Home Kalki Read Parthiban Kanavu Part 3 Ch 30

Read Parthiban Kanavu Part 3 Ch 30

63
0
Read Parthiban Kanavu Part 3 Ch 30 Free, Parthiban Kanavu is a historical novel. Download Parthiban Kanavu Free, Parthiban Kanavu pdf Parthiban Kanavu audiobook
Parthiban Kanavu Part 3 Ch 30 பார்த்திபன் கனவு மூன்றாம் பாகம், அத்தியாயம் 30: நள்ளிரவில்

Read Parthiban Kanavu Part 3 Ch 30

பார்த்திபன் கனவு

மூன்றாம் பாகம், அத்தியாயம் 30: நள்ளிரவில்

Read Parthiban Kanavu Part 3 Ch 30

படகுகள் போன பிறகு, குந்தவி பொன்னனைப் பார்த்து, “படகோட்டி! உன் மனைவியை எங்கே விட்டு வந்திருக்கிறாய்?” என்று கேட்டாள்.

பொன்னன் அக்கரையில் குடிசையில் விட்டு வந்திருப்பதைச் சொன்னான்.

“உடனே போய் அவளை இங்கே அழைத்துக்கொண்டு வா! பிறகு நமக்குப் பெரிய வேலையிருக்கிறது. உங்கள் மகாராஜாவை எப்படியாவது விடுதலை செய்ய வேண்டும். விடுதலை செய்து இரகசியமாக மாமல்லபுரத்துக்கு அனுப்ப வேண்டும். அவரை இந்த அமாவாசையன்று செண்பகத் தீவு செல்லும் கப்பலில் ஏற்றிய பிறகுதான் நமக்கு நிம்மதி” என்றாள் குந்தவி.

பொன்னன் வியப்புடன், “தேவி! எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே!” என்றான்.

“உங்கள் மகாராஜா இங்கே ஜுரம் அடித்துக் கிடந்தாரல்லவா, பொன்னா? அப்போது அவர் தம்மை அறியாமல் கூறிய மொழிகளிலிருந்து அவர் யார், எதற்காக வந்தார் என்பதையெல்லாம் அறிந்து கொண்டேன். ஒவ்வொரு அமாவாசையன்றும் அவருக்காகச் செண்பகத் தீவின் கப்பல் மாமல்லபுரம் துறைமுகத்தில் வந்து காத்திருக்கும். அடுத்த அமாவாசை வருவதற்குள்ளே அவரைத் தப்புவித்து இரகசியமாக அனுப்பி வைக்க வேண்டும்!” என்றாள் குந்தவி.

“அம்மணி! கோபித்துக் கொள்ளக்கூடாது. எனக்கு இன்னும் ஒரு விஷயம் விளங்கவில்லை, எதற்காக இப்படியெல்லாம் செய்ய வேண்டும்? தங்கள் தகப்பனாருக்கு ஒரு செய்தி அனுப்பினால் போதாதா?” என்றான் பொன்னன்.

“என் தகப்பனாரை நீ சரியாய்த் தெரிந்து கொள்ளவில்லை. பொன்னா! ஆனால் மாரப்பன் தெரிந்து கொண்டிருக்கிறான். அவருக்குச் சட்டம் என்றால் சட்டம்தான்; நீதி என்றால் நீதிதான். சக்கரவர்த்திக்குத் தெரிவதற்கு முன்னால், உங்கள் மகாராஜா கப்பலில் ஏறினால்தான் தப்பலாம். நல்ல வேளையாக, என் தந்தை இப்போது காஞ்சியில் இல்லை. ஏதோ காரியமாய் மாறு வேஷத்துடன் சுற்றிக் கொண்டிருக்கிறார். இதுதான் நமக்குச் சமயம்….”

இவ்விதம் குந்தவி கூறிவந்ததைக் கேட்டபோது பொன்னனுக்கு ஒரு நிமிஷம், தனக்குத் தெரிந்ததையெல்லாம் சொல்லிவிடலாமா என்று தோன்றியது. ஆனால் தான் சிவனடியாருக்குச் சத்தியம் செய்து கொடுத்திருந்தது நினைவுக்கு வந்தது. மேலும் அவர் என்ன முக்கிய நோக்கத்துடன் இம்மாதிரி இரகசியமாய்க் காரியங்கள் செய்து வருகிறாரோ, தெரியாது. அந்த நோக்கத்துக்குத் தன்னால் பங்கம் விளையக்கூடாது என்று தீர்மானித்துக் கொண்டு, குந்தவியின் மொழிகளைப் பொறுமையுடன் கேட்டு வந்தான். கடைசியில், “தேவி! விக்கிரம மகாராஜாவின் க்ஷேமம் ஒன்றைத் தவிர எனக்கு உலகில் வேறு ஒன்றும் பொருட்டில்லை. தங்கள் கட்டளைப்படி எதுவும் செய்யக் காத்திருக்கிறேன்” என்றான்.

