Home Kalki Read Parthiban Kanavu Part 3 Ch 36

Read Parthiban Kanavu Part 3 Ch 36

62
0
Read Parthiban Kanavu Part 3 Ch 36 Free, Parthiban Kanavu is a historical novel. Download Parthiban Kanavu Free, Parthiban Kanavu pdf Parthiban Kanavu audiobook
Parthiban Kanavu Part 3 Ch 36 பார்த்திபன் கனவு மூன்றாம் பாகம், அத்தியாயம் 36: பலி பீடம்

Read Parthiban Kanavu Part 3 Ch 36

பார்த்திபன் கனவு

மூன்றாம் பாகம், அத்தியாயம் 36: பலி பீடம்

Read Parthiban Kanavu Part 3 Ch 36

காட்டாற்றங்கரையோடு மேற்கு நோக்கி இரண்டு நாழிகை வழி தூரம் போனதும் குள்ளன் தென்புறமாகத் திரும்பி அடர்ந்த காட்டுக்குள் புகுந்து சென்றான். காட்டைத் தாண்டியதும் அப்பால் ஒரு பெரிய மேடு இருந்தது. அந்த மேட்டின் மேல் குள்ளன் வெகு லாவகமாக ஏறினான். குதிரைகள் ஏறுவதற்குக் கொஞ்சம் சிரமப்பட்டன. மேட்டின் மேல் ஏறியதும், அது ஒரு ஏரிக்கரை என்று தெரிந்தது. “அதோ!” என்று குள்ளன் சுட்டிக் காட்டிய இடத்தை விக்கிரமனும் பொன்னனும் நோக்கினார்கள். மொட்டை மொட்டையான மலைக்குன்றுகளும், அவற்றின் அடிவாரத்தில் அடர்த்தியாக வளர்ந்திருந்த குட்டையான மரங்களும் நூற்றுக்கணக்கான தீவர்த்திகளின் வெளிச்சத்தில் அரைகுறையாகத் தெரிந்தன. அந்த மலையடிவாரக் காட்டில் நடமாடிக் கொண்டிருந்த உருவங்கள் மனிதர்களாய்த்தானிருக்க வேண்டுமென்றாலும் தூரத்திலிருந்து பார்க்கும்போது பேய் பிசாசுகள் தான் நடமாடுகின்றனவோ என்று எண்ணும்படியிருந்தது. பயங்கரத்தை அதிகமாக்குவதற்கு அந்த இடத்திலிருந்து தாரை தப்பட்டைகளின் முழக்கம், உடுக்கு அடிக்கும் சத்தம் – இவையெல்லாம் கலந்து வந்து கொண்டிருந்தன.

விக்கிரமன், பொன்னன் இருவருக்குமே உள்ளுக்குள் திகிலாய்த்தானிருந்தது. ஆனாலும் அவர்கள் திகிலை வெளிக்குக் காட்டாமல் குள்ளனைப் பின்பற்றி ஏரிக்கரையோடு சென்றார்கள். குள்ளனுடைய நடை வேகம் இப்போது இன்னும் அதிகமாயிற்று. அவன் ஏரிக் கரையோடு சற்றுத் தூரம் போய் ஜலம் வறண்டிருந்த இடத்தில் இறங்கி, குறுக்கே ஏரியைக் கடந்து செல்லலானான். அவனைப் பின் தொடர்ந்து விக்கிரமனும் பொன்னனும் குதிரைகளைச் செலுத்தினார்கள். குதிரைகளும் பீதி அடைந்திருந்தன என்பது அவற்றின் உடல் நடுக்கத்திலிருந்து தெரிய வந்தது.

இன்னொரு கால் நாழிகைக்கெல்லாம் அவர்கள் குன்றின் அடிவாரத்துக் காட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே குதிரைகள் நடுக்கம் அதிகமானபடியால் விக்கிரமனும் பொன்னனும் குதிரைகள் மீதிருந்து இறங்கி அவற்றை மரத்தில் கட்டினார்கள். பிறகு காட்டுக்குள் பிரவேசித்தார்கள்.

