Home Kalki Read Sivagamiyin Sabatham Part 1 Ch 1

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 1

141
0
Read Sivagamiyin Sabatham Part 1 Ch 1 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 1 Ch 1 சிவகாமியின் சபதம் முதல் பாகம்: பரஞ்சோதி யாத்திரை அத்தியாயம் 1: கோயில்

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 1

சிவகாமியின் சபதம்

முதல் பாகம்: பரஞ்சோதி யாத்திரை

அத்தியாயம் 1: கோயில்

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 1

இளவேனிற் காலத்தில் ஒருநாள் மாலை மகேந்திர தடாகத்தின் கரை வழியாகச் சென்ற இராஜபாட்டையில் பிரயாணிகள் இருவர் காஞ்சி மாநகரை நோக்கி நடந்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் ஆறடி உயரத்துக்குமேல் வளர்ந்திருந்த ஆஜானுபாகு; காவி வஸ்திரம் தரித்த பௌத்த சந்நியாசி. கடுமையான தவ விரத அனுஷ்டானங்களினாலோ, வேறு கடினமான காரியங்களில் ஈடுபட்டதனாலோ, அந்தப் புத்த பிக்ஷுவின் தேகமானது வறண்டு கெட்டிப்பட்டுக் கடினமாகியிருந்தது. அவருடைய முகத் தோற்றமானது அன்பையோ, பக்தியையோ உண்டாக்குவதாயில்லை; ஒருவித அச்சத்தை ஊட்டுவதாயிருந்தது.

இன்னொரு பிரயாணி கட்டமைந்த தேகமும், களை பொருந்திய முகமும் உடைய பதினெட்டுப் பிராயத்து இளம் பிள்ளை. பிரயாணிகள் இருவரும் வெகுதூரம் வழிநடந்து களைப்புற்றவர்களாகக் காணப்பட்டார்கள். “தலைநகரம் இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது?” என்று வாலிபன் கேட்டான். “அதோ!” என்று சந்நியாசி சுட்டிக் காட்டிய திக்கில், அடர்ந்த மரங்களுக்கு இடை இடையே மாட மாளிகைகளின் விமானங்கள் காணப்பட்டன. இளம் பிரயாணி சற்று நேரம் அந்தக் காட்சியை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். பின்னர், புத்த பிக்ஷுவைப் பார்த்து, “இங்கிருந்து ஒரு நாழிகை தூரம் இருக்குமா?” என்று கேட்டான். “அவ்வளவுதான் இருக்கும்.” “அப்படியானால், நான் சற்று உட்கார்ந்து விட்டு வருகிறேன். அவசரமானால் தாங்கள் முன்னால் போகலாம்!” என்று சொல்லி, வாலிபன் கையிலிருந்த மூட்டையையும் தடியையும் பாதை ஓரமாகக் கீழே வைத்துவிட்டு, ஏரியைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்தான். சந்நியாசியும் அவன் அருகில் மேற்குத் திசையைப் பார்த்து கொண்டு அமர்ந்தார்.

மேல் வானத்தின் அடிப்புறத்தில் தங்க நிறமான ஞாயிறு திருமாலின் சக்ராயுதத்தைப்போல் ‘தகதக’வென்று சுழன்று கொண்டிருந்தது. அதன் செங்கிரணங்களினால் மேல் வானமெல்லாம் செக்கர் படர்ந்து, பயங்கரமான போரில் இரத்த வெள்ளம் ஓடிய யுத்தகளத்தைப்போல் காட்சியளித்தது. ஆங்காங்கே காணப்பட்ட சிறு மேகக் கூட்டங்கள் தீப்பிடித்து எரிவது போல் தோன்றின. சூரியன் அஸ்தமித்துக்கொண்டிருந்த திசையில், மகேந்திர தடாகத்தின் பளிங்கு போலத் தௌிந்த நீர், உருக்கிய பொன்னைப் போல் ஒளிர்ந்து கொண்டிருந்தது. ஆனால், மேற்குத் திசையிலிருந்து சற்றுத் திரும்பி, அந்த விசாலமான ஏரியின் வடகரையை நோக்கினால் முற்றும் மாறான வேறொரு காட்சி காணப்பட்டது. அந்தக் கரையில் ஏரிக்குக் காவலாக நின்ற சிறு குன்றுகளின் மாலை நேரத்து நெடிய நிழல் ஏரியின் மேல் விஸ்தாரமாகப் படர்ந்திருந்தபடியால் ஏரி நீர் அங்கே கருநீலம் பெற்று விளங்கிற்று.

