Home Kalki Read Sivagamiyin Sabatham Part 1 Ch 25

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 25

90
0
Read Sivagamiyin Sabatham Part 1 Ch 25 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 1 Ch 25 சிவகாமியின் சபதம் முதல் பாகம்: பரஞ்சோதி யாத்திரை அத்தியாயம் 25: கடல் தந்த குழந்தை

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 25

சிவகாமியின் சபதம்

முதல் பாகம்: பரஞ்சோதி யாத்திரை

அத்தியாயம் 25: கடல் தந்த குழந்தை

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 25

சக்கரவர்த்திக்குப் பின்னால் கால்நடையாக வந்த இராஜ பரிவாரங்களும் இதற்குள்ளே கால்வாயின் கரைக்கு வந்து விட்டன. “மகா ராஜாதிராஜ திரிபுவன சக்கரவர்த்தி குணபர மகேந்திர பல்லவேந்திரர் வாழ்க!” என்ற கோஷம் மந்திரி மண்டலத்தார் வீற்றிருந்த படகிலேயிருந்து கம்பீரமாக எழுந்தது. “மகா ராஜாதிராஜ அவனிசிம்மலளிதாங்குர சத்துருமல்ல விசித்திரசித்த மத்தவிலாச சித்தரக்காரப்புலி குணபர மகேந்திர பல்லவேந்திரர் வாழ்க!” என்ற கோஷம் கரையிலிருந்து எழுந்தது. “குமார சக்கரவர்த்தி மாமல்லர் வாழ்க!” என்ற கோஷம் இரு பக்கங்களிலிருந்தும் எழுந்து வானளாவியது.

சங்கங்களும், எக்காளங்களும் காது செவிடுபடும்படி முழங்கின. முரசங்களும் பேரிகைகளும் எட்டுத் திசையும் அதிரும்படி ஆர்த்தன. மகேந்திர பல்லவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் முன்னால் வந்த படகிலே ஏறி அமர்ந்தார்கள். சக்கரவர்த்தியும் குமாரரும் குதிரைகளை ஏவலாளரிடம் ஒப்புவித்துவிட்டு, ‘இராஜ ஹம்ச’த்தில் ஏறி வெண்கொற்றக் குடையின் கீழ்த் தங்கச் சிங்காதனத்தில் அமர்ந்தார்கள். படகுகள் மூன்றும் துறைமுகத்தை நோக்கிப் புறப்பட்டன.

வாத்திய முழக்கங்கள் நின்றதும், சக்கரவர்த்தி தம் குமாரரைப் பார்த்து, “நரசிம்மா! நான் உன்னிடம் வாக்குறுதி கேட்பதே உனக்கு விந்தையாயிருக்கும். அதற்கு நீ உடனே மறுமொழி கூறாததும் நியாயந்தான். விஷயம் இன்னதென்று தெரிந்து கொள்ளாமல் எந்த வாக்குறுதியும் கொடுக்க கூடாது. இராஜ்யம் ஆளும் பொறுப்பு உடையவர்கள் இதில் சர்வஜாக்கிரதையாயிருக்க வேண்டும்!” என்றார். “அதற்காக நான் தயங்கவில்லை, அப்பா! தாங்கள் என்னிடம் வாக்குறுதி கேட்க வேண்டுமா என்றுதான் யோசனை செய்து கொண்டிருந்தேன். எனக்குத் தாங்கள் கட்டளையிடுவது தானே முறை? தங்கள் விருப்பத்திற்கு மாறாக எப்போதாவது நான் நடந்ததுண்டா?” இந்த வார்த்தைகள் குமார சக்கரவர்த்தி இருதய பூர்வமாகக் கூறியவையானபடியால் அவருடைய நாத் தழுதழுத்தது.

