Home Kalki Read Parthiban Kanavu Part 3 Ch 6

Read Parthiban Kanavu Part 3 Ch 6

69
0
Read Parthiban Kanavu Part 3 Ch 6 Free, Parthiban Kanavu is a historical novel. Download Parthiban Kanavu Free, Parthiban Kanavu pdf Parthiban Kanavu audiobook
Parthiban Kanavu Part 3 Ch 6 பார்த்திபன் கனவு மூன்றாம் பாகம், அத்தியாயம் 6: சிற்பியின் வீடு

Read Parthiban Kanavu Part 3 Ch 6

பார்த்திபன் கனவு

மூன்றாம் பாகம், அத்தியாயம் 6: சிற்பியின் வீடு

Read Parthiban Kanavu Part 3 Ch 6

அடர்ந்த காட்டின் வழியே ஒரு கொடி வழி சென்றது. பட்டப்பகலிலேயே அந்த வழியில் இருள் சூழ்ந்திருக்கும். நடுநிசியில் கேட்கவேண்டியதில்லை. பெரிய பாதையில் ஆங்காங்கு எட்டிப் பார்த்த நட்சத்திர வெளிச்சம் கூட இந்தக் கொடி வழியில் கிடையாது.

அப்படிப்பட்ட இருளில், முன்பின் தெரியாத யாரோ ஒருவனைப் பின்தொடர்ந்து காட்டுக்கொடி வழியில் செல்லும்போது விக்கிரமனுடைய தீர நெஞ்சம்கூட ‘திக் திக்’ என்று அடித்துக்கொண்டது. வழியோ மிகவும் குறுகலானது. இருபுறத்திலும் தழைத்திருந்த மரக்கிளைகளும் செடிகளும் கொடிகளும் அடிக்கடி விக்கிரமன் மேல் உராய்ந்தன.

வெகு சமீபத்திலிருந்து ஆந்தைகளும் கோட்டான்களும் கர்ண கடூரமான குரலில் சத்தமிட்டன.

எங்கேயோ வெகு தூரத்திலிருந்து ஒரு உறுமல் சத்தம் வந்தது. அதைக் கேட்ட குதிரை கனைத்தது. ஒற்றர் தலைவன் அப்போது குதிரையைத் தட்டிக் கொடுத்தான். அது, “நான் இருக்கிறேன்; பயப்படாதே!” என்று சொல்வது போலிருந்தது.

முதலில் குதிரையும், பிறகு ஒற்றர் தலைவனும் பின்னால் விக்கிரமனுமாகப் போய்க்கொண்டிருந்தார்கள்.

ஓரிடத்தில் ஒரு மரத்தின் வேரில் கால் தடுக்கி விக்கிரமன் கீழே விழுந்தான். ஒற்றர் தலைவன் அவனுடைய கையைப் பிடித்துத் தூக்கி விட்டான். அப்போது விக்கிரமனுக்கு உண்டான வியப்புக்கு அளவேயில்லை. ‘ஆகா! இது எத்தகைய இரும்புக் கை! இந்தக் கையில்தான் எவ்வளவு வலிவு! இந்த ஒற்றர் தலைவன் சாதாரண மனுஷன் இல்லை. மகா வீரனாயிருக்க வேண்டும். சக்கரவர்த்தி ஒவ்வொரு வேலைக்கும் சரியான ஆளைத்தான் தெரிந்திருக்கிறார்’ என்று எண்ணினான்.

இன்னும் எவ்வளவு தூரம் இந்தக் கொடி வழியாகப் போகவேண்டுமோ என்று விக்கிரமன் எண்ணிய சமயத்தில் சட்டென்று இருள் சிறிது அகன்று வானம் தெரிந்தது. எதிரில் ஒரு கட்டடம் இருப்பது லேசாகப் புலப்பட்டது.

“நான் சொன்ன இடத்துக்கு வந்து விட்டோ ம். இந்த வீட்டில் இரவைக் கழிக்கலாம். பொழுது விடிந்ததும் நீர் கிளம்பலாம்” என்றான் ஒற்றர் தலைவன்.

