Home Kalki Read Ponniyin Selvan Part 5 Ch 72

Read Ponniyin Selvan Part 5 Ch 72

123
0
Read Ponniyin Selvan Part 5 Ch 72 Kalki -TamilNovel.in Ponniyin Selvan is one of the historical fiction novel in tamil history. Read Download Ponniyin Selvan Free Ponniyin Selvan Part 5, Ponniyin Selvan part 5 Ch 72, Ponniyin Selvan Kalki, Ponniyin Selvan,ps1,ps2, Read Ponniyin Selvan book, Download Ponniyin Selvan pdf
Ponniyin Selvan Part 5 Ch 72 பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்: தியாக சிகரம் அத்தியாயம் 72: தியாகப் போட்டி

Read Ponniyin Selvan Part 5 Ch 72

பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்: தியாக சிகரம்

அத்தியாயம் 72: தியாகப் போட்டி

Read Ponniyin Selvan Part 5 Ch 72

மழவர் குலத்தில் உதித்தவரும் சிவஞான கண்டராதித்த சோழரின் வாழ்க்கைத் துணைவியுமான செம்பியன்மாதேவியை, ‘ஸ்ரீமதுராந்தகத் தேவரான உத்தம சோழ தேவரைத் திருவயிறு வாய்த்த உடைய பிராட்டியார்’ என்று அவர் காலத்திய கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. சாதாரணமாகத் தாய்மார்கள் தம் குழந்தையைப் பத்து மாதம் வயிற்றில் வைத்துச் சுமந்தே பெறுவார்கள். சில தாய்மார்கள் வேறு பெண்மணிகளின் வயிற்றில் பிறந்த குழந்தைகளைத் தங்கள் குழந்தைகளைப் போலவே வளர்ப்பதும் உண்டு. செம்பியன்மாதேவி வேறொரு பிள்ளையை வெகு காலமாகத் தம் பிள்ளையென வளர்த்து வந்த காரணத்தினால், அந்த உண்மையை அறிந்திருந்த ஒருவர் மேற்கண்டவாறு ‘உத்தம சோழரைத் திருவயிறு வாய்த்தவர்’ என்று கல்வெட்டிலே குறிப்பிட்டார் போலும்!

உத்தம சோழர் ஐந்து பிராயத்துச் சிறுவனாயிருந்த போதே செம்பியன்மாதேவி அவனையும், வாணி அம்மையையும் பார்க்கும்படி நேர்ந்தது. பல ஆண்டுகள் கழித்து வாணி அம்மையைச் சந்தித்ததும், அவளுடைய க்ஷேம லாபங்களைப் பற்றிச் செம்பியன்மாதேவி அன்புடன் விசாரித்தார். வாணியின் குழந்தை என்று எண்ணிய சேந்தன் அமுதனிடம் இயற்கையாகவே அம்மூதாட்டிக்கு அன்பு சுரந்தது. குழந்தையைப் பற்றி விசாரித்த போது வாணி அம்மையின் முகத்தில் திகைப்பும், அச்சமும் உண்டானதைக் கண்டார். முதலில், அதற்கு வேறு காரணங்கள் இருக்கக்கூடும் என்று எண்ணினார். வாணி பேசத் தெரியாதவளாய் இருந்தபடியால் திட்டமாக அவளிடமிருந்து ஒன்றும் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் வாணி அம்மை ஒரு காலத்தில் தமக்குச் செய்த உதவியைக் கருதியும், அவளுடைய குழந்தையிடம் ஏற்பட்ட பாசம் காரணமாகவும்; தாயும், பிள்ளையும் கவலையின்றி வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய உதவிகளைச் செய்தார். தஞ்சை நகருக்கு அருகில் குடியிருந்து, தளிக்குளத்தார் கோயிலுக்குப் புஷ்பக் கைங்கரியம் செய்து வருவதற்காக மானியங்களும் அளித்தார்.