“சந்தோஷம். நான் மாளிகைக்குப் போகிறேன். நீ முதலில் போய் வள்ளியை இங்கே அழைத்து வா!” என்றாள் குந்தவி.

குந்தவியின் கட்டளையின் பேரில் கிடைத்த படகை எடுத்துக் கொண்டு பொன்னன் அக்கரைக்குச் சென்றான். இதற்குள் நன்றாக இருட்டிவிட்டது. பொன்னனுடைய கைகள் படகைச் செலுத்திக் கொண்டிருக்க, அவனுடைய உள்ளம் அலைந்து கொண்டிருந்தது. உறையூர் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி செலுத்தவேண்டிய விக்கிரம மகாராஜா இன்று இரவு அதே உறையூரில் சிறையில் படுத்திருப்பார் என்பதை எண்ணியபோது அவனுடைய நெஞ்சு புண்ணாயிற்று. அன்றிரவே உறையூருக்குப் போய் ஊர் ஜனங்களிடமெல்லாம், “உங்கள் மகாராஜா சிறையில் இருக்கிறார்!” என்ற செய்தியைப் பரப்பி ஒரு பெரிய கலகத்தை உண்டு பண்ணலாமா என்று பொன்னன் நினைத்தான். பிறகு, அது நடக்காத காரியம் என்று அவனுக்கே தோன்றியது. சோழ நாட்டு மக்கள் இப்போது வீரமிழந்த கோழைகளாகப் போய்விட்டார்கள். அயல் மன்னனின் ஆதிபத்தியத்தை ஒப்புக் கொண்டு வாழ்கிறார்கள். மாரப்பனைப் போல் பல்லவச் சக்கரவர்த்தியின் கட்டளைகளை அடிபணிந்து நிறைவேற்றவும் காத்திருக்கிறார்கள்.

தன்னுடைய நிலைமையும் அதுதானோ என்ற எண்ணம் பொன்னனுக்குத் தோன்றியபோது அவனுடைய உடம்பு வெட்கத்தினால் குறுகியது. சிவனடியாரின் வேஷத்தையும் அவருடைய பேச்சையும் முழுவதும் நம்பலாமா? அவர் கூறியதெல்லாம் உண்மை என்பது என்ன நிச்சயம்? ஒருவேளை தானே ஏமாந்து போயிருக்கலாமல்லவா…. விக்கிரம மகாராஜாவிடம் உண்மையான அன்பு கொண்டு அவரைக் காப்பாற்றக் கவலை கொண்டிருப்பவர் குந்தவி தேவி என்பதில் சந்தேகமில்லை. யமன் வாயிலிருந்தே அவரை மீட்டு வரவில்லையா? – இவ்விதம் பலவாறாக யோசித்துக் கடைசியில் பொன்னன் குந்தவிதேவியின் விருப்பத்தின்படிக் காரியம் செய்வதென்று உறுதி செய்து கொண்டான்.

படகு அக்கரையை அடைந்ததும் பொன்னன் தன் குடிசையை அடைந்து கதவு சாத்தித் தாளிட்டிருப்பதைப் பார்த்து அதிசயத்துக் கதவைத் தட்டினான். “யார் அது?” என்று வள்ளியின் அதட்டுங் குரல் கேட்டது. பொன்னனின் குரலைத் தெரிந்து கொண்ட பிறகுதான் அவள் கதவைத் திறந்தாள். ‘கதவை அடைப்பானேன்?’ என்று கேட்டபோது அவள் கூறிய விவரம் பொன்னனுக்கு வியப்பையும் பயங்கரத்தையும் உண்டாக்கிற்று.

பொன்னன் வருவதற்குச் சற்று முன்னால், இருட்டுகிற சமயத்தில் ஏதோ பேச்சுக்குரல் கேட்டு வள்ளி குடிசைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டாள். பேச்சுக் குரல் குடிசையின் பக்கம் நெருங்கி வந்தது. ஒரு பயங்கரமான பேய்க்குரல், “நீ இங்கேயே இருந்து பூபதியை அழைத்துக் கொண்டு வா! நான் கோயிலுக்குப் போகிறேன்” என்றது. இன்னொரு குரல், “மகாப் பிரபோ! இந்தக் குடிசையில் தங்கியிருக்கலாமே!” என்றது. “நீ இருந்து அழைத்து வா!” என்று முதலில் பேசிய பயங்கரக் குரல் கூறிற்று. சற்றுப் பொறுத்து வள்ளி மெதுவாகத் திறந்து பார்த்த போது தூரத்தில் இருவர் போவது மங்கிய வெளிச்சத்தில் தெரிந்தது. அவர்களில் ஒருவன் நெட்டையாக வளர்ந்தவன்; அவனுக்கு ஒரு கை இல்லை என்பதைக் கண்டதும் நெஞ்சுத் துணிவுள்ள வள்ளிகூடப் பயந்து நடுங்கிவிட்டாள். காவேரி சங்கமத்தில் சூரிய கிரகணத்தின்போது அருள்மொழி ராணியைத் தூக்கிச் சென்ற உருவம் இதுதான் என்பது அவளுக்கு நினைவு வந்ததினால் திகில் அதிகமாயிற்று. அவனுக்குப் பக்கத்திலே போனவன் ஒரு சித்திரக்குள்ளனாகத் தோன்றினான். இந்தக் குள்ளனுக்குப் பக்கத்தில் அந்த நெட்டை உருவம் இன்னும் நெடியதாய்க் காணப்பட்டது.

