Home Kalki Read Ponniyin Selvan Part 5 Ch 57

Read Ponniyin Selvan Part 5 Ch 57

97
0
Read Ponniyin Selvan Part 5 Ch 57 Kalki -TamilNovel.in Ponniyin Selvan is one of the historical fiction novel in tamil history. Read Download Ponniyin Selvan Free Ponniyin Selvan Part 5, Ponniyin Selvan part 5 Ch 57, Ponniyin Selvan Kalki, Ponniyin Selvan,ps1,ps2, Read Ponniyin Selvan book, Download Ponniyin Selvan pdf
Ponniyin Selvan Part 5 Ch 57 பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்: தியாக சிகரம் அத்தியாயம் 57: விடுதலை

Read Ponniyin Selvan Part 5 Ch 57

பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்: தியாக சிகரம்

அத்தியாயம் 57: விடுதலை

Read Ponniyin Selvan Part 5 Ch 57

வந்தியத்தேவன் சிறிது நேரம் வாசற்படிக்கருகில் கவலையுடன் தயங்கி நின்றான். புலிகளைப் பார்த்த வண்ணம் மீசையில் கையை வைத்து முறுக்கிக் கொண்டு நின்ற காவலன் மீது பாய்ந்து அவனைத் தீர்த்துக் கட்டிவிட்டு மேலே போகலாமா என்று ஒரு கணம் யோசித்தான். ஆனால் புலிக் கூண்டுகளுக்கு அப்பால் அடுத்த வாசற்படிக்கருகில் மற்றும் இரு காவலர்கள் நிற்பது தெரிந்தது. அவர்களில் ஒருவன் இந்தக் காவலனுக்கு ஏதோ சமிக்ஞையினால் தெரிவித்து விட்டு அப்பால் போனான். ஒருவேளை தன்னைப் பற்றித்தான் அவர்கள் ஜாடையாகப் பேசிக் கொள்கிறார்களோ? இந்தக் காவலனைத் தாக்கி வீழ்த்திவிட்டுப் போனாலும், அப்பால் இது போன்ற பல வாசற்படிகளும் அவற்றில் காவலர்களும் இருப்பார்கள். அவர்களையெல்லாம் சமாளித்துவிட்டுத் தப்பிச் செல்ல முடியுமா? அதைக் காட்டிலும் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து சென்று புலிக் கூண்டுகளைத் திறந்து விட்டால் என்ன? அப்போது ஏற்படக் கூடிய குழப்பத்தில் தப்பிச் செல்வது எளிதாக இருக்கும் அல்லவா?…

இப்படி அவன் எண்ணியபோது காவலன், “ஓகோ! தப்பித்துக் கொள்ளலாம் என்று பார்க்கிறாயோ?” என்று கூறியதைக் கேட்டு வந்தியத்தேவன் ஒரு கணம் திடுக்கிட்டான்.

புலிகளில் ஒன்று உறுமியது. “அட நாயே! சும்மாக் கிட!” என்று அதட்டினான் காவற்காரன்.

அவன் புலியுடன் பேசுகிறான் என்று அறிந்ததும் வந்தியத்தேவன் சிரித்தான். காவற்காரன் திரும்பிப் பார்த்தான்.

“பின்னே பாருங்க, ஐயா! இந்தப் புலி என்னை மிரட்டப் பார்க்கிறது. இது மாதிரி எத்தனையோ புலிகளை நான் பார்த்திருக்கிறேன்! இந்தச் சிங்கத்திடம் அதன் ஜம்பம் சாயாது” என்று கூறி மறுபடியும் மீசையை முறுக்கினான்.

வந்தியத்தேவன், “கூண்டுக்குள் இருக்கும் வரையில் புலியும் எலியும் ஒன்றுதான்! அதன் ஜம்பம் எப்படிச் சாயும்?” என்று சொல்லிவிட்டுக் கையிலிருந்த பெரிய வேளாரின் இலச்சினையைக் காட்டினான்.

