Home Kalki Read Ponniyin Selvan Part 5 Ch 71

Read Ponniyin Selvan Part 5 Ch 71

122
0
Read Ponniyin Selvan Part 5 Ch 71 Kalki -TamilNovel.in Ponniyin Selvan is one of the historical fiction novel in tamil history. Read Download Ponniyin Selvan Free Ponniyin Selvan Part 5, Ponniyin Selvan part 5 Ch 71, Ponniyin Selvan Kalki, Ponniyin Selvan,ps1,ps2, Read Ponniyin Selvan book, Download Ponniyin Selvan pdf
Ponniyin Selvan Part 5 Ch 71 பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்: தியாக சிகரம் அத்தியாயம் 71: திருவயிறு உதித்த தேவர்

Read Ponniyin Selvan Part 5 Ch 71

பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்: தியாக சிகரம்

அத்தியாயம் 71: திருவயிறு உதித்த தேவர்

Read Ponniyin Selvan Part 5 Ch 71

செம்பியன் மாதேவியைப் பார்க்கவேண்டுமென்று சுந்தர சோழர் பலமுறை சொல்லி அனுப்பிய பின்னர், அம்மூதாட்டி சக்கரவர்த்தியைக் காண்பதற்கு வந்தார். சக்கரவர்த்தி அவர் வரும் செய்தி அறிந்து வாசற்படி வரையில் நடந்து சென்று காத்திருந்து வரவேற்று அழைத்துச் சென்றார். தம் பக்கத்தில் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும்படி கேட்டுக் கொண்டார்.

“அரசர்க்கரசே! அடுத்தடுத்துத் துயரமான செய்திகளைக் கேட்டு நொந்திருக்கும் என் உள்ளம் தாங்கள் உடல் நலம் பெற்றிருப்பதைப் பார்த்துத் திருப்தி அடைகிறது. இறைவன் அருளால் நெடுங்காலம் தாங்கள் சிரஞ்சீவியாக வாழ்ந்திருந்து இந்த உலகத்தைப் பரிபாலித்து வர வேண்டும்” என்று முதிய பிராட்டியார் கூறினார்.

“அன்னையே! என் கால்கள் மீண்டும் நடக்கும் சக்தி பெற்றிருப்பதைக் குறிப்பிடுகிறீர்கள். அதைப் பற்றி எனக்கும் திருப்திதான்! இந்தச் சோழ நாடெல்லாம் போற்றி வணங்கும் தாங்கள் வரும்போதும் எழுந்து வரவேற்க முடியாதவனாயிருந்தேன். ஊமையும் செவிடுமான ஒரு தெய்வப் பெண்மணியின் அன்பின் சக்தியால் என் கால்கள் இழந்திருந்த இயல்பை மீண்டும் பெற்றன. எழுந்து நின்றும், நடந்து வந்தும் தங்களை வரவேற்கும் பாக்கியம் பெற்றவனானேன். ஆயினும் தேவி, நான் உயிர் வாழ்ந்திருப்பது பற்றித் திருப்தி அடையவும் இல்லை, இனி நெடுங்காலம் உயிர் வாழ விரும்பவும் இல்லை. தாங்கள் அத்தகைய ஆசி எனக்குக் கூறவேண்டாம். விரைவில் சிவபதம் கிடைக்க வேண்டுமென்று வாழ்த்துங்கள்!” என்றார் சுந்தரசோழர்.

“சக்கரவர்த்தி! தங்கள் குலத்து மூதாதையர் எல்லோரும் வீர சொர்க்கத்தையோ, சிவபதத்தையோ அடைந்தார்கள். தங்களுக்கும் பரலோகத்தில் அவர்கள் இடந்தேடி வைத்திருப்பார்கள். உரிய காலம் வரும்போது சிவ கணங்கள் வந்து தங்களை அழைத்துப் போவார்கள். ஆனால் அத்தகைய பதத்தை அடைவதற்குத் தாங்கள் அவசரப்படுதல் ஆகாது. இந்த உலகில் தங்களுக்கு இன்னும் கடமைகள் எவ்வளவோ இருக்கின்றன. நேர்மை நெறி பிறழாத தங்கள் ஆட்சியின் கீழ் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். சிவாலய கைங்கரியங்கள் நாடெங்கும் நடைபெற்று வருகின்றன. சைவர்கள், வைணவர்கள், புத்தர்கள், சமணர்கள் முதலான பல மதத்தினரும் தங்கள் ஆயுள் நீடிக்க வேண்டுமென்று பிரார்த்தனை செய்து வருகிறார்கள் …”

