Home Kalki Read Sivagamiyin Sabatham Part 1 Ch 23

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 23

84
0
Read Sivagamiyin Sabatham Part 1 Ch 23 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 1 Ch 23 சிவகாமியின் சபதம் முதல் பாகம்: பரஞ்சோதி யாத்திரை அத்தியாயம் 23: இராஜ ஹம்சம்

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 23

சிவகாமியின் சபதம்

முதல் பாகம்: பரஞ்சோதி யாத்திரை

அத்தியாயம் 23: இராஜ ஹம்சம்

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 23

நரசிம்மர் வெட்கமுற்றதைக் கண்டு அவருக்குத் தைரியம் சொல்பவர்போல் மகேந்திரர் கூறினார்: “நரசிம்மா! ஆயனர் வீட்டுக்குள் போனால் அங்குள்ள சிற்பச் சித்திர அதிசயங்களில் எவருமே கண்ணையும் கருத்தையும் பறிகொடுப்பது இயற்கைதான். நானே அப்படித்தான் மெய்ம்மறந்து விடுவது வழக்கம். இன்றைக்கு ஆயனர் வீட்டுக்குச் செல்லும்போதே சிறிது சந்தேகத்துடன் நான் சென்றபடியால் கூர்மையாகக் கவனித்தேன்…”

நரசிம்மர் தம் மனக் குழப்பத்தைச் சமாளித்துக்கொண்டு “கவனித்ததில் என்ன கண்டீர்கள், அப்பா? சிற்பங்களையும் சித்திரங்களையும் தவிர, ஆயனர் வீட்டில் வேறொன்றையும் நான் காணவில்லையே?” என்றார். “ஆயனரின் நடவடிக்கையில் உனக்கு எவ்விதமான சந்தேகமும் உண்டாகவில்லையா, நரசிம்மா!” மாமல்லர் மௌனமாயிருந்தார். “அடிக்கடி அவர் கவலையுடன் புத்தர் சிலையின் பக்கம் திரும்பினாரே, அதைக் கவனிக்கவில்லையா?”

மாமல்லரின் கண்கள் அகன்று விரிந்தன. “புத்தர் சிலைக்கு அருகில் நாம் சென்றதும், ஆயனர் தயங்கித் தடுமாறியதையும் நீ கவனிக்கவில்லையா?” நரசிம்மர் திடுக்கிட்டவராய், “அப்பா! அந்தப் பெரிய புத்த விக்கிரகத்துக்குப் பின்னால் ஒருவேளை யாராவது மறைந்திருந்தார்களா, என்ன?” என்றார். “ஆம், நரசிம்மா! இரண்டு பேர் இருந்தார்கள்! அன்றிரவு இராஜ விஹாரத்துக்கு அருகில் ஒரு புத்த பிக்ஷுவையும் ஒரு வாலிபனையும் நாம் பார்க்கவில்லையா, அந்த இருவரும் தான்!” “என்ன! அவர்களா ஆயனச் சிற்பியார் வீட்டில் புத்தர் சிலைக்குப் பின்னால் ஒளிந்திருந்தார்கள்?” “ஆம்; ஆனால், ஒளிந்துகொள்ளும் கலையை அவர்கள் அவ்வளவு நன்றாகக் கற்கவில்லை…”

“தங்களுக்கு மூன்றாவது கண் உண்டு என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும் அப்பா? ஆயனரின் வீட்டில் தாங்கள் அவ்வளவு நேரம் தங்கியது எனக்குச் சிறிது வியப்பை அளித்தது. இப்போது காரணம் தெரிகிறது!” என்று நரசிம்மர் பெருமிதத்துடன் கூறினார். மகேந்திரர் இதற்கு விடையொன்றும் கூறாமல் கால்வாயின் மேற்குத் திசையை நோக்கினார். திடீரென்று, “அப்பா! ஆயனர் வீட்டுக்கு நான் மறுபடியும் போய்வர விரும்புகிறேன்” என்றார் மாமல்லர். “எதற்காக, நரசிம்மா?” “அந்த வாலிபனைப் பார்த்து இந்த வேலை அவனிடம் ஒப்புவிக்க வேண்டும். புத்த பிக்ஷுவுடன் அன்றிரவு நாம் பார்த்த வாலிபன்தான் இந்த வேலுக்குரியவன் என்று தாங்கள் சொன்னீர்கள் அல்லவா?”

“அன்று ஊகித்துச் சொன்னேன்; இன்றைக்கு நிச்சயமாயிற்று. ஆனால், அந்த வாலிபனுக்கு இந்த வேல் இனிமேல் தேவையில்லை, நரசிம்மா! அதோ போகிறதே, ஆயுதப் படகு அதிலுள்ள பழைய வேல்களுடன் இதையும் நீ சேர்த்து விடலாம்!” “ஏன், அப்பா?” “பரஞ்சோதி ஆயனரிடம் சிற்பக் கலை கற்கப் போகிறான்; அவனுக்கு வேல் வேண்டியதில்லை.” “பரஞ்சோதி, பரஞ்சோதி! திவ்யமான பெயர்! அந்த வீர வாலிபனைப்பற்றி என்னவெல்லாமோ ஆசை கொண்டிருந்தேன் அவனை என் ஆருயிர்த் தோழனாகக் கொள்ள விரும்பினேன்!”

