Home Kalki Read Ponniyin Selvan Part 5 Ch 70

Read Ponniyin Selvan Part 5 Ch 70

117
0
Read Ponniyin Selvan Part 5 Ch 70 Kalki -TamilNovel.in Ponniyin Selvan is one of the historical fiction novel in tamil history. Read Download Ponniyin Selvan Free Ponniyin Selvan Part 5, Ponniyin Selvan part 5 Ch 70, Ponniyin Selvan Kalki, Ponniyin Selvan,ps1,ps2, Read Ponniyin Selvan book, Download Ponniyin Selvan pdf

Read Ponniyin Selvan Part 5 Ch 70

பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்: தியாக சிகரம்

அத்தியாயம் 70: கோட்டைக் காவல்

Read Ponniyin Selvan Part 5 Ch 70

கோட்டைக்குள் பிரவேசித்த யானையையும் பல்லக்கையும் காலாந்தககண்டர் சிறிது நேரம் மிகக் கவனமாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“அதிசயமாக இருக்கிறதே!” என்றார்.

“என்ன அதிசயம்? எது அதிசயம்?” என்று அநிருத்தர் வினவினார்.

“இளவரசர் மதுராந்தகர் இவ்வளவு ஆர்ப்பாட்டத்துடன் கோட்டைக்குள்ளே போவதுதான்! இளவரசர் மிக்க கூச்சம் உள்ளவராயிற்றே? பல்லக்கின் திரையை விட்டுக் கொண்டு அல்லவா பிரயாணம் செய்வார்?”

“என்றைக்காவது ஒரு நாள் கூச்சம் தெளிந்துதானே ஆக வேண்டும்? சீக்கிரத்தில் முடிசூட்டிக் கொள்ளவேண்டியவராயிற்றே?”

“மதுராந்தகருக்கு முடிசூட்டுவது என்று முடிவு செய்தாகிவிட்டதா? யார் முடிவு செய்தார்கள்?”

“ஏன்? சக்கரவர்த்திதான்! நாம் எல்லாருமாகப் போய்ச் சக்கரவர்த்தியிடம் நம் சம்மதம் தெரிவித்ததும் …”

“சக்கரவர்த்தி முடிவு செய்து, நாம் சம்மதம் கொடுத்து என்ன பயன்? கொடும்பாளூர்ப் படைகள் அல்லவா சம்மதம் கொடுக்க வேண்டும்? அவர்கள் காவல் புரியும் கோட்டைக்குள் இளவரசர் மதுராந்தகர் இவ்வளவு குதூகலமாக யானை மேல் ஏறிப்போவது அதிசயந்தான்!” என்றார் காலாந்தககண்டர்.

யானை சென்ற திசையை நோக்கிச் சில அடிகள் எடுத்து வைத்துவிட்டு மறுபடியும் திரும்பி வந்தார்.

பின்னர், பெரிய பழுவேட்டரையரைப் பார்த்து, “அண்ணா! நீங்கள் எல்லோரும் கோட்டைக்குள் செல்வதற்கு நான் குறுக்கே நிற்கவில்லை. ஆனால் நான் மட்டும் வர முடியாது. நேற்று வரை என் கட்டுக் காவலுக்குள் இருந்த கோட்டையில் இன்று நான் பிறருடைய அதிகாரத்துக்கு உட்பட்டுப் பிரவேசிக்க முடியாது. என் மனம் இடங்கொடுக்கவில்லை. நீங்கள் போய்ச் சக்கரவர்த்தியைத் தரிசித்து அவருடைய விருப்பம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். நான் நம் சைன்யத்துடன் வெளியிலேதான் இருப்பேன். மேலும் வந்தியத்தேவனைத் தேடிக்கொண்டு கந்தமாறன் போயிருக்கிறான். அவன் என்ன செய்தி கொண்டு வருகிறான் என்று அறிய நான் ஆவலாயிருக்கிறேன். வந்தியத்தேவன் எப்படிப் பாதாளச் சிறையிலிருந்து தப்பினான். யாருடைய உதவியினாலே வெளியேறினான் என்று தெரிந்துகொள்ள வேண்டும். என்னை மன்னித்து விட்டு, நீங்கள் எல்லோரும் கோட்டைக்குள் போங்கள்!” என்றார்.

கொடும்பாளூர் வேளார் ஏதோ சொல்ல வாயெடுத்தார். அதற்குள் பெரிய பழுவேட்டரையர் குறுகிட்டு, “சேனாதிபதி! இந்த மூடனுடைய மூளை கலங்கிப் போயிருக்கிறது. அவன் எக்கேடாவது கெட்டுப் போகட்டும், நாம் போகலாம், வாருங்கள்!” என்றார்.

