Home Kalki Read Parthiban Kanavu Part 3 Ch 40

Read Parthiban Kanavu Part 3 Ch 40

88
0
Read Parthiban Kanavu Part 3 Ch 40 Free, Parthiban Kanavu is a historical novel. Download Parthiban Kanavu Free, Parthiban Kanavu pdf Parthiban Kanavu audiobook
Parthiban Kanavu Part 3 Ch 40 பார்த்திபன் கனவு மூன்றாம் பாகம், அத்தியாயம் 40: கனவு நிறைவேறியது

Read Parthiban Kanavu Part 3 Ch 40

பார்த்திபன் கனவு

மூன்றாம் பாகம், அத்தியாயம் 40: கனவு நிறைவேறியது

Read Parthiban Kanavu Part 3 Ch 40

நல்ல சுபயோக, சுப லக்கினத்தில் விக்கிரமன் சோழ நாட்டின் சுதந்திர அரசனாக முடிசூட்டப்பட்டான். அவ்விதமே சுப முகூர்த்தத்தில் விக்கிரமனுக்கும் குந்தவிக்கும் திருமணம் விமரிசையாக நடந்தேறியது. திருமணத்துக்குப் பிறகு விக்கிரமன் நரசிம்மப் பல்லவரிடம் சென்று அவருடைய ஆசியைக் கோரியபோது, சக்கரவர்த்தி, “குழந்தாய்! எக்காலத்திலும் பார்த்திப மகாராஜாவின் புதல்வன்’ என்னும் பெருமைக்குப் பங்கமில்லாமல் நடந்துகொள்வாயாக, அதற்கு வேண்டிய மனோதிடத்தைப் பகவான் உனக்கு அருளட்டும்” என்று ஆசீர்வதித்தார். அவ்விதமே குந்தவி அருள்மொழித் தேவியை நமஸ்கரித்தபோது, “அம்மா! உனக்குச் சகல சௌபாக்கியங்களும் உண்டாகட்டும். ‘நரசிம்ம சக்கரவர்த்தியின் திருமகள், பார்த்திப மகாராஜாவின் மருமகள்’ என்னும் பெருமைக்கு உரியவளாக எப்போதும் நடந்துகொள்” என்று ஆசி கூறினாள்.

விக்கிரமனும், குந்தவியும் உறையூர் சிங்காதனத்தில் வீற்றிருந்த போது, சோழ வளநாடு எல்லாத் துறைகளிலும் செழித்தோங்கியது. மாதம் மும்மாரி பொழிந்து நிலங்கள் மூன்று போகம் விளைந்தன. கிராமந்தோறும் சிவாலயங்களும் விஷ்ணு ஆலயங்களும் நிர்மாணிக்கப்பட்டன. சிற்பம், சித்திரம் முதலிய கலைகள் சிறந்தோங்கின. திருமகளும் கலைமகளும் காவேரி நதிக்கரையில் கைகோத்துக் குலாவினார்கள்.

ஆனாலும், பார்த்திப மகாராஜாவின் கனவு விக்கிரமனுடைய காலத்தில் பூரணமாக நிறைவேறவில்லை. சூரியனுக்குப் பக்கத்தில் மற்றக் கிரகங்களெல்லாம் ஒளி மங்கிவிடுவதுபோல் காஞ்சி நரசிம்மப் பல்லவச் சக்கரவர்த்தியின் மகிமையானது விக்கிரமனுடைய புகழ் ஓங்குவதற்குப் பெரிய தடையாயிருந்தது.

பார்த்திப மகாராஜாவின் வீரமரணமும், விக்கிரமனுடைய வீரச் செயல்களும் கூட மாமல்லரின் புகழ் மேலும் வளர்வதற்கே காரணமாயின.

நரசிம்மவர்மருக்குப் பின்னரும் வெகுகாலம் பல்லவர் பெருமை குன்றவில்லை. சோழநாடு ஒரு குறுகிய எல்லைக்குள் கட்டுப்பட்டுத்தான் கிடந்தது. ஆனால், விக்கிரமனும் அவனுடைய சந்ததியர்களும் பார்த்திப மகாராஜாவின் கனவை மட்டும் மறக்கவில்லை. வழிவழியாக அவரவர்களுடைய புதல்வர்களுக்குப் பார்த்திப மகாராஜாவின் வீர மரணத்தைப் பற்றிச் சொல்லி, உறையூர் சித்திர மண்டபத்தில் தீட்டியிருந்த பார்த்திப மன்னரின் கனவுச் சித்திரங்களைக் காண்பித்து வந்தார்கள்.

சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னர் சோழ நாட்டின் வீரசிம்மாசனம் ஏறிய இராஜராஜ சோழன், அவனுடைய புதல்வனான இராஜேந்திர சோழன் – இவர்களுடைய காலத்திலேதான் பல்லவர் பெருமை குன்றிச் சோழ நாடு மகோன்னதமடையத் தொடங்கியது. சோழநாட்டு வீரர்கள் வடக்கே கங்கை வரையிலும், தெற்கே இலங்கை வரையிலும், கிழக்கே கடல்களுக்கு அப்பாலுள்ள கடாரம் வரையிலும் சென்று வீரப்போர் புரிந்து புலிக்கொடியை வானளாவப் பறக்கவிட்டார்கள். புலிக்கொடி தாங்கிய கப்பல்களில் சோழநாட்டு வீரர்கள் கடல்களில் நெடுந்தூரம் பிரயாணம் செய்து சாவகம், புஷ்பகம் முதலிய தீவுகளைக் கைப்பற்றிச் சோழர்களின் ஆதிக்கத்துக்கு உட்படுத்தினார்கள். சோழவள நாடெங்கும் அற்புதமான கோயில்களும், கோபுரங்களும் சோழ மன்னர்களின் வீரப் புகழைபோல் வானளாவி எழுந்து, அக்காலத்திய சோழ சாம்ராஜ்யத்தின் மகோன்னதத்துக்கு அழியாத ஞாபகச் சின்னங்களாக இன்றைக்கும் விளங்குகின்றன. இவ்வாறு, பார்த்திப சோழன் கண்ட கனவு, அவன் வீர சொர்க்கம் அடைந்து முந்நூறு வருஷங்களுக்குப் பிறகு பரிபூரணமாக நிறைவேறியது.

கல்கியின் பார்த்திபன் கனவு முற்றிற்று

Source

Previous articleRead Parthiban Kanavu Part 3 Ch 39
Next articleRead Sivagamiyin Sabatham Part 1 Ch 1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here