மகேந்திரரும் உணர்ச்சி மிகுதியினால் சற்றுச் சும்மா இருந்துவிட்டு, பிறகு கூறினார்: “பல்லவ சிம்மா! நான் எவ்வளவு கசப்பான கட்டளையிட்டாலும் நீ நிறைவேற்றுவாய் என்று எனக்குத் தெரியும். ஆனாலும், காரியத்தின் முக்கியத்தைக் கருதி உன்னிடம் வாக்குறுதி பெறவேண்டியிருக்கிறது. அதற்கு முன்னால் நான் உனக்குச் சில முக்கியமான விஷயங்களைச் சொல்லியாக வேண்டும். நாளை மறுநாள் நான் வடக்கே போர் முனைக்குக் கிளம்புகிறேன். எப்போது திரும்பி வருவேன் என்று சொல்வதற்கில்லை…” “அப்பா! என்ன சொல்கிறீர்கள்? போர்முனைக்குத் தாங்கள் கிளம்புகிறீர்களா? என்னை இங்கே விட்டுவிட்டா?” என்று மாமல்லர் ஆத்திரத்துடன் கேட்டார். “நான் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லி விடுகிறேன். நரசிம்மா! பிறகு, நீ கேட்கவேண்டியதைக் கேட்கலாம்” என்று சக்கரவர்த்தி கூறியதும், நரசிம்மர் மௌனமாயிருந்தார்.

மகேந்திரர் பிறகு கூறினார்: இந்தப் புராதனமான பல்லவ சாம்ராஜ்யத்தில் யுத்தம் என்று நடந்து வெகுகாலம் ஆகிவிட்டது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நான் இந்த ராஜ்யத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். பிறகு இதுவரை யுத்தம் என்பதே நடக்கவில்லை. என் தந்தை சிம்மவிஷ்ணு மகாராஜாவின் காலத்திலும் பெரிய யுத்தம் நடந்தது கிடையாது. அவருடைய ஆட்சியின் ஆரம்பத்தில், சோழ நாட்டுக்கும் பாண்டிய நாட்டுக்கும் நடுவில் புல்லுருவியைப் போலக் கிளம்பியிருந்த களப்பாள வம்சத்தை நிர்மூலம் செய்து உறையூர்ச் சிம்மாசனத்தில் சோழ வம்சத்தை நிலை நாட்டினார். அதன் பிறகு பல்லவ சைனியங்களுக்கு வேலையே இருக்கவில்லை! இப்போது தான் முதன் முதலாக என் காலத்தில் யுத்தம் வந்திருக்கிறது. இதை என் இஷ்டப்படி நடத்துவதற்கு மந்திரி மண்டலத்தாரின் அனுமதி கோரப் போகிறேன். அதற்கு நீயும் அனுமதி கொடுக்க வேண்டும். இந்த யுத்தத்தில் வெற்றியோ தோல்வியோ, எது நேர்ந்தாலும் என் தலையோடு போகட்டும் உனக்கு அதில் பங்கு வேண்டியதில்லை….”

இத்தனை நேரம் பொறுமையுடன் இருந்த நரசிம்மர் இப்போது குறுக்கிட்டு, “அப்பா! தோல்வி என்ற வார்த்தையை ஏன் சொல்லுகிறீர்கள்? யுத்தத்தில் நாம் அடையக்கூடியது வெற்றி அல்லது வீரமரணந்தானே? அதில் எனக்குப் பங்கு எப்படி இல்லாமற் போகும்?” என்று கேட்டார். “வீர பல்லவ குலத்துக்கு உகந்த வார்த்தை கூறினாய், நரசிம்மா! வெற்றி அல்லது வீர மரணந்தான் நமது குலதர்மம். ஆனால், வீர மரணத்தை நாம் இரண்டுபேரும் சேர்ந்தார் போல் தேடி அடைய வேண்டியதில்லை! ஒருவர் செய்த தவறுகளைத் திருத்த இன்னொருவர் உயிர் வாழ வேண்டுமல்லவா? ஒருவருக்காகப் பழி வாங்குவதற்கு இன்னொருவர் இருக்க வேண்டுமல்லவா?”