ஆனால் மறுநாள் சக்கரவர்த்தியிடம் இந்த விவரங்கள் எல்லாம் அறிவிக்கப்பட்டபோது அவர் பெரிய பழுவேட்டரையரின் கருத்தை ஒப்புக் கொள்ளவில்லை. காலாந்தககண்டர் வந்தே ஆகவேண்டும் என்று வற்புறுத்தினார்.

“என் அன்பார்ந்த தளபதிகளே! நீங்கள் எல்லோரும் என் நம்பிக்கைக்கு உகந்தவர்கள். ஆனால் உங்கள் எல்லோரிலும் நான் அதிகமாக நம்பிக்கை வைத்திருந்தது கோட்டைக் காவலர் காலாந்தககண்டரிடத்திலேதான். அவர் ஏன் வரவில்லை அவர் வராத வரையில் உங்களையெல்லாம் நான் அழைத்த காரியம் முடிவாகாது!” என்றார்.

பெரிய பழுவேட்டரையர், “சக்கரவர்த்தி! மன்னிக்க வேண்டும்! நான் ஒப்புக் கொள்கிற எந்த முடிவையும் என் சகோதரனும் ஒப்புக் கொள்வான்! அவன் நேரில் வந்துதான் ஆக வேண்டுமென்பதில்லை!” என்றார்.

“தனாதிகாரி இராமனுக்கு லக்ஷ்மணன் வாய்த்ததுபோல் தங்களுக்குக் காலாந்தககண்டர் வாய்த்துள்ளார் என்பதை உலகமெல்லாம் அறிந்திருக்கிறது. ஆனாலும் அவர் ஏன் இங்கு இன்றைக்கு வரவில்லை? இதற்கு முன்னால் இங்கு நான் நடத்தியுள்ள முக்கியமான எல்லா மந்திராலோசனைகளிலும் சின்னப் பழுவேட்டரையர் இருந்திருக்கிறார். அவரைக் கேளாமல் எந்த முடிவும் நாம் செய்ததில்லை. அத்தகைய அறிவிற் சிறந்த வீரர் இப்போது மட்டும் ஏன் வராமலிருக்க வேண்டும்?” என்று கேட்டார் சக்கரவர்த்தி.

முதன்மந்திரி அநிருத்தர், “பெருமானே! அதற்கு நான் மறுமொழி சொல்கிறேன். காலாந்தககண்டர் இன்று குருவுக்கு மிஞ்சிய சீடர் ஆகிவிட்டார். சக்கரவர்த்தி அழைப்பதாகச் சொல்லியும், வருவதற்கு மறுத்து விட்டார். பெரிய பழுவேட்டரையரும் எவ்வளவோ புத்தி கூறியும் அவர் கேட்டுக் கொள்ளவில்லை! கோட்டைக்குள் வருவதற்கு மறுத்து விட்டார்” என்றார்.

“ஆனால் ஒன்றை மட்டும் மறந்துவிடவேண்டாம்! சக்கரவர்த்தியின் விருப்பத்தையொட்டி நாம் இங்கு செய்யும் எந்த முடிவையும் தாம் ஒப்புக் கொள்வதாகச் சொல்லி இருக்கிறார்!” என்றான் பார்த்திபேந்திரன்.

“ஆனாலும் இங்கு வருவதற்குச் சின்னப் பழுவேட்டரையர் மறுத்ததற்குக் காரணம் என்ன? அவர் மனத்தில் இன்னும் ஏதாவது விபரீத சந்தேகம் தோன்றியிருக்கிறதா?”

“மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று சொல்வதில்லையா? அவருக்கு இப்போது எது எடுத்தாலும் சந்தேகந்தான்! இங்கே மதுராந்தகர் பத்திரமாயிருக்கிறாரா என்பது பற்றிச் சந்தேகம். வந்தியத்தேவன் பாதாளச் சிறையிலிருந்து தப்பிச் சென்று விட்டது பற்றிச் சந்தேகம்..”

“காலாந்தககண்டர் மனத்தில் ஏதேனும் சந்தேகம் உதித்தால் அதற்குக் காரணம் இல்லாமற் போகாது!” என்று சக்கரவர்த்தி கூறியதும், சிறிது நேரம் அங்கே மௌனம் குடிகொண்டிருந்தது. ஒவ்வொருவர் மனத்திலும் வெவ்வேறு சிந்தனை தோன்றியது.

