Home Kalki Read Sivagamiyin Sabatham Part 1 Ch 29

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 29

94
0
Read Sivagamiyin Sabatham Part 1 Ch 29 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 1 Ch 29 சிவகாமியின் சபதம் முதல் பாகம்: பரஞ்சோதி யாத்திரை அத்தியாயம் 29: வழி துணை

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 29

சிவகாமியின் சபதம்

முதல் பாகம்: பரஞ்சோதி யாத்திரை

அத்தியாயம் 29: வழி துணை

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 29

குதிரையைத் திருப்பிவிட்டுக் கொண்டு பரஞ்சோதி பின்னால் வந்த குதிரையண்டை சென்றபோது அவன் மனத்தில் ஏற்கெனவே ஏற்பட்டிருந்த பீதியெல்லாம் கோபமாக மாறியிருந்தது. மார்பில் பாய்ச்சுவதற்குச் சித்தமாக அவனுடைய வலது கையானது வேலைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தது. ஆனால், பரஞ்சோதி அருகில் நெருங்கியதும் அந்தக் குதிரைமீது வந்த மனிதன் செய்த காரியங்கள் வேலுக்கு வேலை இல்லாமல் செய்து விட்டன!

ஆஜானுபாகுவாய் முகத்தில் பெரிய மீசையுடனும் தலையில் பெரிய முண்டாசுடனும் விளங்கிய அந்த திடகாத்திர மனிதன், பரஞ்சோதி தன் அருகில் வந்ததும், “ஐயையோ! ஐயையோ! பிசாசு! பிசாசு!” என்று அலறிக் கொண்டு குதிரை மீதிருந்து நழுவித் ‘தொபுகடீ’ரென்று கீழே விழுந்தான். அதைப் பார்த்த பரஞ்சோதிக்குப் பயம், கோபம் எல்லாம் பறந்து போய்ப் பீறிக் கொண்டு சிரிப்பு வந்தது. கீழே விழுந்தவன் போர்க்கோலம் பூண்ட வீரன் என்பதையும், அவனுடைய இடையில் கட்டித் தொங்கிய பெரிய வாளையும் பார்த்ததும் பரஞ்சோதி ‘கலகல’வென்று சிரிக்கத் தொடங்கினான். பேய் பிசாசுக்குப் பயந்தவன் தான் ஒருவன் மட்டும் அல்ல என்பதை நினைத்தபோது அவனுக்கு ஒரு வகையான திருப்தி உண்டாயிற்று. கீழே விழுந்த மனிதன் மீண்டும், “ஐயையோ! பிசாசு சிரிக்கிறதே! பயமாயிருக்கிறதே!” என்று அலறினான். அந்த வேடிக்கையை இன்னும் கொஞ்சம் அனுபவிக்க விரும்பிய பரஞ்சோதி, குதிரை மேலிருந்தபடியே வேலை நீட்டிக் கீழே கிடந்தவனுடைய கையில் இலேசாகக் குத்திய வண்ணம், பிசாசு பேசுவது போல் தானாகக் கற்பனை செய்துகொண்டு அடித் தொண்டைக் குரலில், “அடே! உன்னை விடமாட்டேன்! விழுங்கி விடுவேன்!” என்றான்.

அதற்கு அடுத்த கணத்தில் பரஞ்சோதி சற்றும் எதிர்பாராத காரியம் ஒன்று நடந்தது. அது என்ன என்பதையே அச்சமயம் அவனால் நன்கு தெரிந்து கொள்ளக்கூட முடியவில்லை. ஒரு கணம் அவன் தலை கீழாகப் பாதாளத்தில் விழுவது போலிருந்தது. உடனே அவன் தலையின் மேல் ஆயிரம் இடி சேர்ந்தாற்போல் விழுந்தது! அடுத்தபடியாக அவனுடைய மார்பின் மேல் விந்திய பர்வதம் வந்து உட்காருவதுபோல் தோன்றியது. பிறகு ஒரு பிரம்மாண்டமான பூதம், ‘ஹா ஹா ஹ’ என்று பயங்கரமான பேய்க்குரலில் சிரித்துக்கொண்டு அவனுடைய தோள்களைப் பிடித்துப் பலமாகக் குலுக்கியது. சற்று நிதானித்து, மனதைத் தெளிவுபடுத்திக் கொண்டு சிந்தித்த பிறகுதான் பரஞ்சோதிக்கு நடந்தது என்னவென்பது புலனாயிற்று.

