Home Kalki Read Ponniyin Selvan Part 5 Ch 76

Read Ponniyin Selvan Part 5 Ch 76

125
0
Read Ponniyin Selvan Part 5 Ch 76 Kalki -TamilNovel.in Ponniyin Selvan is one of the historical fiction novel in tamil history. Read Download Ponniyin Selvan Free Ponniyin Selvan Part 5, Ponniyin Selvan part 5 Ch 76, Ponniyin Selvan Kalki, Ponniyin Selvan,ps1,ps2, Read Ponniyin Selvan book, Download Ponniyin Selvan pdf
Ponniyin Selvan Part 5 Ch 76 பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்: தியாக சிகரம் அத்தியாயம் 76: வடவாறு திரும்பியது!

Read Ponniyin Selvan Part 5 Ch 76

பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்: தியாக சிகரம்

அத்தியாயம் 76: வடவாறு திரும்பியது!

Read Ponniyin Selvan Part 5 Ch 76

இந்த நெடும் கதையில் வரும் பாத்திரங்களில் சிலர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியும் நடந்தும் வருவதை வாசகர்கள் கவனித்திருப்பார்கள். அதற்கு நாம் பொறுப்பாளிகள் அல்லவென்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். மனித இயற்கை என்றைக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சூழ்நிலையும் பல்வேறு சம்பவங்களும் அவர்களுடைய மனப் போக்கையும் நடத்தையையும் மாற்றுகின்றன. நேற்றைக்கு ஒருவிதமாகப் பேசி நடந்து கொள்கிறவர்கள் இன்றைக்கு முற்றும் முரணான முறையில் பேசுகிறார்கள்; நடந்து கொள்கிறார்கள்.

பெரிய பழுவேட்டரையர் இக்கதையின் ஆரம்பத்தில் ஒரு பெரிய இராஜரீகச் சதியாலோசனைக்குத் தலைவராயிருந்தார். இப்போது பலரறிய தாம் செய்த குற்றத்தை எடுத்துச் சொல்லி அதற்குப் பிராயச்சித்தமாகத் தம் சிரத்தைத் தாமே துணித்துக் கொண்டு உயிரை விட விரும்பினார்.

பெரிய சம்புவரையர் இளவரசர் கரிகாலரின் உயிரற்ற உடலைக் கண்டதும் அடைந்த திக்பிரமையில் எப்படியாவது அந்தப் படுகொலைப் பழி தம் குடும்பத்தின் மீது சாராமற் போக வேண்டுமென்னும் கவலையினால், தமது பழைய மாளிகையையே எரிக்க முற்பட்டார். அந்தப் பழியை வேறு யார் தலையிலாவது சுமத்தி விடவேண்டும் என்ற ஆவல் கொண்டு தம் மகனையும் அந்த முயற்சியில் ஏவி விட்டார். இப்போது குற்றம் தம் பேரில் சாரவில்லை என்று அறிந்த பிறகு, தம் அருமைப் புதல்வி வந்தியத்தேவன் பேரில் கொண்டிருந்த அன்பின் ஆழத்தை அறிந்த பிறகு, வேறு விதமாகப் பேசலானார்.

இந்தக் கதையின் ஆரம்பத்தில் மூடுபல்லக்கில் மறைந்து வந்த போலி மதுராந்தகனையே உண்மை மதுராந்தகன் என்றும், அவனே பின்னால் உத்தம சோழ சக்கரவர்த்தியாகப் போகிறான் என்றும் வாசகர்கள் நம்பும்படியாக நாம் செய்திருந்தோம். கதைப் போக்குக்கு அது அவசியமாயிருந்தது. ஏன்? முதன்மந்திரி அநிருத்தருக்கு ஓரளவு பழைய இரகசியங்கள் தெரிந்திருந்த போதிலும், அவரும் மதுராந்தகரே முடிசூட்டப்பட வேண்டும் என்று கருதினார். அக்காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளின் முன்பின் விவரங்களை அவர் பூரணமாக அறிந்திருக்கவில்லை. ஆகையால் போலி மதுராந்தகர் கண்டராதித்தரின் புதல்வர் அல்லவென்றாலும், சுந்தர சோழருக்கும் மந்தாகினிக்கும் பிறந்த புதல்வர் என்று எண்ணினார். அதனால் அவரும் தடுமாற்றம் அடைந்து முன்னுக்குப் பின் முரணாக நடந்துகொள்ள வேண்டியதாயிற்று.

