Home Kalki Read Parthiban Kanavu Part 3 Ch 4

Read Parthiban Kanavu Part 3 Ch 4

72
0
Read Parthiban Kanavu Part 3 Ch 4 Free, Parthiban Kanavu is a historical novel. Download Parthiban Kanavu Free, Parthiban Kanavu pdf Parthiban Kanavu audiobook
Parthiban Kanavu Part 3 Ch 4 பார்த்திபன் கனவு மூன்றாம் பாகம், அத்தியாயம் 4: வழிப்பறி

Read Parthiban Kanavu Part 3 Ch 4

பார்த்திபன் கனவு

மூன்றாம் பாகம், அத்தியாயம் 4: வழிப்பறி

Read Parthiban Kanavu Part 3 Ch 4

சக்கரவர்த்தி கம்பீரமான பட்டத்து யானைமீது ஆரோகணித்து வந்தார். அவர் நெடுங்காலத்துக்குப் பிறகு மாமல்லபுரத்துக்கு வந்தபடியாலும், முன்னறிவிப்பு இல்லாமல் எதிர்பாராத விதமாக வந்தபடியாலும், நகரவாசிகள் பட்டத்து யானையைச் சூழ்ந்து கொண்டு அளவில்லா ஆரவாரங்களைச் செய்தார்கள்.

இந்த ஆரவாரம் காதில் விழுந்ததும், மாரப்பபூபதி குதிரையைச் செலுத்திக் கொண்டு அவசரமாக அங்கிருந்து நழுவிச் சென்றான். தேவசேனன் வீதி ஓரமாக ஒதுங்கி நின்றான். அவன் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. சக்கரவர்த்தியைத் தான் பார்க்கக் கூடாதென்று அவன் பல்லைக் கடித்துக் கொண்டு வேறு திசையை நோக்கி நின்றான். ஆனால் பட்டத்து யானை அவன் நின்ற இடத்துக்கு நேராக வீதியில் சென்றபோது அவனுடைய உறுதி கலைந்தது. சோழ வம்சத்தின் பரம வைரியானாலும், உலகெல்லாம் புகழ் பரப்பிய வீராதி வீரரல்லவா நரசிம்ம சக்கரவர்த்தி? அவனை அறியாமலே அவனுடைய பார்வை அவர்மீது சென்றது. அச்சமயத்தில் சக்கரவர்த்தியும் அவன் நின்ற பக்கமாகத் தம்முடைய கண்ணோட்டத்தைச் செலுத்தினார். அந்தக் கண்ணோட்டத்தின் போது இரத்தின வியாபாரியின் முகமும் ஒரு விநாடி நேரம் அவருடைய பார்வைக்கு இலக்காயிற்று. ஆனால், அப்படிப் பார்க்கும்போது அவருடைய கண்களில் தினையளவேனும் மாறுதல் காணப்படவில்லை. கண்ணிமைகள் சிறிது மேலே போகக் கூட இல்லை. அவனுடைய முகத்தைத் தாண்டிக்கொண்டு அவருடைய பார்வை அப்பால் சென்றுவிட்டது.

பட்டத்து யானையும் மேலே சென்றது. இரத்தின வியாபாரி பெரும் ஆபத்திலிருந்து தப்பியவன்போல் ஆழ்ந்த பெருமூச்சு விட்டான். ஜனக்கூட்டம் எல்லாம் போகும் வரைக்கும் சற்று நேரம் அங்கேயே நின்று அவன் யோசனை செய்து கொண்டிருந்தான். அவன் உள்ளத்தில் பெருங் குழப்பம் உண்டாயிற்று. முக்கியமாய் மாரப்ப பூபதியை அங்கே சந்தித்ததை எண்ணியபோது நெஞ்சம் துணுக்கமுற்றது. சித்தப்பாதான் இப்போது சோழநாட்டுச் சேனாதிபதியாமே! அவருடைய துரோகத்துக்குக் கூலி கிடைத்து விட்டதாக்கும்! தன்னிடம் ஏன் அவ்விதம் பேசினார்? ஒருவேளை அடையாளங் கண்டு கொண்டிருப்பாரோ? அந்தப் பெண் உண்மையில் சக்கரவர்த்தியின் குமாரிதானா? அப்படியானால் தன்னிடம் எதற்காகப் பெயரை மாற்றிக் கூறினாள்! அரண்மனைக்கு வரும்படி ஏன் வற்புறுத்திச் சொன்னாள்? நாலு புறத்திலும் தன்னை அபாயங்கள் சூழ்ந்திருப்பதாகத் தேவசேனனுக்குத் தோன்றியது. இனிமேல் மாமல்லபுரத்தில் இருந்தால் விபரீதங்கள் நேரலாம் என்று நினைத்தான். மேலும், அருள்மொழித் தேவியைப் பற்றி மாரப்ப பூபதி மர்மமாகச் சொன்னதை நினைத்தபோது அவனுடைய நெஞ்சு துடித்தது. முதலில் உறையூருக்குப் போய் அன்னையைப் பார்க்க வேண்டும். மற்றக் காரியங்கள் எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

