Home Kalki Read Parthiban Kanavu Part 3 Ch 37

Read Parthiban Kanavu Part 3 Ch 37

68
0
Read Parthiban Kanavu Part 3 Ch 37 Free, Parthiban Kanavu is a historical novel. Download Parthiban Kanavu Free, Parthiban Kanavu pdf Parthiban Kanavu audiobook
Parthiban Kanavu Part 3 Ch 37 பார்த்திபன் கனவு மூன்றாம் பாகம், அத்தியாயம் 37: நீலகேசி

Read Parthiban Kanavu Part 3 Ch 37

பார்த்திபன் கனவு

மூன்றாம் பாகம், அத்தியாயம் 37: நீலகேசி

Read Parthiban Kanavu Part 3 Ch 37

பாறை மறைவிலிருந்து சிறுத் தொண்டர் வெளிப்பட்ட சில வினாடிகளுக்கெல்லாம் இன்னும் சில அதிசயங்கள் அங்கே நிகழ்ந்தன. பாறைகளின் பின்னாலிருந்தும் மரங்களின் மறைவிலிருந்தும், இன்னும் எங்கிருந்துதான் வந்தார்கள் என்று சொல்லமுடியாதபடியும், இந்திர ஜாலத்தினால் நிகழ்வதுபோல், திடீர் திடீரென்று ஆயுத பாணிகளான போர் வீரர்கள் அங்கே தோன்றிக் கொண்டிருந்தார்கள். இதைவிடப் பெரிய மகேந்திர ஜாலவித்தை ஒன்றும் அங்கே நடந்தது. பலி பீடத்தில் கட்டுண்டு கிடந்த சிவனடியார் எப்படியோ திடீரென்று அக்கட்டுக்களிலிருந்து விடுபட்டு எழுந்து பலிபீடத்திலிருந்து கீழே குதித்தார்.

இதற்கிடையில், சிறுத்தொண்டர் நேரே மகா கபால பைரவர் நின்ற இடத்தை நோக்கி வந்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும், கபால பைரவரின் முகத்தில் தோன்றிய பீதி நம்ப முடியாதாயிருந்தது. சிறுத்தொண்டர் அருகில் நெருங்க நெருங்க, அவருடைய பீதி அதிகமாயிற்று. அவருடைய உடம்பெல்லாம் நடுங்கிற்று. இன்னும் சிறுத்தொண்டர் அவருடைய சமீபத்தில் வந்து நேருக்கு நேராக முகத்தை ஏறிட்டுப் பார்த்து, “ஓ கபாலிக வேஷதாரியே! மகா காளியின் சந்நிதியில் நீ யார் என்று உண்மையைச் சொல்!” என்று கேட்டபோது கபால பைரவர் இரண்டடி பின்வாங்கி, பிறகு நடக்கவும் நிற்கவும் சக்தியற்றவராய்த் தள்ளாடித் தொப்பென்று கீழே விழுந்தார்.

அப்போது அங்கே சூழ்ந்திருந்த காளி உபாசகர்களிடையில் “ஹாஹாகாரம்” உண்டாயிற்று. வெறியில், மூழ்கிக் கிடந்த அந்தக் கபாலிகர்களால் என்ன விபரீதம் நேரிடுமோ என்று விக்கிரமன் கூடச் சிறிது துணுக்கமடைந்தான்.

பொன்னனோ, வியப்பு, பயபக்தி முதலிய பலவித உணர்ச்சிகள் பொங்க, தன்னை மறந்து செயலற்று நின்றான்.

கபால பைரவர் கீழே விழுந்து நாலாபுறமிருந்தும் கபாலிகர்கள் ஓடிவரத் தொடங்கிய சமயத்தில், சிறுத்தொண்டர் சட்டென்று பலிபீடத்தின் மீது ஏறிக் கொண்டார்.

“மகா ஜனங்களே! காளி மாதாவின் பக்தர்களே! நெருங்கி வாருங்கள். ‘மகா கபால பைரவர்’ என்று பொய்ப் பெயருடன் உங்களையெல்லாம் இத்தனை காலமும் ஏமாற்றி வஞ்சித்து வந்த ஒற்றைக் கை மனிதனைப் பற்றிய உண்மையைச் சொல்லுகிறேன்” என்றார்.

