Home Kalki Read Ponniyin Selvan Part 5 Ch 80

Read Ponniyin Selvan Part 5 Ch 80

164
0
Read Ponniyin Selvan Part 5 Ch 80 Kalki -TamilNovel.in Ponniyin Selvan is one of the historical fiction novel in tamil history. Read Download Ponniyin Selvan Free Ponniyin Selvan Part 5, Ponniyin Selvan part 5 Ch 80, Ponniyin Selvan Kalki, Ponniyin Selvan,ps1,ps2, Read Ponniyin Selvan book, Download Ponniyin Selvan pdf
Ponniyin Selvan Part 5 Ch 80 பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்: தியாக சிகரம் அத்தியாயம் 80: நிலமகள் காதலன்

Read Ponniyin Selvan Part 5 Ch 80

பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்: தியாக சிகரம்

அத்தியாயம் 80: நிலமகள் காதலன்

Read Ponniyin Selvan Part 5 Ch 80

இளவரசிகள் வீற்றிருந்த பல்லக்கைப் பொன்னியின் செல்வரின் குதிரை நெருங்கியது.

சற்று பின்னால் குதிரையை நிறுத்திய வந்தியத்தேவன், “ஜாக்கிரதை! இளவரசிகளின் அந்தப் பொல்லாத பல்லக்கு நம் சாது குதிரையை மோதிவிடப் போகிறது!” என்றான்.

கிட்டத்தட்ட அதே இடத்தில் முன்னொரு தடவை நந்தினியின் மூடுபல்லக்கின் மீது அவன் குதிரையைக் கொண்டு போய் மோதிவிட்டுக் “குதிரையைப் பல்லக்கு மோதுகிறது!” என்று கூக்குரலிட்டது அவனுக்கு நினைவு வந்தது. அச்சம்பவம் நடந்து ஆறு மாதம் கூட முழுமையாக ஆகவில்லை. ஆனால் இந்தச் சிறிய காலத்துக்குள் எத்தனை எத்தனை முக்கியமான நிகழ்ச்சிகள் நடந்தேறி விட்டன!

குந்தவை வந்தியத்தேவனுடைய வார்த்தைகளினால் ஏற்பட்ட பூரிப்பை அடக்கிக் கொண்டு, “தம்பி! உங்களைப் பார்த்தால் ஏதோ குதூகலமான விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டு வருவதாகத் தோன்றுகிறதே! உங்களுடைய திருமுகங்கள் அவ்வளவு மலர்ச்சியுடன் விளங்குகின்றன!” என்றாள்.

“ஆம், அக்கா! குதூகலமான விஷயம் பற்றித்தான் பேசிக் கொண்டு வந்தோம். ஆனால் அது உன் தோழி வானதிக்கு அவ்வளவு குதூகலம் தராது. என்னுடைய திருமண நாள் நெருங்கி வந்து கொண்டிருக்கிறதல்லவா? நான் காதல் கொண்டு மணந்து கொள்ளப்போகும் மங்கையைப் பார்த்து மகிழ்ந்தோம். அவளுடைய ரூப லாவண்யங்களைப் பற்றிப் பேசிக் கொண்டு வருகிறோம்!” என்றார் பொன்னியின் செல்வர்.

சற்றுமுன் பிரகாசமாக விளங்கிய இரு பெண்களின் முகங்களும் உடனே வாட்டமுற்றன. வானதி தலையைக் குனிந்து கொண்டாள். குந்தவையின் முகத்தில் கோபம், வியப்பு, ஐயம், ஆத்திரம் முதலிய வெவ்வேறு பாவங்கள் தோன்றி மறைந்தன.

“இது என்ன வெட்கமற்ற பேச்சு? இந்தப் பெண்ணின் மனத்தை வருத்தப்படுத்துவதில் உனக்கு என்ன சந்தோஷம்?” என்றாள்.

வானதி தலையை நிமிர்த்திக் குந்தவையைப் பார்த்து, “அக்கா, இது என்ன வார்த்தை? எனக்கு எதற்காக வருத்தம்?” என்றாள்.