“தாயே! அவர்கள் யாரும் இனி அத்தகைய பிரார்த்தனை செய்யலாகாது. என் ஆயுள் நீடிக்கப் பிரார்த்திப்பது என் மனவேதனையை நீடிக்கச் செய்யும் பிரார்த்தனையாகும். சோழ நாடு அளித்த வீரர்களுக்குள்ளே வீராதி வீரனான ஆதித்த கரிகாலனைப் பறிகொடுத்துவிட்டு, நான் இவ்வுலகில் நெடுங்காலம் உயிரோடு இருக்க வேண்டுமா? அவன் இறப்பதற்கு முன்னதாக என் உயிர் போயிருக்கக் கூடாதா? …”

“சக்கரவர்த்தி! புத்திர சோகம் மிகக் கொடியதுதான். ஆனாலும் விதியின் வலிமையைப் பற்றிப் பேதையாகிய நான் தங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. கிருஷ்ண பகவான் அர்ச்சுனனுடன் இணைபிரியாத் தோழராயிருந்தார். காக்கும் கடவுளாகிய திருமாலின் அவதாரம் கிருஷ்ண பரமாத்மா. அவராலேகூட அரவானையும், அபிமன்யுவையும் காப்பாற்றிக் கொடுக்க முடியவில்லை. அத்தகைய வீரப் புதல்வர்கள் இறந்த பிறகும் அர்ச்சுனன் உயிர் வாழ்ந்திருக்கவில்லையா? பெற்ற பிள்ளைகளின் மீது ஆசை இல்லாதவன் அல்லவே அர்ச்சுனன்? ‘மன்னுயிரைக் காக்கும் பொருட்டு நீ உன் உயிரைக் காத்துக் கொள்ளவேண்டும்’ என்று கிருஷ்ண பரமாத்மா போதித்ததை ஏற்றுக் கொண்டு அர்ச்சுனன் உயிர் வாழ்ந்தான். சக்கரவர்த்தி! கிருஷ்ண பகவான் அர்ச்சுனனுக்குச் செய்த போதனை தங்களுக்கும் பொருத்தமானது.”

“தாயே! அபிமன்யு போர்க்களத்தில் வீரப்போர் புரிந்து மரணமடைந்தான். வீர சொர்க்கம் எய்தினான்!”

“தங்கள் குமாரன் வீரத்தில் அபிமன்யுவுக்குக் குறைந்தவன் அல்லவே! பன்னிரண்டாம் வயதில் சேவூர்ப் போர்க்களத்திலும், பதினெட்டாம் பிராயத்தில் வீரபாண்டியன் இறுதிப் போரிலும் ஆதித்த கரிகாலன் புரிந்த வீரச் செயல்களை இந்த உலகம் என்றும் மறக்காதே! அபிமன்யுவைக் கடைசியில் பலர் சூழ்ந்து கொண்டு அவனை நிராயுதபாணியாக்கி அதர்ம யுத்தம் செய்து கொன்றார்கள். அதுபோலவே ஆதித்த கரிகாலனையும் தந்திரத்தால் தனிமைப்படுத்திச் சதிகாரர்கள் பலர் சூழ்ந்து நின்று திடீரென்று தாக்கிக் கொன்றார்கள்…”

“தாயே! அவன் இறந்தது எப்படி என்பதை மட்டும் நான் நிச்சயமாகத் தெரிந்துகொள்ள முடியுமானால் என் மனம் ஓரளவு நிம்மதி அடையும்.”

“சென்று போனதைப்பற்றி எதற்காக மனத்தைப் புண்படுத்திக் கொள்ள வேண்டும்? கரிகாலனுடைய விதி முடிந்தது. வால் நட்சத்திரம் விழுந்தது. சோழ நாடு ஒரு மகா வீரனை இழந்தது. ஏன் எப்படி என்று விசாரித்து என்ன ஆகப்போகிறது?”

“உண்மை தெளிவாகாதபடியால், யார் யார் பேரிலோ சந்தேகம் உண்டாகிறது. தாயே! பூமியை ஆதிசேஷன் தாங்குவது போல் சோழ சாம்ராஜ்யத்தையே தாங்கி வந்தவரான பெரிய பழுவேட்டரையர் மேலேயே சிலர் சந்தேகத்தைக் கிளப்புகிறார்கள். வீண்பழி சுமத்துகிறார்கள்.”

“அவரையே கேட்டு உண்மையைத் தெரிந்து கொள்ளலாம் அல்லவா?”