சிறுத்தொண்டரைப் பார்த்தவுடனே கபால பைரவர் பீதியடைந்து கீழே விழுந்ததினால் ஏற்கனவே அக்கபாலிகர்களின் மனத்தில் குழப்பம் உண்டாயிருந்தது. எனவே, சிறுத்தொண்டர் மேற்கண்டவாறு சொன்னதும், அவர்கள் பலிபீடத்தைச் சூழ்ந்து கொண்டு, அவரையே பார்த்த வண்ணமாய் நின்றார்கள்.

சிறுத்தொண்டர் கம்பீரமான குரலில், காடு மலையெல்லாம் எதிரொலி செய்யுமாறு பேசினார்.

‘கேளுங்கள்! நாம் பிறந்த இந்தத் தமிழகமானது மகா புண்ணியம் செய்த நாடு. எத்தனையோ மகா புருஷர்கள் இந்நாட்டிலே தோன்றி மெய்க் கடவுளின் இயல்பையும் அவரை அடையும் மார்க்கத்தையும் நமக்கு உபதேசித்திருக்கிறார்கள். திருமூல மகரிஷி,

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்.

என்று அருளியிருக்கிறார். வைஷ்ணவப் பெரியார்,

அன்பே தகளியாய் ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர் விளக்கேற்றினேன்

என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். இத்தகைய மகோன்னதமான தர்மங்களுக்கு உறைவிடமாயுள்ள நமது நாட்டில், கபாலிகம், பைரவம் என்னும் அநாசாரக் கோட்பாடுகளையும், நரபலி, மாமிசப்பட்சணம் முதலிய பயங்கர வழக்கங்களையும் சிலர் சிறிது காலமாகப் பரப்பி வருகிறார்கள். அன்பே உருவமான சிவபெருமானும் கருணையே வடிவமான பராசக்தியும் நரபலியை விரும்புகிறார்கள் என்று நம்புவது எவ்வளவு பெரிய அறியாமை? சிவபெருமான் கையில் மண்டை ஓட்டை வைத்திருப்பதாகவும், பராசக்தி கபால மாலையைத் தரிப்பதாகவும் புராணங்களில் சொல்லியிருப்பதெல்லாம் தத்வார்த்தங் கொண்டவை என்பதை நமது பெரியோர்கள் நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள். அவ்விதமிருக்க இப்புண்ணிய நாட்டில் நரபலியென்னும் கொடிய வழக்கம் பரவுவதற்குக் காரணம் என்ன? இந்தத் தீய பிரசாரத்தின் மூலவேர் எங்கே இருக்கிறது? – இதைக் கண்டுபிடிப்பதற்காக நானும் சற்றுமுன் இந்தப் பலி பீடத்தில் கட்டுண்டு கிடந்த என் தோழர் சிவனடியாரும் பெருமுயற்சி செய்து வந்தோம். கடைசியாக, அந்த முயற்சியில் என் தோழர் வெற்றி பெற்றார்; உண்மையைக் கண்டுபிடித்தார்….”

அப்போது ஒரு குரல், “அவர் யார்?” என்று கேட்டது.

“அவர் எங்கே?” என்று பல குரல்கள் கூவின. உண்மை என்னவெனில், சிறுத்தொண்டர் திடீரென்று தோன்றியவுடன் ஏற்பட்ட குழப்பத்தில் சிவனடியார் ஒருவரும் கவனியாதபடி அந்த இடத்தைவிட்டு அகன்று விட்டார்.

சிறுத்தொண்டர் மேலும் சொல்வார்:- “இன்னும் இரண்டு நாளில் உறையூரில் நடக்கப்போகும் வைபவத்துக்கு நீங்கள் வந்தால், அந்த மகான் யார் என்பதை அறிவீர்கள். தற்போது இதோ இங்கே கீழே விழுந்து பயப்பிராந்தியினால் நடுங்கிக் கொண்டிருக்கும் கபால பைரவன் யார் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். புகழ் பெற்ற நமது மகேந்திரச் சக்கரவர்த்தியின் காலத்தில் – இருபது வருஷத்துக்கு முன்னால் – வாதாபி அரசன் புலிகேசி நமது தமிழகத்தின் மேல் படையெடுத்து வந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா…” என்று சிறுத்தொண்டர் கேட்டு நிறுத்தியபோது பல குரல்கள், ” ஞாபகம் இருக்கிறது!” என்று கூவின.