ஒன்றுக்கும் மறுமொழி சொல்லாமல் பொன்னியின் செல்வர் புன்னகை பூத்த முகத்துடன் நிற்பதைக் கண்ட இளையபிராட்டி “கொள்ளிடக்கரைக்கல்லவா போய்த் திரும்புகிறீர்கள்? அங்கே எந்தப் பெண்ணைப் பார்த்தீர்கள்? எந்த ஊர்? என்ன பேர்? என்ன குலம்?” என்று கேட்டுக் கொண்டே போனாள்.

இப்போது வந்தியத்தேவன் குறுக்கிட்டு, “தேவி! இளவரசர் மணக்கப்போகும் குலமகள் யாரையும் நாங்கள் பார்த்துவிட்டு வரவில்லை. இந்தப் பஞ்சநதி தீரத்தில் பொலிந்து விளங்கும் நிலமாமகளைத்தான் நெடுகிலும் பார்த்து வியந்துகொண்டு வந்தோம். சோழ வளநாட்டின் இயற்கை அழகுகளைப் பற்றிப் பேசிக் கொண்டு வந்தோம். இளவரசர் இந்த அழகிய நாட்டின் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக்கொள்ளும் நாள் நெருங்கி வருகிறதல்லவா? இவர் இந்த இரு நிலமடந்தையின் பேரில் கொண்ட காதலைப் பற்றித்தான் குறிப்பிட்டார்!” என்றான்.

“ஆகா! என் சகோதரனுக்கு இப்படியெல்லாம் விகசிதமாகப் பேச முன்னெல்லாம் தெரிந்திருக்கவில்லை. அவனுக்குத் தாங்கள் கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள் போலிருக்கிறது!” என்றாள்.

அருள்மொழிவர்மர் சிரித்துவிட்டு, “நண்பரே! தங்களுக்கு நன்றாக வேண்டும்! தங்களுடைய சிநேகத்துக்குப் பிறகு எனக்குத் தந்திர மந்திரமெல்லாம் வந்திருக்கிறது என்று முன்னமே நான் சொல்லவில்லையா? என் தமக்கையாருக்கும் அவ்விதமே தோன்றியிருக்கிறது, பாருங்கள்!” என்றார்.

“இது என்ன வீண் பழி! தமக்கையும், தம்பியும் ஒத்துப் பேசிக் கொண்டதுபோல் ஒரே மாதிரி என் பேரில் குற்றம் சுமத்துகிறீர்களே?” என்றான் வந்தியத்தேவன்.

“இன்னும் தங்கள் பேரில் பல குற்றங்கள் இருக்கின்றன. என் தம்பி சொல்லியிருக்க முடியாத குற்றங்களும் இருக்கின்றன. அவற்றையெல்லாம் நடுச் சாலையில் நின்று சொல்ல முடியாது!” என்றாள் குந்தவை.

வந்தியத்தேவன், “நான் சந்தேகித்தது சரியாய்ப் போய் விட்டது!” என்றான்.

“என்ன சந்தேகித்தீர்கள்?”

“என்னை ஈழ நாட்டுப் படைக்குச் சேனாதிபதியாக்கி அனுப்புவது என் குற்றங்களுக்காக எனக்குத் தீவாந்தர சிட்சை விதிப்பதேயாகும் என்று சந்தேகித்தேன்.”

“பார்த்தீர்களா, அக்கா! சோழ குலத்தாரின் நன்றியறிதலில் இவருக்கு எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது என்று தெரிகிறது அல்லவா?”

“நமக்கு இவரிடம் நன்றி சிறிதும் இல்லை என்பது உண்மை தான்!”

“இது என்ன, நீங்களும் இப்படிச் சொல்லுகிறீர்களே?”

“அன்னியர்கள் செய்யும் உதவிக்கு நன்றி செலுத்தலாம். நண்பர்களுக்குள் நன்றி எப்படி ஏற்படும்? திருவள்ளுவர் சொல்லியிருப்பது ஞாபமில்லையா?

‘உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு!’

“நழுவிய உடையை எடுத்துக் கட்டிவிட்டதற்காக இடை கைக்கு நன்றி செலுத்த வேணுமா?” என்றாள் குந்தவை.