தீவர்த்திகளின் வெளிச்சத்தில் ஆங்காங்கே ஜனங்கள் ஆவேசம் வந்ததுபோல் ஆடுவதையும் சிலர் மஞ்சள் வஸ்திரம் தரித்துக் கண் மூடித் தியானத்தில் இருப்பதையும், சிலர் அடுப்பு மூட்டிப் பொங்கல் வைப்பதையும், இன்னும் சிலர் கத்திகளைப் பாறைகளில் தீட்டிக் கொண்டிருப்பதையும், சிலர் உடுக்கு அடிப்பதையும் பார்த்துக் கொண்டு போனார்கள். திடீரென்று மரங்கள் இல்லாத வெட்டவெளி தென்பட்டது. அந்த வெட்டவெளியில் வலது புறத்தில் ஒரு மொட்டைக் குன்று நின்றது. அதில் பயங்கரமான பெரிய காளியின் உருவம் செதுக்கப்பட்டு, அதன்மேல் பளபளப்பான வர்ணங்கள் பூசப்பட்டிருந்தன. காளியின் கண்கள் உருட்டி விழித்துப் பார்ப்பது போலவே தோற்றமளித்தன. அந்த உருவத்துக்குப் பக்கத்தில் சிலர் கும்பலாக நின்றார்கள். அவர்களுக்கு நடு மத்தியில் எல்லாரையும் விட உயர்ந்த ஆகிருதியுடனும், தலையில் செம்பட்டை மயிருடனும், கழுத்தில் கபால மாலையுடனும், நெற்றியில் செஞ்சந்தனமும் குங்குமமும் அப்பிக் கொண்டு, கபால பைரவர் நின்றார். அவருக்குப் பின்னால் ஒருவன் நின்று உடுக்கை அடித்துக் கொண்டிருந்தான். கபால பைரவருடைய கண்கள் அப்போது மூடியிருந்தன. அவருடைய வாய் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அவருடம்பு லேசாக முன்னும் பின்னும் ஆடிக்கொண்டிருந்தது.

மகாக் கபால பைரவர் நின்ற குன்றின் அடிவாரத்துக்கு எதிரே கொஞ்ச தூரத்தில் ஒரு சிறு பாறை இருந்தது. இயற்கையாகவே அது பலி பீடம்போல் அமைந்திருந்தது. அந்தப் பலி பீடத்தின்மேல் சிவனடியார் கையும் காலும் உடம்பும் கயிறுகளால் கட்டப்பட்டுக் கிடந்தார். அவருடைய கண்கள் நன்றாகத் திறந்திருந்தன. அங்குமிங்கும் அவருடைய கூரிய கண்கள் சுழன்று சுழன்று பார்த்துக் கொண்டிருந்தன.

பலி பீடத்துக்குப் பக்கத்தில் ஒரு ராட்சத உருவம் கையிலே பிரம்மாண்டமான கத்தியுடன் ஆயத்தமாய் நின்றது. மகா கபால பைரவர் கண்ணைத் திறந்து பார்த்து ஆக்ஞை இடவேண்டியதுதான். உடனே சிவனடியாரின் கழுத்தில் கத்தி விழுந்துவிடச் சித்தமாயிருந்தது!

மேலே விவரித்த காட்சியையெல்லாம் விக்கிரமன் ஒரு நொடிப் பொழுதில் பார்த்துக் கொண்டான். பின்னர், ஒரு கணங்கூட அவன் தாமதிக்கவில்லை. கையில் கத்தியை எடுத்து வீசிக் கொண்டு ஒரே பாய்ச்சலில் பலி பீடத்துக்கருகில் சென்றான். அந்த ராட்சத உருவத்தின் கையிலிருந்த கத்தியைத் தன் கத்தியினால் ஓங்கி அடிக்கவும், அது தூரத்தில் போய் விழுந்தது. உடனே, சிவனடியாரின் பக்கத்திலே வந்து நின்று கொண்டான். தன்னைப் பின் தொடர்ந்து வந்திருந்த பொன்னனைப் பார்த்து, “பொன்னா! ஏன் நிற்கிறாய்? கட்டுக்களை உடனே அவிழ்த்து விடு!” என்றான்.

இவ்வளவும் கண்மூடிக் கண் திறக்கும் நேரத்தில் நடந்து விட்டது. சுற்றிலும் நின்றவர்கள் எல்லோரும், “ஹா! ஹா!” என்று கூச்சலிட்டதைக் கேட்டு கபால பைரவர் கண்விழித்துப் பார்த்தார். நிலைமை இன்னதென்று தெரிந்து கொண்டார். நிதானமாக நடந்து பலிபீடத்துக்கு அருகில் வந்து விக்கிரமனை உற்றுப் பார்த்தார்.