மாமல்லபுரத்தில் ஒரு குதிரையை வாங்கிக் கொண்டு உறையூருக்கும் போகலாம் என்ற உத்தேசம் விக்கிரமனுக்கு இருந்தது. அந்த உத்தேசத்தை இப்போது கைவிட்டான். குதிரை வாங்குவதற்குப் பிரயத்தனம் செய்தால் அதனால் என்ன விளையுமோ, என்னமோ? மாரப்பன் மறுபடியும் தன்னைப் பார்த்துவிட்டால், அவனிடமிருந்து தப்புவது கஷ்டமாகலாம். நல்ல வேளையாக அந்தச் சமயத்திலேயே சக்கரவர்த்தி வீதியிலே வந்தார்! அருள்மொழியைப் பற்றி மாரப்பன் ஏதோ சொன்னதும் தான் பதறிவிட்டது விக்கிரமனுக்கு ஞாபகம் வந்தது. ஒருவேளை தன்மேல் சந்தேகம் கொண்டு உண்மையைக் கண்டுபிடிப்பதற்காகத்தான் அப்படி வஞ்சகமாகப் பேசினாரோ? இன்னும் ஒரு வினாடிப் பொழுது சக்கரவர்த்தி வராதிருந்தால் சித்தப்பா தன்னைக் கண்டுபிடித்திருப்பார்! கண்டுபிடித்து என்ன செய்திருப்பாரோ?- என்பது மறுபடியும் விக்கிரமனுக்கு நினைவு வந்தபோது அவனை என்னவோ செய்தது, மாமல்லபுரத்துக்கு அவர் எதற்காக வந்திருக்கிறார்? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்? எதுவாயிருந்தாலும் அவர் இப்போது இங்கே இருப்பது ஒரு விதத்தில் நல்லதாய்ப் போயிற்று. அவர் அங்கு இருக்கும்போதே, தான் உறையூருக்குப் போய் அன்னையைப் பார்த்துவிட்டுத் திரும்பிவிடவேண்டும்.இன்றைக்கே இவ்விடமிருந்து கிளம்பி விட வேண்டும். வழியிலே எங்கேயாவது குதிரை கிடைத்தால் வாங்கிக் கொள்ளலாம்.

இவ்விதம் தீர்மானம் செய்துகொண்டு விக்கிரமன் அவனுடைய உண்மைப் பெயராலேயே இனி நாம் அழைக்கலாம். தான் தங்கியிருந்த சத்திரத்தை நோக்கி விரைந்து சென்றான். போகும்போது முன்னும் பின்னும் அடிக்கடி பார்த்துக் கொண்டான். குதிரைச் சத்தம் கேட்டால் உடனே கூட்டத்தில் மறைந்து கொண்டான். இவ்விதம் சென்று சத்திரத்தை அடைந்ததும், அங்கு வழிப் பிரயாணத்திற்காகத் தான் சேகரித்து வைத்திருந்த பொருள்களை எடுத்துக் கொண்டு குள்ளனையும் மூட்டைகளைச் சுமந்து வருவதற்காக அழைத்துக் கொண்டு கிளம்பினான். தான் சத்திரத்துக்குள்ளே சென்றிருந்தபோது, குள்ளன் வெளியில் காத்திருந்த ஒரு மனிதனுடன் சமிக்ஞை மூலம் ஏதோ பேசியதை அவன் கவனிக்கக்கூட இல்லை.

விக்கிரமன் குள்ளனுடன் மாமல்லபுரத்தை விட்டுக் கிளம்பிய போது அஸ்தமிக்க ஜாமப் பொழுது இருக்கும். நகர வாசலைக் கடந்து அவன் வெளியே ராஜபாட்டையில் நடக்க ஆரம்பித்த சமயம் மாலைக் கதிரவனின் கிரணங்கள் பசும்பொன் நிறத்தை அடைந்திருந்தன.