“தேவி! நன்றி செலுத்த வேண்டியதேயில்லை. தண்டனை விதிக்காமலிருந்தால், அதுவே பெரிய நன்றியாகும்!”

“தம்பி! நீயும் சரி, இவரும் சரி, ஒன்று நினைவு வைத்துக் கொள்ளுங்கள். இவரை எனக்கு உதவியாயிருக்கும்படியாக நம் தமையன், வீர சொர்க்கம் எய்திய கரிகாலன், அனுப்பி வைத்தான். அந்தக் கடமையிலிருந்து இவரை நான் விடுதலை செய்து விடவில்லை!” என்றாள் குந்தவை.

“இவருக்கு விடுதலை தரவே வேண்டாம், அக்கா! ஆயுள் தண்டனையாகவே அளித்தாலும் எனக்குச் சம்மதந்தான்!” என்றார் இளவரசர்.

“இலங்கையில் இவரால் எனக்கு ஆகவேண்டிய காரியங்கள் சில இருக்கின்றன” என்றாள் குந்தவை.

“போவதற்கு முன்னால் தங்களிடம் விடைபெற்றுச் செல்வேன், தேவி!” என்றான் வந்தியத்தேவன்.

“அப்படியானால், பழையாறைக்குத் தாங்கள் வந்து என்னிடம் விடைபெறும்படி இருக்கும்” என்றாள் குந்தவைப் பிராட்டி.

“அக்கா! இப்போது எங்கே புறப்பட்டீர்கள்?” என்று அருள்மொழிவர்மர் சிறிது வியப்புடன் கேட்டார்.

“திருவையாறுக்குப் போகிறோம். இன்று மார்கழித் திருவாதிரைத் திருநாள் அல்லவா? செம்பியன்மாதேவியும் மதுராந்தகரும் பூங்குழலியும் காலையிலேயே சென்றார்கள் நீங்களும் வருகிறீர்களா?” என்றாள் குந்தவை.

“இல்லை; நாங்கள் இப்போது வரவில்லை திருவையாறு நகருக்குள் போகக் கூடாதென்றுதான் ஆற்றங்கரையோடு மேற்கே சென்று திரும்பி வந்தோம்.”

“அப்பர் பெருமான் திருவையாற்றில் கைலாசத்தையே கண்டு பரவசமடைந்தார். உங்களுக்கு அங்கே போகவே பிடிக்கவில்லை போலிருக்கிறது. ஒருவேளை நீங்களும் வீர வைஷ்ணவர்கள் ஆகி விட்டீர்களா என்ன?”

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. திருவையாறு சென்றால் அப்பர் பெருமானைப்போல அங்கே போக வேண்டுமென்பது என் எண்ணம்.”

“அப்பர் எப்படிச் சென்றார்?”

“அவருடைய பாடலிலேயே சொல்லியிருக்கிறாரே! ‘யாதும் சுவடு படாமல்’ சென்றார். ஆடம்பரம் ஏதுமில்லாமல், தாம் திருநாவுக்கரசர் என்பதைக் காட்டிக் கொள்ளாமல், பூஜைக்காகப் புஷ்பமும் நீரும் கொண்டு சென்ற அடியார் கூட்டத்தின் பின்னால் சென்றார். அதனால் திருவையாற்றில் கைலாசத்தையே அவர் காண முடிந்தது. நாம் அங்கே இந்த ராஜரீக ஆடம்பரங்களுடன் சென்றால், நாமும் இறைவனைத் தரிசிக்க முடியாது. ஜனங்களும் சுவாமி தரிசனத்தை மறந்துவிட்டு நம்மைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டு நிற்பார்கள்!”

“ஆமாம், ஆமாம்! உன்னுடைய ஜாதக விசேஷம் அப்படி! உன்னைக் கண்டதும் மக்கள் சூழ்ந்து கொண்டு ‘மன்னர் மன்னருக்கு ஜே! பொன்னியின் செல்வருக்கு ஜே!’ என்று கோஷமிடத் தொடங்குவார்கள். ஆனால் எங்களுக்கு அவ்வளவு அபாயம் இல்லை. மேலும் நாங்கள் ஜனக்கூட்டத்துக்கு மத்தியில் போகவும் மாட்டோம். திருவாதிரைத் திருநாளுக்காகச் சுவாமி எழுந்தருளல் நடக்கும்போது, திருவையாற்றிலுள்ள நம் அரண்மனை மேல் மாடத்திலிருந்து ஐயாறுடை இறைவனைத் தரிசித்துக் கொள்வோம்.”