“பெரிய பழுவேட்டரையரைக் கேட்க யாருக்குத் தைரியம் உண்டு? எனக்கு இல்லை, தாயே! எப்படியோ அவர் இதில் சிக்கிக் கொண்டு மனம் நொந்து போயிருக்கிறார். என்ன நடந்தது என்று அவராகச் சொல்லாத வரையில், அவரை யார் கேட்க முடியும்? அம்மா! தக்கோலம் போர்க்களத்தில் என் பெரிய தந்தை இராஜாதித்தர் யானை மேல் துஞ்சி வீர சொர்க்கம் புகுந்த பின்னர், சோழ சைன்யம் சின்னாபின்னப்பட்டுச் சிதறி ஓடத் தொடங்கியது. ஓடிய வீரர்களை வழிமறித்து நிறுத்தி மறுபடியும் ஒரு சைன்யமாக்கிக் கன்னரதேவன் படைகளை விரட்டியடித்த மகா வீரர் பெரிய பழுவேட்டரையர். அன்று அவர் அவ்விதம் செய்திராவிட்டால், இன்றைக்குச் சோழ ராஜ்யமே இருந்திராது. தக்கோலத்துப் போரில் அவருடைய திருமேனியில் அறுபத்து நாலு காயங்கள் பட்டன. அப்படியும் அவர் சோர்ந்துவிடாமல் போர்க்களத்தில் நின்று வெற்றி கண்டார். அதற்குப் பிறகு அவர் போர்க்களத்துக்கே போகக்கூடாதென்று கட்டுப்பாடு செய்து தனாதிகாரியாக்கினோம். அத்தகையவரை, என் தந்தைக்குச் சமமானவரை, நான் என்ன கேட்க முடியும்?”

“உண்மை வெளியாவதற்கு வேறு வழி ஒன்றும் இல்லையா?”

“வாணர் குலத்து வந்தியத்தேவன் கரிகாலனுடைய உடலின் அருகில் இருந்தான் என்று சொல்கிறார்கள். அவனைக் கேட்டு உண்மை அறியலாம் என்று எண்ணினேன். அவனும் பாதாளச் சிறையிலிருந்து தப்பி ஓடிவிட்டான். இதைப் பற்றிச் சின்னப் பழுவேட்டரையர் முதன்மந்திரி மேல் குறை சொல்லுவதற்கு நியாயம் இருக்கிறது.”

இதுவரையில் மௌனமாக இருந்த குந்தவை இப்போது குறுக்கிட்டு, “தந்தையே! அந்த வீரரை எப்படியும் கொண்டு வந்து ஒப்புவிப்பதாக முதன்மந்திரி பொறுப்பு ஒப்புக் கொண்டிருக்கிறாரே?” என்றாள்.

“குழந்தாய்! இம்மாதிரி முதன்மந்திரி பல தடவை பொறுப்பு ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் நிறைவேற்றுவது நிச்சயமில்லை. சம்புவரையர் மகன் கந்தமாறன் ஓடியவனைத் துரத்திக்கொண்டு போயிருப்பதாக அறிகிறேன். கந்தமாறன் அவ்வளவு முன்யோசனைக்காரன் அல்ல. அவசர புத்தி படைத்தவன். அதிலும் சம்புவரையர் குலத்துக்குக் களங்கம் உண்டாகக் கூடாது என்ற ஆத்திரமுள்ளவன். அவன் வந்தியத்தேவனைத் தொடர்ந்து போயிருப்பது என் கவலையை அதிகமாக்குகிறது.”

“ஐயா! சென்று போனதை மறந்துவிடுவதே நல்லது. இனி நடக்கவேண்டியதைப் பற்றி யோசியுங்கள்!”

“அன்னையே! அதற்காகவே தங்களை அழைத்துவரச் சொன்னேன். ஆளுக்கு மேல் ஆள் அனுப்பிக் கொண்டிருந்தேன். மேலே நடக்கவேண்டியது பற்றி எனக்கு யோசனை கூறி உதவ வேண்டும்.”

“சக்கரவர்த்தி! அறிவிற் சிறந்த அமைச்சர்கள் பலர் தங்களுக்கு யோசனை சொல்ல இருக்கிறார்கள். இந்தப் பேதை ஸ்திரீ என்ன யோசனை சொல்லப் போகிறேன்? என்னைக் கரம்பிடித்து என் ஜீவியத்தைப் புனிதப்படுத்திய மகா புருஷர் இவ்வுலகில் வாழ்ந்திருந்த காலத்திலும் நான் அரசாங்கக் காரியங்களில் கவனம் செலுத்தியதில்லை. அவர் தேவருலகம் சென்ற பிறகு சிவ கைங்கரியத்திலேயே ஈடுபட்டிருக்கிறேன். என்னால் என்ன யோசனை சொல்ல முடியும்?”

“தேவி! கோபித்துக்கொள்ளக் கூடாது. எங்கள் சோழ குலத்தில் தோன்றிய பெண்கள் எல்லோரும் பேதைகளாயிருக்கவில்லை. இதோ இருக்கிறாளே, என் அருமை மகள் குந்தவை அவளுக்கு நிகரான அறிவு படைத்தவர்களை நான் கண்டதில்லை …”

“மன்னிக்க வேண்டும், சோழ சக்கரவர்த்தி! நான் சோழ குலத்தில் பிறந்தவள் அல்லவே? மழவரையர் குலத்தில் பிறந்தவள் தானே?” என்றார் முதிய பிராட்டியார்.

