Home Kalki Read Sivagamiyin Sabatham Part 1 Ch 16

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 16

86
0
Read Sivagamiyin Sabatham Part 1 Ch 16 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 1 Ch 16 சிவகாமியின் சபதம் முதல் பாகம்: பரஞ்சோதி யாத்திரை அத்தியாயம் 16: திருமணம்

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 16

சிவகாமியின் சபதம்

முதல் பாகம்: பரஞ்சோதி யாத்திரை

அத்தியாயம் 16: திருமணம்

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 16

பலகையில் உட்கார்ந்த பிறகும் சிவகாமி வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டிருப்பதைப் பார்த்த நரசிம்மர், “இன்னும் என்ன கோபம், சிவகாமி? இப்படி நீ பிடிவாதம் பிடிக்கும் பட்சத்தில் என்னிடம் உனக்குப் பிரியம் இல்லை என்றுதான் எண்ணிக்கொள்வேன்” என்றார். சிவகாமி உடனே திரும்பி, நரசிம்மரின் முகத்தை ஏறிட்டுப் பார்த்து, “உங்களுக்கு மட்டும் என்னிடம் பிரியம் இருக்கிறதா? இருந்தால் இந்த மூன்று நாளாக என்னுடைய ஞாபகம் இல்லாமல் போனதேன்?” என்று கேட்டாள்.

“இந்த மூன்று தினங்களாக நானும் உன்னைப் பார்க்க வரவேணுமென்று துடித்துக்கொண்டுதான் இருந்தேன். ஆனால் முக்கியமான இராஜாங்க வேலைகள் குறுக்கிட்டன. அன்றைக்கு உன்னுடைய அரங்கேற்றத்தை நடுவில் முடிக்கும்படி நேர்ந்தது ஏன் என்று உனக்குத் தெரியாதா? பல்லவ சாம்ராஜ்யத்தில் பல வருஷங்களாக இல்லாத பெரிய யுத்தம் வந்திருக்கிறது…” இவ்விதம் நரசிம்மர் சொல்லி வந்தபோது சிவகாமி குறுக்கிட்டு, “நானும் கேள்விப்பட்டேன். யுத்தம் வந்து விட்டதே என்று நினைத்து நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தீர்களாக்கும்!” என்றாள்.

“கவலையா? ஒருநாளும் இல்லை; சிவகாமி! பல்லவ குலத்தில் பிறந்தவர்கள் யுத்தம் வந்துவிட்டதே என்று கவலைப்பட மாட்டார்கள் குதூகலப்படுவார்கள். என் பாட்டனார் சிம்ம விஷ்ணு மகாராஜாவின் காலத்திலிருந்து பல்லவ சாம்ராஜ்யத்தில் யுத்தம் நேரவில்லை. பல்லவ சேனா வீரர்களின் கையில் வேல்களும் வாள்களும் துருப்பிடித்து வந்தன. இப்போது அவற்றுக்கெல்லாம் வேலை வந்திருக்கிறது. போர்க்களத்தில் ஆயிரக்கணக்கில் மின்னிப் பாயும் வேல்களையும், வாள்களையும் கண்டு பயப்படுகிறவன் நான் அல்ல. ஆனால், உன்னுடைய கரிய விழிகளிலிருந்து கிளம்பிப் பாயும் வாள்களையும் வேல்களையும் கண்டுதான் அஞ்சுகிறேன்!”

சிவகாமி தன்னை மீறி வந்த புன்முறுவலை அடக்கிக் கொள்ள முடியாதவளாய், “புருஷர்களே இப்படித்தான் போலிருக்கிறது. சாதுர்யமாயும் சக்கரவட்டமாயும் பேசி உண்மையை மறைக்கப் பார்ப்பார்கள்” என்று முணுமுணுத்தாள். ஆனாலும், அந்த வார்த்தைகள் நரசிம்மரின் காதில் விழாமல் போகவில்லை. “பழிமேல் பழியாகச் சுமத்திக் கொண்டிருக்கிறாயே? எந்த உண்மையை நான் மறைக்கப் பார்த்தேன்!” என்று மாமல்லர் கேட்டார். “பின்னே, நீங்கள் யுத்தத்துக்குப் பயப்படுகிறவர் என்று நான் சொன்னேனா? நீங்கள் வீராதி வீரர், சிம்ம விஷ்ணு மகாராஜாவின் பேரர், மகேந்திர சக்கரவர்த்தியின் குமாரர் என்பதெல்லாம் எனக்குத் தெரியாதா? இந்த யுத்தம் வந்ததனால் திருமணம் தடைப்பட்டுவிட்டதே? அதைப்பற்றிக் கவலைப்படுகிறீர்களாக்கும் என்று தானே சொன்னேன்?”