அந்தக் காலத்தில் மாமல்லபுரத்திலிருந்து காஞ்சி நகருக்கும், காஞ்சியிலிருந்து உறையூருக்கும் ராஜபாட்டைகள் சென்றன. மாமல்லபுரத்திலிருந்து காஞ்சி செல்லும் பாதையானது எப்போதும் ஜனங்களின் போக்குவரவினால் ஜே ஜே என்று இருக்கும். குதிரைகள் மீதும் யானைகள் மீதும் பல்லக்குகளிலும் ஜனங்கள் போய்க் கொண்டே இருப்பார்கள். அந்த ராஜ பாதை நெடுகிலும் ஒன்றுக்கொன்று வெகு சமீபத்தில் ஊர்கள் உண்டு. கோவில்களும், மடாலயங்களும், சத்திரங்களும், தண்ணீர்ப் பந்தல்களும், பலவிதக் கடைகளும், பாடசாலைகளும் நெடுகிலும் காணப்படும். இதனாலெல்லாம் வெளிநாடுகளிலிருந்து புதிதாக வருகிறவர்களுக்கு மாமல்லபுரத்திலிருந்து காஞ்சி வரையில் ஒரு பெரிய நகரந்தானோ என்று தோன்றும்.

இத்தகைய ராஜபாட்டையிலிருந்து இடையிடையே பிரிந்து சென்ற குறுக்குப் பாதைகளும் ஆங்காங்கு இருந்தன. இந்தக் குறுக்குப் பாதையில் ஒன்று மாமல்லபுரத்துக்குக் கொஞ்ச தூரத்துக்கப்பால் பிரிந்து அடர்ந்த காடுகளின் வழியாகச் சென்றது. மாமல்லபுரத்திலிருந்து நேரே உறையூருக்குப் போக விரும்புவோர் இந்தக் குறுக்குப் பாதை வழியாகப் போனால் காஞ்சிக்குக் கொஞ்ச தூரம் தெற்கே உறையூர் ராஜபாட்டையை அடையலாம். குறுக்கு வழியில் செல்வதால் மூன்று காததூரம் அவர்களுக்கு நடை மீதமாகும்.

ஆனாலும், அந்தக் காட்டுப்பாதை வழியாக ஜனங்கள் அதிகமாகப் போவதில்லை. முக்கியமாக, இரவில் யாருமே போகமாட்டார்கள். அந்தப் பாதையில் சில இடங்களில் துஷ்ட மிருகங்களின் தொல்லை அதிகமாயிருந்தது. இதுமட்டுமல்லாமல், பிரசித்தமான பத்திரகாளி கோயில் ஒன்றும் அந்த வழியில் இருந்தது. சக்கரவர்த்தியின் கட்டளைக்கு மாறாக இந்தப் பத்திரகாளி கோயிலில் ‘சாக்தர்’ ‘கபாலிகர்’ முதலியோர் சில சமயம் நரபலி கொடுப்பது வழக்கம் என்ற வதந்தி இருந்தபடியால், இரவு நேரத்தில் அந்தப் பாதை வழியாகப் போக எப்பேர்ப்பட்ட வீரர்களும் தயங்குவார்கள்.

இதையெல்லாம் அறிந்திராத விக்கிரமன் குள்ளனால் வழி காட்டப்பட்டவனாய், சூரியன் அஸ்தமிக்கும் சமயத்தில் அந்தக் குறுக்குக் காட்டுப்பாதை பிரியும் இடத்துக்கு வந்து சேர்ந்தான். குள்ளன் அந்தப் பாதை வழியாகப் போகலாமென்று சமிக்ஞையால் சொன்னபோது, விக்கிரமன் முதலில் கொஞ்சம் தயங்கினான். பிறகு, ‘பயம் என்ன?’ என்று எண்ணி மனதைத் திடப்படுத்திக் கொண்டு அந்தக் குறுக்குப் பாதையில் இறங்கினான். உறையூருக்குச் சீக்கிரத்தில் போய் அன்னையைப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வமானது அவனுடைய மனத்தைத் திடப்படுத்திக் கொள்ள உதவியாயிருந்தது. அதோடு இன்னொரு காரணமும் சேர்ந்தது. அந்த முச்சந்திக்குச் சற்று தூரத்தில் குறுக்குப் பாதையில் நாலுபேர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்ததை விக்கிரமன் பார்த்தான். அவன் குறுக்குப் பாதையில் இறங்கியவுடனே மேற்சொன்ன நால்வரும் எழுந்திருந்து விறுவிறுவென்று நடக்கத் தொடங்கினார்கள். தான் கொஞ்சம் சீக்கிரமாக நடந்தால் அவர்களோடு சேர்ந்து கொள்ளலாம் என்றும், வழித் துணையாயிருக்குமென்றும் விக்கிரமன் எண்ணியவனாய் அந்தப் பாதையில் வேகமாக நடக்கலானான். ஆனால் குள்ளன் வழக்கத்தைக் காட்டிலும் கொஞ்சம் மெதுவாகவே நடந்தபடியால், விக்கிரமனுடைய எண்ணம் நிறைவேறுவதாயில்லை.