பெரிய பழுவேட்டரையர் தொண்டையைக் கனைத்துக் கொண்டு, “பெருமானே! என் சகோதரனுடைய சந்தேகத்துக்குக் காரணம் இருக்கலாம்; இல்லாமலும் போகலாம். அவனைப் பற்றி நான் குற்றம் கூறவும் விரும்பவில்லை. ஆனால் அவன் கோட்டைக்கு வர மறுத்ததற்கு உண்மையான காரணம் என்னவென்பதைச் சொல்லி விடுகிறேன். இந்தத் தஞ்சாவூர்க் கோட்டை வெகுகாலமாக அவனுடைய கட்டுக் காவலுக்குள் இருந்ததாம்! இப்போது பெரிய வேளாரின் அதிகாரத்துக்கு கோட்டைக் காவல் மாறி விட்டதாம்! அதனால் அவன் இக்கோட்டைக்குள் வர முடியாதாம்! அவனுடைய இப்படிப்பட்ட அதிகப் பிரசங்கித்தனத்துக்கு யார்தான் என்ன செய்ய முடியும்?” என்றார்.

“ஏன்? நீதி செய்ய முடியும்!” என்றார் சுந்தரசோழச் சக்கரவர்த்தி.

சக்கரவர்த்தி இவ்வாறு கூறியதும் எல்லாரும் மௌனமாயிருந்தார்கள்.

மறுபடியும் சுந்தரசோழர், “அமைச்சர்களே! சோழ குலத்தின் புகழுக்கெல்லாம் அடிப்படையான காரணம் இந்தக் குலத்து மன்னர்கள் நீதி வழுவாத நெறியில் நின்று வந்ததுதான். என் குலத்து முன்னோர் ஒருவர் தமது அருமைக் குமாரனைக் கன்றுக் குட்டியின் பேரில் தேரை ஏற்றிக் கொன்றதற்காக அவனுக்கு மரணதண்டனை விதித்த வரலாற்றை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள். பசுக்களுக்கு நீதி வழங்கியவர்கள் குடிமக்களுக்கு எத்தகைய நீதி வழங்கியிருப்பார்கள்? தங்கள் ஆட்சிக்குத் துணை நின்ற தளபதிகளுக்கு எப்படி நியாயம் வழங்கியிருப்பார்கள்? நான் மட்டும் அந்த மரபுக்கு மாறாக நடந்து சோழ குலத்துக்கு ஏன் களங்கத்தை உண்டாக்க வேண்டும்? சின்னப் பழுவேட்டரையரிடமிருந்து தஞ்சைக் கோட்டைக் காவலைப் பெரிய வேளார் கைப்பற்றியது பெருந்தவறு. என் அருமை மகன் அகால மரணமடைந்த துயரத்தில் மூழ்கியிருந்தபடியால் சின்னப் பழுவேட்டரையருக்கு இழைத்த அநீதியைப் பற்றி நான் சிந்திக்கத் தவறிவிட்டேன். சேனாதிபதி இக்கோட்டைக் காவலை மீண்டும் அவரிடம் மாற்றிக் கொடுத்துவிட வேண்டியதுதான்!” என்றார்.

கொடும்பாளூர் பெரிய வேளாரின் முகத்தில் ஈயாடவில்லை.

திருக்கோவலூர் மலையமான் அப்போது முன்வந்து, “ஐயா! தஞ்சைக் கோட்டைக் காவல் சின்னப் பழுவேட்டரையரிடம் இருந்தபோது, அந்தப் பொறுப்பை அவர் சரியாக நிறைவேற்றியதாகத் தெரியவில்லையே? சதிகாரன் ஒருவன் இந்தக் கோட்டைக்குள் புகுந்து, அரண்மனை அந்தப்புரம் வரைக்கும் வந்து, தங்கள் பேரில் வேல் எறியும்படிக்கும் நேர்ந்துவிட்டதே! யாரோ ஒர் ஊமைப் பெண் குறுக்கிட்டுத் தங்கள் உயிரைக் காப்பாற்றும்படி நேர்ந்துவிட்டதே! அவள் அச்சமயம் வராவிட்டால் என்ன நடந்திருக்கும்? இந்தத் தஞ்சைக் கோட்டையில் உள்ள ஆயுதச் சாலையில் எண்ணுவதற்கு இயலாத வாள்களும், வேல்களும், ஈட்டிகளும் அடுக்கி வைத்திருந்து என்ன பயன்? இங்கே கோட்டைக் காவலுக்கு என்று இத்தனை வீரர்களும் வேளக்காரப் படையைச் சேர்ந்த வீராதி வீரர்களும் இருந்து என்ன பயன்? தளபதி சின்னப் பழுவேட்டரையர் தமது பொறுப்பைச் சரிவர நிறைவேற்றியதாகச் சொல்ல முடியுமா? அவரிடமிருந்து நம் பெரிய வேளார் கோட்டைக் காவலைக் கைப்பற்றியது எப்படித் தவறாகும்?” என்று கேட்டார்.