“அந்த ராட்சதப் புலிகேசியும் அவனுடைய படைகளும் நம்பிக்கைத் துரோகம் செய்து, இச்செந்தமிழ் நாட்டின் பட்டணங்களிலும் கிராமங்களிலும் செய்து விட்டுப் போன அட்டூழியங்களையெல்லாம் நீங்கள் மறந்திருக்க முடியாது. மகேந்திரச் சக்கரவர்த்தி காலமான பிற்பாடு தரும ராஜாதிராஜ நரசிம்மப் பல்லவரும், நானும் பெரும்படை கொண்டு புலிகேசியைப் பழிவாங்குவதற்காக வாதாபிக்குப் படையெடுத்துச் சென்றதையும் நீங்கள் அறிவீர்கள். வாதாபி நகரத்தின் முன்னால் நடந்த கொடிய யுத்தத்தில், நமது வீரத்தமிழ்ப்படைகள் புலிகேசியின் படைகளையெல்லாம் ஹதா ஹதம் செய்தன. யுத்தக் களத்துக்கு வந்த புலிகேசியின் படைகளிலே ஒருவராவது திரும்பிப் போக விடக்கூடாது என்று சக்கரவர்த்தி கட்டளையிட்டிருந்தார். ஆனால், அவருடைய கட்டளைக்கு மாறாக ஒரே ஒருவனை மட்டும் திரும்பிப் போகும்படி நான் அனுமதித்தேன். போரில் கையை இழந்து, “சரணாகதி” என்று காலில் விழுந்தவனைக் கொல்வதற்கு மனமில்லாமல் அவனை ஓடிப்போக அனுமதித்தேன். அந்த ஒற்றைக் கை மனிதன் தான் இதோ விழுந்து கிடக்கும் நீலகேசி. புலிகேசியை விடக்கொடிய அவனுடைய சகோதரன் இவன்!”

இதைக் கேட்டதும் அந்தக் கூட்டத்தில், “ஆகா!” “அப்படியா?” “என்ன மோசம்!” “என்ன வஞ்சகம்!” என்ற பலவிதமான பேச்சுக்கள் கலகலவென்று எழுந்தன. சிறிது பேச்சு அடங்கிய பிறகு சிறுத்தொண்டர் மீண்டும் கூறினார்:

“இவனை நான் மன்னித்து உயிரோடு திருப்பி அனுப்பினேன் என்று தெரிவித்தபோது சக்கரவர்த்தி, ‘நீ பிசகு செய்தாய்; இதனால் ஏதாவது விபரீதம் விளையும்’ என்று சொன்னார். அது உண்மையாகிவிட்டது. இந்த நீலகேசி, கபாலிக வேஷத்தில் நமது புண்ணியத் தமிழகத்தில் வந்து இருந்துகொண்டு, பஞ்சத்தினால் ஜனங்களுடைய புத்தி கலங்கியிருந்த காலத்தில் கபாலிகத்தையும், நரபலியையும் பரப்பத் தொடங்கினான். எதற்காக? வீரத்தினால் ஜயிக்க முடியாத காரியத்தைச் சூழ்ச்சியினால் ஜயிக்கலாம் என்றுதான். கடல்களுக்கப்பாலுள்ள தேசங்களுக்கெல்லாம் புகழ் பரவியிருக்கும் நமது மாமல்லச் சக்கரவர்த்திக்கு விரோதமாக உங்களையெல்லாம் ஏவி விட்டுச் சதி செய்விக்கலாம் என்றுதான். இந்த உத்தேசத்துடனேயே இவன் கொல்லி மலையின் உச்சியிலுள்ள குகைகளில் ஆயிரக்கணக்கான கத்திகளையும் கோடாரிகளையும் சேர்த்து வைத்திருந்தான்….”

“ஆ!” என்று கபால பைரவனின் கோபக்குரல் கேட்டது.