“ஹா ஹா ஹா!” என்று அவர் நகைத்த ஒலி குன்றுகளும் பாறைகளும் அடர்ந்த அந்த வனாந்திரப் பிரதேசமெல்லாம் பரவி எதிரொலி செய்தது.

அதைக் கேட்பவர்களுக்கெல்லாம் மயிர்க் கூச்சு உண்டாயிற்று.

இதற்குள் என்னவோ மிகவும் நடக்கிறது என்று அறிந்து நாலாபக்கத்திலிருந்தும் ஜனங்கள் ஓடிவந்து பலி பீடத்தைச் சூழ ஆரம்பித்தார்கள். அதைக் கண்ட மகாக் கபால பைரவர் தமது ஒற்றைக் கையைத் தூக்கி, “ஹும்!” என்று கர்ஜனை செய்தார். அவ்வளவுதான் எல்லோரும் சட்டென்று விலகிச் சென்று சற்று தூரத்திலேயே நின்றார்கள். கீழே விழுந்த கத்தியை எடுத்துக் கொண்டு வந்த ராட்சதனும் அந்த ஹுங்காரத்துக்குக் கட்டுபட்டுத் தூரத்தில் நின்றான். பொன்னனும் நின்ற இடத்திலேயே செயலிழந்து நின்றான்.

மகாக் கபால பைரவர் விக்கிரமனை உற்றுப் பார்த்த வண்ணம் கூறினார் :- “பிள்ளாய்! நீ பார்த்திப சோழனின் மகன் விக்கிரமன் அல்லவா? தக்க சமயத்தில் நீ வந்து சேர்வாய் என்று காளிமாதா அருளியது உண்மையாயிற்று, மாதாவின் மகிமையே மகிமை!”

காந்த சக்தி பொருந்திய அவருடைய சிவந்த கண்களின் பார்வையிலிருந்து விலகிக் கொள்ள முடியாதவனாய் விக்கிரமன் பிரமித்து நின்றான்.

“பிள்ளாய்! உன்னைத் தேடிக் கொண்டு நான் மாமல்லபுரத்துக்கு வந்தேன். அதற்குள் அந்தப் பித்தன் மாரப்பன் தலையிட்டுக் காரியத்தைக் கெடுத்துவிட்டான். ஆனாலும் இன்றிரவு நீ இங்கு எப்படியும் வருவாய் என்று எதிர்பார்த்தேன்!”

மந்திரத்தினால் கட்டுண்ட நாக சர்ப்பத்தின் நிலைமையிலிருந்த விக்கிரமன், விம்முகின்ற குரலில், “நீர் யார்? எதற்காக என்னை எதிர்பார்த்தீர்?” என்றான். “எதற்காகவா? இன்றிரவு இந்தத் தக்ஷிண பாரத தேசத்தில் காளிமாதாவின் சாம்ராஜ்யம் ஸ்தாபிதமாகப் போகிறது. இந்த சாம்ராஜ்யத்திற்கு உனக்கு இளவரசுப் பட்டம் கட்டவேண்டுமென்று மாதாவின் கட்டளை!” என்றார் கபால பைரவர்.

அப்போது எங்கிருந்தோ ‘க்ளுக்’ என்று பரிகாசச் சிரிப்பின் ஒலி எழுந்தது. கபால பைரவரும் விக்கிரமனும் உள்பட அங்கிருந்தவர்கள் அனைவரும் அக்கம்பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். ஆனால் சிரித்தது யார் என்பதைக் கண்டுபிடிக்க யாதொரு வழியும் தென்படவில்லை.