“போங்க, ஐயா, போங்க! முதன் மந்திரியின் ஆட்கள் வாசலிலே உங்களுக்காகக் காத்திருக்கிறார்களாம்! சீக்கிரம் போங்க!” என்று கூறிவிட்டு, அவர்கள் வந்த பக்கத்தை நோக்கி, “அடே பைத்தியக்காரா! சும்மா இருக்கமாட்டே!” என்று கூவினான்.

அச்சமயம் வந்தியத்தேவன் பைத்தியக்காரனின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தான். அவன் கை நடுங்குவதைத் தெரிந்து கொண்டு, கையை இறுக்கிப் பிடித்துத் தைரியப்படுத்தினான்.

பிறகு, காவற்காரனைத் தாண்டி இருவரும் முன்னால் சென்றார்கள். “விடுதலை வேண்டுமாம் விடுதலை! எல்லாரையும் விடுதலை செய்துவிட்டால், பிறகு எங்கள் பிழைப்பு என்ன ஆகிறது?” என்று அந்தக் காவலன் கூறியது அவர்கள் காதில் விழுந்தது.

வந்தியத்தேவன் எவ்வளவோ துணிவுள்ளவனாயினும், அச்சமயம் அவன் நெஞ்சம் ‘பக், பக்’ என்று அடித்துக் கொண்டிருந்தது. வாசலில் முதன் மந்திரியின் ஆட்கள் காத்துக் கொண்டிருப்பதாகக் காவலன் சொன்னது அவன் மனத்தில் பதிந்திருந்தது. சிறைக்குள்ளே இருட்டாயிருக்கிறது. அதனால் இங்குள்ள காவலர்களை எளிதில் ஏமாற்றி விட்டுச் செல்லலாம். வெளியில் வெளிச்சமாயிருக்குமே? முதன் மந்திரியின் மனிதர்கள் இந்த ஆள் மாறாட்டத்தைக் கண்டுபிடித்துவிட்டால் என்ன செய்கிறது? ஆயினும் பார்க்கலாம் ஒரு கை! எதற்கும் தயாராயிருக்க வேண்டியதுதான்! நல்ல வேளையாக இந்தப் பைத்தியக்காரனும் கெட்டிக்காரப் பைத்தியக்காரனாயிருக்கிறான்; சமயத்தில் கை கொடுப்பான்!…

பாதாளச் சிறையின் பல வாசல்களையும் கடந்த பிறகு தங்க நாணய வார்ப்படச் சாலையின் வாசல்களையும் கடந்து அவர்கள் விரைந்து சென்றார்கள். ஆங்காங்கே இருந்த காவலர்கள் அவர்களிடமிருந்த வேளாரின் இலச்சினையைப் பார்த்ததும் ஒதுங்கி வழி விட்டார்கள். இவர்களை யாரும் சந்தேகிக்கவும் இல்லை. உற்றுப் பார்க்கவும் இல்லை. போகும் போதே வந்தியத்தேவன் பரபரப்புடன் யோசித்து ஒரு திட்டம் போட்டுக் கொண்டான். நீண்ட அறை ஒன்றில் அவர்கள் போய்க் கொண்டிருந்த போது அவனுடைய துணைவன் காதில், “நீ முதன் மந்திரி வீட்டுக்குப் போகப் போகிறாயா? என்னுடன் வருகிறாயா?” என்று கேட்டான்.

“முதன் மந்திரி வீட்டுக்குப் போனால் மீண்டும் பாதாளச் சிறைதான்! உன்னுடனே வருவேன்! நீ எங்கே போவதாக உத்தேசம்?” என்றான்.

“கடவுள் அருள் இருந்தால், ஈழ நாட்டுக்கே போய்விடலாம்! முதன் மந்திரியின் ஆட்களுக்கு முன்னால் நீ என்னைப் ‘பினாகபாணி!’ என்று கூப்பிடு! உன் பெயர் என்ன?”

“பைத்தியக்காரன்!”

