Home Kalki Read Parthiban Kanavu Part 3 Ch 33

Read Parthiban Kanavu Part 3 Ch 33

66
0
Read Parthiban Kanavu Part 3 Ch 33 Free, Parthiban Kanavu is a historical novel. Download Parthiban Kanavu Free, Parthiban Kanavu pdf Parthiban Kanavu audiobook
Parthiban Kanavu Part 3 Ch 33 பார்த்திபன் கனவு மூன்றாம் பாகம், அத்தியாயம் 33: அமாவாசை முன்னிரவு

Read Parthiban Kanavu Part 3 Ch 33

பார்த்திபன் கனவு

மூன்றாம் பாகம், அத்தியாயம் 33: அமாவாசை முன்னிரவு

Read Parthiban Kanavu Part 3 Ch 33

அன்றிரவு ஒரு ஜாமம் ஆனதும் சிறைச்சாலைக் கதவு திறந்தது. மாரப்பனும் ஆயுதந் தரித்த வீரர் சிலரும் வந்தார்கள். விக்கிரமனுடைய கைகளைச் சங்கிலியால் பிணைத்து வெளியே அழைத்துச் சென்றார்கள். வாசலில் கட்டை வண்டி ஒன்று ஆயத்தமாய் நின்றது. அதில் விக்கிரமன் ஏறிக்கொண்டான். அவனுக்கு முன்னும் பின்னும் வண்டியில் சில வீரர்கள் ஏறிக் கொண்டார்கள். அவ்விதமே வண்டிக்கு முன்னாலும் பின்னாலும் சிலர் நின்றார்கள்.

சிறைவாசலில் மாரப்பன் அந்த வீரர்களின் தலைவனாகத் தோன்றியவனைக் கூப்பிட்டு அவன் காதோடு ஏதோ இரகசியமாகச் சொன்னான். பிறகு உரத்த குரலில், “கிளம்பலாம்!” என்றான்.

உடனே வண்டிக்காரன் வண்டியை ஓட்ட, முன்னாலும் பின்னாலும் நின்ற வீரர்களும் போகத் தொடங்கினார்கள்.

உறையூர் வீதிகளின் வழியாக வண்டி போய்க் கொண்டிருந்தது. முன்னெல்லாம்போல் இப்போது இரவில் விளக்குகள் எரியாமல் நகரம் இருளடைந்து கிடப்பதைப் பார்த்ததும், விக்கிரமனுக்கு என்னமோ செய்தது! ஆகா! சோழ நாட்டுத் தலைநகரமான உறையூர்தானா இது?

“ஏனுங்க சாமிங்களே! இந்தப் பிள்ளையாண்டான் யாரு? இவனை எங்கே அழைத்துப் போறீங்க!” என்ற பேச்சைக் கேட்ட விக்கிரமன் திடுக்கிட்டான். பேசியவன் வண்டிக்காரன்தான் ஆனால், அந்தக் குரல் பொன்னன் குரலாக அல்லவா? இருக்கிறது? அப்படியும் இருக்க முடியுமா?

வீரர்களில் ஒருவன், “உனக்கு ஏன் அப்பா இந்த வம்பு? பேசாமல் வண்டியை ஓட்டு!” என்றான். அதற்கு வண்டிக்காரன் “எனக்கு ஒன்றுமில்லை, அப்பா! ஆனால் ஊரெல்லாம் பேசிக் கிட்டிருக்காங்க, யாரோ செண்பகத் தீவிலிருந்து வந்த ஒற்றனாம்! இரத்தின வியாபாரி மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு வந்தானாம். சக்கரவர்த்தி மகள் குந்தவி தேவியையே ஏமாற்றி விட்டானாம். அப்பேர்பட்டவனை நம்ம சேனாதிபதி கண்டுபிடித்துவிட்டாராம். அப்படியெல்லாம் ஊரிலே பேச்சாயிருக்கே. அவன் தானா இவன் என்று கேட்டேன்” என்றாள்.

“ஆமாம். அவன்தான் என்று வைத்துக் கொள்ளேன்” என்றான் ஒரு வீரன்.

“எங்கே அழைத்துக் கொண்டு போறீங்களோ?” என்று வண்டிக்காரன் கேட்க, “எங்கே அழைத்துக் கொண்டு போவாங்க? காஞ்சிமா நகருக்குத்தான்” என்று மறுமொழி வந்தது.