விக்கிரமனை அத்தனை நேரமும் கட்டியிருந்த மந்திர பாசமானது மேற்படி சிரிப்பின் ஒலியினால் அறுபட்டது. அவன் சிவனடியாரை ஒருமுறை பார்த்துவிட்டுத் திரும்பிக் கபால பைரவரை நேருக்கு நேர் நோக்கினான்:

“நீர் சொல்வது ஒன்றும் எனக்கு விளங்கவில்லை. எனக்கு இளவரசுப் பட்டம் கட்டப் போவதாகச் சொல்கிறீர். அது உண்மையானால், முதலில் நான் செய்யப்போகும் காரியத்துக்குக் குறுக்கே நிற்கவேண்டாம். இதோ இந்தப் பலிபீடத்தில் கட்டுண்டு கிடக்கும் பெரியார் எங்கள் குலத்தின் நண்பர். எனக்கும் என் அன்னைக்கும் எவ்வளவோ பரோபகாரம் செய்திருக்கிறார். அவரை விடுதலை செய்வது என் கடமை. என் கையில் கத்தியும் என் உடம்பில் உயிரும் இருக்கும் வரையில் அவரைப் பலியிடுவதற்கு நான் விடமாட்டேன்!” என்று சொல்லி விக்கிரமன் பலிபீடத்தை அணுகி, சிவனடியாரின் கட்டுக்களை வெட்டிவிடயத்தனித்தான்.

“நில்…!” என்று பெரிய கர்ஜனை செய்தார் கபால பைரவர். அஞ்சா நெஞ்சங் கொண்ட விக்கிரமனைக்கூட அந்தக் கர்ஜனை சிறிது கலங்கச் செய்துவிட்டது. அவன் துணுக்குற்று ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றான். சிவனடியாரின் கட்டுக்களை வெட்டுவதற்காக அவன் நீட்டிய கத்தி நீட்டியபடியே இருந்தது.

கபால பைரவர் மறுபடியும் உரத்த குரலில், “பிள்ளாய் விக்கிரமா! இந்தப் போலிச் சிவனடியார் – இந்த வஞ்சக வேஷதாரி – இந்தப் பொய் ஜடாமகுடதாரி யார் என்று அறிந்தால், இவ்விதம் சொல்லமாட்டாய்! இவரைக் காப்பாற்றுவதற்கு இவ்வளவு முனைந்து நிற்கமாட்டாய்!” என்றார்.

அவருடைய குரலில் தொனித்த ஆத்திரமும் அழுத்தமும் விக்கிரமனைத் திகைப்படையச் செய்தன. சிவனடியார் பல்லவ ராஜ்யத்தின் ஒற்றர் தலைவன் என்று தான் முன்னமே சந்தேகித்ததும் அவனுக்கு நினைவு வந்தது.

கபால பைரவர் மீண்டும், “இந்த வேஷதாரியையே கேள், “நீ யார்?’ என்று; தைரியமிருந்தால் சொல்லட்டும்!” என்று அடித் தொண்டையினால் கர்ஜனை செய்தார்.

விக்கிரமன் சிவனடியாரைப் பார்த்தான். அவருடைய முகத்தில் புன்னகை தவழ்வதைக் கண்டான்.

அதே சமயத்தில், “விக்கிரமா! கபால மாலையணிந்த இந்த வஞ்சக வேஷதாரி யார் என்று முதலில் கேள்; தைரியமிருந்தால் சொல்லட்டும்!” என்று இடிமுழக்கம் போன்ற ஒரு குரல் கேட்டது. இவ்வாறு கேட்டுக் கொண்டு, பக்கத்திலிருந்த பாறையின் மறைவிலிருந்து ஓர் உருவம் வெளிப்பட்டது. அங்கிருந்தவர்கள் அத்தனை பேருடைய கண்களும் அந்த உருவத்தின் மேல் விழுந்தன. தீவர்த்தி வெளிச்சம் அந்த முகத்தில் விழுந்தபோது, “ஆ!” என்ற வியப்பொலி ஏககாலத்தில் அநேகருடைய வாயிலிருந்து எழுந்தது.

விபூதி ருத்திராட்சமணிந்து, முகத்தில் ஞான ஒளி வீசித் தோன்றிய அப்பெரியாரைப் பார்த்ததும் விக்கிரமனுக்கு என்றுமில்லாத பயபக்தி உண்டாயிற்று. வந்தவர் வேறு யாருமில்லை; பல்லவ சாம்ராஜ்யத்தின் பழைய சேனாதிபதியும், வாதாபி கொண்ட மகாவீரருமான சிறுத் தொண்டர்தான்.

Source

Previous articleRead Parthiban Kanavu Part 3 Ch 35
Next articleRead Parthiban Kanavu Part 3 Ch 37

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here