“அப்பா! போர் முனையிலிருந்து ஏதோ ரொம்பவும் கெடுதலான செய்தி வந்திருகிறது; அதனால்தான் இப்படியெல்லாம் தாங்கள் பேசுகிறீர்கள்!” “ஆம், குழந்தாய்! கெடுதலான செய்திதான் வந்திருக்கிறது! கங்கபாடிப் படை புலிகேசிக்குப் பணிந்து விட்டது. நரசிம்மா! வாதாபிச் சைனியம் வடபெண்ணையை நோக்கி விரைந்து முன்னேறி வந்துகொண்டிருக்கிறது.” “இவ்வளவுதானே, அப்பா? துடைநடுங்கி துர்விநீதனிடம் அது நாம் எதிர்பார்க்கக் கூடியதுதான். அதனால் என்ன? வடபெண்ணைக் கரையில் நமது வடக்கு மண்டலத்துச் சைனியம் அணிவகுத்து நிற்கிறதல்லவா? வேங்கியிலிருந்து என் மாமன் பெரும்படையுடன் கிளம்பி வருகிறாரல்லவா?”

“நரசிம்மா! வேங்கி சைனியம் நமது உதவிக்கு வராது. புலிகேசியின் சகோதரன் விஷ்ணுவர்த்தனன் இன்னொரு பெரும்படையுடன் வேங்கியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறானாம்.” “ஆஹா! வாதாபி சைனியம் அவ்வளவு பெரிதா? நாம் மட்டும் ஏன்…? “என்று மாமல்லர் ஆரம்பித்து இடையில் நிறுத்தியபோது, அவருடைய குரலில் ஏமாற்றம் தொனித்தது. “அது என் தவறுதான்; நரசிம்மா! என் வாழ்நாளில் இப்படிப்பட்ட ஒரு யுத்தம் வருமென்று நான் எதிர்பார்க்கவில்லை. போர்க்கலையில் கவனம் செலுத்த வேண்டிய காலத்தை எல்லாம் ஆடலிலும் பாடலிலும் சிற்பத்திலும் சித்திரத்திலும் கழித்து விட்டேன்…”

“அதனால் என்ன, அப்பா! சற்று முன்னால் ஆயனர் சொன்னாரே? உலகத்தில் எத்தனையோ சக்கரவர்த்திகள் இருந்தார்கள்; மறைந்தார்கள். அவர்களுடைய பெயர்களைக் கூட உலகம் மறந்து போய்விட்டது. ஆனால் தங்களுடைய பெயரை என்றென்றைக்கும் உலகம் மறக்க முடியாது.” “ஆயினும், இந்த யுத்தத்தில் நாம் ஜயிக்காமல் போனால், மாமல்லபுரத்து மகத்தான சிற்பங்கள் எல்லாம் என்றைக்கும் நமது அவமானத்துக்கே சின்னங்களாக விளங்கும்!” “ஒருநாளும் இல்லை, யுத்தத்தில் தோல்வியடைந்து உயிரையும் வைத்துக் கொண்டிருந்தாலல்லவா தாங்கள் சொல்கிறபடி ஏற்படும்? போர்க்களத்தில் புறங்காட்டி ஓடி ஒளிந்து கொள்கிறவர்களையல்லவா உலகம் பழித்து நிந்திக்கும்? வீர மரணத்துக்கு ஆயத்தமாகயிருக்கும்போது, அவமானத்துக்கும் பழிக்கும் நாம் ஏன் பயப்படவேண்டும்?” என்று மாமல்லர் ஆத்திரத்துடன் கூறினார்.

“முடிவில் போர்க்களத்தில் வீர மரணம் இருக்கவே இருக்கிறது. ஆனால், அதற்கு முன்னால் நம் பகைவர்களை வேரொடு அழித்து வெற்றியடையவே பார்க்கவேண்டுமல்லவா? அது அப்படி அசாத்தியமான காரியம் இல்லை. அவகாசம் மட்டுந்தான் வேண்டும்; வாதாபி மன்னன் யுத்த தந்திரத்தை நன்கு அறிந்திருக்கிறான், நரசிம்மா! ஆனாலும், முடிவில் அவனை முறியடித்து நாம் வெற்றி மாலை சூடுவோம் சந்தேகமில்லை. இதற்கு உன்னுடைய பூரண உதவி எனக்கு வேண்டும். நான் சொல்லுவது உனக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அதன்படி நடக்க வேண்டும்…”