“ஆகட்டும்; ஆனால் இது யாருடைய வீடு? இப்படிப்பட்ட அடர்ந்த காட்டின் நடுவே யார் வீடுகட்டிக் கொண்டு வசிக்கிறார்கள். எதற்காக?” என்று விக்கிரமன் வியப்புடன் கேட்டான்.

“இந்த வீட்டைக் கட்டியவர் இப்போது இல்லை. அவர் இருந்தபோது இங்கே இவ்வளவு அடர்ந்த காடாகவும் இல்லை. அது பெரிய கதை; இராத்திரி உமக்குத் தூக்கம் வராவிட்டால் சொல்கிறேன்” என்றான் ஒற்றர் தலைவன்.

பிறகு, அவன் வீட்டண்டை நெருங்கிக் கதவை இடித்தான்.

வீட்டின் சமீபத்தில் வந்ததும் விக்கிரமன் அது சாதாரண வீடு அல்ல வென்பதைக் கண்டான். சித்திர மண்டபமோ, அல்லது சிற்பக் கோயிலோ என்று சொல்லும்படியாயிருந்தது.

சற்று நேரத்துக்கெல்லாம் கதவு திறந்தது. கதவைத் திறந்தவள் ஒரு தொண்டுக் கிழவி. அவள் கையில் ஒரு கல் விளக்கு இருந்தது. கிழவி கதவைத் திறந்ததும் முன்னே நின்ற ஒற்றர் தலைவனை வியப்புடன் ஏறிட்டுப் பார்த்தாள். அப்போது அவளுடைய புருவங்கள் சிறிது மேலே சென்றன.

இடது கையின் ஆட்காட்டி விரலை அவன் லேசாகத் தன் உதடுகளின் மேலே வைத்து உடனே எடுத்துவிட்டான். அந்தச் சமிக்ஞையின் கருத்தைக் கிழவி உணர்ந்திருக்க வேண்டும். உடனே அவளுடைய முகத்திலிருந்து வியப்புக் குறி மாறிவிட்டது.

“வாருங்கள், ஐயா!” என்று சொல்லிவிட்டு, கிழவி கதவை நன்றாய்த் திறந்தாள்.

இருவரும் உள்ளே பிரவேசித்தார்கள். அந்த வீட்டுக்குள் அடிக்கடி சென்று பழக்கப்பட்டது போல் குதிரை உள்ளே நுழைந்தது. அது நேரே கூடம், முற்றம் எல்லாவற்றையும் தாண்டிப் பின்புறக் கதவண்டை போய் நின்றது. கிழவி அங்கே சென்று அந்தக் கதவையும் திறந்தாள். குதிரை தானாக அதன் வழி புகுந்து சென்றது.

ஒற்றர் தலைவன் அப்போது விக்கிரமனைப் பார்த்து, “இந்தக் குதிரையின் அறிவை என்னவென்று சொல்வது? முன்னொரு தடவை இங்கே நான் வந்தபோது பின்கட்டில் குதிரையைக் கட்டியிருந்தேன். இம்முறை அதுவே தன் இருப்பிடத்தைத் தேடிக்கொண்டு போகிறது. நானும் போய் அதைக் கொஞ்சம் கவனித்துவிட்டு வருகிறேன்; நீர் இங்கேயுள்ள சிற்ப வேலைகளைப் பார்த்துக்கொண்டிரும்” என்று சொல்லிவிட்டுப் பின் கதவு வழியாகப் புகுந்து சென்றான். கிழவியும் கல் விளக்குடன் அவனைத் தொடர்ந்தாள்.

சுவரிலிருந்து மாடத்தில் நந்தா விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதன் வெளிச்சத்தில் விக்கிரமன் சுற்று முற்றும் பார்த்தான். அது நிச்சயமாக வீடு அல்ல – சிற்ப மண்டபம் தான் என்று அவனுக்குத் தோன்றிற்று. எங்கே பார்த்தாலும் அற்புதச் சிற்பத் திறமை வாய்ந்த சிலைகள் காணப்பட்டன. சுவர்களில் பல வர்ணங்களில் தீட்டப்பட்டிருந்த சித்திரங்கள் காட்சியளித்தன. அவை வரையப்பட்டு அநேக வருஷங்கள் ஆகியிருக்க வேண்டுமென்றாலும் ஓவியங்களின் உயிர்க்களை சிறிதும் குன்றவில்லை.