“அக்கா! ஒரு பழம் பாடல் நினைவு இருக்கிறதா? அண்ட சராசரங்களையும், அகில புவனங்களையும், ஆகாச வெளியிலுள்ள எல்லா நட்சத்திரங்களையும் படைத்தவர் இறைவன். அவரை ‘ஆதிரையான்’ என்றும், ‘திருவாதிரை நட்சத்திரத்துக்கு மட்டும் உரியவன்’ என்றும், மக்கள் கருதுவது என்ன பேதைமை? இப்படிப்பட்ட கருத்துள்ள அந்தப் பாடல் தங்களுக்கு நினைவு இருக்கிறதா?”

“நினைவிருக்கிறது, தம்பி! ஆனால் எல்லா நட்சத்திரங்களுக்கும் உரியவன் திருவாதிரைக்கும் உரியவன்தானே?”

“சரி, நீங்கள் போய் வாருங்கள்! எப்போது தஞ்சைக்குத் திரும்பி வருவீர்கள்?”

“தஞ்சைக்கு இப்போது நாங்கள் திரும்பப் போவதில்லை திருவையாற்றிலிருந்து பழையாறை போகிறோம்.”

“என்ன, என்ன? என்னுடைய மகுடாபிஷேகத்துக்கு இல்லாமலா போகிறீர்கள்?” என்றார் இளவரசர்.

“ஆம், ஆம்! உன்னுடைய மகுடாபிஷேக வைபவத்தில் எனக்கும், வானதிக்கும் என்ன வேலை?”

“ஆகா! தாங்கள் இல்லாமல் என்னுடைய பட்டாபிஷேகம் நடைபெறாது?”

“எல்லாம் நடைபெறும், ஏன் நடைபெறாது? பட்டாபிஷேகத்துக்கு நாள் வைத்துக் கொடுத்தவர் யார்? இராமருடைய பட்டாபிஷேகத்துக்கு நாள் பார்த்துச் சொன்னவரின் சந்ததியில் வந்தவர் அல்லவே?”

“எனக்கு நாள் நட்சத்திரம், சோதிடம் ஆருடம் எதிலும் நம்பிக்கை இல்லை, அக்கா! நம் கடமையைச் செய்யும் எல்லா நாளும் நல்ல நாள்தான்! சோம்பியிருக்கும் நாட்களே கெட்ட நாட்கள்!” என்றார் பொன்னியின் செல்வர்.

“உன்னுடைய வாழ் நாட்கள் எல்லாம் அத்தகைய நல்ல நாட்களாகவே இருக்கட்டும், தம்பி! நாங்கள் சென்று ஐயாறப்பரிடமும் அறம் வளர்த்த நாயகியிடமும் உனக்காகப் பிரார்த்தனை செய்கிறோம்!” என்றாள் குந்தவை.

“எனக்காக என்ன பிரார்த்தனை செய்யப் போகிறீர்கள்?”

“‘நிலமகள் மேல் நீ கொண்டிருக்கும் காதல் பூர்த்தி ஆகட்டும். உன் மகுடாபிஷேகம் விக்கினமின்றி நடைபெறட்டும்’ என்று ஐயாறுடைய இறைவரிடம் பிரார்த்திக்கிறோம். ‘உன் உள்ளம் சோழர் தொல்குடிக்கு உரிய அற வழியிலிருந்து விலகாமலிருக்கட்டும்’ என்று அறம் வளர்த்த நாயகியின் சந்நிதியில் பிரார்த்தித்துக் கொள்கிறோம்.”

“அப்படியானால், நீங்கள் எனது பட்டாபிஷேகத்துக்கு நிச்சயமாக இருக்கப் போவதில்லையா?”

“பழையாறையிலிருந்து அகக்கண்ணால் கண்டு மகிழ்கிறோம்.”