இந்தக் கதையிலேயே நேர்மையில் சிறந்தவர் என்றும், சத்திய சந்தர் என்றும் நாம் கருதி வந்த அருள்மொழி தேவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதை நாம் கடைசியாகப் பார்த்தோம். இத்தனை காலமும் தமக்கு அரசுரிமை வேண்டவே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர் இப்போது திடீரென்று தம் போக்கை மாற்றிக்கொண்டு, ‘நானே முடிசூட்டிக் கொள்வேன்’ என்று பலர் அறியச் சொல்ல ஆரம்பித்து விட்டார். சமய சந்தர்ப்பங்கள் தான் அவருடைய இந்த மாறுதலுக்குக் காரணம் என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டிய அவசியம் இல்லை அல்லவா?

ஆம்; அருள்மொழித் தேவரின் வார்த்தைகள் அங்கிருந்தோர் அனைவரையும் வியப்பும் திகைப்பும் அடையச் செய்தன. அதே சமயத்தில், அவர்களுடைய மனத்தில் ஒரு நிம்மதியையும் உண்டாக்கின. சோழ சிங்காதனம் ஏறுவதற்கு எல்லா வகையிலும் தகுதியானவரும் உரிமையுள்ளவரும் பொன்னியின் செல்வர் தான் என்பதை அனைவரும் உள்ளத்தின் உள்ளே அந்தரங்கத்தில் உணர்ந்திருந்தார்கள். சோழ சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த மிகப் பெரும்பாலான மக்களின் விருப்பமும் அதுவே என்பதை அறிந்திருந்தார்கள். மக்களின் பொது விருப்பத்துக்கு விரோதமாக வேறொருவரைச் சிங்காதனம் ஏறச் செய்தால் அதனால் நேரக்கூடிய பின் விளைவுகள் எப்படியிருக்குமோ என்ற கவலையும் அவர்கள் மனத்தில் இருந்தது. ஆனாலும் பல்வேறு காரணங்களினால் அங்கிருந்தவர்களில் யாரும் பொன்னியின் செல்வருக்கு முடிசூட்ட வேண்டும் என்று சொல்லத் துணியவில்லை.

இப்போது பொன்னியின் செல்வரே முன்வந்து, “நானே மகுடம் சூட்டிக்கொள்ளப் போகிறேன். தங்கள் திருக்கரத்தினால் முடிசூட்ட வேண்டும்!” என்று பெரிய பழுவேட்டரையரைப் பார்த்துக் கூறியதும், அனைவருடைய உள்ளத்திலும் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாயின. “நல்ல முடிவு ஏற்பட்டு விட்டது. ஆனால் அந்த முடிவு செய்ய வேண்டிய தர்மசங்கடமான பொறுப்பு நம்மைவிட்டுப் போய் விட்டது!” என்று உவகையும் ஆறுதலும் அடைந்தார்கள்.

பொன்னியின் செல்வரிடம் குடிகொண்டு பிரகாசித்த அபூர்வமான காந்த சக்தியானது, அவர் எதிரில் அவருக்கு விரோதமாக யாரும் பேச முடியாமல் செய்தது என்பதை முன்னம் நாம் பார்த்திருக்கிறோம். ஏன்? வைர நெஞ்சம் படைத்த சின்னப் பழுவேட்டரையர் கூடப் பொன்னியின் செல்வரை நேரில் கண்டதும் தலை வணங்கி அவருக்கு முகமன் கூறி வரவேற்றதை நாம் பார்த்தோம் அல்லவா?

பெரிய பழுவேட்டரையர் தம் உயிரைத் தாமே போக்கிக் கொள்ளும் முயற்சியைப் பொன்னியின் செல்வர் தடுத்து நிறுத்தியதை அறிந்தார். அவருடைய வார்த்தையின் பொருளையும் உணர்ந்தார். இளவரசரின் செயலும் சொற்களும் அவரது உள்ளத்தை நெகிழச் செய்தன. உணர்ச்சி மிகுதியினால் அவருடைய உடலும் நடுங்கியது. கண்களில் கண்ணீர் மல்கியது. நாத்தழுதழுத்தது.