சிலைகளிலும் சித்திரங்களிலும் முக்கியமாக ஒரு பெண்ணின் உருவம் அதிகமாய்க் காணப்பட்டது. அந்த உருவத்தில் தெய்வீக சௌந்தரியத்தின் களை தோன்றிற்று. நாட்டியக் கலைக்குரிய பலவிதத் தோற்றங்களிலும் பாவங்களிலும் அந்தப் பெண் உருவத்தின் சிலைகளும் ஓவியங்களும் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றின் அழகையும், கலைத்திறனையும் கண்டு விக்கிரமன் பிரமிப்பை அடைந்தான். உறையூர் சித்திர மண்டபத்திலும் மாமல்லபுரத்துக் கலை விழாவிலும் தான் முன்னர் பார்த்த சித்திரங்கள், சிற்பங்கள் எவையும் இந்தப் பாழடைந்த மண்டபத்துக்குள் மறைந்து கிடக்கும் சிற்பங்களுக்கு அருகில் கூட வரமுடியுமா என்று வியந்தான். இவற்றையெல்லாம் அமைத்த மகா சிற்பி எவனோ என்று அறிந்துகொள்ள அவன் துடிதுடித்தான்.

இதற்குள் ஒற்றர் தலைவன் குதிரையின் போஷாக்கைக் கவனித்துவிட்டு உள்ளே வந்தான். விக்கிரமன் அவனை நோக்கி, “ஐயா! என்ன ஆச்சரியமான சிற்பங்கள் இவை! எந்த மகா சிற்பி இவற்றை அமைத்தவன்? தெய்வீக அழகு பொருந்திய ஒரு பெண்ணின் உருவம் இங்கே அதிகமாய்க் காணப்படுகிறது! அந்தப் பெண் உண்மையாக இருந்தவளா? அல்லது சிற்பியின் சிருஷ்டியா? இந்த அற்புதச் சிற்பங்கள் எல்லாம் ஏன் இந்த இருண்ட காட்டுக்குள் கிடக்க வேண்டும்? ஏன் எல்லா ஜனங்களும் வந்து பார்க்கும்படி செய்யக் கூடாது? இதை எல்லாம் எனக்கு விவரமாய்ச் சொல்ல வேண்டும்” என்றான்.

“நான் தான் சொன்னேனே, அது பெரிய கதை என்று. மிஞ்சியுள்ள இரவைத் தூக்கமின்றித் கழிக்க உனக்கு இஷ்டமிருந்தால், சொல்கிறேன். எனக்குப் பசி பிராணன் போகிறது. இதோ பாட்டி பொரிமாவும் வெல்லமும் கொண்டு வருகிறாள், முதலில் சாப்பிடுவோம்” என்றான் ஒற்றர் தலைவன்.

அவ்விதமே இருவரும் சாப்பிட்டார்கள். சாப்பிடும் போது, “தங்கள் பெயர் இன்னதென்று இன்னும் எனக்குச் சொல்லவில்லையே” என்றான் விக்கிரமன்.

“என் பெயர் வீரசேனன். உம்முடைய பெயர்?”

விக்கிரமன் சிறிது வியப்புடன், “என் பெயர் தேவசேனன்” என்றான். “ரொம்ப நல்லது; நம் இருவருக்கும் பெயர் ஒற்றுமை இருக்கிறது. ஆகையால், நீர் மனம் விட்டு என்னிடம் பேசலாம். உறையூருக்கு நீர் இவ்வளவு அவசரமாகப் போக விரும்பிய காரணம் என்ன? இரத்தின வியாபாரம் செய்வது உமது நோக்கமாயிருந்தால், முதலில் காஞ்சி நகருக்கல்லவா போக வேண்டும்?”