இவ்விதம் சிவகாமி கூறியபோது, அவளுடைய முகத்தில் நாணத்துடன் கோபம் போராடியது. நரசிம்மர் வியப்புடன், “சிவகாமி! என்ன சொல்லுகிறாய்? திருமணம் தடைப்பட்டு விட்டதா? யாருடைய திருமணம்?” என்று கேட்டார். “ஓகோ! உங்களுக்குத் தெரியவே தெரியாதுபோல் இருக்கிறது. நான் சொல்லட்டுமா! காஞ்சி மாநகரத்தில் மகாராஜாதிராஜதிரிபுவன சக்கரவர்த்தி மகேந்திரவர்ம பல்லவர் இருக்கிறாரோ, இல்லையோ, அந்தச் சக்கரவர்த்திக்குத் தேசமெல்லாம் புகழ்பெற்ற மாமல்லர் என்னும் திருக்குமாரர் ஒருவர் உண்டு. அந்தக் குமார சக்கரவர்த்திக்குத் திருமணம் பேசி வருவதற்காக மதுரைக்கும், வஞ்சிக்கும், இன்னும் வட தேசத்துக்கும் தூதர்களை அனுப்ப ஏற்பாடாகி இருந்ததாம். அப்பேர்ப்பட்ட சமயத்தில் யாரோ ஒரு பொல்லாத அரசன் பல்லவ ராஜ்யத்துக்குள் படையெடுத்து வரவே கல்யாணத்தைத் தள்ளிப் போடவேண்டியதாகி விட்டது. இதெல்லாம் தங்களுக்குத் தெரியாதல்லவா?” என்றாள் சிவகாமி.

நரசிம்மர் ‘கலகல’ வென்று சிரித்துவிட்டு, “இதற்குத்தானா இவ்வளவு பாடுபடுத்தினாய்? நான் பயந்து போய் விட்டேன். உனக்குத்தான் ஒருவேளை ஆயனர் திருமணம் நிச்சயம் செய்துவிட்டாரோ என்று! அப்படி ஒன்றும் இல்லையே?” என்றார். சிவகாமி கண்களில் கபடக் குறும்பு தோன்ற அவரைப் பார்த்து, “ஏன் இல்லை? என் தந்தைகூட அடிக்கடி என் கல்யாணத்தைப் பற்றிப் பேசிக்கொண்டுதான் இருக்கிறார். அவரிடம் சிற்ப வேலை கற்றுக்கொள்ளும் கெட்டிக்கார சீடப்பிள்ளை ஒருவனைப் பார்த்து என்னை மணம் செய்து கொடுக்கப் போகிறாராம்” என்றாள்.

“ரொம்ப சந்தோஷம் உன் தந்தை நிஜமாக அப்படிச் சொன்னாரா? அவரை உடனே பார்த்து என்னுடைய நன்றியை அவருக்குத் தெரிவித்துக்கொள்ள வேண்டும்” என்று நரசிம்மர் கூறிய மறுமொழி சிவகாமியைத் திடுக்கிடச் செய்தது. அவள் தொடர்ந்து கலக்கமுற்ற குரலில், “ஆனால், நான் அதற்குச் சம்மதிக்கவில்லை. ‘எனக்குக் கல்யாணமே வேண்டாம்! நான் புத்த பிக்ஷுணி ஆகப் போகிறேன்’ என்று அப்பாவிடம் சொல்லி விட்டேன்” என்றாள்.