“உண்மையான பெயர்! உன் பெற்றோர்கள் வைத்த பெயர்?”

“ஆ அதுவா? பெற்றோர்கள் எனக்குக் ‘கரிய திருமால்’ என்று பெயரிட்டனர். சுற்றத்தாரும் ஊராரும் ‘கருத்திருமன்’ என்று அழைத்தார்கள்!”

“நல்ல பெயர்தான்! கருத்திருமா! தஞ்சை வீதிகளில் நாம் போகும்போது உன் தோளைத் தொடுவேன். உடனே நீ என்னுடன் ஓடிவரச் சித்தமா இருக்க வேண்டும். நன்றாக ஓடுவாய் அல்லவா?”

“ஓ! ஓட்டத்தில் ஈழத்தரசன் மகிந்தன்கூட என்னுடன் போட்டியிட முடியாது!”

வந்தியத்தேவன் சிரித்தான். “நீ நல்ல பைத்தியக்காரன்!…” என்றான்.

பொற்காசு வார்ப்படச் சாலையைக் கடந்து அவர்கள் வெளியில் வந்தார்கள்.

வந்தியத்தேவன் பயந்தபடி அங்கே முதன்மந்திரியின் ஆட்கள் ரொம்பப் பேர் இல்லை. இரண்டே இரண்டு பேர்தான் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் நல்ல குண்டன், வந்தியத்தேவனுக்கு அவனை எங்கேயோ, எப்போதோ பார்த்த மாதிரி இருந்தது; தெளிவாக நினைவுக்கு வரவில்லை.

“நீங்கள்தானே முதன்மந்திரியின் ஆட்கள்!” என்றான் வந்தியத்தேவன்.

“என்ன தம்பி, அதற்குள்ளேயா மறந்து போய்விட்டாய்?” என்றான் அவர்களில் ஒருவன்.

“இல்லை, இல்லை! நீங்கள்தானே எங்களை முதன்மந்திரி வீட்டுக்கு அழைத்துப் போகப் போகிறீர்கள்?” என்றான் வந்தியத்தேவன்.

“ஆமாம் நாங்கள்தான்! நீ முதன்மந்திரி வீட்டுக்குப் போகும் வழியைக் கூட மறந்து போனாலும் போய்விடுவாய்!”

அப்போது கருத்திருமன், வந்தியத்தேவன் கூறியதை நினைவு கூர்ந்து, “அப்பா, பினாகபாணி! எனக்குப் பயமாயிருக்கிறது! முதன்மந்திரி மறுபடியும் என்னைப் பாதாளச் சிறையில் தள்ளிவிடுவாரோ, என்னமோ!” என்றான்.

“அதெல்லாம் மாட்டார், அப்பனே! எங்கள் முதன்மந்திரியின் சமாசாரம் உனக்குத் தெரியாது போலிருக்கிறது. ஆனால் தப்பித்துக் கொள்ள மட்டும் பார்க்காதே! அப்படி ஏதாவது, செய்தால், நாங்கள் பாதாளச் சிறையில் இருக்க நேரிடும்!” என்றான்.

இவ்விதம் சொல்லிவிட்டு அந்த ஆட்களில் குண்டனாயிருந்தவன் முன்னால் நடந்தான். இன்னொருவன் வந்தியத்தேவனுக்கும் கருத்திருமனுக்கும் பின்னால் காவலாக வந்தான்.