ஒற்றர் தலைவனிடம் நன்றியும் அன்பும் கொண்டிருந்த விக்கிரமனுக்கு இப்போது சந்தேகமும் பயமும் தோன்றின. ஒருவேளை இவன் நம்முடைய உண்மையைக் கண்டுபிடித்து விட்டால்? கொஞ்சம் ஜாக்கிரதையாகவே நடந்து கொள்ள வேண்டும்.

“என்னுடைய தாயார் உறையூரில் இருக்கிறாள். அவளைப் பார்க்கும் ஆவலில்தான் சீக்கிரமாய்ப் போக விரும்புகிறேன்.”

“இதென்ன? நீர் செண்பகத் தீவைச் சேர்ந்தவர் என்றல்லவா சொன்னீர்?”

“என்னுடைய சொந்த ஊர் உறையூர்தான். சில வருஷங்களுக்கு முன்பு பொருள் தேடுவதற்காகச் செண்பகத் தீவு சென்றேன். உறையூர் பல்லவ ராஜ்யத்துடன் சேர்ந்துவிட்டபிறகு, அதன் பழைய செழிப்பெல்லாந்தான் போய் விட்டதே? இராஜ குடும்பம் இல்லாத ஊரில் இரத்தின வியாபாரம் என்ன நடக்கும்?”

இராஜ குடும்பத்தைப் பிரஸ்தாபித்தால், ஒரு வேளை ராணி அருள்மொழியைப்பற்றி வீரசேனன் ஏதாவது சொல்லக்கூடுமென்று விக்கிரமன் எதிர்பார்த்தான். ஆனால், அவனுடைய எண்ணம் நிறைவேறவில்லை. அதன் பின் வீரசேனன் சாப்பிட்டு முடியும் வரையில் மௌன விரதத்தை மேற்கொண்டிருந்தான்.

சாப்பாடு முடிந்த பிறகு, விக்கிரமன் மறுபடியும் அந்தச் சிற்ப மண்டபத்தின் கதையைச் சொல்லும்படி கேட்டான்.

“ஐயா, தேவசேனரே, உமக்கு மரணத்தில் நம்பிக்கை உண்டா?” என்று ஒற்றர் தலைவன் கேட்டபோது, விக்கிரமனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“இதென்ன கேள்வி? மரணத்தில் நம்பிக்கை உண்டா? என்றால்…?”

“அதாவது மனிதர்கள் உண்மையில் மரணமடைகிறார்கள் என்பதாக நீர் நினைக்கிறீரா? ‘உயிர் போய்விட்டது’ என்று நாம் சொல்லும்போது, உண்மையில் உயிர் போகிறதா? அல்லது உடல் மட்டும் போய் உயிர் இங்கேயே இந்த உலகத்திலேயே, சுற்றிக் கொண்டிருக்கிறதா? இறந்து போனவர்கள் நம்மைப்பற்றி நினைக்கிறார்களா? நம்மைப் பார்க்க வருகிறார்களா? நம்முடைய நடவடிக்கைகளை அவர்கள் கவனிப்பதுண்டா?”

விக்கிரமனுக்கு ஏனோ தன்னுடைய தந்தை பார்த்திப மகாராஜாவின் நினைவு வந்தது. அவருக்குத் தான் கொடுத்த வாக்குறுதியும் ஞாபகம் வந்தது. அவர் இப்போது இவ்வுலகில் இருந்து தன்னுடைய செயல்களைக் கவனித்துக் கொண்டு வருகிறாரா?

“எனக்கும் உங்களைப் போல் சில சமயம் தோன்றுவதுண்டு. அந்தச் சந்தேகத்தைத் தீர்ப்பாரைத்தான் காணோம்.”