“என்ன? நீயா புத்த பிக்ஷுணி ஆகப் போகிறாய்? ஆயனர் மகளா இப்படிப் பேசுகிறது? சிவபெருமானும் திருமாலும் உனக்கு என்ன தீங்கைச் செய்தார்கள்? சிவகாமி! நம் திருநாவுக்கரசர் பெருமானின் தேனினும் இனிய சைவத் திருப் பாடல்களை நீ கேட்டிருக்கிறாயே? ‘குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும்’ என்ற தெய்வீகப் பாடலுக்கு அபிநயங்கூடப் பிடித்தாயே? அப்படியிருந்தும், புத்த பிக்ஷுணி ஆக வேண்டுமென்ற எண்ணம் உன் மனத்தில் எப்படி உதித்தது?” என்று நரசிம்மர் சரமாரியாய்ப் பொழிந்தார்.

“எனக்குச் சிவன்பேரிலும் திருமாலின் பேரிலும் வெறுப்பு ஒன்றுமில்லை. கல்யாணத்தின் பேரிலேதான் வெறுப்பு. புத்த பிக்ஷுணியாகி, நான் தேச யாத்திரை செய்யப்போகிறேன்” என்று சிவகாமி தலை குனிந்தவண்ணம் கூறினாள். “சிவகாமி! அந்தமாதிரி எண்ணமே உனக்குத் தோன்றி இருக்கக்கூடாது. மகா மேதாவியான உன் தந்தையின் பேச்சை நீ தட்டலாமா? அவருடைய விருப்பத்தின்படி அவருடைய சீடர்களில் மிகவும் கெட்டிக்காரன் எவனோ, அவனை, நீ மணம் புரிந்து கொள்ளத்தான் வேண்டும்” என்று நரசிம்மர் கடுமையான குரலில் சொன்னார். “என்னை எந்த அசட்டுப் பிள்ளையின் கழுத்திலாவது கட்டி விடுவதில் உங்களுக்கு என்ன அவ்வளவு சிரத்தை? அரண்மனையில் பிறந்து வளர்ந்த அரசிளங்குமரியை நீங்கள் மணந்து கொள்வதை நான் குறுக்கே நின்று தடுக்கவில்லையே?” என்றாள் சிவகாமி. அவளுடைய கண்களில் நீர் ததும்பி நின்றது.

“ஜாக்கிரதை, சிவகாமி! அசட்டுப் பிள்ளை என்று யாரைச் சொன்னாய்? உன் தந்தையின் சீடர்களுள் ரொம்பக் கெட்டிக்காரன் யார் என்பது உனக்குத் தெரியாதா? ஆயனர் எத்தனையோ தடவை, ‘குமார சக்கரவர்த்திக்குச் சிற்பக் கலை வருவதுபோல் வேறு யாருக்கும் வராது’ என்று சொல்லியதில்லையா? ஆயனரின் சீடர்களில் மிகவும் கெட்டிக்காரனுக்கு உன்னை மணம் செய்து கொடுப்பதாயிருந்தால் எனக்குத்தானே கொடுக்க வேண்டும்! அதற்காக உன் தந்தைக்கு நான் நன்றி செலுத்தவேண்டாமா?” என்று நரசிம்மர் கூறியபோது, அவருடைய முகத்தில் குறும்பும் குதூகலமும் தாண்டவமாடின.

சிவகாமியோ சட்டென்று பலகையிலிருந்து எழுந்து நின்றாள். “பிரபு! இந்த ஏழைப் பெண்ணுக்கு ஏன் வீண் ஆசை காட்டுகிறீர்கள்…?” என்று கூறி, மேலே பேசமுடியாமல் விம்மி அழத் தொடங்கினாள். நரசிம்மவர்மர் அவளுடைய கரங்களைப்பிடித்து மறுபடியும் பலகையில் தம் அருகில் உட்காரவைத்துக் கொண்டு, ‘சிவகாமி! என்னை நீ இன்னும் தெரிந்துகொள்ளவில்லையா? இப்படி நீ கண்ணீர் விடுவதைப் பார்க்கும் போது..” என்று கூறுவதற்குள், சிவகாமி விம்மிக்கொண்டே, “பிரபு! இது ஆனந்தக் கண்ணீர்! துயரக் கண்ணீர் அல்ல!” என்றாள்.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 1 Ch 15
Next articleRead Sivagamiyin Sabatham Part 1 Ch 17

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here