“மாமா! விதியின் கொடுமைக்கு யார் மீது குற்றம் சுமத்தி என்ன செய்வது? தங்கள் அருமைப் பேரன் ஆதித்த கரிகாலனைக் காப்பாற்ற உங்களால் முடிந்ததா? நீங்கள் எல்லோரும் சேர்ந்து எத்தனையோ பிரயத்தனம் செய்தீர்களே?” என்றார் சக்கரவர்த்தி.

“அதைப்பற்றி விசாரிக்க வேண்டியதும் அவசியந்தான், சக்கரவர்த்தி! கடம்பூர் அரண்மனையில் நேர்ந்த கொடிய சம்பவத்துக்குப் பொறுப்பாளி யார் என்று இன்னும் விசாரணை நடக்கவில்லை. அதைப் பற்றிய உண்மை வெளியாகவும் இல்லை!” என்றார் மலையமான்.

“பெரிய பழுவேட்டரையரின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தோம். அவர் வந்து விட்டபடியால், இனி விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும்” என்றார் சேனாதிபதி பெரிய வேளார்.

“விசாரணை ஆரம்பிப்பதற்கு முன்னால், கொலைக் குற்றம் சாட்டப்பட்ட வந்தியத்தேவன் பாதாளச் சிறையிலிருந்து தப்பி ஓடியது எப்படி? அதற்குப் பொறுப்பு யார் என்பதையும் இப்பொழுதே தீர விசாரிக்க வேண்டும்!” என்றான் பார்த்திபேந்திரன்.

“ஆமாம்; அதுவும் கேள்விப்பட்டேன், சேனாதிபதி! வந்தியத்தேவன் பாதாளச் சிறையிலிருந்து தப்பி ஓடியது எப்படி? அதற்கு யார் பொறுப்பு ஏற்பது?” என்று சக்கரவர்த்தி கேட்டார்.

“சக்கரவர்த்தி! அதற்கு மறுமொழி முதன்மந்திரி அநிருத்தர் சொல்லவேண்டும்!” என்றார் பெரிய வேளார்.

“பிரபு! அந்தப் பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன். வந்தியத்தேவன் தப்பி ஓடியது, நான் செய்த ஒரு சிறிய தவறினால் தான். ஆனால் அவனைத் திரும்பக் கொண்டுவந்து ஒப்புவிக்கும் பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். அதில் தவறினால் உரிய தண்டனைக்கு உள்ளாகிறேன்” என்றார் அநிருத்தர்.

“அந்தப் பொறுப்பை முதன்மந்திரிக்கு முன்னால் என் நண்பன் கந்தமாறன் ஏற்றுக்கொண்டு விட்டான்! பாதாளச் சிறையிலிருந்து தப்பி ஓடியவனைத் துரத்திக் கொண்டு போயிருக்கிறான்!” என்றான் பார்த்திபேந்திரன்.

இந்தச் சம்பாஷணைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது அந்த அறையில் பெண்மணிகள் இருவர் அமர்ந்திருந்தனர். அவர்கள் சக்கரவர்த்தினி வானமாதேவியும், இளைய பிராட்டி குந்தவையுந்தான்.

வந்தியத்தேவனைக் கந்தமாறன் துரத்திக் கொண்டு போயிருக்கிறான் என்ற செய்தியைக் கேட்டதும் இளைய பிராட்டி குந்தவை தேவியின் முகம் மாறுதல் அடைந்ததை முதன்மந்திரி அநிருத்தர் மட்டுமே கவனித்தார்.

பார்த்திபேந்திரனைப் பார்த்து, “பல்லவ குமாரா! உன் நண்பன் கந்தமாறன் வெகு கெட்டிக்காரன்தான்! ஆனால் சில காரியங்களில் அவனை நம்புவதில் பயனில்லை. அவனுடைய சொந்தக் கடம்பூர் மாளிகையில் வந்து தங்கியிருந்த சோழ நாட்டின் கண்ணுக்குக் கண்ணான இளவரசர் கரிகாலரை அவனால் காப்பாற்ற முடியவில்லையே? சிறையிலிருந்து தப்பி ஓடிய வந்தியத்தேவனை அவனால் பிடிக்க முடியுமா? எனக்குத் தோன்றவில்லை!” என்றார் முதன்மந்திரி.

தமது கடைசி வார்த்தைகளில் அடங்கிய குறிப்பைக் குந்தவைப் பிராட்டி தெரிந்துகொண்டாள் என்பதையும் கவனித்துக் கொண்டார்.

“மேலும், கந்தமாறனும், வந்தியத்தேவனும் அத்தியந்த நண்பர்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்!” என்றார் சேனாதிபதி வேளார்.