“எனக்கென்னவோ, மரணம் என்பதே பொய் என்று தோன்றுகிறது. மரணத்துக்காக விசனப்படுவதும் பெரும் மூடத்தனம் என்று நினைக்கிறேன். இதோ இந்த வீட்டில் முப்பது வருஷத்துக்கு முன்னால் ஆயனச் சிற்பியும், அவருடைய மகள் சிவகாமியும் வாழ்ந்தார்கள். அப்போதெல்லாம் இங்கே ஜல்ஜல் என்ற சதங்கை ஒலியும், கல்கல் என்று கல்லுளி ஒலியும் மாறி மாறிக் கேட்டுக் கொண்டிருக்கும். சிவகாமி அற்புத நடனம் ஆடுவாள். அவளுடைய நடனத் தோற்றங்களைப் பார்த்துப்பார்த்து ஆயனச் சிற்பி சித்திரம் எழுதுவார்! சிலைகள் அமைப்பார்….”

“ஓகோ! இந்தத் தெய்வீகக் களையுள்ள பெண் அந்தச் சிவகாமிதானா?”

“ஆமாம்; அப்போது நான் இங்கே அடிக்கடி வருவதுண்டு. மகேந்திர சக்கரவர்த்தியின் காலம்… அவருடைய புதல்வருக்கு அச்சமயம் உம்முடைய வயதுதானிருக்கும். அவருடன் – நரசிம்மவர்மருடன் – நானும் வருவேன். தூரத்தில் வரும்போதே, இந்த வீட்டுக்குள்ளிருந்து சதங்கையின் ஒலி கிளம்புவது கேட்கும். ஆயனரும் சிவகாமியும் இப்போது இங்கே இல்லை என்று என்னால் நம்பவே முடியவில்லை. அவர்கள் இன்னும் இங்கே இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். இதோ! உற்றுக் கேட்டால் சதங்கையின் ஒலியும் கல்லுளியின் ஒலியும் என் காதுக்குக் கேட்கின்றன….”

விக்கிரமனுடைய ஆவல் அளவுகடந்து பொங்கிற்று. ஆயனரையும் சிவகாமியையும் பற்றி விவரமாய்ச் சொல்ல வேண்டுமென்று வீரசேனரை வேண்டிக் கொண்டான். அவரும் விவரமாகச் சொன்னார். ஆயனருடைய அபூர்வ சிற்பத் திறமையைக் குறித்தும், அவருடைய பெண்ணின் அற்புத சௌந்தரியத்தைப் பற்றியும், அவளுடைய நடனக்கலைத் திறனைப் பற்றியும் சொன்னார். நரசிம்ம சக்கரவர்த்தி, இளவரசராயிருக்கும் காலத்தில் அவருக்கும் சிவகாமிக்கும் ஏற்பட்ட தெய்வீகக் காதலைப்பற்றி லேசாகக் குறிப்பிட்டார். வடக்கேயிருந்து இராட்சதப் புலிகேசி படையெடுத்து வந்ததினால் அந்தக் காதல் தடைப்பட்டது பற்றியும், சிவகாமியைப் புலிகேசி சிறைபிடித்துச் சென்றது பற்றியும் விவரித்தார். சிவகாமியை விடுவிக்க நரசிம்மர் செய்த முயற்சிகளையும் சிவகாமியின் சபதத்தையும், அதை நரசிம்மர் நிறைவேற்றி வைத்ததையும், இவ்வளவுக்கும் பிறகு சிவகாமி தன்னுடைய காதல் பூர்த்தியாக முடியாத காதல் என்பதை உணர்ந்து நெஞ்சு உடைந்ததையும் பற்றிச் சொன்னார்.

கதையைக் கேட்டுக் கொண்டு வரும்போது, விக்கிரமன் பல தடவை கண்ணீர் விட்டு விட்டான். நரசிம்ம சக்கரவர்த்தியின் மேல் அவனுக்கிருந்த மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது. அவரிடம் அவனுக்கு அபிமானமே உண்டாகிவிட்டது. பார்த்திப மகாராஜாவுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியை நினைத்துக் கொண்டு, நரசிம்மர் தன்னுடைய குலப்பகைவர் என்பதை ஞாபகப்படுத்திக் கொண்டான்.