தஞ்சாவூர் வீதிகளில் கலகலப்பே இல்லை. ஜனசஞ்சாரமும் இல்லை. ஆதித்த கரிகாலரின் இறுதிச் சடங்குகளினால் ஏற்பட்ட கிளர்ச்சிகள் அடங்கிவிட்ட பிறகு கோட்டைக்குள் வசித்தவர்கள் அவரவர்களுடைய அலுவல்களில் ஈடுபட்டிருந்தார்கள். கோட்டைக்கு வெளியில், கொடும்பாளூர்ப் படைகள் கடுமையாகக் காவல் புரிந்து வந்தன. கோட்டைக்கு வெளியிலிருந்து யாரும் உள்ளே வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை. வந்தியத்தேவன் இருபுறமும் உற்றுப் பார்த்துக் கொண்டு நடந்தான். அந்த இரண்டு ஆட்களிடமிருந்தே தப்பிச் செல்வது மிகவும் சுலபம். ஆனால் மறுபடியும் பிடிபடாமல் இருக்க வேண்டும்? கோட்டைக்குள்ளிருந்து வெளியேறுவதற்கும் வசதியாக இருக்க வேண்டுமே? இந்த எண்ணத்தினால், வந்தியத்தேவன் வீதியின் இரு பக்கங்களையும் உற்று உற்றுப் பார்த்துக் கொண்டு நடந்தான்.

பெரிய பழுவேட்டரையருடைய அரண்மனை வாசலைத் தாண்டிச் சென்றதும், வந்தியத்தேவனுடைய பரபரப்பு அதிகமாயிற்று. அடுத்தாற்போல், அந்தச் சந்து வரப் போகிறது! முன்னொரு தடவை சின்னப் பழுவேட்டரையரின் ஆட்களிடமிருந்து தான் தப்பி ஓடிச் சென்ற சந்துதான்! அதைத்தான் அவனும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். வளைந்து வளைந்து சென்ற அச்சந்தில் மூலை முடுக்குகள் அதிகம் இருந்தன. இரண்டு புறமும் தோட்டச் சுவர்கள், சுவர்களின் மேலாக வெளியில் தாழ்ந்து தொங்கிய மரங்கள் அங்கேதான் இக்காவலர்களிடமிருந்து தப்பி ஓடினால் ஓடலாம். முன்போலவே பெரிய பழுவேட்டரையருடைய மாளிகைத் தோட்டத்துகுள் குதிக்கலாம். அங்கே குதித்து விட்டால் அடர்ந்த மரங்களுக்கிடையே ஒளிந்து கொள்ள வசதியாயிருக்கும். முன்போலவே பொக்கிஷ நிலவறைப் பாதை மூலமாக வெளியேறவும் இலகுவாயிருக்கும். வேறு வழியில் தப்புவது சாத்தியமில்லை…

இதோ அந்தச் சந்து வழி, அவன் முன்பு தப்பிச் சென்ற வழி, வந்துவிட்டது.

வந்தியத்தேவன் கருத்திருமனுடைய தோளைத் தொடலாம் என்று எண்ணினான். ஆனால் இது என்ன? அங்கே யார் கூட்டமாக வருகிறார்கள்? சிவிகைகள்! குதிரைகள்! கையில் வேல் பிடித்த காவல் வீரர்கள்! இவ்வளவு ஆர்ப்பாட்டத்துடன் வருகிறார்கள். அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவோ, பெருந்தர அதிகாரிகளாகவோ இருக்க வேண்டும்.

இதை உணர்ந்து முதன்மந்திரியின் ஆட்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். வந்தியத்தேவன் கவனத்தைக் கவர்ந்த சந்தை அவர்களும் கவனித்தார்கள். உடனே அவ்விடம் சென்று ஒதுங்கி நின்றார்கள். தாங்கள் அழைத்து வந்த இருவரையும் தங்களுக்குப் பின்னால் நிறுத்திப் பிறர் அறியா வண்ணம் அவர்களை மறைத்துக் கொண்டு நின்றார்கள்.

எதிரில் கூட்டமாக வந்தவர்கள் விரைவில் அந்த இடத்தை அடைந்து அவர்களைத் தாண்டிச் சென்றார்கள். முன்னால் வேல் பிடித்த வீரர்கள் சிலர், பிறகு, மூன்று கம்பீரமான வெண் புரவிகளின் பேரில் மலையமானும், கொடும்பாளூர் வேளாரும் அவர்களுக்கு நடுவில் ஒருவரும் வந்தனர். நடுவில் வந்தவர் பொன்னியின் செல்வர் என்பதை வந்தியத்தேவன் கண்டான். ஆகா! எவ்வளவு சமீபத்தில் இருக்கிறார்? ஆனாலும், எவ்வளவு தூரமாகப் போய்விட்டார்?