நிழல் படர்ந்த ஏரிக்கரை ஓரமாகச் சில இடங்களில் கண்ணைப் பறிக்கும் வெள்ளை நிறம் திட்டுத் திட்டாகத் திகழ்ந்தது. சிறிது கூர்ந்து கவனித்தால் அந்த இடங்களில் வெண் நாரைகள் ஒற்றைக் காலில் நின்று தவம் புரிகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம். சில சமயம் திடீரென்று ஒரு வெண் நாரைக் கூட்டமானது ஜலக்கரையிலிருந்து கிளம்பி ஆகாசத்தில் மிதக்கத் தொடங்கும். ஆகா! அந்தக் காட்சியின் அழகை என்னவென்று சொல்வது? கீழே கருநிறத் தண்ணீர் பரப்பு; மேலே கரு நீல வானம்; பின்னால் கரும் பசுமை நிறக்குன்றுகள். இவற்றின் மத்தியில் அந்தத் தாவள்யமான நாரைக் கூட்டம் வானவௌியில் மிதந்து செல்வதுபோல் நெருக்கமாய்ப் பறந்து செல்லும் காட்சி யாருக்குமே மனக் கிளர்ச்சியை உண்டாக்கும். இறைவனுடைய லீலா வினோதங்களில் சிந்தை செலுத்தியவர்களோ மெய்ம்மறந்து பரவசமாகி விடுவார்கள்.

இவற்றையெல்லாம் சற்று நேரம் மௌனமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த வாலிபன், தனக்குத் தானே பேசிக் கொள்வது போல், “இந்தப் பிரம்மாண்டமான ஏரியை மகேந்திர தடாகம் என்று சொல்வது பொருத்தமில்லை; மகேந்திர சமுத்திரம் என்று தான் இதைச் சொல்ல வேண்டும்!” என்றான். சந்நியாசி ஏரியை நோக்கியவண்ணம், “இந்த மகேந்திர தடாகத்தில் இப்போது தண்ணீர் குறைந்து போயிருக்கிறது. ஐப்பசிக் கார்த்திகையில் மழை பெய்து ஏரி நிரம்பியிருக்கும் போது பார்த்தாயானால், பிரமித்துப் போவாய்! அப்போது நிஜ சமுத்திரம் போலவே இருக்கும்!” என்று சொல்லிக் கொண்டே எழுந்தார். “புறப்பட்டு விட்டீர்களா, சுவாமி?” என்றான் வாலிபன். “ஆமாம், பரஞ்சோதி! என்னோடு வருவதற்குத் தான் உனக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறதே!” என்று சந்நியாசி கூறிவிட்டு நடக்கத் தொடங்கினார். பரஞ்சோதி என்ற அவ்வாலிபனும் மூட்டையையும் தடியையும் எடுத்துக்கொண்டு அவரைத் தொடர்ந்து நடக்கலானான்.

சாலையில் போவோர் வருவோர் கூட்டம் அதிகமாயிருந்தது. பிரயாணிகள் ஏறிய வண்டிகளும், நெல்லும் வைக்கோலும் ஏற்றிய வண்டிகளும் சாரி சாரியாய்ப் போய்க் கொண்டிருந்தன. சாலைக்கு அப்புறத்தில் முதிர்ந்த கதிர்களையுடைய செந்நெல் வயல்கள் பரந்திருந்தன. கதிர்களின் பாரத்தினால் பயிர்கள் தலை சாய்ந்து விழுந்து கிடந்தன. ஆங்காங்கே சில வயல்களில் குடியானவர்கள் அறுவடையான கற்றைகளைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். வயல்களிலிருந்து புது நெல், புது வைக்கோலின் நறுமணம், ‘கம்’மென்று வந்து கொண்டிருந்தது.

சற்றுத் தூரம் போனதும் ஓர் அழகிய கிராமம் தென்பட்டது. அந்தக் கிராமத்தைத் தாண்டியதும் புதுநெல் மணத்துக்குப் பதிலாக மல்லிகை முல்லை மலர்களின் நறுமணம் சூழ்ந்தது. அந்த மணத்தை மூக்கினால் நுகர்வது மட்டுமின்றித் தேகம் முழுவதனாலும் ஸ்பரிசித்து அனுபவிக்கலாம் என்று தோன்றியது. “ஆகா!” என்றான் வாலிபன். அவனுக்கெதிரே கண்ணுக்கெட்டிய தூரம் நந்தவனங்கள், மல்லிகை முல்லைப் புதர்களின்மீது வானத்து நட்சத்திரங்கள் வந்து படிந்ததுபோல் குண்டுமல்லிகைகளும் முத்து முல்லைகளும் ‘கலீ’ரென்று பூத்துச் சிரித்துக்கொண்டிருந்தன.