நரசிம்மர் மிக்க உணர்ச்சியோடும் உருக்கத்தோடும் தழுதழுத்த குரலில், “அப்பா! என்னிடம் தாங்கள் உதவி கோர வேண்டுமா? தாங்கள் என் அன்புக்குரிய அருமைத் தந்தை மட்டுமல்ல; என் உடல் பொருள் ஆவிக்கு உரிமையுடைய அரசர்; எனக்கு எப்பேர்ப்பட்ட கட்டளையையும் இடுவதற்கு அதிகாரமுள்ள பல்லவ சாம்ராஜ்யத்தின் பிரதம சேனாதிபதி. எவ்வளவு கசப்பான கட்டளை வேண்டுமானால் இடுங்கள்; நிறைவேற்றக் காத்திருக்கிறேன்” என்றார்.

மகேந்திரர் சற்று மௌனமாயிருந்தார் அப்போது கீழ்த் திசையில் சிறிது தூரத்தில் கடற்கரைத் துறைமுகத்தின் காட்சி தென்பட்டது. கப்பல்களின்மேல் கம்பீரமாகப் பறந்த ரிஷபக் கொடிகள் வானத்தை மறைத்தன. சற்று தென்புறத்தில் நெடுந்தூரம் பரவி நின்ற மாமல்லபுரத்துக் குன்றுகள் காட்சி அளித்தன. சிறிது நேரம் அந்தக் காட்சியில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த மகேந்திரர், சட்டென்று நரசிம்மரின் பக்கம் திரும்பி மாமல்லா! நாளை மறுநாள் நான் போர்க்களத்துக்குக் கிளம்புகிறேன் என்று சொன்னேனல்லவா? போர்க்களத்திலிருந்து திரும்பி வந்து இந்த மாமல்லபுரத்தில் நாம் ஆரம்பித்த சிற்ப வேலை பூர்த்தியாவதைக் காண்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.

நரசிம்மர் மௌனமாய் இருக்கவே, மகேந்திரர் மேலும் கூறினார்: “அப்படி ஒருவேளை நான் திரும்பி வராவிட்டால் இந்தச் சிற்பப் பணியை நீதான் தொடர்ந்து நடத்திப் பூர்த்தி செய்ய வேண்டும்.” “இந்த வாக்குறுதியைத்தானா என்னிடம் கோரினீர்கள்?” என்று மாமல்லர் வெடுக்கென்று கேட்டபோது அவருடைய குரலில் ஆத்திரமும் வெறுப்பும் தொனித்தன. “இல்லை; அதைக் கேட்கவில்லை நான் ஒருவேளை போர்க்களத்திலிருந்து திரும்பி வராவிட்டால் எனக்காக நீ பழிக்கு பழி வாங்கவேண்டும். புலிகேசியின் படையெடுப்பினால் பல்லவ சாம்ராஜ்யத்துக்கு ஏற்பட்ட அவமானத்தையும் பழியையும் துடைக்க வேண்டும்.” “அது என் கடமையாயிற்றே? கடமையை நிறைவேற்றுவதற்கு வாக்குறுதி வேண்டுமா?” “குமாரா! அவ்விதம் பழிக்குப் பழி வாங்குவதற்காக நீ உன் உயிரைப் பத்திரமாய்க் காப்பாற்றிக்கொள்ளவேண்டும்.” நரசிம்மர் மௌனமாயிருந்தார் இன்னும் ஏதோ வர போகிறதென்று அவர் கவலையுடன் எதிர்பார்த்ததாகத் தோன்றியது.