“அது நிறைவேறாதென்று நான் சொல்லவில்லையே!” “எப்படி நிறைவேறும்? நம் பகைவர்களின் ஒற்றர்களுடன் நாம் தோழமை கொள்வது சாத்தியமா?” “அந்த வாலிபனை ஒற்றன் என்று நான் சொல்லவில்லையே!” “பின் எதற்காக அவன் ஒளிந்துகொண்டான்?” “அந்த வாலிபன் குற்றமற்றவன் அவனைக்கொண்டு அந்தக் கள்ள பிக்ஷு ஏதோ சூழ்வினை செய்யப் பார்க்கிறான் என்று தோன்றுகிறது. வாதாபி சாம்ராஜ்யத்தின் மகா சதுரனான ஒற்றன் அந்தப் பிக்ஷு என்று நான் ஊகிக்கிறேன்!”

“அப்பா! சில சமயம் தங்களுடைய நிதானப் போக்கு எனக்கு மிகுந்த வியப்பை அளிக்கிறது.” “எதைப்பற்றிச் சொல்லுகிறாய், நரசிம்மா?” “அன்றிரவே அந்தப் புத்த பிக்ஷுவைப்பற்றித் தாங்கள் சந்தேகம் கொண்டீர்கள். உடனே அவனை ஏன் சிறைப்படுத்தவில்லை? வெளியிலே விட்டு ஏன் வேடிக்கை பார்க்கிறீர்கள்?” “அன்றிரவு சிறைப்படுத்தியிருந்தால், பல்லவ ராஜ்யத்துக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு பெரிய அபாயம் எனக்குத் தெரியாமல் போயிருக்கும்.” “பெரிய அபாயமா?” என்று கூறி நரசிம்மர் ஆவலுடனும் பரபரப்புடனும் மகேந்திரரை நோக்கினார்.

“ஆம்; அன்றிரவு நாம் புத்த பிக்ஷுவையும் வாலிபனையும் பார்த்தோம்; மறுநாள் காலையில் அவர்களை இராஜ விஹாரத்தில் காணவில்லை. ஆனால், அவர்கள் எந்தக் கோட்டை வாசலின் வழியாகவும் வெளியே போனதாகத் தெரியவில்லையல்லவா?” “ஆமாம்!” “அவர்கள் எப்படி மாயமாய் மறைந்திருக்கக் கூடுமென்று வியப்பாயிருந்ததல்லவா?” “ஆம், அப்பா!” “கோட்டைக்கு வெளியே போக ஏதோ கள்ள வழி இருக்க வேண்டும் என்று சந்தேகித்தேன். அந்தக் கள்ள வழி எங்கே இருக்கிறதென்று சற்று முன்னால்தான் தெரிந்தது.” “அதைப்பற்றி யோசித்ததனால்தான் குதிரையை அவ்வளவு வேகமாய் விட்டுக்கொண்டு வந்தீர்களா?” சக்கரவர்த்தி மௌனமாயிருந்தார் “கள்ள வழி எங்கே இருக்கிறது, அப்பா?” “இராஜ விஹாரத்தில் புத்த பகவானுடைய விக்கிரஹத்துக்குப் பின்னால் பார்க்கவேண்டும், நரசிம்மா!”

சக்கரவர்த்தியின் அறிவுக் கூர்மையைப்பற்றி நரசிம்மர் அளவற்ற வியப்புக் கொண்டவராய்த் திகைத்து நிற்கையில், “அதோ இராஜஹம்சம்!” என்று மகேந்திரர் கூறியதைக் கேட்டு மேற்கே நோக்கினார். காஞ்சி நகர்ப் பக்கத்திலிருந்து மூன்று படகுகள் கால்வாயில் வந்துகொண்டிருந்தன. அவற்றில் நடுவில் வந்த படகு சங்கையொத்த வெண்ணிறமுடைய ‘இராஜ ஹம்ச’த்தின் உருவமாக அமைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு பக்கத்தில் அமைந்திருந்த தங்கச் சிங்காதனம் ‘பளபள’வென்று மின்னிற்று. அதன் மேல் விசாலமான வெண்கொற்றக்குடை விரித்திருந்தது. எல்லாவற்றுக்கும் மேலே பல்லவ சாம்ராஜ்யத்தின் ரிஷபக்கொடி கம்பீரமாய்ப் பறந்து கொண்டிருந்தது.

முதலில் வந்த படகும், ‘இராஜ ஹம்ச’மும் படகோட்டிகளைத் தவிர மற்றப்படி வெறுமையாயிருந்தன. கடைசியாக வந்த படகில் பலர் அமர்ந்திருந்தார்கள். “ஆ! மந்திரி மண்டலத்தாரும் வருகிறார்களே! தாங்கள் வரச் சொல்லியிருந்தீர்களா?” என்றார் நரசிம்மர். “ஆம்; இன்றைக்குத் துறைமுகத்தில் மந்திரி மண்டலம் கூடப் போகிறது. அதற்கு முன்னால் உன்னிடம் நான் சில விஷயங்கள் சொல்லவேண்டும். அதோடு, உன்னிடம் ஒரு வாக்குறுதி கோரப்போகிறேன்” என்றார் மகேந்திரர். நரசிம்மருக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவருடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்டவளான சிவகாமி தாமரைக் குளக்கரையில் அவரிடம் வாக்குறுதி கேட்டு வாங்கிக்கொண்டு ஒரு முகூர்த்த நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் அவருடைய அன்புக்கும் பக்திக்கும் உரியவரான தந்தை வேறு வாக்குறுதி கேட்கிறார். இவ்விதம் மாமல்லர் யோசித்துக் கொண்டிருக்கும்போதே படகுகள் மூன்றும் அவர்கள் இருந்த இடத்தை நெருங்கின.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 1 Ch 22
Next articleRead Sivagamiyin Sabatham Part 1 Ch 24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here