Home Kalki Read Parthiban Kanavu Part 3 Ch 35

Read Parthiban Kanavu Part 3 Ch 35

83
0
Read Parthiban Kanavu Part 3 Ch 35 Free, Parthiban Kanavu is a historical novel. Download Parthiban Kanavu Free, Parthiban Kanavu pdf Parthiban Kanavu audiobook
Parthiban Kanavu Part 3 Ch 35 பார்த்திபன் கனவு மூன்றாம் பாகம், அத்தியாயம் 35: தாயும் மகனும்

Read Parthiban Kanavu Part 3 Ch 35

பார்த்திபன் கனவு

மூன்றாம் பாகம், அத்தியாயம் 35: தாயும் மகனும்

Read Parthiban Kanavu Part 3 Ch 35

“மகாராணி அகப்பட்டுவிட்டார்” என்று வார்த்தைகளைக் கேட்டதும் விக்கிரமனுக்கும் பொன்னனுக்கும் உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கிற்று. இருவரும் குதிரை மேலிருந்து கீழே குதித்தார்கள்.

அப்போது உள்ளேயிருந்து, “குமாரப்பா! யார் அங்கே? பொன்னன் குரல் மாதிரி இருக்கிறதே!” என்று ஒரு பேச்சுக்குரல் கேட்டது. அது மகாராணி அருள்மொழி தேவியின் குரல்.

“அம்மா!” என்று அலறிக்கொண்டு விக்கிரமன் மகேந்திர மண்டபத்துக்குள் நுழைந்தான். பொன்னனும் பின்னோடு சென்றான்.

அப்போது அந்த இருளடைந்த மண்டபத்துக்குள்ளேயிருந்து ஒரு பெண் உருவம் வெளியே வந்தது. அது அருள்மொழி ராணியின் உருவந்தான். ஆனால், எவ்வளவு மாறுதல்? விக்கிரமன் கடைசியாக அவரைப் பார்த்தபோது இன்னும் யெளவனத்தின் சோபை அவரை விட்டுப் போகவில்லை. இப்போதோ முதுமைப் பருவம் அவரை வந்தடைந்துவிட்டது. மூன்று வருஷத்துக்குள் முப்பது வயது அதிகமானவராகக் காணப்பட்டார்.

விக்கிரமன் ஒரே தாவலில் அவரை அடைந்து சாஷ்டாங்கமாய்க் கீழே விழுந்து அவருடைய பாதங்களைப் பற்றிக் கொண்டான். அருள்மொழி ராணி கீழே உட்கார்ந்து விக்கிரமனுடைய தலையைத் தூக்கித் தன் மடிமீது வைத்துக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

விக்கிரமனைப் பின்தொடர்ந்து மண்டபத்துக்குள் நுழைந்த பொன்னன் மேற்படி காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். தற்செயலாக அவனுடைய பார்வை மண்டபத்தின் ஒரு பக்கத்தில் கட்டுண்டு கிடந்த உருவத்தின் மேல் விழுந்தது; மங்கலான தீவர்த்தியின் வெளிச்சத்தில் அது குள்ளனுடைய உருவம் என்பதைப் பொன்னன் கண்டான்.

பொன்னனுடைய பார்வை குள்ளன்மீது விழுந்ததும் குள்ளன், “ஹீஹீஹீ” என்று சிரித்தான்.

அந்தச் சிரிப்பைக் கேட்டு விக்கிரமனும் அவனைப் பார்த்தான். திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்து,

“பொன்னா!” என்றான்.

“ஆம், மகாராஜா! மாமல்லபுரத்திலிருந்து தங்களுக்கு வழிகாட்டி வந்த சித்திரக்குள்ளன்தான் இவன்!” என்றான்.

குள்ளன் மறுபடியும் “ஹீஹீஹீ” என்று சிரித்தான்.