“குழந்தாய்! சென்ற ஐந்நூறு ஆண்டு காலமாக வாழையடி வாழையாக வந்திருக்கும் இந்தப் பல்லவ குலம், இனியும் நீடிப்பது உன் ஒருவனையே பொறுத்திருக்கிறது. உன்னிடம் நான் கேட்கும் வாக்குறுதி இதுதான்; நான் திரும்பி வரும்வரையில் அல்லது நான் திரும்பி வரமாட்டேன் என்று நிச்சயமாய்த் தெரியும்வரையில் நீ காஞ்சிக் கோட்டையிலேயே இருக்கவேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் கோட்டைக்கு வெளியே வரக்கூடாது! இதோ என் கையைத் தொட்டுச் சத்தியம் செய்து கொடு” என்று கூறி மகேந்திரர்பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் காஞ்சி ராஜ்யத்தின் புராதன ராஜவம்சம் சந்ததியில்லாமல் முடிவடைந்தது. “மன்னன் இல்லாத மண்டலம் பாழாய்ப் போய்விடுமே! அரசன் இல்லாத நாட்டில் குடிகள் எல்லையற்ற துன்பங்களுக்கு உள்ளாவார்களே!” என்று தேசத்தின் பெரியோர்கள் ஏங்கினார்கள். அப்போது அருளாளரான ஒரு மகான் மக்களைப் பார்த்து, “கவலை வேண்டாம்; காஞ்சி ராஜ்யத்துக்கு ஒரு மன்னனைக் கடல் கொடுக்கும்! இதை நான் கனவிலே கண்டேன்!” என்றார். அதுமுதல் அந்நாட்டில் கடற்கரையோரத்தில் காவல் போட்டு வைத்திருந்தார்கள்.

ஒருநாள் கடற்கரையோரமாகக் கப்பல் ஒன்று வந்தது. அது எந்த நாட்டுக் கப்பலோ, எங்கிருந்து வந்ததோ தெரியாது. கரையில் இருந்தவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையிலே திடீரென்று கொடிய புயற்காற்று வீசுகிறது. ஊழிக்காலம் வந்து விட்டதோ என்று தோன்றும்படி கடல் கொந்தளிக்கிறது. கரையோரமாக வந்த கப்பல் அப்படியும் இப்படியுமாக ஆடுகிறது! கப்பலின் கொடி மரங்கள் சின்னாபின்னமாகின்றன! ஆ! என்ன பயங்கரம்! தயிரைக் கடையும் மத்தைப் போலக் கப்பல் சுழலுகிறதே! சுழன்று சுழன்று, அடடா, அதோ கவிழ்ந்து விட்டதே! புயற்காற்றின் கோரமான ஊளைச் சத்தத்துடன், கப்பலிலுள்ளோர் அழுகுரலும் கலக்கின்றதே!

கப்பல் கவிழ்ந்து கடலுக்குள் முழுகிற்றோ, இல்லையோ, சொல்லி வைத்தாற்போல், காற்றும் நிற்கிறது. அதுவரை கரையிலே நின்று செயலற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் இப்போது பரபரப்பு அடைகிறார்கள். படகுகளும் கட்டு மரங்களும் கடலில் விரைவாகத் தள்ளப்படுகின்றன. கப்பலில் இருந்தவர் யாராவது தெய்வாதீனமாக உயிருடன் கடலில் மிதந்தால், அவர்களைக் காப்பாற்றிக் கரை சேர்ப்பதற்காகப் படகுகளும் கட்டுமரங்களும் விரைந்து செல்லுகின்றன; படகோட்டிகளும் மீன்பிடிக்கும் வலைஞர்களும் பாய்ந்து செல்லுகிறார்கள்.

அத்தனை படகோட்டிகளிலும், வலைஞர்களிலும் அதிர்ஷ்டசாலி ஒருவன் இருக்கிறான். அதிர்ஷ்டம் அவனைத் தேடிக்கொண்டு வருகிறது. ஆனால், அவனுக்கு மட்டும் வந்த அதிர்ஷ்டமல்ல; நாட்டுக்கே வந்த அதிர்ஷ்டம்! நாட்டு மக்கள் செய்த நல்வினையினால் வந்த அதிர்ஷ்டம்! நீலக் கடலின் அலைமேல் சூரியன் மிதக்கிறானா என்ன? இல்லை, சூரியன் இல்லை; சின்னஞ்சிறு குழந்தை அது! பலகையிலே சேர்த்துப் பீதாம்பரத்தினால் கட்டப்பட்டிருக்கிறது. அக்குழந்தையின் முகத்திலே அவ்வளவு பிரகாசம்! அத்தனை தேஜஸ்! ஆனால், குழந்தைக்கு உயிர் இருக்கிறதா? ஒருவேளை…? ஆகா! இருக்கிறது; உயிர் இருக்கிறது! புயலுக்குப் பின் அமைதியடைந்த கடலில் இலேசாகக் கிளம்பி விழும் இளம் அலைகளின் நீர்த்துளிகள் குழந்தையின் முகத்தில் விழும் போது, அது ‘களுக்’ என்று சிரிக்கிறது!