ஒருவாறு மனத்தை விரைவில் திடப்படுத்திக்கொண்டு அவர் கூறினார்: “சோழ குலத் தோன்றலே! பொன்னியின் செல்வா! தங்களுடைய சொற்கள் எனக்கு அளவிலா மகிழ்ச்சியை அளித்தன. தாங்களே முடிசூட்டிக் கொள்ள வேண்டும் என்று நான் தங்களை வேண்டிக் கொள்ள எண்ணினேன். சோழ குலத்துக்கே துரோகியாய்ப் போய் விட்ட எனக்கு அந்த வேண்டுகோள் விடுக்கவே உரிமை இல்லை என்று பேசாதிருந்தேன். தங்களுடைய பெரிய பாட்டனாரும் மகா புருஷருமான கண்டராதித்த சக்கரவர்த்தி ஓர் ஏற்பாடு செய்து விட்டுப் போனார். தமது சகோதரர் வம்சத்தில் வந்தவர் சிங்காதனம் ஏற வேண்டும் என்று அந்த மகான் வற்புறுத்திக் கூறினார். அவர் செய்திருந்த ஏற்பாட்டுக்கு விரோதமாக நாங்கள் சில காரியங்கள் செய்ய எண்ணினோம். எங்களுக்குள் ஏற்பட்டிருந்த மாற்சரியத்தினால் அந்தச் சிவ பக்தச் சிரோமணியின் விருப்பத்துக்கு மாறாக மதுராந்தகத்தேவருக்குப் பட்டம் சூட்ட எண்ணினோம். தங்கள் தந்தையும் அதற்கு உடன்பட்டு விட்டார். நாங்கள் கருதியது நிறைவேறியிருந்தால், எவ்வளவு பெரிய விபரீதம் ஆகியிருக்கும் என்று எண்ணும் போது என் குலை நடுங்குகிறது. இளவரசே! தங்கள் தந்தை வீற்றிருக்கும் சோழ சிங்காதனத்துக்கு உரிமை பூண்டவர் தாங்கள் தான். சோழ சாம்ராஜ்யத்தின் மணிமகுடத்தை அணிவதற்குத் தகுதி வாய்ந்தவரும் தாங்கள்தான்! தாங்கள் சின்னஞ்சிறு பாலனாக இருந்த போது என் மார்பிலும் தோளிலும் ஏந்திச் சீராட்டியிருக்கிறேன், அப்போதெல்லாம் தங்கள் அங்க அடையாளங்களையும் தங்கள் கரங்களை அலங்கரிக்கும் ரேகைகளையும் பார்த்து, ‘இந்தப் பூ மண்டலத்தையே ஆளும் மன்னாதி மன்னர் ஆகப் போகிறீர்கள்’ என்று நானும் சொல்லிக் கொண்டிருந்தேன். ஓடத்திலிருந்து காவேரியின் வெள்ளத்தில் விழுந்து முழுகிப் போன தங்களைக் காவேரி அன்னை கரங்களில் ஏந்தி எடுத்ததைப் பற்றி எத்தனையோ நூறு தடவை சொல்லி மகிழ்ந்திருக்கிறேன். இந்த மூன்று வருஷ காலத்திலேதான் காமக் குரோத மத மாற்சரியங்கள் என் மனத்தைக் கெடுத்துவிட இடங்கொடுத்து துரோகியாய்ப் போய்விட்டேன். பொன்னியின் செல்வ! தாங்கள் சோழ சிங்காதனம் ஏறி மணிமகுடத்தை எடுத்துத் தங்கள் சிரசில் சூடும் தகுதியை நான் இழந்து விட்டேன், என் கரங்களும் இழந்து விட்டன. இந்தக் கரங்களினால் நான் இனி செய்யக்கூடிய புனிதமான காரியம் என் குற்றத்துக்குப் பரிகாரமாக என்னை நான் மாய்த்துக் கொள்வதுதான்.”

“இல்லை, இல்லை! கூடவே கூடாது!” என்று அந்த மந்திராலோசனை சபையில் பல குரல்கள் எழுந்தன.

சுந்தர சோழர் உருக்கம் நிறைந்த குரலில் கூறினார். “மாமா! இது என்ன வார்த்தை? இது என்ன காரியம்? தாங்கள் சோழ குலத்துக்கு அப்படி என்ன துரோகம் செய்து விட்டீர்கள்? ஒன்றுமில்லையே? என்னுடைய குமாரர்களுக்குப் பதிலாக என் பெரியப்பாவின் குமாரரைச் சிங்காசனத்தில் அமர்த்த எண்ணினீர்கள். அது சோழ குலத்துக்கு எப்படித் துரோகம் செய்வதாகும்? என் புதல்வர்களைக் காட்டிலும் என் பெரிய தந்தையின் குமாரனுக்குச் சோழ குலத்து மணிமகுடம் புனைய அதிக உரிமை உண்டல்லவா? இப்போதுகூட, என் மனத்தில் உள்ளதைச் சொல்ல நீங்கள் அனுமதி கொடுத்தால்…”

முதன்மந்திரி அநிருத்தர் குறுகிட்டு, “பிரபு! இந்த நாடெங்கும் ‘அருள்மொழிவர்மரே திருமுடி சூடவேண்டும்’ என்ற குரல்கள் ஒலிக்கின்றன. இத்தனை நாளாக அஞ்ஞாத வாசம் செய்து வந்த கண்டராதித்த தேவரின் திருக்குமாரரும் அதே உறுதி கொண்டிருக்கிறார். பொன்னியின் செல்வரும் அதே முடிவுக்கு வந்து விட்டார். இனி, அதற்கு மாறாக யோசனை எதுவும் செய்வதில் பயன் ஒன்றுமில்லை!” என்றார்.