அந்தப் பாதையில் போகப்போக இருபுறங்களிலும் காடு அடர்த்தியாகிக் கொண்டு வந்தது. முன்னிருட்டுக் காலமாதலால், நாலா புறத்திலிருந்தும் இருள் சூழ்ந்து கொண்டு வந்தது. சற்று நேரத்துக்கெல்லாம் நன்றாய் இருட்டி விட்டது. ஆனால் வானம் துல்லியமாயிருந்தபடியால், வழி கண்டுபிடித்து நடப்பதற்கு அவசியமான வெளிச்சத்தை விண்மீன்கள் அளித்தன. மற்றபடி பாதையின் இருபுறமும் மரங்கள் அடர்ந்திருந்தபடியால் ஒரே அந்தகாரமயமாயிருந்தது. அந்தக் கனாந்தகாரத்தில் அந்த வனாந்தரப் பிரதேசத்தில் எண்ணில் அடங்காத மின்மினிகள் பிரகாசித்துக் கொண்டிருந்த காட்சியானது வனதேவதைகள் தங்களுடைய மாயாஜால சக்தியினால் தீபாலங்காரம் செய்தது போலத் தோன்றியது.

நேரம் ஆக ஆக, விக்கிரமனுடைய தீரம் மிகுந்த உள்ளத்தில் கூடச் சிறிது பதைபதைப்பு உண்டாகத் தொடங்கியது. காட்டில் சில சமயம் சலசலப்புச் சத்தம் உண்டாகும்; துஷ்ட மிருகங்களின் குரல் ஒலியும் ஆந்தைகளின் அருவருப்பான கூவலும் கேட்கும். இந்தக் காட்டுப் பாதை இப்படியே எவ்வளவு தூரம் வரை போகும். இரவில் எங்கே தங்கலாம் என்னும் விஷயங்களை அந்த ஊமைக் குள்ளனிடம் விக்கிரமன் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினான். ஆனால் இருள் காரணமாகக் குள்ளனுடன் சமிக்ஞை மூலம் சம்பாஷணை நடத்துவது எளிதாக இல்லை.

இருட்டி சுமார் ஒரு ஜாமப் பொழுது ஆகியிருக்கும். விக்கிரமன் அப்பால் போக இஷ்டப்படவில்லை. இருண்ட அந்த வனப்பிரதேசத்தில் தன்னைத் திடீரென்று தாக்கும் பொருட்டு அபாயங்கள் பல மறைந்து காத்திருப்பதாக அவனுடைய இருதய அந்தரங்கத்தில் ஏதோ ஒரு குரல் சொல்லிக் கொண்டே இருந்தது. திரும்பி இராஜபாட்டைக்கே போய்விடலாமா என்ற எண்ணம் உண்டாயிற்று. போகப் போக இந்த எண்ணம் ரொம்பவும் வலுப்பட்டது. மேலே நடக்க அவனுடைய கால்கள் மறுத்தன. குள்ளனுடைய தோளைத் தட்டி நிறுத்தித் தானும் நின்றான்.

அவன் நின்ற அதே சமயத்தில் எங்கேயோ வெகுதூரத்தில் ‘டக் டக்’ ‘டக் டக்’ என்று குதிரையின் காலடிச் சத்தம் கேட்டது.