சேந்தன் அமுதன் கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிவ பக்தியிலும் சிறந்து வளர்ந்து வந்தான். அன்னைக்கு உதவியாகப் புஷ்பத் திருப்பணி செய்வதிலும் மிக்க ஊக்கம் காட்டி வந்தான். இதைக் காணக் காணச் செம்பியன்மாதேவிக்கு அவனிடம் இயற்கையாகச் சுரந்த அன்பு வளர்ந்து வந்தது. ஒருநாள் அவருடைய மனத்தில் விசித்திரமான ஐயம் ஒன்று தோன்றியது. அது அவருக்கு ஒரே சமயத்தில் இன்பத்தையும் வேதனையையும், இனந்தெரியாத பீதியையும் உண்டாக்கியது. எத்தனையோ விதமாக அந்த ஐயத்தைப் போக்கிக் கொள்ள முயன்றும் இயலவில்லை. பிறந்து சில தினங்களில் இறந்துபோன தம் குழந்தையைப் பற்றிய நினைவு அடிக்கடி எழுந்த வண்ணமிருந்தபடியால் அவர் உள்ளம் அமைதி கொள்ளவில்லை.

கடைசியாக ஒருநாள் வாணி அம்மையிடம் தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொள்வது என்று தீர்மானித்தார். வாணியைத் தனியாக அழைத்து வரும்படி செய்தார். இறந்துபோன தம் குழந்தையை வாணியிடம் கொடுத்து ஒருவரும் அறியாமல் புதைத்துவிட்டு வரச்சொன்னார் அல்லவா? அவ்வாறு புதைத்த இடத்தில் அதன் ஞாபகார்த்தமாகப் பள்ளிப்படைக் கோயில் ஒன்று எழுப்ப வேண்டும் என்று சொல்லி, புதைத்த இடத்தைச் சொல்லும்படிக் கேட்டார். இந்தப் பழைய நிகழ்ச்சிகளைப் பற்றிய ஞாபகமே அவருக்குத் துன்பம் அளித்தது. செவிடும் ஊமையுமான வாணியிடம் இதையெல்லாம் சமிக்ஞை பாஷையினால் கேட்க வேண்டியதாக இருந்தது. அது அவருக்கு மேலும் சொல்ல முடியாத வேதனையை அளித்தது.

அவருடைய கேள்விகளுக்கு விடை கூற வாணி மிகவும் தயங்கினாள். கடைசியாக பேரரசியின் கட்டளையை மீற முடியாமல் உண்மையைச் சொல்லி விட்டாள். புதைப்பதற்காகத் தன்னிடம் கொடுக்கப்பட்ட குழந்தை உண்மையில் இறக்கவில்லை என்பதையும், அதைத் தனக்குக் கருத்திருமன் என்பவன் எடுத்துக் காட்டியதையும், பின்னர் அரசியிடம் திரும்பி வந்தால் என்ன நேரிடுமோ என்று அஞ்சிக் கருத்திருமனுடன் திருமறைக்காடு சென்றதையும், சில காலத்துக்கெல்லாம் கருத்திருமன் தன்னை விட்டுவிட்டுப் போய் விட்டபடியால், தான் திரும்பிப் பழையாறைக்கு வந்ததையும் விவரமாகக் கூறினாள்.

சேந்தன் அமுதன் உண்மையிலேயே தன் வயிற்றில் பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளைதான் என்பதை அறிந்ததும் செம்பியன்மாதேவி ஒரு புறத்தில் எல்லையற்ற ஆனந்தம் அடைந்தார். அவர் உடம்பெல்லாம் சிலிர்த்துப் பூரித்தது. கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் பொழிந்தது. “மகனே!” என்று கூவிச் சேந்தன் அமுதனைக் கட்டித் தழுவிக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. ஆயினும், அந்த ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டார். அந்த உண்மை வெளியானால், அதிலிருந்து ஏற்படக் கூடிய குழப்பங்களை எண்ணி ஒரு புறம் பீதி கொண்டார். “உலகில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளும் இறைவனுடைய குழந்தைகளே” என்று கருதக்கூடிய உயர் ஞான பரிபக்குவத்தை அவருடைய உள்ளம் அடைந்திருந்தபடியால், பெற்ற பிள்ளையிடம் தாய்க்கு ஏற்படக்கூடிய பாசத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள அவரால் முடிந்தது. “அரண்மனையில் வளர்ந்தால் என்ன? குடிசையில் வளர்ந்தால் என்ன? இந்த நிலையில்லா மனித வாழ்வின் சுக போகங்கள் எல்லாம் வெறும் மாயை அல்லவா? உலக வாழ்வை நீத்த பிறகு அடைய வேண்டிய கதி அல்லவோ முக்கியமானது? என் பதி அரச போகங்களை வெறுத்துச் சிவபெருமானுடைய இணையடி நிழலில் திளைத்து வாழ்க்கை நடத்தியபடியால் அவருக்குப் பிறந்த பிள்ளை இவ்விதம் குடிசையில் வாழ்ந்து இறைவனுக்குத் தொண்டு செய்யும் பேறு பெற்றான் போலும்!” என்றெல்லாம் அடிக்கடி எண்ணி மனத்தை உறுதிப்படுத்திக் கொண்டார்.