“எந்தக் குலத்தில் பிறந்தாலும், பெண்கள் அறிவுடையவர்களாக இருக்கலாம். பிறந்த குலம், புகுந்த குலம் இரண்டுக்கும் நன்மை உண்டாக்கலாம். பெண்கள் வெறும் பிடிவாதம் பிடித்துப் பிறந்த குலமும், புகுந்த குலமும் அழிந்து போவதற்குக் காரணம் ஆவதும் உண்டு. தாயே, தாங்கள் அத்தகைய குல நாசத்துக்குக் காரணமாகப் போகிறீர்களா?”

இவ்விதம் சுந்தர சோழர் கேட்டதும், செம்பியன் மாதேவி நெருப்பை மிதித்தவர்போல் துடித்து, “சக்கரவர்த்தி! இது என்ன வார்த்தை? என்னால் ஏன் சோழ குலம் நாசம் அடைய வேண்டும்? நான் அவ்வளவு சக்தி படைத்தவள் அல்லவே?” என்று கண்களில் நீர் மல்க விம்மிக்கொண்டே கூறினார்.

“தேவி! சிறிது கடுமையாகப் பேசுவதற்காக என்னை மன்னிக்க வேண்டும். என் மூத்த குமாரன் இறந்து நான் உயிரோடிருக்கிறேன் என்னும் எண்ணம் என் நெஞ்சத்தைப் பிளந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் இதைக் காட்டிலும் எனக்கு ஏற்படக்கூடிய துன்பம் ஒன்றும் உண்டு. என் மூதாதையர் காலத்திலிருந்து வலுப்பெற்றுப் பரவி வரும் இந்தச் சோழ ராஜ்யம் என் காலத்தில் சின்னாபின்னப்பட்டு அழிந்தது என்றால், அதைக் காட்டிலும் கொடிய தண்டனை எனக்கு வேறொன்றும் இல்லை. மூன்று வருஷங்களாக என் அருமைக் குமாரன் கரிகாலனை நான் பார்க்காமலே இருந்தேன். எனக்காகக் காஞ்சி நகரில் அவன் பொன் மாளிகை கட்டினான். அங்கு வந்து தங்கும்படி என்னை அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தான் நான் போகவில்லை. என் உடல்நிலையைக் காரணமாகச் சொல்லிக்கொண்டிருந்தேன். உண்மையான காரணம் அதுவல்ல. நான் காஞ்சிக்குப் புறப்பட்டுச் சென்றால், பழுவேட்டரையர்களின் சிநேகத்தில் அவநம்பிக்கை கொண்டு நான் போய்விட்டதாக அவர்களும் நினைக்கலாம். மற்ற சிற்றரசர்களும் பெருந்தர அரசாங்க அதிகாரிகளும் கருதலாம். அதிலிருந்து என்ன விபரீதம் இந்தச் சோழ ராஜ்யத்துக்கு ஏற்படுமோ என்று எண்ணித்தான் நான் காஞ்சிக்குப் போகவில்லை. நான் போயிருந்தால் ஒருவேளை என் அருமைக் குமாரன் கரிகாலன் இன்று உயிரோடு இருந்திருப்பான் …”

“மன்னர் மன்னா! தாங்கள் எவ்வளவோ அறிவாளி. ஆற்றல் மிகப் படைத்தவர். ஆயினும் விதியை மாற்றி எழுதத் தங்களால் கூட முடியாது!..”

“ஆம், அன்னையே! விதியை என்னால் மாற்றியிருக்க முடியாது. ஆனால் என் குமாரனை அந்திய காலத்தில் பார்க்க முடியாமலேயே போய்விட்டதே! அவன் மனத்தில் குடிக்கொண்டிருந்த வேதனையை அறியாமல் போய்விட்டேனே என்று இன்றைக்கு நான் படும் பச்சாத்தாபம் இல்லாமற் போயிருக்கும். இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன்? விஜயாலய சோழரும், அவர் வழியில் வந்த வீராதி வீரர்களும் இரத்தம் சிந்தி உயிரைக் கொடுத்து ஸ்தாபித்த இந்தச் சோழ ராஜ்யத்தின் நலத்தைக் கருதி என் சொந்த ஆசாபாசங்களையெல்லாம் நான் வேரோடு களைந்து விட்டிருந்ததைத் தங்களுக்குத் தெரிவிப்பதற்காகத்தான். ஆதித்த கரிகாலனை என்ன காரணத்தினாலோ பழுவேட்டரையர்களும், அவர்களைச் சேர்ந்த சிற்றரசர்களுக்கும் பிடிக்காமல் போய்விட்டது. தங்கள் குமாரனும், என் சகோதரனுமான மதுராந்தகனை எனக்குப் பிறகு சோழ சிங்காதனத்தில் ஏற்றி வைக்கவேண்டும் என்று பிரயத்தனம் செய்தார்கள். அவர்கள் அப்படிப் பிரயத்தனம் செய்ததில் தவறு ஒன்றுமில்லை. மகா புருஷரும், சிவஞான சித்தருமான கண்டராதித்தருடைய புதல்வன் சோழ சிங்காதனத்தில் ஏற எல்லா விதத்திலும் தகுதி வாய்ந்தவன். உண்மையில் நான் முடிசூட்டிக் கொண்டதே தவறான காரியம். அப்போது பெரியவர்கள் எல்லாரும் சொன்னார்களே என்று, மறுத்துப் பேச முடியாமல், இசைந்துவிட்டேன். அதன் பலன்களை இன்று அனுபவிக்கிறேன். என் அருமைக் குமாரனைப் பறிகொடுத்துவிட்டு நான் உயிரோடிருக்கிறேன். இவ்வளவு துன்பமே எனக்குப் போதும். இனி இந்தப் பெரிய இராஜ்யம் உள்நாட்டுச் சண்டையினால் அழிந்து போவதை என் கண்ணால் பார்க்க விரும்பவில்லை. தேவி! அத்தகைய அழிவு இந்தச் சோழ சாம்ராஜ்யத்துக்கு நேராமல் தடுப்பதற்குத் தாங்கள் உதவி செய்யவேண்டும்!” என்றார் சுந்தர சோழர்.