“நீங்கள் யாரேனும் அவ்வாறு யோசனை செய்தாலும் நான் ஒப்புக்கொள்ள முடியாது!” என்றார் சேந்தன் அமுதனாகிய மதுராந்தகத்தேவர்.

“என் மகன் கூறுவதுதான் சரி. இனி வேறு யோசனை செய்ய வேண்டியதில்லை!” என்றார் செம்பியன் மாதேவியார்.

“அன்னையே! தங்கள் வார்த்தைக்கு எதிர் வார்த்தை கூறக் கூடியவர் இங்கு யாரும் இல்லை. கடவுளின் விருப்பத்தின்படி நடக்கட்டும். ஆனாலும் பழுவூர் மாமா நம் குலத்துக்குத் துரோகம் செய்து விட்டதாகக் கூறித் தம் உயிரை மாய்த்துக் கொள்ள விரும்புவது சரியில்லைதானே? தங்கள் திருக்குமாரருக்கு முடிசூட்ட வேண்டும் என்று அவர் பிரயத்தனப்பட்டது சோழ குலத்துக்குத் துரோகம் செய்தது ஆகாது அல்லவா?” என்றார் சக்கரவர்த்தி.

பெரிய பழுவேட்டரையர் தொண்டையைக் கனைத்துக் கொண்டு கூறலுற்றார்: “ஐயா! கேளுங்கள்! என்னுடைய முயற்சி பலிதமாயிருந்தால் எவ்வளவு பயங்கரமான விபரீதம் நடந்திருக்கும் என்பதைக் கேளுங்கள்! இதை நான் சொல்லாமலே என் உயிரை மாய்த்துக்கொள்ள விரும்பினேன். முக்கியமாக சோழ சாம்ராஜ்யத்தின் மேன்மையைத் தவிர வேறு எதையும் கனவிலும் கருதாதவனான என் சகோதரன் காலாந்தககண்டரின் மனத்தைப் புண்படுத்தத் தயங்கினேன். ஆயினும் இப்போது என் மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு உண்மையைச் சொல்லிவிடத் தீர்மானித்து விட்டேன். சக்கரவர்த்தி! நாங்கள் மகான் கண்டராதித்தரின் குமாரர் என்று எண்ணிச் சோழ சிங்காதனத்தில் ஏற்றி வைப்பதற்கு இருந்தவன் சோழ குலத்துக்குப் பரம்பரைப் பகைவனான வீர பாண்டியனுடைய மகன்!…”

“ஐயையோ!” “இல்லை!” “அப்படி இருக்க முடியாது!” என்றெல்லாம் அச்சபையில் குரல்கள் எழுந்தன.

“உங்களுக்கு நம்புவது கஷ்டமாகத்தானிருக்கும். என் காதினாலேயே நான் கேட்டிராவிட்டால் நானும் நம்பியிருக்கமாட்டேன். அரசர்க்கரசே! என்னுடைய அவமானத்தை நான் மீண்டும் சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நான் எந்தப் பெண்ணின் முகலாவண்யத்தைக் கண்டு மயங்கி மோக வலையில் வீழ்ந்து அவளை என் அரண்மனையில் சர்வாதிகாரியாக்கி வைத்திருந்தேனோ, அவள் வீரபாண்டியனுடைய மகள்! அவள் வாயினால் இதை ஆதித்த கரிகாலரிடம் சொல்லியதை நான் என் காதினால் கேட்டேன். வீரபாண்டியனை ஆதித்த கரிகாலர் கொன்றதற்குப் பழிக்குப்பழி வாங்கவே பழுவூர் அரண்மனைக்கு அவள் வந்திருந்தாள். அதற்குத்தான் சமயம் பார்த்துக்கொண்டிருந்தாள். அந்தப் பாதகியும் அவளுடன் சதி செய்தவர்களும் கரிகாலரைக் கொன்று விட்டு வீரபாண்டியனுடைய குமாரனையே சோழ சிங்காதனத்தில் ஏற்றி வைக்கத் திட்டமிட்டிருந்தார்கள். நம் குலத்தெய்வமான துர்க்காதேவியின் அருளினால் அத்தகைய கொடிய விபரீதம் நேராமல் போயிற்று. துர்க்கா பரமேசுவரி என் கண்களைத் திறப்பதற்காகவே அந்த வாணர் குலத்து வீரனை அனுப்பி வைத்தாள். அவன் மூலமாகவே இந்த பயங்கரமான இரகசியங்களை நான் அறியமுடிந்தது. இன்னும் சில செய்திகளை அவனிடம் நான் கேட்டறிய வேண்டுமென்று இருந்தேன். அவனை இந்த இளஞ் சம்புவரையன் கொன்று வடவாற்று வெள்ளத்தில் விட்டுவிட்டு வந்து விட்டான்! நிர்மூடன்!”