ஆயினும், சேந்தன் அமுதன் தமது வயிற்றில் பிறந்த மகன் என்று அறிந்ததனால், தாம் வளர்த்த குமாரனாகிய மதுராந்தகனைச் சோழ சிங்காதனத்தில் ஏற்றி வைக்கக்கூடாது என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் வலுப்பட்டது. முன்னமேயே கண்டராதித்தரிடம் தாம் செய்த குற்றதை அவர் ஒப்புக் கொண்டு மன்னிப்பும் பெற்றிருந்தார். “உன் வயிற்றில் பிறந்த குழந்தையானால் என்ன? அனாதைப் பெண்மணிக்குப் பிறந்த குழந்தையாய் இருந்தால் என்ன? இறைவனுடைய திருக்கண்ணோட்டத்தில் இருவரும் சமமானவர்கள்தான். ஆகையால் மதுராந்தகனை உன் மகனைப் போலவே வளர்த்து வா! ஆனால் சோழ சிங்காதனத்தில் அவன் ஏற வேண்டும் என்று ஆசைப்படாதே! அதற்கு இணங்கவும் இணங்காதே! அது நான் பிறந்த சோழ குலத்துக்குத் துரோகம் செய்ததாகும். அப்படிப்பட்ட நிலைமை ஏற்படுவதாயிருந்தால் நீ உண்மையை ஒப்புக்கொள்வதற்கும் தயங்காதே!” என்று கண்டராதித்தர் தேவியிடம் சொல்லி அவ்வாறு வாக்குறுதியும் பெற்றிருந்தார். அந்த வாக்குறுதியை எப்படியும் நிறைவேற்றி வைக்கப் பெரிய பிராட்டி செம்பியன்மாதேவி நிச்சயித்திருந்தார்.

ஆனால் தங்களுடைய சொந்தக் குமாரன் வாணி அம்மையின் மகனாகக் குடிசையில் வளர்ந்து வருவதை அறியாமலேயே அந்த மகான் சிவபதம் அடைந்து விட்டார். இது தெரிந்திருந்தால், அவர் என்ன செய்திருப்பார்? சேந்தன் அமுதன் விஷயத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டிருப்பார்? இதைக் குறித்து செம்பியன்மாதேவி எவ்வளவோ முறை சிந்தனை செய்தார். “இறைவனுடைய சித்தத்தினால் இவ்விதம் நேர்ந்து விட்டது. ஊமையின் மகன் அரண்மனையில் வளரவேண்டும் என்பதும் பேரரசரின் மகன் குடிசையில் வளரவேண்டும் என்பதும் இறைவனுடைய திருவுள்ளம், அதில் நாம் குறுக்கிடக்கூடாது. அதை மாற்ற முயல்வதால் பல குழப்பங்கள் விளையும். தம் வளர்ப்புக் குமாரனின் மனம் அதனால் பெரிதும் புண்படும். அத்தகைய பாவத்தைச் செய்யக்கூடாது!” என்று முடிவாகத் தீர்மானித்துக் கொண்டார்.

இறைவனுடைய திருவருளில் அவர் கொண்டிருந்த இணையில்லாத நம்பிக்கையின் துணையினாலேயேதான் மேற்கூறிய தீர்மானத்தை அவர் காரியத்தில் நிறைவேற்றுவதும் சாத்தியமாயிற்று. ஆயினும் அடிக்கடி சேந்தன் அமுதனைப்பற்றி அவரால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவனுடைய நினைவு வரும்போதெல்லாம் இயற்கையான தாய்ப் பாசம் அவருடைய உள்ளத்தில் பொங்கிப் பெருகாமலும் இருப்பதில்லை. இந்தப் போராட்டமானது அவருடைய இதய ஆழத்திலே பல ஆண்டு காலமாக நிகழ்ந்து கொண்டிருந்தது.