செம்பியன் மாதேவி தம் கண்களில் துளித்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, “அரசர்க்கரசே! தாங்கள் கூறியது எதுவும் என் சிற்றறிவுக்குச் சரியென்று தோன்றவில்லை. என்னுடைய கணவருக்குப் பிறகு என் மைத்துனரும் தங்கள் தந்தையுமான அரிஞ்சய தேவர் சிங்காதனம் ஏறினார். என் கணவர் விருப்பத்தின்படியே அது நடந்தது. அரிஞ்சயருக்கும் பிறகு தாங்கள் சிங்காதனம் ஏற வேண்டும் என்பதும் என் கணவரின் விருப்பந்தான். மூன்று உலகையும் ஒரு குடையில் ஆண்ட தங்கள் பாட்டனார் பராந்தகத்தேவரும் அவ்வாறு ஏற்பாடு செய்து விட்டுச் சென்றார். ஆகையால், தாங்கள் சோழ சிங்காதனம் ஏறியதில் முறைத் தவறு எதுவும் இல்லை. என்னுடைய நாதர் சிவ பக்தியில் ஈடுபட்டு ஆத்மானுபூதி செல்வராக விளங்கினார். இராஜரீகக் காரியங்களில் அவருடைய மனம் ஈடுபடவில்லை. ஆகையால் அவருடைய காலத்தில் சோழ ராஜ்யம் சுருங்கிக் கொண்டு வந்தது. தாங்கள் பட்டத்துக்கு வந்த பிறகு மறுபடியும் இராஜ்யம் விஸ்தரித்தது. தெற்கேயும் வடக்கேயும் தோன்றியிருந்த பகைவர்கள் அழிக்கப்பட்டார்கள். இவ்விதம் இராஜ்யம் மேன்மையுறுவதற்கு முக்கிய காரணமாயிருந்தவன் தங்கள் அருமைச் செல்வன் ஆதித்த கரிகாலன். அவனுக்கு உலகம் அறிய இளவரசுப் பட்டம் கட்டப்பட்டது. அதை மாற்றி என் மகனுக்கு இராஜ்ய உரிமையை அளிக்க வேண்டும் என்பதற்கு நான் எப்படிச் சம்மதிக்க முடியும்? நான் சம்மதித்தாலும் உலகம் சம்மதிக்குமா? இராஜ்யத்தின் மக்கள் சம்மதிப்பார்களா? சக்கரவர்த்தி! உள்நாட்டுச் சண்டையினால் இராஜ்யம் அழிவதைத் தடுக்க விரும்புவதாகச் சற்று முன்னால் சொன்னீர்கள். ஆதித்த கரிகாலனைப் புறக்கணித்துவிட்டு என் புதல்வனுக்குப் பட்டம் கட்டியிருந்தால், அதே உள்நாட்டுச் சண்டை நேர்ந்திராதா? இராஜ்யம் அழிந்திராதா?” என்று கேட்டார்.