“ஆம்; அந்த ஆயுதங்களையெல்லாம் சக்கரவர்த்தியின் கட்டளையினால் இன்று அப்புறப்படுத்தியாகிவிட்டது. இன்னும் இந்தச் சோழநாட்டு இளவரசன் விக்கிரமனையும் தன்னுடைய துர்நோக்கத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ள எண்ணியிருந்தான். அதற்காகவே பார்த்திப சோழ மகாராஜாவின் வீரபத்தினி அருள்மொழித் தேவியைச் சிறைப்படுத்தி வைத்திருந்தான்…” அப்போது மகாக் கபால பைரவர் தரையிலிருந்து சட்டென்று எழுந்து நின்று, “எல்லாம் பொய்; கட்டுக்கதை; இதற்கெல்லாம் சாட்சி எங்கே?” என்று கேட்டார். அப்போது ஒருவாறு அவருடைய பீதி தெளிந்ததாகக் காணப்பட்டது.

கபால பைரவர் “சாட்சி எங்கே?” என்று கேட்டதும் “இதோ நான் இருக்கிறேன், சாட்சி!” என்றது ஒரு குரல். திடீரென்று ஒரு வெள்வேல மரத்தின் மறைவிலிருந்து மாரப்ப பூபதி தோன்றினான். “ஆமாம், நான் சாட்சி சொல்கிறேன். இந்தக் கபால பைரவர் என்னும் நீலகேசி உண்மையில் கபாலிகன் அல்ல, வேஷதாரி. இவன் மகா ராஜாதிராஜ நரசிம்மப் பல்லவச் சக்கரவர்த்திக்கு எதிராகச் சதி செய்தான். அந்தச் சதியில் என்னையும் சேரும்படிச் சொன்னான். நான் மறுத்துவிட்டேன். அதன்மேல், இந்தத் தேசப்பிரஷ்ட இளவரசனைத் தன்னுடன் சேர்த்துக் கொள்ள விரும்பினான். சக்கரவர்த்தியின் கட்டளைப்படி காஞ்சிக்கு நான் அனுப்பிய இந்த இளவரசனை இவன் வழியில் மறித்து இங்கே கொண்டுவர ஏற்பாடு செய்தான்.”

அப்போது சிறுத்தொண்டர், “போதும், மாரப்பா! உன் சாட்சியம் போதும்!” என்றார்.

மாரப்பன் மனத்திற்குள் என்ன உத்தேசித்தானோ தெரியாது. தன்னைப் புறக்கணித்துவிட்டு மகாக் கபால பைரவர் விக்கிரமனுக்கு யுவராஜா பட்டம் கட்டுவதாகச் சொன்னதைக் கேட்டு அவனுக்கு ஆத்திரம் உண்டாகியிருக்கலாம். அல்லது சக்கரவர்த்திக்கு விரோதமாகச் சதி செய்த குற்றம் தன் பேரில் ஏற்படாமலிருக்க வேண்டுமென்று எண்ணியிருக்கலாம்.

அவன் உத்தேசம் எதுவாயிருந்தாலும், அப்போது யாரும் எதிர்பாராத ஒரு காரியத்தை அவன் செய்தான். கையில் உருவிய கத்தியுடன் மகாக் கபால பைரவர் நின்ற இடத்தை அணுகினான். “சக்கரவர்த்திக்கு விரோதமாகச் சதி செய்த இந்தச் சாம்ராஜ்யத் துரோகி இன்று காளிமாதாவுக்குப் பலியாகட்டும்!” என்று கூறிய வண்ணம் யாரும் தடுப்பதற்கு முன்னால் கத்தியை ஓங்கி வீசினான். அவ்வளவுதான்; கபால பைரவனின் தலை வேறாகவும் உடல் வேறாகவும் கீழே விழுந்தன.

எல்லாரும் பிரமித்துத் திகைத்து நிற்கும்போது மாரப்ப பூபதி பலி பீடத்தண்டை வந்து சிறுத்தொண்டருக்கு முன்னால் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, “பிரபோ! ஆத்திரத்தினால் செய்து விட்டேன். நான் செய்தது குற்றமானால் மன்னிக்க வேண்டும்” என்றான்.

அச்சமயம் யாரும் எதிர்பாராத இன்னொரு காரியம் நிகழ்ந்தது. கையில் கத்தியுடன் சித்திரகுப்தன் எங்கிருந்தோ வந்து பலி பீடத்தருகில் குதித்தான். படுத்திருந்த மாரப்பனுடைய கழுத்தில் அவன் வீசிய கத்தி விழுந்தது! அக்குள்ளனை உடனே சில பல்லவ வீரர்கள் பிடித்துக் கொண்டார்கள். குள்ளனோ ‘ஹீஹீஹீ’ என்று சிரித்தான்.

