென்ன இவ்வளவு சந்தேகம். பெண் குலத்தைப் பற்றி நீங்கள் இழிவாக நினைக்கிறீர்கள்; அதனாலே தான் சந்தேகப்படுகிறீர்கள்” என்றாள்.

“இல்லவே இல்லை. அருள்மொழியைத் தாயாகப் பெற்ற நான் பெண் குலத்தைப் பற்றி ஒரு நாளும் இழிவாக நினைக்கமாட்டேன். ஆனால் நீ என்னுடன் வருவது எப்படிச் சாத்தியம்? உன் தந்தை.. சக்கரவர்த்தி..சம்மதிப்பாரா?”

“என் தந்தை நான் கேட்டது எதையும் இதுவரை மறுத்ததில்லை. இப்போதும் மறுக்கமாட்டார்…”

அப்போது, “மகாராஜா!” என்ற குரலைக் கேட்டு இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். அந்தக் குரல் பொன்னனுடையதுதான். அவர்கள் உலகை மறந்து பேசிக் கொண்டிருந்த சமயம் பொன்னன் மெதுவாகப் பின்புறமாக வந்து அவர்கள் அருகில் நின்று கொண்டிருந்தான். கடைசியாக, அவர்கள் பேசிய வார்த்தைகளும் அவன் காதில் விழுந்தன.

விக்கிரமன் பொன்னனைப் பார்த்து, “எப்பொழுது வந்தாய், பொன்னா! படகு அகப்படவில்லையே? இந்தத் தேவிதான் படகை அவிழ்த்து விட்டு விட்டாராம். நமக்கு வேறு படகு தருவதாகச் சொல்கிறார்” என்றான்.

“காதில் விழுந்தது, மகாராஜா! ஆனால், இவ்வளவு தொல்லையெல்லாம் என்னத்திற்கு என்று தான் தெரியவில்லை. தேவி சொல்வதை ஒரு நாளும் சக்கரவர்த்தி தட்டமாட்டார். தங்களைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லி…”

குந்தவி வீராவேசத்துடன் எழுந்து பொன்னனுக்கு எதிராக நின்றாள் “என்ன சொன்னாய், படகோட்டி! உங்கள் மகாராஜாவை மன்னித்துக் காப்பாற்றும்படி சக்கரவர்த்தியிடம் நான் சொல்லவேண்டுமா? ஒரு தடவை அந்தத் தவறு நான் செய்தேன்; இனிமேல் செய்யமாட்டேன். இவர் தமது கையில் பிடித்த கத்தியின் வலிமையினால் ஒரு சாண் பூமியை வென்று ராஜாவானால் அந்த சாண் பூமிக்கு நான் ராணியாயிருப்பேன். இவர் உன்னைப்போல படகோட்டிப் பிழைத்து ஒரு குடிசையில் என்னை வைத்தால், உன் மனைவி வள்ளியைப்போல் நானும் அந்தக் குடிசையில் ராணியாயிருப்பேன். இவரை மன்னிக்கும்படியோ, இவருக்குச் சோழ ராஜ்யத்தைக் கொடுக்கும்படியோ சக்கரவர்த்தியை ஒருநாளும் கேட்கமாட்டேன். எனக்காக நான் என் தந்தையிடம் பிச்சை கேட்பேன். ஆனால் இவருக்காக எதுவும் கேட்டு இவருடைய வீரத்துக்கு மாசு உண்டாக்க மாட்டேன்!” என்றாள்.

பொன்னன், “தேவி” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தான்.

அவனைப் பேசவிடாமல், குந்தவி மீண்டும் “ஆம் இன்றைய தினம் இவருடைய வேஷம் வெளிப்பட்டு, இவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டாலும் நான் உயிர்ப்பிச்சை கேட்கமாட்டேன். தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னால் என்னை இவருக்கு மணம் புரிவிக்க வேண்டுமென்று மட்டும் வரம் கேட்பேன்!” என்றாள்.

“தேவி; தாங்கள் அவ்விதம் வரம் கேட்க வேண்டி வருமென்றே தோன்றுகிறது. அதோ பாருங்கள்! படகுகளில் வீரர்கள் வருவதை” என்றான் பொன்னன்.

விக்கிரமனும் குந்தவியும் துணுக்கமடைந்தவர்களாகப் பொன்னன் கை காட்டிய திசையை நோக்கினார்கள். உறையூர்ப் பக்கத்திலிருந்து நாலு படகுகள் வந்து கொண்டிருந்தன. வஸந்தத் தீவில் அடர்த்தியாக வளர்ந்திருந்த மரங்கள் இத்தனை நேரமும் அப்படகுகளை மறைத்துக் கொண்டிருந்தன. இப்போதுதான் அவை ஒரு முடுக்கத்தில் திரும்பி அவர்களுடைய கண்ணுக்குத் தெரிந்தன. படகுகளில் பொன்னன் சொன்னபடியே வேல்தாங்கிய வீரர்கள் கும்பலாயிருந்தார்கள்.

படகுகள் கணத்துக்குக் கணம் கரையை நெருங்கி வந்து கொண்டிருந்தன.

Source

Previous articleRead Parthiban Kanavu Part 3 Ch 27
Next articleRead Parthiban Kanavu Part 3 Ch 29

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here