“ஆம், தாயே! அதனாலேதான் நானும் தயங்கிக் கொண்டிருந்தேன். எல்லோரையும் சமரசப்படுத்தி அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய ஏற்பாடு செய்யப் பிரயத்தனப்பட்டேன். அது கைக்கூடுவதற்குள்ளே, விதி குறுக்கிட்டுவிட்டது. கரிகாலனுடைய ஆயுள் முடிந்துவிட்டது. தாயே! அடுத்தாற்போல் நான் செய்யவேண்டியது என்ன? தாங்களே சொல்லுங்கள்! இந்த இராஜ்யத்தின் பொறுப்பை என்னால் இனித் தாங்க முடியாது. யாரிடமாவது ஒப்புவித்துவிட்டுக் கரிகாலனுடைய கடைசி விருப்பத்தை நிறைவேற்ற விரும்புகிறேன். காஞ்சியில் எனக்காகவென்று கரிகாலன் கட்டியுள்ள பொன் மாளிகையில் தங்கி என் அந்தியக் காலத்தைக் கழிக்க விரும்புகிறேன். இப்போது யாருக்குப் பட்டம் கட்டுவது என்று சொல்லுங்கள். அருள்மொழியைக் காட்டிலும் மதுராந்தகன் பிராயத்தில் மூத்தவன். என்னைவிட இளையவன் ஆனாலும், அவனுக்குச் சிறிய தந்தை முறையில் உள்ளவன். கொடும்பாளூர் வேளாரும், திருக்கோவலூர் மலையமானும் அருள்மொழிக்குப் பட்டம் கட்ட வேண்டும் என்கிறார்கள். தர்மத்துக்கும் நியாயத்துக்கும் குல முறைக்கும் விரோதமான இந்தக் காரியத்துக்கு நான் எப்படி உடன்பட முடியும்? அல்லது தாங்கள்தான் எப்படி உடன்பட முடியும்? அன்னையே எனக்கு உதவி செய்யுங்கள்! மதுராந்தகனுக்கு முடிசூட்டத் தங்கள் சம்மதத்தைத் தெரிவியுங்கள். அதை வைத்துக்கொண்டு, நான் சேனாதிபதி பெரிய வேளாரையும் திருக்கோவலூர் மலையமானையும் சம்மதிக்கச் செய்வேன்! தங்கள் சம்மதத்தையும், அனுமதியையும் தெரிவித்து இந்தச் சோழ சாம்ராஜ்யத்தைக் காப்பாற்றிய புண்ணியத்தைக் கட்டிக்கொள்ளுங்கள்!” என்றார் சுந்தர சோழ சக்கரவர்த்தி.

செம்பியன் மாதேவி, “ஐயா! என் சம்மதத்தைக் கேட்க வேண்டாம். சிவபதம் அடைந்த என் இறைவர் எனக்கு இட்ட கட்டளைக்கு மாறாக நான் நடக்க முடியாது. ஆனால், இராஜ்ய விவகாரங்களில் நான் இனிக் குறுக்கிடுவதில்லை. மதுராந்தகனை அழைத்து அவன் சம்மதத்தைக் கேட்டு எப்படி உசிதமோ அப்படிச் செய்யுங்கள்!” என்றார்.

“ஆம், ஆம்! மதுராந்தகனை அழைத்து அவனுடைய சம்மதத்தைக் கேட்டுக் கொண்டுதான் எதுவும் தீர்மானிக்க வேண்டும். அதற்கும் தங்கள் உதவி வேண்டும், தேவி! மதுராந்தகன் எங்கே?” என்றார் சக்கரவர்த்தி.

செம்பியன் மாதேவி தம் தொண்டை அடைக்க, நாத் தழுதழுக்க, “மதுராந்தகன் எங்கே? சென்ற மூன்று தினங்களாக அந்தக் கேள்வியைத்தான் நானும் கேட்டுக்கொண்டிருக்கிறேன் யாரும் மறுமொழி சொல்லவில்லை. அரசே! என் புதல்வன் எங்கே? கோட்டைத் தளபதி சின்னப் பழுவேட்டரையரைக் கூப்பிட்டுக் கேளுங்கள்!” என்றார்.

“சின்னப் பழுவேட்டரையர் தங்களை கேட்கவேண்டும் என்கிறார். தாங்களும், முதன்மந்திரி அநிருத்தரும் ஏதோ சூழ்ச்சி செய்து மதுராந்தகனை மறைத்து வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டுகிறார். அன்னையே! இப்போது சின்னப் பழுவேட்டரையரையும், முதன்மந்திரியையும் அழைத்துவரச் செய்கிறேன் அனுமதி கொடுங்கள்!” என்றார் சக்கரவர்த்தி.

“அப்படியே அழைத்துவரச் செய்யுங்கள். நானும் அவர்களைக் கேட்கிறேன்!” என்றார் செம்பியன் மாதேவி. குந்தவை உடனே வாசற்பக்கம் சென்று அங்கிருந்த காவலர்களிடம் சொல்லி அனுப்பினாள்.

சிறிது நேரத்துக்கெல்லாம் முதன்மந்திரியும் சின்னப் பழுவேட்டரையரும் வந்தார்கள்.

சக்கரவர்த்தி சின்னப் பழுவேட்டரையரை நோக்கி, “தளபதி! சோழ நாடு போற்றி வணங்கும் மூதாட்டியார், நீர் கேட்ட அதே கேள்வியைக் கேட்கிறார். ‘மதுராந்தகன் எங்கே?’ என்று வினவுகிறார். மதுராந்தகத் தேவரைப் பற்றி தாங்கள் அறிந்ததைச் சொல்லுங்கள். தங்கள் சந்தேகத்தையும் ஒளிவுமறைவின்றிக் கூறுங்கள்!” என்றார்.