படகோட்டி அடங்காத ஆர்வத்துடன் அந்தப் பலகையின் அருகில் படகைச் செலுத்துகிறான். குழந்தையைத் தாவி எடுத்துக் கட்டை அவிழ்த்து மார்போடு அணைத்து மகிழ்கிறான். அவனுடைய மார்பின் ரோமங்கள் குத்திய காரணத்தினால் குழந்தை அழுகிறது. படகோட்டி, படகுக்குள்ளே பார்க்கிறான். அங்கே கப்பலிலிருந்து இறக்கும் பண்டங்களைக் கட்டுவதற்காக அவன் அன்று காலையில் கொண்டு வந்து போட்ட தொண்டைக் கொடிகள் கிடக்கின்றன. அக்கொடிகளை இலைகளோடு ஒன்றுசேர்த்துக் குவித்துப் படுக்கையாக அமைக்கிறான். கொடிகளின் நுனியிலிருந்த இளந்தளிர்களைப் பிய்த்து எடுத்து மேலே தூவிப் பரப்புகிறான். அந்த இளந்தளிர்ப் படுக்கையின்மீது குழந்தையைக் கிடத்துகிறான். குழந்தை படகோட்டியைப் பார்த்துக் குறுநகை புரிகிறது! படகு கரையை நோக்கி விரைந்து செல்லுகிறது.

கரையை நெருங்கும்போதே படகோட்டி கூச்சலிட்டுக் குதூகலிப்பதைக் கண்டு, அந்தப் படகில் ஏதோ விசேஷம் இருக்கிறது என்று கரையிலே நின்றவர்கள் அறிந்துகொள்ளுகிறார்கள். படகு கரையோரத்தை அடைகிறது; கரையில் நின்ற ஜனங்கள் திரண்டு வந்து படகைச் சூழ்கிறார்கள். தீர்க்க தரிசனம் கூறிய மகானும் வருகிறார். வந்து, குழந்தையைப் பார்க்கிறார்! பார்த்துவிட்டு, “நான் கனவிலே கண்ட புதிய காஞ்சி மன்னன் இவன்தான்! இவனுடைய சந்ததியார் காஞ்சி சிம்மாசனத்தில் வீற்றிருந்து ஆயிரம் ஆண்டு அரசாளப் போகின்றனர்” என்று கூறுகிறார்; ஜனங்கள் ஆரவாரிக்கிறார்கள்.

திரைகடல் அளித்த தெய்வக் குழந்தைக்கு அப்பெரியவர், ‘இளந்திரையன்’ என்று பெயர் இடுகிறார். “தொண்டைக்கொடியின்மீது கண் வளர்ந்தபடியால், தொண்டைமான் என்ற பெயரும் இவனுக்குப் பொருந்தும். இவனால் இனிக் காஞ்சி ராஜ்யத்துக்குத் தொண்டை மண்டலம் என்ற பெயர் வழங்கும்” என்னும் தீர்க்க தரிசனமும் அவர் அருள்வாக்கிலிருந்து வெளிவருகிறது. வடமொழிப் புலவர் ஒருவர், இளந் தளிர்களின்மீது கிடக்கும் குழந்தையைப் பார்த்துவிட்டு, அதற்குப் ‘பல்லவராயன்’ என்று நாமகரணம் செய்கிறார். அதைத் தமிழ்ப் புலவர் ஒருவர் ‘போத்தரையன்’ என்று பெயர்த்துக் கூறுகிறார். கவிஞர்கள் வருகிறார்கள் கடல் தந்த குழந்தையைப்பற்றி அழகான கற்பனைகளுடன் கவிதைகள் புனைகிறார்கள். “இந்தத் திரைகடல் ஏன் இப்படி ஆர்ப்பரிக்கிறது, தெரியுமா? ‘திரையனை நான் பயந்தேன்’ என்ற பெருமிதத்தினாலேதான்!” என்று ஒரு கவிராயர் கூறியபோது, ஆர்கலியானது தன் அலைக்கைகள் ஆயிரத்தையும் கொட்டி ஆரவாரத்துடன் ஆமோதிக்கிறது.