“அடே அப்பா! அவ்வளவு தூரமா போக வேண்டும்? நீங்கள் ஏழெட்டுப் பேர் காவலுக்குப் போறீர்களே, போதுமா? வழியிலே இவனுக்கு யாரளுறுவது ஒத்தாசை செய்து தப்பிச்சுவிட்டு விட்டாங்கன்னா என்ன செய்வீங்க?” என்றான் வண்டிக்காரன்.

பேசுகிறவன் உண்மையில் பொன்னன்தானோ? தனக்குத்தான் சமிக்ஞைச் செய்தி தெரிவிக்கிறானோ? வழியில் வந்து ஒத்தாசை செய்வதாகக் கூறுகிறானோ? இவ்விதம் விக்கிரமன் வியப்புடன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கும்போது, சற்றுப்பின்னால் வந்த வீரர் தலைவன், “யார் அங்கே? என்ன பேச்சு!” என்று அதட்டவே மௌனம் குடிகொண்டது. பிறகு வண்டிக்காரனாவது வீரர்களாவது பேசவில்லை.

காவேரிக் கரைக்கு வந்ததும் வண்டி நின்றது. விக்கிரமனும் வண்டியிலிருந்த வீரர்களும் இறங்கினார்கள். ஆற்றங்கரையோரமாக ஒரு படகு ஆயத்தமாயிருந்தது. அங்கே ஒருவன் கையில் தீவர்த்தியுடன் நின்று கொண்டிருந்தான்.

எல்லாரும் கீழிறங்கியதும் வண்டிக்காரன் வண்டியைத் திருப்பிக் கொண்டே, “போயிட்டு வரீங்களா? ஒற்றனை ஜாக்கிரதையாகக் கொண்டுபோய்ச் சக்கரவர்த்தியிடம் சேருங்கள், ஐயா! வழியில் ஒரு காட்டாறு இருக்கிறது. பத்திரம்!” என்றான். அப்போது தீவர்த்தி வெளிச்சம் அவன் முகத்தின்மேல் அடித்தது. விக்கிரமனுக்கு அந்த முகத்தைப் பார்த்ததும் பெரும் ஏமாற்றமுண்டாயிற்று. ஏனெனில், அவன் பொன்னன் இல்லை. ஆனால் அவனுடைய கண்களில் அந்த ஒளி – எங்கேயோ பார்த்த முகமாயிருக்கிறதே? சட்டென்று உண்மை புலனாயிற்று. பொன்னன்தான் அவன் முகத்தில் பொய் மீசை வைத்துக் கட்டிக் கொண்டிருக்கிறான். அவன்கூறிய வார்த்தைகளின் பொருள் என்ன? வழியில் காட்டாற்றின் சமீபத்தில் தன்னை விடுவிக்க வருவதாகத்தான் சொல்லியிருக்க வேண்டும். இந்த எண்ணத்தினால் விக்கிரமனுக்கு மிகுந்த உற்சாகம் உண்டாயிற்று. படகில் ஏறி ஆற்றைக் கடந்தபின் அவர்கள் நடுஜாமம் வரையில் கால்நடையாகப் பிரயாணம் செய்தார்கள். பிறகு சாலையோரம் இருந்த ஒரு மண்டபத்தில் படுத்துத் தூங்கினார்கள். மீண்டும் அதிகாலையில் எழுந்து மாட்டுவண்டி பிடித்துக் கொண்டு பிரயாணமானார்கள். அன்று பொழுது சாயும் சமயத்தில் பராந்தகபுரத்தைத் தாண்டினார்கள்.

இனிச் சிறிது தூரத்தில் காட்டாறு வந்துவிடும் என்று விக்கிரமன் ஒருவாறு தெரிந்து கொண்டிருந்தான். அந்த வண்டிக்காரன் பொன்னனாயிருக்கும் பட்சத்தில், இங்கே தான் தனக்கு உதவிக்கு வரவேண்டும் “யார் வருவார்கள்; எப்போது வருவார்கள்?” என்றெல்லாம் எண்ணி விக்கிரமனுடைய உள்ளம் பரபரப்பை அடைந்தது.