பரஞ்சோதி தன்னுடைய வேலின் நுனியினால் கீழே கிடந்தவனுடைய கையை இலேசாகக் குத்தி, “விழுங்கி விடுவேன்!” என்று கத்தியவுடனே, அந்த மனிதன் பரஞ்சோதியின் வேலைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஓர் இழுப்பு இழுத்தான். அவ்வளவுதான், பரஞ்சோதி குதிரை மேலிருந்து தடாலென்று தலைகுப்புறக் கீழே விழுந்தான். உடனே, அந்த மனிதன் மின்னலைப் போல் பாய்ந்து வந்து அவனுடைய தோள்களைப் பிடித்துக் குலுக்கினான். அதோடு, “ஹா ஹா ஹா! நீ பிசாசு இல்லை, மனுஷன்தான்! பிசாசு மாதிரி கத்தி என்னைப் பயமுறுத்தப் பார்த்தாயல்லவா? நல்லவேடிக்கை! ஹா ஹா ஹ” என்று உரத்த குரலில் சிரித்துக் கொண்டே கூவினான். பின்னர், பரஞ்சோதியின் மார்பின் மேலிருந்து எழுந்து நின்று பரஞ்சோதியையும் தரையிலிருந்து தூக்கி நிறுத்தி, “தம்பி! இந்த மயான பூமியில் ஒண்டியாகப் போக வேண்டுமே என்று பயந்து கொண்டிருந்தேன். நல்லவேளையாய் வழித்துணைக்குக் கிடைத்தாய். நீ எங்கே போகிறாய், தம்பி?” என்று ரொம்பவும் பழக்கமானவனைப் போல் தோளின் மேல் கையைப் போட்டுக்கொண்டு சல்லாபமாய்க் கேட்டான்.

பரஞ்சோதி சற்று முன் நடந்த சம்பவங்களினால் பெரிதும் அதிர்ச்சியடைந்திருந்தான். ஒரு பக்கம் அவன் உள்ளத்தில் கோபம் பொங்கிக் கொண்டிருந்தது. அவமானம் ஒரு பக்கம் பிடுங்கித் தின்றது. தன்னை இப்படியெல்லாம் கதிகலங்க அடித்தவன் சாமானியப்பட்டவன் அல்ல; மகா பலசாலியான வீர புருஷன் என்பதை அவன் உணர்ந்திருந்தான். இதனால் அம்மனிதன் பேரில் ஒருவித மரியாதையும் அவன் மனத்தில் ஏற்பட்டிருந்தது.

ஆனால், “எந்த ஊருக்குப் போகிறாய் தம்பி?” என்று அந்த ஆள் கேட்டதும், புத்த பிக்ஷு செய்திருந்த எச்சரிக்கைகள் ஞாபகத்துக்கு வந்தன. தன் தோள் மேலிருந்த அவனுடைய கைகளை உதறித் தள்ளிவிட்டு, “நான் எந்த ஊருக்குப் போனால் உனக்கு என்ன?” என்று வெறுப்பான குரலில் கேட்டான் பரஞ்சோதி. “எனக்கு ஒன்றுமில்லை, அப்பா! ஒன்றுமே இல்லை. இன்று ராத்திரி வழித் துணைக்கு நீ கிடைத்தாயே, அதுவே போதும். ஏதோ இரகசியக் காரியமாய்ப் போகிறாயாக்கும் ஆனால்..”