இந்த வார்த்தையைக் கேட்டு அங்கிருந்தோர் அனைவரும் திகைத்துப் போய் நிற்கையில், கந்தமாறன் மட்டும், “ஐயா! எப்படியும் அந்த வந்தியத்தேவனும் சதிகாரக் கும்பலுடன் சேர்ந்தவன்தானே, அவனை நான் வேலெறிந்து கொன்றதில் குற்றம் என்ன?” என்றான்.

பெரிய பழுவேட்டரையர் அவனைக் கோபமாகத் திரும்பிப் பார்த்தார்.

அச்சமயம் அநிருத்தர் குறுக்கிட்டு, “ஐயா! வாணர் குல வீரனைக் கொன்றுவிட்டதாக இவன் சொல்லுகிறான் அவ்வளவுதானே? இவன் வேலெறிந்து கொன்றவன் வந்தியத்தேவன் என்பது என்ன நிச்சயம்?” என்று கேட்டார்.

பார்த்திபேந்திரன் சிறிது தணிவான குரலில், “வடவாற்று வெள்ளம் திரும்பி மேற்கு நோக்கிப் பாய்ந்து செத்தவனின் உடலைக் கொண்டு வந்தால் ஒருவேளை உண்மை வெளியாகும்!” என்றான்.

“யார் கண்டது? வடவாற்று வெள்ளம் திரும்பிப் பாய்ந்தாலும் பாயலாம்!” என்றார் முதன்மந்திரி அநிருத்தர்.

அவருடைய வாக்கை மெய்ப்படுத்துவது போல் அடுத்த கணத்தில் சொட்ட நனைந்திருந்த ஈரத் துணிகளிலிருந்து தண்ணீர்த் துளிகளைச் சிந்த விட்டுக் கொண்டு வந்தியத்தேவன் அந்த மந்திராலோசனை மண்டபத்தில் பிரவேசித்தான். அவனுடைய முகத்தின் மிரண்ட தோற்றமும் அவன் உள்ளே வந்த அலங்கோலமான நிலையும், வெள்ளத்தில் மூழ்கி இறந்தவனுடைய உடல் ஏதோ ஒரு ஜால வித்தையினால் எழுந்து நடமாடுவது போன்ற பிரமையைப் பார்த்தவர்களின் உள்ளத்தில் உண்டாக்கின.

“ஆகா! வடவாற்றின் வெள்ளம் திரும்பியே விட்டது! இறந்தவனையே உயிர்ப்பித்துக் கொண்டு வந்து விட்டது!” என்றார் முதன்மந்திரி அநிருத்தர்.

அச்சமயம் வந்தியத்தேவன் அங்கே அந்தக் கோலத்தில் எவ்வாறு வந்து சேர்ந்தான் என்பதை வாசகர்களுக்கு நாம் அறிவித்தாக வேண்டும். பொன்னியின் செல்வர், குந்தவை தேவி முதலியோர் தன்னைத் தனியே விட்டுச் சென்ற பிறகு வந்தியத்தேவன் மிக்க மனச் சோர்வு அடைந்திருந்தான். வீர தீரச் செயல்கள் புரிந்து உலகத்தையே பிரமிக்க வைக்க வேண்டும் என்னும் ஆர்வம் கொண்டிருந்தவனுக்குப் பலரும் தன்னைப் பார்த்துப் பரிதாபம் கொள்ளும்படியான நிலையில் இருந்தது சிறிதும் பிடிக்கவில்லை. பாதாளச் சிறையைக் காட்டிலும் இந்த அரண்மனை அந்தபுரத்துச் சிறை கொடியதாக அவனுக்குத் தோன்றியது. பொன்னியின் செல்வரின் தயவினால் அவன் பேரில் கரிகாலரைக் கொன்ற குற்றத்தைச் சுமத்தாமலும், அதற்காகத் தண்டனை அளிக்காமலும் ஒருவேளை விட்டு விடுவார்கள். ஆனால் அரண்மனையில் உள்ளவர்களுக்கெல்லாம் அவனைப் பற்றி ஒரு சந்தேகம் இருந்து கொண்டுதானிருக்கும். அவனைக் களங்கம் உள்ளவனாகவே கருதுவார்கள். இளைய பிராட்டி அவனிடம் காட்டும் இரக்கமும் அனுதாபமும் அவ்வளவுடன் நின்றுவிடும். சோழ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொள்ளப் போகும் பொன்னியின் செல்வரின் திருத்தமக்கையாரைக் கைப்பிடித்து மணந்து கொள்வது கனவிலும் நடவாத காரியம். அரண்மனைப் பெண்கள் அவனை ஏதோ குற்றம் செய்து மன்னிப்புப் பெற்ற சேவகனாகவே மதித்து நடத்துவார்கள். அமைச்சர்களும் தளபதிகளும் அவனை அருவருப்புடன் நோக்குவார்கள். அரச குலத்தினரின் சித்தம் அடிக்கடி மாறக் கூடியது. இளவரசர் அருள்மொழிவர்மர் தான் அவன் மீது எத்தனை நாள் அபிமானம் காட்டி வருவார் என்பது யாருக்குத் தெரியும்?