பிற்காலத்தில் வந்த தமிழ்ப் புலவர்களுக்குப் பல்லவ குலத்தைக் கடல் தந்ததாகக் கூறி விட்டுவிட மனம் வரவில்லை. “கடல் தந்த குழந்தை உண்மையில் தமிழகத்தின் அநாதியான சோழ வம்சத்துக் குழந்தைதான்! சோழ குலத்து ராஜகுமாரன் ஒருவன், கடற் பிரயாணம் செய்வதற்காகச் சென்று மணி பல்லவம் என்னும் தீவையடைந்து, அந்நாட்டு அரசன் மகள் பீலிவளையைக் காதலித்து மணந்து கொண்டான். அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. அந்த அரசிளங்குமரன் தன் மனைவியோடும் குழந்தையோடும் தாய்நாட்டுக்குத் திரும்பி வந்தபோது கப்பலுக்கு விபத்து நேர்ந்தது. விபத்தில் தப்பிப் பிழைத்து வந்த குழந்தைதான் பல்லவ குலத்தைத் தோற்றுவித்த தொண்டைமான் இளந்திரையன்!” என்று கற்பனை செய்து கூறுகிறார்கள். வடமொழி புலவர்களோ, “பாண்டவர்களின் குருவாகிய துரோணருடைய புதல்வர் அசுவத்தாமாவின் வழிவந்தவர்கள் பல்லவர்கள்!” என்று கூறி, அதற்கு ஒரு கதை சிருஷ்டிக்கிறார்கள். (கடைசியாக, சமீப காலத்தில் இந்திய சரித்திர ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஐரோப்பியப் புலவர்கள், பல்லவர்களைத் தந்த பெருமையைத் தென்னிந்தியாவுக்கோ வட இந்தியாவுக்கோ தருவதற்கு விருப்பமில்லாதவர்களாய், இந்தியாவுக்கு வடமேற்கிலிருந்து வந்த அந்நியர்களாகிய சகர்தான் காஞ்சிபுரத்தைத் தேடி வந்து பல்லவர்கள் ஆனார்கள் என்று எழுதி, அதைப் புத்தகங்களிலும் அச்சுப் போட்டார்கள். நம் பழம் புலவர்களின் கதைகளையெல்லாம் கற்பனையென்று தள்ளிய நம்மவர்களோ, மேற்படி நவீன ஐரோப்பியப் புலவர்களின் வாக்கை வேதவாக்காக ஒப்புக்கொண்டு, ‘பல்லவர்கள் அந்நியர்களே’ என்று சத்தியம் செய்தார்கள். தமிழகத்துக்குப் பலவகையிலும் பெருமை தந்த காஞ்சிப் பல்லவர்களை அந்நியர்கள் என்று சொல்லுவதைப் போன்ற கட்டுக்கதை உலக சரித்திரத்தில் வேறு கிடையாது என்றே சொல்லலாம்.)

பல்லவ குலத்தின் உற்பத்தியைப்பற்றிய மேற்கூறிய வரலாறுகளில் எவ்வளவு வரையில் உண்மை, எவ்வளவு தூரம் கற்பனை என்பதை இந்நாளில் நாம் நிச்சயித்துச் சொல்வதற்கில்லை. அந்த நாளில் அந்தக் குலத்தில் பிறந்தவர்களுக்குக் கூட அதன் உண்மை நன்றாகத் தெரிந்திருக்கவில்லை. ஆனால், ஒன்று நிச்சயமாய்த் தெரிந்திருந்தது; அதாவது, பல்லவ குலத்தில் தோன்றியவர்களுக்கெல்லாம் கடற்பிரயாணத்தில் ஆசை அபரிமிதமாயிருந்தது. அந்த ஆசை அவர்களுடைய இரத்தத்தோடு ஒன்றிப் போயிருந்தது. கீழ்த்திசையில் கடல்களுக்கப்பால் இருந்த எத்தனையோ தீப தீபாந்தரங்களில், பல்லவர்களின் ஆதி பூர்வீக ரிஷபக் கொடியும் பிற்காலத்துச் சிங்கக் கொடியும் கம்பீரமாகப் பறந்தன.