அருள்மொழி ராணி எல்லோரையும் மாறி மாறிப் பார்த்தாள். யாரை என்ன கேட்பது என்று தெரியாமல் திகைப்பவளாகக் காணப்பட்டாள். கடைசியில் “பொன்னனைப் பார்த்து, பொன்னா எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. கண்ணைக் கட்டிக் காட்டிலே விட்டது போலிருக்கிறது. அந்த மலைக்குகையில் எத்தனை நாள் இருந்தேன் என்பதே தெரியாது. கடைசியில் அருவியில் விழுந்து உயிரை விடலாம் என்று எத்தனித்தபோது சிவனடியார் வந்து தடுத்துக் காப்பாற்றினார். ‘உன் மகன் திரும்பி வந்திருக்கிறான், அவனை எப்படியும் பார்க்கலாம்’ என்று தைரியம் கூறினார். பொன்னா, காட்டாற்று வெள்ளத்திலிருந்து விக்கிரமனை நீ காப்பாற்றினாயாமே?” என்று கேட்டாள்.

அப்போது விக்கிரமன், “வெள்ளத்திலிருந்து காப்பாற்றியதுதானா? சக்கரவர்த்தியின் சிரசாக்ஞையிலிருந்து – காளிக்குப் பலியாவதிலிருந்து – இன்னும் எவ்வளவோ விதத்தில் பொன்னன் என்னைக் காப்பாற்றினான்” என்றான்.

“காளிக்குப் பலியா?” என்று சொல்லிக் கொண்டு அருள்மொழி நடுநடுங்கினாள்.

குள்ளன் மறுபடியும் “ஹீஹீஹீ” என்று பயங்கரமாய்ச் சிரித்தான்.

“பலி! பலி! இன்று ராத்திரி ஒரு பெரிய பலி – விழப்போகிறது! காளியின் தாகம் அடங்கப் போகிறது!” என்றான்.

எல்லோரும் அவனையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“இன்று அர்த்த ராத்திரியில் சிவனடியார் பலியாகப் போகிறார்! மகாபத்திர காளியின் இராஜ்யம் ஆரம்பமாகப் போகிறது! அப்புறம் ஹா ஹா ஹா!.. அப்புறம் … மண்டை ஓட்டுக்குப் பஞ்சமே இராது!” என்றான் குள்ளன்.

விக்கிரமன் அப்போது துள்ளி எழுந்து, “பொன்னா! இவன் என்ன உளறுகிறான்? சிவனடியாரைப் பற்றி….” என்றான்.

“ஹிஹிஹி! உளறவில்லை, உண்மையைத்தான் சொல்கிறேன். அந்தக் கபடச் சாமியாரை இத்தனை நேரம் காலையும் கையையும் கட்டிப் பலிபீடத்தில் போட்டிருப்பார்கள். நடுநிசி ஆச்சோ, இல்லையோ, கத்தி கழுத்திலே விழும்” என்றான்.

அப்போது அருள்மொழித் தேவி விக்கிரமனைப் பார்த்து, “குழந்தாய்! இவன் முன்னேயிருந்து இப்படித்தான் சொல்லி என்னை வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிறான். ஐந்தாறு நாளைக்கு முன்னால் நான் குகையிலிருந்து தப்பி அருவியில் விழப்போன போது சிவனடியார் தோன்றி, சீக்கிரத்தில் என்னை மீட்டுக் கொண்டுபோக ஆட்கள் வருவார்கள் என்று தெரிவித்தார். அந்தப்படியே இவர்கள் வந்து என்னை மீட்டுக் கொண்டு வந்தார்கள். வழியில் மறைந்து நின்ற இந்தக் குள்ளனையும், பிடித்துக் கொண்டு வந்தார்கள். இங்கு வந்து சேர்ந்தது முதல் இவன் இன்று ராத்திரி சிவனடியாரைக் கபாலிகர்கள் பலிகொடுக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறான். ஐயோ! எப்பேர்ப்பட்ட மகான்! நமக்கு எத்தனை ஒத்தாசை செய்திருக்கிறார்….! அவருக்கா இந்தப் பயங்கரமான கதி!” என்று அலறினாள்.

விக்கிரமன் பொன்னனைப் பார்த்து, “பொன்னா! நீ என்ன சொல்கிறாய்? இந்தக் கொடும் பாதகத்தைத் தடுக்காவிட்டால் நாம் இருந்து என்ன பிரயோஜனம்?” என்றான்.

“அதெப்படி முடியும், மகாராஜா! உங்கள் நிலைமையை மறந்து பேசுகிறீர்களே! நாளைப் பொழுது விடிவதற்குள் நாம் மாமல்லபுரம் போய்ச் சேராமற்போனால்…” சேராமற்போனால் என்ன? கப்பல் போய்விடும், அவ்வளவுதானே?”