குள்ளன் அதைக் கூர்ந்து கவனிப்பதைப் பார்த்ததும், விக்கிரமனுக்கு உண்டான ஆச்சரியத்துக்கு அளவே இல்லை. இவன் செவிடனாய் இருந்தால் அவ்வளவு லேசான சத்தம் எப்படி இவனுக்குக் கேட்டது?

உடனே விக்கிரமன் தன் அரையில் மேலங்கியினால் மறைக்கப்பட்டுக் கட்டித் தொங்கிய உடைவாளைப் பளிச்சென்று கையில் எடுத்தான். அந்தக் காரிருளில், நெய் தடவித் தீட்டப்பட்டிருந்த கத்தியானது பளபளவென்று மின்னிற்று. விக்கிரமன் குள்ளனுடைய தலையிலிருந்த பரட்டை மயிரை ஒரு கையினால் பற்றிக் கத்தியை ஓங்கி, அடேய்! உண்மையைச் சொல்லு! நீ நிஜமாகச் செவிடன்தானா? உனக்குக் காது கேட்பதில்லையா? உண்மையைச் சொல்லாவிட்டால் இங்கேயே இந்த க்ஷணமே இந்த வாளுக்குப் பலியாவாய்?” என்றான்.

குள்ளன் உரத்த குரலில் சிரித்தான். ‘கக் கக், கக் கக்’ என்ற ஒலியை எழுப்பிய அந்தச் சிரிப்பின் பயங்கரமானது, விக்கிரமனுடைய உடம்பின் இரத்தத்தை உறைந்து போகும் படி செய்தது. இதனால் விக்கிரமன் ஒரு கணம் திகைத்து நின்றபோது, குள்ளன் அவனுடைய பிடியிலிருந்து திமிறிக் கொண்டு விடுபட்டு, ஒரு பத்தடி தூரம் பாய்ந்து சென்றான். அங்கு நின்றபடி இரண்டு கைகளையும் வாயினருகில் குவித்துக் கொண்டு மிகக் கோரமான நீடித்த சத்தத்தை உண்டாக்கினான். மனிதக் குரலுமில்லாமல், மிருகங்களின் குரலுமில்லாமல், கேட்பதற்குச் சகிக்க முடியாத அருவருப்பை உண்டாக்குவதாயிருந்த அந்தச் சத்தத்தைத் தூர இருந்து கேட்பவர்கள், ‘பேய் பிசாசுகள் ஊளையிடுகின்றன’ என்று எண்ணிப் பீதி அடைந்தார்களானால், அதில் ஆச்சரியம் அடைவதற்கு இடம் இராது.

அந்தச் சத்தத்தைக் கேட்டபோது விக்கிரமனுடைய உடம்பு ஒரு நடுக்கம் நடுங்கிற்று. ஆனாலும் உடனே அவன் சமாளித்துக் கொண்டு, அந்த க்ஷணமே அக்குள்ளனை வெட்டிக் கொன்று விடுவது என்ற தீர்மானத்துடன் பாய்ந்து சென்றான். அதே சமயத்தில் பாதையில் ஒரு பக்கத்திலிருந்து மரங்களின் மறைவிலிருந்து நாலு பேர் பாய்ந்து ஓடிவந்தார்கள். அவர்களுடைய கைகளில் கத்திகளைக் கண்டதும் விக்கிரமனுக்கு நெஞ்சில் பழையபடி துணிவும் தைரியமும் பிறந்தன. இருட்டினாலும், தனிமையினாலும், குள்ளனுடைய பயங்கரக் கூவலினாலும், மனிதர் உலகுக்குப் புறம்பான பேய் உலகத்துக்கு வந்திருக்கிறோமோ என்று எண்ணி மனதில் திகில் அடைந்திருந்த விக்கிரமனுக்கு கத்திகளைக்கண்டவுடன், இது மனித உலகத்தைச் சேர்ந்த காரியந்தான் என்ற நிச்சயம் ஏற்பட்டது. எனவே, பீதியும் போய்விட்டது. உடனே தன் வாளை எடுத்துச் சுழற்ற ஆரம்பித்தான். வந்த நால்வரும் விக்கிரமனை ஏக காலத்தில் தாக்கத் தொடங்கினார்கள். விக்கிரமன் சக்ராகாரமாகச் சுழன்று அவர்களுடன் போரிட்டான். அவனுடைய கத்தியின் முதல் வீச்சிலேயே ஒருவன் படுகாயம் பட்டுக் கீழே விழுந்தான். இன்னொருவனுடைய கத்தி அடிபட்டுத் தூரப் போய் விழுந்தபோது குள்ளன் மேலே விழுந்தது. அவன் ‘வீல்’ என்று கத்திக் கொண்டு தரையில் சாய்ந்தான். கத்திச் சண்டையில் விக்கிரமன் சாதாரண மனிதனல்ல என்று தெரிந்து கொண்ட மற்ற இருவரும் மிகவும் எச்சரிக்கையுடன் அவனுடைய கத்தி வீச்சுக்குள் வராமல் தூர நின்றே சண்டையிட்டார்கள். அவர்கள் திரும்பித் திரும்பிப் பார்த்ததிலிருந்து யாரையோ அவர்கள் எதிர்பார்த்தது போலத் தோன்றியது. அதற்குத் தகுந்தாற்போல் குதிரைக் காலடிச் சத்தம் அதிவிரைவாக நெருங்கி வந்து கொண்டிருந்தது. வெகு சீக்கிரத்தில் குதிரை வந்துவிட்டது. குதிரையின் மேல் ஓங்கிய கத்தியுடன் ஒரு வீரன் உட்கார்ந்திருப்பது நட்சத்திர வெளிச்சத்தில் மங்கலாகத் தெரிந்தது. விக்கிரமனுடன் போரிட்டவர்களில் ஒருவன் “எஜமானே! சீக்கிரம்!” என்று கத்தினான். ‘குதிரையின் மேல் வருகிறவன் இவர்களுடைய எஜமானன் போலும்! நம்முடைய முடிவு நெருங்கிவிட்டது’ என்று எண்ணினான் விக்கிரமன். ஏற்கனவே அவன் சண்டையில் களைப்புற்று வந்தான் எனினும் இ ந்த இரண்டு பேரையும் எப்படியாவது சமாளிக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் குதிரையின் மேல் புதிதாக வந்த மூன்றாவது மனிதனோடும் எப்படிச் சண்டையிட்டுச் சமாளிக்க முடியும்?