“அது பழைய கதை சக்கரவர்த்தி! சோழ குலத்துக்குத் துரோகம் செய்த யாரும் சம்புவரையர் குலத்துக்குச் சிநேகமாயிருக்க முடியாது!” என்றார் பெரிய சம்புவரையர்.

“அதைப்பற்றி இப்போது என்ன பேச்சு? வந்தியத்தேவனைத் திரும்பக் கொண்டுவந்து ஒப்புவிக்கிற பொறுப்பைத் தான் முதன்மந்திரி அநிருத்தர் ஏற்றுக்கொண்டு விட்டாரே? சேனாதிபதி தஞ்சைக் கோட்டைக் காவலைத் திரும்பச் சின்னப் பழுவேட்டரையரிடம் ஒப்புவித்துவிட வேண்டியதுதான்!” என்றார் சுந்தர சோழர்.

“சக்கரவர்த்தியின் கட்டளை இது என்றால், நிறைவேற்றி வைக்கச் சித்தமாயிருக்கிறேன்!” என்றார் சேனாதிபதி பெரிய வேளார்.

அவருடைய குரலின் தொனியில் அவரது உள்ளத்தில் பொங்கிய கோபம் வெளியாயிற்று.

“கொடும்பாளூர் மாமா! தாங்கள் என்னைவிட வயதிலும் அனுபவத்திலும் எவ்வளவோ மூத்தவர். என் தந்தையைப் போல் தங்களிடம் நான் பக்தி கொண்டவன். தங்களுக்கு நான் கட்டளையிட முடியுமா? என் அபிப்பிராயத்தைச் சொன்னேன். இந்த விஷயத்தில் இங்குள்ள மற்றவர்களின் அபிப்பிராயத்தையும் தெரிந்து கொண்டு செய்ய வேண்டியதைப்பற்றிப் பிறகு கவனிக்கலாமே?” என்றார் சக்கரவர்த்தி.

“எனக்கு அதில் விருப்பம் இல்லை! சின்னப் பழுவேட்டரையர் தமது கடமையில் தவறிவிட்டார். ஆகையால் கோட்டைக் காவலைத் திரும்பக் கொடுக்கக் கூடாது!” என்று கண்டிப்பாக மறுத்துக் கூறினார் திருக்கோவலூர் மலையமான்.

“முதன்மந்திரியின் கருத்து என்ன?” என்று சக்கரவர்த்தி கேட்டார்.

“நடந்தது நடந்துவிட்டது. இப்போது கோட்டைக் காவலை மாற்றுவதில் சில கஷ்டங்கள் ஏற்படக்கூடும். இராஜ்ய உரிமை சம்பந்தமாகப் பேசி முடிவு செய்வதற்காக எங்களை எல்லாம் அழைத்திருக்கிறீர்கள். அந்த விஷயம் முடிவான பிறகு இதை எடுத்துக் கொள்ளலாம்” என்றார் அநிருத்தர்.

“சின்னப் பழுவேட்டரையர் இல்லாமல் நாம் எந்த முடிவுக்கும் வர முடியாது! தனாதிகாரி! தங்கள் கருத்து என்ன?” என்று கேட்டார் சுந்தர சோழச் சக்கரவர்த்தி.

“மலையமான் கருத்தை நானும் ஒப்புக்கொள்கிறேன். என் சகோதரன் தன் கடமையில் தவறிவிட்டான். பொறுப்பைச் சரிவர நிறைவேற்றவில்லை. ஆகையால் கோட்டைக் காவலை அவனிடம் திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை!” என்றார் பெரிய பழுவேட்டரையர்.

அவருடைய சகோதர வாஞ்சையை அங்கிருந்த எல்லோரும் நன்கு அறிந்தவர்களாதலால் பெரிய பழுவேட்டரையரின் மேற்கூறிய மறுமொழி அனைவருக்கும் வியப்பை உண்டாக்கியது. அதைக் காட்டிலும், சக்கரவர்த்தி தொடர்ந்து கூறியது அதிக வியப்பையும் திகைப்பையுமே உண்டாக்கிவிட்டது.