அஸ்தமித்து இரண்டு நாழிகை இருக்கும். அந்த அமாவாசை இருட்டில் சாலையில் ஜனநடமாட்டம் அதிகமாயிருந்ததைக் கண்டு விக்கிரமன் வியந்தான். ஆங்காங்கு சிறுசிறு கும்பலாக ஜனங்கள் போய்க் கொண்டிருந்தார்கள். கோயிலுக்குப் போகிறவர்களைப் போல் அவர்கள் காணப்பட்டார்கள். வெறிபிடித்தவர்களைப்போல் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் போனார்கள். சிலர் மஞ்சள் வஸ்திரம் அணிந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு கும்பலிலும் ஒருவன் தீவர்த்தி பிடித்துக் கொண்டிருந்தான். இன்னும் இந்தக் கும்பல்களில் சிலர் நீண்ட கத்திகளை எடுத்துச் சென்றது விக்கிரமனுக்கு ஒருவாறு பயங்கரத்தையளித்தது. இவர்களெல்லாம் எங்கே போகிறார்கள்? கையில் கத்திகள் என்னத்திற்குக் கொண்டு போகிறார்கள்?

இந்தக் காட்சிகளைப் பார்த்த மாரப்பனுடைய வீரர்கள் தங்களுக்குள் இரகசியமாகப் பேசிக் கொண்டதில் சில வார்த்தைகள் விக்கிரமனுடைய காதிலும் விழுந்தன. “பத்திரகாளி”, “நரபலி”, “கபால பைரவர்” என்னும் சொற்கள் அவனுக்குத் திகைப்பையும் பயத்தையும் உண்டாக்கின. மகேந்திர மண்டபத்தின் வாசலில் மகாக் கபால பைரவரும், மாரப்பனும் பேசிக் கொண்டது அவனுக்கு நினைவு வந்தது. ஓஹோ! இன்றைக்கு அமாவாசை இரவல்லவா? மாரப்பன் ஒருவேளை தன்னைக் காஞ்சிக்கு அனுப்புவதாகச் சொல்லி உண்மையில் கபால பைரவனின் பலிக்குத் தான் அனுப்பியிருப்பானோ! இவ்விதம் அவன் எண்ணிக் கொண்டிருக்கும்போதே “ஓம் காளி ஜய காளி!” என்ற பல குரல்களின் ஏகோபித்த கோஷம் அவன் காதில் விழுந்து, மயிர்க்கூச்சு உண்டாகிற்று. அவ்விதம் கோஷித்தவர்கள் அடுத்த நிமிஷம் விக்கிரமன் இருந்த வண்டியைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் கையில் நீண்ட கூரிய கத்திகள் நட்சத்திர வெளிச்சத்தில் மின்னியது தெரிந்தது. “ஓம் காளி, ஜய காளி” என்ற கோஷங்களுக்கு மத்தியில் “எங்கே பலி?” என்று ஒரு பயங்கரமான குரல் கேட்டது.

இதற்குள் வண்டிக்கு முன்னாலும் பின்னாலும் வந்த உறையூர் வீரர்கள் ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டார்கள். வண்டியில் இருந்தவர்களும் தொப்புத் தொப்பென்று குதித்து ஓட்டம் பிடித்தார்கள். வண்டிக்காரன் அந்தர்த்தானமாகிவிட்டான். விக்கிரமன் கைகள் சங்கிலிகளால் வண்டியின் சட்டத்துடன் பிணைக்கப்பட்டிருந்தமையால் அவனால் மட்டும் வண்டியிலிருந்து குதிக்க முடியவில்லை. அப்போது வண்டியின் பின்புறத்தில் ஒரு குரல், “மகாராஜா! பதற வேண்டாம்! நான்தான்” என்றது. உடனே பொன்னன் வண்டியில் ஏறிச் சங்கிலிகளை அவிழ்த்தெறிந்தான். விக்கிரமன் வண்டியிலிருந்து குதித்ததும், இரண்டு உயர்ஜாதிக் குதிரைகள் சித்தமாய் நிற்பதைக் கண்டான். “மகாராஜா ! ஏறுங்கள் குதிரை மேல்; ஒரு கணமும் தாமதிப்பதற்கில்லை!” என்றான் பொன்னன்.

Source

Previous articleRead Parthiban Kanavu Part 3 Ch 32
Next articleRead Parthiban Kanavu Part 3 Ch 34

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here