ஆகா! முதலில் அவன் உத்தேசித்திருந்தபடி சேந்தன் அமுதன் குடிசைக்கு அருகில் குதிரை மேல் ஏறியிருந்தால் இத்தனை நேரம் கோடிக்கரையை அடைந்திருக்கலாம். ஏன்? ஈழத் தீவுக்கே போய்ச் சேர்ந்திருக்கலாம். தான் வைத்தியர் மகனால் தாக்கப்பட்ட சமயத்தில் குதிரை மேல் ஏறிச் சென்றவர்கள் யாராயிருக்கும்? ஒருவன் ‘பைத்தியக்காரன்’ என்று பெயர் வாங்கிய கருத்திருமன். உண்மையில் அவன் பைத்தியக்காரனில்லை சூழ்ச்சித் திறமை மிக்கவன். அவனுடன் சென்றவன் யார்? பழைய மதுராந்தகத் தேவரைக் காணோம் என்கிறார்களே? அவராக இருக்கலாம் அல்லவா? ஆம், ஆம்! அப்படித்தான இருக்க வேண்டும்! அவர்கள் இருவரும் சேர்ந்து தப்பிச் செல்வதில் ஏதோ பொருள் இருக்கிறது. அந்த மதுராந்தகர் உண்மையில் யார் என்பது இங்குள்ளவர்களுக்குத் தெரிந்தால் எத்தனை வியப்படைவார்கள்? அவர்கள் இருவரும் பத்திரமாக ஈழ நாடு சேர்ந்து விட்டால், அதன் விளைவு என்னவாகும்? ஏன்? பாண்டிய நாட்டு மணிமகுடத்துக்கும், இரத்தின ஹாரத்துக்கும் உரியவன் அவற்றை அடைந்து விடுவான்! மகிந்தன் உதவியுடனே மறுபடியும் நாட்டை அடையப் போர் துவங்குவான். அப்படி நடவாமல் மட்டும் தடுக்க முடியுமானால்…தடுக்கக் கூடிய ஆற்றல் உடையவன் தான் ஒருவன்தான்! இங்கே இந்த அரண்மனை அந்தப்புர அறையில் ஒளிந்து உயிர் வாழ்வதில் என்ன பயன்?

இவ்வாறெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டு வந்தியத்தேவன் அந்த அறையில் அங்குமிங்கும் வட்டமிட்டு உலாவிக் கொண்டிருந்தான். அடிக்கடி அந்த அறையின் ஒரு பக்கத்துச் சுவரில் இருந்த பலகணியின் ஓரமாக வந்து நின்று ஆவலுடன் வெளியே பார்த்தான். அரண்மனையின் ஒரு கோடியில் இருந்த மேல் மாடத்து அறையில் அவன் இருந்து வந்தான். அதையொட்டி வடவாறு சென்று கொண்டிருந்தது. அங்கே அரண்மனையின் வெளிச் சுவரே தஞ்சைபுரிக் கோட்டையின் வெளிச் சுவராகவும் அமைந்திருந்தது. அந்தப் பலகணி வழியாக கீழே குதித்தால் வடவாறு வெள்ளத்தில் குதித்து விடலாம். அல்லது செங்குத்தான சுவரின் வழியே சிறிது பிரயத்தனத்துடன் இறங்கியும் வடவாற்று வெள்ளத்தை அடையலாம். அந்த மேன்மாடத்துக்குக் கீழே அரண்மனைப் பெண்டிர் நதியில் இறங்கிக் குளிப்பதற்காக வாசலும் படித்துறையும் இருந்ததாகத் தோன்றியது. மேன்மாடத்திலிருந்து கீழே சென்று அந்த வாசலை அடைவதற்கு வழி எப்படி என்று தெரியவில்லை. அந்தப்புரத் தாதிமார்களுக்கும் அரசிளங் குமரிகளுக்கும் அது தெரிந்திருக்கும். அவன் தப்பிச் செல்வதாயிருந்தால் அவர்கள் அறியாமல் அல்லவா செல்ல வேண்டும்…? பலகணி ஓரத்தில் நின்று அவன் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்தபோது, சற்றுத் தூரத்தில் தோன்றிய ஒரு காட்சி அவனைத் திடுக்கிடச் செய்தது.