நெடிய ஒற்றைக்கை மனிதன் சாலையோடு கிழக்கே போய்விட்டான். குள்ளன் சாலை ஓரத்தில் ஒரு மரத்தில் உட்கார்ந்து கொண்டான். வள்ளி மறுபடியும் கதவைச் சாத்திக் கொண்டாள்.

இதையெல்லாம் சொல்லிவிட்டு வள்ளி சுற்றுமுற்றும் பார்த்தாள். பொன்னனுடைய கையைச் சட்டென்று பிடித்துக் கொண்டு, “அதோ பார்” என்றாள். சாலை ஓரத்து மரத்தடியில் அந்தக் குள்ள உருவம் காணப்பட்டது. அவன் குடிசைப் பக்கம் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தோன்றியது.

பொன்னன் சற்று யோசித்துவிட்டு, “வள்ளி! வா! இன்று ராத்திரி உனக்கு வேலை இருக்கிறது” என்றான்.

“எங்கே வரச் சொல்லுகிறாய்! உறையூருக்கா?” என்று வள்ளி கேட்டாள்.

“இல்லை; வஸந்தத் தீவுக்குத்தான். குந்தவி தேவி உன்னை அழைத்துவரச் சொன்னார்.”

“அப்படியா? இளவரசர் – மகாராஜா – சௌக்கியமா? அவர் யாரென்று தேவிக்குத் தெரியுமா?” என்று வள்ளி ஆவலுடன் கேட்டாள்.

“ரொம்ப விஷயம் இருக்கிறது. எல்லாம் படகில் சொல்கிறேன் வா!” என்றான் பொன்னன்.

இரண்டு பேரும் நதிக்கரைக்குச் சென்றார்கள். பொன்னன் வேண்டுமென்றே அதிகமாகச் சத்தப்படுத்திப் படகை அவிழ்த்து விட்டதோடு, சலசலவென்று சப்திக்கும்படியாகக் கோலைப் போட்டு படகைத் தள்ளினான். படகு போவதை அந்தக் குள்ள உருவம் கவனிக்கிறது என்பதை அவன் கவனித்துக் கொண்டான்.

நடுநிசிக்கு ஒரு நாழிகைப் பொழுது இருக்கும் சமயத்தில் பொன்னன் மறுபடியும் படகைத் தள்ளிக்கொண்டு காவேரியின் தென்கரைக்கு வந்தான். இப்போது அவன் தோணித் துறைக்குப் படகைக் கொண்டு வராமல் கொஞ்சம் கிழக்கே கொண்டு போய்ச் சத்தம் செய்யாமல் நிறுத்திவிட்டுக் கரையேறினான். சாலையோரத்தில் தான் முன் பார்த்த இடத்திலேயே குள்ளன் உட்கார்ந்திருப்பதைக் கவனித்தான். குடிசைச் சுவரின் பக்கத்தில் தானும் உட்கார்ந்து உறையூர்ச் சாலையைக் கவனிக்கலானான். ஏதோ முக்கியமான சம்பவம் நடக்கப் போகிறதை எதிர்பார்த்து அவனுடைய உள்ளம் பெரிதும் பரபரப்பை அடைந்திருந்தது.

‘டக் டக்’ ‘டக்டக்’ என்ற குதிரைக் குளம்பின் சத்தத்தைக் கேட்டுப் பொன்னன் விழிப்புடன் நிமிர்ந்து உட்கார்ந்தான். ஆம், உறையூர்ப் பக்கத்திலிருந்துதான் அந்தச் சத்தம் வந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் குதிரை அருகில் வந்துவிட்டது. அதன்மேல் அமர்ந்திருப்பது சாக்ஷாத் மாரப்ப பூபதிதான் என்று நட்சத்திர வெளிச்சத்தில் பொன்னன் தெரிந்து கொண்டான். நடுச் சாலையில் நின்ற குள்ளனருகில் வந்து குதிரையும் நின்றது.

Source

Previous articleRead Parthiban Kanavu Part 3 Ch 29
Next articleRead Parthiban Kanavu Part 3 Ch 31

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here