விக்கிரமனது உள்ளத்தில் “அன்னையைப் பார்க்காமல் போகிறோமே!” என்ற எண்ணம் உதித்தது. பல்லக்கிலிருந்த கனிவு ததும்பிய கண்களுடன் தன்னைப் பார்த்துப் பேசிய பெண்ணின் நினைவும் வந்தது. உடனே, பட்டத்து யானை மேல் வந்த சக்கரவர்த்தியின் முகம் அவன் மனக்கண்ணின் முன் தோன்றியது. “நரசிம்ம மகா சக்கரவர்த்தியின் ஆட்சியா இவ்வளவு லட்சணமாயிருக்கிறது! பல்லவ சாம்ராஜ்யத்தில் வழிப்பறியும் கொள்ளையுமா?” என்று நினைத்தான். “இப்படிப்பட்ட சக்கரவர்த்தியா நமது சோழ நாட்டை ஆளுகிறார்?” என்ற எண்ணத்தினால் உண்டான ஆத்திரத்துடன் கத்தியை ஓங்கி வீசினான். இருவரில் ஒருவன் வீழ்ந்தான்.

அதே சமயத்தில் குதிரை மீது வந்த வீரன் தன்னுடைய கத்தியை இன்னொருவன் மீது செலுத்த அவனும் மாண்டு வீழ்ந்தான்.

விக்கிரமனுக்கு உண்டான வியப்புக்கு அளவில்லை. அவ்வீரன் தன்மீது வீசவேண்டிய வாளைத்தான் தவறுதலாய் அவன்மீது செலுத்திவிட்டானோ என்று நினைப்பதற்கு இல்லை. ஏனெனில் தான் மேலங்கி அணிந்திருந்தபடியாலும் அவர்கள் வெறும் உடம்பினராயிருந்த படியாலும் எளிதில் அடையாளம் கண்டுபிடிக்கக் கூடியதாயிருந்தது. அப்படியானால் இந்த வீரன் யார்! இவர்களால் எதிர்பார்க்கப்பட்டவன் இல்லையா?

அச்சமயம் குதிரை மேலிருந்து கீழே குதித்த அவ்வீரன், “ஐயா! நீர் யார்? இந்த இருட்டில் தனி வழியே வந்த காரணம் என்ன?” என்று வினவினான்.

Source

Previous articleRead Parthiban Kanavu Part 3 Ch 3
Next articleRead Parthiban Kanavu Part 3 Ch 5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here