இந்த வெண்மலர்ப் பரப்புக்கு இடை இடையே தங்க நிறச் செவ்வந்திப் பூக்களின் காடும் காணப்பட்டது. “இவ்வளவு பூவையும் என்னதான் செய்வார்கள்?” என்று வாலிபன் கேட்டான். “இவற்றில் பாதி கோயில் தெய்வங்களுக்கு அர்ப்பணமாகும். மற்றப் பாதி காஞ்சி நகரத்துப் பெண் தெய்வங்களின் கூந்தலை அலங்கரிக்கும்…அதோ!” என்று சட்டென நின்றார் சந்நியாசி. சர சரவென்று சாலையின் குறுக்கே ஒரு பாம்பு ஊர்ந்து சென்று நந்தவனத்துக்குள் புகுந்து மறைந்தது. “இந்த மல்லிகை மணத்துக்குப் பாம்புகள் எங்கே என்று காத்திருக்கும்!” என்றார் சந்நியாசி.

பாம்பு மறைந்ததும் இருவரும் மேலே சென்றார்கள் சற்று நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது. பரஞ்சோதி ‘களுக்’கென்று சிரித்தான். “எதை நினைத்துச் சிரிக்கிறாய்?” என்றார் சந்நியாசி. பரஞ்சோதி சற்று நேரம் பேசாமல் இருந்துவிட்டு, “இல்லை, அடிகளே! மத்தியானம் அந்தச் சர்ப்பத்தைக் கொன்று என்னைக் காப்பாற்றினீர்களே? நீங்கள் புத்த பிக்ஷுவாயிற்றே? ஜீவஹத்தி செய்யலாமா என்று நினைத்துச் சிரித்தேன்!” என்றான். “தன்னை கொல்ல வந்த பசுவையும் கொல்லலாம் அல்லவா?” என்றார் புத்த பிக்ஷு. “ஆனால் பாம்பு தங்களைக் கொல்ல வரவில்லையே? என்னைத் தானே கொல்ல வந்தது?” என்றான் பரஞ்சோதி ஏளனமான குரலில். “என் சிஷ்யனை நான் காப்பாற்ற வேண்டாமா?” என்றார் பிக்ஷு. “சிஷ்யனா? யாரைச் சொன்னீர்கள்?” “ஆமாம், நீ என் உயிரை ஒரு சமயம் காப்பாற்றினாய், அதற்குப் பிரதியாக…” “தங்கள் உயிரை நான் காப்பாற்றினேனா! எப்போது?” “முந்நூறு வருஷங்களுக்கு முன்னால்…” “என்ன!” “முன்னொரு ஜன்மத்தில்.” “ஓஹோ! தாங்கள் முக்காலமும் உணர்ந்த முனிவர் என்பது தெரியாமல் கேட்டுவிட்டேன்; க்ஷமிக்க வேண்டும்.”

சந்நியாசி மௌனமாக நடந்தார். மறுபடி பரஞ்சோதி, “சுவாமி! இனிமேல் வரப்போகிறது கூடத் தங்கள் ஞான திருஷ்டியில் தெரியுமல்லவா?” என்று கேட்டான். “வரப்போகிறது ஒன்றைச் சொல்லட்டுமா?” “சொல்லுங்கள்.” “இந்த நாட்டுக்குப் பெரிய யுத்தம் வரப்போகிறது!” “பெரிய யுத்தமா?” “ஆமாம்; மகா பயங்கரமான யுத்தம் பாலாறு இரத்த ஆறாக ஓடப் போகிறது. மகேந்திர தடாகம் இரத்தத் தடாகம் ஆகப் போகிறது.” “ஐயோ! பயமாயிருக்கிறதே! போதும் அடிகளே!”