ஒரு கணம் வந்தியத்தேவன் எண்ணினான். காவலர்களை மீறி ஓடிச் சென்று அவர் முன்னால் நிற்கலாமா என்று, உடனே அந்தக் கருத்தை மாற்றிக் கொண்டான். தமையனைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டவனுக்குப் பொன்னியின் செல்வர் தான் எப்படிக் கருணை காட்ட முடியும்?… அல்லது சிநேக உரிமை கொண்டாட முடியும்?… தன்னைப் பார்த்ததும் அவர் அருவருப்பு அடைந்தாலும் அடையலாம். பக்கத்திலுள்ள மலையமானும், வேளாரும் என்ன செய்வார்கள் என்று சொல்ல முடியாது. இதற்குள், அவர்களுக்குப் பின்னால் வந்த சிவிகைகளின் மீது வந்தியத்தேவன் கவனம் சென்றது. ஆகா! இளைய பிராட்டி குந்தவை! கொடும்பாளூர் இளவரசி வானதி! சம்புவரையர் மகள் மணிமேகலை! வந்தியத்தேவனுடைய நெஞ்சு படாதபாடுபட்டு விம்மித் துடித்தது.

வேறு எந்தச் சந்தர்ப்பமாயிருந்தாலும், இந்த மூன்று பெண்மணிகளில் எவரையும் அணுகி உதவி கோரலாம். அவர்களும் மனமுவந்து உதவி செய்வார்கள். ஆனாலும், இப்போது? ஆதித்த கரிகாலனை வஞ்சகத் துரோகம் செய்து கொன்றவனைப் பார்த்தால் இளைய பிராட்டியும், இளவரசி வானதியும் எத்தனை அருவருப்புக் கொள்வார்கள்?

போகட்டும், இந்தப் பேதைப் பெண் மணிமேகலையை இவர்கள் தங்களுடன் சேர்த்துக் கொண்டிருக்கிறார்களே? அதற்காக மகிழ்ச்சி அடையவேண்டியதுதான். மணிமேகலை இவர்களிடம் கடம்பூரில் நடந்ததையெல்லாம் சொல்லியிருப்பாளா? தன்னை தப்புவிப்பதற்காக ‘நான்தான் கொன்றேன்’ என்று சொன்னாளே, அம்மாதிரி இவர்களிடமும் சொல்லியிருப்பாளா? இல்லை, சொல்லியிருக்கமாட்டாள். அவ்விதம் சொல்லியிருந்தால் இவர்கள் அவளைத் தங்களுடன் இவ்வளவு ஆதரவாக அழைத்துப் போகமாட்டார்கள்.

சிவிகைகள் அவர்கள் நின்று கொண்டிருந்த சந்தைக் கடந்து சென்றன. பின்னால் வந்த காவலர்களும் போனார்கள்.

“சரி வாருங்கள்! இனி நாம் போகலாம்” என்று சொல்லிவிட்டு முதன்மந்திரி ஆட்கள் முன்னால் நடந்தார்கள்.

வந்தியத்தேவன் ஒரு நொடியில் “இதுதான் சமயம்” என்ற முடிவுக்கு வந்தான். கருத்திருமனுடைய தோளைத் தொட்டு விட்டுச் சந்து வழியாக ஓட்டம் பிடித்தான். கருத்திருமனும் அவனைத் தொடர்ந்து ஓடினான்.

காவலர்கள் இருவரும் பின்னால் ஓடிவரும் சத்தம் கேட்டது. சிறிது நேரம் வரையில் திரும்பிக்கூடப் பார்க்காமல் இருவரும் ஓடினார்கள். முதலில், கருத்திருமன் திரும்பிப் பார்த்தான்.

“ஒருவன் பின்தங்கி விட்டான்; ஒருவன்தான் வருகிறான்” என்றான்.