சில நிமிஷ நேரத்தில் நடந்துவிட்ட இக்கோர சம்பவங்களைப் பார்த்த விக்கிரமன் மிகவும் அருவருப்பை அடைந்தான். யுத்த களத்தில் நேருக்கு நேர் நின்று போரிட்டு ஒருவரையொருவர் கொல்லுவது அவனுக்குச் சாதாரண சம்பவமானாலும், இம்மாதிரி எதிர்பாராத கொலைகள் அவனுக்கு வேதனையளித்தன. உடனே, அருகில் நின்ற பொன்னனைப் பார்த்து, “பொன்னா! நாம் போகலாம் வா!” என்றான். அப்பொழுதுதான் தன்னையும் பொன்னனையும் சூழ்ந்து நின்ற பல்லவ வீரர்களை அவன் கவனிக்க நேர்ந்தது.

அந்த வீரர்களின் தலைவன் தன் கையிலிருந்த ஓலையை விக்கிரமனிடம் காட்டினான். அதில் நரசிம்மச் சக்கரவர்த்தியின் முத்திரை பதித்த கட்டளை காணப்பட்டது. உறையூரிலிருந்து காஞ்சிக்கு வந்து கொண்டிருக்கும் சோழ இளவரசன் விக்கிரமனை வழியில் திருப்பி உறையூருக்கே மீண்டும் கொண்டு போகும் படிக்கும் விசாரணை உறையூரிலேயே நடைபெறுமென்றும் அவ்வோலையில் கண்டிருந்தது.

விக்கிரமன் அந்த ஓலையைப் பார்த்துவிட்டுச் சுற்று முற்றும் பார்த்தான். அவனுடைய கையானது உடைவாளின் மேல் சென்றது. அப்போது பொன்னன், “மகாராஜா! பதற வேண்டாம்!” என்றான். இதையெல்லாம் கவனித்த சிறுத்தொண்டர், பல்லவ வீரர் தலைவனைப் பார்த்து, “என்ன ஓலை?” என்று கேட்டார். வீரர் தலைவன் அவரிடம் கொண்டுபோய் ஓலையைக் கொடுத்தான். சிறுத் தொண்டர் அதைப் படித்து பார்த்துவிட்டு, “விக்கிரமா! நீ இந்தக் கட்டளையில் கண்டபடி உறையூருக்குப் போ! நானும் உன் தாயாரை அழைத்துக் கொண்டு உறையூருக்குத்தான் வரப் போகிறேன். இன்று நீ புரிந்த வீரச்செயலைச் சக்கரவர்த்தி அறியும்போது, அவருடைய மனம் மாறாமல் போகாது. அவசரப்பட்டு ஒன்றும் செய்ய வேண்டாம்!” என்றார்.

அடுத்த நிமிஷம் விக்கிரமனும் பொன்னனும் பல்லவ வீரர்கள் புடைசூழ அந்த மயான பூமியிலிருந்து கிளம்பிச் சென்றார்கள்.

அப்புறம் சிறிது நேரம் அங்கே கூடியிருந்தவர்களுக்கு மெய்க் கடவுளின் ஸ்வரூபத்தையும், நரபலியின் கொடுமையையும் பற்றிச் சிறுத்தொண்டர் விரித்துரைத்தார். அதன் பயனாக, அன்று பலியாக இருந்தவர்களும், பலி கொடுக்க வந்தவர்களும் மனம் மாறி, தங்களைத் தடுத்தாட்கொண்ட மகானைப் புகழ்ந்து கொண்டே தத்தம் ஊர்களுக்குச் சென்றார்கள். பலிபீடத்தில் கட்டுண்டு கிடந்த சிவனடியார் யாராயிருக்கலாமென்று அவர்கள் பலவாறு ஊகித்துப் பேசிக்கொண்டே போனார்கள்.

Source

Previous articleRead Parthiban Kanavu Part 3 Ch 36
Next articleRead Parthiban Kanavu Part 3 Ch 38

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here