அப்போது பொன்னன் அருள்மொழி ராணியைப் பார்த்து, “அம்மா, இவரைப் பெரும் அபாயம் சூழ்ந்திருக்கிறது. தேசப் பிரஷ்டமானவர் திரும்பி வருவதற்குத் தண்டனை என்னவென்று தங்களுக்குத் தெரியாதா? இவர் இங்கே வந்திருப்பது மாரப்ப பூபதிக்குத் தெரிந்து காஞ்சிச் சக்கரவர்த்திக்கும் தெரியப்படுத்தி விட்டார். நாளைக் காலைக்குள் இவர் மாமல்லபுரம் போய்க் கப்பலில் ஏறியாக வேண்டும். இல்லாவிட்டால் தப்புவது அரிது. இப்போது சிவனடியாரைக் காப்பாற்றுவதற்காகப் போனால், பிறகு இவருடைய உயிருக்கே ஆபத்துதான். நீங்களே சொல்லுங்கள் இவர் என்ன செய்யவேணுமென்று?” என்றான்.

அருள்மொழி ராணி பெருந் திகைப்புக்குள்ளானாள்.

விக்கிரமன் அன்னையைப் பார்த்து, “அம்மா! பார்த்திப மகாராஜாவின் வீரபத்தினி நீ! இந்த நிலைமையில் நான் என்ன செய்யவேண்டும், சொல்! நமக்குப் பரோபகாரம் செய்திருக்கும் மகானுக்கு ஆபத்து வந்திருக்கும்போது, என்னுடைய உயிருக்குப் பயந்து ஓடுவதா? என் தந்தை உயிரோடிருந்தால் இப்படி நான் செய்வதை விரும்புவாரா?” என்றான்.

“சுவரை வைத்துக் கொண்டு தான் சித்திரம் எழுத வேண்டும். இவர் பிழைத்திராவிட்டால் பார்த்திப மகாராஜாவின் கனவுகளை நிறைவேற்றுவது எப்படி?” என்றான் பொன்னன்.

அருள்மொழி ராணி இரண்டு பேரையும் மாறி மாறிப் பார்த்தாள். கடைசியில், பொன்னனைப் பார்த்து,

“பொன்னா! என்னைக் கல்நெஞ்சமுடையவள், பிள்ளையிடம் பாசமில்லாதவள் என்று ஒருவேளை நினைப்பாய். ஆனாலும் என் மனத்திலுள்ளதைச் சொல்கிறேன். நமக்கு எவ்வளவோ உபகாரம் செய்திருக்கும் ஒருவருக்கு ஆபத்து வந்திருக்கும்போது என் பிள்ளை உயிருக்குப் பயந்து ஓடினான் என்ற பேச்சைக் கேட்க நான் விரும்பவில்லை!” என்றாள்.

உடனே விக்கிரமன், தாயாரின் பாதங்களில் நமஸ்கரித்து, எழுந்து, “அம்மா! நீதான் வீரத்தாய்! பார்த்திப மகாராஜாவுக்குரிய வீர பத்தினி!” எனக் குதூகலத்துடன் உரைத்தான்.

பிறகு பொன்னனைப் பார்த்து, “கிளம்பு, பொன்னா! இன்னும் என்ன யோசனை?” என்றான்.

“எங்கே கிளம்பிப் போவது? பலி எங்கே நடக்கிறதென்று யாருக்குத் தெரியும்?” என்றான் பொன்னன்.

“ஹீஹீஹீ! நான் வழி காட்டுகிறேன்; என்னைக் கட்டவிழ்த்து விடுங்கள்” என்று சித்திரக் குள்ளன் குரல் கேட்டது.

குள்ளனுடைய கட்டுகள் அவிழ்க்கப்பட்டன. அவன் கையில் ஒரு தீவர்த்தியைக் கொடுத்தார்கள். விக்கிரமனும் பொன்னனும் குதிரைகள் மேல் ஏறிக் கொண்டார்கள். குள்ளன் கையில் தீவர்த்தியுடன் மேற்கு நோக்கிக் காட்டு வழியில் விரைந்து செல்ல, விக்கிரமனும் பொன்னனும் அவனைத் தொடர்ந்து பின்னால் சென்றார்கள்.

Source

Previous articleRead Parthiban Kanavu Part 3 Ch 34
Next articleRead Parthiban Kanavu Part 3 Ch 36

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here