“தனாதிகாரி! சின்னப் பழுவேட்டரையர் அவருடைய கடமையில் தவறவில்லை. நானும் தாங்களுந்தான் அவருடைய வார்த்தையைக் கேட்கத் தவறிவிட்டோ ம். அவர் அவ்வப்போது செய்த எச்சரிக்கைகளையும் நாம் இருவருமே பொருட்படுத்தவில்லை. எல்லோரும் கேளுங்கள். மதுரை வீரபாண்டியனுடைய ஆபத்துதவிகளைப் பற்றிச் சின்னப் பழுவேட்டரையர் அடிக்கடி எனக்கு எச்சரிக்கை செய்து வந்தார். அவர்கள் இந்தக் கோட்டைக்கு உள்ளேயே தொடர்பு வைத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். ஆகையால் என் அரண்மனைக்கும், அந்தப்புரத்துக்கும் கூட இன்னும் கடுமையான காவல் போடவேண்டும் என்று வற்புறுத்தினார். தனாதிகாரியின் அரண்மனைக்கும், என் அரண்மனைக்கும், உள்ள இரகசிய வழிகளை அடைத்துவிட வேண்டும் என்றும், இரண்டு அரண்மனைக்கும் மத்தியில் காவல் போட வேண்டும் என்றும் வற்புறுத்தினார். பெரிய பழுவேட்டரையரிடம் காலாந்தககண்டர் எவ்வளவு பக்தி கொண்டவர் என்பது உங்களுக்கெல்லாம் தெரிந்த விஷயமே. ஆயினும் தனாதிகாரி பேரிலேயே அவர் என்னிடம் புகார் சொன்னார். தம் தமையனார் ஏமாற்றப்பட்டு வருவதாகவும், அவர் அரண்மனையிலேயே சதிகாரர்கள் வருவதாகத் தாம் சந்தேகிப்பதாகவும் தெரிவித்தார். பெரிய பழுவேட்டரையரை அவருடைய அரண்மனையிலிருந்து வேறு அரண்மனைக்குப் போகச் சொல்லி விடவேண்டும் என்றும், பொக்கிஷத்தையும், வேறு இடத்துக்கு மாற்றி விடவேண்டும் என்றும் யோசனைகள் கூறினார். அந்த எச்சரிக்கைகளையெல்லாம் நான் செவியில் வாங்கிக் கொள்ளவே இல்லை!…”

இச்சமயம் பெரிய பழுவேட்டரையர் தமது தொண்டையை ஒரு முறை கனைத்துக் கொண்டார். அதைக் கேட்டுச் சுந்தர சோழர் தம் பேச்சை நிறுத்தினார்.

“சக்கரவர்த்தி! என் பேரில் தங்களுடைய கருணை காரணமாகத் தாங்கள் சொல்லாமல் விட்டதையும் நான் சொல்லுகிறேன். என்னுடைய அவமானத்தை தாங்கள் வெளியிட விரும்பவில்லை. நானே வெளியிட்டுக் கொள்கிறேன். நான் மோக வலையில் மூழ்கி மணந்து கொண்ட நந்தினியைப் பற்றி என் சகோதரன் எனக்கு எச்சரிக்கை செய்தான். மந்திரவாதி என்று சொல்லிக் கொண்டு அவளிடம் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளின் தலைவன் வந்து போவதாகவும் எச்சரிக்கை செய்தான். மாய மோகத்தில் மூழ்கி, கண்ணிழந்து குருடனாயிருந்த நான் அதற்குச் செவி சாய்க்கவில்லை. ஆனாலும் அவன் தன் கடமையிலிருந்து தவறியவன்தான்! அவனுக்கு அவ்வளவு நிச்சயமாகத் தெரிந்திருக்கும்போது அவன் அந்தப் பாதகியையும், அவளிடம் வந்து கொண்டிருந்தவர்களையும் கண்டுபிடித்துக் கொன்றிருக்க வேண்டும். நான் தடுத்திருந்தால், தமையன் என்று பாராமல் அவனுடைய கைவாளால் என்னையும் கொன்றிருக்க வேண்டும். அவ்விதம் செய்யத் தவறியது அவன் கடமையைக் கைவிட்டதுதானே?” என்று பெரிய பழுவேட்டரையர் தம் பெரிய குரலில் கூறியதைக் கேட்டவர்களுக்கெல்லாம் மெய் சிலிர்த்தது. அவருடைய வார்த்தைகளில் ததும்பிய சொல்ல முடியாத மன வேதனையை அறிந்துகொண்டு ஒவ்வொருவரும் வேதனைப்பட்டார்கள்.

“தனாதிகாரி! கொஞ்சம் பொறுங்கள்! தங்கள் சகோதரர் சின்னப் பழுவேட்டரையர் கடமையைக் கருதி அவ்வாறு செய்யக் கூடியவர்தான் அதற்கு நானே தடையாக இருந்தேன். தங்களைப் பற்றியாவது, தங்கள் இளையராணியைப் பற்றியாவது ஏதாவது புகார் சொல்வதாயிருந்தால், என் முகத்திலே விழிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டேன். தங்களுடைய அரண்மனையிலிருந்து தங்களை வேறிடத்துக்கு மாற்றிவிட்டு, அங்கே வேளக்காரப் படையைக் கொண்டு வைக்கும் யோசனையையும் நிராகரித்தேன். அப்படி அஞ்சி அஞ்சி வாழ்ந்து எதற்காக இந்த உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று கேட்டேன். என் மனத்தில் குடிகொண்டிருந்த வேதனையும், என் உடலைப் பற்றியிருந்த நோயும் என்னை வாழ்க்கையை வெறுக்கும்படி செய்திருந்தன. பழுவூர் மாமா! எனக்காவது, என் குலத்துக்காவது நேர்ந்திருக்கும் எந்தத் தீங்குக்கும் தாங்கள் எவ்வகையிலும் பொறுப்பாளியல்ல. தங்கள் சகோதரரும் பொறுப்பாளியல்ல. அவற்றை நானே தேடிக் கொண்டேன்!”