சின்னப் பழுவேட்டரையர் கூறினார்: “தேவியாரின் சிவ பக்தியும் சீலமும் உலகம் அறிந்தவை. சோழ நாட்டு மக்கள் அவரை நடமாடும் தெய்வமாகக் கருதிப் போற்றுகிறது போல் நானும் போற்றுகிறேன். நான் இப்போது தெரிவித்துக் கொள்வதைக் குற்றம் கூறுவதாக எண்ணக் கூடாது. எந்தக் காரணத்தாலோ தேவியார் தமது குமாரர் சோழ சிங்காதனம் ஏறுவதை விரும்பவில்லை; இதுவும் எல்லோரும் அறிந்தது. மூத்த பிராட்டியாரைக் காட்டிலும், எனக்காவது மற்றவர்களுக்காவது அவருடைய புதல்வர் விஷயத்தில் அதிக அன்பு இருக்க முடியாது. ஆயினும் மர்மமாயிருக்கிற சில விஷயங்களை விளக்குதல் அவசியமாயிருக்கிறது. அதிலும் சக்கரவர்த்தி ‘மதுராந்தகரைக் கொண்டு வருக!’ என்று அடியேனுக்குக் கட்டளை இட்டிருப்பதால், என்னுடைய சில சந்தேகங்களையும் வெளியிட வேண்டி வருகிறது. மூன்று நாளைக்கு முன்னால் மூத்த எம்பெருமாட்டியும், மதுராந்தகத் தேவரும் கோட்டைக்கு வெளியே சென்றார்கள். புஷ்பத் திருப்பணி செய்யும் சேந்தன் அமுதனுடைய குடிசைக்குச் சென்று க்ஷேமம் விசாரித்தார்கள். பின்னர் தேவியார் மட்டும் கோட்டைக்குத் திரும்பினார். சிறிது நேரத்துக்குப் பிறகு நானும் என் தமையனாரும் கோட்டை வாசலுக்குச் சற்று தூரத்தில் நின்று கொடும்பாளூர் வேளாருடன் பேசிக்கொண்டிருந்தோம். மதுராந்தகத் தேவரைப்பற்றி நான் விசாரித்துக் கொண்டிருந்த சமயத்தில் யானை பல்லக்கு பரிவாரத்துடன் சிலர் கோட்டைக்குள் நுழைந்தார்கள். ‘மதுராந்தகத்தேவர் வாழ்க!’ என்ற கோஷமும் கேட்டது. முதன்மந்திரி அவர்கள்தான் அப்போது அதைச் சுட்டிக் காட்டினார். யானை மேலிருந்தவர் மதுராந்தகத் தேவர் என்று கூறினார். எனக்கு அதைப் பற்றிச் சிறிது சந்தேகம் ஏற்பட்டது. பின்னர், சக்கரவர்த்தியின் கட்டளைப்படி கோட்டைக் காவல் என் வசத்தில் வந்தது. என் அரண்மனையில்தான் மதுராந்தகர் தங்குவது வழக்கம். அன்றிரவு அதைப்பற்றி நான் விசாரிக்கவில்லை. மறுநாள் விசாரித்த போது என் அரண்மனைக்கு வரவில்லை என்று தெரிந்தது. பின்னர் கோட்டை முழுவதும் தேடிப் பார்த்தும், யார் யாரையோ விசாரித்துப் பார்த்தும், மதுராந்தகத் தேவரைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை! கோட்டைக்குள் பிரவேசித்தவர் எப்படி மாயமாய் மறைந்தார்? தேவியாரும் முதன்மந்திரியும் இப்பொழுதுதான் நான் சொல்லப் போவதற்காக மன்னிக்க வேண்டும். அவர்கள் இருவரும் ஏதோ சூழ்ச்சி செய்து, மதுராந்தகர் பீதி கொள்ளும்படியான செய்தி எதையோ அவரிடம் சொல்லி, இந்த நகரை விட்டும், நாட்டை விட்டுமே ஓடிப் போகும்படி செய்து விட்டார்கள் என்று ஐயுறுகிறேன். நான் சொல்வது தவறாயிருந்தால் மீண்டும் பெரிய பிராட்டியாரின் மன்னிப்பைக் கோருகிறேன்.”