கதை முடிந்த சமயம், வெள்ளி முளைத்துவிட்டது. ஒரு நாழிகைப் பொழுதுதான் அவர்கள் தூங்க முடிந்தது. பட்சிகளின் உதயகீதத்தினால் எழுப்பப்பட்ட விக்கிரமன் கண் விழித்தபோது, முதல் நாள் இரவின் சம்பவங்கள் எல்லாம் கனவோ என்ற சந்தேகம் உண்டாயிற்று. சுற்றுமுற்றும் பார்த்து, “கனவல்ல; எல்லாம் உண்மைதான்” என்று நிச்சயம் பெற்றான்.

“ஐயா, தேவசேனரே! குதிரை சிரமபரிகாரம் செய்து கொண்டு சித்தமாயிருக்கிறது. நம்மைப்போல் அது இரவில் கண் விழிக்கவில்லையல்லவா? நீர் காலைக் கடன்களை முடித்ததும் உறையூருக்குக் கிளம்பலாம்” என்று ஒற்றர் தலைவனின் குரல் வெளியிலிருந்து கேட்டது.

அவ்விதமே காலைக் கடன்கள் முடிந்து, கிழவி அளித்த எளிய உணவையும் உட்கொண்டபின் விக்கிரமன் வீரசேனரிடம் விடை பெற்றான். அப்போது அவன், “ஐயா! உமக்கு நான் எவ்வளவோ கடமைப் பட்டிருக்கிறேன். என் உயிரைக் காப்பாற்றியதற்குப் பிரதி ஒன்றும் செய்யமுடியாது. ஆனாலும் குதிரையை இலவசமாகப் பெற்றுக் கொள்ள எனக்கு விருப்பமில்லை. குதிரைக்கு ஈடாக இந்த இரத்தினங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று ஒரு கைப்பிடி இரத்தினங்களை அள்ளிக் கொடுத்தான்.

“நீர் சொல்வது தவறு, என் அருமைக் குதிரையை நான் உமக்குத் தானம் செய்யவில்லை; இரவலாகத்தான் கொடுத்திருக்கிறேன். உறையூரில் உமது காரியத்தை முடித்துக் கொண்டு இதே இடத்தில் வந்து திருப்பிக் குதிரையை ஒப்புவிக்க வேண்டும்” என்றான் ஒற்றர் தலைவன்.

“அப்படியே செய்கிறேன்; ஆனாலும் என்னுடைய நன்றிக்கு அறிகுறியாக இந்த இரத்தினங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்றான் விக்கிரமன்.

வீரசேனன் அதற்கிணங்கி இரத்தினங்களைப் பெற்றுக் கொண்டான்.

விக்கிரமன் குதிரை மீதேறியதும், ஒற்றர் தலைவன் குதிரையைத் தட்டிக்கொடுத்து, “ஐயா! இந்தக் குதிரை அடிக்கடி உறையூருக்குப் போய்ப் பழக்கமானது. அதற்கே பாதை நன்றாகத் தெரியும். அதன் வழியே விட்டு விட்டால் உம்மைக் கொண்டு போய்ச் சேர்த்துவிடும். நீர் வழி விசாரிக்க வேண்டிய அவசியமே இல்லை” என்றான்.

குதிரை காட்டுப் பாதையில் போகத் தொடங்கியது. சிற்பியின் வீடும் ஒற்றர் தலைவனும் மறையும் வரையில் விக்கிரமன் திரும்பிப் பார்த்துக் கொண்டே போனான். காலை வெளிச்சத்தில் அந்த ஒற்றர் தலைவனைப் பார்த்தபோது ஆஜானுபாகுவான அவனது கம்பீரத் தோற்றமும் முகப்பொலிவும் விக்கிரமனுடைய மனத்தைப் பெரிதும் கவர்ந்தன. வெகுநேரம் வரையில் அந்தத் தோற்றம் அவனுடைய மனத்தைவிட்டு அகலவில்லை.

Source

Previous articleRead Parthiban Kanavu Part 3 Ch 5
Next articleRead Parthiban Kanavu Part 3 Ch 7

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here