நெடுங்காலமாக அணைபோட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெள்ளம் திடீரென்று ஒருநாள் அணையை உடைத்துக் கொண்டு கிளம்புவது உண்டு அல்லவா? அப்போது வெள்ளம் எவ்வளவு சக்தியுடனும், வேகத்துடனும் பாய்ந்து செல்லும் என்பதைப் பலர் பார்த்தும் அனுபவித்துமிருப்பார்கள். செம்பியன்மாதேவியின் உள்ளத்தில் அணைபோட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தாய்ப் பாசமாகிய உணர்ச்சி வெள்ளமும் இப்பொழுது கரையை உடைத்துக் கொண்டு பாய்ந்தது.

முதன்மந்திரி அநிருத்தர் “தேவியின் திரு வயிற்றில் உதித்த தேவர்” என்று குறிப்பிட்டதுதான் அவ்வாறு செம்பியன்மாதேவி உள்ளத்தின் அணை உடைவதற்குக் காரணமாயிற்று. அந்த வார்த்தைகளை அநிருத்தர் கூறியவுடன் செம்பியன்மாதேவி பத்து மாத காலம் குழந்தையைத் தம் வயிற்றில் வைத்து வளர்த்த அனுபவம் அவ்வளவையும் ஒரு வினாடிப் பொழுதில் மறுபடியும் அனுபவித்தார். தம்மை மறந்து, தாம் செய்து கொண்டிருந்த சங்கல்பத்தை மறந்து, சேந்தன் அமுதனை “என் மகனே!” என்று அழைக்கவும், அவனைத் தழுவிக் கொண்டு கண்ணீர் வெள்ளம் பெருக்கவும் நேர்ந்தது.

இவ்விதம் செம்பியன்மாதேவி உணர்ச்சிப் பெருக்கினால் மெய்மறந்த நிலையில் இருந்தபோதிலும், அமுதன் கூறிய வார்த்தைகள் அவருடைய மனத்தில் நன்கு பதிந்திருந்தன. “தாயே! என்னை ‘மகனே!’ என்று அழைக்க இப்போதேனும் தங்களுக்கு உள்ளம் உவந்ததோ?” என்று கூறினான் அல்லவா? அவ்வார்த்தைகளின் கருத்து என்ன? அமுதனுக்கு அவனைப் பெற்ற அன்னை யார் என்பது முன்னமேயே தெரியுமா? தெரிந்தும் இத்தனை காலம் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தானா?

சற்று நேரம் வார்த்தை சொல்ல முடியாத பரவச நிலையில் இருந்த பிறகு, செம்பியன்மாதேவி தம் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு, “மகனே! உனக்கு முன்னமே தெரியுமா, நான் உன்னைப் பத்து மாதம் சுமந்து பெற்ற பாவி என்று? தெரிந்து என் பேரில் கோபம் கொண்டிருந்தாயா? அதனால் என்னிடம் அதைப்பற்றிக் கேளாமல் இருந்தாயா?” என்று தழுதழுத்த குரலில் கூறினார். அப்போது சேந்தன் அமுதன் கடல் மடை திறந்தது போல் பின்வருமாறு உணர்ச்சி நிறைந்த வார்த்தைகளைப் பொழிந்து தள்ளினான்:

“தாயே! நான் தங்கள் வயிற்றில் பிறந்த பாக்கியசாலி என்பதைச் சில காலமாக அறிந்திருந்தேன். உலகம் போற்றும் புண்ணியவதியாகிய தாங்கள் ஒருநாள் என்னை ‘மகனே!’ என்று அழைக்கவேண்டும் என்று தவம் செய்துகொண்டிருந்தேன். தங்களுடைய மகன் என்ற சொல்லுக்குத் தகுதியாவதற்குப் பிரயத்தனம் செய்து வந்தேன். அல்லும் பகலும் சிவபெருமானுடைய திருவடிகளைத் தியானித்துக் கொண்டிருந்தேன். தாங்களே என்னை அழைக்காவிட்டாலும் நானே தங்களிடம் வருவதாகத்தானிருந்தேன். ஆனால் இந்த இராஜ்யத்தின் உரிமை விஷயம் தீரட்டும் என்று காத்திருந்தேன். தங்களை ‘அன்னை’ என்று அழைக்கும் உரிமையைத்தான் நான் வேண்டினேன். இராஜ்யத்துக்கு உரியவர் யார் என்று நிச்சயமான பிறகு தங்களிடம் வந்து தாய் உரிமை கோர விரும்பினேன். அம்மணி! தங்களுடைய மனங்கோணாமல் நடப்பதற்காக என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பூங்குழலியைத் தியாகம் செய்யவும் சித்தமாயிருந்தேன். நல்லவேளையாக அவளும் தன்னுடைய மனத்தை மாற்றிக்கொண்டாள். தாயே! மூன்று நாளைக்கு முன்பு என் உயிருக்குப் பெரும் அபாயம் வந்தது. தங்களிடம் நானும் பூங்குழலியும் வணங்கி ஆசி பெற்றுக் கொண்ட சிறிது நேரத்துக்கெல்லாம் அந்த அபாயம் வந்தது. அந்த அபாயத்திலிருந்து உத்தம நண்பன் ஒருவன் என்னைக் காப்பாற்றினான். அதைப் பற்றி நான் அப்போது அவ்வளவு மகிழ்ச்சி அடையவில்லை. அவனிடம் அவ்வளவாக நன்றி செலுத்தவும் இல்லை. இப்போது அவனுக்கு நான் எவ்வளவு நன்றிக்கடன் பட்டவன் என்பதை உணர்கிறேன். தாங்கள் என்னை ‘மகனே’ என்று தங்கள் திருவாயினால் அழைத்தீர்கள் அல்லவா? இந்த நாளைக் காண நான் உயிரோடு இருந்தேன் அல்லவா? இதுவே போதும்! நான் பாக்கியசாலி ஆகிவிட்டேன். இனி ஒன்றும் எனக்கு வேண்டாம். இங்கு இப்போது நடந்தது இங்கு உள்ளவர்களுக்கு மட்டும் தெரிந்திருக்கட்டும். வேறு யாருக்கும் தெரிய வேண்டாம். இராஜ்யத்தில் மேலும் குழப்பம் விளைய வேண்டாம்! கோடிக்கரைக்கு உடனே புறப்பட்டுப் போவதற்கு எனக்கும் பூங்குழலிக்கும் விடை கொடுத்து அனுப்புங்கள்!”

இந்த வார்த்தைகள் பெரிய பிராட்டி செம்பியன் மாதேவியின் உள்ளத்தில் உண்டாக்கிய உணர்ச்சிப் புயலைச் சொற்களினால் விவரிக்க முடியாது.

விம்மலும், கண்ணீரும் கலந்த மெல்லிய குரலில், “குழந்தாய் நீயே என் உத்தமப் புதல்வன்! நீயே தெய்வாம்சம் பொருந்திய, என் கணவரின் உத்தமக் குமாரன்!” என்று கூறினார்.

இவ்வளவு நேரமும் சுந்தர சோழர், சின்னப் பழுவேட்டரையர், இளையபிராட்டி குந்தவைதேவி ஆகியவர்கள் பிரமித்துப் போயிருந்தார்கள். அங்கே வெளியான இரகசியமும், அதனால் விளையக்கூடிய பலாபலன்களும் அவர்களுடைய உள்ளங்களில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கின.

அவர்களில் குந்தவைதான் முதலில் பேசும் சக்தி பெற்றாள். “தந்தையே! பெரிய பிராட்டியார் மதுராந்தகருக்குப் பட்டம் கட்டக் கூடாது என்று பிடிவாதம் பிடித்ததின் காரணம் இப்போது தான் தெரிகிறது!”

சுந்தர சோழரும், அப்போது பிரமிப்பும் திகைப்பும் நீங்கி, “ஆமாம், குமாரி! ஆனால் அந்தக் காரணம் இப்போது நீங்கி விட்டது. என் பெரிய அன்னையின் திருவயிற்றில் உதித்த உத்தமப் புதல்வனுக்கு முடிசூட்டுவதில் இனிமேல் அவருக்கு ஆட்சேபம் இருக்க முடியாது அல்லவா?” என்றார்.