பல்லவர் ஆட்சி நடந்த காலத்தில் தமிழகத்துக்கும் வெளிநாடுகளுக்கும் கடல் வாணிகம் அபரிமிதமாக நடந்து வந்தது. கப்பல்கள் வந்து நிற்பதற்கும், பண்டங்களை இறக்கி ஏற்றிக் கொள்வதற்கும் கீழ்க் கடற்கரையோரமாகப் பல துறைமுகங்கள் ஏற்பட்டிருந்தன. அவற்றுள் முதன்மையானது மாமல்லபுரத்துத் துறைமுகமாகும். மாமல்லபுரத்துக்கு வடபுறத்தில் கடலானது பூமிக்குள் புகுந்து தென்திசையை நோக்கி வளைந்து சென்று மாமல்லபுரத்தை ஏறக்குறைய ஒரு தீவாகச் செய்திருந்தது. இவ்விதம் காஞ்சி நகருக்கு அருகில் ஏற்பட்டிருந்த இயற்கைத் துறைமுகமானது ஏககாலத்தில் நூற்றுக்கணக்கான கப்பல்கள் வந்து நிற்பதற்கும், பண்டங்களை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் வெகு வசதியாக அமைந்திருந்தது.

மகேந்திரர் காலத்துக்கு முன்னால் அத்துறைமுகத் தீவில் பெரும்பாலும் வர்த்தகர்களின் பண்டக சாலைகளும், சுங்கமண்டபங்களும் மட்டுமே இருந்தன. படகோட்டிகளும் மீன் வலைஞருந்தான் அங்கே அதிகமாக வாசம் செய்து வந்தார்கள். மகேந்திர பல்லவர் அங்கே பல அரசாங்க அதிகாரிகளையும் சிற்பிகளையும் குடியேற்றினார். அரச குடும்பத்தினர் தங்குவதற்கு அழகிய கடற்கரை அரண்மனையைக் கட்டி வைத்தார். அத்துறைமுகத்தில் சிற்ப வேலை தொடங்குவதற்குக் காரணமாயிருந்த தமது செல்வப் புதல்வரின் பட்டப் பெயரையும் அப்புதிய பட்டினத்துக்கு அளித்தார். முதன்முதலில் அத்துறைமுகத்தில் சிற்ப வேலைகள் தொடங்கவேண்டும் என்று தந்தையும் குமாரரும் சேர்ந்து எந்த இடத்தில் தீர்மானித்தார்களோ அதே இடத்தில், சென்ற அத்தியாயங்களில் கூறிய சம்பவங்கள் நடந்த தினத்துக்கு மறுநாள் பிற்பகலில் சக்கரவர்த்தியும் மாமல்லரும் நின்று கொண்டிருந்தார்கள். தம் வலது கரத்தை நீட்டினார். நரசிம்மர் அவருடைய நீட்டிய கையைத் தொட்டு, “அப்படியே ஆகட்டும், அப்பா! தாங்கள் திரும்பி வரும் வரையில் காஞ்சிக் கோட்டையிலேயே இருப்பேன்!” என்றார். திடீரென்று தூரத்தில் சமுத்திரம் ‘ஹோ’ என்று ஆங்காரத்துடன் இரையும் பேரொலி கேட்டது. மாமல்லரின் உள்ளத்திலும் ஆர்கலியின் அலைகளைப் போல் எத்தனை எத்தனையோ எண்ணங்கள் தோன்றி மறைந்தன.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 1 Ch 24
Next articleRead Sivagamiyin Sabatham Part 1 Ch 26

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here