அவன் இருந்த அரண்மனைக்கு அடுத்த அரண்மனைத் தோட்டத்தில் ஒரு பெண் தலைவிரிகோலமாகப் பித்துப் பிடித்தவள்போல ஓடிக்கொண்டிருந்தாள். ஆகா! அது பெரிய பழுவேட்டரையரின் அரண்மனைத் தோட்டம் போல் அல்லவா இருக்கிறது! ஆம், ஆம்! அந்தத் தோட்டந்தான்! அதில் பித்துப் பிடித்தவள் போல் ஓடுகிற பெண் யார்? ஈசுவரா! மணிமேகலை போல் அல்லவா இருக்கிறது? அவளுக்கு என்ன நேர்ந்து விட்டது? எதற்காக அப்படி ஓடுகிறாள்? கரிகாலர் மரணம் அடைந்த அன்றிரவு கடம்பூர் மாளிகையில் அவள் அவனுக்குச் செய்த உதவிகள் எல்லாம் நினைவுக்கு வந்து அவனுடைய நெஞ்சு விம்மும்படிச் செய்தன! அவளுக்குப் பின்னால், அவளைத் தொடர்ந்து பிடிப்பதற்காக ஓடுகிறவர்களைப் போல் இன்னும் இரு முதிய ஸ்திரீகள் ஓடினார்கள். ஆனால் அவர்கள் வரவரப் பின் தங்கி வந்தார்கள். மணிமேகலையை அவர்கள் பிடிப்பது இயலாத காரியம்! அதோ அவள் வெளி மதில் சுவரண்டை வந்து விட்டாள். சுவர் ஓரமாக வளர்ந்திருந்த ஒரு மரத்தைப் பிடித்துக் கொண்டு மதில் சுவரில் ஏறிவிட்டாள்! ஐயோ! என்ன காரியம் செய்கிறாள்? அவள் கையிலே ஒரு சிறிய கத்தி மின்னுகிறதே! அதனால் என்ன செய்யப் போகிறாள்? கடவுளே! மதில் சுவரிலிருந்து தலை குப்புற நதியின் வெள்ளத்தில் விழுந்து விட்டாளே!

முன்னொரு சமயம் வீர நாராயண ஏரியில் மணிமேகலையும், நந்தினியும் தண்ணீரில் முழுகும் தறுவாயிலிருந்ததும், அவன் மணிமேகலையை எடுக்க முதலில் உத்தேசித்துப் பிறகு நந்தினியைத் தூக்கிக் கரை ஏற்றியதும், அதனால் மணிமேகலை அடைந்த ஏமாற்றமும், அந்த ஒரு கணநேரத்தில் வந்தியத்தேவனுடைய மனத்தில் குமுறிப் பாய்ந்து வந்தன. அதற்கு மேலே அவனால் சும்மா நிற்க முடியவில்லை. அரண்மனை மேல் மாடத்திலிருந்து பலகணியின் வழியாக வெளி வந்து ஆற்று வெள்ளத்தில் குதித்தான்.

சில கண நேரம் மூச்சுத் திணறிப் பின்னர் சமாளித்துக் கொண்டு நாலாபுறமும் பார்த்தான். ஆம்; அவன் குதித்த இடத்துக்கு அருகில் படித்துறை மண்டபமும் அதற்கு உள்ளிருந்து வரும் வாசலும் காணப்பட்டன. அதற்கு எதிர்த் திசையிலேதான் சற்றுத் தூரத்தில் மணிமேகலை மதில் மேலிருந்து கீழே குதித்தாள். நல்லவேளையாக, ஆற்று வெள்ளம் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது. மணிமேகலையும் வெள்ளத்தில் மிதந்து வந்தால், அவனை நோக்கித்தான் வரவேண்டும்.

தட்டுத்தடுமாறி நதியின் கரையோரத்தை வந்தியத்தேவன் அடைந்தான். ஆற்று வெள்ளத்தை எதிரிட்டுக் கொண்டு விரைவாக நடந்து சென்றான். ஆகா! அதோ மணிமேகலை மிதந்து வருகிறாள்? அவள் உடம்பில் உயிர் இருக்கிறதா? அல்லது அது உயிரற்ற உடம்பா? ஐயோ! மறுபடியும் தன்னிடம் அன்பு கொண்ட ஒருவரின் உயிரற்ற உடம்பைச் சுமந்து செல்லும் துர்ப்பாக்கியம் தனக்கு ஏற்பட்டுவிடுமோ? அடடா! அந்தப் பெண் தன்னிடம் எவ்வளவு அன்பு வைத்திருந்தாள்? வீர நாராயணபுரத்து ஏரிக்கரை மண்டபத்தில் அவள் யாழ் வாசித்துக் கொண்டு பாடிய பாட்டின் தொனி, வெள்ளத்தில் அவள் உடல் மிதப்பது போலவே காற்றிலே மிதந்து வந்தது. வந்தியத்தேவனுக்கு அது அளவில்லாத வேதனையை அளித்தது.