இவ்வாறு சக்கரவர்த்தி கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த பெரிய பழுவேட்டரையரின் கண்களிலிருந்து கண்ணீர் தாரைதாரையாகப் பெருகியது.

“ஆம்; சின்னப் பழுவேட்டரையர் மீது அணுவளவும் தவறில்லை. முதன் முதல் வந்தியத்தேவன் என்னும் ஒரு வாலிபன் இங்கு முதன் முதல் வந்திருந்த போதே காலாந்தககண்டர் எச்சரிக்கை செய்தார். அவன் இக்கோட்டைக்கு வெளியில் பல்லக்கில் வந்த பழுவூர் இளைய ராணியோடு இரகசியம் பேசியதாகக் கூறினார். அவனும் சோழ குலத்தின் எதிரிகளோடு சேர்ந்து சதி செய்பவனாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்டார். பழுவூர் முத்திரை மோதிரத்தைக் காட்டி அவன் கோட்டைக்குள்ளே பிரவேசித்ததையும், பழுவூர் அரண்மனையின் அந்தப்புரத்து இரகசிய வழியாகவே அவன் இங்கிருந்து தப்பிச் சென்றிருக்க வேண்டும் என்றும் கூறினார். அதையெல்லாம் நான் பொருட்படுத்தாமல் அலட்சியம் செய்து வந்தேன். அறிவில் சிறந்த மேதாவியான நம்முடைய முதன்மந்திரி அநிருத்தரும், என் செல்வக்குமாரி இளைய பிராட்டியும் கூட வந்தியத்தேவன் விஷயத்தில் ஏமாந்து போனார்கள். அவன் மூலமாக முக்கியமான ஓலைகள் அனுப்பி வைத்தார்கள் …”

அநிருத்தர் இச்சமயம், “சக்கரவர்த்தி! நான் ஒருவேளை ஏமாந்து போயிருக்கலாம். ஆனால் இளைய பிராட்டி அப்படியெல்லாம் எளிதில் ஏமாந்து போகக்கூடியவர் அல்ல. வந்தியத்தேவனிடம் ஓலை அனுப்பிவிட்டு, அவன் நடவடிக்கைகளைக் கவனிக்க என்னை ஏற்பாடு செய்யும்படிக் கூறினார். நான் ஈழத்துக்கும் என் சீடன் ஆழ்வார்க்கடியானை அனுப்பினேன். காஞ்சிக்கும் அவனைத் தொடரும்படி அனுப்பி இருந்தேன் …”

“அப்படியே இருக்கட்டும். நீங்கள் இருவரும் அவனிடம் ஏமாறவில்லையென்றே வைத்துக் கொள்வோம். பாதாளச் சிறையிலிருந்து அவனும், இன்னொருவனும் தப்பிச் சென்றது உண்மைதானே? அதை நீங்கள் யாரும் மறுக்க முடியாது அல்லவா? சின்னப் பழுவேட்டரையரிடம் இந்தக் கோட்டைக் காவல் இருந்திருந்தால் அவ்வாறு அவர்கள் ஒருகாலும் திரும்பிச் சென்றிருக்க முடியாது. ஆகையால், சேனாதிபதி! சின்னப் பழுவேட்டரையரை உடனே தருவித்து அவரிடம் தஞ்சைக் கோட்டைக் காவலைத் திரும்ப ஒப்புவித்து விடுங்கள். என்னுடைய கட்டளை என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்!”

“அப்படியே, பிரபு! நாங்கள் இப்போது விடைபெற்றுக் கொள்ளலாமா?” என்று சேனாதிபதி பூதிவிக்கிரம கேசரி கேட்டார். அவருடைய குரலில் ஆத்திரம் தணிந்திருந்தது. பழுவேட்டரையர்கள் விஷயத்தில் சுந்தர சோழர் காட்டிய அன்பும் ஆதரவும் குற்றத்தைப் பொறுத்துக் குணத்தையே பாராட்டிய சினேக மனப்பான்மையும் சேனாதிபதியின் உள்ளத்தையும் உருக்கி விட்டிருந்தன. அவர் ஒரு கணம் அப்படியே திகைத்துப்போய் விட்டார்.