செம்பியன்மாதேவி சிறிது பரபரப்புடன் சுந்தர சோழரைப் பார்த்து, “சக்கரவர்த்தி! என் குமாரன் சற்று முன் கூறிய வார்த்தைகளைக் கேட்கவில்லையா? இந்தச் செய்தி இங்கே உள்ளவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியவே வேண்டாம்! என் மகன் இராஜ்ய உரிமை கோரவில்லை. அதைத் தங்கள் முன்னால் அவன் வாயினாலேயே தெரிவித்துவிட்டானே!” என்றார்.

“ஆம் பிரபு! இந்தச் சோழ இராஜ்யத்தில் ஏற்கெனவே உள்ள சிக்கல்கள் போதும்! என்னால் வேறு புதிய சிக்கல் உண்டாக வேண்டாம். எனக்கு விடை கொடுங்கள்! என்னையும் என்னை மணந்துகொள்ள உவந்த பூங்குழலியையும் ஆசீர்வதித்து அனுப்புங்கள்!… பூங்குழலி! இங்கே வா!” என்றான் அமுதன்.

வாசற்படியின் அருகில் நின்று கொண்டிருந்த பூங்குழலி உள்ளே வந்தாள். சேந்தன் அமுதனும், பூங்குழலியும் முதலில் செம்பியன்மாதேவிக்கு நமஸ்காரம் செய்தார்கள். பின்னர், சக்கரவர்த்தியை வணங்கினார்கள். எழுந்து நின்றதும் சேந்தன் அமுதன், “பிரபு! நாங்கள் உடனே கோடிக்கரை போக விடை கொடுங்கள்! தாயே! விடை கொடுங்கள்!” என்றான்.

செம்பியன்மாதேவி சக்கரவர்த்தியைப் பார்த்து, “ஆம் ஐயா! இவர்களுக்கு விடை கொடுத்து அனுப்புவோம். எனக்கு விருப்பமானபோது நான் கோடிக்கரை சென்று இவர்களைப் பார்த்துக் கொள்கிறேன்!” என்றார்.

சுந்தர சோழர், “அது ஒருநாளும் இயலாத காரியம் நான் விடை கொடுக்கமாட்டேன்!” என்றார்.

முதன்மந்திரி குறுக்கிட்டு, “சக்கரவர்த்தி! எதுவும் இப்போது தீர்மானம் செய்ய வேண்டாம். இன்னும் சில தினங்கள் இவர்கள் என் இல்லத்திலேயே இருக்கட்டும். பெரிய பிராட்டியின் மகன் கிடைத்து விட்டார். ஆனால் சின்னப் பழுவேட்டரையரின் மருமகன் கிடைக்கவில்லை. அவரைப் பற்றிய செய்தி வரும் வரையில் இவர்கள் இங்கு இருக்கட்டும். அதுவரை இங்குள்ளவர்களைத் தவிர வேறு யாருக்கும் இந்த இரகசியம் தெரிய வேண்டாம்!” என்றார்.

“அருள்மொழியிடமாவது அவசியம் சொல்லித்தான் ஆக வேண்டும்!” என்றாள் இளைய பிராட்டி குந்தவை தேவி.

“வேண்டாம், வேண்டாம்! அது மட்டும் செய்ய வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டான் சேந்தன் அமுதன்.

கடைசியாகச் சக்கரவர்த்தி, “தேவி! எது எப்படியானாலும் ஆகட்டும். இத்தனை தினங்கள் கழித்து இன்றைக்குத் தங்கள் திருவயிற்றில் உதித்த மகன் உங்களிடம் வந்திருக்கிறான். உங்களை உடனே பிரிப்பதற்கு நான் சம்மதிக்க மாட்டேன். சில தினங்களாவது இங்கே நீங்கள் சேர்ந்திருங்கள். என் அரண்மனையிலோ, முதன்மந்திரியின் மாளிகையிலோ தங்கியிருங்கள். இராஜ்ய உரிமையைப் பற்றி முடிவான தீர்மானம் ஆன பிறகு இவர்களைக் கோடிக்கரை அனுப்புவது பற்றி யோசிக்கலாம். அது வரையில் இங்குள்ளவர்களைத் தவிர வேறு யாருக்கும் இச்செய்தி தெரியவேண்டாம்!” என்றார்.

Source

Previous articleRead Ponniyin Selvan Part 5 Ch 71
Next articleRead Ponniyin Selvan Part 5 Ch 73

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here