செம்பியன் மாதேவி தழுதழுத்த குரலில், “தளபதி! தாங்கள் இப்போது கூறியது முற்றும் தவறு. சிவபெருமானுடைய பாத கமலங்கள் சாட்சியாகச் சொல்லுகிறேன். முதன்மந்திரி அநிருத்தரிடம் சமீபத்தில் என் குமாரனைப் பற்றிப் பேசியதுமில்லை. சூழ்ச்சி செய்ததும் இல்லை. அன்று மாலை நானும் மதுராந்தகனும் சேந்தன் அமுதன் குடிசைக்குப் போனது உண்மைதான். நான் அங்கிருந்து புறப்பட்டபோது மதுராந்தகன் சிறிது நேரம் கழித்து வருவதாகச் சொன்னான். அதற்குப் பிறகு நான் அவனைப் பார்க்கவில்லை. மூன்று நாட்களாக நானும் அவனைத் தேடிக் கொண்டு தானிருக்கிறேன்!” என்றார்.

“தேவியார் கூறுவதை ஒப்புக்கொள்கிறேன் அப்படியானால், முதன்மந்திரிதான் இந்த மர்மத்தை விடுவிக்க வேண்டும்!” என்றார் காலாந்தகர்.

“எந்த மர்மத்தை?” என்று முதன்மந்திரி அநிருத்தர் கேட்டார்.

“தேவியின் புதல்வர் காணாமற்போன மர்மத்தைப் பற்றித்தான்!”

“தளபதி! இந்தக் கோட்டை முழுவதும் தாங்கள் நன்றாகத் தேடிப் பார்த்ததாகக் கூறியது உண்மைதானா?”

“ஆம், தங்கள் அரண்மனையைத் தவிர மற்ற எல்லா இடங்களையும் தேடித் துருவிப் பார்த்தாகிவிட்டது.”

“என் அரண்மனையை மட்டும் விட்டு விட்ட காரணம் என்ன?”

“தாங்கள் சோழ சாம்ராஜ்யத்தின் முதன்மந்திரி என்கிற மரியாதை காரணமாகத்தான்!”

“ஆகா! அப்படியானால் தங்கள் கடமையைத் தாங்கள் சரியாகச் செய்யவில்லை என்று ஏற்படுகிறது. போனது போகட்டும். சக்கரவர்த்தி! தங்களுடைய பெரிய அன்னையும் சோழ நாடு போற்றும் சிவபக்த சிரோமணியுமான மூத்த எம்பிராட்டியார் தமது புதல்வரைப் பற்றி என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை. நான் அவருடன் சூழ்ச்சி எதுவும் செய்யவில்லை. ஆனால் ஒன்று சொல்கிறேன். தேவியாரின் திருவயிற்றில் உதித்த தேவர் என்னுடைய மாளிகையிலேதான் மூன்று நாளாக இருந்தார். இப்போது இந்த அறையின் வாசலிலே வந்து தங்களையும் அன்னையையும் தரிசிப்பதற்காகக் காத்திருக்கிறார். அனுமதி கொடுத்தால், அழைத்து வருகிறேன்!”

இவ்வாறு முதன்மந்திரி கூறியதும் அங்கிருந்தவர்கள் ஒவ்வொருவரும் அடைந்த வியப்பைச் சொல்லி முடியாது. சக்கரவர்த்தி, “முதன்மந்திரி! இது என்ன வேடிக்கை! தேவியின் புதல்வரை அழைத்து வருவதற்கு அனுமதி கேட்பானேன்! சீக்கிரமே வரவழையுங்கள்!” என்றார்.

முதன்மந்திரி அநிருத்தர் வாசற்படியண்டை சென்று கை தட்டிவிட்டு மறுபடியும் உள்ளே வந்தார். அடுத்த கணம் சேந்தன் அமுதனை முன்னால் விட்டுக்கொண்டு ஆழ்வார்க்கடியான் நம்பி வந்தான்.

சின்னப் பழுவேட்டரையர் மிக்க ஆத்திரத்துடன், “முதன்மந்திரியின் பரிகாசத்துக்கு ஓர் எல்லை வேண்டாமா?” என்று கேட்டார்.

ஆனால் செம்பியன்மாதேவி இருகரங்களையும் நீட்டித் தம் திருமுகத்தில் அன்பும் ஆர்வமும் ததும்ப “மகனே!” என்று அழைத்ததும், தளபதிக்கு மனக் குழப்பம் உண்டாகி விட்டது.

சேந்தன் அமுதன், “தாயே! என்னை அழைக்க இப்போதேனும் தங்களுக்கு உள்ளம் உவந்ததோ? அது நான் செய்த தவத்தின் பயன்தான்!” என்று கண்களில் நீர் ததும்பச் சொல்லிக்கொண்டு செம்பியன்மாதேவியை நெருங்கினான்.

மதுராந்தக உத்தமச் சோழன் என்று சரித்திரத்தில் புகழ்பெற்ற சிவ பக்திச் செல்வனைத் திருவயிறு வாய்த்த தேவி அன்புடன் அணைத்துக்கொண்டு மெய்மறந்து ஆனந்தக் கண்ணீர் பொழிந்தார்.

Source

Previous articleRead Ponniyin Selvan Part 5 Ch 70
Next articleRead Ponniyin Selvan Part 5 Ch 72

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here