“அக்கா! தாங்கள் இந்தக் கொடும்பாளூர்க் கோமகளின் பிடிவாதத்துக்குச் சப்பைக் கட்டுக் கட்டுகிறீர்கள். இவள் என்னுடன் சோழ சிங்காதனம் ஏறுவதற்கு மறுத்தால், உலகமே அஸ்தமித்து விடும் என்று எண்ணுகிறாள்! இவளுடைய வீண் பிடிவாதம் விபரீதத்தில் முடியப்போகிறது. இவளுக்குப் பதிலாகச் சோழரின் சிங்காதனத்தில் வேறொரு பெண் அமர்ந்து விடப் போகிறாள்! அப்புறம் என் பேரில் குற்றம் சொல்லிப் பயன் ஒன்றுமில்லை” என்றார் இளவரசர் பொன்னியின் செல்வர்.

“நான் இவர் மீது என்றும் குற்றம் சொன்னதில்லை. இனிமேலும் குற்றம் சொல்லப் போவதில்லை, அக்கா!” என்றாள் கொடும்பாளூர் இளவரசி.

“நீ சொன்னாலும் பயனில்லை, வானதி! மண்ணாசை கொண்டவர்களின் காதில் வேறு எதுவும் ஏறாது!” என்றாள் இளைய பிராட்டி குந்தவை.

“இந்த மண்ணாசையை என் மனதில் உண்டாக்கியவர் தாங்கள்தான் என்பதை மறந்து விடவேண்டாம். பெண்ணாய்ப் பிறந்த தாங்களே இந்த அழகிய சோழ நாட்டை விட்டுப் போக மனம் வரவில்லையென்றும், அதற்காகவே கலியாணம் செய்து கொள்ளப் போவதில்லையென்றும் பலமுறை என்னிடம் சொன்னதில்லையா?” என்றார் அருள்மொழி.

“அப்போதெல்லாம் என் வார்த்தைகள் உன் காதில் ஏறவே இல்லை. உலகத்தில் இன்னும் எத்தனையோ அழகிய நாடுகள் இருக்கின்றன என்று சொல்லி வந்தாய்! இந்த வாணர் குலத்து வீரரின் போதனைதான் உன்னை இப்படி நிலமடந்தையின் காதலன் ஆக்கிவிட்டது!” என்றாள் குந்தவைப்பிராட்டி.

“தெய்வமே! அந்தப் பழியும் என் பேரிலேதானா வந்து விழ வேண்டும்?” என்றான் வந்தியத்தேவன்.

“எவ்வளவோ பெரிய பயங்கரமான பழியைச் சுமந்தீர்களே? இந்தச் சிறிய பழிகளுக்கா பயந்துவிடப் போகிறீர்கள்? தம்பி! வெகு நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டோம்! சுவாமி எழுந்தருளும் நேரம் நெருங்கி விட்டது, போகிறோம்!” என்று கூறிக் குந்தவை சிவிகையாளருக்குச் சமிக்ஞை செய்தாள். பல்லக்கு மேலே சென்றது.

சிறிது நேரம் அங்கேயே நின்று பார்த்துக் கொண்டிருந்து விட்டு பொன்னியின் செல்வரும் தஞ்சையை நோக்கிக் குதிரையைச் செலுத்தினார்.

சற்றுத் தூரம் சென்றதும் பக்கத்தில் நெருங்கி வந்துகொண்டிருந்த வந்தியத்தேவனை நோக்கி, “நண்பரே! இந்தப் பெண்மணிகள் உண்மையில் சுவாமி தரிசனத்துக்குப் போகிறதாக எனக்குத் தோன்றவில்லை. குடந்தை சோதிடர் இப்போது திருவையாற்றுக்கு அருகில் குடி வந்து விட்டாராம்! அவரைப் பார்த்துச் சோதிடம் கேட்பதற்காகவே போகிறார்கள்!” என்றார்.

“ஐயா! குடந்தை சோதிடரை விடத் தாங்களே பெரிய சோதிடராயிருக்கிறீர்களே!” என்றான் வந்தியத்தேவன்.

Source

Previous articleRead Ponniyin Selvan Part 5 Ch 79
Next articleRead Ponniyin Selvan Part 5 Ch 81

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here