அந்த வேதனையை எப்படியோ சகித்துக் கொண்டு வெள்ளத்திலே பாய்ந்து சென்று மணிமேகலையை இரு கரங்களினாலும் தூக்கி எடுத்துக் கொண்டான். தெய்வங்களே! இந்தப் பெண்ணின் உயிரைக் காப்பாற்றிக் கொடுங்கள்! சோழ நாட்டிலுள்ள ஒவ்வொரு ஆலயத்துக்கும் சென்று ஒவ்வொரு சந்நிதியிலும் தரையில் விழுந்து கும்பிடுகிறேன். சிவன் கோயில், விஷ்ணு கோயில், அம்மன் கோயில், அய்யனார் கோயில் எல்லாவற்றுக்கும் சென்று ஒவ்வொரு தெய்வத்துக்கும் நன்றி செலுத்துகிறேன். சூதுவாது அற்ற இந்தச் சாதுப் பெண்ணின் உயிரை மட்டும் காப்பாற்றிக் கொடுங்கள்!…

இவ்வாறு மனத்துக்குள் பல்வேறு தெய்வங்களையும் பிரார்த்தித்த வண்ணமாக வந்தியத்தேவன் மணிமேகலையைப் படித்துறையில் கொண்டுவந்து சேர்த்தான். ஏற்கெனவே ஈட்டிக் காயத்தினால் மரணத்தின் வாசலுக்குச் சென்று திரும்பி வந்தவன் நதி வெள்ளத்தில் திடீரென்று குதித்த அதிர்ச்சியினால் மேலும் பலவீனமுற்றிருந்தான். நீரில் மூழ்கியதனால் கனத்திருந்த மணிமேகலையைத் தூக்கிக் கொண்டு நதியில் நடந்த போது அவனுக்கு மூச்சு வாங்கியது. அவளை மேலும் தூக்கிக் கொண்டு நடப்பது இயலாத காரியமாகத் தோன்றியது. எனவே, படித்துறையின் மேல்படி அகலமாக இருந்ததைப் பார்த்து அதன் பேரில் மணிமேகலையைப் படுக்க வைத்தான். பின்னர் என்ன செய்வது என்று ஒரு கணம் யோசித்தான். மணிமேகலையின் உடம்பில் இன்னும் உயிர்க்கனல் இருந்தது. ஆனால் அவளை மூர்ச்சை தெளிவித்து உயிர்ப்பிக்கும் காரியம் தன்னால் ஆகக் கூடியதில்லை. உடனே யாராவது ஒரு பெண்ணின் உதவி தேவை. அரண்மனைக்குள் சென்று அங்கிருந்து யாரையாவது அழைத்து வரவேண்டும்.

படுத்துறைக்கு அரண்மனைக்குள்ளேயிருந்து வருவதற்காக அமைந்த வாசல் அவன் கண்முன் காணப்பட்டது. அதன் அருகில் சென்று சாத்தியிருந்த கதவின் பேரில் தன் உடம்பில் மிச்சமிருந்த பலம் முழுவதையும் பிரயோகித்து மோதினான். அதிர்ஷ்டவசமாகக் கதவின் உட்புறத் தாழ்ப்பாள் தகர்ந்து கதவு திறந்து கொண்டது. திறந்த கதவின் வழியாகப் புகுந்து ஓடினான். சிறிது தூரம் அது குறுகிய பாதையாகவே இருந்தது. பின்னர் தாழ்வாரங்களும் முற்றங்களும் வந்தன. அங்கேயெல்லாம் யாரையும் காணவில்லை. “இங்கே யாரும் இல்லையா? ஒரு பெண்ணைக் காப்பாற்றுவதற்கு யாரும் இல்லையா?” என்று அலறிக் கொண்டே அங்குமிங்கும் ஓடினான். கடைசியாக ஒரு பெரிய மண்டபத்தின் வாசலில் சேவகர்கள் இருவர் அவனை வழி மடக்கி நிறுத்த முயன்றார்கள். அவர்களை மீறி தள்ளிக் கொண்டு உள்ளே புகுந்தான். அங்கே சக்கரவர்த்தி உன்னதமான சிங்காதனத்தில் அமர்ந்திருப்பதையும் ஆடவர்கள், பெண்டிர்கள் பலர் சூழ்ந்து நிற்பதையும் கண்டு திகைத்துப் போனான். முதலில் அவன் கண்களில் எதிர்ப்பட்ட பெண்மணி பூங்குழலி என்று தெரிந்து கொண்டதும், அவனுக்குச் சிறிது தைரியம் உண்டாயிற்று. “சமுத்திரகுமாரி! சமுத்திரகுமாரி! மணிமேகலை ஆற்றில் விழுந்து விட்டாள். உடனே வந்து காப்பாற்று!” என்று அலறினான்.

Source

Previous articleRead Ponniyin Selvan Part 5 Ch 75
Next articleRead Ponniyin Selvan Part 5 Ch 77

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here