வந்தியத்தேவனும் திரும்பிப் பார்த்துக் குண்டன் பின் தங்கி விட்டதை அறிந்தான். ஒருவனாயிருந்தாலும், அவனுடன் நின்று சண்டை பிடிக்கப் பார்ப்பது அறிவுடமையாகாது. ஆகையால், கருத்திருமனுக்கு சமிக்ஞை காட்டிவிட்டு மேலே ஓடினான்.

முன்னொரு தடவை அவன் மதிள் சுவர் ஏறிக் குதித்த அதே இடத்தை அடைந்த பிறகுதான் நின்றான். முறிந்து வளைந்திருந்த கிளை அப்படியே இன்னும் இருந்தது. அதைப் பிடித்துத் தாவிச் சுவர் மீது ஏறிக்கொண்டான். கருத்திருமனையும் கையைப் பிடித்துத் தூக்கி ஏற்றிவிட்டான். இருவருமாக, முறிந்து மடித்திருந்த அந்த மரக்கிளையைச் சிறிது ஆட்டித் துண்டித்தார்கள்.

பின் தொடர்ந்து வந்த ஆள் அருகில் வந்ததும், அவன் பேரில் தள்ளினார்கள். மரக்கிளை அவன் பேரில் விழுந்ததா என்பதைக்கூடக் கவனியாமல் சுவர் மேலிருந்து தோட்டத்தில் குதித்தார்கள். அடர்ந்த மரங்கள் – புதர்கள் இவற்றினிடையே புகுந்து சென்று, மறைந்து கொண்டு நின்று, சுவரைக் குறி வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். யாரும் தங்களைத் தொடர்ந்து பிடிப்பதற்குத் தோட்டத்துக்குள் குதிக்கவில்லை என்று தெரிந்துகொண்டு மேலே சென்றார்கள்.

“அப்பா! தப்பிப் பிழைத்தோம்!” என்றான் வந்தியத்தேவன்.

“இதற்குள் என்ன ஆகிவிட்டது? கோட்டைக்கு வெளியே போவது எப்படி?” என்றான் கருத்திருமன்.

“அதற்கு வழி இருக்கிறது; கொஞ்சம் பொறுமையாயிரு!”

பழுவேட்டரையரின் மாளிகையை நெருங்கியதும் வந்தியத்தேவன் நின்றான். மாளிகையில் முன் போலக் கலகலப்பு இல்லைதான். ஆயினும் நடமாட்டம் இருந்தது. இருட்டும் நேரத்தில் பொக்கிரு நிலவறையில் புகுவதுதான் உசிதமாயிருக்கும்.

இவ்விதம் தீர்மானித்து ஒரு மரக்கட்டையின் மீது உட்கார்ந்தான். கருத்திருமனையும் உட்காரச் செய்தான்.

“இனி இருட்டிய பிறகுதான் நம் பிரயாணத்தைத் தொடங்க வேண்டும். அதுவரையில் உன்னுடைய கதையைச் சொல்லு கேட்கலாம்!” என்றான்.

“அதுதான் சொல்ல முடியாது என்று முன்னமே சொன்னேனே!”

“அப்படியானால், உன்னை வெளியே அழைத்துப் போகவும் முடியாது”.

“நான் உண்மையைச் சொல்லாமல், ஏதாவது கற்பனை செய்து கூறினால் என்ன பண்ணுவாய்?”

“கதை – கற்பனை எதுவாயிருந்தாலும் சொல்லு! கொஞ்ச நேரம் பொழுது போக வேண்டும் அல்லவா?”

கருத்திருமன் சொல்லத் தொடங்கினான். உண்மையிலேயே அது அபூர்வமான பல சம்பவங்கள் நிறைந்த கற்பனைக் கதை போலவே இருந்தது.

Source

Previous articleRead Ponniyin Selvan Part 5 Ch 56
Next articleRead Ponniyin Selvan Part 5 Ch 58

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here