இப்படிச் சொல்லி நிறுத்தி, அந்த வீரன் பரஞ்சோதியைச் சற்றுக் கவனமாக உற்றுப் பார்த்தான். அந்தப் பார்வையின் கருத்தை உணர்ந்து கொள்வதற்குள்ளே, மறுபடியும் அவன் தரையிலே விழும்படி நேர்ந்தது. ஒரே நொடியில் அவ்வீரன் பரஞ்சோதியைக் கீழே தள்ளியதுமல்லாமல், தரையில் அவன் அருகில் உட்கார்ந்து கழுத்தை நெறித்துப் பிடித்துக் கொண்டான். “நீ வாதாபி ஒற்றனா, இல்லையா? சத்தியமாய்ச் சொல்” என்று கடுமை நிறைந்த குரலில் கேட்டான். பரஞ்சோதிக்குக் கோபத்தினாலும் வெட்கத்தினாலும் கண்களில் ஜலம் வரும் போலிருந்தது. அவன் விம்முகிற குரலில், “நீ சுத்த வீரனாக இருந்தால் என்னோடு எதிருக்கெதிர் நின்று வாளோ வேலோ எடுத்துச் சண்டை செய்யும்…” என்றான்.

“உன்னோடு சண்டை போட வேண்டுமா? எதற்காக அப்பனே? நீ வாதாபி ஒற்றனாயிருக்கும் பட்சத்தில் உன்னை இப்படியே யமனுலகம் அனுப்புவேன். நீ ஒற்றனில்லையென்றால் உன்னோடு சண்டை போடுவானேன்? நாம் இருவரும் சிநேகிதர்களாயிருக்கலாம். நீ ஒற்றனில்லை என்பதை மட்டும் நிரூபித்து விடு. இதோ, இம்மாதிரி ரிஷப இலச்சினை உன்னிடம் இருக்கிறதா?” என்று கேட்டுக் கொண்டே அவ்வீரன் இடது கையினால் தன் மடியிலிருந்து வட்ட வடிவான ஒரு செப்புத் தகட்டை எடுத்துக் காட்டினான். பல்லவ சாம்ராஜ்யத்தில் பிரயாண அனுமதி பெற்ற இராஜ தூதர்களுக்கு அடையாளமாகக் கொடுக்கும் ரிஷப முத்திரை பதித்த தகடு அது.

பரஞ்சோதியும் வேண்டாவெறுப்புடன் தன் மடியிலிருந்து மேற்படி முத்திரைத் தகட்டை எடுத்துக் காட்டியதும் அவ்வீரன் பரஞ்சோதியின் கழுத்தை விட்டதோடல்லாமல் அவனைத் தூக்கி நிறுத்தி ஆர்வத்துடன் ஆலிங்கனம் செய்து கொண்டு, “தம்பி! என்னை மன்னித்துவிடு! உன் முகக் களையைப் பார்த்தாலே சொல்லுகிறது, நீ சத்ருவின் ஒற்றனாயிருக்க முடியாதென்று. இருந்தாலும், இந்த யுத்த காலத்தில் யாரையும் நம்பி எந்தக் காரியமும் செய்வதற்கில்லை. நல்லது, குதிரைமேல் ஏறிக்கொள் பேசிக்கொண்டே போகலாம்!” என்று கூறி அவ்வீரன் தன் குதிரையண்டை சென்று அதன்மேல் வெகு லாகவமாய்த் தாவி ஏறிக் கொண்டான்.

பரஞ்சோதி தனக்குள், “இவனுடன் பேச்சு என்ன வேண்டிக் கிடந்தது? இந்த மலைப்பாதையைத் தாண்டியவுடன் இவனை ஒரு கை பார்த்து இவனுக்குப் புத்தி கற்பிக்காமல் விடக்கூடாது” என்று எண்ணிக்கொண்டே தன் குதிரைமீது ஏறிக்கொண்டான். மாலை மங்கி இருளாகக் கனிந்து கொண்டிருந்த முன்னிரவு நேரத்தில், வானமெல்லாம் வைரச் சுடர்களென மின்னத் தொடங்கியிருந்த நட்சத்திரங்களின் இலேசான வௌிச்சத்தில் இரு குதிரைகளும் சேர்ந்தாற்போல் போகத் தொடங்கின.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 1 Ch 28
Next articleRead Sivagamiyin Sabatham Part 1 Ch 30

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here