சற்றுப் பொறுத்து மறுபடியும் பரஞ்சோதி, “நாட்டின் சமாசாரம் எனக்கெதற்கு, சுவாமி? என் விஷயமாக ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள்!” என்றான். “இன்று ராத்திரி உனக்கு ஒரு கஷ்டம் ஏற்படப் போகிறது.” “சிவ சிவா! நல்ல வாக்காக ஏதாவது சொல்லக் கூடாதா?” “புத்தபகவானுடைய அருளால் அந்தக் கஷ்டம் நீங்கும்.” “நான் சைவன் ஆயிற்றே! புத்தர் எனக்கு அருள் செய்வாரா?” “புத்தருடைய கருணை எல்லையற்றது.” “அதோ வருவது யார்?” என்று கேட்டான் பரஞ்சோதி.

மங்கிய மாலை வௌிச்சத்தில், ஓர் அபூர்வ உருவம் அவர்களுக்கெதிரே வந்துகொண்டிருந்தது தெரிந்தது. “பார்த்தாலே தெரியவில்லையா? திகம்பர சமண முனிவர் வருகிறார்!” என்றார் புத்த பிக்ஷு. “சமண முனிவர்கள் இன்னும் இங்கே இருக்கிறார்களா?” என்று பரஞ்சோதி கேட்டான். “முக்கால்வாசிப்பேர் பாண்டிய நாட்டுக்குப் போய்விட்டார்கள் மற்றவர்களும் சீக்கிரம் போய்விடுவார்கள்.”

சமண முனிவர் அருகில் வந்தார். அவர் புத்த பிக்ஷுவைப் போல் உயர்ந்து வளர்ந்தவர் அல்ல. கட்டையாயும் குட்டையாயும் இருந்தார். கௌபீனம் ஒன்றுதான் அவருடைய ஆடை, ஒரு கையில் உறி கட்டித் தூக்கிய கமண்டலம் வைத்திருந்தார். இன்னொரு கையில் மயில் தோகை விசிறி; கக்கத்தில் சுருட்டிய சிறுபாய். அவர் அருகில் வந்ததும் புத்த பிக்ஷு, “புத்தம் சரணம் கச்சாமி!” என்றார். சமண முனிவர், “அருகர் தாள் போற்றி!” என்றார். “இருட்டுகிற சமயத்தில் அடிகள் எங்கே பிரயாணமோ?” என்று புத்த சந்நியாசி கேட்டார். அதற்குச் சமணர், “ஆகா! இந்த ருத்ர பூமியில் எனக்கு என்ன வேலை? தொண்டை மண்டலந்தான் சடையன் கூத்தாடும் சுடுகாடாகி விட்டதே, தெரியாதா? நான் பாண்டிய நாட்டுக்குப் போகிறேன்” என்றார்.

“இன்றைக்கு முக்கியமாக ஏதாவது விசேஷம் உண்டோ?” என்று புத்த பிக்ஷு கேட்க, சமண முனிவர், “உண்டு, விசேஷம் உண்டு; கோட்டைக் கதவுகளை அடைக்கப் போகிறார்களாம்!” என்று சொல்லிக்கொண்டே மேலே விரைந்து சென்றார். “ஒரு காலத்தில் இந்தப் பல்லவ ராஜ்யத்தில் சமணர்கள் வைத்ததே சட்டமாயிருந்தது. அவர்கள் கிழித்தகோடு தாண்டாமல், மகேந்திர சக்கரவர்த்தி நடந்து வந்தார். இப்போது..” என்று கூறிப் புத்த பிக்ஷு நிறுத்தினார். “இப்போது என்ன?” என்று பரஞ்சோதி கேட்டான். “இப்போது சைவ வைஷ்ணவர்களின் பாடு இந்த நாட்டில் கொண்டாட்டமாயிருக்கிறது.” “ஓஹோ!” என்றான் பரஞ்சோதி. பிறகு, “ஏதோ கோட்டைக் கதவு சாத்துவதைப் பற்றிச் சமண முனிவர் சொன்னாரே, அது என்ன?” என்று கேட்டான். “அதோ பார்!” என்றார் சந்நியாசி. சாலையில் அந்தச் சமயத்தில் ஒரு முடுக்குத் திரும்பினார்கள். எதிரே காஞ்சி மாநகரின் தெற்குக் கோட்டை வாசல் தெரிந்தது. கோட்டை வாசலின் பிரம்மாண்டமான கதவுகள் மூடியிருந்தன.

Source

Previous articleRead Parthiban Kanavu Part 3 Ch 40
Next articleRead Sivagamiyin Sabatham Part 1 Ch 2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here