“ஆமாம்; இப்போது எல்லோரும் போகலாம். சின்னப் பழுவேட்டரையரும் வந்த பிறகு, மறுபடியும் கூடி மேலே நடக்க வேண்டியதைப் பற்றிப் பேசலாம். இராஜ்ஜிய உரிமையைப் பற்றி என் பெரிய அன்னை முதிய பிராட்டியாரோடு இன்னும் நான் பேசி முடிக்கவில்லை. அதற்கும் கொஞ்சம் அவகாசம் வேண்டும்!” என்றார் சக்கரவர்த்தி.

அனைவரும் புறப்படும் சமயத்திலே பார்த்திபேந்திரன், “ஐயா! சிநேக துரோகியும், இராஜத் துரோகியுமான வந்தியத்தேவனைத் திரும்பக் கொண்டு வந்து ஒப்புவிக்கும் பொறுப்பை முதன்மந்திரி ஒப்புக் கொண்டார். அதை அவருக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். என் உயிருக்குயிரான ஆப்த நண்பராக இருந்த இளவரசர் ஆதித்த கரிகாலரின் கொடிய மரணத்தை வேறு யார் மறந்தாலும் நான் மறக்க முடியாது. அவருடைய மரணத்துக்கு காரணமாயிருந்த குற்றவாளியைக் கண்டுபிடித்துத் தண்டித்தேயாக வேண்டும்!” என்றான்.

பெரிய பழுவேட்டரையர் கிழச் சிங்கத்தின் கர்ஜனையைப் போல் ஒரு முறை தொண்டையைக் கனைத்துக் கொண்டார். ஏதோ பேச எண்ணியவர் பின்னர் தம் கருத்தை மாற்றிக் கொண்டதாகத் தோன்றியது. ஒன்றும் சொல்லாமல் வெளியேறினார். மற்றவர்களும் அவரைத் தொடர்ந்து சென்றார்கள்.

அன்று மாலையே சக்கரவர்த்தியின் கட்டளைப்படி தஞ்சாவூர்க் கோட்டையின் காவல் பொறுப்பு மீண்டும் சின்னப் பழுவேட்டரையரிடம் ஒப்புவிக்கப்பட்டது. முதலில் அவர் அதை ஏற்றுக் கொள்ளத் தயங்கினார். ஆட்சேபனைகளும் கூறினார். இதிலும் ஏதேனும் சூழ்ச்சிகள் இருக்கக்கூடும் என்று தம் சந்தேகத்தை வெளியிட்டார். இது சக்கரவர்த்தியின் கண்டிப்பான கட்டளை என்று பெரிய பழுவேட்டரையர் எடுத்துக் கூறிய பிறகு கோட்டைக் காவலை மீண்டும் ஏற்றுக் கொண்டார்.

கொடும்பாளூர் வீரர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் கோட்டையிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். கோட்டை வாசலிலும் மதில் சுவர்களிலும் முன்போல் பழுவூர் வீரர்கள் காவல் புரியத் தொடங்கினார்கள்.

இந்த மாறுதல் விபரீதமான விளைவுகளுக்குக் காரணமாயிற்று. பழுவூர் வீரர்களுக்கும் கொடும்பாளூர் வீரர்களுக்கும் அடிக்கடி சச்சரவு மூண்டு சில சமயம் குழப்பமும் விளைந்தது.

“பொன்னியின் செல்வர் வாழ்க!” என்று கோஷமும், “இளவரசர் மதுராந்தகர் வாழ்க!” என்ற கோஷமும் மாறி மாறிப் போட்டிக் கோஷங்களாக எழுந்தவண்ணமிருந்தன.

இந்தக் கோஷங்கள் நாடெங்கும் பரவின. பொதுமக்களும் அவற்றில் கலந்து கொண்டார்கள்.

அடுத்த மூன்று தினங்களில் சோழ நாடு முழுவதும் ஒரே அல்லோலகல்லோலமாகி விட்டது. வாய்ச் சண்டை கைச் சண்டையாகித் தடி அடிச் சண்டையாக முற்றியது. கழிகளும் தடிகளும் வாள்களுக்கும் வேல்களுக்கும் இடங்கொடுத்துச் சென்றன.

சில நாளைக்கு முன்பு சோழ வள நாட்டைப் பாழ்படுத்திய புயலையும் வெள்ளத்தையும் போலவே இப்போது ஆத்திரப் புயலும் வெறியாகிய வெள்ளமும் நாலாபுறமும் பரவி நாட்டில் நாசத்தை விளைவித்தன.

Source

Previous articleRead Ponniyin Selvan Part 5 Ch 69
Next articleRead Ponniyin Selvan Part 5 Ch 71

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here